மணிப்பூரின் சுராசந்த்பூரிலுள்ள தன் கிராமமான லங்க்சாவுக்கு திரும்பி செல்வதென்கிற எண்ணமே குமா தீக்கின் முதுகை சில்லிட வைக்கிறது. 64 வயது விவசாயியான அவர், 30 வருடங்களாக லங்க்சாவில்தான் வசித்து வருகிறார். அதுதான் அவரது மண். பரிச்சயமான ஊர். அங்குதான் மகன் டேவிட்டை அவர் வளர்த்தார். பள்ளிக்கு மதிய உணவுகளை கட்டிக் கொடுத்தார். அவர்கள் வேலை பார்த்த நெல் வயல்களும் அங்குதான் இருக்கின்றன. முதல்தடவையாக அவர் தாத்தாவானதும் அங்குதான். லங்க்சாதான் குமாவின் உலகம். அவருக்கு திருப்தியாக இருந்த ஊர் அது.

ஜூலை 2, 2023 வரை.

அந்த நாள் வன்மத்தோடு அவரின் வாழ்நாள் நினைவுகளை அழித்துப் போட்டு, மனதிலிருந்து அகற்ற முடியாத ஒற்றைக் காட்சியை குமாவுக்குள் பதிவு செய்திருக்கிறது. அக்காட்சி அவரை தூங்க விடவில்லை. விழித்திருக்கவும் விடுவதாக இல்லை. லங்க்சா தொடங்கும் இடத்தில் உள்ள மூங்கில் வேலியில் மாட்டப்பட்டிருந்த, அவரது மகனின் வெட்டப்பட்ட தலைதான் அக்காட்சி.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியும் குமராவின் சொந்த மாநிலமுமான மணிப்பூர்,  மே 3, 2023-லிருந்து இனமோதலில் சிக்கியிருக்கிறது. மார்ச் மாத பிற்பகுதியில் மணிப்பூரின் உயர்நீதிமன்றம், பெரும்பான்மை மெய்தி சமூகத்துக்கு “பழங்குடி அந்தஸ்தை” வழங்கியது. அதன் மூலம் அவர்கள் அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார பலன்களை பெற முடியும். குகி பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மலைப்பகுதிகளில் அவர்கள் நிலமும் வாங்க முடியும். அந்த முடிவுக்கு, பிற்பாடு உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

அம்முடிவு ஏற்கனவே மாநிலத்தில் 53 சதவிகிதம் இருக்கும் மெய்தி சமூகத்தினருக்கு அரசில் இன்னும் அதிக அதிகாரத்தை வழங்கும் என மாநில மக்கள்தொகையில் 28 சதவிகிதம் இருக்கும் குகி சமூகத்தினர் நம்புகிறார்கள்.

Khuma Theik at his brother’s house, after his own home in the Kuki village of Langza was attacked and his son violently killed
PHOTO • Parth M.N.

குகி கிராமமான லங்க்சா கிராமத்திலுள்ள வீடு தாக்கப்பட்டு, மகன் கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு,  சகோதரரின் வீட்டில் வசிக்கும் குர்மா தீக்

நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வகையில் மே 3ம் தேதி குகி சமூகத்தை சேர்ந்த சிலரால் சுராசந்த்பூரில் பேரணி நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு பிறகு, 1917ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக குகிகள் நடத்திய கலகத்தின் நினைவில் சுராசந்த்பூரில் நிறுவப்பட்டிருந்த சின்னம் மெய்திகளால் எரிக்கப்பட்டது. கலவரம் வெடித்து, நான்கு நாட்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

காட்டுமிராண்டித்தனமான கொலைகளும் தலை வெட்டப்படுவதும் கூட்டு வல்லுறவுகளும் கட்டடங்களுக்கு தீ வைப்பதும் என, காட்டுத்தீ போல் வன்முறை மாநிலம் முழுக்க பரவியதற்கு அதுதான் தொடக்கக் காரணம். இதுவரை கிட்டத்தட்ட 190 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60,000 பேர் வீடுகளை இழந்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் குகிகள்தான். மெய்தி பயங்கரவாதிகளை அரசும் காவல்துறையும்தான் தூண்டுவதாக குகிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இரு சமூகங்களுக்கு இடையேயான அவநம்பிக்கை, எதிரியிடமிருந்து காக்கவென தத்தம் கிராமத்துக்கு ஒரு தனிக் காவற்படையை உருவாக்க வைத்துள்ளது.

Barricades put up by paramilitary forces along the borders of Imphal and Churachandpur, Manipur
PHOTO • Parth M.N.

மணிப்பூரின் இம்பால் மற்றும் சுராசந்த்பூர் எல்லைகளில் துணை ராணுவத்தால் போடப்பட்டிருக்கும் தடுப்புகள்

A home (left) and a shop (right) burned to the ground near the border of Imphal and Churachandpur, Manipur
PHOTO • Parth M.N.
A home (left) and a shop (right) burned to the ground near the border of Imphal and Churachandpur, Manipur
PHOTO • Parth M.N.

இம்பால் மற்றும் சுராசந்த்பூரின் எல்லைக்கருகே எரிக்கப்பட்டிருக்கும் ஒரு வீடும் (இடது) கடையும் (வலது)

ஜூலை 2ம் தேதியின் அதிகாலையில், குகி கிராமமான லங்க்சாவை காத்துக் கொண்டிருந்தவர்களில் 33 வயது டேவிடும் ஒருவர். திடீரென அந்த ஊரை ஆயுதம் தாங்கிய மெய்தி கும்பல் தாக்கியது. குகி அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தின் எல்லையும் மெய்தி அதிகம் வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கு மாவட்ட எல்லையும் சந்திக்கும் இடத்தில் லங்க்சா அமைந்திருக்கிறது.

ஊரில் இருப்பவர்களுக்கு அதிக நேரம் இல்லை எனப் புரிந்து, டேவிட் பரபரப்பாக ஓடி வந்து, ஆயுதக்கும்பலை முடிந்தவரை தடுத்து நிறுத்தும் அவகாசத்தில் தப்பிவிடும்படி ஊர் மக்களிடம் கூறினார். “எங்களால் முடிந்தவற்றை சேகரித்துக் கொண்டு, எங்களின் மக்கள் அதிகம் இருக்கும் மலையின் அடர்ந்த பகுதிகளுக்கு ஓடினோம்,” என்கிறார் குமா. “சீக்கிரமே வந்துவிடுவதாக டேவிட் உறுதியளித்தார். அவரிடம் ஒரு ஸ்கூட்டர் இருந்தது.”

அவரின் குடும்பம் தப்பிக்க தேவையான அவகாசத்தை டேவிட்டும் பிற காவலாளிகளும் ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆனால் அவருக்கு அந்த அவகாசம் கிடைக்கவில்லை. ஸ்கூட்டரை அவர் சென்றடைவதற்கு முன் விரட்டிவந்து கூட்டம் அவரை பிடித்தது. கிராமத்தில் வைத்து அவரது தலையை கும்பல் வெட்டியது. அவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு எரிக்கப்பட்டது.

“அந்த நாளிலிருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்,” என்னும் குமா தற்போது சுராசந்த்பூர் மாவட்டத்தின் அடர் மலைகளில் வசிக்கும் சகோதரனுடன் வாழ்கிறார். “இரவின் நடுவே தூக்கத்திலிருந்து நடுங்கியபடி எழுந்தேன். சரியாக தூங்க முடியவில்லை. என் மகனின் வெட்டப்பட்ட தலையுடன் ஒருவன் நடந்து செல்லும் புகைப்படம் இருக்கிறது. என் மனதிலிருந்து அதை அகற்ற முடியவில்லை.”

The charred remains of vehicles set on fire near the Churachandpur-Imphal border
PHOTO • Parth M.N.
The charred remains of vehicles set on fire near the Churachandpur-Imphal border
PHOTO • Parth M.N.

சுராசந்த்பூர் - இம்பால் எல்லையில் எரிக்கப்பட்ட வாகனங்களின் மிச்சம்

Boishi at a relief camp in Churachandpur where she has taken shelter along with four of her children aged 3 to 12, after her village of Hao Khong Ching in the district of Kangpokpi came under attack
PHOTO • Parth M.N.

மோதலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் குகிகளால் சுராசந்த்பூரில் கட்டப்பட்டிருக்கும் நினைவுகளின் சுவர். அவர்களின் உடல்களை இம்ஃபாலின் மருத்துவமனைகளுக்கு சென்று, பெற்று, இறுதி அஞ்சலி நடத்த முடியவில்லை என்பதை அடையாளப்படுத்தும் வகையில் காலி சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன

மணிப்பூர் முழுக்க, குமாவை போல வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். வீடு என அவர்கள் அழைத்த இடத்தை தற்போது அவர்களாலேயே அடையாளம் காண முடியவில்லை. அடிப்படை தேவைகள் இன்றியும் அதிர்ச்சிகர நினைவுகளாலும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு பெருந்தன்மையுடன் உறவினர்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்றனர். மிச்ச பேர் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முகாம்களில் தங்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர்.

35 வயது போய்ஷி தாங், சுராசந்த்பூர் மாவட்ட லம்கா தாலுகாவின் லிங்க்சிபாயிலுள்ள நிவாரண முகாமில், 3-லிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளுடன் தங்கியிருக்கிறார். மே 3ம் தேதி காங்போக்பி மாவட்டத்திலிருக்கும் அவரது ஊரான ஹாவ் கோங் சிங் தாக்கப்பட்டது. “பக்கத்து கிராமங்கள் மூன்றை எரித்து விட்டு மெய்தி கும்பல்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன,” என்கிறார் அவர். “அதிக நேரம் இருக்கவில்லை. எனவே குழந்தைகளும் பெண்களும் முதலில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்ட்னர்.”

அவரின் கணவரான 34 வயது லால் தின் தாங், பிற ஆண்களுடன் கிராமத்தில் தங்கி விட்டார். போய்ஷி, அடர் காடுகளிலிருந்து நாகா கிராமத்துக்கு தப்பி சென்று விட்டார். நாகா பழங்குடியினர் அவருக்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுத்தனர். கணவருக்காக காத்துக் கொண்டு அங்குதான் அவர் இரவை கழித்தார்.

லால் தின் தாங் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள நாகா சமூகத்தை சேர்ந்த ஒருவர், அவரின் கிராமத்துக்கு செல்வதாகக் கூறினார். ஆனால், அவர் திரும்பி வந்து போய்ஷியின் அச்சத்தை உறுதிபடுத்தினார். அவரின் கணவர் பிடிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார். “துயருறவும் என் கணவரின் மரணத்தை ஏற்கவும் கூட எனக்கு நேரம் இருக்கவில்லை,” என்கிறார் போய்ஷி. “குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென்பதுதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த நாள், நாகாக்கள் என்னை ஒரு குகி கிராமத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து நான் சுராசந்த்பூருக்கு வந்தேன். மீண்டும் வீட்டுக்கு திரும்புவேன் என தோன்றவில்லை. எங்களின் வாழ்வாதாரத்தை விட எங்களின் உயிர் முக்கியம்.”

போய்ஷிக்கும் அவரது கணவருக்கும் சொந்தமாக ஐந்து ஏக்கர் நெல் வயல், கிராமத்தில் இருந்தது. அதுதான் அவர்களின் வாழ்வாதாரம். ஆனால் மீண்டும் அங்கு திரும்ப அவர் கற்பனை கூட செய்யவில்லை. மெய்திகள் அருகே இல்லாததால் தற்போது சுராசந்த்பூர்தான் குகிகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. மெய்தியின் கிராமங்களுக்கு அருகே வாழ்ந்து வந்த பெண்ணான போய்ஷி, இன்று அவர்களுடன் உறவாடுவதை யோசித்தாலே பதற்றமாகி விடுகிறார். “எங்களின் கிராமத்தை சுற்றி பல மெய்தி கிராமங்கள் இருந்தன,” என்கிறார் அவர். “அவர்கள் கடைகள் நடத்தினார்கள். நாங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களாக இருந்தோம். இணக்கமான உறவாக அது இருந்தது.”

Boishi at a relief camp in Churachandpur where she has taken shelter along with four of her children aged 3 to 12, after her village of Hao Khong Ching in the district of Kangpokpi came under attack
PHOTO • Parth M.N.

கங்க்போக்பி மாவட்டத்தின் காவ் கோங் சிங் கிராமம் தாக்கப்பட்ட பிறகு சுராசந்த்பூரின் முகாமில் 3லிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளுடன் போய்ஷி தஞ்சமடைந்திருக்கிறார்

ஆனால் இப்போது மணிப்பூரின் இரு சமூகங்களுக்கும் இடையே முற்றிலுமாக அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டுவிட்டது. இம்பால் பள்ளத்தாக்கில் மெய்திகளும் மலை மாவட்டங்களில் குகிகளும் என மாநிலம் இரண்டாக பிரிந்திருக்கிறது. அடுத்தவரின் இடத்துக்குள் செல்வது மரணத்தை கொண்டு வரும் நிலை. இம்பாலில் இருக்கும் குகி பகுதிகளில் ஆளரவம் இல்லை. குகிகள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில், மெய்திகள் மலைகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.

குகி கும்பலின் மொரே டவுன் தாக்குதலிலிருந்து பக்கவாதம் வந்த சகோதரனுடன் எப்படி தப்பினார் என்பதை இம்பாலின் மெய்தி முகாமில், 50 வயது ஹேமா பதி மொய்ராங்தெம் விளக்குகிறார். “என்னுடைய ஓரறை வீடு கூட எரிக்கப்பட்டுவிட்டது,” என்கிறார் அவர். “என்னுடைய உறவினர் காவல்துறையை அழைத்தார். எங்களை எரித்துக் கொல்வதற்கு முன் அவர்கள் வந்து விடுவார்களென நம்ப வேண்டிய நிலை.”

இந்தியா-மியான்மர் எல்லையில் இருக்கும் மொரே டவுனில் குகி கும்பல் திரண்டது. நடக்க முடியாத சகோதரன் இருந்ததால், ஹேமாவால் தப்பிக்க முடியவில்லை. “என்னை அவன் போக சொன்னான். ஆனால் அப்படி செய்திருந்தால் காலம் முழுக்க நான் குற்றவுணர்வில் இருந்திருப்பேன்,” என்கிறார் அவர்.

ஹேமாவின் கணவர் ஒரு விபத்தில் இறந்தபிறகு, அவர்கள் மூவரும் 10 வருடங்களாக ஒன்றாகத்தான் வசித்து வந்தனர். எனவே ஒருவரை பாதுகாக்க இன்னொருவரை இழப்பதென அவர்கள் யோசிக்கவே இல்லை. என்ன நடந்தாலும் மூவருக்கும் ஒன்றாக நடக்கட்டும் என இருந்தனர்.

காவல்துறை வந்தபோது, ஹேமாவும் உறவினரும் சகோதரனை தூக்கிக் கொண்டு, எரியும் வீட்டினூடாக காவல்துறையின் காருக்கு கொண்டு வந்தார்கள். மூவரையும் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இம்பாலுக்கு கொண்டு சென்று பாதுகாப்புக்காக விட்டது காவல்துறை. “அப்போதிலிருந்து நான் இந்த முகாமில் இருக்கிறேன்,” என்கிறார் அவர். “என்னுடைய உறவினரும் சகோதரனும் ஒரு உறவினரின் வீட்டில் இருக்கின்றனர்.”

Hema is now at a relief camp in Imphal. She escaped with her paralysed brother when her town, Moreh  was attacked by a Kuki mob
PHOTO • Parth M.N.

ஹேமா, இம்பாலின் முகாமில் இருக்கிறார். குகி கும்பலால் அவரது ஊர் மொரே தாக்கப்பட்டபோது, நடக்க முடியாத சகோதரனுடன் அவர் தப்பினார்

மொரேவில் மளிகைக் கடை நடத்திக் கொண்டிருந்த ஹேமா, தற்போது பிழைப்புக்கு தொண்டு நிறுவனத்தை சார்ந்து இருக்கிறார். 20 பேருடன் அடுக்கு படுக்கைகள் கொண்ட அறையில் அவர் வசிக்கிறார். பொது சமையலறையில் உண்ணுகிறார். தானமளிக்கப்பட்ட உடைகளை உடுத்துகிறார். “இது அற்புதமான உணர்வு இல்லை,” என்கிறார் அவர். “என் கணவர் இறந்தபிறகும் கூட, எனக்கு தேவையானவற்றை நானே செய்து கொள்ள முடிந்தது. என் சகோதரனையும் என்னையும் நான் பார்த்துக் கொண்டேன். எத்தனை காலம் இப்படி நாங்கள் வாழ வேண்டுமென தெரியவில்லை.”

மணிப்பூரின் குடிமக்கள், வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் நெருங்கியவர்களையும் இழந்த கசப்பான உணர்வை ஏற்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர்.

நெருங்கியவரை பறிகொடுப்பது குமாவுக்கு புதிதில்லை என்றாலும் டேவிட்டின் மரணத்தை ஏற்க முடியவில்லை. 30 வருடங்களுக்கு முன், அவரின் மகள் இரண்டு வயதாக இருக்கும்போது காலராவுக்கு பலியானார். அவரின் மனைவி புற்றுநோய் வந்து 25 வருடங்களுக்கு முன் இறந்தார். ஆனால் டேவிட்டின் மரணம்தான் பெரிய வெறுமையை அவருக்கு அளித்துவிட்டது. அந்த இளைஞர்தான் அவருக்கு இருந்த ஒரே பற்றுதல்.

டேவிட்டை குமாவே தனியாக வளர்த்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களுக்கு அவர் சென்றிருக்கிறார். பள்ளியை முடித்ததும் எந்த கல்லூரியில் சேர வேண்டுமென அறிவுரை வழங்கியிருக்கிறார். திருமணம் செய்ய வேண்டுமென முதன்முதலாக டேவிட் சொன்னபோது அவர் டேவிட்டுடன் இருந்தார்.

இத்தனை வருடங்களில் ஒருவருக்கு ஆதரவாக ஒருவர் வாழ்ந்ததில் அவர்களின் குடும்பம் மீண்டும் வளரத் தொடங்கியது. டேவிட் மூன்று வருடங்களுக்கு முன் மணம் முடித்தார். ஒரு வருடத்தில் குழந்தை பிறந்தது. மூத்த குடிமகனாக பேரக்குழந்தையுடன் விளையாடி, வளர்ப்பதை கற்பனை செய்து பார்த்தார். ஆனால் குடும்பம் மீண்டும் பிரிந்தது. டேவிட்டின் மனைவியும் குழந்தையும் இன்னொரு ஊரில் இருக்கும் தாய் வீட்டில் இருக்கின்றனர். குமா, சகோதரர் வீட்டில் இருக்கிறார்.  நினைவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அவர் பாதுகாக்க விரும்புகிறார். சிலவற்றை அவர் தொலைக்க விரும்புகிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan