“கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வர பார்த்தார் அவர். ஆனால் நடந்தது இது தான்“ என்கிறார் இறந்துபோன விவசாயி பாண்டுரங்கின் மனைவி இந்துபாய். 60 அடி ஆழத்துக்கு தோண்டிய பிறகும் பாண்டுரங் அத்சுல் மற்றும் அவரது பணியாளர்களால் நிலத்திலிருந்து “ஒரு குவளை தண்ணீரைக்  கூட” எடுக்கமுடியவில்லை.

பருத்திக்கும், சோயா பயிர்களுக்கும் தண்ணீர் இல்லாத தன் குடும்பத்தின் முடிவில்லாத துயரம் காரணமாக ஒரு கிணறு வெட்டுவதற்கு தீர்மானம் செய்த பாண்டுரங் 2012ம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கடனாய் பெற்றிருந்தார். சொந்தக்காரர்களிடமிருந்தும் சிறு சிறு தொகைகள் கடன் பெற்றார். கிணற்று நீரின் உதவியால் கிடைக்கும் என நம்பிய வளமான விளைச்சலால் அந்த கடன்களையெல்லாம் அடைக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், வறட்சி பாதித்த மராத்வாடா பகுதியின் ஓஸ்மானாபாத் மாவட்டத்தில் கலம்ப் தாலுகாவில் உள்ள போகாஜி கிராமத்தின் நிலம், தண்ணீரை வழங்கவில்லை. வாங்கிய கடன் குறித்த பதட்டம் மெல்ல மெல்ல பாண்டுரங்கினுள் கிணற்றை விட ஆழமாகியது. 2014-ல் ( இந்துபாய்க்கு எப்போது என்று சரியாக நினைவில்லை) பாண்டுரங் தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “நான் அப்போது களத்தில் இருந்தேன்,” “பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அங்கு ஓடி வந்து அவர் (கணவர்) தன்னை வீட்டுக்குள் பூட்டிக் கொண்டார்..” என சொன்னதாக நினைவுகூர்கிறார் இந்துபாய்.

பாண்டுரங்கின் இழப்பால் ஏற்பட்ட உணர்வுப்போராட்டமே இன்னும் முடியாத நிலையில், இந்துபாய்க்கு அடுத்த கட்ட போராட்டங்கள் தொடங்கி விட்டன: அரசாங்கத்தினுடைய (ஏட்டளவில் விவசாய தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட) விசித்திரமான விதிகள் படி  இந்துபாயின் கணவருடைய தற்கொலை “தகுதியான” ஒன்றாக ஏற்கப்படவில்லை. அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு பாண்டுரங் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இந்துபாய்க்கு இந்நேரம் ஒரு லட்சம் ரூபாய் - 30 ஆயிரம் ரொக்கமும், 70 ஆயிரம் வங்கி டெபாசிட்டும் - மாநில அரசிடமிருந்து இழப்பீடாக கிடைத்திருக்கும்.

Woman sitting on chair
PHOTO • Sharmila Joshi
Woman sitting on chair
PHOTO • Sharmila Joshi

போகாஜி கிராமத்தைச் சேர்ந்த இந்துபாய்க்கு அவரது கணவர் எவ்வளவு கடன் பட்டிருந்தார் என்று துல்லியமாக தெரியாது. (வலது) கணவரின் மரணத்துக்குப் பிறகு தரவுகளை சேகரிக்கும் மிகுந்த குழப்பமான பணியில் ஈடுபட்டிருக்கிறார் சங்கீதா கோரே.

தனது கணவரின் தற்கொலை இழப்பீட்டுக்கு  “தகுதியானதாக” ஏன் இல்லை என்று இந்துபாய்க்கு தெரியவில்லை. ஒரு மதியப்பொழுதில், தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரிடம் பேசியபோது “ நான் எல்லா அலுவலகங்களுக்கும் நடையாய்  நடந்து விட்டேன்”, “அவர்கள் எங்களுக்கு எதையும் சொல்லமாட்டார்கள்” என்று சொல்லும்போது அவரின் முகம் சுறுங்கியது. மராத்திய சமூகத்தை சேர்ந்த தனது 40களில் இருக்கும் இந்துபாய்க்கு, கைம்பெண்களுக்கு அரசு வழங்கும் அற்ப உதவித்தொகையான மாதம் ரூ.600 கூட கிடைக்கவில்லை.  “பக்கத்து கிராமத்தில் உள்ள அந்த ஆளிடம் (அநேகமாக ஒரு இடைத்தரகர்)நான் 3ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். தேவையான அனைத்து ஆவணங்களையும் தந்தேன். ஆனால் உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை” என்கிறார்.

இந்த சூழலில் அவர் தன் கணவரின் கடன்களை திருப்பி அடைக்க போராடிக் கொண்டிருக்கிறார். மொத்த கடன் தொகை ரூ.4 லட்சமாக இருக்கலாம் என்று கணிக்கிறார். விவசாய கணவர்களை இழந்த பெரும்பாலான பெண்களுக்கு சரியான கடன் தொகை எவ்வளவு, கடன் பெற்ற நிபந்தனைகள் என்னென்ன என்பது தெரிவதில்லை. இந்துபாய்க்கும் அது தெரியவில்லை. பல விவசாய குடும்பங்களில் தன் கணவனின் தற்கொலைக்கு பிறகு அவர் பெற்ற கடன் தொகை, மனைவிகளுக்கு கூடுதல் அதிர்ச்சியாக வருகிறது.

இந்துபாயின் இரு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் தாயுடன் சேர்ந்து தங்களுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் வேலை கிடைக்கும் போது ஒரு நாளுக்கு ரூ.150 வீதம் அனைவருமே விவசாயக் கூலிகளாக பிறர் நிலங்களிலும் வேலை செய்கிறார்கள். ”என் வீட்டை சமாளிப்பதே சிரமமாக இருக்கும் போது நான் எப்படி கடனை திருப்பி அடைப்பேன்” என்று கேட்கிறார் இந்துபாய். “ எனக்கு எந்த திட்டமும் தற்போது வேண்டாம். கடன் தள்ளுபடி மட்டும் தந்தால் போதும்” என்கிறார்.

கடன் சிக்கல், மீளாத் துயரம், சிக்கலான அரசு விதிகள் என்ற நெருக்கடியான வலைக்குள் தவித்தபோதும் விவசாய நிலத்தை தனது பெயரிலும் தனது மகன்கள் பெயரிலும் மாற்ற இந்துபாயால் முடிந்தது. ஆனால் சங்கீதா கோரே இன்னும் அதற்கே போராடிக் கொண்டிருக்கிறார்.

தனது கணவர் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிறகு, அரசு ஆவணங்களையும் ஆதாரங்களையும் திரட்டும் குழப்பமான சிக்கலான பணியில் சங்கீதா மூழ்கடிக்கப்பட்டார். கணவரின் ஆதார் அட்டை, அவரது இறப்பு சான்றிதழ், தன்னுடைய ஆதார் அட்டை, இருவரின் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் என பட்டியல் நீண்டது.  கணவனை இழந்த பெண்களுக்கான அரசின் உதவித் தொகையை பெறவும் , தங்களது ஒரு-அறை தகர வீட்டை தன் பெயரில் மாற்றி, சற்று நிவாரணம் பெறவும் இந்த ஆவணங்களின் பல்வேறு கலவைகள் எண்ணற்ற அரசு துறைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

Women raising their fists in protest
PHOTO • Sharmila Joshi

நவம்பர் 21, 2018 அன்று பெரும்பாலும் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த (சிலர் விதர்பாவிலிருந்தும் வந்திருந்தார்கள்) சுமார் 80-100 பெண்கள் தெற்கு மும்பையிலிருந்த ஆசாத் மைதானில் குழுமியிருந்தார்கள். விவசாயிகளாகவும் கணவரை இழந்தவர்களாகவும் அவர்களது போராட்டங்களை பற்றி சொல்லவும் கோரிக்கைகளை வலியுறுத்தவும் கூடியிருந்தார்கள்.

ஓஸ்மானாபாத் மாவட்டம்- லோஹாரா தாலுகாவில்  உள்ள மார்தி என்ற அவர்களது கிராமத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள துல்ஜாபூர் நகரத்தில் ஒரு டிபன் கடையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார் சங்கீதாவின் கணவர் பிரு. தன்னிடம் மாதம் 6ஆயிரம் அல்லது 7ஆயிரம் ரூபாய் குடும்பத்தை நடத்த கொடுத்ததாக சங்கீதா கூறுகிறார். ஆனால் பிருவின் சொந்த செலவுகள்- பெரும்பாலும் மதுபானத்துக்காக- வருமானத்தை மிஞ்சியதாக இருந்தது. எனவே அருகில் உள்ள கடைக்காரர்கள், பக்கத்து வீட்டுகாரர்கள், சொந்தக்காரர்களிடம் சிறு சிறு தொகைகளாக தொடர்ந்து கடன் வாங்கி வந்தார் பிரு. ஆண்டு கணக்கில் வாங்கப்பட்ட கடன் தற்போது 2 லட்சம் ரூபாயாக பூதாகாரமாக வளர்ந்து நிற்பதாக, தங்கர் சமூகத்தை சேர்ந்த 33 வயது சங்கீதா கூறுகிறார்.

“எங்களுக்கு திருமணமாகி முதல் பத்து ஆண்டுகள் எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. ஆனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலத்தின் பங்கை  அவரது அண்ணன் தர மறுத்ததால் அவரது மனதில் ஒரு கோபம் வளார்ந்து கொண்டே வந்தது” என்று நினைவு கூறுகிறார் சங்கீதா. சங்கீதாவின் மாமனாருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை மூன்று மகன்களுக்கும் தலா இரண்டு ஏக்கர் என விட்டுச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக பிரு லோஹாரா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு மெல்ல நீதித்துறையின் படிகட்டுகளில் ஊர்ந்துகொண்டுள்ளது.

பிருவின் கோபம் வளர மற்றொரு காரணம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். விருப்பப்பட்ட ஆண் பிள்ளை ஐந்தாவதாக பிறந்தான். அவர்களின் மூத்த மகளுக்கு தற்போது 16 வயது, மகனுக்கு எட்டு வயது. “அவர் என்னை அடிக்க தொடங்கினார்” என்று நினைவுகூறுகிறார் சங்கீதா. “வாங்கிய கடன்களை பற்றி கேட்டால், ‘ கடன் பெற்றது நான், அதை திரும்ப செலுத்த போவது நான்’ என்று கூறுவார். அதன் பிறகு நான் அமைதியாகிவிடுவேன்” என்கிறார்.

Women smiling
PHOTO • Sharmila Joshi

மகராஷ்டிராவில் தற்கொலையால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்திருந்த பெண்களின் ஷோக்சபாவில் சில நகைச்சுவைகளும் அரங்கேறின

கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி 34வயதான பிரு தனது வீட்டில் மாவு சேமித்து வைக்க பயன்படுத்திவந்த அலுமினிய கலனின் மீது ஏறி தகர மேற்கூரைக்கு கீழேயுள்ள இரும்பு உத்தரத்தில் கயிற்றை போட்டு அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 11 மணியளவில் இருக்கும். “ வீட்டில் யாரும் இல்லை. அவர் கதவை உட்பக்கமாக பூட்டியிருந்தார். எனது மூத்த மகள் ரூபாலி வீட்டுக்கு வந்தபோது சன்னல் இடுக்கில் அவள் தந்தையை பார்த்தாள்...”

நான் கட்டுவேன் என்று பிரு கூறிய கடன்கள்- இன்னும் கட்டப்படாமல் உள்ளன. அவளது கேள்விகளுக்கு அவனது கோபமான பதில்கள் ஒரு வேளை தனக்குள்ளேயே இருக்கும் பயத்தையும் பதட்டத்தையும் மறைக்கத் தான் போலும். இப்போது மொத்த கடன் சுமையும் சங்கீதாவின் தலைமேலிருந்தது. ”கடன் கொடுத்தவர்கள் என்னை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்… இவையெல்லாம் வட்டியில்லா கடன்கள். அது கொஞ்சம் நிம்மதி. இல்லையென்றால் கடன் தொகை பெருகிக் கொண்டே இருந்திருக்கும்”

இந்துபாய்க்கும் சங்கீதாவுக்கும் நேர்ந்தது போல, மகாராஷ்ட்ரா முழுவதுமே, விவசாய குடும்பத்தில் ஒரு ஆண் செய்யும் தற்கொலையின் விளைவுகள் மனைவிக்கு அதிர்ச்சியும் துயரத்தையும் தருவத்தை தாண்டி நீள்கின்றன. கணவனை இழந்த பெண்களும் எப்போதும் விவசாயிகளாக தான் உள்ளனர். விவசாயத்தில் பெரும் பகுதி வேலை ( விதை விதைத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல், கதிரடித்தல், நிலத்திலிருந்து வீட்டுக்கு பயிரை கொண்டு செல்லுதல், உணவு பதப்படுத்துதல், பண்ணை மற்றும் பல வேலைகள்) பெண்களால் செய்யப்படுகிறது. கணவனை இழந்த பிறகு தங்களுடைய விவசாய வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும், கூடுதலாக கணவரின் விவசாய பணிகளையும் செய்ய வேண்டும். அதன் பின் அரசு ஆவணங்களோடு பல ஆண்டுகள் போராட வேண்டும், உடல் நலக்குறைவு, பிள்ளைகளின் படி என பல நிலைகளில் போராட்டம்.

இந்த போராட்டம் பத்தாயிரக்கணக்கான வீடுகளில் நடைபெறுகின்றன.1995 முதல் 2015 வரை தேசிய குற்ற ஆவண  காப்பக்க பதிவின் படி மகாராஷ்ட்ராவில் 65 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவற்றில் 90% ஆண்கள். அதுவும் மராத்வாடா, விதர்பா பகுதிகளில் தான் அதிகம். இந்த எண்ணிக்கைகளில் பிரு போன்றவர்களின்- அதாவது விவசாய குடும்பத்தில் விவசாயம் சாராத வேலை பார்ப்பவர்களின் - தற்கொலைகள் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

இந்த வாரம் நவம்பர் 21ம் தேதி, தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில், மராத்வாடா பகுதியிலிருந்து 80 முதல் 100 பெண்கள் , விதர்பா பகுதியிலிருந்து சில பெண்கள்  “ஷோக்சபா” என்ற அஞ்சலிக் கூட்டத்துக்காக குழுமியிருந்தனர் . கணவர்களை இழந்த பெண்களாகவும் விவசாயிகளாகவும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த அங்கே கூடியிருந்தனர். மகிலா கிசான் அதிகார் மஞ்ச் (பெண் விவசாயிகள் உரிமைக்கான சங்கம் - சுறுக்கமாக ‘மகாம்’) என்ற அமைப்பு இந்த பெண்களை ஒருங்கிணைத்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பெண் விவசாயிகளின் பிரச்னைகளுக்காக ‘மகாம்’ பணியாற்றுகிறது.

”எங்கள் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிப்பது தான் “ என  அன்று மதியம் செய்தியாளர் சந்திப்பில் விளக்குகிறார் ‘மகாம்’ அமைப்பைச் சேர்ந்த சீமா குல்கர்னி. மேலும், ஒரு  ஆண் விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் விளைவுகள் மீது கவனம் செலுத்துவது (அவர்களுடைய பணி).  “ அவள் அதற்கு பிறகு எப்படி வாழ்கிறாள்? அவளது குழந்தைகள் எப்படி சமாளிக்கிறார்கள்? இது குறித்து எல்லாம் விவாதிக்கப்படுவதும் இல்லை, இது குறித்தும் வெளியே தெரிவதும் இல்லை”என்கிறார்.

Women standing under empty canopy
PHOTO • Sharmila Joshi

மாலை தங்களது பைகளை எடுத்துக்கொண்டு ரயிலையோ பேருந்தையோ பிடித்து மீண்டும் தங்கள் நிலத்திற்கு, விவசாயிகளாகவும் கணவரை இழந்தவர்களாகவும் வாழும் வாழ்க்கைக்கு திரும்பினார்கள் பெண்கள்

2018ம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மகாம் மற்றும் அதன் தொடர்புடைய 20 அமைப்புகள் இணைந்து மராத்வாடா மற்றும் விதர்பா பகுதியில் 11 மாவட்டங்களில் உள்ள 505 பெண்களிடம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் அவர்கள் கண்டறிந்த சில விஷயங்கள்:

34% பெண்களுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் ஒப்புதலாகியுள்ளது. 29% பெண்களால் நிலத்தை தங்கள் பெயரில் மாற்றி பெற முடியவில்லை. 11 % பெண்களுக்கு பட்டா மாற்றம் எந்த நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை. 43% பெண்களால் வீட்டை தங்கள் பெயரில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆய்வு நடத்தப்பட்ட வீடுகளில் 50% பெண்களுக்கு மட்டும் தான் தனிப்பட்ட குடும்ப அட்டைகள் இருந்தன. 355 குழந்தைகளில் 12 முதல் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே பள்ளிக் கட்டணக் குறைப்பு அல்லது பொருளுதவியாக புத்தகங்கள், சீருடைகள்  கிடைக்கின்றன.

2018 ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மகாம் அமைப்பும் மகாராஷ்ட்ரா மாநில பெண்கள் ஆணையமும் நாக்பூர் மற்றும் அவுரங்காபாத் –ல் நடத்திய கூட்டங்களில் பெண்களிடம் பேசிய போது அவர்கள் விவசாய தற்கொலைக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை போதாது என தெரிவித்தனர். 2015ம் ஆண்டு ஆந்திர பிரதேச அரசு இழப்பீட்டுத் தொகையை 3.5 லட்சமாக உயர்த்தியது. இதில் ரொக்கமாக தரப்படும் 30ஆயிரம் பணத்தை பல பெண்கள் லஞ்சமாக கொடுக்க நிர்பந்திக்கப்பட்டனர்.

மகாராஷ்ட்ராவின் தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள பெண் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த கூட்டங்களின் அறிக்கையில் :   “கடன் தள்ளுபடிக்கான பட்டியலில் (அரசு அறிவித்துள்ளது) தங்கள் பெயர்கள் இல்லை என தற்கொலையால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள பல பெண்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே வாங்கிய கடன்கள் பாக்கி உள்ள நிலையில் வங்கியிலிருந்து புதிய கடன்களையும் பெண்களால் பெற முடியவில்லை. எனவே அவர்கள் அதிக வட்டிக்கு கடன் தரும் கந்துவட்டிக்காரர்களை நோக்கி செல்கிறார்கள். இது அவர்கள்  மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையை ஏற்படுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.

Lone woman sitting under empty pandal
PHOTO • Sharmila Joshi
Close-up of old woman
PHOTO • Sharmila Joshi

(இடது) வார்த்தா மாவட்டம் சோர்தா கிராமத்தைச் சேர்ந்த மந்தா அலொனி கொடுமைகளை எதிர்ப்பது பற்றி பேசுகிறார். ஆனால் இந்துபாய் (வலது) பல வருடங்களாக கணவரை இழந்த பெண்ணாகவும் கைவிடப்பட்ட விவசாயியாகவும் இருப்பதால் வீழ்த்தப்பட்டவர் போலவே பேசுகிறார்

கடுமையான வேலை வாய்ப்பின்மையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார வசதிகளும் கிடைப்பதில்லை. சில நேரங்களில் அப்புறப்படுத்தவும்படுகின்றனர். விவசாய கணவர்களை இழந்த பெண்கள்  திட்ட உதவி அல்லது இழப்பீடு பெற முயலும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என அந்த அறிக்கை கூறுகிறது. வீட்டுக்குள் நடைபெறும் வன்முறை குறித்தும் அந்த அறிக்கை பேசுகிறது.

இந்த துன்புறுத்தல்கள் தற்கொலைக்கு முன்பும் நடைபெறலாம், பிறகும் நடைபெறலாம். ஆசாத் மைதானத்தில் உள்ள பல பெண்களை போல தன் கணவனிடம் அவ்வபோது கிடைக்கும் அடி உதைகளை சங்கீதா புறம்தள்ளுகிறார். ஆனால் கணவனை இழந்தவர்களாக தாங்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றி வலியுடனும் வேதனையுடனும் பெண்கள் பேசுகின்றனர். “நான் தனியாக இருப்பது குறித்து அவமதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சில ஆண்கள் என்னிடம் நான் அவர்களுடன் “நண்பர்களாக” இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். நான் சுயமரியாதையுடனும் தன்மானத்துடன் இருக்க விரும்புகிறேன் என அனைவரிடமும் கூறுகிறேன்”

“ எங்களை தவறான நோக்கத்துடன் பார்ப்பது வயது வந்த ஆண்கள் மட்டுமல்ல. இளைஞர்களும் அவ்வாறு பார்க்கின்றனர்” என்கிறார் வர்தா மாவட்டத்தில் அர்வி தாலுகாவில் உள்ள சோர்டா கிராமத்தைச் சேர்ந்த 38 வயது மண்டா அலோனி. மண்டாவின் கணவரை நொண்ட வைத்த ஒரு ட்ராக்டர் விபத்து அவர்களின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் மருத்துவ செலவையும் தந்தது. தனது நொண்டிக் காலுடன் தன்னால் வேலைகள் எதுவும் பெரிதாக செய்ய முடியவில்லை என்ற துக்கத்தில் மது அருந்தி வர்தா நதியில் 2013ம் ஆண்டு ஹோலி பண்டிகை தினத்தன்று குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மண்டா தற்போது அவர்களுடைய நிலத்தில் பருத்தி மற்றும் துவரை பயிர் செய்கிறார். வேலை கிடைக்கும் போது தினம் ரூ.100 அல்லது ரூ.150க்கு விவசாயக் கூலியாகவும் பணிபுரிந்து வருகிறார். அந்த பகுதியில் விவசாயிகள் சங்கத்தில் மண்டா தன்னை இணைத்துள்ளார். அந்த சங்கம் அவரை கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கூட்டிச் செல்கிறது. ” சிலர் நான் எங்கு செல்கிறேன் என்று வியந்து கொண்டிருக்கின்றனர். நான் பிற ஆண்களுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர்” என்கிறார். “ எனக்கு இது பழக்கமாகிவிட்டது. நான் தனியாக இருந்து என் இரு பிள்ளைகளையும் (அவளது மகள் 16 வயது, மகனுக்கு 15 வயது) வளர்க்க வேண்டும் என்றால் நான் இதையெல்லாம் எதிர்கொண்டு மீள வேண்டும்”

ஆனால் விவசாய கைம்பெண்ணாகவும், வறுமையில் வாடும் விவசாயியாகவும் வாழும் இந்துபாய் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டதாக தெரிகிறது “ எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை, தண்ணீர் கிடைக்கவில்லை (அவளது கணவர் தோண்டிய கிணற்றில்), வேலை இல்லை, எதுவுமே இல்லை. நாங்கள் எப்படி வாழ்வது? நாங்கள் எப்படி எங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்வது? எப்படி சமாளிப்போம்” என கேட்கிறார் இந்துபாய். (ஆனால் அவர் போராடுகிறார்) கடந்த பல ஆண்டுகளில் பல விவசாய பொதுக்கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளிலும் இந்துபாய் பங்கெடுத்துள்ளார். ஒவ்வொருமுறையும், நம்பிக்கையுடன் “நாக்பூர், அவுரங்காபாத், கலம்ப் மற்றும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன்” என்கிறார் இந்துபாய். “ ஆனால், எதுவும் நடக்கவில்லை. இப்போது நான் எங்கு செல்லட்டும்? யாரை கேட்க வேண்டும்?”

தமிழில்: வி.சாரதா

Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : V. Saradha

V Saradha is a television journalised based out of Chennai with a keen interest in politics and human rights.

Other stories by V. Saradha