“செல்பேசி, தொலைக்காட்சி, வீடியோ கேம் ஆகியவை வந்ததால், பொம்மலாட்டம், கதை சொல்லல் பாரம்பரியம் காணாமல் போகிறது.” பூரண் பட், ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள தாந்தா ராம்கர் என்ற இடத்தைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் ஆவார். சொந்தமாகப் பாவைகள் செய்து குழந்தைகள் நிகழ்வுகள், திருமண விழாக்கள், அரசு நிகழ்வுகள் ஆகியவற்றில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்ட காலத்தை நினைவுகூர்கிறார் 30 வயது பூரண் பட்.

“இன்று மக்கள் மாறுபட்ட நிகழ்வுகளை விரும்புகிறார்கள். முன்பு பெண்கள் டோலக்கில் பாட்டிசைப்பார்கள். இப்போது, ஹார்மோனியத்தில் திரைப்படப் பாடல்களை இசைக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆதரவு கிடைத்தால், நமது முன்னோர்கள் சொல்லித் தந்த கலையை எதிர்காலத்துக்கு கொண்டு செல்ல எங்களால் முடியும்,” என்கிறார் அவர்.

முப்பதாண்டு காலம் முன்பு ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்ட பலகலை மையமான ஜவஹர் கலா கேந்திராவுக்கு இந்த ஆண்டு (2023) ஆகஸ்டில் சென்றிருந்தார் பட். ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களின் குழுக்கள் அங்கு நடந்த அரசு விழாவில் கூடியிருந்தன. அந்த விழாவில்தான் தங்கள் கலைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போராடி வரும் அந்தக் கலைஞர்களுக்கு என்று ஒரு புதிய திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.

‘முக்கிய மந்திரி லோக் கலாக்கார் புரொத்சாகன் யோஜனா’ என்பது அந்த திட்டத்தின் பெயர். ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைஞர் குடும்பத்துக்கும் அவர்கள் வாழும் இடத்திலேயே ஆண்டுக்கு 100 நாள் வேலை கிடைக்க உத்தரவாதம் செய்கிறது இந்த திட்டம். ஊரக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்த ‘தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் -2005’ இதற்கு முன்னுதாரணமாக அமைந்தது.

கைவினைஞர்களுக்காக 2023 செப்டம்பர் மாதம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தது ஒன்றிய அரசு. ஆனால், கால்பெலியா, தேரதாளி, பகுரூபியா போன்ற பல நிகழ்த்துக் கலைக் குடிகளின் நலனுக்காகப் போடப்பட்ட முதல் திட்டம் இதுதான். ராஜஸ்தானில் இருந்து ஒன்றிரண்டு லட்சம் நாட்டுப் புறக் கலைஞர்கள் இருப்பதாக செயற்பாட்டாளர்கள் மதிப்பிடுகிறார்கள். சரியான கணக்கெடுப்பை யாரும் நடத்தவில்லை. போக்குவரத்து, விநியோகம் போன்ற பிரிவுகளில் செயல்படும் உதிரித் தொழிலாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

Artist Lakshmi Sapera at a gathering of performing folk artists in Jaipur.
PHOTO • Shalini Singh
A family from the Kamad community performing the Terah Tali folk dance. Artists, Pooja Kamad (left) and her mother are from Padarla village in Pali district of Jodhpur, Rajasthan
PHOTO • Shalini Singh

இடது: ஜெய்பூரில் நடந்த நிகழ்த்துக்கலை கலைஞர்களின் கூடல் ஒன்றில் கலைஞரும் நிகழ்த்துநருமான லக்ஷ்மி சபேரா. வலது:தேரதாளி நாட்டுப்புற நடனத்தை நிகழ்த்தும் காமட் குடியைச் சேர்ந்த ஒரு குடும்பம். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர், பாலி மாவட்டம் பாதர்லா கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பூஜா காமட்(இடது), அவரது தாய் ஆகியோர்

Puppeteers from the Bhaat community in Danta Ramgarh, Sikar district of Rajasthan performing in Jaipur in August 2023.
PHOTO • Shalini Singh
A group of performing musicians: masak (bagpipe), sarangi (bow string), chimta (percussion) and dafli (bass hand drum)
PHOTO • Shalini Singh

இடது: ராஜஸ்தான் மாநிலம், சீகர் மாவட்டம், தண்டா ராம்கர் கிராமத்தின் பாத் சமூகத்தைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர்கள் ஜெய்ப்பூரில், 2023 ஆகஸ்டில் நடந்த  நிகழ்வில் தங்கள் கலையை நிகழ்த்துகிறார்கள். வலது: நிகழ்த்துக் கலைஞர்களின் ஒரு குழு: மசாக் (பேக் பைப்), சாரங்கி (நரம்பு வாத்தியம்), சிம்தா (தோல் கருவி), டாஃப்லி (அதிரும் மத்தளம்)

“திருமண சீசனில், சில மாதங்களுக்கு மட்டுமே எங்களுக்கு வேலை இருக்கும். பிறகு ஆண்டு முழுவதும் சும்மா வீட்டில்தான் உட்கார்ந்திருப்போம். இந்தத் திட்டத்தின் மூலம் எங்களுக்கு தொடர்ந்து சீராக வருமானம் கிடைக்கும்,” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் 28 வயது கல்பெலியா கலைஞரான லக்ஷ்மி சபேரா. ஆனால், “என் பிள்ளைகள் விரும்பினாலொழிய அவர்களை எங்கள் குடும்பக் கலைக்கு வரும்படி நிர்ப்பந்திக்க மாட்டேன். அவர்கள் படித்து வேலைக்குப் போனால், அது நல்லது,” என்கிறார் அவர். ஜெய்ப்பூர் அருகில் உள்ள மஹ்லன் கிராமத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மி.

“2021-ம் ஆண்டு (பெருந்தொற்றுக் காலத்தில்) மாநிலத்தின் நாட்டுப்புறக் கலைஞர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவிக்கரம் தேவைப்பட்டது. இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் கலைகளைக் கைவிட்டு, ஊரக வேலை உறுதித்திட்ட (நூறுநாள் வேலை) தொழிலாளர்களாக மாறியிருப்பார்கள்,” என்கிறார் ஜவஹர் கலா கேந்திராவின் தலைமை இயக்குநரான காயத்ரி ஏ.ரத்தோர். கோவிட் பெருந்தொற்றின்போது ஒரே இரவில் எல்லா கலை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. நல உதவிகளின் தயவிலேயே வாழும் நிலைக்கு கலைஞர்கள் தள்ளப்பட்டனர்

“பெருந்தொற்றில் எங்கள் வருவாய் கீழே போனது. இப்போது கிடைத்திருக்கிற கலைஞர்கள் அட்டை மூலம் இது மேம்படும்,” என்கிறார் ஜோத்பூர், பாலி மாவட்டம், பாதர்லா கிராமத்தைச் சேர்ந்த 26 வயது தேரதாளி கலைஞர் பூஜா காமட்.

“மாங்கணியார் (மேற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த பழைய இசைக்கலைஞர் சமூகம்) போன்ற இசைக் கலைஞர்களில் ஒரு சதவீதம் பேர்தான் வெளிநாடு சென்று நிகழ்ச்சி நடத்தி சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். 99 சதவீதம் பேருக்கு எதுவும் கிடைப்பதில்லை,” என்கிறார் முகேஷ் கோஸ்வாமி. முன்பு பாம்பு பிடிப்பவர்களாகவும், நடனமாடுகிறவர்களாகவும் அறியப்பட்ட பழங்குடிகளான கால்பெலியா சமூகத்தவரில் 50 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கும். மற்றவர்களுக்கு கிடைக்காது.

‘பெருந்தொற்றின்போது எங்கள் வருவாய் கீழே போனது. இந்தக் கலைஞர்கள் அட்டை மூலம் அது மேம்படும்,’ என்கிறார், பாலி மாவட்டம், பாதர்லா கிராமத்தைச் சேர்ந்த தேரதாளி கலைஞரான பூஜா கமட்

இந்த வீடியோ பாருங்கள்: ராஜஸ்தான் நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டாக கலைகளை நிகழ்த்துகிறார்கள்

“எப்போதும் இந்தக் கலைஞர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை இருந்ததில்லை. அப்படி வேலை கிடைத்தால் அது அவர்கள் வாழ்வாதாரத்தையும், கண்ணியத்தையும் மேம்படுத்தும்,” என்கிறார் மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தன் (எம்.கே.எஸ்.எஸ்.) என்ற அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் முகேஷ் கோஸ்வாமி. எம்.கே.எஸ்.எஸ். என்பது மத்திய ராஜஸ்தானில் உழவர்கள், தொழிலாளர்கள் உரிமைக்காக 1990 முதல் பாடுபடும் ஒரு மக்கள் அமைப்பு.

ஓரம்கட்டப்பட்ட கலைஞர்கள் மாநகரங்களுக்கு இடம் பெறவேண்டிய தேவை ஏற்படாத வகையில், அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்பும், அடிப்படை வாழ்வாதாரமும் கிடைக்கவேண்டும். “உழைப்பும் கலைதான்” என்று குறிப்பிடுகிறார் கோஸ்வாமி.

இந்த புதிய திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஓர் அடையாள அட்டை கிடைக்கிறது. அது அவர்கள் கலைஞர்கள் என்ற அடையாளத்தைக் குறிப்பிடுகிறது. அரசு நிகழ்ச்சிகளில் கலைகளை நிகழ்த்த அவர்கள் தகுதி பெறுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, ஊராட்சித் தலைவர் தகவல்களை  சரி பார்ப்பார். பிறகு கலைஞர்களின் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

“பகுரூபிகளான நாங்கள் உருவங்களை மாற்றுகிறோம்,” என்கிறார் அக்ரம் கான். பகுரூபி என்ற கலையில், கலைஞர்கள் அடிக்கடி தங்கள் உருவங்களை மாற்றி பல்வேறு சமய, புராணப் பாத்திரங்களில் தோன்றுவார்கள் என்பதையே கான் குறிப்பிடுகிறார். இந்தக் கலை ராஜஸ்தானில் தோன்றி, நேபாளம், வங்கதேசம் வரை பரவிச்சென்றது என்று கூறப்படுகிறது. “காலம் காலமாக, எஜமானர்கள் எங்களை பல்வேறு விலங்கு உருவங்களில் (தங்கள் கேளிக்கைக்காக) வரச் சொல்வார்கள். இதற்குப் பதிலாக அவர்கள் எங்களுக்கு உணவு, நிலம் கொடுப்பார்கள்; எங்களை கவனித்துக்கொள்வார்கள்,” என்கிறார் அவர்.

இந்து, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இந்தக் கலையை நிகழ்த்த இப்போது தன்னைப் போல 10 ஆயிரம் கலைஞர்களே இருப்பார்கள் என்று மதிப்பிடுகிறார் கான்.

Left: The Khan brothers, Akram (left), Feroze (right) and Salim (middle) are Bahurupi artists from Bandikui in Dausa district of Rajasthan.
PHOTO • Shalini Singh
Right: Bahurupi artists enact multiple religious and mythological roles, and in this art form both Hindu and Muslim communities participate
PHOTO • Shalini Singh

ராஜஸ்தான், தௌசா மாவட்டம், பந்திகுயி என்ற இடத்தைச் சேர்ந்த பகுரூபி கலைஞர்களான கான் சகோதரர்கள்:அக்ரம் (மஞ்சள் முகம்), ஃபெரோஸ் (ஊதா ஜாக்கெட்), சலீம். வலது:பகுரூபி கலைஞர்கள் பல்வேறு மதம் சார்ந்த, புராணப் பாத்திரங்களில் மாறி மாறித் தோன்றுவார்கள். இந்தக் கலைவடிவத்தில் இந்து, முஸ்லிம் சமூகங்கள் பங்கேற்கின்றன

Left: Members of the Bhopas community playing Ravanhatta (stringed instrument) at the folk artists' mela
PHOTO • Shalini Singh
Right: Langa artists playing the surinda (string instrument) and the been . Less than five artists left in Rajasthan who can play the surinda
PHOTO • Shalini Singh

இடது:போபாஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  நாட்டுப்புறக் கலைஞர்கள் திருவிழாவில் ராவண்ஹத்தா (நரம்பு இசைக் கருவி) இசைக்கிறார்கள். வலது:லங்கா கலைஞர்கள் சுரிந்தா (நரம்பு இசைக்கருவி), பீன் ஆகியவற்றை இசைக்கிறார்கள். ராஜஸ்தானில்  இப்போது,சுரிந்தா இசைப்பதற்கு ஐந்து பேர்கூட இல்லை

“இந்த திட்டம் சட்டமாக்கப்படவேண்டும். அப்போதுதான் அரசாங்கம் மாறினாலும் வேலை உத்தரவாதம் தொடரும்,” என்கிறார் எம்.கே.எஸ்.எஸ். செயற்பாட்டாளரான ஸ்வேதா ராவ். ஒரு கலைஞர் குடும்பத்துக்கு 100 நாள் வேலை உத்தரவாதம் என்று இருப்பதை, ஒவ்வொரு கலைஞருக்கும் 100 நாள் வேலை உத்தரவாதம் என்று ஆக்கவேண்டும் என்கிறார் அவர். “தொலைதூர கிராமங்களில் இன்னும் ஜஜ்மானி (எஜமானர் முறை) அமைப்பில் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களுக்கும் இந்த திட்டத்தின் பலன்கள் தேவைப்படும் உண்மையான கலைஞர்களுக்கும் இந்த திட்டத்தின் பயன் போய்ச்சேர வேண்டும்.”

2023 மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்த திட்டத்தில் பலன் பெற 13,000 – 14,000 கலைஞர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 3,000 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. விழாவுக்குப் பிறகு, விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 20,000 – 25,000 ஆகிவிட்டது.

ஒவ்வொரு கலைஞரின் குடும்பத்துக்கும் இசைக் கருவி வாங்க தலா ரூ.5,000 ஒரு முறை தரும் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. “இந்தக் கலைஞர்களின் சொந்த மாவட்டங்களிலேயே இந்தக் கலை, பண்பாட்டுக்கு இடமில்லை. எனவே, கலை நிகழ்ச்சிகளுக்கான நிரல் நாட்காட்டியை உருவாக்கவேண்டும். இந்தக் கலை வடிவத்தின் மூலமும், அவர்களின் உள்ளூர் மொழிகளின் மூலமாகவும் அரசாங்கத் திட்டத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும்,” என்கிறார் ரத்தோர்.

மூத்த கலைஞர்கள் தங்கள் சமூகத்திலும், வெளியிலும் உள்ளவர்களிடம் தங்கள் கலையறிவைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் நிகழ்த்துக் கலைப் பள்ளி ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கலைஞர்களின் பணிகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் இது உதவும். அதன் மூலம் இந்த அறிவு அழிந்துபோகாமல் பாதுகாக்கப்படும்.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Shalini Singh

Shalini Singh is a founding trustee of the CounterMedia Trust that publishes PARI. A journalist based in Delhi, she writes on environment, gender and culture, and was a Nieman fellow for journalism at Harvard University, 2017-2018.

Other stories by Shalini Singh
Video Editor : Urja

Urja is Senior Assistant Editor - Video at the People’s Archive of Rural India. A documentary filmmaker, she is interested in covering crafts, livelihoods and the environment. Urja also works with PARI's social media team.

Other stories by Urja
Editor : PARI Desk

PARI Desk is the nerve centre of our editorial work. The team works with reporters, researchers, photographers, filmmakers and translators located across the country. The Desk supports and manages the production and publication of text, video, audio and research reports published by PARI.

Other stories by PARI Desk
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan