வங்கி (உங்களிடமிருந்து) கடனைத் திரும்பப் பெற காந்திய வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது: 1)வீட்டின் வாசலின் எதிரில் போராட்டம் நடத்துவதற்காக முகாம் அமைக்க உள்ளது, 2)பேண்ட் வாத்தியக் கருவிகளை உபயோக்கிக்க உள்ளது. 3)மணியை ஒலிக்கச் செய்யவுள்ளது.

“இந்த நடவடிக்கைகளின்  காரணமாக, தங்களின் அந்தஸ்து மற்றும் கௌரவத்திற்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது”

இவ்வாறான வகையில் ஒஸ்மனாபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (ODCC) அதன் 20,000 வாடிக்கையாளர்களை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையிலும் பரிகசிக்கும் விதமாகவும் கூறியுள்ளது. இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பல ஆண்டுகளாக துன்பத்திற்கு ஆளாகி  வரும் விவசாயிகளே ஆவர். சிலசமயம் போதிய விளைச்சல் இல்லாததாலும், சிலசமயம் அதிகப்படியான விளைச்சல் இருப்பினும் விலை சரிவாலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  மேலும்,விவசாயத்தை முடக்கிப் போடும் அளவிலான வறட்சி மற்றும் நீர் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் கடனைத் திருப்பி செலுத்துவது மேலும் சிக்கலாகியுள்ளது. இவற்றிற்கு எல்லாம் மேலாக, 500 மற்றும்  1,000 ஆயிரம் ருபாய் தாள்களை மதிப்பிழக்க செய்த அரசின் உத்தரவானது, விவசாயிகளிடம் பணிபுரிந்த விவசாயத்தொழிலாளிகளின் தினக்கூலியைக்கூட செலுத்த இயலாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. கேஹெட் கிராமத்தைச் சார்ந்த குறுவிவசாயியான எஸ்.எம்.கவலே கூறுகையில்,  "கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து விவசாயக் கூலிகளுக்கு  ஒரு பைசா கூட ஊதியமாக வழங்கப்படவில்லை. அனைவரும் பசியோடுதான் இருந்தார்கள்" என்றார்.

மேலும், வங்கியின் கடிதத்தில் (கடிதத்தின் மொழிபெயர்ப்பானது கட்டுரையின் முடிவில் இடம்பெற்றுள்ளது) அதன் முதலீட்டாளர்கள் பணம் எடுக்க முடியவில்லை என்றால் அதற்கு விவசாயிகள் தான் காரணம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது:"இதுபோன்ற காரணங்களினால் ஒருவேளை முதலீட்டாளர் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு நீங்கள் தான் பொறுப்பு..."

இந்த சூழலில் தான்,அந்தக் கிராமத்திற்கு வருகைப்புரிந்த வங்கியின் 'கடன் மீட்புக் குழுவானது' விவசாயிகளின் குடும்பத்தை அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு  பதற்றமும் விரக்தியும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள,  தெர்னா மற்றும் துல்ஜபவானி ஆகிய இரண்டு சர்க்கரை ஆலைகள்  ஓ.டி.சி.சி வங்கியிலிருந்து  ஒட்டுமொத்தமாக  352 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள நிலையில், அந்தக் கிராமத்தைச்  சார்ந்த   ஏறத்தாழ  20,000 விவசாயிகள்  அந்த வங்கியிடமிருந்து  ஒட்டுமொத்தமாக வெறும் 180 கோடி ரூபாய் மட்டுமே  கடன் பெற்றுள்ளனர். எனினும்,  சிறுவிவசாயிகள் பெற்றக்  கடனைத் திரும்ப பெற வங்கி மேற்கொண்டயுத்திகள்,   அதிகாரமிக்கவர்களால்  கட்டுப்படுத்தப்படும் பெரும் நிறுவனங்களுக்கு என்று வரும் வரும்போது மட்டும் சாதகமாக காற்றில் பறந்துள்ளது. "அந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது" என்று ஓ.டி.சி.சி வங்கியின்  நிர்வாக இயக்குனர் விஜய் கோன்சே பாட்டில் தெரிவித்துள்ளார். எனவே, அங்கு  கடனைக் கைப்பற்றுவதற்கான  காந்திய வழியிலான  எந்தப்போராட்டமும் நடைபெறவில்லை. மேலும், இந்த நிறுவனங்களுக்கு  சொந்தமான நிலங்கள் கைப்பற்றப்பட்டு வங்கியால் ஏலமும் விடப்படவில்லை.

"காந்திய வழியிலான போராட்டம் நடத்துவதற்கான இந்த திட்டம் திரு.அருண் ஜேட்லீயின் பேச்சினால் ஈர்க்கப்பட்டு  செயல்படுத்தப்பட்டது" என்று கோன்சே பாட்டில் தெரிவித்துள்ளார். இவர் தான் அந்தக்கிராம மக்களை கோபம் கொள்ளச் செய்த அந்தக் கடிதத்தினை எழுதியவர். ஒஸ்மானாபாத் நகரில் உள்ள வங்கியின் தலைமையகத்தில்  இதுகுறித்து அவரிடம் பேசிய போது:  "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கடன் நிலுவைதாரர்கள்  மீது  நடவடிக்கை எடுக்கப்படுமென  எச்சரிக்கும் வகையில்  பேசிய  ஒன்றிய நிதியமைச்சர் பேச்சின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது" என்று  தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது போன்று பேசினார்


Left: Vijay Ghonse Patil, executive director of the ODCC, at the bank's headquarters in Osmanabad town. Right: A farmer in Lohara block explains the problems they face
PHOTO • P. Sainath

இடது: ஒஸ்மானாபாத் நகரில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் ஓ.டி.சி.சி வங்கியின் நிர்வாக இயக்குனர் விஜய் கோன்சே பாட்டில் வலது:லோஹரா பகுதியைச் சார்ந்த விவசாயி தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்குகிறார்

" அந்தக்கடிதத்தினை நான் தான் எழுதினேன்.  இதுகுறித்து மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளேன் , வரும் மார்ச்  2017ஆம் ஆண்டுக்குள்  15 விழுக்காட்டுக்கு குறைவாகவேனும் அசையா சொத்துகளை நாங்கள் மீட்டெடுக்க  வேண்டும். நான் இதில் உறுதியாக உள்ளேன். கடனை மீட்டெடுக்க எனக்கு வேறு வழிகள் இல்லை" என்று தெரிவித்த  கோன்சே பாட்டில்,   சட்ட வல்லுனர்களின் முறையான வழிகாட்டலோடு இந்தக் கடிதம் எழுதப்படவில்லை என்றும், கடிதமானது  "வங்கியின் இயக்குநர்கள்  குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அவர்கள்  அதற்கு ஒப்புதல் அளித்தனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

பல கடிதங்களில் அக்டோபர் மாத தேதியே இடம்பெற்றுள்ளது எனவே,விவசாயிகள் இதனை பரிகசித்துள்ளனர். “நவம்பர் 15 க்குப் பிறகு தான் எங்களுக்கு அந்தக் கடிதங்கள் கிடைத்தன.” இதையே வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தக் கடிதங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதேவேளையில், மனோகர் எல்லோர் என்பவருக்கு டிசம்பர் 2 அன்று தான் இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. லோஹாரா கிராமத்தைச் சார்ந்த சிறுவிவசாயியான இவர்   வங்கியில் வாங்கிய 68,000 ருபாய் கடனை செலுத்த முடியாததால் கடந்த  2014 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஒஸ்மானபாத் மாவட்டம் லோஹாரா பகுதியிலுள்ள நாகூர் கிராமத்தில் ஒன்றுகூடிய பல கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்: ”இதுபோன்ற அவமானத்திற்கு ஆளானால் எங்களது உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை." இந்த விவகாரத்தினால் அச்சத்திற்கு உள்ளானதாகவும் தெரிவித்தனர். மாநில அரசின் புள்ளிவிவரப்படி, ஒஸ்மானாபாத் மற்றும் யவத்மால் ஆகிய மாவட்டங்களில் தான் மகாராஷ்டிராவிலேயே அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி,நாட்டிலேயே பிறமாநிலங்களை எல்லாம்  விட மகாராஷ்டிராவில் தான்  அதிகளவிலான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 1995க்கும்  2014க்கும் இடைப்பட்டக் காலத்தில் 63,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும்,பணமதிப்பிழப்பு நடவடிக்கை வங்கியையும் அதன் வாடிக்கையாளர்களையும் ஒருசேர பாதித்துள்ளது. அதனால் ஏற்பட்ட பணநெருக்கடி என்பது இருவருக்குமே அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை புது ருபாய் நோட்டுக்களாக மாற்ற வங்கிகள்  மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேவேளையில், பிற வங்கிகளும் நவம்பர் 29 வரை ரூபாய் நோட்டுகளை மாற்ற காலஅவகாசம் வழங்கியுள்ளது. மேலும், பெருநிறுவனங்கள் செலுத்த வேண்டிய 352 கோடி கடன் தொகையில் ஒரு பைசா கூட செலுத்ததால்  ஒஸ்மானாபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஏற்கனவே கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது. இதுகுறித்து கூறிய விவசாயிகள், " அவர்கள் அதனை எங்களிடம் எடுத்துக்கொள்கிறார்கள் ஆனால், நாங்கள் கடனுக்காக ஏதாவது திருப்பிச் செலுத்தவேண்டுமென முயற்சித்தவர்கள். " என்று கூறினர்.

எந்த இடத்திலும் பணம் இருப்பு இல்லாததால், கடந்த  நவம்பர் 9க்குப் பிறகு  விவசாயிகள், தொழிலாளர்கள்  மற்றும் கடைஉரிமையாளர்கள் பிழைப்பதற்கான யுத்திகளைக் கண்டறிய முயன்றிருக்கிறார்கள். இதுகுறித்து விளக்கிய எஸ்.எம்.கவாலே: “ஒருவேளைத் தொழிலாளர்களிடம் பணமே இல்லையென்றால்,அவர்கள் சாப்பிடவே இயலாது. எனவே, நாங்கள் கடை உரிமையாளர்களுடன் பேசி அவர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்க உறுதியளித்தோம். அவர்கள் கடனாக மளிகைப் பொருட்கள் பெற்றனர்” என்றார்.

காணொளி:நாகூர்,கஹெத்,கஷ்டி மற்றும் பிற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளை காந்திகிரி யுத்தியின் வழியே அவமானப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கில் ஒ.டி.சி.சி வங்கி  அனுப்பியக் கடிதத்தைக் காண்பிக்கின்றனர்;நவம்பர் 29, 2016

அந்தப் பகுதியில் உள்ளக் உள்ளூர் கடை உரிமையாளர்கள் கூட தங்களுக்கு தேவையான பொருட்களை வேறு இடங்களில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து கடனாகப் பெற்றுள்ளனர். எனவே, தொழிலாளர்கள்,விவசாயிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் என எல்லோரும் நிகழவிருந்த பேரழிவில் சிக்குண்டிருக்கிறார்கள்.

இதோடு மட்டுமின்றி, மேலுமொரு பெரும் பிரச்சனையும் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர்,வங்கியானது ‘பயிர்க்கடன்’ மற்றும் ‘பருவக்கடன்’ ஆகியவற்றில் குளறுபடி செய்துள்ளது. மேலும், விவசாயிகள் வாங்கியக் கடன் தொகையைத் திருத்தி எழுதவும் செய்திருக்கிறது. ஒ.டி.சி.சி வங்கி பல வருடங்கள் இதனைத் திரும்ப திரும்பச் செய்துள்ளது. இதன் விளைவாக விவசாயிகள் வாங்கிய கடனின் அளவும் அதிகரித்துள்ளது .இந்த அதிகரித்த கடன் தொகையைக் திரும்ப செலுத்தக்கோரி தான் வங்கி விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதேவேளையில், 20,000  விவசாயிகள் பெற்ற ஒட்டுமொத்த கடன் தொகை 180 கோடி என்பது கடனுக்குப் பின் கணக்கிடப்பட்டத் தொகையேயாகும். உண்மையில் விவசாயிகள் வாங்கியக் கடன் தொகை  80 கோடி மட்டுமேயாகும்.

பயிர்க்கடன் என்பது குறுகிய கால அவகாசத்தின்  அடிப்படையில்  விவசாயிகள் பெறும் கடனாகும். இதனை விவசாயிகளின் உடனடி விவசாயச் செயல்பாடுகள் அல்லது பருவக் கால விவசாய நடவடிக்கைகளோடு பின்னிபிணைந்தவை. மேலும், இந்தக் கடன் தொகையை  விதை,உரம், பூச்சிக் கொல்லி மற்றும்  இதர இடுபொருட்கள் வாங்குவதற்கும் தொழிலாளர்கள் கூலி வழங்குவதற்கும் பயன்படுத்துகின்றனர். விவசாயிகளுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது கடன் தொகையின் வரம்பிற்குள்  இந்தக் கடனுக்கு எதிராக பணத்தை திரும்பப் பெறுகிறார்கள். பயிர் கடன்களுக்கான வட்டி விகிதம் பொதுவாக ஏழு சதவிகிதத்திற்கு மேல் இருக்காது (இதில் நான்கு சதவிகிதம் மாநில அரசே ஏற்க வேண்டும்).மேலும், இந்த கடன்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

பருவக்கடன் என்பது இயந்திரங்கள்,பாசனம் மற்றும் இதுபோன்ற பிற செலவீனங்களுக்காக மூலதன முதலீடுக்காக பெறும் கடனாகும். இந்தக் கடனை 3 முதல் 7 வருடங்களுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும். பருவக்கடனுக்கான(கூட்டு) வட்டி பயிர்க்கடனுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா வங்கியின் தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளரும், அவுரங்கபாத் பகுதியைச் சார்ந்தவருமான  தனஞ்சய் குல்கர்னி, எங்களோடு ஒ.டி.சி.சி வங்கியின் கடிதம் மற்றும் நோட்டீஸ் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறுகையில்,”ஒ.டி.சி.சி வங்கி(மற்றும் பிற வங்கிகள்) என்ன செய்திருக்கிறது என்றால், விவசாயிகளின் பருவக்கடனையும் பயிர்க்கடனையும் ஒன்றிணைத்திருக்கிறது அல்லது குளறுபடி செய்திருக்கிறது. மேலும், மறு கட்டம் திருத்தம்(‘re-phasement’) என்ற பெயரில் இந்தக்கடன்களை ‘புதிய’ பருவக்கடனாகவும் மாற்றியுள்ளது. இதன் காரணமாக ஒ.டி.சி.சி மற்றும் பிறவங்கிகள் வட்டி விகிதத்தை 14 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. எவ்வாறாயினும்,கூடுதலாக 2 முதல் 4 விழுக்காடு வட்டியானது கூட்டுறவு சங்கங்கள் வழியாக விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, கடன் பெற்றவர்கள் 18 விழுக்காடு(கூட்டு) வட்டி செலுத்துகின்றனர”. என்றார்.

In Nagur village, agitated farmers explain that the loan amounts have been inflated
PHOTO • P. Sainath

நாகூர் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கடன் தொகை உயர்த்தப்பட்டது குறித்து விளக்கினர்

கஹெத் கிராமத்தைச் சார்ந்த சிவாஜிராவ்சாஹேப் கடந்த 2004 ஆம் ஆண்டு மின் மோட்டார் மற்றும் குழாய் இணைப்புக்காக 1.78 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றிருந்த நிலையில்,  சில வருடங்களிலேயே 60,000 ரூபாயை திரும்பச் செலுத்தி இருக்கிறார். எனினும், அவரது இந்தக்  கடனுடன் பயிர்க்கடனும் சேர்க்கப்பட்டு,  மறு-கட்டம்(‘re-phased’) என்ற வங்கியின் வாசகத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வட்டியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய அவர்,  “தற்போது நான் சுமார் 13 லட்சம் கடன் செலுத்தவேண்டுமென கூறுகிறார்கள்” என கோபத்தோடு குறிப்பிட்டார். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த விவசாயிகள் திடிரென ஒரே சமயத்தில் பேசத்தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஒ.டி.சி.சி வங்கி  அனுப்பிய நோட்டீஸ்களைக் கொண்டு வந்திருந்தனர்.

நாகூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் பாபாசாஹேப் வித்தல்ராவ் ஜாதவ் கூறுகையில்,”நாங்கள் வங்கிப்பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். உண்மையில் நாங்கள் அதனைத் திரும்பச் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது செலுத்தவியலாத நிலையில் உள்ளோம். ஏனெனில், இந்தாண்டு பொழிந்த நல்ல மழையின் காரணமாக (மோசமான பல பருவமழைக்காலத்திற்கு பிறகு), கஹ்ரிப் பயிர்கள் எனப்படும் பருவக்கால பயிர்கள் ஓரளவு விளைந்துள்ளன. இதேப்போன்று குளிர்கால பயிர்களும் நன்கு விளையும் என்றும் எதிர்பார்க்கிறோம். எனவே, அடுத்த ஆண்டு முதல் நாங்கள் தவணைத் தொகையைச் செலுத்திவிட முடியும். இந்தாண்டு பணம் செலுத்துவது என்பது எங்கள் உயிர்களைப் பறித்துவிடும். ‘மறு-கட்டமைப்பு’ என்பது மோசடியானது,வங்கி தன்னுடைய விதிகளையே மீறியுள்ளது. இது எங்கள் கடன்களை இரட்டிப்பாக்கி, ஏன் நான்கு மடங்காகக் கூட உயர்த்தியுள்ளது. அரசு பெருமுதலளிகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்கிறது. ஆனால்,ஒடுக்கப்படுகிற விவசாயிகளை உடைத்து போடுகிறது” என்று கூறினார்.

இந்தக் கடன்களும் அதன் மறு-கட்டமும் விவசாயிகளின் வாழ்வில் மோசமான காலமாகியுள்ளது. அவர்கள் இதுவரை மகாராஷ்டிராவில் விவசாயிகள் சந்தித்தப் பிரச்சனைகளை வரிசைப்படுத்தினர். ஏறத்தாழ 1998 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பிரச்சனை, 2003-04 ஆண்டுவாக்கில் உச்சத்தை அடைந்து, 2011க்குப் பிறகு பெரும்பிரச்சனையாக மாறியுள்ளது. “நான்கு வருடங்களாக 300 முதல் 400 டன் கரும்புப் பயிரினை என்னால் விற்க முடியவில்லை. சர்க்கரை ஆலைகள் கரும்பினால் நிரம்பி வழிந்தன. அத்தொழிற்சாலைகள் கரும்பை வாங்க மறுத்தன. நான் திவலானேன். தற்போது இந்த பிரச்சனையைச் சந்தித்து வருகிறேன். எனது குடும்ப நிலம்(பாசன வசதியற்ற) 15 ஏக்கரையும் விற்றுவிட்டேன். எனினும், தற்போது வரை இந்தக் கடன் சுமையை என்னால் சமாளிக்க முடியவில்லை” என்றார் சிவாஜிராவ்.

இந்தக் கிராமங்களில் பெரும்பாலான ராபி பயிர்கள்(குளிர்கால பயிர்கள்) நவம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு முன்பாகவே விதைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பிறகான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பருவகால பயிர்களின் விலையும்  வணிகர்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த விவசாயிகள்,  “பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டால் மட்டுமே பயிர்களுக்கு சரியானத் தொகையை வழங்குவோம்” என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில், வங்கியினால் தற்போது நிலைமை  முன்னைவிட வருத்தகரமானதாக மாறியுள்ளது குறித்தும், ஓ.டி.சி.சி கடிதத்தில் கூறியுள்ளவற்றை செயல்படுத்துவதால்  ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

A farmer in Nagur holds up an extract of his loan account from the credit cooperative society; further interest of 2-4 per cent gets added at the level of the societies
PHOTO • P. Sainath

நாகூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கடன் கூட்டுறவு சங்கத்திலிருந்து அவரது கடன் கணக்கின்  பகுதியினைக் காட்டுகிறார்; கூடுதலாக 2முதல் 4 விழுக்காடு வட்டியானது கூட்டுறவு சங்கங்கள் வழியாக விதிக்கப்பட்டுள்ளது

ஓ.டி.சி.சி வங்கியின் நிர்வாக இயக்குநர்  கோன்சே பாட்டீலுக்கும் வேறொரு மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியிலிருந்து திரும்ப செலுத்தாத முன்பணத்திற்கான   நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது தான் அவரும் அவருடைய சில மூத்த அதிகாரிகளும் இந்த விஷயங்கள் மிகவும் தவறாக சென்றுவிடக்கூடும் என்பதைபுரிந்துகொண்டார்கள். விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்தால் என்ன செய்வது? வங்கி மற்றும் அதன் கடிதத்தின் மீது குற்றம்சாட்டு எழுந்தால் என்ன செய்வது? ஆனால், "இந்தக்  கடன் மீட்பு வழியைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை." என்று கோன்சே பாட்டீல் கூறினார்.

-------------------------------

ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள ஏறக்குறைய 20,000 விவசாயிகளுக்கு ஒ.டி.சி.சி அனுப்பியக் கடிதத்தின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

வணக்கம்.

நீங்கள் நிச்சயமாக ஒஸ்மானாபாத் மாவட்ட வங்கியின் பொருளாதார நிலைக் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும். வங்கியானது பொருளாதார பிரச்சனைகளைச் சந்திக்கத் தொடங்கியதில் இருந்து, வங்கியின் முதலீட்டாளர்கள் தங்கள் முழுகவனத்தையும் வங்கிமீது செலுத்தியுள்ளனர். வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் அதிகரித்துள்ளதால் வங்கியின் பணப்புழக்கம் குறையக்கூடும் என்கிற புயல் போன்ற சூழலில் வங்கி சிக்கியுள்ளது.எனவே, வங்கி அதன் நிலையை மேம்படுத்த  குறைந்தப்பட்ச வாய்ப்பாக, தற்சமயம் நிலுவையில் உள்ள கடன்களைத் திரும்ப பெறுவது மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது. உண்மையில், நீங்கள் திரும்பச் செலுத்தாத கடனின் காரணமாக, வங்கியானது அதன் முதலீட்டாளர்கள் எப்போது எவ்வளவு தொகையைத் திரும்ப எடுக்கிறார்களோ  அப்போது அவர்களுக்கு வழங்கவியலாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக,வங்கியின் செயல்பாடுகள் குறித்து முதலீட்டாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

இதேபோன்று,பல முதலீட்டாளர்கள்,எப்போது தங்கள் கணக்கில் உள்ள தங்களது சொந்தப் பணத்தை எடுக்கமுடியவில்லையோ அப்போது அவர்கள் அனுப்பிய செய்தியில் ஒருவேளை தங்கள் பணத்தை எடுக்கமுடியவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்ளும் கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீங்கள் கவனம் கொள்ள வேண்டும்.  ஒருவேளை இதுபோன்ற காரணங்களினால் முதலீட்டாளர்கள் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நீங்களே காரணம் என்பதை உணர வேண்டும்.

உங்களுடைய  நிலுவைக் கடனால் ஏற்பட்டுள்ள பணநெருக்கடி காரணமாக வங்கி அதன் பணிகளை சிறப்பாக செய்யவியலாத நிலையில் உள்ளது. எனவே, வங்கியின் நிர்வாகக்குழு மற்றும் ஊழியர்கள் சங்கம் காந்திய வழியில் போராட்டம் நடத்தி கடனை மீட்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது: 1)வீட்டின் வாசலின் எதிரில் போராட்டம் நடத்துவதற்காக முகாம் அமைக்க உள்ளது, 2)பேண்ட் வாத்தியக் கருவிகளை உபயோக்கிக்க உள்ளது,3)மணியை ஒலிக்கச் செய்யவுள்ளது.

இந்த நடவடிக்கையின் காரணமாக சமுகத்தில் உங்களுக்கு நிலவும் கெளரவம் மற்றும் அந்தஸ்த்திற்கு களங்கம் ஏற்படக்கூடும். எனவே,இதுபோன்ற சூழலைத் தவிர்க்கும் வகையில், 30 நாட்களுக்குள் நீங்கள் பெற்றக் கடனை வட்டியுடன் சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்தி ரசீது பெற வேண்டும். இல்லையென்றால்,கடன் மீட்புக் குழுவானது மேற்கூறியவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்.

நாங்கள் வேண்டுமென்றே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம் என்றால் இந்த சூழலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
மேலும், எவ்வித விரும்பத்தகாத நிகழ்வுகளையும் தவிர்க்கும் வகையில் நீங்கள் கடனை உடனே திரும்ப செலுத்திவிடுவீர்கள் என்றும் நம்புகிறோம்.
உங்களிடமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
நிலுவையிலுள்ள கடன் விவரம்:
கடன் வகை, அசல்: 136300 வட்டி: 348930. மொத்தம்: 485230
[ஒவ்வொரு விவசாயிக்குமான கடன் விவரங்களை அறிய அசல் கடிதத்தில் பின்பற்றவும்]

தங்கள் உண்மையிலுள்ள,

கையெழுத்து-

விஜய் எஸ். கோன்சே

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan