ஷாந்தி டீச்சர் கணித பாடத்தைத் தொடங்கும்போது கூடலூர் வித்யோதயா பள்ளி வகுப்பறைக்குள் கானகம் நுழைந்துவிடுகிறது. இவ்வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் 9 வயது மாணவர்கள். அவர்கள் நீண்ட கம்புகளை தேடி வெளியில் திரிந்து, மரங்களில் தாவி, வனப்பகுதிக்குள் நுழைந்து சேகரிக்கின்றனர். அக்கம்புகளில் மீட்டர் அளவீடுகளை குறித்துக் கொண்டு தங்கள் வீடுகளை அளக்கின்றனர். இப்படி தான் அளவீட்டிற்கான எளிய வகுப்புகள் தொடங்குகின்றன.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவில் உள்ள இப்பள்ளியில் பழங்குடியின வாழ்க்கை முறையில், வனங்களை பற்றிய பாடத்திட்டங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. காலை ஒன்றுகூடலில் பழங்குடியினப் பாடல்களும், நடனங்களும் இடம்பெறுகின்றன. பழங்குடியின கைவினைக் கலைகளைக் கற்பதில் பகல் நேரங்கள் கழிகின்றன. வனங்களில் தினமும் இயற்கையுடன் நடப்பது, செடிகள், வழிப்பாதைகள், கவனிப்பது, அமைதியின் முக்கியத்துவம் போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். சில நேரங்களில் பெற்றோரும் இக்குழுவை வழிநடத்துகின்றனர்.

வித்யோதயா பள்ளியின் பாடப் புத்தகமான தி ஃபுட் புக்கில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல், பண்பாடு, உள்ளூர் பழங்குடியினரின் பயிரிடும் மரபு குறித்த பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. நூலக வகுப்பின்போது, பள்ளியால் பாதுகாக்கப்படும் கிளின பெங்கா எனும் பனியன் பழங்குடியின சிறுகதைகளின் தொகுப்பு நூலை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம். பழங்குடியின வழக்கங்களை கற்பிக்க சில சமயம் பெற்றோரும் வருகைதரு ஆசிரியர்களாக பள்ளிக்கு வருகின்றனர். “பழங்குடியின பண்பாட்டை வளர்த்தெடுக்கவும், பழங்குடியின குழந்தைகளை பெற்றோரிடம் அந்நியப்படுத்தாத கல்வி முறையையும் பள்ளியில் நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்கிறார் பள்ளியின் அனைத்தையும் உள்ளடக்கிய கலைத்திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ராம சாஸ்திரி. இக்குறிக்கோள்களுடன் பொறுப்புணர்வும், அன்பும் கொண்ட பழங்குடியின ஆசிரியர்களைப் பெற்றுள்ளதால் இப்பணி சரியாக நடக்கிறது. பனியன் பழங்குடியினரான மூத்த ஆசிரியை ஜானகி கற்பகம் சொல்கிறார்: “பள்ளிகளில் நம் பண்பாட்டை கற்பிப்பதில் ஒரு அவமானமும் கிடையாது. குழந்தைகளும் அவற்றை மறக்க மாட்டார்கள்.”

Morning assembly in school
PHOTO • Priti David
Shanthi Kunjan holding sticks that the children will use to measure their homes
PHOTO • Priti David

காலைக் கூடலின் போது பழங்குடியின பாடல்களை பாடும் மாணவர்கள் (இடது) கணித வகுப்பிற்கான அளவீடுகளை அறிவதற்கு காட்டில் கண்டெடுக்கப்பட்ட கம்புகளை பயன்படுத்துகின்றனர் (வலது)

முறைசாரா தொடக்கப் பள்ளியாக வித்யோதயா 1990களின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கூடலூரில் உள்ள பழங்குடியின அமைப்பான ஆதிவாசி முன்னேற்றச் சங்கம் 1996ஆம் ஆண்டு வித்யோதயாவை அணுகி மாதிரிப் பள்ளியாக மாற்றக் கோரியது. “பழங்குடியினருக்கு ‘படிப்பு வராது‘  என நம்பவைக்கப்பட்டனர். ஆனால், எங்கள் பள்ளியில் சில பழங்குடியின பிள்ளைகள் கல்வியில் மலர்வதைக் கண்டு அவர்களும் மாறத் தொடங்கினர். கல்வி முறையில் தான் பிரச்சனை, குழந்தைகளிடம் இல்லை என்பதை உணர்ந்தனர்,” என்கிறார் பள்ளியை நிர்வகிக்கும் விஸ்வ பாரத் வித்யோதயா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலரான பி. ராம்தாஸ். அவரது மனைவி ரமா பள்ளியின் முதல்வராக உள்ளார். தங்கள் வீட்டிலேயே பள்ளியை நடத்துகின்றனர்.

வீட்டுக் கல்வியிலிருந்து பள்ளிக்கூடமாக வளர்வதற்காக பெற்றோர்களே மண்ணால் அறைகளைக் கட்டி, கூரைகளை வேய்ந்தனர். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தாத்தா பாட்டிகள் தங்களது பேரப்பிள்ளைகளை கதைகள் சொல்லியும், பாடல்களை பாடியும் மகிழ்வித்து 5 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளியிலிருந்து மாணவர்கள் திரும்பும் வரை தேநீர் கடைகளில் காத்திருந்து அழைத்துச் செல்வதால், அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மாதம் ரூ.350 ‘தேநீர் படி’யாக வழங்கப்படுகிறது!

பனியன் பழங்குடியினரான 42 வயதாகும் ஷாந்தி குஞ்ஜன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த இலவச ஆரம்ப பள்ளிக்குத் தலைமை தாங்குகிறார். ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பழங்குடியினரே. அவர்களில் பெரும்பாலானோர் பனியன் பிரிவினர். பெட்டா குறும்பர்கள், காட்டுநாயக்கன், முல்லு குறும்பர்கள் சமூகத்தினரும் உள்ளனர். 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்தமுள்ள 10,134 பனியன்க்களில் 48.3 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளனர். அனைத்து பட்டியல் பழங்குடியினத்தவரை விட இது 10 சதவீதம் குறைவாகும். தேசிய கல்வியறிவு விகிதம் 72.99 சதவிகிதத்திற்கு கீழ் உள்ளது.

இளங்கலை வரலாறு முடித்துள்ள ஷாந்தி தனது பழங்குடியினம் குறித்த புள்ளிவிரவங்களை விளக்குகிறார். தேவாலா நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வளையவயல் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அலமாரிகளில், அருகில் உள்ள குழந்தைகளுக்கும் கற்பிப்பதற்காக சிறிய கதைகளை கொண்ட நூல்கள், கதைசொல்லும் அட்டைகளை அவர் வைத்துள்ளார். பள்ளி செல்லும் தனது மகனின் தேர்வு தேதிகளை நாள்காட்டியில் வட்டமிட்டுள்ளார். தனது மகளின் முதுநிலை படிப்பிற்கான நூல்கள் அலமாரியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வானியல் கல்விக்கான பயிற்சியையும், கல்வியையும், அன்றாட வாழ்வின் சவால்களையும் தொலைக்காட்சி பெட்டியின் மூலம் பெறுகின்றனர்.

Shanthi Kunjan teaching a young student math
PHOTO • Priti David
Adivasi children making bead chains in craft class
PHOTO • Priti David

வித்யோதயா பள்ளியின் பாடத்திட்டத்தில் பழங்குடியின வாழ்க்கை முறையும் பின்னி பிணைந்துள்ளது. பகல் நேரங்களில் மாணவர்கள் மணிகளை கோத்து மாலையாக்கி பழங்குடியின கைவினைக் கலைகளை கற்கின்றனர் (வலது)

நீலகிரியின் வனப்பகுதிகளில் வாழும் இளம் பழங்குடியினப் பெண்கள் கல்வியை முக்கியமானதாக கருதுவதில்லை. எட்டு குழந்தைகளில் மூத்தவரான ஷாந்தி, தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பாலான நேரத்தை விளையாட்டிலும், தனது இளைய சகோதர, சகோதரிகளை தாத்தா பாட்டியுடன் சேர்ந்து கவனித்து கொள்வதிலும் கழித்துள்ளார். அவரது பெற்றோர் தினக்கூலிகள் - அவரது தந்தை மீன்களை கட்ட உதவும் விலையுயர்ந்த குவளை இலைகளை காடுகளில் சேகரிக்கும் வேலையை செய்கிறார். அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அவரது தாயார் வேலை செய்கிறார். அவர் தேவாலா அருகில் உள்ள அரசு பழங்குடியின உறைவிட பள்ளியில் (GTR) ஆறு வயதில் சேர்ந்தார்.

இலவச கல்வி, உணவு, உறைவிடத்துடன் - பழங்குடியின குழந்தைகளுக்கு சேவையாற்றுவதற்காக நீலகிரி மாவட்டத்தில் 25 GTR  பள்ளிகள் உள்ளன.  பெரும்பாலான ஆசிரியர்கள் சமவெளியைச் சேர்ந்தவர்கள் என்பதால்  அரிதாகவே வருகின்றனர், இடமாற்றத்திற்காகவும் காத்திருக்கின்றனர் என்கிறார் GTRன் முன்னாள் ஆசிரியரான 57 வயதாகும் முல்லு குறும்பர் கங்காதரன் பாயன். “வகுப்பறையும், விடுதியும் ஒரே அறைதான். வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், பிள்ளைகள் இரவில் தங்குவதில்லை. கணினிகள், நூல்கள் இருந்தாலும் அவை பூட்டப்பட்டுள்ளன.”

தன்னைப் போன்ற பல பனியன் பிள்ளைகளுக்காக பேசும் ஷாந்தி, “நான் எதையும் கற்கவில்லை,” என்கிறார். பனியன் மட்டுமே பேசுகிறார். கற்பிக்கும் மொழி தமிழ் என்பதால் அவருக்கு சிறிது புரிகிறது. வேரிலிருந்து கற்றல் என்பதையே அனைத்து பாடங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய அரசியலமைப்பு (நிபந்தனை 350ஏ) “மொழியியல் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் தொடக்க நிலை கல்வியை அளிப்பதற்கான போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என அறிவுறுத்துகிறது…”

இன்று அனுபவம் வாய்ந்த ஆசிரியராக, குறைகளை எளிதாக அவர் கண்டறிகிறார். “இப்பள்ளி மாணவர்களால் தொடர்புகொள்ள முடியாவிட்டால், வெளியே செல்ல அஞ்சி முடங்கிவிடுவார்கள், இப்படித்தான் அச்சம் தொடங்குகிறது.”

Adivasi children learning in a classroom
PHOTO • Priti David
Books used by Adivasi children to learn about their culture
PHOTO • Priti David

நூலக வகுப்பின்போது, பனியன், பெத்த குறும்பர், காட்டுநாயக்கன், முல்லு குறும்பன் பழங்குடியின மாணவர்கள் தங்களின் உள்ளூர் மரபுகள் தொடர்புடைய நூல்களைப் படிக்கலாம்

GTRகளில் உள்ள பெரும்பாலான பிள்ளைகள் முதல் தலைமுறையாக கற்பவர்கள், அவர்களின் பெற்றோர், தாத்தா பாட்டிகளால் பள்ளி பாடத்திற்கு உதவ முடியாது. வகுப்பிற்கு வருவது குறைவு, கற்றலிலும் அலட்சியம், இடைநிற்றல் அதிகமாக நடக்கும். ஷாந்தியின் உடன்பிறந்தோர் அனைவரும் GTRக்குச் சென்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் படிப்பை பாதியில் கைவிட்டார். இது இயல்பானது தான். மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுப்படி இவை ஒன்றும் புதிதல்ல: பழங்குடியின சமூகங்களில் 1 முதல் 10ஆம் வகுப்பிற்குள் இடைநிற்றல் என்பது 70.9 சதவீதம். அதுவே பிற சமூகத்தினர் 49 சதவீதம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகொடிவேரி கிராமப் பள்ளியில் சேர்க்குமாறு மிஷனரி சகோதரிகள் ஷாந்தியின் பெற்றோரிடம் அறிவுறுத்தினர். சாலை வழியாக சென்றால் ஐந்து மணி நேர பயணம். அங்கு சென்று ஐந்தாண்டுகள் தங்கி தனது 10ஆம் வகுப்பை ஷாந்தி முடித்தார். வீடு திரும்பியதும், அமைப்புசாரா தொழிலாளியான பனியன் இளைஞர் குஞ்ஜனை அவர் மணந்தார்.

தேவாலா திரும்பியதும் பலரும் ஷாந்திக்கு வேலை கொடுக்க விரும்பினர்; அப்பகுதி பழங்குடியினரில் அதிகம் படித்தவர் ஷாந்திதான். செவிலியர் பணி வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார். கூடலூரைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான அக்கார்டிலிருந்து வந்த குழு பழங்குடியின பிள்ளைகளுக்கு கற்பிக்க இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி திட்டத்தில் சேர அழைப்பு விடுத்தது. அதில் ஷாந்தி இணைந்தார். “நான் எப்போதும் ஆசிரியராகவே விரும்பினேன். கையில் பெரிய கம்பு வைத்துக் கொண்டு, அதட்டிக் கொண்டே வலம் வரலாம்,” என்று சொல்லி அவர் சிரிக்கிறார்.

Shanthi with her mother Karupi
PHOTO • Priti David
Vidyodaya students, brothers Murali and Arjun going home to Gundital,          Sreemadurai
PHOTO • Priti David

இடது: முதல் தலைமுறையாக கற்ற ஷாந்தியுடன் அவரது தாய் கருப்பி. வலது: பள்ளிக்கு பிறகு ஸ்ரீமதுரை குண்டிதாலில் உள்ள தங்கள் வீட்டிற்கு நடந்து செல்லும் சகோதரர்கள் முரளி, அர்ஜூன்

சிறிது காலம் பள்ளிக் கல்வியை பெற்றிருக்கும் கணவர் குஞ்ஜன் ஷாந்திக்கு உதவியாக இருக்கிறார். பயிற்சி மையத்திற்கு அருகே அவர்கள் வீடு எடுத்து தங்கினார்கள். தாயும், சகோதரிகளும் வீட்டு வேலைகளையும், அவரது பெண் குழந்தையையும் கவனித்து கொள்கின்றனர். அவருடன் 14 இளம் பழங்குடியினர் படித்தனர். அவர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.800 வழங்கப்பட்டது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று அவர்கள் சந்திக்க உள்ள சவால்களை அறிந்துகொண்டனர்.

ஷாந்தியிடம் வைராக்கியமும், அவரது குடும்பத்தின் ஆதரவும் இருந்தாலும் பல்வேறு பாத்திரங்களை வகிப்பது அவருக்கு கடினமாக இருந்தது. அவருடன் பள்ளியில் படித்த பலரும் பாதியில் விட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் ஷாந்தி மட்டும் தொடர்ந்தார்: “எனக்கு கற்பதில் ஆர்வம் இருந்தது. நான் இதுவரை செய்திராத பல அறிவியல் பரிசோதனைகளை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.” பழங்குடியின வரலாறு குறித்த பாடங்கள் அவரையும், அவரது சமூகம் குறித்தும் வேறு மாதிரி உணரச் செய்தது. பயிற்சி முடித்த அவர், தொலைநிலைக் கல்வி மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றார்.

15 ஆண்டுகளுக்கு முன் ஷாந்தி வித்யோதயாவில் இணைந்தார். இன்று அவரது பகுதியைச் சேர்ந்த அனைத்து பனியன் பிள்ளைகளும் கூடலூர் தாலுக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது பெருமைக்குரிய விஷயம். அவர் முன்பு முச்சிக்குண்டு மாதிரியான குக்கிராமங்களில் வசித்து வந்தார். ஒருமுறை அவரது வீட்டை யானை மிதித்து சேதப்படுத்திவிட்டது. அதுபோன்ற பகுதிகளில் மாணவர் சேர்க்கை இப்போதும் சவாலாகவே உள்ளது. “பெற்றோர்களிடம் பேசி இடைநிற்றலை நான் குறைக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.

பல பெற்றோரும் தினக்கூலிகளாக ரூ.150 ஈட்டி வருகின்றனர். அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, கல்விக் கட்டணம், சீருடைகள், போக்குவரத்து என ஆண்டுக்கு ரூ. 8000 முதல் ரூ. 25,000 வரை செலவாகும் என்பதால் பெற்றோர் கவலைப்படுகின்றனர். தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருவதால் பயணச் செலவும் அதிகமாகும். வித்யோதயா பள்ளி கட்டணம் வாங்குவதில்லை. போக்குவரத்து செலவையும் ஏற்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஆண்டிற்கு ரூ. 350 விரும்பினால் செலுத்தலாம் என்கிறது.

பள்ளி முடிந்து மணி அடித்தவுடன் நூல்கள், கோப்புகள், கைவினைப் பொருட்களை தூர வைத்துவிட்டு தங்கள் வகுப்பறைகளை பிள்ளைகள் சுத்தப்படுத்த தொடங்குகின்றனர். பதிவேட்டை பரிசோதித்து ஷாந்தி கையொப்பமிடுகிறார். உள்ளூர் ஜீப் காத்திருக்கிறது. ஷாந்தியின் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுடன் வீடு நோக்கி, நீலகிரி நகரங்கள், வனங்களை கடந்த 45 நிமிட பயணத்தை தொடங்குகிறார். அவரது மடியில் ஒரு குழந்தை அமர்ந்து கொள்கிறது. அவருக்கும், அவரது பழங்குடியின சக பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இன்று மற்றொரு பள்ளி நாள் முடிகிறது.

தமிழில்: சவிதா

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha