தாக் மேளச் சத்தம் அகர்தாலாவில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அக்டோபர் 11ம் தேதி துர்கா பூஜை வருகிறது. அதைக் கொண்டாடுவதற்கான தயாரிப்புகள் பல வாரங்களுக்கு முன்பே ஒவ்வொரு வருடமும் தொடங்கி விடுகிறது. பந்தல்கள் கட்டப்படும். சிலைகள் செய்து முடிக்கப்படும். குடும்பங்கள் புதுத் துணிகள் வாங்கும்.

தாக் என்பது பீப்பாய் வடிவத்தில் இருக்கும் மேள வாத்தியம் ஆகும். கழுத்திலிருந்து தொங்க விடப்பட்டோ அருகே வைத்துக் கொண்டே குச்சிகளை வைத்து அந்த வாத்தியம் வாசிக்கப்படுவது இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கியப் பகுதி.

தாக் வாசித்தல் ஒரு குறிப்பிட்டக் காலத்துக்கான வேலை ஆகும். ஒவ்வொரு வருட ஐந்து நாள் பூஜையின்போதும் இறுதி வாத்திய வாசிப்பு லஷ்மி பூஜை அன்று  நடக்கும். இந்த வருடம் அக்டோபர் 20ம் தேதி லஷ்மி பூஜை வருகிறது. சில தாகி வாத்தியக்காரர்களுக்கு தீபாவளி காலத்திலும் வேலை கிடைக்கும். ஆனால் துர்கா பூஜையின்போதுதான் தாக்குக்கு அகர்தலாவிலும் திரிபுரா மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அதிக தேவை எழும்.

தாக்கிகளை மேளம் வாசிக்க பந்தல் கமிட்டிகளும் கூப்பிடுவதுண்டு. குடும்பங்களும் கூப்பிடுவதுண்டு. சில நேரங்களில், வேலைக்கு அமர்த்துவதற்கு முன்னாலேயே அவர்களை வாசித்துக் காட்டச் சொல்லப்படுவதுண்டு. அவர்களில் பலர் மூத்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அக்கலையை பயின்றிருப்பர். “மூத்தவர்களுடன் சேர்ந்து நான் வாசிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் 45 வயது இந்திராஜித் ரிஷிதாஸ். “கஷியை (சிறு குச்சியால் தட்டி வாசிக்கப்படும் உலோகத் தட்டு போன்ற வாத்தியம்)  நான் வாசிக்கத் தொடங்கினேன். பிறகு ‘தோல்’ வாத்தியமும் ‘தாக்’ வாத்தியமும் கற்று வாசிக்கத் தொடங்கினேன்.” (அவரும் ரிஷிதாஸ், ரவிதாஸ் முதலியோரின் குடும்பங்களும் முச்சி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள்.)

அகர்தாலாவின் பல தாகிகளை போல, இந்திரஜித்தும் வருடத்தின் பிற மாதங்களில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் வேலையைச் செய்கிறார். சில சமயங்களில் பிறரைப் போலவே அவரும் திருமணம் மற்றும் பிற கொண்டாட்டங்களில் வாசிக்கப்படும் ‘பேண்ட் வாத்தியக் குழு’வில் இணைந்து வாசிக்கிறார். இந்த வேலைகள் மட்டுமின்றி எலக்ட்ரீசியன் அல்லது ப்ளம்பர் முதலிய தினக்கூலி வேலைகளும் செய்கின்றனர். சிலர் காய்கறி விற்கின்றனர். சிலர் அருகே இருக்கும் கிராமங்களில் விவசாயிகளாக இருக்கின்றனர்.

PHOTO • Sayandeep Roy

இந்திரஜித் ரிஷிதாஸ் வேலைக்குக் கிளம்புகிறார். பூஜைக் கொண்டாட்டங்கள் தொடங்கும் வரை பல தாகிக்கள் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் வேலையைச் செய்கின்றனர்

சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவராக இந்திரஜித் ஒருநாளுக்கு 500 ரூபாய் ஈட்டுகிறார். “வருமானத்துக்கு ஏதேனும் செய்தாக வேண்டும். சைக்கிள் ரிக்‌ஷா வேலை எளிதாகக் கிடைக்கிறது,” என்கிறார் அவர். “நல்ல வேலை கிடைக்கக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை.” துர்கா பூஜை காலத்தில் ஒரு தாகியாக அவர் ஈட்டும் வருமானம் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி அவர் ஈட்டும் ஒரு மாத வருமானத்துக்கும் அதிகம். 2021ம் ஆண்டில் பந்தல் கமிட்டியை தொடர்பு கொண்டு, 15,000 ரூபாய்க்கு வாத்தியம் வாசிக்கும் வேலையை வாங்கியிருக்கிறார். சிலர் இன்னும் குறைந்த தொகைக்கு பேரம் பேசுவார்கள்

ஐந்து பூஜை நாட்களுக்கு என அழைத்து வரப்படும் தாகிகள் (அகர்தலாவில் ஆண்கள்தான் வாத்தியம் வாசிக்கின்றனர்)  பந்தல்களில் இருக்க வேண்டும் என்கிறார் இந்திரஜித். “புரோகிதர் சொல்லும்போது நாங்கள் அங்கு இருக்க வேண்டும். காலை பூஜையின்போது மூன்று மணி நேரங்களும் மாலையில் 3-4 மணி நேரங்களும் நாங்கள் வாசிப்போம்.”

’பேண்ட் வாத்தியக் குழு’க்கள் எப்போதேனும் ஏற்பாடு செய்யப்படும். “நாங்கள் பொதுவாக ஆறு பேர் கொண்ட குழுவாக பணிபுரிகிறோம். குறிப்பாக திருமண நிகழ்வுகளில் வாசிக்கிறோம். வேலை பார்க்கும் நாட்களின் பொறுத்து நாங்கள் கட்டணம் விதிக்கிறோம். சிலர் 1-2 நாட்கள் வேலை தருவார்கள். சிலர் 6-7 நாட்களுக்கு வேலை தருவார்கள்,” என்கிறார் இந்திரஜித். இந்த வகையில் குழுவுக்கு மொத்தமாக ஒருநாளில் 5000-6000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கடந்த வருடத்தில் கோவிட் தொற்றினால், பலர் பூஜை விழாக்களை ரத்து செய்து விட்டனர். தாகிகள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் வேலை மற்றும் பிற வேலைகளில் கிட்டும் வருமானத்தைக் கொண்டே வாழ்க்கை ஓட்ட வேண்டியிருந்தது. சிலருக்கு கடைசி நேரத்தில் தாக் வாசிக்கும் வேலைகள் கிடைத்தன. (இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் எல்லா புகைப்படங்களும் கடந்த வருடம் அக்டோபர் 2020-ல் எடுத்தவை.)

லஷ்மி பூஜைதான் தாகி வேலைக்கான இறுதிநாள். அந்த நாளின் மாலை அவர்கள் அகர்தலாவின் தெருக்களில் சென்று வாசிப்பார்கள். அவர்களை 5-10 நிமிடங்களுக்கு தங்களின் வீடுகளில் வாசிக்க பல குடும்பங்கள் அழைக்கும். ஊதியமாக தாகிளுக்கு 20லிருந்து-50 ரூபாய் ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கும். பாரம்பரியத்தை விட்டு விடாமலிருக்க இதைச் செய்வதாக பலர் கூறுகின்றனர்.

PHOTO • Sayandeep Roy

துர்கா பூஜைக்கு 10 நாட்களுக்கு முன்பே தயாரிப்புகள் தொடங்கி விடும். தாக்குகள் வெளியே எடுக்கப்பட்டு, கயிறுகள் சுத்தப்படுத்தப்பட்டு,கேட்க விரும்பும் இசைக்கு ஏற்ப இறுக்கப்படும். கயிறுகள் விலங்குகளின் தோலால் செய்யப்பட்டு சில காலத்திலேயே உறுதியாகி விடுமென்பதால் அலுப்பு தரும் வேலை இது. இந்த வேலையை இரண்டு பேர் செய்வார்கள். “நல்ல வலு வேண்டும். தனியாக செய்வது மிகவும் கடினம்,” என்கிறார் இந்திரஜித் ரிஷிதாஸ். “தாக்கின் ஒலித்தரம் சார்ந்த விஷயம் என்பதால் இது மிகவும் முக்கியமான விஷயம்”


PHOTO • Sayandeep Roy

சுத்தப்படுத்தி ஒலியை சோதித்தபிறகு தாக்குகள் சுத்தமான துணியால் போர்த்தப்படுகின்றன. மீண்டும் அலமாரியில் வைக்கப்பட்டு பூஜை சமயத்தில் எடுக்கப்படுகின்றன


PHOTO • Sayandeep Roy

நகரத்தில் இருக்கும் பலரும் கொண்டாடத் தயாராகும்போது இரண்டு மேளக்கார்கள் மட்டும் துர்கா சிலை வாங்கச் செல்லும் வழியில் தாக்கை வாசிக்கின்றனர். சிலையை கொண்டு வரும்போது, பந்தலில் அதை வைக்கும்போது பூஜை வைக்கும்போதும் ஊர்வலத்தின்போதும் என பல பூஜைச் சடங்குகளின் போது தாக் வாசிக்கப்படுகிறது


PHOTO • Sayandeep Roy

வேலைக்கு அமர்த்தப்படுவதற்காக ஒரு தாகி மேளக்காரர் நம்பிக்கையுடன் மத்திய அகர்தாலாவில் காத்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் அருகாமை கிராமங்களின் தாகிகள் அனைவரும் துர்கா பூஜை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுரா தலைநகரில் குறிப்பிட்ட இடங்களில் ஒன்று கூடுவார்கள். 2020ம் ஆண்டில் கோவிட் காரணமாக சிலருக்கு மட்டும்தான் வேலை கிடைத்தது


PHOTO • Sayandeep Roy

கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் பயணித்து வந்திருக்கும் பாபுல் ரவிதாஸ் என்னும் தாகி காத்திருந்ததில் அலுப்பாகி புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்


PHOTO • Sayandeep Roy

பட்டால் பேருந்து நிலையத்தில் ஒரு தாகி ஊர் திரும்ப ஆட்டோ ஏறுகிறார். வேலைக்கு அமர்த்தப்படுவதற்காக பல கிராமங்களிலிருந்து துர்கா பூஜைக்கு இரு நாட்களுக்கு முன்னமே தாகிகள் கூடும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்தக் குழு, நாள் முழுவதும் காத்திருந்துவிட்டு 9 மணிக்கு கிளம்ப முடிவெடுத்திருக்கிறது


யாருமற்ற விழாப் பகுதியில் வாசிக்கின்றனர். அகர்தாலாவின் பூஜை பந்தல்கள் இந்தளவுக்கு இதற்கு முன் காலியாக இருந்ததில்லை


PHOTO • Sayandeep Roy

கடந்த வருடம் துர்கா பூஜை தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன் ஒரு தாகி தன் தாக்கை ஒரு வாத்தியக் கடையில் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்


PHOTO • Sayandeep Roy

தாக்கின் சத்தத்தை அதிகமாக்க ஒரு ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது. தாக்கின் சத்தத்துக்கு ஒலிபெருக்கி தேவையில்லை. அதன் இயல்பான ஒலியே நீண்ட தூரங்களுக்கு எதிரொலிக்கும். 40 வருடங்களுக்கு மேல் தாக் வாசித்துக் கொண்டிருக்கும் மோண்ட்டு ரிஷிதாஸ் (புகைப்படத்தில் இல்லை)  தாக்கிகளுக்கு அதிக வேலை கிடைக்காமலிருக்க புதிய தொழில்நுட்பமும் ஒரு காரணம் என்கிறார். “இப்போதெல்லாம் செல்பேசியில் ஒரு பொத்தானை அழுத்தினாலே தாக்கின் இசை வந்து விடுகிறது”


PHOTO • Sayandeep Roy

2020ல் வேலை கிடைத்தோருக்கும் தனிநபர், குடும்பம் அல்லது க்ளப் என பல தொடர்புகளை நீண்ட காலம் கொண்டிருந்ததால்தான் அந்த வேலை கிடைத்திருந்தது. சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநராக அறியப்பட்டவர் இங்கு தன்னுடைய தாக்குடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு க்ளப் உறுப்பினர் தெரியும். அப்படித்தான் அவருக்கு வேலை கிடைத்தது


PHOTO • Sayandeep Roy

கேஷம் ரிஷிதாஸ் வருடம் முழுவதும் ரிக்‌ஷா ஓட்டுவார். பூஜை காலத்திலும் பிற சில நேரங்களிலும் தாக் வாசிக்க மகனுடன் செல்வார். வேலைக்கு ரிக்‌ஷாவில்தான் செல்வார்


PHOTO • Sayandeep Roy

பூஜை விழாவின் இறுதி நாளில் கரைப்பதற்காக துர்க்கை சிலையைக் கொண்டு செல்கிறார்கள். தாக் வாசிக்கப்படும் நிகழ்வுகளிலேயே முக்கியமான நிகழ்வு இது


PHOTO • Sayandeep Roy

பூஜை முடிந்தபிறகு ஒரு காளி கோவிலில் தீபத்தை ஆராதித்துக் கொள்கிறார் பரிமள் ரிஷிதாஸ். ‘இந்த வருடம் (2021) எனக்கு 11,000 ரூபாய் கொடுக்கிறார்கள். போன வருடத்தை விட 500 ரூபாய் அதிகம்,’ என்கிறார் அவர். ‘எனக்கு 58 வயதாகிறது. 18, 19 வயதிலிருந்து நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்”


PHOTO • Sayandeep Roy

சில தாகிகள் லஷ்மி பூஜை கொண்டாடப்படும் மாலை நேரங்களில் தாக்குகளை வாசித்துக் கொண்டு தெருக்களில் செல்வார்கள். சத்தம் கேட்கும் மக்கள் அவர்களை அழைத்து தம் வீடுகளில் வாசிக்கக் கேட்பார்கள். தாகிகளாக அவர்கள் வருமானம் ஈட்டும் கடைசி நாளாக இது இருக்கும்


PHOTO • Sayandeep Roy

ஒவ்வொரு வீடாக சென்று 5-10 நிமிடங்கள் தாகிகள் வாத்தியம் வாசிக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் 20லிருந்து 50 ரூபாய் கிடைக்கும்


PHOTO • Sayandeep Roy

லஷ்மி பூஜை நாளின் இரவில் 9 மணிக்கு ராஜீவ் ரிஷிதாஸ் வீடு திரும்புகிறார். “இதை (வீடு வீடாக சென்று வாசிப்பதை) நான் விரும்பவில்லை,” என்கிறார் அவர். “கொஞ்சமேனும் பணம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் என் குடும்பம் இதையும் செய்யச் சொல்லியிருக்கிறது”

PHOTO • Sayandeep Roy

பூஜை காலம் முடிந்த பிறகு பெரும்பாலான தாகிகள் வழக்கமான வேலைகளுக்கு திரும்பி விடுகின்றனர். பயணிகளுக்காக ரிக்‌ஷாக்களில் அவர்கள் வருடம் முழுக்க காத்திருக்கும் இடங்களில் ஒன்று துர்கா சவ்முகானி சந்திப்பு ஆகும்


தமிழில்: ராஜசங்கீதன்

Sayandeep Roy

Sayandeep Roy is a freelance photographer from Agartala, Tripura. He works on stories about culture, society and adventure.

Other stories by Sayandeep Roy
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan