அரசு அதிகாரியின் பெயரைத்தவிர இங்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும், அவர்களை அடையாளத்தை மறைப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அவர்கள் கிராமங்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. இது இரண்டு பாகங்களை கொண்ட கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும்.

“கீடா ஜாடி என்ற மூலிகைதான் இங்குள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றியது“ என்று சுனில் சிங் நாம் பயணம் செய்துகொண்டிருக்கும் டாக்சியை ஓட்டிக்கொண்டே கூறுகிறார். 23 வயதான சுனில் சிங் இரண்டாண்டுகளுக்கு மேலாக டாக்சி ஓட்டுகிறார். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்களை தார்ச்சுலாவுக்கு அழைத்துச்செல்கிறார். இங்குள்ள கிராம மக்களுக்கு அங்குதான் பள்ளி, கல்லூரி, சந்தை மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. உத்ரகாண்டின் பைதோராகார் மாவட்டத்தில் தார்ச்சுலா வட்டம் இந்திய – நேபாள எல்லையில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது.

சுனில், பொலிரோ காரை வாங்கி டாக்சியாக பயன்படுத்தி வருகிறார். ரூ.3.5 லட்சம் சேமித்து, வங்கியில் கடன் பெற்று இந்தக் காரை வாங்கினார். அவர் கீடா ஜாடி விற்று, அதிலிருந்து கார் வாங்குவதற்கு பணம் சேமித்தார். கீடா ஜாடி என்பது மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒருவகை மூலிகை பூஞ்சை வகைத் தாவரமாகும். அதை சேமிக்க தனது குடும்பத்தினருடன் 8 வயதிலிருந்து செல்கிறார். அவர் ஈட்டும் வருமானத்தில் இருந்து கடனை செலுத்தி வருகிறார்.

கம்பளிபூச்சி பூஞ்சை அல்லது கீடா ஜாடி என்பது திபெத்தியன் பீடபூமியின் பனிப்புல்வெளிகளில் 3,500 முதல் 5,000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் வளரும். இது பாலியல் உணர்வை உருவாக்கும் திறமை கொண்டதால் இதை ‘இமயமலையின் வயகரா‘ என்றும் அழைக்கிறார்கள். இந்த பூஞ்சை யர்சகும்பா என்று சீனாவில் அழைக்கப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் முக்கியமானப் பொருளாகும். உயர்தரமான கீடா ஜாடி சில நேரங்களில் எல்லை தாண்டிய விற்பனையில் ரூ.12 லட்சம் வரை சட்ட விரோதமான முறையில் விற்கப்படுகிறது. பெரும்பாலான பூஞ்சை அறுவடை செய்யப்பட்டு, கடத்தல்காரர்களால் நேபாளத்துக்கும் அங்கிருந்து சீனாவுக்கும் கடத்தப்படுகிறது.

உத்ரகாண்டின் உயர்ந்த மலைப்பகுதிகளின் எல்லை மாவட்டங்களான பைத்தோராகார் மற்றும் சமோலியில் இந்த பூஞ்சை அறுவடைக் காலம்  மே மாதத்தின் ஆரம்பத்திலேயே துவங்கி, ஜீன் மாத மத்தியிலோ அல்லது இறுதியிலோ மழைக்காலத்தின் வருகையையொட்டி முடிவடைகிறது. குடும்பம் முழுவதும் புல்வெளிக்கு இடம்பெயர்ந்து, கூடாரங்களில் பல வாரங்கள் தங்கியிருந்து, நீண்ட நேரம், கடினமான சூழல்ளில் வேலை செய்து இப்பூஞ்சையைச் சேகரிக்கிறார்கள். ( பைத்தோராகாரின் குடும்பங்களுக்கு வருமானம் வழங்கும் பூஞ்சைகள் என்ற கட்டுரையை பார்க்கவும் )

The alpine meadows of Satper in Pithoragarh district of Uttarakhand
PHOTO • Arpita Chakrabarty
Caterpillar fungus – the collection of keeda jadi of Gopal Singh. He says he spends his all-year round household expenses on earnings of keeda jadi
PHOTO • Arpita Chakrabarty

பல கிராமங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பனிப்புல்வெளிகளில் வேலை செய்கிறார்கள் (இடது). பூஞ்சை அறுவடை (வலது). அதிலிருந்து அவர்கள் ஈட்டும் தொகை பின்னர் அவர்கள் குடும்பத்தின் ஓராண்டுத் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது

அவர்கள் போதிய அளவு பூஞ்சைகளுடன் வீடு திரும்புகிறார்கள். அதில் இருந்து அவர்கள் ஈட்டும் வருமானம் குடும்பத்தின் செலவுகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை சமாளிக்க உதவுகிறது. “நீங்கள் எவ்வளவு கீடா ஜாடிகள் சேகரிக்கிறீர்களோ அந்தளவு வருமானம் இருக்கும். சில குடும்பங்களுக்கு சில மாதங்களுக்கும், சில குடும்பங்களுக்கு ஓராண்டு வரையும் அந்த வருமானம் பயன்படும்“ என்று பார்வதி தேவி கூறுகிறார். அவரும் சுனிலின் கிராமத்தைச் சேர்ந்தவர். “இந்தத் தொழில் மிகவும் கடினமானதும், ஆபத்து நிறைந்ததுமாகும். கல்வி கற்றவர்களும், படித்து பட்டமுள்ளவர்களும் கூட இங்கு வேலையின்றி உள்ளார்கள். எனவே அனைவரும் இந்தத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.“

வழக்கமாக, முகவர்கள் கிராமத்திற்கு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில்தான் பூஞ்சைகளை வாங்குவதற்கு வருவார்கள். பின்னர் அவர்கள் தொலைவில் உள்ள மலைப்பாதைகளில் எல்லை முழுவதும் சுமந்து செல்வார்கள். “நாங்கள் சேகரித்து வந்த பின்னர், அவற்றை காயவைத்து, சுத்தம் செய்து, பதப்படுத்தி, இடைத்தரகர்கள் வரும் வரை பாதுகாப்பாக வைத்திருப்போம். கீடா ஜாடி விற்பதில் கிடைக்கும் வருமானத்தை ஆண்டு முழுவதும் எங்கள் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்வோம். விவசாயமும் இல்லாமல், வேலைகளுமின்றி நாங்கள் உள்ளபோது, இது எங்களுக்கு தங்கத்தை விட உயர்வானது“ என்று அனில் சிங் கூறுகிறார். இவர் பூஞ்சை அறுவடை செய்பவர்.

லாபம் நிறைந்த பூஞ்சைத் தொழிலை கண்டுபிடிப்பதற்கு முன்னர், கிராமமக்கள் விவசாயம், கூலித்தொழில் அல்லது செம்மறி ஆடுகள் வளர்ப்பு ஆகிய வேலைகளை செய்து வருமானம் ஈட்டினர். இந்த கரடுமுரடான நிலப்பரப்பில் விவசாயம் என்பது சாத்தியமான தொழில் கிடையாது. “இது விளைச்சல் நிலம் கிடையாது. நாங்கள் பெரும்பாலும் ராஜ்மா மற்றும் உருளைக்கிழங்குகள் பயிரிடுகிறோம். விளைச்சல் நன்றாக இருக்கும்போது, நாங்கள் சில விளைபொருட்களை விற்பனை செய்வோம். ஆனால், அது அரிதான ஒன்று. பெரும்பாலும் நாங்கள் எங்களின் சொந்த பயன்பாட்டிற்கே விளைச்சலை பயன்படுத்திக் கொள்வோம்“ என்று பாகு சிங் கூறுகிறார். “வேலைக்கான மற்றொரு வழியாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளது. ஆனால், அது கீடா ஜாடி சேகரிப்பது போல் லாபகரமான வேலை கிடையாது.“

பெரும்பாலானோர் வேலைக்காக இடம்பெயர்வார்கள். ஆனால், இந்த பூஞ்சைகளில் கிடைக்கும் லாபத்தால் , அவ்வாறு சென்றவர்கள் தற்போது மீண்டும் கிராமத்திற்கு திரும்பி, இமயமலையின் உயர்ந்த இடங்களில் உள்ள புல்வெளிகளில் பூஞ்சைகள் சேகரிக்கின்றனர்.

Keeda-jadi has transformed villages around Dharchula. New houses and shops have sprouted around
PHOTO • Arpita Chakrabarty

‘கீடா ஜாடி இங்குள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டது‘ என்று சுனில் சிங் கூறுகிறார். அவரது கிராமத்தில் பூஞ்சைகளால் சிறிதளவு செழிப்பு ஏற்பட்டுள்ளது

சுனிலைப்போன்ற இளைஞர்கள், ஆண்டின் மற்ற மாதங்களில் வருமானத்திற்காக டாக்சி ஓட்டுகிறார்கள். “நான் இந்தாண்டுப் பருவத்தில் 16 நாட்கள் மட்டுமே காடுகளில் இருந்தேன். நான் 300 துண்டுகள் சேரித்தேன்“ என்று அவர் கூறுகிறார். அவர் சேகரித்தவற்றில் இருந்து அவருக்கு ரூ.45 ஆயிரம் கிடைக்கும். அவரது நண்பர் மன்னு சிங். அவரும் நம்முடன் பயணிக்கிறார். அவர் 500 துண்டுகள் சேகரித்துள்ளார். “நான் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும் என நினைக்கிறேன்“ என்று மன்னு புன்னகைக்கிறார்.

இந்த பூஞ்சை வணிகம் கொடுத்திருக்கும் செழிப்பு சுனிலின் கிராமத்தில் பல்வேறு இடங்களில் தென்பட்டது. மலைப்பகுதிகளில் புதிய வீடுகள் மற்றும் கடைகள் உருவாகிவிட்டன. பெரும்பாலானமக்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் மற்றும் நேபாளி சிம் கார்டுகள் வைத்துள்ளனர். இந்திய இணைய வசதி அரிதாகவே இங்கு வேலை செய்யும். “கீடா ஜாடி, எங்கள் வீட்டு வருமானத்தை பன்மடங்கு அதிகரித்து. எங்கள் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது. எங்களால் இப்போது நல்ல உணவு சாப்பிட முடிகிறது. எங்களால் இப்போது டேராடூன் மற்றும் டெல்லிக்கு படிப்பு மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு செல்ல முடிகிறது“ என்று 14 வயதான மனோஜ் தப்பா கூறுகிறார். அவர் மட்டுமே 450 பூஞ்சைத் துண்டுகளை 2017ம் ஆண்டு பருவத்தில் சேகரித்தார்.

கிராமத்தில் சில இளைஞர்கள் டேராடூனில் இந்திய குடிமையியல் பணிக்கான தேர்வுகள் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதாகவும், கீடா ஜாடி விற்பதில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து கட்டணம் செலுத்துவதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. இந்தப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பத்தினர் பழங்குடியினர். அவர்களுக்கு இந்திய குடிமையியல் பணிகளில் சேர்வதென்பதெல்லாம் பெருங்கனவு. அது பழங்குடியினருக்கு கூடுதலாக சில இடங்கள் ஒதுக்கப்பட்டதால் சாத்தியப்பட்டுள்ளது. ஆனால், கீடா ஜாடி வியாபாரம் ஆரம்பிக்க துவங்கும் வரை அவர்களால் பயிற்சிக்கான செலவையே செய்ய முடியாமல்தான் இருந்தது.

பனிப்பாறைகள் உருகியதால், 2013ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கிராமத்தில் இருந்த விவசாய நிலங்களை வீணாக்கியது. கிராமமக்கள் பெரும்பாலும் இந்த பூஞ்சையை விற்பதில் இருந்து கிடைத்த பணத்தில் இருந்துதான் தங்களின் வாழ்க்கையை மறுசீரமைத்துக்கொண்டனர். “இந்த நிலை எங்களுக்கு கீடா ஜாடியால் மட்டுமே சாத்தியப்பட்டது“ என்று பானு சிங் கூறுகிறார். அதிலிருந்து கிடைத்த வருமானத்தில்தான் அவர் தனது மூத்த மகளின் திருமணத்தை 2016ல் ஆடம்பரமாக நடத்தினார். அவர் மூன்று அறைகள் கொண்ட வீட்டையும் அனைவரையும் கவரும் வகையில் கட்டியுள்ளார்.

‘ஒரே இடத்தில் பல குடும்பத்தினர் பூஞ்சை சேகரிப்பில் ஈடுபடும்போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கும் அளவு குறையும். ஆனால், நாங்கள் எங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை காவல்துறைக்கு தெரிவிக்க மாட்டோம். ஏனெனில் எங்களை சிறையில் அடைத்துவிடுவார்கள்’

காணொளி: ‘மக்களுக்கு வேலை இருந்தால், அவர்கள் கீடா ஜாடியின் பின்னால் ஓட மாட்டார்கள்‘

ஆனால், இந்த எல்லா சந்தோஷங்களுக்கும் மற்றொரு கடினமான பக்கமும் உள்ளது. சட்பெர் புல்வெளி போன்ற பொதுவான மேய்ச்சல் நிலங்களை அதிகம் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் கிராமங்களுக்கு இடையே அவ்வப்போது சண்டை சச்சரவுகள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது. “மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்களில் ஹல்ட்வாணி மற்றும் லால்குவனில் சில குடும்பத்தினர் கீடா ஜாடி வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கும் அளவு குறைகிறது. புல்வெளிகளில் குறிப்பிட்ட இடங்களில் செல்வதில் பலருக்கு சண்டைகள் ஏற்படுகிறது“ என்று லால் சிங் கூறுகிறார்.

“ஒரே இடத்தில் பல குடும்பத்தினர் பூஞ்சை சேகரிப்பில் ஈடுபடும்போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கும் அளவு குறையும். ஆனால், நாங்கள் எங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை காவல்துறைக்கு தெரிவிக்க மாட்டோம். ஏனெனில் எங்களைச் சிறையில் அடைத்துவிடுவார்கள்“ என்று பானு சிங் சுறுகிறார். அவர் மற்றும் அவர் குடும்பத்தினர் 1,400 துண்டுகள் பூஞ்சையை சட்பெர் புல்வெளியில் இருந்து சேகரித்திருந்தனர். அவற்றை கண்ணாடி ஜாடிகளில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அவற்றை இரண்டு லட்ச ரூபாய்க்கு விற்றனர்.

யர்சகும்பாவுக்கான தேவை 1993க்கு பின்னர்தான் அதிகரித்தது. மூன்று சீன தடகள வீரர்கள், பெய்ஜிங் தேசிய விளையாட்டுப்போட்டிகளில் 5 உலக சாதனைகளை முறியடித்தபோதுதான், அவர்கள் இந்த பூஞ்சையிலிருந்து தயாரித்த டானிக்கை தொடர்ந்து குடித்துவந்தது தெரியவந்தது. அதற்குப் பின்னர்தான் இதற்கான தேவை கூடியது. 1999ல் சீனா, இந்த பூஞ்சையை அருகிவரும் தாவர இனமாக வகைப்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த பூஞ்சையைத் தேடி இந்தியாவிற்கு வரத்துவங்கினர். “2000மாவது ஆண்டுகளின் துவக்கத்தில் திபெத்தைச் சேர்ந்த கம்பா பழங்குடியினர் இந்த பூஞ்சையைத் தேடி, இந்தியப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு வநதனர். இனிமேல் திபெத்திய பகுதிகளில் அது அரிதாகவே கிடைக்கும் என்று அவர்கள் கூறினர். அவர்கள் இந்திய பகுதிகளில் செல்ல முடியாத இடங்களிளெல்லாம் தேடிப்பார்த்தனர். பின்னர் அவர்கள் எங்களின் உதவியைக் கோரினார்கள்“ என்று 41 வயதான கிருஷ்ணா சிங் கூறினார். அந்த நேரத்தில் கீடா ஜாடிக்கான சந்தை விலை மிதமானமாகத்தான் இருந்தது. 2007ம் ஆண்டில் இந்த வணிகம் லாபகரமானதாக ஆனது. அதுப் பலரை கவர்ந்து தொழிலுக்குள் இழுத்தது.

ஆனால், இந்த பூஞ்சைக்கான ‘தங்க வேட்டை‘ என்பது பைத்தோராகார் மற்றும் சம்மோலி மாவட்டங்களில் உள்ள 300 வறுமை நிறைந்த கிராமங்களில் இருந்து குறைந்து வருகிறது. காலநிலை மாற்றம் மற்றும் அதிகளவில் அறுவடை செய்வது, மக்கள் வரத்து அதிகரிப்பு மற்றும் அவர்கள் பனிப்புல்வெளிகளில் ஏற்படுத்திய பாதிப்பு ஆகியவை காரணமாக இந்த பூஞ்சை விளைச்சல் 10 முதல் 30 சதவீதம் வரை கடந்த முப்பது ஆண்டுகளில் குறைந்துவிட்டதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Inside the tarpaulin camp of Gopal Singh. The rugs and blankets are carried up from his village. He has been living here for more than a month
PHOTO • Arpita Chakrabarty
The villagers warm themselves from the bonfire after cooking is done in the evening. Firewood is collected from the forest below the alpine meadows
PHOTO • Arpita Chakrabarty

தினசரி அறுவடைப் பணிகள் இல்லாவிட்டால், இந்த குளிருக்கு மத்தியில் பனி நிரம்பிய கூடாரங்களில் வசிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நீண்ட காலம் தாக்குபிடிக்கக்கூடிய தொழிலுமல்ல இது

கம்பா பழங்குடியினர் எவ்வாறு புதிய மேய்ச்சல் நிலங்களை தேடினார்களோ, அதேபோல், உத்ரகாண்டின் பூஞ்சை சேகரிப்பவர்களும் இன்னும் உயரத்தில் வேறு இடங்களில் தேட வேண்டும். மிக உயர்ந்த இடங்களில் மட்டுமே தற்போதெல்லாம் பூஞ்சைகள் கிடைக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் அவை குறைந்தளவு உயரமுள்ள இடங்களிலே கிடைத்து வந்ததாக மக்கள் கூறுகின்றனர். “10 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தளவு கீடா ஜாடிகள் இப்போது எங்களுக்கு காணக் கிடைப்பதில்லை. இன்னும் சில காலம் கழித்து இப்போது எங்களுக்கு கிடைக்கும் இடங்களில் அவை கிடைக்கப் போவதுமில்லை. நாங்கள் மேலும் உயரத்திற்கு சென்றுகொண்டே இருக்க வேண்டும்“ என்று லால் சிங் கூறுகிறார்.

உத்ரகாண்ட அரசு இந்தத்தொழிலை ஒழுங்குப்படுத்தி, பூஞ்சையை அதிகமாக எடுப்பதையும் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. உத்ரகாண்டின் வனப்பாதுகாப்பு முதன்மை அதிகாரி ரஞ்ஜன் மிஸ்ரா கூறுகையில், “நாங்கள் ஒன்றிய அரசுக்கு புதிய நெறிமுறைகளை அனுப்பியுள்ளோம். இந்தப் பூஞ்சை எடுப்பதையும் அதை விற்பதையும் தடுக்க முடியாது. எனவே நாங்கள் நன்றாக வரையறுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் இத்தொழிலை ஒழுங்குப்படுத்தும் கொள்கைகளை வகுப்பதன் மூலம் அரசு மற்றும் மக்கள் என இருதரப்பும் பயன்பெற முடியும்“.

புதியக் கொள்கைகளில், பூஞ்சை சேகரிக்கும் ஒவ்வொருவரும் வனப் பஞ்சாயத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது (வனப் பஞ்சாயத்துகள் என்பது கிராமத்தினரால் மேலாண்மை செய்யப்படும் வனக்குழுக்கள்). அவர்களின் ஆதார் அடையாள அட்டைகள் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக்கொண்டு வனச்சரக அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மக்கள் எத்தனை நாள், எந்த வனச்சரகத்தில் கீடா ஜாடி சேகரிப்பதற்காக இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். எவ்வளவு கீடா ஜாடிகளை சேகரிக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு 100 கிராமுக்கும், அவர்கள் வனத்துறைக்கு ரூ.1000 கொடுக்கவேண்டும். பின்னர் அதை வனப் பஞ்சாயத்துகளிலோ அல்லது மூன்றாம் நபரிடமோ விற்கலாம். பின்னர் அதை விற்பது சட்டபூர்வமாகிவிடும் என்று மிஸ்ரா மேலும் தெரிவித்தார். “பனிப்புல்வெளிகள் சுற்றுச்சூழல் ரீதியாக சிதைவுறும் தன்மைகொண்டது. எனவே இந்தக் கொள்கைகள் நடைமுறைக்கு வரும்போது, மாநிலத்தில் எவ்வளவு பூஞ்சைகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்தப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதும் தெரியவரும்“.

இதற்கிடையில், இந்த பூஞ்சைக்கு அதிகரித்து வரும் தேவை மற்றும் அவை அருகிவருவது அதன் சந்தை விலையை கடந்த பத்தாண்டுகளில் பலமுறை  அதிகரித்துவிட்டது. அதுவே பூஞ்சை சேகரிப்பவர்களை கவர்வதாகவும் உள்ளது.

தமிழில்: பிரியதர்சினி. R.

Arpita Chakrabarty

Arpita Chakrabarty is a Kumaon-based freelance journalist and a 2017 PARI fellow.

Other stories by Arpita Chakrabarty
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.