“சாதாரணமா ஒரு நாள்ல நான் நாப்பது அம்பது கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சு என்னோட பிளாஸ்டிக் பக்கெட்களையும் பானைகளையும் விப்பேன்”  என்கிறார் அ. சிவக்குமார். 33 வயதான அவர், நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசூர் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரணமாக, அவரது ஒரு நாள் காலை ஐந்து மணிக்கு தொடங்குகிறது. கலர் கலரான பிளாஸ்டிக் பொருள்களைத் தொங்கவிடுவற்கு ஏற்றமாதிரி மாற்றியமைக்கப்பட்ட  அவரது சைக்கிளில் அவர் தனது பிழைப்பை நடத்துகிறார். சாதாரணமாக ஒரு நாளில் அவர் 300 அல்லது 400 ரூபாய் சம்பாதிப்பதாகவும் சொல்கிறார் அவரது ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கான செலவுகளுக்கு அது போதுமானது.

இப்போதைய நாட்கள் சாதாரணமான நாட்கள் அல்ல.

பொது அடைப்பு காலகட்டத்தில் அவரால் அவரது பிழைப்பை நடத்த முடியவில்லை. அவரது குடும்பத்துக்கான வருமானம் நின்றுபோனது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் இருண்டு போன அவரது வாழ்வில் நம்பிக்கை ஒளிக்  கீற்றாக வானவில்லை அவர் பார்க்கிறார். “ வானவில் மட்டும் இல்லையென்றால் நாங்கள் பட்டினியில் மாட்டியிருப்போம்” என்கிறார் அவர்.

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் பெயர்தான் வானவில். ஏப்ரல் 21 வரை 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிற மாவட்டது இது. வைரஸ் தொற்று அபாயம் பெரிய அளவில் உள்ள மாவட்டங்களில் இதுவும் ஒன்று.

நாடோடிகளாக வாழும் இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி அளிப்பதுதான் இந்தப் பள்ளியின் பொதுவான பணி. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளியில் வகுப்புகள் நடைபெற வில்லை. அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது. பொது அடைப்பு தீவிரமடைந்த உடன் பள்ளியின் சார்பாக உதவி செய்கிற குடும்பங்களின் எண்ணிக்கை என்பது 1228 ஆக உயர்ந்தது.அவற்றில் ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள் மிகவும் கடுமையான முறையில் புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கிற சமூகங்களைச் சேர்ந்தவை. இங்கிருக்கிற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த வானவில் என்பது அவர்களின் உணவு பாதுகாப்புக்கான முக்கியமான மையமாக மாறியிருக்கிறது.
Vanavil school's volunteers are delivering groceries to 1,228 families from extremely marginalised groups in Arasur hamlet and villages of Nagapattinam block
PHOTO • Vanavil
Vanavil school's volunteers are delivering groceries to 1,228 families from extremely marginalised groups in Arasur hamlet and villages of Nagapattinam block
PHOTO • Vanavil

அரசூர் உள்ளிட்ட நாகபட்டினம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள புறக்கணிக்கப்பட்ட பிரிவினரான 1228 குடும்பங்களுக்கு பலசரக்குகளை வானவில் தன்னார்வலர்கள் வழங்குகிறார்கள்

நாடோடி சமூகத்தினருக்கு உதவுவதற்காகவே ஆரம்பத்தில்  வானவில்லின் பணிகள் தொடங்கின. ஆனால், திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள கிராமங்களில் இருந்து கூட உதவிகள் கோரி மற்ற சமூகத்தினரும் வானவில்லை நாடினார்கள் என்கிறார்  பள்ளியின் இயக்குநரும் வானவில் அறக்கட்டளையின் அறங்காவலருமான பிரேமா ரேவதி (43). இந்தப் பள்ளியின் கல்விப் பணிகள் நாகபட்டினம், திருவாரூர் மாவட்டங்களைத் தழுவிய அளவில் நடைபெறுகின்றன.

மார்ச்  24 அன்று பொது அடைப்பு அறிவிக்கப்பட்டபோது, வானவில் பெரும்பாலான குழந்தைகளை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பியது. வானவில் பள்ளியையே தங்களின் வீடுகளாக கொண்ட குழந்தைகள் 20  பேர் பள்ளியில் உள்ளனர். அவர்கள் தங்களின் வீடுகளுக்குப் போவதைவிட வானவில்லில் இருப்பதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்ற நிலையில் இருப்பவர்கள் அவர்கள். பள்ளியின் ஊழியர்களில் ஐந்து பேர் அங்கேயே தங்கியிருக்கிறார்கள்.

அதியன் மற்றும் நரிக்குறவர்கள் எனும் இரண்டு பழங்குடி இனக்குழுக்களின் மத்தியிலான கல்விப் பணிக்குத்தான் வானவில் குறிப்பான கவனம் இருக்கிறது. அதியன் பழங்குடியினர் பூம்பூம் மாட்டுக்காரர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள உறுமி மேளத்திலிலுருந்து வரும் பூம்பூம் எனும் சப்தம் காரணமாக அவர்கள் இந்தப் பெயர் வந்துள்ளது. மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள காளை மாட்டை தன்னோடு கொண்டு வந்து குறி சொல்லும் அவர்களின் பாரம்பரிய தொழில் காரணமாக இந்தப் பெயர் வந்திருக்கிறது. தற்போது மிகச் சிலர்தான் இந்தத் தொழிலைச் செய்கின்றனர்.

இந்த மக்கள் 950 குடும்பங்களாக உள்ளனர் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு. ஆனால், அதை கூட கூடுதல் எண்ணிக்கையில் அவர்கள் இருக்க கூடும். தமிழகத்தின் மாவட்டங்களில் 10 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கிறோம் என்கின்றன அவர்களின் சமூக அமைப்புகள். மிகப்பெரும்பாலோர் தங்களை ‘அதியன்’ எனும் பழங்குடி இனக்குழுவாகவே அடையாளப்படுத்திக்கொண்டாலும் அவர்களில் பெரும்பாலோருக்கு பழங்குடி இனச் சான்று இல்லாத நிலை உள்ளது. சிவகுமாரையும் சேர்த்து அரசூரில் குறைந்தபட்சம் 100 குடும்பங்கள் உள்ளன. வானவில் பள்ளியின் உதவியால்தான் இந்தக் குடும்பங்கள் தாக்குப் பிடித்து வாழ்கின்றன.

நரிக்குறவர் சமூகத்தினர் உண்மையில் வேட்டையாடுதலையும் இயற்கையின் பொருள்களைச் சேகரித்தும் வாழ்வோர்கள்.அவர்கள் மிக நீண்டகாலமாகவே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர் என்ற பட்டியலில் இருந்தனர். பழங்குடி இனக்குழு என்ற அங்கீகாரத்தை அவர்கள் 2016இல்தான்  பெற்றனர். வானவில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரில் பெரும்போலோர் பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தினர்தான்.

Prema Revathi (left) with some of Vanavil's residents. Most of the school's students have been sent home, but a few remain on the campus (file photos)
PHOTO • M. Palani Kumar
Prema Revathi (left) with some of Vanavil's residents. Most of the school's students have been sent home, but a few remain on the campus (file photos)
PHOTO • M. Palani Kumar

ப்ரேமா ரேவதி (இடது) வானவில் பள்ளியில் தங்கியிருப்போருடன் இருக்கிறார். பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவியர் வீட்டுக்குப் போய்விட்டனர். சிலர் மட்டும் பள்ளி வளாகத்தில் இன்னமும் தங்கியிருக்கின்றனர் (கோப்புப் படம்)

பூம்பூம் மாட்டுக்காரர்களின் குழந்தைகள் பிச்சை எடுப்பதைத் தடுப்பதற்காக தனது வளாகத்திலேயே ஒரு தங்கும் விடுதியை வானவில் நடத்திக்கொண்டிருக்கிறது. “எல்லா நாடோடி சமூகங்களிலும் இருப்பதைப்போலவே இந்த நாடோடி இன மக்களின் குழந்தைகளும்  நீண்டகால தொடர் வறுமையாலும் இள வயது திருமணங்களாலும், தொடர்ந்து கர்ப்பம் தரிப்பதாலும் உணவு பழக்கங்களாலும்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பற்றிய பிரச்சனைகளிலும் வானவில் கூடுதல் கவனம் எடுக்கிறது” என்கிறார் ரேவதி.

11ஆம் வகுப்பு மாணவியான 16 வயதான  எம். ஆர்த்திக்கு  வானவில் விடுதிதான் அவளது வீடு. “வேறு எப்படியும் அதை சொல்லிவிட முடியாது” என்கிறார் ஆர்த்தி. ஆனால் ஒரு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் ஆரம்பப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு என்ன வேலை?. மாற்று கல்வித் திட்டத்தைப் பயன்படுத்தி கல்விப் பணியை இந்தப் பள்ளி செய்தாலும் அதே நேரத்தில் உண்டுஉறைவிடப் பள்ளியாகவும் வானவில் பணியாற்றுகிறது.     நாடோடி சமூகத்தின் மாணவ, மாணவியர் அரசாங்கப் பள்ளிகளுக்குப் போய் படித்துவிட்டு வந்து இங்கே உள்ள விடுதியில் தங்கிக்கொள்கின்றனர். அப்படித்தான் ஆர்த்தியும். ஐந்தாம் வகுப்பு வரை வானவில்லில்தான் அவள் படித்தாள். தற்போது அரசாங்கப் பள்ளிக்குச் செல்கிறாள். பள்ளி விட்டதும் அவளது வீடான வானவில்லுக்கு வந்துவிடுவாள்.

வானவில்லுக்கு 15 வயதுதான் ஆகிறது. அதற்குள்ளாகவே அது ஆர்த்தியின் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக பெரும்பாலோர் ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்து விட்டவர்களில் நான்கு பேர் மேலும் படித்து பட்டம் பெற்றுவிட்டனர். அவர்கள் தற்போது பல்வேறு வேலைகளில் அமர்ந்து விட்டனர். மற்றும் மூன்றுபேர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் பயில்கின்றனர்.

“எனது சமூகத்தில் உள்ள பலரைப் போலவே நானும் ஆகியிருப்பேன்” என்கிறார் பி.சுதா அவர் தற்போது பொறியியல் பட்டம் பெற்று, சென்னையில் உள்ள  ஒரு தகவல்தொடர்பு நிறுவனத்தில்  பணி செய்கிறார். “ எனது வாழ்வை வானவில்தான் மாற்றியிருக்கிறது” என்கிறார் சுதா. வானவில்லின் பழைய மாணவர்களில் அவரும் ஒருவர். அந்த சமூகத்தில் முதன்முதலாக பட்டம் படித்து முடித்துள்ள நான்கு பெண்களில் அவரும் ஒருவர். “எனக்கு சாத்தியம் இல்லாமல் இருந்த பட்டப்படிப்பை நான் படித்து முடித்து சாதித்துக் காட்டியதற்கு எனக்கு உதவியாக இருந்தது என் மீது வானவில் பள்ளி  காட்டிய தனிக்கவனம்தான்” என்கிறார் அவர்.
Left: A Vanavil student prepares for a play. Right: Most of them are from the Boom Boom Maattukkarar community: 'The worst affected are children because they have lost their mid-day meals' (file photos)
PHOTO • M. Palani Kumar
Left: A Vanavil student prepares for a play. Right: Most of them are from the Boom Boom Maattukkarar community: 'The worst affected are children because they have lost their mid-day meals' (file photos)
PHOTO • M. Palani Kumar

இடது: வானவில் குழந்தைகள் ஒரு நாடகத்துக்கு தயாராகின்றனர். வலது: பெரும்பாலோர் பூம்பூம் மாட்டுக்கார சமூகத்திலிருந்து வந்திருக்கின்றனர். தற்போது மோசமாக பாதிக்கப்பட்டிருப்போர் குழந்தைகள்தான். அவர்களுக்கு ‘மதிய உணவு’ கிடைக்கவில்லை. (கோப்பு படங்கள்)

பொது அடைப்புக்கு முன்பாக இங்கே 81 குழந்தைகள் படித்தனர். அவர்களில் 45 பேர் தங்கிப் படிப்பவர்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கிற 102 பேரும் இங்கே தங்கியிருந்தனர். பள்ளி நேரத்துக்கு பிறகான படிப்பு மையங்ளையும் இங்கே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காக வானவில் அறக்கட்டளை அமைத்துள்ளது. அவர்களுக்கு மாலை நேரங்களில் சத்தான தின்பண்டங்கள் தரப்படும். தற்போது இந்த மையங்களில் கை சுத்தம் செய்யும் சானிடைசர் பாட்டில்கள்தான் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பலசரக்குப் பொருள்கள் கஷ்டப்படுகிற குடும்பங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன.

“பல கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுகின்றனர். மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்தான். அவர்கள் பள்ளிகளில் தங்களுக்கு கிடைத்து வந்த மதிய உணவுகளை இழந்து விட்டனர். வானவில்லில் குழந்தைகளுக்கு மதிய உணவை அளிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் பலர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.” என்கிறார் ரேவதி. அதனால்தான் அவர்கள் இந்த அவசரகால பணியை ஆரம்பித்தனர். இது தனியொரு பள்ளியால் மட்டும் செய்யக்கூடிய காரியம் அல்ல. அது விரிவடைந்து கொண்டே வந்தது. தற்போது ஏராளமானோர் பலசரக்குப் பொருள்களை பெற்றுள்ளனர்.

தஞ்சாவூரில் ஒன்றும் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் உள்ளவையும் சேர்ந்து மொத்தம் 1288 குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன. இவர்களின் தேவைகளுக்காக, வானவில் நிதி திரட்டும் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சில குடும்பங்களும் தற்போது தங்களது தேவையைத் தெரிவித்துள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள இருபது மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் நகராட்சிகளில் பணியாற்றும் 231 சுகாதாரப் பணியாளர்களுக்கும் கூட  உணவு அளிக்க தற்போது வானவில் பள்ளி முயன்றுவருகிறது.

“நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது” என்று காளை மாட்டோடு குறி சொல்கிற இந்த  பூம்பூம் மாட்டுக்கார நாடோடி மக்கள் எப்படி தோன்றினார்கள்? இத்தகைய குறி சொல்லும் பாரம்பரியம் எவ்வாறு அவர்களிடம் ஆரம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்வது அவ்வளவு வெளிப்படையானதாக, தெளிவானதாக இல்லை. அது பற்றிய மாயக் கதையும் உள்ளது. “எங்களது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால்  நிலப்பிரபுக்களிடம் பண்ணையடிமைகளாக இருந்தார்கள். ஒரு பெரும் பஞ்சம் வந்தபோது தங்களை நம்பியிருந்த பண்ணையடிமைகளுக்கு சில காளைகளையும் பசுக்களையும் கொடுத்து விரட்டிவிட்டார்கள்” என்கிறார் தமிழ்நாடு அதியன் பழங்குடி மக்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ராஜூ. ஆனால், பூம்பூம் மாட்டுக்காரர்கள் ஒருபோதும் விவசாயம் சார்ந்த மக்களாக இருந்ததே இல்லை என்கிறார்கள் வேறு சிலர்.

“பிளாஸ்டிக் பொருள்கள், பேய் பிசாசு விரட்டும் பொம்மைகளை விற்பது அல்லது வேறு வகையான சின்னச் சின்ன வேலைகளைத் தான் நாங்கள் பெரும்பாலும் செய்து வந்தோம். தற்போது நாங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறோம்” என்கிறார் ராஜூ. வானவில்லின் கல்விப் பணிகளை அவர் பெரிதும் பாராட்டுகிறார்.
More than half of the primary school's students stay on the campus; it is also 'home' to 102 children attending government schools around Sikkal village (file photos)
PHOTO • M. Palani Kumar
More than half of the primary school's students stay on the campus; it is also 'home' to 102 children attending government schools around Sikkal village (file photos)
PHOTO • M. Palani Kumar

ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பள்ளியிலேயே தங்கிவிடுகின்றனர். சிக்கல் கிராமத்தைச் சுற்றிப் படிக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கிற 102 குழந்தைகளுக்கும் இதுவே வீடாக இருக்கிறது. (கோப்புப் படங்கள்)

பழங்குடி சமூகம் என்பதற்கான இனச் சான்றிதழ்களைப் பெறுவது என்பது பெரும்போராட்டமாக இருக்கிறது என்கிறார் கே.ராஜூ. பல கிராமங்களில் அவர்களுக்கு என்ன சான்றிதழ்கள் கிடைக்கிறது என்பது அந்த வருவாய் கோட்ட அலுவலருக்கு தரகு வேலை பார்ப்பவர்களைப் பொறுத்தது என்கிறார் ரேவதி.

2004ஆம் ஆண்டில் தாக்கிய சுனாமி பேரழிவுக்குப் பிறகு அடுத்த வருடமே வானவில் பள்ளி நிறுவப்பட்டது. அப்போதைய நிவாரணப் பணிகளில் பாகுபாடு காட்டப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால்தான் இந்தப் பள்ளியின் தேவை ஏற்பட்டது. அத்தகைய பின்னணியில் ஆரம்பமான இந்தப் பள்ளி சென்னையில் ஏற்பட்ட 2015 வெள்ளம் மற்றும் 2018 கஜா புயல் பேரழிவு ஆகியவற்றில் தனது  பணியைத் தொடர்ந்தது.

நாகப்பட்டினம் அப்பாரக்குடி குக்கிராமத்தில் அரிதாக பொறியியல் படித்து, தொலைத் தொடர்புத் துறையில் வேலை செய்பவர் 25 வயதான கே. அந்தோணி. வானவில் தலையிட்டு உதவி செய்யவில்லை என்றால் தஙகளது குக்கிராமமே பட்டினியில் சிக்கியிருக்கும் என்கிறார் அவர். “ எங்களது குக்கிராமத்தில் நாதஸ்வரம், தவில் வாசிப்பவர்கள் உள்ளனர். அவர்களும் தினக்கூலி பெறுபவர்கள்தான். இந்த மாதிரியான நெருக்கடியான காலகட்டத்தில் எங்களது பாடு திண்டாட்டம்தான்” என்கிறார் அவர். வானவில் பள்ளிதான் அவருக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.

இளம் பெண் ஆர்த்தியும் அதே நம்பிக்கையோடு இருக்கிறார். “ நான் எழுதியிருக்கிற 11 ஆம் வகுப்பு தேர்வில் நான் தேர்ச்சி பெறுவேன். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன்,  ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை நான் படிப்பேன்” என்கிறார் அவர். வானவில்லின் எதிர்கால ஆசிரியராக அவர் ஒருவேளை மாறலாம்.

முகப்பு போட்டோ - பழனிக்குமார்

தமிழில்: த. நீதிராஜன்

Kavitha Muralidharan

Kavitha Muralidharan is a Chennai-based independent journalist and translator. She was earlier the editor of 'India Today' (Tamil) and prior to that headed the reporting section of 'The Hindu' (Tamil). She is a PARI volunteer.

Other stories by Kavitha Muralidharan
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan