1951-52ல் நடந்த தேர்தலின் வாக்களிப்பு நாள் காலையில் அணிந்திருந்த மொடமொடப்பான வெள்ளை குர்தாவை இன்னும் க்வாஜா மொயினுதீன் நினைவில் வைத்திருக்கிறார். அப்போது அவருக்கு 20 வயது. உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவரது சிறு டவுனை தாண்டி வாக்குச்சாவடிக்கு, சுதந்திரக் காற்றை சுவாசித்து சென்றார்.

தற்போது 72 வருடங்களுக்கு பிறகு, மொயின் நூறின் வயதுகளில் இருக்கிறார். மே 13, 2023 அன்று, அவர் மீண்டும் ஒருமுறை காலையில், மொடமொடப்பான வெள்ளை குர்தாவை அணிந்து வெளியே வந்தார். இம்முறை, வாக்குச்சாவடிக்கு கைத்தடியின் துணையுடன் சென்றார். அவரின் நடையில் இருந்த வசந்த காலம் இப்போது இல்லை. வாக்களிப்பதற்கான கொண்டாட்டமும் தற்போது இல்லை.

“இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அந்த காலத்தில் நான் வாக்களித்தேன். இப்போது இந்த நாட்டை காப்பதற்காக வாக்களிக்கிறேன்,” என்கிறார் அவர் பாரியிடம், மகாராஷ்டிராவின் பீட் நகரத்தில்.

1932ம் ஆண்டு, பீட் மாவட்ட ஷிரூர் கசார் தாலுகாவில் பிறந்த மொயீன், தாலுகா அலுவலகத்தின் காவலராக பணிபுரிந்தார். 1948ம் ஆண்டில், பீட் நகரத்திலிருந்து அவர் தப்பியோட வேண்டியிருந்தது. ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையால் அவர் 40 கிலோமீட்டர் தூரத்துக்கு தப்பி சென்றார்.

1947ம் ஆண்டில் நடந்த வன்முறை நிறைந்த பிரிவினைக்கு ஒரு வருடத்துக்கு பிறகு, ஹைதராபாத், கஷ்மீர் மற்றும் திருவிதாங்கூர் ஆகிய மூன்று சமஸ்தானங்கள், இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்தன. இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேராத சுதந்திர நாடாக இருக்க வேண்டுமென ஹைதராபாத்தின் நிஜாம் கேட்டார். பீட் மாவட்டம் இருக்கும் விவசாயப் பகுதியான மராத்வடா, ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இந்திய ராணுவம், செப்டம்பர் 1948-ல் ஹைதராபாத்துக்குள் நுழைந்து, நான்கு நாட்களுக்குள் நிஜாம் சரணடையும்படி கட்டாயப்படுத்தியது. எனினும் 10 வருடங்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட சுந்தர்லால் குழுவின் ரகசிய அறிக்கையின்படி,  27,000-லிருந்து 40,000 இஸ்லாமியர், படையெடுப்பில் உயிரிழந்திருக்கின்றனர். மொயீன் போன்ற இளைஞர்கள் உயிரை காத்துக் கொள்ள தப்பியோட வேண்டியிருந்தது.

”என் ஊர் கிணறு முழுக்க சடலங்கள் கிடந்தன,” என நினைவுகூருகிறார் அவர். “பீட் நகரத்துக்கு தப்பி சென்றோம். அப்போதிருந்து அதுதான் என் ஊராக இருக்கிறது.”

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

க்வாஜா மொயினுதீன் 1932ம் ஆண்டு, பீட் மாவட்டத்தின் ஷிரூர் கசார் தாலுகாவில் பிறந்தார். 1951-52-ல் நடந்த முதல் தேர்தலில் வாக்களித்த நினைவை பகிர்ந்து கொள்கிறார். 92 வயதாகும் அவர் மே 2024 மக்களவை தேர்தலில் வாக்களித்திருக்கிறார்

பீட் மாவட்டத்தில் அவர் மணம் முடித்துக் கொண்டார். குழந்தைகளையும் இங்கேயே வளர்த்தார். பேரகுழந்தைகளும் அங்கேதான் வளர்ந்தனர். 30 வருடங்களாக தையற்காரராக வேலை பார்த்தார். உள்ளூர் அரசியலிலும் கொஞ்சம் ஈடுபட்டார்.

பூர்விகமான ஷிரூர் கசாரிலிருந்து ஓடி வந்த எழுபது வருடங்களில் முதன்முறையாக இஸ்லாமியராக இருப்பது பாதுகாப்பற்றதாக இருப்பதாக அவர் உணர்ந்திருக்கிறார்.

வெறுப்பு பேச்சு மற்றும் குற்றங்களை பதிவு செய்யும் வாஷிங்டனை சேர்ந்த இண்டியா ஹேட் லேப் நிறுவனம், 2023ம் ஆண்டில் மட்டும் 668 வெறுப்பு பேச்சு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறது. ஒரு நாளுக்கு இரண்டு நிகழ்வு. மகாத்மா புலே மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற முற்போக்கு சிந்தனையாளர் மரபை கொண்டிருக்கும் மகாராஷ்டிரா 118 இடங்களை கொண்ட அப்பட்டியலில் முன்னணி வகிக்கிறது.

“பிரிவினைக்கு பிறகு, இந்தியாவில் இஸ்லாமியருக்கான இடம் குறித்து ஒருவித நிச்சயமின்மை நிலவியது,” என நினைவுகூருகிறார். “ஆனால் எனக்கு பயம் இருக்கவில்லை. இந்திய நாட்டின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று, என் வாழ்க்கை முழுவதையும் இங்கு கழித்தும் கூட, நான் இந்த நாட்டை சார்ந்தவனில்லை என்கிற எண்ணம் மேலிடுகிறது…”

அதிகாரத்தில் வீற்றிருக்கும் ஒரே ஒரு தலைவரால் இத்தனை பெரிய மாற்றத்தை உருவாக்க முடிவதை அவரால் நம்ப முடியவில்லை.

”நேரு அனைவரையும் நேசித்தார். அனைவரும் நேருவையும் நேசித்தனர்,” என்கிறார் மொயீன். “இந்துக்களும் இஸ்லாமியரும் ஒற்றுமையாக வாழ முடியுமென அவர் நம்மை நம்ப வைத்தார். அவர் உணர்வுப்பூர்வமானவர். மதச்சார்பற்றவர். பிரதமராக, இந்தியா சிறப்பான ஒன்றாக மாறும் என்கிற நம்பிக்கையை நமக்குக் கொடுத்தார்.

மறுபக்கத்தில், இஸ்லாமியரை “ஊடுருவி வந்தவர்கள்’” என தற்போதைய பிரதமர் மோடி பேசி, வாக்காளர்களை மதரீதியாக பிரித்து வெற்றி பெறும் நிலையை எட்டுவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏப்ரல் 22, 2024 அன்று, பாரதீய ஜனதா கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராகவும் இருக்கும் மோடி, ராஜஸ்தானில் பேசும்போது, மக்களின் செல்வத்தை, “ஊடுருவி வந்தவர்களுக்கு” காங்கிரஸ் கட்சி அளிக்கவிருப்பதாக உண்மைக்கு மாறாக பேசினார்.

மொயீன் சொல்கிறார், “மன அழுத்தம் தருகிறது. கொள்கைகளும் அறமும்தான் மதிப்புமிக்கவையாக இருந்த காலம் ஒன்றை நான் அறிவேன். ஆனால் இப்போது எதை செய்தாவது பதவி பிடிக்க வேண்டுமென இருக்கிறார்கள்.”

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

‘பிரிவினைக்கு பிறகு, இந்தியாவில் இஸ்லாமியருக்கான இடம் குறித்து ஒருவித நிச்சயமின்மை நிலவியது,’ என நினைவுகூருகிறார்.  ‘ஆனால் எனக்கு பயம் இருக்கவில்லை. இந்திய நாட்டின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.  என் வாழ்க்கை முழுவதையும் இங்கு கழித்தும் பிறகு, நான் இந்த நாட்டை சார்ந்தவனில்லை என்கிற எண்ணம் இப்போது எனக்கு மேலிடுகிறது…’

மொயீனின் ஓரறை வீட்டிலிருந்து இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சையது ஃபக்ரு உஸ் சாமா வாழ்கிறார். முதல் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை என்றாலும் மீண்டும் நேருவை தேர்ந்தெடுக்க அவர் வாக்களித்தார். “காங்கிரஸ் கட்சி சிரமத்தில் இருப்பது புரிகிறது. எனினும் நேருவின் சித்தாந்தத்தை நான் கைவிட மாட்டேன்,” என்கிறார் அவர். “1970-களில் ஒருமுறை இந்திரா காந்தி பீடுக்கு வந்தார். அவரை பார்க்க நான் சென்றிருக்கிறேன்.”

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை அவரை ஈர்த்திருக்கிறது. மகாராஷ்டிராவில், அவர் உத்தவ் தாக்கரேவுக்கு நன்றியுடன் இருக்கிறார். அது அவரால் வெளிப்படுத்தக் கூடிய உணர்வாக அவர் நினைக்கவில்லை.

“சிவசேனா கட்சி நல்ல விதமாக மாறியிருக்கிறது,” என்கிறார் அவர். “தொற்றுக்காலத்தில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரேயின் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது. பிற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் இலக்காக்கப்பட்டதுபோல், மகாராஷ்டிராவில் நடந்திராத வண்ணம் அவர் பார்த்துக் கொண்டார்.”

85 வய்தாகும் சாமா, இந்தியாவில் எப்போதும் உள்ளூர ஒரு மதப் பிரிவினை இருப்பதாக சொல்கிறார். “அந்த பிரிவினையை எதிர்ப்பவர்களும் அதிகமாக களத்தில் இயங்கி குரல் கொடுக்கிறார்கள்.”

1992ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ராமர் பிறந்த இடம் என சொல்லி, அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை விஷ்வ இந்து பரிஷத்தின் தலைமையில் பல இந்து மதவாத அமைப்புகள் சேர்ந்து இடித்தன. நாடு முழுக்க, மத மோதல்கள் ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் மும்பையிலும் பரவியது. குண்டுவெடிப்புகளும் கலவருமும் நேர்ந்தன.

1992-93ல் நிலவிய பதற்றத்தை சாமா நினைவுகூருகிறார்.

“எங்களின் மதத்தவர் அமைதி காப்பதை உறுதி செய்ய, என் மகன் நகரம் முழுவதும் அமைதி பேரணி சென்றான். இந்துக்களும் இஸ்லாமியரும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். அந்த ஒற்றுமை இப்போது இல்லை,” என்கிறார் அவர்.

PHOTO • Parth M.N.

சையது ஃபக்ரு உஸ் சாமா, 1962ம் ஆண்டில் நேருவை மீண்டும் தேர்ந்தெடுக்க வாக்களித்தார். தற்போது 85 வயதாகும் அவர், இந்தியாவில் எப்போதும் மதப்பிரிவினை உள்ளூர இருந்து வருவதாக சொல்கிறார்.  எனினும், ’அப்பிரிவினையை எதிர்க்கும் மக்களின் குரல்களும் அதிகரித்திருக்கிறது’

சாமா தற்போது வாழும் வீட்டில்தான் பிறந்தார். அவரின் குடும்பம் பீடில் செல்வாக்கு நிறைந்த இஸ்லாமியர் குடும்பங்களில் ஒன்றாகும். தேர்தல்களுக்கு முன் அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்து ஆசி பெறுவது வழக்கம். அவரின் தந்தை, தாத்தா இருவரும் ஆசிரியர்கள். ஒரு “காவல்துறை நடவடிக்கை”யின்போது சிறை கூட வைக்கப்பட்டார்கள். அவரின் தந்தை இறந்தபோது, பல மதங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் தலைவர்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதாக சொல்கிறார் அவர்.

“கோபிநாத் முந்தேவுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது,” என்கிறார் பீடின் முக்கியமான தலைவரை குறித்து சாமா. “அவர் பாஜககாரர் என்றபோதும் என் மொத்த குடும்பமும் 2009ம் ஆண்டில் அவருக்கு வாக்களித்தது. இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே அவர் பேதம் பாராட்ட மாட்டாரென எங்களுக்கு தெரியும்.”

பீடிலிருந்து பாஜக சார்பில் போட்டியிடும் முந்தேவின் மகள் பங்கஜாவும் அவருக்கு உவப்பானவர்தான். மோடியின் மதவாதத்தை அவர் கையிலெடுக்க மாட்டார் என்கிறார் சாமா. “பீட் பேரணியில் கூட மோடி தப்பான கருத்தை சொன்னார்,” என்கிறார் சாமா. “மோடி வந்து சென்றதால் பங்கஜாவுக்கு ஆயிரக்கணக்கான வாக்குகள் இல்லாமல் போயிற்று. பொய்களை சொல்லி அதிக தூரத்துக்கு நீங்கள் செல்ல முடியாது.”

சாமா பிறப்பதற்கு முன்னான அவரது தந்தையின் கதை நினைவுகூருகிறார் சாமா. அவரது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் ஒரு கோவில் 1930களில் கவனத்துக்கு வந்தது. பல உள்ளூர் இஸ்லாமியத் தலைவர்கள், ஒரு காலத்தில் அது மசூதியாக இருந்ததாக நினைத்து, கோவிலை மசூதியாக்கும்படி ஹைதராபாத் நிஜாமுக்கு கோரிக்கை வைத்தனர். சாமாவின் தந்தை, சையது மெஹ்பூப் அலி ஷா, உண்மை பேசுபவர் என பெயர் பெற்றவர்.

“அங்கிருந்தது மசூதியா அல்லது கோவிலா என்கிற முடிவெடுக்கும் பொறுப்பு அவருக்கு வந்தது,” என்கிறார் சாமா. “அது மசூதியாக இருந்ததற்கான எந்த சாட்சியத்தையும் பார்க்கவில்லை என்றார் என் தந்தை. பிரச்சினை தீர்ந்தது. கோவில் காக்கப்பட்டது. சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பொய் சொல்வதில்லை என என் தந்தை முடிவெடுத்திருந்தார். நாங்கள் காந்தியின் போதனைகளை நம்புபவர்கள்: “உண்மை எப்போதும் உங்களை விடுவிக்கும்.’”

மொயீனுடன் பேசும்போது கூட காந்தியை பற்றிய குறிப்புகளை அதிகம் சொல்கிறார். “ஒற்றுமை மற்றும் மத ஒற்றுமை பற்றிய கருத்தை நமக்குள் விதைத்தவர் அவர்தான்,” என்னும் அவர் பழைய இந்தி படப்பாடலை பாடிக் காட்டுகிறார்: து நா ஹிந்து பனேகா, நா முசல்மான் பனேகா, இன்சான் கி ஔலத் ஹை, இன்சான் பனேகா.

பீட் மாவட்ட கவுன்சிலராகும்போது அதுதான் தன் நோக்கமாக இருந்ததாக மொயீன் சொல்கிறார். “அரசியல் ஈடுபாடு ஏற்பட்டதால், 30 வருடங்கள் கழித்து என் தையல் வேலையை 1985ம் ஆண்டு நான் விட்டேன்,” என சிரிக்கிறார். “ஆனால் அரசியலில் நீடிக்கமுடியவில்லை. ஊழல் மற்றும் பண அரசியலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 25 வருடங்களாக வேலையிலிருந்து ஓய்வு பெற்று இருக்கிறேன்.”

PHOTO • Parth M.N.

1992-93ல் நிலவிய பதற்றத்தை சாமா நினைவுகூருகிறார். ‘எங்களின் மதத்தவர் அமைதி காப்பதை உறுதி செய்ய, என் மகன் நகரம் முழுவதும் அமைதி பேரணி சென்றான். இந்துக்களும் இஸ்லாமியரும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். அந்த ஒற்றுமை இப்போது இல்லை’

மாறி வரும் சூழலாலும் ஊழலாலும் அரசியலிலிருந்து ஓய்வெடுப்பதென சாமா முடிவெடுத்தார். உள்ளூர் ஒப்பந்ததாரராக பணிபுரிந்தார். ”1990களுக்கு பிறகு அது மாறியது,” என நினைவுகூருகிறார். “வேலையின் தரம் பொருட்படுத்தப்படவில்லை. லஞ்சம் தலைவிரித்தாடியது. வீட்டில் இருப்பதே சிறந்தது என முடிவெடுத்தேன்.”

ஓய்வுகாலத்தில் சாமாவும் மொயீனும் இன்னும் அதிக மத ஈடுபாடு கொண்டனர். அதிகாலை 4.30 மணிக்கு சாமா எழுந்து தொழுகை செய்வார். மொயீன் வீட்டிலிருந்து கிளம்பி, தெருவுக்கு அப்பால் இருக்கும் மசூதிக்கு சென்று சமாதானம் தேடுவார். மசூதி ஒரு குறுகிய சந்தில் இருப்பது அவரின் அதிர்ஷ்டம்.

கடந்த சில வருடங்களாக, மசுதிகளுக்கு முன்பாக துவேஷம் பரப்பும் கோஷங்களை போட்டு பாடல்களை பாடி, இந்துத்துவ கும்பல்கள் ராமநவமியை கொண்டாடி வருகின்றன. பீட் மாவட்டக் கதை வித்தியாசமானது. நல்வாய்ப்பாக, மொயீன் செல்லும் மசூதி குறுகிய சந்தில் இருக்கிறது. அங்கு ஆக்ரோஷமான பெருங்கூட்டம் நுழைய முடியாது.

ஆனால் சாமாவுக்கு அதிர்ஷம் இல்லை. இஸ்லாமியர் மீது வன்முறையைத் தொடுக்க தூண்டும் பாடல்களை அவர் கேட்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் அவரை மனிதத்தனமையிலிருந்து கீழிறக்கும்.

“ராம நவமி மற்றும் பிள்ளையார் விழாக்களில் என் பேரக் குழந்தைகளும் இஸ்லாமிய நண்பர்களும் பழச்சாறுகளையும் பழங்களையும் இந்து பக்தர்களுக்கு கொடுத்த காலம் ஒன்று இருந்தது,” என்கிறார் சாமா. “அந்த அழகான பாரம்பரியம் எங்களை கொச்சைப்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பத் தொடங்கிய பிறகு முடிவுக்கு வந்துவிட்டது.”

PHOTO • Parth M.N.

சாமா தற்போது வாழும் வீட்டில்தான் பிறந்தார். அவரின் குடும்பம் பீடில் செல்வாக்கு நிறைந்த இஸ்லாமியர் குடும்பங்களில் ஒன்றாகும். தேர்தல்களுக்கு முன் அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்து ஆசி பெறுவது வழக்கம். அவரின் தந்தை, தாத்தா இருவரும் ஆசிரியர்கள். ஒரு “காவல்துறை நடவடிக்கை”யின்போது சிறை கூட வைக்கப்பட்டார்கள். அவரின் தந்தை இறந்தபோது, பல மதங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் தலைவர்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்

கடவுள் ராமர் மீது அவருக்கு பெருமதிப்பு உண்டு. “ராமர் யார் மீதும் வெறுப்பு பாராட்டும்படி சொல்லவில்லை. இளையோர் அவர்களின் கடவுளுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர். அவர் போதித்தது அதை அல்ல.”

மசூதிகளுக்கு வெளியே வந்து குவிபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்தாம். சாமா அதனால் பெரிதும் கவலையுறுகிறார். “இந்து நண்பர்கள் வரும் வரை என் தந்தை ஈத் தினத்தன்று உண்ண மாட்டார்,” என்கிறார் அவர். “நானும் அப்படித்தான் இருந்தான். ஆனால் எல்லாமும் பெரிதாக மாறிவிட்டது.”

மத ஒற்றுமைக்கான நாட்களுக்கு நாம் திரும்பி செல்ல வேண்டுமெனில், “ஒற்றுமையின் கருத்தை மீண்டும் வலியுறுத்துமளவுக்கு காந்தியின் நேர்மையும் உறுதியும் கொண்ட ஒருவர் வர வேண்டும்,” என்கிறார் மொயீன்.

காந்தியின் பயணம், மஜ்ரூ சுல்தான்புரியின் கவிதையை அவருக்கு நினைவூட்டியது: “ மைன் அகேலா ஹி சலா தா ஜானிப் எ மன்சில் மகார், லாக் சாத் ஆதே கயே அவுர் கர்வாம் பண்டா கயா (இலக்கை நோக்கி நான் தனியாக நடந்து சென்றேன். மக்கள் வந்து இணையத் தொடங்கி, கூட்டம் பெரிதானது.)”

“இல்லையெனில், அரசியல் சாசனம் மாற்றப்பட்டு, அடுத்த தலைமுறை துன்புறும்,” என்கிறார் அவர்.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan