மாருதி வேன் நிரம்பிவிட்டது, புறப்படுவதற்கு தயாராகிவிட்டது. கிடைத்த இடத்தையெல்லாம் விவசாயிகள் ஆக்கிரமித்துக்கொண்டனர். ஒருவரின் மடியில் கூட ஒருவர் அமர்ந்துகொண்டு ஒரு சிலர் இருந்தனர். அவர்களின் பைகளும், நடக்க பயன்படுத்தும் குச்சிகளும் பின்புற இருக்கையை தாண்டியும் நீண்டு கிடக்கின்றன.

ஆனால் மங்கள் காட்கேவுக்கு அருகில் இருந்த இருக்கை மட்டும் காலியாக இருந்தது. அவர் வேறு யாரையும் அந்த இடத்தில் உட்கார அனுமதிக்கவில்லை. அது ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் மீராபாய் லங்கே வேனில் ஏறி, அந்த காலி இருக்கையில் அமர்ந்துகொண்டு, தனது புடவையை சரிசெய்கிறார். அப்போது மங்கள் தனது கையை அவரது தோளில் போட்டுக்கொள்கிறார். கதவு மூடப்படுகிறது. மங்கள் டிரைவரிடம் போகலாம் என்று சொல்கிறார்.

மங்கள்(53) மற்றும் மீராபாய்(65) இருவரும் நாசிக்கின் தின்டூரி தாலுகாவில் உள்ள ஷிண்ட்வாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தில் பல பத்தாண்டுகள் ஒன்றாக இருந்திருந்தாலும் கடந்த சில வருடங்களில்தான் அவர்களது நட்பு நெருக்கமடைந்திருக்கிறது.. “நாங்கள் ஊரில் ஓய்வின்றி வேலைகளில் மூழ்கியிருப்போம். போராட்டங்களில்தான் எங்களுக்கு பேசுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும்“ என்று மங்கள் கூறுகிறார்.

மார்ச் 2018ம் ஆண்டு நாசிக்கில் இருந்து மும்பை வரையிலான விவசாயிகளின் நீண்ட பேரணியில் இருவரும் ஒன்றாக இருந்தனர். பின்னர் நவம்பர் 2018ல் தில்லியில் நடந்த விவசாயிகள் பேரணிக்கும் ஒன்றாக சென்றார்கள். இப்போது நாசிக்கிலிருந்து தில்லி வரை நடக்கும் வாகன பேரணியிலும் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப்போராட்டத்தில் எதற்காக கலந்துகொண்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு “எங்கள் வயிற்றுக்காக“ என்று மங்கள் கூறுகிறார்.

மத்திய அரசு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய தலைநகரின் எல்லையில் 3 வெவ்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒற்றுமையை காட்டவும், மஹாராஷ்ட்ராவில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டிசம்பர் 21ம் தேதி நாசிக்கில் ஒன்றுகூடி, அங்கிருந்து, தோராயமாக 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெல்லி நோக்கி வாகன பேரணி சென்றனர். இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைத்துள்ளனர்.

இந்த போராளிகளில் மங்கள் மற்றும் மீராபாயும் அங்கம் வகித்துள்ளனர்.

Mangal in front, Mirabai behind: the last few years of participating together in protests have cemented their bond
PHOTO • Parth M.N.

மங்கள் முன்னால், மீராபாய் பின்னால்: கடந்த சில ஆண்டுகளாக விவசாய போராட்டங்களில் கலந்துகொண்டது அவர்களின் நட்பின் ஆழத்தை அதிகரித்தது

மங்கள், பாதி வெள்ளையாக உள்ள சேலை அணிந்து முந்தானையை தலையில் சுற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். நாசிக்கில் உள்ள மைதானத்தை பேரணி துவங்கிய டிசம்பர் 21ம் தேதி அவர்கள் இருவரும் அடைந்தபோது, அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் செல்லப்போகும் டொம்போவை பார்த்தனர். அது பற்றி மங்கல் விசாரிக்கிறார்.  “நாங்கள் அதை எதிர்நோக்கியிருக்கிறோம்” எகன்கிறார் மங்க.  “இது விவசாயிகளுக்கு எதிரான அரசு. அதற்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு எங்களின் ஆதரவையும் தெரிவிக்கிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

மங்களின் குடும்பத்தினர் நெல், கோதுமை மற்றும் வெங்காயம் ஆகியவற்றை தங்களின் 2 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடுகின்றனர். ஆனால், வருமானத்திற்கான அவரின் முதன்மை மூலம் விவசாயக்கூலியாக தினமும் கிடைக்கும் ரூ.250 மட்டுமே. அவர் ஒரு வாரம் வரை நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்கிறார் என்றால், அவரின் மாத வருமானத்தில் 4ல் ஒரு பங்கை இழக்கிறார் என்று பொருள். “ அது முக்கியமில்லை, அதைவிட பெரிய விசயங்கள் இருக்கின்றன. இந்த போராளிகள் அனைவருமே விவசாயம் செய்பவர்கள்“ என்று மங்கள் கூறுகிறார்.

மைதானத்தில் எங்களின் சந்திப்பு தொடங்கி பத்து நிமிடங்கள் சென்றிருக்கும் நிலையில்  , வாகனங்கள் வரிசையாக ஒரு ஓரத்தில் இருந்து மற்றொரு ஓரம் வரை அணிவகுத்து நிற்கையில், மங்களை தேடி மீராபாய் வருகிறார். கைகளை அசைத்து, அவரை முடிக்கச் சொல்கிறார். மீராபாய், மங்களை அவருடன் மேடையை நோக்கி அழைத்துச்செல்ல விரும்புகிறார். அங்குதான் விவசாயிகள் சபையின் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மங்கள், மீராபாயையும் நம்முடைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைக்கிறார். ஆனால், அவர் கொஞ்சம் வெட்கப்படுகிறார். ஆனால், இரண்டு பெண் விவசாயிகளுக்குமே அவர்களும், மற்ற விவசாயிகளும் எதற்காக போராடுகிறார்கள் என்பதும், வேளாண்  சட்டங்களில் உள்ள சிக்கல்கள் குறித்தும் தெரிகிறது.

“எங்கள் விளைச்சலை பெரும்பாலும், எங்கள் வீட்டின் நுகர்வுக்காக எடுத்துக்கொள்வோம். வெங்காயம் மற்றும் அரிசியை நாங்கள் வாணியில் உள்ள சந்தையில் விற்பனை செய்வோம்“ என்று மங்கள் கூறுகிறார். நாசிக் மாவட்டத்தில் உள்ள வாணி நகரம் அவர்கள் கிராமத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்குள்ள சந்தையில் தனியார் வியாபாரிகளால், ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு சில நேரங்களில் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கிறது. சில நேரங்களில் அதுவும் இல்லை. “குறைந்தளவு ஆதார விலை மற்றும் உறுதிபடுத்தப்பட்ட சந்தையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பவர்களுக்கு அதை கிடைக்கவிடாமல் செய்வதை உறுதிப்படுத்துகிறது. நமது அடிப்படை உரிமைகளுக்கு கூட நாம் போராடுவது, மிக வருத்தமாக உள்ளது“ என்று மங்கள் கூறுகிறார்.

Mangal (right) is more outspoken, Mirabai (middle) is relatively shy, but both women farmers know exactly why they and the other farmers are protesting, and what the fallouts of the farm laws could be
PHOTO • Parth M.N.

மங்கள்(வலது) வெளிப்படையாக பேசுகிறார், மீராபாய் (நடுவில்) பேசுவதற்கு கொஞ்சம் தயங்குகிறார். ஆனால், இரண்டு பெண் விவசாயிகளுக்கும், அவர்களும், மற்ற விவசாயிகளும் ஏன் போராடுகிறார்கள் என்பதும், வேளாண் சட்டத்தின் பிரச்னைகள் குறித்தும் தெரிகிறது

2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் நீண்ட பேரணியில், விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தொலைவு, நாசிக்கில் இருந்து மும்பை வரை, 7 நாட்கள் நடந்தனர். அதில் பெரும்பாலானோர் ஆதிவாசிகள். அவர்களின் முக்கியமான கோரிக்கையாக உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்பது இருந்தது. “நாசிக் – மும்பை பேரணிக்குப்பின்னர் அந்த வேலைகள் துரிதமாக நடந்தது“ என்று மீராபாய் கூறினார். அவரது 1.5 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடுகிறார்.

“ஆனால் , அது மிகவும் சோர்வாக இருந்தது. அந்த வார இறுதியில் எனக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. ஆனால் நாங்கள் அதை சாத்தியமாக்கினோம். வயது காரணமாக அந்த பயணம் மங்களைவிட எனக்கு மிகக்கடுமையாகவே இருந்தது“ என்று அவர் மேலும் கூறினார்.

2018ம் ஆண்டு நடைபெற்ற அந்த நீண்ட பேரணியில் மங்கள் மற்றும் மீராபாய் இருவரும் ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டனர். “அவர் சோர்ந்துவிட்டால், அவருக்காக நான் காத்திருப்பேன். எனக்கு நடக்க முடியவில்லை என்றால், எனக்காக அவர் காத்திருப்பார். அப்படித்தான் கடினமான தருணங்களில் ஒருவொருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டும். கடைசியில் அதற்கு பலன் இருந்தது. அரசை தட்டி எழுப்புவதற்கு நாங்கள் வெறும் காலுடன் நடந்தது உதவியாய் இருந்தது“ என்று மங்கள் கூறுகிறார்.

தற்போது மீண்டும் மோடியின் அரசை எழுப்புவதற்காக அவர்கள் டெல்லி செல்கின்றனர். “அரசு சட்டத்தை திரும்பப்பெறும் வரை நாங்கள் டெல்லியிலே இருக்க தயார். நான் தேவையான அளவு உடைகளை எடுத்துக்கொண்டேன். டெல்லி செல்வது எனக்கு முதல் முறையல்ல“ என்று மங்கள் கூறுகிறார்.

1990களில் முதல் முறையாக மங்கள் டெல்லி சென்றுள்ளார். “நானாசாகேப் மலுசரேவுடன்“ என்று அவர் கூறுகிறார். நாசிக் மற்றும் மஹாராஷ்ட்ராவின் விவசாயிகள் சபை தலைவர் மலுசரே. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பின்னரும் விவசாயிகளின் கோரிக்கை அப்படியே உள்ளது. மங்கள் மற்றும் மீராபாய் இருவருமே கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடியின மக்கள், வனத்துறையின் கீழ் உள்ள நிலங்களில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். 2006ன் வன உரிமைகள் சட்டம் நிலத்தை அவர்களுக்கு உரிமையாக்குவதை சுட்டிக்காட்டி, “சட்டம் இருந்தாலும் அவற்றை எங்களால் சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது“ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Since Mirabai is older, Mangal seems to be more protective of her. From holding a seat for her, to going to the washroom with her, they are inseparable
PHOTO • Parth M.N.

மீராபாய்க்கு வயதகிவிட்டதால், மங்கள் அவரை நன்றாக பாதுகாக்கிறார். அவருக்காக இடத்தை பிடித்து வைப்பது, அவர் கழிவறைக்குச் சென்றால் உடன் வருவது என்று இருவரும் பிரிக்க முடியாதவர்களாக உள்ளனர்

மற்ற போராளிகளைப்போல், ஒப்பந்த விவசாயத்தை உள்ளடக்கிய புதிய விவசாய சட்டம் குறித்து அவர்களுக்கு அச்சம் இருக்கிறது. நிறைய பேர் அதை விமர்சனம் செய்துள்ளனர். விவசாயிகள் பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது பிற்காலத்தில், அவர்களை அவர்களின் சொந்த நிலத்திலே கூலிகளாக்கும் என்று கூறுகின்றனர். “நாங்கள் எங்களின் சொந்த நிலத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் சொந்த நிலத்தின் கட்டுப்பாடு உங்களிடம் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் அதற்காக போராடுவோம். அந்த போராட்டத்தில் எங்கள் பொதுப்பிரச்னைகளில் நாங்கள் நல்ல நண்பர்களை பெற்றுள்ளோம்“ என்று மங்கள் கூறுகிறார்.

அவர்களின் நட்பு மிக ஆழமாக உள்ளது. மீராபாய் மற்றும் மங்கள் இருவரின் பழக்க வழக்கங்களும் இருவருக்கும் இப்போது நன்றாகவே தெரியும். மீராபாய் வயதானவராக இருப்பதால், மங்கள் அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறார். அவருக்கு இருக்கை பிடித்து வைப்பது, அவர் கழிவறைக்குச் சென்றால், உடன் செல்வது என்று அவர்கள் பிரியாமல் உள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கு வாழைப்பழம் கொடுக்கும் போது மீராபாய்க்கும் சேர்ந்து மங்கள் கூடுதலாக பழங்களை வாங்கிச்செல்கிறார்.

பேட்டியின் முடிவில் நான் மங்களின் தொடர்பு எண்ணைக்கேட்டேன். பின்னர் மீராபாயிடம் கேட்டேன்.“ அந்த எண் உங்களுக்கு தேவைப்படாது. நீங்கள் என்னுடைய எண்ணிலேயே அவர்களை தொடர்புகொள்ளலாம்“ என்று மங்கள் கூறுகிறார்.

பின்குறிப்பு : இந்த நிருபர் மங்கள் மற்றும் மீராபாய் இருவரையும் டிசம்பர் 21 மற்றும் 22ம் தேதிகளில் சந்தித்தார். 23ம் தேதி காலை முதல் இருவரும் பேரணியில் இருந்து விலகிவிட முடிவு செய்தனர். 24ம் தேதி அவர்களை போன் மூலம் தொடர்புகொண்டபோது, “நாங்கள் மத்திய பிரதேச எல்லையில் இருந்து வீடு திரும்ப முடிவு செய்துவிட்டோம். ஏனெனில் எங்களால் பனியை தாங்க முடியவில்லை.” பயணத்தின்போது வரும் சில்லென்ற காற்றை அவர்களால் தாங்க முடியவில்லை. பனி அதிகரிப்பதை உணர்ந்த அவர்கள், தங்களின் கிராமமான ஷிண்ட்வாட்க்கே திரும்பி செல்ல முடிவெடுத்தனர். அவர்கள் உடல்நிலையை கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளனர். “குறிப்பாக மீராபாய்க்கு அதிகமாக குளிர் அடித்தது. எனக்கும்தான்“ என்று மங்கள் கூறினார். நாசிக்கில் குழுமிய 2 ஆயிரம் விவசாயிகளில் ஆயிரம் பேர் தொடர்ந்து, மத்தியபிரதேச எல்லையை கடந்து டெல்லி செல்கின்றனர்.

தமிழில்: பிரியதர்சினி. R.
Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.