PHOTO • Abhijit Mohanty

காலாஹண்டி மாவட்டம் துவாமுல் ராம்பூர் வட்டாரத்தில் உள்ள பாப்லா கிராமத்தைச் சேர்ந்த மாதவ் நாயக், அத்ரி கிராம பஞ்சாயத்தில் நடைபெறும் வாரச் சந்தைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார். ஒரேசமயத்தில் 1 முதல் 2 கிலோ எடையிலான 25 முதல் 30 பானைகளை அவர் சுமந்துச் செல்கிறார். 12 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு மணி நேரம் அவர் இவ்வாறு பயணம் செய்கிறார். கற்கள் நிறைந்த சாலையில் அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வெடுத்தப்படி அவர் செல்கிறார். ஆண்டுதோறும் ரூ.10,000-15,000 வரை நாயக் பானைகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்

PHOTO • Abhijit Mohanty

அத்ரியில் உள்ள சந்தைக்கு செல்லும் வழியில் சோபினி முதுலியும், சுந்தரி நாயக்கும். குயவுத் தொழில் அதிக உழைப்பை செலுத்த வேண்டிய தொழில். இதில் பெண்களும், குழந்தைகளுமே பெரும்பாலான வேலைகளை செய்கின்றனர். முதலில் களிமண்ணை கம்பால் அடித்து சமநிலைப்படுத்துகின்றனர். அதை சளித்து கற்களையும் தேவையற்ற பொருட்களையும் நீக்குகின்றனர். பிறகு அரை நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காற்றை வெளியேற்ற களிமண்ணை கால்களால் மிதிக்கின்றனர்

PHOTO • Abhijit Mohanty

வேலையின் போது ஹரி மாஜி: ஆண்கள் பொதுவாக சக்கரத்தை சுற்றி கட்டுப்படுத்துகின்றனர். குயவுத் தொழில் எனும் கலை பல தலைமுறைகளாக கடத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின சடங்கு சம்பிரதாயங்களில் அது முக்கிய பங்காற்றுகிறது. பானைகளை தொடுவது அவர்களுக்கு உணர்வுப்பூர்வமானது, ஆன்மிக விழிப்பை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் காலாஹண்டியில் உள்ள கும்பர் சமூகத்தினர் தங்கள் பாரம்பரிய தொழிலில் இருந்து மெல்ல வெளியேறி வருகின்றனர். 'எங்கள் வாழ்வாதாரத்திற்கு மண்பாண்டத் தொழிலையே நம்பி இருக்க முடியாது,' என்கிறார் பாப்லா கிராமத்தைச் சேர்ந் குருநாத் மாஜி. “இதில் வருமானம் கிடைக்காத காரணத்தால் நாங்கள் வாழ்வாதாரத்திற்காக பிற வீட்டு உபயோகப் பொருட்களை விற்கிறோம்'

PHOTO • Abhijit Mohanty

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சக்கரத்தின் நடுவே களிமண் வைக்கப்படுகிறது. சக்கரம் சுற்றும்போது அந்த களி மண் சுவர் போல எழுகிறது. அதை கைகளை கொண்டு பிடித்து விரும்பிய வடிவங்களை செய்கின்றனர். சக்கரத்திற்கு அருகில் பாதி உடைந்த மண் வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. இறுதி வடிவத்தின் போது மண் பாண்டத்தின் மீது பழைய பருத்தி துணி கொண்டு அத்தண்ணீரில் நனைத்து பூசுகின்றனர்

PHOTO • Abhijit Mohanty

மங்குலு முதுலி (இடமிருந்து முதலாவது), சுக்பாரு மாஜி ஆகியோர் பிட்டானி எனும் சிறிய வட்டமான மரத் துண்டை கொண்டு தட்டி, பானைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கின்றனர். இறுதி நிலைக்கு வரும்வரை மண் பாண்டங்களை எவ்வித தவறுகளும் இன்றி கவனமாக செய்கின்றனர்

PHOTO • Abhijit Mohanty

ஹரி தங்தா மாஜி, மண் பாண்டங்களுக்கு வடிவம் கொடுப்பதில் வல்லவர் . ' என் தாத்தாவும் , தந்தையும் மண் பாண்டங்கள் செய்வதை நான் பார்த்துள்ளேன் ,' என்கிறார் அவர் . ' மிகவும் இளவயதிலேயே மண் பாண்டங்கள் செய்யும் பல நுட்பங்களை கற்றுவிட்டேன் . ஆனால் வாழ்வாதாரத்திற்காக இத்தொழிலை என் மகன் செய்வதை நான் விரும்பவில்லை . நாள்தோறும் இதற்கான தேவை குறைந்து வருகிறது . கொஞ்சம் பணம் சம்பாதிக்க நாங்கள் உள்ளூர் திருவிழாக்களுக்காக காத்திருக்க வேண்டும் .' தேவை குறைந்ததால் கும்பர்கள் அலுமினியம் , ஸ்டீல்களில் செய்த வீட்டு உபயோக பாத்திரங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . சிலர் விவசாய கூலித் தொழிலையும் சேர்த்து செய்கின்றனர். மற்றவர்கள் மாநிலத்திற்குள் அல்லது அதையும் தாண்டி அவ்வப்போது புலம் பெயர்கின்றனர்.

PHOTO • Abhijit Mohanty

முற்றத்தில் வட்ட வடிவிலான பாரம்பரிய சூளைகளை கட்டுகின்றனர் . மண் பாண்டங்களை 2-3 மணி நேரம் அந்த வெப்பத்தில் வைக்கின்றனர் . சூளையை தயார் செய்வதற்கு முன் அக்குடும்பத்தின் பெண்கள் தீமூட்டி எரிக்க கதோகொய்லா அல்லது கரி , வைக்கோல் , காய்ந்த புற்களை சேகரித்து வந்து பயன்படுத்துகின்றனர்

PHOTO • Abhijit Mohanty

பானைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. பருவகாலம் மற்றும் வடிவத்தின் அளவிற்கு ஏற்ப மண் பாண்டங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கோடை காலங்களில், தேவை அதிகமாகும் என்பதால், பாப்லா குயவர்கள் பானை ஒன்றை ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலாஹண்டியில் மண் பாண்டத் தொழில் லாபகரமானதாக இருந்தது. 'மண் பானைகளில் தண்ணீர் வைத்து முன்பு குடிப்பார்கள், இப்போது குளிர்சாதனங்கள், மீண்டும் நிரப்பிக் கொள்ளும் பாட்டில்கள் வந்துவிட்டதால் இப்பழக்கம் போய்விட்டது,” என்கிறார் அப்பிராந்தியத்தில் அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீனிபாஷ் தாஸ். “ சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்தாலும், இப்போது அதற்கு பெரிய வரவேற்பு இல்லை'

தமிழில்: சவிதா

Abhijit Mohanty

Abhijit Mohanty is a Delhi-based development professional. He has worked with indigenous communities in India and Cameroon.

Other stories by Abhijit Mohanty
Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha