எல்லாவற்றிற்கும் மேலாக, பிளாஸ்டிக் உள்ளது. இது எல்லா இடங்களிலும் எல்லா வடிவங்களிலும் கிடைக்கிறது. தெருக்களில் கிடக்கிறது, தண்ணீரில் மிதக்கிறது, சாக்குகளில் சேமிக்கப்படுகிறது, தொட்டிகளில் வைக்கப்படுகிறது, கூரைகளில் குவிக்கப்படுகிறது. மேலும் 13-வது வளாக எல்லையில் உள்ள சிற்றோடையில் அதிக மதிப்புள்ள உலோக பாகங்களை பிரித்தெடுப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும்போது, ​​கடுமையான புகை காற்றை அடர்த்தியாக்குகிறது.

தாராவியில் உள்ள மறுசுழற்சித் துறையான இந்த வளாகத்துக்கு, மும்பையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களின் முடிவில்லாத சங்கிலி தொடர்ந்து வந்து சேருகிறது. மாநகரில் தினமும் உற்பத்தியாகும் 10,000 டன்னுக்கும் அதிகமான குப்பைகளின் பெரும் பகுதி கை வண்டிகள், லாரிகள் மற்றும் டெம்போக்களில் இங்கு கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்கள் - பெரும்பாலானோர் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த இளைஞர்கள் - இந்தத் துறையின் சாத்தியமில்லாத குறுகியப் பாதைகளில் இவற்றை ஏற்றி இறக்குகிறார்கள்.

இங்குள்ளக் கொட்டகைகளின் நெரிசலானப் பகுதியில், மறுசுழற்சி செய்யும் பல அடுக்கு செயல்முறை மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. ஒவ்வொருப் பொருளும் ஒரு 'புதிய' மூலப்பொருளாக அல்லது முற்றிலும் மற்றொருப் பொருளாக மாற்றப்படுவதற்கு முன், பலரைக் கடந்து பல முறைகளுக்கு ஆட்படும் ஒரு பெரியச் வேலைச் சங்கிலியில் பயணிக்கிறது.

டெரா காம்பவுண்டில் மறுசுழற்சி செய்வதற்கான சுற்றுச்சூழல் அமைப்பு ஒரு நுணுக்கமான அமைப்பைக் கொண்டுள்ளது. வாங்குதல் மற்றும் விற்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. பணி சார்ந்த சொற்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். செயல்முறையின் அடுத்தடுத்தக் கட்டங்கள் நன்கு நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நபரும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டப் பணிகளில் திறன்பெற்றிருக்கிறார்கள். தூக்கி எறியப்பட்ட பொருட்களை காயலான் கடைக்காரர்கள் சேகரிக்கின்றனர். கழிவுகளை எடுப்பவர்கள் மற்றும் பயணித்து குப்பைகளை சேகரிப்பவர்கள், தினசரி சேகரிப்புகளை கொட்டகைகளில் சேர்ப்பிக்கின்றனர். வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நிறுவை மையங்களில் பொருட்களை இறக்குகிறார்கள். பின்னர் குடோன்களை வைத்திருப்போர், அவர்கள் வேலை கொடுக்கும் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் எனப் பலர் ஆயிரக்கணக்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

PHOTO • Sharmila Joshi
PHOTO • Sharmila Joshi

தாராவியின் 13வது வளாகத்தில் உள்ள மறுசுழற்சியின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒரு நேர்த்தியான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது

தொழிற்சாலைகளுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய தாள்களை உருவாக்க இயந்திரங்கள் கணகணக்கின்றன. உலோகம் எரிக்கப்பட்டு உருக்கப்படுகின்றன. பயன்படுத்திய பெட்டிகளில் இருந்து நல்லப் பகுதிகளை வெட்டி, பழையக் காலணிகளின் ரப்பர் அடிப்பகுதிகளை ஒரு அரவையில் போட்டு, கேன்களை சுத்தம் செய்து, கூரைகளில் இருக்கும் மலை போன்ற குவியல்களில் அவற்றை அடுக்கி, அட்டைப் பெட்டிகளை தொழிலாளர்கள் மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். பழைய குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் 13-வது வளாகத்தில் பிரிக்கப்பட்டு, உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகின்றன. கணினி விசைப்பலகைகள் அகற்றப்படுகின்றன. பழைய மரச்சாமான்கள் உடைக்கப்படுகின்றன அல்லது பழுதுபார்க்கப்படுகின்றன. எண்ணெய் மற்றும் வண்ணப்பூச்சுப் பீப்பாய்கள் சுத்தம் செய்யப்பட்டு இரண்டாவது வாழ்க்கைக்குத் தயாராகின்றன. அதே நேரத்தில் அவற்றின் வீரியம் மிக்க எச்சங்கள் திறந்த வடிகால்களில் ஓடுகின்றன.

சில குடோன்களில், தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தரம், அளவு மற்றும் வகை - பாட்டில்கள், வாளிகள், பெட்டிகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் சல்லடைப் போட்டுப் பிரிக்கிறார்கள். இவை வரிசைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு, கழுவப்பட்டு, சில பணிமனைகளில், குறைந்த தர பிளாஸ்டிக் பொருட்களாக மறுவடிவமைப்புக்காக உருண்டைகளாக உருவாக்கப்படுகின்றன. மறுசுழற்சிச் சங்கிலியில் பயணப்படுவதற்காக டெம்போக்கள் மற்றும் டிரக்குகள் ஆகியவற்றில் சாக்குகள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியை முகப்புப் புகைப்படத்தில் இருக்கும் தொழிலாளியும் மற்றும் அவரது குழுவும் கூட செய்து முடித்து இருக்கலாம்.

"இது போன்ற வேறு எந்த காவ் ['கிராமம்'/இடத்தை] நீங்கள் பார்த்தீர்களா?" என இங்கே ஒரு தொழிலாளி என்னிடம் ஒருமுறை கூறினார். "இந்த இடம் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்க முடியும். இங்கு வரும் எவருக்கும் ஏதாவது வேலை கிடைக்கும். ஒரு நாளிந் முடிவில், இங்கு யாரும் பசியுடன் இருப்பதில்லை.”

இருப்பினும் கடந்த பத்தாண்டுகளில், பல குடோன்கள் தாராவியில் இருந்து மும்பையின் வடக்கு விளிம்புகளில் உள்ள நலசோபரா மற்றும் வசாய் போன்ற பிற மறுசுழற்சி மையங்களுக்கு, வளர்ந்து வரும் செலவுகள் மற்றும் மறுமேம்பாட்டின் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் நகர்கின்றன. ஒரு சதுர மைல் பரப்பளவைக் கொண்ட மத்திய மும்பை பகுதியான தாராவியை 'மேம்படுத்தும்' திட்டங்கள் பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகின்றன. அவை நடைமுறைப்படுத்தப்படும் போது, கழிவுத் துறை வணிகங்களையும், நீண்ட காலமாக இங்கு ஊதியம் பெறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் படிப்படியாக வெளியேற்றும். அவர்களின் நகர்ப்புற 'காவ்' பின்னர் அதிக உயரமான கட்டடங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan