கடைசியாக தந்தையுடன் கொண்ட உரையாடலை நினைத்து விஜய் மரொட்டர் வருந்துகிறார்.

அது ஒரு வறண்ட கோடைக்கால மாலை. யவத்மால் மாவட்டத்திலிருக்கும் அவர்களின் கிராமம் மெல்ல இரவுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அப்பாவுக்கும் தனக்கும் அந்த வெளிச்சம் குறைவான குடிசைக்குள் அவர் இரு தட்டுகளை எடுத்து வைத்தார். இரண்டு ரொட்டிகளும் பருப்பும் ஒரு சோற்றுக் கிண்ணமும் இருந்தன.

அவரது தந்தையான கன்ஷியாம் தட்டைப் பார்த்ததும் கோபமடைந்தார். வெட்டப்பட்ட வெங்காயங்கள் எங்கே? அவரது கோபம் எல்லையை கடந்ததாக 25 வயது விஜய் கூறுகிறார். ”கொஞ்ச காலமாக அவர் தடுமாற்றத்தில்தான் இருந்தார்,” என்கிறார் அவர். “சிறு விஷயங்கள் கூட அவருக்கு கோபத்தை மூட்டின.” மகாராஷ்டிராவின் அக்புரி கிராமத்திலுள்ள ஓரறை குடிசைக்கு வெளியே இருக்கும் திறந்தவெளியில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் விஜய் அமர்ந்திருந்தார்.

சமையற்கட்டுக்கு சென்று அப்பாவுக்காக அவர் வெங்காயங்களை வெட்டி வந்தார். ஆனால் இனிமையற்ற ஒரு வாக்குவாதம் இருவருக்குமிடையே நடந்தது. அந்த இரவு கசப்பான ருசியுடன் விஜய் படுக்கைக்கு சென்றார். காலையில் அப்பாவிடம் பேசிக் கொள்ளலாம் என நினைத்தார்.

ஆனால் கன்ஷியாமுக்கு காலை புலரவில்லை.

59 வயது விவசாயி அந்த இரவே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்திருக்கிறார். விஜய் விழித்தெழுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். இது நடந்தது ஏப்ரல் 2022-ல்.

PHOTO • Parth M.N.

விஜய் மரொட்டர் யவத்மால் மாவட்ட அக்புரியிலுள்ள வீட்டுக்கு வெளியே. தந்தையுடன் கடைசியாக நடந்த உரையாடல் குறித்த வருத்தம் அவருக்கு இன்றும் உண்டு. அவரது தந்தை ஏப்ரல் 2022-ல் தற்கொலை செய்து கொண்டார்

தந்தை இறந்த ஒன்பது மாதங்கள் கழித்து நம்மிடம் பேசுகையில்கூட எப்படியேனும் கடிகாரத்தை பின்னோட்டி, அந்த துயர இரவில் நடந்த இனிமையற்ற உரையாடலை அழித்துவிட முடியாதா என்கிற ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் விஜய். கன்ஷியாமை ஓர் அன்பான அப்பாவாகதான் அவர் நினைவுகூர விரும்புகிறார். மரணத்துக்கு சில வருடங்களுக்கு முன் இருந்த பதற்றம் நிறைந்த மனிதராக அல்ல. அவரது தாய், கன்ஷியாமின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்து விட்டார்.

குடும்பத்துக்கென இருந்த ஐந்து ஏக்கர் விவசாய நிலம்தான் அவருடைய அப்பா கொண்ட பதற்றத்துக்கான காரணம். அவர்கள் அந்த நிலத்தில் பருத்தியும் துவரையும் விளைவித்தனர். “கடந்த 8, 10 வருடங்கள் மிகவும் மோசமாக இருந்தன,” என்கிறார் விஜய். “காலநிலை மேலும் மேலும் நிச்சயமற்றதாக மாறிக் கொண்டிருந்தது. தாமதமான மழைக்காலம் நீண்ட கோடைக்காலமும்தான் இருந்தது. விதைப்பதற்கு நாங்கள் திட்டமிடும் ஒவ்வொரு முறையும், பகடைக் காய் உருட்டுவதை போன்ற நிலைதான் எங்களுக்கு.”

30 வருடங்கள் விவசாயியாக இருந்த கன்ஷியாமை, இந்த நிச்சயமற்றதன்மை தன்னுடைய திறமைகள் மீதே சந்தேகம் கொள்ளுமளவுக்கு கொண்டு சென்று விட்டது. ”காலத்தை வைத்துதான் விவசாயம்,” என்கிறார் விஜய். “ஆனால் வானிலை அடிக்கடி மாறுவதால் அதை சமீபமாக சரியாக கணிக்க முடிவதில்லை. அவர் பயிரிட்ட ஒவ்வொருமுறையும் மழையற்ற ஒரு பருவ காலம் வந்தது. அவர் மனமுடைந்தார். விதைப்பு முடிந்தபிறகு மழை பெய்யவில்லை எனில், இரண்டாம் முறை விதைப்பதா இல்லையா என்பதை குறித்து நீங்கள் முடிவு செய்ய வேண்டும்,” என்கிறார் அவர்.

இரண்டாவது விதைப்பு இடுசெலவை இரட்டிப்பாக்கும். ஆனால் அறுவடை வருமானத்தை ஈட்டும் என நம்புவார்கள். பெரும்பாலும் வருமானம் கிடைப்பதில்லை. “ஒரு மோசமான காலத்தில், கிட்டத்தட்ட 50,000லிருந்து 75,000 ரூபாய் வரை நாங்கள் இழக்கிறோம்,” என்கிறோர் விஜய். காலநிலை மாற்றம், தட்பவெப்பம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் மாறுபாடுகளை கொடுத்து, பாசனம் கொண்ட பகுதிகளில் விவசாய வருமானத்தை 15-18 சதவிகிதம் குறைப்பதாக OECD’s Economic Survey of 2017-18 அறிக்கை குறிப்பிடுகிறது. பாசனமற்ற பகுதிகளில் அந்த இழப்பு 25 சதவிகிதம் வரை இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

விதர்பாவின் பல சிறு விவசாயிகளைப் போல விலையுயர்ந்த பாசன முறைகள் கன்ஷியாமுக்கும் கட்டுபடியாகவில்லை. எனவே அவர் முழுமையாக மழையையே சார்ந்திருந்தார். “இப்போதெல்லாம் தூறுவது கூட இல்லை,” என்கிறார் விஜய். “மழை பெய்வதில்லை. அல்லது பெய்தால் வெள்ளம் வருமளவு பெய்கிறது. காலநிலையின் நிச்சயமற்றதன்மை, முடிவு செய்யும் உங்கள் திறனின் மீது தாக்கம் செலுத்தவல்லது. இச்சூழலில் விவசாயம் செய்வது மிகப்பெரும் அழுத்தம் கொடுக்கக் கூடியது. தீர்வு இல்லை. அதனால்தான் என் தந்தை எரிச்சலடைந்தார்.

PHOTO • Parth M.N.

’இச்சூழலில் விவசாயம் செய்வது மிகப்பெரும் அழுத்தம் கொடுக்கக் கூடியது. தீர்வு இல்லை. அதனால்தான் என் தந்தை எரிச்சலடைந்தார்,’ என்கிறார் விஜய் நிச்சயமற்ற வானிலை, பயிர் வீழ்ச்சி, அதிகரிக்கும் கடன் மற்றும் அப்பாவை பலி கொண்ட மன அழுத்தம் ஆகியவற்றை பற்றி பேசுகையில்

பதற்றத்திலேயே இருக்கும் நிரந்தர உணர்வும் இறுதியில் நேரும் இழப்பும் சேர்ந்து இப்பகுதியின் விவசாயிகளுக்கு மனநல நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. இப்பகுதி ஏற்கனவே விவசாய நெருக்கடி க்கு பெயர்பெற்றது. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பகுதியும் கூட.

2021ம் ஆண்டில் கிட்டத்தட்ட 11,000 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்திருக்கின்றனர். அதில் 13 சதவிகிதம் பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்கிறது தேசிய குற்ற ஆவண நிறுவனம் . இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் பெரும் எண்ணிக்கையை இம்மாநிலம் கொண்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளை காட்டிலும் இந்த நெருக்கடி இன்னும் ஆழமானது. உலக சுகாதார நிறுவன த்தின்படி, “ஒவ்வொரு தற்கொலைக்கும் கிட்டத்தட்ட 20 பேர் தற்கொலை செய்ய முயலுவார்கள்.”

கன்ஷியாமின் பிரச்சினையில், நிச்சயமற்ற வானிலையால் குடும்பம் சந்தித்த தொடர் போராட்டம் பெரும் கடன்களை கொடுத்தது. “விவசாயம் தொடர்வதற்காக ஒரு தனியாரிடமிருந்து என் அப்பா வட்டிக்கு கடன் வாங்கியது எனக்கு தெரியும்,” என்கிறார் விஜய். “கடனை திரும்ப அடைக்க வேண்டுமென்கிற அழுத்தம் அவர் மீது விழுந்தது. வட்டியும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.”

கடந்த 5, 8 வருடங்களில் வந்த சில விவசாயக் கடன் ரத்து திட்டங்கள் பல நிபந்தனைகளை கொண்டிருந்தன. தனியார் கடனை அவற்றில் எந்த திட்டமும் அணுகவில்லை. பணம் குறித்த அழுத்தம் அவர்களின் கழுத்தை நெறிப்பதாக இருக்கிறது. “எவ்வளவு கடன் இருக்கிறது என என் தந்தை என்னிடம் சொன்னதில்லை. மரணத்துக்கு முன்னான சில வருடங்களாகவே அவர் கடுமையாக குடித்துக் கொண்டிருந்தார்,” என்கிறார் விஜய்.

PHOTO • Parth M.N.

கன்ஷியாமின் மரணத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன் மே 2020-ல் அவரது மனைவி கல்பனா தன் 45வது வயதில் மாரடைப்பு வந்து இறந்துபோனார். மோசமடைந்து கொண்டிருந்த நிதிநிலையும் கூட அவருக்கு அழுத்தத்தை கொடுத்தது

மதுவுக்கு அடிமையாகுதல் மனச்சோர்வுக்கான அடையாளம் என்கிறார் யவத்மாலை சேர்ந்த மனநல சமூக செயற்பாட்டாளரான 37 வயது ப்ரஃபுல் கப்சே. “பெரும்பாலான தற்கொலைகளுக்கு பின்னால் மனநலப் பிரச்சினை இருக்கிறது,” என்கிறார் அவர். “அவற்றுக்கான உதவி எங்கு பெறுவது என்பது விவசாயிகளுக்கு தெரியாததால், மனநலச் சிக்கல்கள் வெளியே தெரியாமலே போய் விடுகிறது.”

கன்ஷியாம் தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது குடும்பத்தினர் அதீத பதற்றம், சோர்வு, அழுத்தம் ஆகியவற்றை அவரிடம் காண முடிந்தது. என்ன செய்வதென அவர்களுக்கு தெரியவில்லை. மனப்பதற்றம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றுடன் போராடிக் கொண்டிருந்த குடும்ப உறுப்பினர் அவர் மட்டுமில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் மே 2020ல், அவரது மனைவியான 45 வயது கல்பனா, எந்த ஆரோக்கியப் பிரச்சினையும் இன்றி திடீரென நேர்ந்த மாரடைப்பில் உயிரிழந்தார்.

“விவசாய நிலத்தையும் வீட்டையும் அவர் பார்த்துக் கொண்டார். ஆனால் இழப்புகளின் காரணமாக குடும்பத்துக்கு உணவளிப்பது சிரமத்துக்குள்ளானது. மோசமாகிக் கொண்டிருந்த பொருளாதார நிலையால் அவர் பதற்றம் கொண்டார்,” என்கிறார் விஜய். “வேறெந்த காரணமும் எனக்கு தோன்றவில்லை.”

கல்பனா இல்லாமல் போனதும் கன்ஷியாமின் நிலையை மோசமாக்கியது. “என் தந்தை தனிமையில் இருந்தார். அம்மா இறந்தபிறகு அவர் தனக்குள் புதைந்து கொண்டார்,” என்கிறார் விஜய். “அவரிடம் பேச நான் முயன்றேன். ஆனால் தன் உணர்வுகளை அவர் எப்போதும் பகிர்ந்து கொள்ள மாட்டார். என்னை காக்க அவர் முயன்றதாகதான் நினைக்கிறேன்.”

அதிர்ச்சிக்கு பின்னான அழுத்த குறைபாடு (PTSD), அச்சம் மற்றும் மன அழுத்தம் போன்றவை தீவிர காலநிலை நிகழ்வுகளையும் நிச்சயமற்ற வானிலைகளையும் கொண்ட கிராமப்புற பகுதிகளில் பரவலாக இருப்பதாக காப்சே கூறுகிறார். “விவசாயிகளுக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது,” என்கிறார் அவர். “சிகிச்சையளிக்கப்படாத அழுத்தம் நெருக்கடியாக மாறி மனச்சோர்வாக மாறி விடும். தொடக்க நிலையில் சோர்வு, மனநல ஆலோசனை வழியாக குணப்படுத்த முடியும். அதற்கடுத்த கட்டங்களில் இருப்போருக்கு, தற்கொலை எண்ணங்கள் தோன்றுகையில் மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்,” என்கிறார் அவர்.

மனநிலைப் பிரச்சினைகளை பொருத்தவரை நெருக்கடி நேரத்தில் தலையிடப்படும் அளவீட்டில் இந்தியா பின்னடைவில் இருக்கிறது. தேசிய மனநல கணக்கெடுப்பு 2015-16 ன் படி அந்த விகிதம் 70லிருந்து 86 ஆக இருக்கிறது. மனநல ஆரோக்கிய சட்டம் 2017 நிறைவேற்றப்பட்டு, மே 2018-ல் அமல்படுத்தப்பட்ட பிறகும், அவசியமான சேவைகள் கிடைக்க மக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். மனநல குறைபாடு சவாலாகவே நீடிக்கிறது.

PHOTO • Parth M.N.

யவத்மாலின் வட்காவோனிலுள்ள வீட்டில் சீமா. ஜூலை 2015-ல் 40 வயது கணவர் சுதாகர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இறந்ததிலிருந்து 15 ஏக்கர் விவசாய நிலத்தை அவர்தான் பார்த்துக் கொள்கிறார்

யவத்மால் தாலுகாவின் வட்காவோன் கிராமத்தை சேர்ந்த விவசாயியான 42 வயது சீமா வானிக்கு மனநல ஆரோக்கிய சட்டம் குறித்தோ அது கொண்டிருக்கும் சேவைகள் குறித்தோ தெரியாது. ஜூலை 2015-ல் 40 வயது கணவர் சுதாகர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இறந்ததிலிருந்து 15 ஏக்கர் விவசாய நிலத்தை அவர்தான் பார்த்துக் கொள்கிறார்

“நான் நிம்மதியாக தூங்கியே பல காலமாகிறது,” என்கிறார் அவர். “நான் அழுத்தத்தில் இருக்கிறேன். என் இதயத் துடிப்புகள் சில நேரங்களில் வேகமடைகின்றன. விவசாய காலம் வரும்போது என் வயிற்றுக்குள் ஒரு முடிச்சு விழுவதை போல் உணர்கிறேன்.”

ஜூன் 2022-ல் தொடங்கிய சம்பா பருவத்துக்கு சீமா பருத்தி விதைத்தார். விதைகளிலும் பூச்சிக் கொல்லியிலும் உரங்களிலும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவழித்தார். நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டுமென தொழிலாளர்களையும் தொடர்ந்து பணிக்கமர்த்தினார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான லாபமெடுக்கும் அவரது இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார். அச்சமயத்தில்தான் அது நேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன், செப்டம்பர் முதல் வாரத்தில் மேகவிரிசலால் பெய்த பெருமழை, கடைசி மூன்று மாதங்கள் அவர் செலுத்திய கடின உழைப்பு மொத்தத்தையும் வாரிச் சுருட்டி சென்றது.

”விளைச்சலில் வெறும் 10,000 ரூபாய்தான் மிஞ்சியது,” என்கிறார் அவர். ”லாபத்தை விடுங்கள், போட்ட காசை எடுப்பதற்கே நான் சிரமப்படுகிறேன். மாதக்கணக்கில் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர், இரண்டே நாட்களில் நாசமாய் போவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என் கணவரின் உயிரை குடித்ததும் இதே விஷயம்தான்.” சுதாகரின் மரணத்துக்கு பிறகு அவரின் விவசாய நிலத்தையும் மன அழுத்தத்தையும் சேர்த்து சீமா எடுத்துக் கொண்டார்.

“போன விளைச்சல் பஞ்சத்தால் நாசமாகி நாங்கள் பணமிழந்தோம்,” என்கிறார் அவர் சுதாகர் இறந்து போனதற்கு முந்தைய விளைச்சலை குறிப்பிட்டு. “எனவே ஜூலை 2015ம் ஆண்டில் அவர் வாங்கிய பருத்திகளும் பொய்யான பிறகு, இது மட்டும்தான் மிச்சம். அதே நேரத்தில் எங்கள் மகளையும் மணம் முடித்துக் கொடுக்க வேண்டியிருந்தது. அவரால் மன அழுத்தத்தை தாங்க முடியவில்லை. விளிம்புக்கு தள்ளப்பட்டார்.”

கணவர் அமைதியாகிக் கொண்டிருப்பதை சீமா கவனித்தார். அதிகம் பேச மாட்டார். தனக்குள்ளேயே விஷயங்களை புதைத்துக் கொள்வார் என்கிறார் அவர். ஆனால் இந்த முடிவுக்கு அவர் செல்வாரென சீமா எதிர்பார்த்திருக்கவில்லை. “கிராம அளவில் எங்களுக்கு கொஞ்சம் உதவி கிடைத்திருக்க வேண்டுமல்லவா?” என அவர் கேட்கிறார்.

PHOTO • Parth M.N.

அறுவடையில் காக்கப்பட்ட பருத்தியுடன் சீமா அவரது வீட்டில்

மனநல ஆரோக்கியச் சட்டத்தின்படி, சீமாவின் குடும்பத்துக்கு தரமான நல்ல அளவிலான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் காப்பகங்களும் ஆதரவு வசிப்பிடங்களும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். சுலபமாக அடையும் தன்மையில் இருந்திருக்க வேண்டும்.

1996ம் ஆண்டு மாவட்ட மனநல ஆரோக்கிய திட்டம் (DMHP) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மனநல ஆலோசகர், மனநல மருத்துவர், மனநல செவிலியர் மற்றும் மனநல சமூக ஊழியர் இருக்க வேண்டும். கூடுதலாக தாலுகா அளவில் உள்ள சமூக மருத்துவ மையத்தில் முழு நேர மனநல மருத்துவர்களும் ஊழியர்களும் இருக்க வேண்டும்.

ஆனால் யவத்மாலின் ஆரம்ப சுகாதார மையங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள்தான் மனநல சிக்கல்கள் கொண்ட மக்களையும் பார்க்கின்றனர். யவத்மாலின் DMHP ஒருங்கிணைப்பாளரான டாக்டர் வினோத் ஜாதவ், தரம் வாய்ந்த ஊழியர்கள் மையத்தில் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். “நோயாளி (எம்பிபிஎஸ்) மருத்துவர் அளவில் கையாளப்பட முடியவில்லை என்றால்தான் மாவட்ட மருத்துவமனைக்கு சொல்லி அனுப்புவார்கள்,” என்கிறார் அவர்.

60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாவட்ட தலைநகரில் கிடைக்கும் ஆலோசனை சேவைகள் தெரிந்திருந்தாலும் அவை கிடைக்கும் வழிகள் கிடைத்திருந்தாலும் கூட சீமா ஒரு மணி நேரம் பேருந்தில் பயணித்து அங்கு சென்றிருக்க வேண்டும். செலவும் இருக்கிறது.

“ஒரு மணி நேர பேருந்து பயணத்தில் கிட்டும் உதவி, மக்களுக்கு அந்த உதவியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் நீங்கள் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டியிருக்கும்,” என்கிறார் கப்சே. தனக்கு சிக்கல் இருப்பதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கும் பிரச்சினையுடன் இந்த பிரச்சினையும் சேர்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

DMHP-ன் கீழ் செய்யப்படும் தன் குழு வருடத்துக்கு ஒரு முறை யவத்மாலின் 16 தாலுகாக்களில் மனநல சிக்கல்களுடன் போராடுபவர்களை அடையாளம் காணுவதற்கான முகாம்களை நடத்துவதாக ஜாதவ் கூறுகிறார். “மக்களை நம்மிடம் வரச் சொல்வதை விட, இது நல்ல வழி. எங்களுக்கு போதுமான நிதியோ வாகனங்களோ இல்லை. முடிந்த வரை செய்கிறோம்.”

மாநிலத்தின் DMHP-க்கு இரு அரசாங்கங்களும் மூன்று வருடங்களில் ஒப்புக் கொண்ட நிதி 158 கோடி ரூபாய். ஆனால் மகராஷ்டிரா அரசாங்கம் அதில் வெறும் 5.5 சதவிகிதமான 8.5 கோடி ரூபாயைதான் செலவழித்திருக்கிறது.

DMHP அதிக நிதி ஒதுக்கி செலவு செய்ய மறுத்து மகாராஷ்டிர அரசாங்கம் தொடரும் நிலையில் விஜய்களும் சீமாக்களும் இத்தகைய முகாமை எதிர்கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.

PHOTO • Parth M.N.

மூலம்: செயற்பாட்டாளர் ஜீதேந்திர காட்கேவால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது

PHOTO • Parth M.N.

மூலம்: சுகாதார அமைச்சகத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகள்

தொற்றுப்பரவலால் தனிமை, பொருளாதார சிக்கல், மனநலம் ஆகிய பிரச்சினைகள் அதிகமானபோதும் கூட முகாம்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் குறைந்துவிட்டது. மனநல சிகிச்சை தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து வளர்ந்து வருவதுதான் அச்சம் கொடுக்கும் விஷயமாக இருக்கிறது.

“முகாம்களால் மிகக் குறைந்த அளவு மக்கள்தான் பலனடைகின்றனர். ஏனெனில் நோயாளிகள் பல முறை செல்ல வேண்டியிருக்கும். ஆனால் முகாம்கள் வருடத்துக்கு ஒருமுறைதான் நடக்கும்,” என்கிறார் யவத்மாலில் உள்ள மனநல மருத்துவரான டாக்டர் பிரஷாந்த் சக்கர்வார். “ஒவ்வொரு தற்கொலையும் இந்த அமைப்பின் தோல்விதான். மக்கள் அந்த இடத்தை அவர்களாகவே உடனே அடைந்துவிடுவதில்லை. பல தீவிர நிகழ்வுகளின் தொடர்ச்சியால் அந்த முடிவை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்,” என்கிறார் அவர்.

விவசாயிகளின் வாழ்க்கைகளில் தீவிர நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கன்ஷியாம் இறந்து போன ஐந்து மாதங்கள் கழித்து விஜய் மரொட்டர் அவரது விவசாய நிலத்தில் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்தார். செப்டம்பர் 2022-ல் பெய்த கனமழை அவரது பருத்தி சாகுபடியின் பெருமளவை அடித்து சென்று விட்டது. அவரது வாழ்க்கையில் வழிகாட்ட பெற்றோரின்றி அவராக செய்த முதல் சாகுபடி அது. அவரே அவருக்கு துணை.

விவசாய நிலம் நீரில் மூழ்கியிருப்பதை முதலில் அவர் பார்த்ததும் விளைச்சலை பாதுகாக்க உடனே அவர் எந்த நடவடிக்கையிலும் குதிக்கவில்லை. வெறுமனே அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தார். பருத்தி நாசமாகிவிட்டது என்பதை உணரவே அவருக்கு சற்று நேரம் பிடித்தது.

“கிட்டத்தட்ட 1.25 லட்ச ரூபாய் செலவழித்தேன்,” என்கிறார் விஜய். “பெருமளவு போய்விட்டது. என் தலையை நான் காப்பாற்ற வேண்டும். உடைந்து விடக் கூடாது.”

பார்த் எம்.என், தாகூர் குடும்ப அறக்கட்டளையில் பெறும் சுயாதீன இதழியலுக்கான மானியத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றிய செய்திகளை எழுதுகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது இருக்கும் யாரையேனும் நீங்கள் அறிந்திருந்தாலோ 1800-599-0019 (24/7 இலவச சேவை) என்ற தேசிய உதவி எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களுக்கு அருகே இருக்கும் எண்ணை இவற்றிலிருந்து தொடர்பு கொள்ளவும். உளவியல் சுகாதார வல்லுனர்கள் மற்றும் சேவைகளை தொடர்பு கொள்ள SPIF-ன் உளவியல் ஆரோக்கிய விவரப்புத்தகத்துக்கு செல்லவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan