காலனியாதிக்கம் மற்றும் இந்தியத் துணைக்கண்ட பிரிவினை ஆகியவற்றின் நீண்ட நிழல்களின் இருப்பு இன்றும் அசாமில் எண்ணற்ற வழிகளில் வெளிப்படுகிறது. குறிப்பாக, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) எனப்படும் குடியுரிமை அடையாளப்படுத்தும் செயல்பாட்டில் அழுத்தந்திருத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. அச்செயல்பாட்டின் விளைவாக 19 லட்சம் பேர் மாநிலமற்றவர்களாக மாற்றப்படுவார்கள். ‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்’ என ஒரு வகைமை உருவாக்கப்பட்டு, அவ்வகைமைக்குள் வருபவர்கள் முகாம்களில் அடைக்கப்படுவது அச்செயல்பாட்டின் ஒரு பரிமாணம். வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயங்கள் 1990களிலிருந்து முளைத்து வருவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ம் ஆண்டின் டிசம்பரில் நிறைவேற்றப்பட்டதும் அம்மாநிலத்திலுள்ள குடியுரிமை பிரச்சினையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

இந்த நெருக்கடி எழுப்பியிருக்கும் சூறாவளியால் தனிநபர் வாழ்க்கைகளிலும் வரலாறுகளிலும் ஏற்பட்டிருக்கும் பேரழிவு விளைவுகளை ஆறு பேரின் வாக்குமூலங்கள் நமக்குக் காட்டுகின்றன. எட்டு வயதாக இருக்கும்போது நேர்ந்த நெல்லி படுகொலையில் உயிர் பிழைத்த ரஷிதா பேகத்தின் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இடம்பெறவில்லை. அவரின் குடும்பத்தின் பிற உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஷாஜகான் அலி அகமதின் பெயரும் அவரது குடும்பத்தை சேர்ந்த பலரின் பெயர்களும் கூட பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போது அவர் அசாமில் குடியுரிமை சார்ந்த பிரச்சினைகளில் இயங்கும் செயற்பாட்டாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அசாமின் குடியுரிமை பிரச்சினை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கொள்கைகளினால் அலையலையாய் நேர்ந்த இடப்பெயர்வு மற்றும் 1905ம் ஆண்டின் வங்கப் பிரிவினை, 1947ம் ஆண்டின் இந்தியத் துணைக்கண்டப் பிரிவினை ஆகிய வரலாறுகளுடன் தொடர்பு கொண்டது

இந்தியர் என ஆவணங்கள் இருந்தும் குடும்பத்துக்கே இந்தியக் குடியுரிமை இருந்தும் உலோபி பிஸ்வாஸ் வெளிநாட்டவராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். சந்தேகத்துக்குரிய வாக்காளர் என குறிப்பிடப்பட்டிருக்கிறார். போங்கைகாவோன் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் தன் குடியுரிமையை நிரூபிக்க 2017-2022 வரை விசாரணைக்கு சென்றார். முகாம்களிலிருந்து ஜாமீனில் வெளிவந்திருக்கும் குல்சும் நிஸ்ஸா மற்றும் சுஃபியா காதுன் ஆகியோர் காவலில் கழித்த காலத்தை நினைவுகூருகின்றனர்.

அசாமின் குடியுரிமை நெருக்கடி பற்றிய வரலாறு சிக்கலானது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளினால் அலையலையாய் நேர்ந்த இடப்பெயர்வு மற்றும் 1905ம் ஆண்டின் வங்கப் பிரிவினை, 1947ம் ஆண்டின் இந்தியத் துணைக்கண்டப் பிரிவினை ஆகிய வரலாறுகளுடன் தொடர்பு கொண்டது.

வரலாற்றையும் நம்மையும் எதிர்கொள்ளுதல் என்கிற இப்பணியில் பதிவாகியிருக்கும் குல்சும் நிஸ்ஸா, மோர்ஜினா பீபி, ரஷிதா பேகம், ஷாஜகான் அலி அகமது, சுஃபியா காதுன் மற்றும் உலோபி பிஸ்வாஸ் ஆகியோரின் கூற்றுகள், குடியுரிமை பேரழிவு சீக்கிரத்தில் முடியப்போவதில்லை என உணர்த்துகின்றன.


ரஷிதா பேகம் அசாமின் மோரிகாவோன் மாவட்டத்தை சேர்ந்தவர். பிப்ரவரி 18, 1983-ல் நெல்லி படுகொலை நடந்தபோது அவருக்கு எட்டு வயது. 2019ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.


ஷாஜகான் அலி அகமது பக்சா மாவட்டத்தை சேர்ந்தவர். அசாமின் குடியுரிமை பிரச்சினைகளில் இயங்கும் செயற்பாட்டாளர். அவரையும் சேர்த்து அவரது குடும்பத்தின் 33 உறுப்பினர்களின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறவில்லை.


சுஃபியா காதுன் பார்பேட்டா மாவட்டத்தை சேர்ந்தவர். கொக்ரஜார் முகாமில் இரண்டு வருடங்கள் கழித்தவர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட ஜாமீனில் அவர் வெளியே தற்போது இருக்கிறார்.


குல்சும் நிஸ்ஸா பார்பேட்டா மாவட்டத்தை சேர்ந்தவர். கொக்ரஜார் முகாமில் ஐந்து வருடங்கள் கழித்திருக்கிறார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர், ஒவ்வொரு வாரமும் உள்ளூர் காவல்துறையிடம் ஆஜராக வேண்டும்.

உலோபி பிஸ்வாஸ் சிராங் மாவட்டத்தை சேர்ந்தவர். போங்கைகாவோன் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் 2017ம் ஆண்டு தொடங்கி விசாரிக்கப்பட்டு வருபவர்.


மோர்ஜினா பீபி கோல்பரா மாவட்டத்தை சேர்ந்தவர். எட்டு மாதங்கள் 20 நாட்கள் கொக்ரஜார் முகாமில் கழித்தவர். தவறான நபரை காவலர்கள் கைது செய்தது நிரூபிக்கப்பட்டபிறகு இறுதியில் விடுவிக்கப்பட்டார்.

‘வரலாற்றையும் நம்மையும் எதிர்கொள்ளுதல்’ பணியை சுபஸ்ரீ கண்ணன் ஒருங்கிணைத்திருக்கிறார். இந்தியக் கலைக்கான இந்திய அறக்கட்டளை, ஆவணக் காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகத் திட்டத்தின் கீழ், PARI-யுடன் இணைந்து முன்னெடுத்திருக்கும் பணி இது. புது தில்லியின் கோத்தே நிறுவனம்/மேக்ஸ் முல்லர் பவன் ஆகியவற்றின் ஆதரவுடன் இப்பணி சாத்தியமானது. ஷேர்-கில் சுந்தரம் கலை அறக்கட்டளையின் ஆதரவுடனும் இப்பணி செயல்படுத்தப்பட்டிருக்கிறது

முகப்பு புகைப்படக் கோர்வை : ஷ்ரேயா காத்யாயினி

தமிழில் : ராஜசங்கீதன்

Subasri Krishnan

Subasri Krishnan is a filmmaker whose works deal with questions of citizenship through the lens of memory, migration and interrogation of official identity documents. Her project 'Facing History and Ourselves' explores similar themes in the state of Assam. She is currently pursuing a PhD at A.J.K. Mass Communication Research Centre, Jamia Millia Islamia, New Delhi.

Other stories by Subasri Krishnan
Editor : Vinutha Mallya

Vinutha Mallya is a journalist and editor. She was formerly Editorial Chief at People's Archive of Rural India.

Other stories by Vinutha Mallya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan