“பாருங்கள்! என் மோட்டார் மண்ணுக்குள் புதைந்திருக்கிறது,” என்கிறார் வெள்ளத்தால் மண்ணுக்குள் புதைந்திருக்கும் பம்ப்பை தோண்ட முயற்சிக்கும் தேவேந்திர ராவத். தேவேந்திரா, மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள சுண்ட் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆவார். “வெள்ளம் என் நிலத்தை அரித்துவிட்டது. மூன்று மோட்டார்களின் பகுதிகள் தரையில் புதைந்து போயிருக்கின்றன. ஒரு கிணறு கூட உடைந்துவிட்டது. நான் என்ன செய்வது?” எனக் கேட்கிறார் 48 வயது நிரம்பிய அவர்.

நர்வார் தாலுகாவில் இருக்கும் சுண்ட் கிராமம் சிந்து நதியின் இரு கிளை ஆறுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. ஆகஸ்ட் 2021-ல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 635 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் அந்த கிராமத்தில் பரவலாக பெரும் சேதம் ஏற்பட்டது. அத்தகைய ஒரு வெள்ளம் அதற்கு முன் எதுவும் வந்ததாக நினைவில்லை என்கிறார் தேவேந்திரா. “வெள்ள நீர் கிட்டத்தட்ட 30 பிகா (தோராயமாக 18 ஏக்கர்) நிலத்தில் போட்டிருந்த நெற்பயிரை அழித்துவிட்டது. என் குடும்பம் வெள்ள அரிப்பால் நிரந்தரமாக ஆறு பிகா (கிட்டத்தட்ட 3.7 ஏக்கர்) நிலத்தை இழந்துவிட்டது,” என்கிறார் அவர்.

காலி பகதியிலுள்ள கிராமம் வெள்ளநீரால் சூழப்பட்டு ஒரு தீவைப் போல் காட்சியளிக்கிறது. கனமழை பெய்தால், மறுபக்கத்துக்கு செல்லும் கிராமவாசிகள் ஆற்றுக்குள் நடந்தோ நீந்தியோ செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

“வெள்ளம் வந்தபோது எங்களின் கிராமம் மூன்று நாட்கள் மூழ்கியிருந்தது,” என்கிறார் தேவேந்திரா. அரசாங்க படகுகள் வந்து, ஊரிலேயே இருக்க விரும்பிய 10லிருந்து 12 பேரை தவிர்த்து மற்ற அனைவரையும் காப்பாற்றியது. மீட்கப்பட்ட கிராமவாசிகள் அருகாமை சந்தையிலிருந்த முகாமிலும் பிற ஊர்களில் இருந்த உறவினர் வீடுகளிலும் தங்கினர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் மின்சாரம் வர ஒரு மாதம் ஆனது என நினைவுகூருகிறார் தேவேந்திரா.

PHOTO • Rahul

சுண்ட் கிராமவாசியான தேவேந்திரா ராவத், 2021ம் ஆண்டு வெள்ளத்தில் புதைந்து போன பம்ப்பை தோண்டியெடுக்க முயலுகிறார்

2021ம் ஆண்டில் மே மாதம் 14 முதல் ஜூலை 21 வரை மேற்கு மத்தியப் பிரதேசத்தில் 20லிருந்து 59 சதவிகிதத்துக்கு மழைப்பொழிவு குறைவாக இருந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

ஆனால் ஒரு வாரத்தில் ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 4 வரை மழைப்பொழிவு சராசரியை விட 60 சதவிகிதம் அதிகமாக பொழிந்தது. சிந்து நதியின் இரு அணைகளிலும் - மரிகெராவில் இருக்கும் அடல் சாகர் அணை மற்றும் நர்வாரிலிருக்கும் மோகினி அணை - நீர் நிரம்பியிருந்தது. அதிகாரிகள் அணைகளை திறந்துவிட்டனர். சுண்ட் கிராமம் நீருக்குள் சென்றது. “அணை மதகுகளை திறப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அணை உடைவதை தடுக்க வேண்டுமானால், நீரை திறந்துவிட வேண்டுமென்ற சூழல். ஆகஸ்ட் 2-3, 2021-ல் கன மழை பெய்ததால் ஏற்பட்டது,” என்கிறார் அடல் சாகர் அணையின் அதிகாரி ஜியெல் பைராகி.

மத்தியப் பிரதேசத்தில் அதீத மழை இருக்கும்போதெல்லாம் சிந்து நதிதான் அதிக பாதிப்புக்குள்ளாகும். “சிந்து நதி கங்கை ஆற்றுப் படுகையில் இருக்கிறது. இமயமலையில் தொடங்கும் ஆறு அல்ல அது. தெற்கிலிருந்து வடக்கு பக்கம் பாயும் அந்த ஆறு மழை நீரை சார்ந்துதான் இருக்கிறது,” என்கிறார் போபாலின் பர்கதுல்லா பல்கலைக்கழக உயிர் அறிவியல் படிப்பில் பேராசிரியர் பிபின் வியாஸ்.

வெள்ளம் பயிரிடும் காலத்தையும் பாதித்தது. “எங்களின் நெல் மற்றும் எள் பயிர் அழிந்து போனது. இந்த வருடம் கோதுமை கூட சரியாக விளைவிக்க முடியவில்லை,” என்கிறார் தேவேந்திரா. சிந்து நதி படுகையில் பெரியளவில் கடுகு பயிரிடப்பட்டிருக்கிறது. வெள்ளத்துக்கு பிறகு பல விவசாயிகள் கடுகு பயிரிட விரும்பினர்.

PHOTO • Rahul
PHOTO • Aishani Goswami

இடது: தேவேந்திரா மற்றும் ராம்நிவாஸ் (மையம்) ஆகியோர் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட அவர்களின் விவசாய நிலத்துக்கருகே. வலது: ராம் நிவாஸ் (வெள்ளை சட்டை) சொல்கையில், ‘காலநிலையில்  ஏற்பட்டுள்ள மாற்றத்தால் கனமழையும் வெள்ளங்களும் எங்களின் பயிர்களை அழிக்கின்றன’

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகளை குறித்து பேசுகையில் தேவேந்திராவின் சகோதரர் மகன் ராம்நிவாஸ், “காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் கனமழையும் வெள்ளங்களும் எங்களின் பயிர்களை அழிக்கின்றன. பிறகு கடும் வெயிலால் செடிகளுக்கு நேரும் ஆபத்தும் தொடர்ந்து நீடிக்கிறது,” என்கிறார்.

ஊர்த் தலைவரும் அவரின் உதவியாளரும் வெள்ளத்துக்கு பிறகு கிராமவாசிகளை பார்க்க வந்தனர். நிவாரணத்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனர்.

“அழிந்த என் நெற்பயிருக்கு ஒரு பிகா (கிட்டத்தட்ட 0.619 ஏக்கர்) நிலத்துக்கு 2000 ரூபாய் என்கிற விகிதத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது,” என்கிறார் தேவேந்திரா. “நெற்பயிர் வெள்ளத்தால் அழிந்திருக்காவிட்டால், எங்களுக்கு குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு லட்ச ரூபாய் லாபம் கிடைத்திருக்கும்,” என்கிறார் ராம்நிவாஸ்.

தேவேந்திராவின் குடும்பம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்திருக்கிறது. நெல்லுக்கான சந்தைவிலை ஊரடங்கால் சரிந்தது. தொற்றுக்காலத்திலிருந்து குடும்பச் சூழல் இன்னும் மோசமானது. தேவேந்திராவின் மகளும் உடன் பிறந்தார் மகளும் 2021ம் ஆண்டில் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டனர். “கொரோனாவால் எல்லாவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது. ஆனால் திருமணங்கள் ஏற்கனவே நிச்சயமாகி இருந்தன. எனவே எங்களுக்கு வேறு வழியில்லை. திருமணம் நடத்தியாக வேண்டும்,” என விளக்குகிறார் தேவேந்திரா.

பிறகு எந்தவித முன் அறிவிப்புமின்றி, ஆகஸ்ட் 2021-ல் வெள்ளங்கள் வந்தன. குடும்பம் அதிக நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

PHOTO • Aishani Goswami
PHOTO • Rahul

இடது: சிந்து நதி படுகையிலிருந்து பல மரங்கள் 2021ம் ஆண்டு வெள்ளத்தில் விழுந்தன. வலது: நர்வாரில் இருக்கும் மோகினி அணை

*****

இந்தெர்கர் தாலுகாவின் திலைதா கிராமத்திலோடும் சிந்து ஆற்றங்கரையில் நின்று சகாப் பிங் ராவத் தன் நிலத்தை சுட்டிக் காட்டுகிறார். “காலம் தப்பிய மழையில் 12.5 பிகா (கிட்டத்தட்ட 7.7 ஏக்கர்) நில கரும்பு விளைச்சல அழிந்தது.” 2021ம் ஆண்டின் குளிர்காலத்தில் தாட்டியா மாவட்டத்தில் கடுமையாக மழை பொழிந்தது என விவசாயிகள் கூறுகின்றனர். மழையின் விளைவாக பயிர் மற்றும் வருமான இழப்பை அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

மேட்டு நிலத்தில் இருந்ததால் சுண்ட் கிராமத்தின் வீடுகள் தப்பித்தன. ஆனால் நீர் மட்டத்தை அளந்து கொண்டே இருந்ததையும் நிலைமை கைமிஞ்சினால் மலைக்கு தப்பிச் செல்ல ஐந்து கிலோ தானியங்களை ஒரு பையிலிட்டு தயாராக இருந்ததையும்  காலிபகதி கிராமப் பஞ்சாயத்தின் சுமித்ரா சென் நினைவுகூருகிறார்.

சுமித்ரா சென்னுக்கு வயது 45. தினக்கூலி தொழிலாளர். அருகாமைப் பள்ளியில் சமையல் வேலை பார்க்கிறார். அவரது தந்தையான 50 வயது தன்பால் சென் அகமதாபாத்தின் கைப்பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். அவர்களின் இளைய மகன் 15 வயது அதிந்திரா சென்னும் அங்குதான் பணிபுரிகிறார். நை சமூகத்தை சேர்ந்த சுமித்ரா வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போருக்கான குடும்ப அட்டையை அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறார்.

கொலராஸ் ஒன்றியத்தின் மதன்பூர் கிராமத்தை சேர்ந்த வித்யாராம் பாகெல், அவருடைய நிலத்தை (கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர்) வெள்ளத்துக்கு இழந்துவிட்டதாக சொல்கிறார். “ஒரு பயிர் கூட மிச்சம் கிடைக்கவில்லை. இப்போது மொத்த நிலமும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது,” என்கிறார் வித்யாராம்.

PHOTO • Rahul
PHOTO • Rahul
PHOTO • Rahul

இடது: காலம் தப்பி பெய்த மழை 7.7 ஏக்கர் கரும்பு விளைச்சலை சாகிப் சிங் நிலத்தில் அழித்திருக்கிறது. மையம்: வெள்ளம் அதிகரித்தால் வீட்டிலிருந்து தப்பிச் செல்லவென ஐந்து கிலோ தானிய மூட்டையுடன் காத்திருந்ததாக சுமித்ரா சென் சொல்கிறார். வலது: வித்யாராம் பாகெலின் நிலம் மண்ணில் புதைந்திருக்கிறது

*****

சுண்ட் கிராமத்தில் வசிப்பவர்கள் சொல்கையில், ஆற்றின் மீது பாலம் கட்ட அதிக செலவாகுமென்பதால் அரசாங்கம் பாலம் கட்ட மறுப்பதாக கூறுகின்றனர். கிட்டத்தட்ட 700 பிகா (கிட்டத்தட்ட 433 ஏக்கர்) நிலம் கிராமத்தில் இருக்கிறது. அவற்றை கிராமவாசிகள்தான் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். ராம்நிவாஸ் சொல்கையில், “வேறெங்கேனும் நாங்கள் வாழ இடம்பெயர்ந்தாலும் இந்த நிலத்துக்கு நாங்கள் வந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்,” என்கிறார்.

காலநிலை மாற்றம் வந்தாலும் காலம் தப்பிய கனமழை பெய்தாலும் அணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வெள்ளம் அதிகரித்தாலும் தேவேந்திராவும் அவரது குடும்பத்தினரும் ஊரை விட்டு போக மாட்டோம் என்கின்றனர். “கிராமவாசிகளாகிய நாங்கள் எப்போதும் எங்களின் கிராமத்தை விட்டு செல்ல மாட்டோம். இதே அளவு நிலத்தை வேறெங்கேனும் ஒதுக்க அரசு ஒப்புக் கொண்டால் மட்டுமே, நாங்கள் இடம்பெயர்வோம்,” என்கிறார் அவர்.

தமிழில் : ராஜசங்கீதன்

Rahul

Rahul Singh is an independent reporter based in Jharkhand. He reports on environmental issues from the eastern states of Jharkhand, Bihar and West Bengal.

Other stories by Rahul
Aishani Goswami

Aishani Goswami is a water practitioner and architect based in Ahmedabad. She has a Masters in Water Resource Engineering and Management and studies rivers, dams, floods and water.

Other stories by Aishani Goswami
Editor : Devesh

Devesh is a poet, journalist, filmmaker and translator. He is the Translations Editor, Hindi, at the People’s Archive of Rural India.

Other stories by Devesh
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan