2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.

மேற்கு காமெங் மாவட்டத்திலுள்ள லகாம் கிராமத்தைச் சேர்ந்த நாடோடி மேய்ப்பரான பெம்பா சூரிங், 35, "ட்ஸோமோ இப்போது எங்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது." என்கிறார்.

ட்ஸோமோவா? அது என்ன? 9000 அடிக்கும் அதற்கு மேலும் உள்ள அருணாச்சல பிரதேச மலைகளில் அவற்றை பிரபலமாக்குவது எது?

ட்ஸோமோ என்பது யாக் மற்றும் கோட் ஆகியவற்றின் கலப்பினம் ஆகும், இது ஒருவகை மேட்டு நில கால்நடையாகும். ட்ஸோ என்பது ஆண் கலப்பின கால்நடை, இது மலட்டுத்தன்மை உடையது, எனவே மேய்ப்பர்கள் பெண் இனமான ட்ஸோமோவையே விரும்புகின்றனர். இது ஒரு புதிய இனம் இல்லை என்றாலும் அரை நாடோடி மேய்ப்பர் இனமான ப்ரோக்பா மக்கள், கிழக்கு இமயமலையில் மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்றவாறு இந்த கால்நடைகளை அதிகமாக தங்கள் மந்தைகளில் சேர்த்துக் கொள்கின்றனர்.

45 விலங்குகளை உடைய பெம்பாவின் மந்தை, யாக் மற்றும் ட்ஸோமோ இரண்டையும் உள்ளடக்கியது. இந்த யாக் கால்நடை கலப்பினங்கள், "அதிக வெப்பத்தை எதிர்க்கும் மற்றும் குறைந்த உயரங்களுக்கும், உயரும் வெப்பநிலைக்கும் ஏற்றதாக இருக்கும்" என்கிறார்.

இந்த உயரமான மேய்ச்சல் நிலங்களில் வெப்பம் அல்லது வெப்பமயமாதல் மிகவும் உண்மையானதாகவும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டில் வெப்பநிலையை பொறுத்தவரையில் 32℃  நாட்கள் என்பதே இல்லை. ஆனால், மைனஸ் 35℃ யை எளிதில் தாங்கக்கூடிய யாக், இந்த மலைகளில் சமீபத்திய ஆண்டுகளில் இருப்பது போல - வெப்பநிலை 12℃ அல்லது 13℃ க்கு அப்பால் உயர்ந்தால் மிகவும் சிரமப்படுகிறது. உண்மையில் இத்தகைய மாற்றங்கள் நிகழும்போது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்புமே சிரமப்படுகிறது என்கிறார்.

பெரிய மோன்பா பழங்குடியினருக்குள் வரும்  நாடோடி மேய்ப்பர் இனமான ப்ரோக்பா இனம் (2011 அருணாச்சலப்பிரதேச கணக்கெடுப்பின்படி சுமார் 60,000 பேரைக் கொண்டுள்ளது) பல நூற்றாண்டுகளாக மலையிலுள்ள மேய்ச்சல் நிலங்களில் யாக்கை வளர்த்து வருகின்றனர். கடும் குளிர்காலத்தில் அவை கீழ் பகுதிகளில் வாழ்கின்றன, கோடையில் அவை அதிக உயரத்திற்கு இடம்பெயர்கின்றன. அவை 9000 முதல் 15000 அடி வரை நகரும்.

ஆனால், லடாக்கின் சாங்தாங் பகுதியிலுள்ள சாங்பா மக்களைப் போலவே , ப்ரோக்பா மக்களும் எப்போதும் ஒழுங்கற்ற பருவ நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாகவே அந்த சமூக மக்களின் வாழ்வாதாரங்கள் யாக், கால்நடைகள், ஆடு மற்றும் செம்மறி ஆடுகளை வளர்ப்பது மற்றும் அவற்றை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கிறது. இவற்றில் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீக மட்டங்களில் கூட  யாக்கையே இம்மக்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இந்தப் பிணைப்பு இப்போது மிகக் கடுமையான குறை மதிப்பிற்கு உட்பட்டுள்ளது.

"பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெப்பம் காரணமாக யாக் மிகவும் சோர்ந்துவிடுகிறது" என்று சந்தர் (அங்கு சந்தேர் என்று உச்சரிக்கப்படுகிறது) கிராமத்திலுள்ள ஒரு மேய்ப்பரான லேகி சுசூக், என்னிடம் கூறினார். மே மாதம் மேற்கு காமெங்கின் திராங் வட்டத்திற்கு நான் சென்றபோது அவரது குடும்பத்தினருடன் நான் தங்கினேன். "கடந்த பல ஆண்டுகளாக, கோடைகாலம் நீடித்துக் கொண்டே வருவதால், இங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. யாக்கும் பலவீனமடைந்து வருகிறது" என்று நாற்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் லேகி கூறுகிறார்.

PHOTO • Ritayan Mukherjee

ட்ஸோமோ என்பது யாக் மற்றும் கோட் ஆகியவற்றின் கலப்பினம், இது ஒருவகை மேட்டு நில கால்நடையாகும். நாடோடி மேய்ப்பர் இனமான ப்ரோக்பா மக்கள், கிழக்கு இமயமலையில் மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்றவாறு இந்த கால்நடைகளை அதிகமாக தங்கள் மந்தைகளில் சேர்த்துக் கொள்கின்றனர்.

சீனா, பூடான், மியான்மர் மற்றும் திபெத் தன்னாட்சி பிராந்தியம் ஆகியவற்றின் எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் மலைகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாக முழு வானிலை முறையும் கணிக்க முடியாததாகிவிட்டது என்று ப்ரோக்பா மக்கள் கூறுகின்றனர்.

"எல்லாம் தாமதமாகிவிட்டது" என்று பெமா வாங்கே கூறுகிறார். கோடை துவங்குவது தாமதமாகிவிட்டது. பனிப்பொழிவு துவங்குவது தாமதமாகிவிட்டது. பருவகால இடப்பெயர்வும் தாமதமாகிவிட்டது. ப்ரோக்பா மக்கள் மேய்ச்சல் நிலங்களுக்கு செல்லும் போது அவை இன்னும் பனியில் மூடி இருப்பதை காண்கின்றனர். அதாவது பனி உருகுவதும் கூட தாமதமாகிவிட்டது என்பதைத்தான் இது உணர்த்துகிறது, என்கிறார் 30 களின் பிற்பகுதியில் இருக்கும் பெமா. இவர் ஒரு ப்ரோக்பா அல்ல, ஆனால், மோன்பா பழங்குடி இனத்தைச் சேர்ந்த மற்றும் உலக வனவிலங்கு நிதியத்தில் பணிபுரியும் தெம்பாங் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை பாதுகாவலர் ஆவார்.

இந்த முறை, நான் அவருடன் தொலைபேசியிலேயே பேசினேன், ஏனென்றால் நான் வழக்கமாக பயணிக்கும் பகுதியில் பெரும்பகுதி பலத்த மழைக்கு பிறகு அணுக முடியாததாகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் நான் அங்கு சென்றபோது சந்தர் கிராமத்தைச் சேர்ந்த நகுலி சோபா என்னும் ப்ரோக்பா இனத்தைச் சேர்ந்த யாக் மேய்ப்பருடன் ஒரு சிகரத்தின் மீது நின்று மேற்கு காமெங் மாவட்டத்தின் வளமான காடுகளை பார்த்தேன். அவரது சமூகத்தின் பெரும்பகுதி மக்கள் இங்கேயும் தவாங் மாவட்டத்திலுமே இருக்கின்றனர் என்றார்.

"இது எங்கள் கோடைகால மேய்ச்சல் நிலமான மகோவிற்கு செல்லும் நெடும்பயணம்” என்றார் 40 களின் பிற்பகுதியில் இருக்கும் நகுலி. “நாங்கள் அங்கு செல்வதற்கு 3-4 இரவுகள் காடுகளின் வழியாக நடக்க வேண்டி இருந்தது. முன்னதாக (10-15 ஆண்டுகளுக்கு முன்பு) மே அல்லது ஜூன் மாதத்திற்குள் (மேல்நோக்கி இடம்பெயர்வதற்காக)  நாங்கள் புறப்படுவோம். ஆனால், இப்போது நாங்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து, பின்னர் 2-3 மாதங்களுக்குள் திரும்ப வேண்டி இருக்கிறது.”

இந்தப் பகுதிகளில் வளரும் சிறந்த மூங்கிலை சேகரிக்க தனது நீண்ட பயணங்களில் ஒன்றான பெரும் மூடுபனி கொண்ட காடுகளுக்கு சென்ற நகுலி, என்னையும் உடன் அழைத்துச் சென்றார். மேலும் பல சிக்கல்களை எனக்கு சுட்டிக்காட்டினார். "நீடித்த கோடைகாலத்தின் காரணமாக சில உள்ளூர் மருத்துவர்கள் யாக்கிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மூலிகை செடிகள் அங்கு வளர்வதில்லை. அவற்றின் நோய் தாக்குதலை சமாளிக்க  நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்.

அருணாச்சல் பொதுவாகவே மழை மிகுதியாகப் பெறும் மாநிலம். இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 3000 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால், கடந்த தசாப்தத்தில் பல ஆண்டுகளாக மழை பற்றாக்குறையை அது சந்தித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை தகவல்களின்படி பற்றாக்குறை வரம்பில் அந்த ஆண்டுகளில் குறைந்தது நான்கு ஆண்டுகளில் 25 முதல் 30 சதவீதம் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெய்த மழையால் சில சாலைகள் மூழ்கிவிட்டது. சில சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

இந்த ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் மலைகளில் நிலையானது என்னவென்றால் வெப்பநிலை அதிகரித்து வருவதுதான்.

PHOTO • Ritayan Mukherjee

மேற்கு காமெங் மாவட்டத்தின் உயரமான புல்வெளிகளில் தனது கால்நடைகளை மேய்ச்சல் செய்யும் போது தேனீர் இடைவெளியை எடுத்துக்கொண்ட நகுலி சோபா, "நீடித்த கோடைகாலத்தின் காரணமாக சில உள்ளூர் மருத்துவர்கள் யாக்கிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மூலிகை செடிகள் அங்கு வளர்வதில்லை, அவற்றின் நோய் தாக்குதலுக்கு இனி நாங்கள் என்ன செய்வோம்?" என்றார்.

2014 ஆம் ஆண்டில் விஸ்கான்சின்- மேடிசன் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் கிழக்கு திபெத்திய பீடபூமியின் வெப்பநிலையில் (அருணாச்சல் அமைந்துள்ள பெரிய புவியியல் மண்டலம்) ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்துள்ளது. தினசரி குறைந்த வெப்பநிலை கடந்த 24 ஆண்டுகளில்(1984-2008க்கு இடையில்) பெரிதும் அதிகரித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் தினசரி உயர் வெப்பநிலை 5℃ என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.

"ஒழுங்கற்ற வானிலை பிரச்சனைகளை நாங்கள் சமாளிக்க முயற்சிக்கிறோம்" என்று நாங்கள் சந்தித்த தனது 30 களின் முற்பகுதியில் இருக்கும் மற்றொரு மேய்ப்பரான செரிங் டோண்டப் கூறினார். "நாங்கள் எங்கள் இடம்பெயர்வு நேரத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை நீட்டித்துள்ளோம். நாங்கள் மேய்ச்சலை மிகவும் விஞ்ஞானரீதியாக செய்கின்றோம் (சீரற்ற மேய்ச்சலுக்கு பதிலாக முறையான மேய்ச்சல்)."

அவரைப் போலவே ப்ரோக்பாவின் பெரும்பான்மையான மக்கள் பருவநிலை மாற்றத்தை பற்றி அறிந்திருந்தார்கள். இது ஏன் நிகழ்கிறது என்பதை பற்றி அவர்கள் அதிகம் பேசவில்லை. ஆனால் அது செய்துவரும் சேதத்தை பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். மேலும் இங்கே ஊக்கமளிக்க கூடிய விஷயம் ஒன்று உண்டு: அவர்கள் பல்வேறு தழுவல் உத்திகளை கண்டுபிடித்துள்ளனர் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2014 இல் இந்த சமூகத்தை ஆய்வு செய்த ஒரு குழு இதை Indian Journal of Traditional Knowledge (பாரம்பரிய அறிவுக்கான இந்திய இதழ்) என்கிற ஆய்விதழில் சுட்டிக்காட்டியது. மேற்கு காமெங்கில் உள்ள 78.3% ப்ரோக்பா மக்களும், தவாங்கில் உள்ள 85% மக்களும் அதாவது அருணாச்சலில் உள்ள இந்த நாடோடி சமூகத்தைச் சேர்ந்த 81.6% மக்கள்- "மாறிவரும் பருவநிலை சூழ்நிலையைப் பற்றி அறிந்திருந்தனர்' என்று அவர்களது ஆராய்ச்சி முடிவு கூறியது. மேலும் அதில் 75 சதவீத மக்கள் "பருவநிலை மாற்றத்தை சமாளிக்க குறைந்தபட்சம் ஒரு தழுவல் உத்தியையாவது ஏற்றுக் கொண்டதாக கூறினர்."

ஆராய்ச்சியாளர்கள் பிற உத்திகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றனர்- மந்தையை பல்வகைப்படுத்துதல், அதிக உயரத்திற்கு இடம்பெயர்தல், இடப்பெயர்வு நாட்காட்டியில் மாற்றங்கள் செய்தல் ஆகியவையாகும். "பருவநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கங்களை" எதிர்கொள்ள "10 சமாளிக்கும் வழிமுறைகளை" பற்றி அவர்களின் கட்டுரை பேசுகிறது. மற்ற உத்திகளில் மேய்ச்சல் பயன்பாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், சீரழிந்த உயரமான மேய்ச்சல் நிலங்களை புத்துயிர் படுத்துதல், திருத்தியமைக்கப்பட்ட வளர்ப்பு நடைமுறைகள் மற்றும் கால்நடை - யாக் கலப்பினமாக்கள் ஆகியவையும் அடங்கும். மேலும் புல் பற்றாக்குறையாக உள்ள இடங்களில் பிற பொருட்களை கூடுதல் தீவனமாக வழங்குதல், புதிய கால்நடை சுகாதார முறைகளை பின்பற்றுதல் மற்றும் கூடுதல் வருமான ஆதாரங்களாக சாலை கட்டுமான தொழிலாளர்களாகவும், சிறுதொழில் புரிபவர்களாகவும் மற்றும் பழ சேகரிப்பிலும் இம்மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவை ஏதேனும் அல்லது அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுமா என்பதை அறிய எந்த வழியும் இல்லை. மேலும் பெரிய செயல்முறைகளால் அவற்றைத் திணறடிக்கக்கூடாது. ஆனால், அவர்கள் ஏதாவது செய்துகொண்டே இருக்கின்றார்- ஏனெனில் அவர்கள் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். யாக் பொருளாதாரத்தின் வீழ்ச்சியால் சராசரி குடும்பம் ஒன்றுக்கு அதன் ஆண்டு வருமானத்தில் இருந்து 20-30% யை இழந்துவிட்டதாக மேய்ப்பர்கள் என்னிடம் கூறினர். பால் கறவையின் வீழ்ச்சி என்பது, வீட்டில் நெய் மற்றும் சுர்பி (புளித்த யாக் பாலில் இருந்து செய்யப்படும் சீஸ்) ஆகியவற்றின் அளவு குறைகின்றது என்பதை காட்டுகிறது. ட்ஸோமோ உறுதியானதாக இருக்கலாம், ஆனால் பால் மற்றும் சீஸ் தரத்தில் அவ்வளவு ஏன் மதரீதியான முக்கியத்துவத்தில் அதனால் யாக்கிற்கு இணையானதாக இருக்க முடியவில்லை.

"யாக் மந்தைகள் சுருங்கி வருவதால் அல்லது அழிவை சந்தித்து வருவதால் ப்ரோக்பா  மக்களின் வருமானமும் குறைந்துகொண்டே வருகிறது" என்று இந்த மே மாத பயணத்தின் போது பெமா வாங்கே என்னிடம் கூறினார். "இப்போது (வணிக ரீதியாக பதப்படுத்தப்பட்ட) பாக்கெட்டுகளில் இடப்பட்ட சீஸ் உள்ளூர் சந்தைகளில் எளிதாக கிடைக்கிறது. எனவே, சுர்பி விற்பனை வீழ்ச்சி அடைகிறது. இது ப்ரோக்பா மக்களுக்கு இரு வழிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது."

நான் வீட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பு, எதேர்ச்சையாக 11 வயது நோர்பு துப்டெனை சந்தித்தேன். அவர் தனது மந்தையுடன் ப்ரோக்பா மக்களின் இடப்பெயர்வு பாதையில் அமைந்துள்ள தும்ரி என்ற தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமத்தில் இருந்தார். "எனது தாத்தா வாழ்ந்த காலமே மிகச் சிறப்பானது" என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். மேலும், அவருடைய மூதாதையர்களின் பேச்சை பிரதிபலிக்கும் வகையில்: "அதிக மேய்ச்சல் மற்றும் குறைவான மக்கள்" என்று கூறினார். எங்களுக்கு எல்லை கட்டுப்பாடுகள் கிடையாது, பருவநிலை மாற்றத்தால் சிக்கல்கள் இல்லை என்று எங்களது பெரியவர்கள் கூறுவர். ஆனால், மகிழ்ச்சியான நாட்கள் இப்போது வெறும் ஏக்கமாகிவிட்டது" என்றார்.

PHOTO • Ritayan Mukherjee

மோன்பா பழங்குடியினத்தைச் சேர்ந்த மேய்ப்பர்கள் சமூகமான, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள  மேற்கு காமெங் மற்றும் தவாங்  மாவட்டங்களில்  உள்ள ப்ரோக்பா இனமக்கள் 9000 முதல் 15,000 அடிவரை உள்ள உயரமான மலைகளில் வாழ்கின்றனர். அதிகரித்துவரும் கணிக்க முடியாத வானிலை முறைகளால் அவர்களின் இடப்பெயர்வு முறைகளும் மாறுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

PHOTO • Ritayan Mukherjee

மூத்த மேய்ப்பர்கள் இடம்பெயர தயாராகும் போது இளையவர்களை கொண்ட ஒரு குழு அவர்களுக்கான உணவுகளை கட்டுகிறது."எல்லாம் தாமதமாகிவிட்டது" என்று பெமா வாங்கே கூறுகிறார்.  “கோடை துவங்குவது தாமதமாகிவிட்டது. பனிப்பொழிவு துவங்குவது தாமதமாகிவிட்டது. பருவகால இடப்பெயர்வும் தாமதமாகிவிட்டது.”

PHOTO • Ritayan Mukherjee

சந்தர் கிராமத்திற்கு வெளியே ப்ரோக்பா மக்களின் ஒரு குழு இடப்பெயர்வு பாதையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. அதிக உயரத்தில் உள்ள பனி உருகுவது தாமதமாவதால் அவர்கள் இப்போது பெரும்பாலும் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளவோ அல்லது தங்களது மந்தைகளுடன் வழியில் காத்திருக்கவோ நேரிடுகிறது என்கின்றனர்.

PHOTO • Ritayan Mukherjee

மூன்று உயரமான கணவாய்களைக் கடக்கும் ஒரு பாதையில், மகோவில் மேய்ச்சல் நிலத்திற்கு செல்லும் ப்ரோக்பா மந்தைகளின் ஒரு குழு: 'முன்பு, நாங்கள் மே அல்லது ஜூன் மாதங்களில் புறப்படுவோம். ஆனால், இப்போது நாங்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இரண்டு- மூன்று மாதங்களில் திரும்பிவர வேண்டி இருக்கிறது.' என்கின்றனர்.

PHOTO • Ritayan Mukherjee

லகாம் கிராமத்திற்கு அருகில் உள்ள காடுகளில் தாஷி செரிங் ட்ஸோமோவிடம் பால் கறந்து கொண்டு இருக்கிறார். ட்ஸோமோக்கள்அதிக வெப்பத்தை எதிர்க்கும் மற்றும் குறைந்த உயரங்களுக்கும் ஏற்றதாக இருக்கும், ஆனால், பால் மற்றும் சீஸ் தரத்தில் அல்லது மத முக்கியத்துவத்தில் அதனால் யாக்கிற்கு இணையானதாக இருக்க முடியவில்லை;  அவை சிறியதாக இருக்கிறது, மேலும் அது அதிக நோய் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இது ப்ரோக்பா மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.

PHOTO • Ritayan Mukherjee

காட்டில் பழங்களை சேகரித்து விட்டு திரும்பியவர்: மாற்றங்களை சமாளிக்கும் உத்தியாக ப்ரோக்பா மேய்ப்பர்கள் சாலை கட்டுமான தொழிலாளர்களாகவும், சிறு வணிகர்களாகவும், மற்றும் பழ சேகரிப்பு போன்ற பிற வருமான ஆதாரங்களை நாடுகின்றனர் - இதில் சேறும் சகதியுமான சாலைகளில் பல மணிநேரம் நடந்து செல்வதும் அடங்கும்.

PHOTO • Ritayan Mukherjee

காட்டிலிருந்து மூங்கில் சேகரித்த பின் திரும்புகிறார்: ப்ரோக்பாவின் அன்றாட வாழ்க்கையில் மூங்கில் ஒரு மையமாக அமைந்துள்ளது, மேலும் அவை தற்காலிக சமையல் அறைகளை ஏற்படுத்தவும், வீட்டு உபயோக பொருட்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் மெதுவாக மாறிக்கொண்டு வருகின்றது.

PHOTO • Ritayan Mukherjee

மலைகளிலிருந்து இறங்கும்போது இறந்த ஒரு ட்ஸோவின் தலையுடன் ப்ரோக்பா மேய்ப்பாளர் ஒருவர். இந்த உயரமான மலை கிராமங்களில் உணவு பற்றாக்குறை இருப்பதால் இங்கு எதுவுமே வீணடிக்கப் படுவதில்லை.

PHOTO • Ritayan Mukherjee

ப்ரோக்பா சமையலறையில் எப்போதும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. இது அவர்களுக்கும், அவர்களது விலங்குகளுக்கும் கடுமையான குளிர்காலத்தில் வெதுவெதுப்பாக இருப்பதற்கு உதவுகிறது. 1984 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் தினசரி குறைந்த வெப்பநிலை பெரிதும் அதிகரித்துள்ளது என்றும், கடந்த 100 ஆண்டுகளில் தினசரி உயர் வெப்பநிலை 5℃ என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது என்றும், 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PHOTO • Ritayan Mukherjee

பாரம்பரிய சீஸான சுர்பியுடன் தன் வீட்டில் நகுலி சோபா. ப்ரோக்பா மேய்ப்பர்களின் இந்த முக்கியமான வருமான ஆதாரம் யாக்கின் எண்ணிக்கை குறைந்து வருவதால் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மேலும் அருகிலுள்ள சந்தைகளில் பாக்கெட் செய்யப்பட்ட சீஸ் கிடைப்பதன் மூலமும் குறைந்து வருகிறது.

PHOTO • Ritayan Mukherjee

சந்தரில் உள்ள வீட்டில் லேகி சுசூக் மற்றும்  நகுலி சோபா. ஒரு ப்ரோக்பா ஜோடி ஒன்றாக நகரும்போது, மேய்ச்சல் வளங்களை மேம்படுத்த அவர்கள் தங்கள் மந்தைகளை இணைகின்றனர்.

PHOTO • Ritayan Mukherjee

சிறுவன் நோர்புவும், லேகி சுசூக் மற்றும் நகுலி சோபாவின் இளைய மகனும், அடிக்கும் காற்றில் ஒரு குடையுடன் போராடுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரண மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

Reporter : Ritayan Mukherjee

Ritayan Mukherjee is a Kolkata-based photographer and a PARI Senior Fellow. He is working on a long-term project that documents the lives of pastoral and nomadic communities in India.

Other stories by Ritayan Mukherjee

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Series Editors : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose