2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.

"உங்கள் கிராமத்தில் மழை பெய்கிறதா?" என்று குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த காராபாய் ஆல் தொலைபேசியில் விசாரித்து கொண்டிருந்தார். "இங்கு மழையே இல்லை". கடைசியாக இந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் மழை பெய்தது. "ஒருவேளை மழை பெய்தால், நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்வோம்", என்று அவர் பாதி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

900 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள புனே நகரில் உள்ள ஒரு விவசாயி அல்லாதவரிடம் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை, ஏனெனில் அவரது கவலை மிகவும் பெரியதாக இருக்கிறது. காராபாயின் கவனம் முழுவதும் மழைக்காலத்தில் பெய்யும் மழையை ஒட்டியே இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் அதை மையப்படுத்தியே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்க்கை ஓட்டம் நடக்கிறது.

75 வயதான இந்த மேய்ப்பர் தனது மகன், மருமகள், இரண்டு பேரன்கள், ஒரு சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வருடாந்திர புலம்பெயர்தலுக்காக தனது கிராமத்தை விட்டு வெளியேறி 12 மாதங்களுக்கும் மேலாகி விட்டது. 14 உறுப்பினர்களைக் கொண்ட அந்த குழு, 300 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், மூன்று ஒட்டகங்கள் மற்றும் அவர்கள் மந்தையின் இரவு பாதுகாவலனான - விச்சியோ என்ற நாயுடன், நகர்கின்றனர். இந்த 12 மாதங்களில் அவர்கள் கட்ச், சுரேந்திராநகர், பதான் மற்றும் பனஸ்கந்தா ஆகிய மாவட்டங்களில் 800 கிலோ மீட்டருக்கும் மேல் - தங்கள் விலங்குகளுடன் - பயணம் செய்துள்ளனர்.

காராபாய் ஆலின்  குடும்பம் ஆண்டு தோறும் பயணிக்கும் குஜராத்தின் மூன்று பிராந்தியங்களைச் சேர்ந்த 800 கிலோ மீட்டர் பாதை. ஆதாரம்: கூகுள் வரைபடம்.

காராபாயின் மனைவி தோசிபாய் மற்றும் அவர்களது பேரன்களின் இளையவரான பள்ளி செல்லும் குழந்தை ஆகியோர் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராப்பர் தாலுகாவில் ஜதவாடா கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிலேயே தங்கி விட்டனர். இந்தக் குலம் ரபரி சமூகத்தைச் சேர்ந்தது (இம்மாவட்டத்தில் இச்சமூகம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளது), இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக எட்டு முதல் பத்து மாதங்கள் வரை தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். ஒரு சாதாரண ஆண்டில் இந்த நாடோடி மேய்ப்பர்கள் தீபாவளி (அக்டோபர் - நவம்பர்) முடிந்தவுடன் உடனே புறப்பட்டு அடுத்த பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்பு திரும்பிவிடுவார்.

இதன் பொருள் அவர்கள் மழைக் காலத்தைத் தவிர ஆண்டு முழுவதும் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதே. அவர்கள் திரும்பி வரும்போது கூட, சில குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளியே தங்கி, ஜதவாடாவின் புறநகரில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர். விலங்குகளால் கிராமத்திற்குள் இருக்க முடியாது, அவற்றுக்கு போதுமான இடமும் மேய்ச்சல் நிலமும் தேவை.

"எங்களை இங்கிருந்து விரட்ட கிராமத்துப் பட்டேல் உங்களை அனுப்பியிருப்பதாக நான் நினைத்தேன்". இப்படித் தான் காராபாய், மார்ச் மாத தொடக்கத்தில், சுரேந்திராநகர் மாவட்டத்தின் கவானா கிராமத்தில் உள்ள ஒரு மேய்ச்சல் நிலத்தில், நாங்கள் அவரை தேடி கண்டுபிடித்து சந்தித்தபோது, எங்களை வரவேற்றார். இந்த இடம் அகமதாபாத் நகரத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

அவரது சந்தேகங்களுக்கும் ஒரு அடிப்படை இருந்தது. நீடித்த வறட்சி வந்து, காலங்கள் கடுமையாக இருக்கும் போது நில உரிமையாளர்கள், மேய்ப்பர்கள் மற்றும் அவர்களின் மந்தைகளை தங்களது நிலத்தில் இருந்து விரட்டுகிறார்கள் - அவர்கள் புல் மற்றும் பயிர் தாள்களை தங்கள் சொந்த கால்நடைகளுக்காக காப்பாற்ற விரும்புகின்றனர்.

"துஷ்கால் (வறட்சி) இந்த முறை மிகவும் மோசமானதாக இருக்கிறது", என்று காராபாய் எங்களிடம் கூறினார். "அதனால் தான் கடந்த ஆண்டு அகாத் மாதத்தில் (ஜூன்- ஜூலையில்) நாங்கள் ராப்பரில் இருந்து புறப்பட்டோம், ஏனெனில் சுத்தமாக மழை பெய்யவே இல்லை". அவர்களின் சொந்த வறண்ட மாவட்டத்தின் வறட்சியே அவர்களின் வருடாந்திர புலம்பெயர்தலை சீக்கிரம் துவங்குவதற்கு கட்டாயப்படுத்தியது.

"பருவ மழை துவங்கும் வரை நாங்கள் எங்கள் செம்மறி ஆடுகளுடன் சுற்றித் திரிவோம். மழை பெய்யவில்லை என்றால், நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம்! இதுவே ஒரு மால்தாரியின் வாழ்க்கை", என்று அவர் எங்களிடம் கூறினார். மால்தாரி என்ற சொல் குஜராத்தி வார்த்தைகளான மால் (கால்நடைகள்) மற்றும் தாரி (பாதுகாவலர்) என்ற சொற்களில் இருந்து உருவானது.

குஜராத்தின் வறண்ட மற்றும் மித வறண்ட பிராந்தியங்களில் 2018 - 19 ஆம் ஆண்டில் வறட்சி மிகவும் கடுமையானதாக இருந்தது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கிராமத்தில் எந்த உடல் உழைப்பும் செய்யாமல் இருந்தவர்கள் கூட மேய்ச்சல் நிலங்கள், தீவனம் மற்றும் வாழ்வாதாரங்களைத் தேடி புலம் பெயரத் துவங்கினர், என்கிறார் நீதா பாண்டியா. அகமதாபாத்தில் உள்ள மால்தாரி கிராமிய நடவடிக்கை குழுவின் (MARAG) நிறுவனர் இவரே. 1994 முதல் மேய்ப்பர்கள் மத்தியில் லாப நோக்கமின்றி செயல்படும் ஒரு ஆர்வலர் ஆவார்.

PHOTO • Namita Waikar
PHOTO • Namita Waikar

முன்னர் சீரகம் விளைவித்த வயலாக இருந்து, இப்போது தரிசாகக் கிடக்கும் நிலத்தில் பரவிக்கிடக்கும் ஆல் குடும்பத்தினரின் 300 செம்மறி ஆடுகள், காராபாய் (வலது) தனது சொந்த கிராமமான ஜதவாடாவில் எல்லாம் நலமா என்று தனது நண்பர் ஒருவரிடம் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டில் இந்த மால்தாரி குடும்பத்தின் தாயகமான கட்சில் பெய்த மழையின் அளவு வெறும் 131 மில்லி மீட்டராகக் குறைந்தது. கட்சின் சாதாரண ஆண்டு சராசரி 356 மி. மீ. ஆனால் இது ஒரு முறையற்ற ஆண்டு அல்ல. மாவட்டத்தில் இப்போது பருவ மழை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒழுங்கற்றதாக இருந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி இம்மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு 2014 இல் 291 மில்லி மீட்டர் ஆகவும், 2016 இல் 294 மில்லி மீட்டர் ஆகவும் சரிந்தது, ஆனால் 2017இல் 493 மி. மீ மழையும் பதிவாகியுள்ளது. நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஐந்தாண்டு காலத்தில் - 1974 - 78 - ஒரு அவலமான ஆண்டையும் (1974 இல் 88 மில்லி மீட்டர் மழை) மற்றும் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு சாதாரண சராசரிக்கும் மேல் மழை பெய்தது என்பதை காட்டுகிறது.

பல ஆண்டுகளாக தவறான முன்னுரிமைகளால் வேரூன்றிய குஜராத்தின் நீர் நெருக்கடி, என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டின் அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் குறித்த தெற்காசிய பிணையத்தின் அறிக்கையில்  ஹிமான்சு தாக்கர் என்பவர், மாநிலத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் வறட்சி பாதிப்புக்குள்ளான  பகுதிகளான  கட்ச், சௌராஷ்ட்ரா மற்றும் வடக்கு குஜராத்  ஆகியவற்றின் உயிர்நாடியாக  நர்மதா அணையை மாற்றியுள்ளது என்று எழுதியுள்ளார். நடைமுறையில், இந்தப் பிராந்தியங்களுக்கு மிகக் குறைந்த முன்னுரிமையே வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள  விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர்  மீதமுள்ள தண்ணீரை மட்டுமே இவர்கள் பெறுகின்றனர்.

ஆதாரம்: IMD யின் தனிப்பயனாக்கப்பட்ட  மழைப்பொழிவு தகவல் முறைமை மற்றும் DownToEarth ன் இந்தியாவின் சுற்றுச்சூழல் புள்ளிவிவரங்கள் 2018.

"நர்மதாவில் உள்ள நீர் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், மேய்ப்பர்களுக்குமே பயன்படுத்தப்பட வேண்டும்", என்று தாக்கர் எங்களிடம் தொலைபேசியில் தெரிவித்தார். கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட திட்டங்களான கிணறுகளை புதுப்பித்தல் மற்றும் தடுப்பணைகளை புதுப்பித்தல் ஆகியவை மீட்டெடுக்கப்பட வேண்டும்", என்று கூறினார்.

மால்தாரிகள் தங்கள் கால்நடைகளுக்கு உணவளிக்க பொதுவான மேய்ச்சல் நிலங்களையும், கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களையுமே சார்ந்து இருக்கிறார்கள். இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு சொந்த நிலம் இல்லை, அப்படி இருப்பவர்களும் மானாவாரி பயிரான கம்பினை பயிரிடுகின்றனர் - இது அவர்களுக்கு உணவாகவும் அவர்களது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.

"நாங்கள் இங்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தோம், இன்று மீண்டும் புறப்படுகிறோம். இங்கு ஒன்றுமே இல்லை (எங்களுக்கு)", என்று சீரகம் விளைந்த வெற்று வயலை காண்பித்து, என்னிடம் காராபாய் மார்ச் மாதம் கூறினார். அந்த இடம் வறண்டும் மேலும் சூடானதாகவும் இருக்கிறது. 1960 ஆம் ஆண்டில் காராபாய் இளைஞராக இருந்தபோது சுரேந்திராநகர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 225 நாட்களுக்கு வெப்பநிலை 32℃ ஐ கடக்கும். இன்று, அது 274 நாட்களாகவும் அல்லது அதற்கு மேற்பட்டதாகவும் இருக்கிறது, மேலும் கடந்த 59 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான நாட்களின் எண்ணிக்கை 49 நாட்களாக அதிகரித்துள்ளது என்று ஜூலை மாதம் நியூயார்க் டைம்ஸ் ஆன்லைனில் வெளியிட்ட பருவ நிலை மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த ஊடாடும் கருவியின் தரவு தெரிவிக்கிறது.

நாங்கள் மேய்ப்பர்களை சந்திக்கச் சென்ற சுரேந்திராநகரில் 63 சதவீதத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் முழுவதற்குமான எண்ணிக்கை 49.61% ஆகும். பருத்தி, சீரகம், கோதுமை, சிறு தானியங்கள், பருப்பு வகைகள், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு ஆகியவை இங்கு விளைவிக்கப்படும் முக்கியமான பயிர்கள் ஆகும். அறுவடைக்குப் பின்னர், இப்பயிர்களின் தாள்கள் செம்மறி ஆடுகளுக்கு ஒரு சிறந்த தீவனமாக விளங்குகிறது.

குஜராத்தின் 33 மாவட்டங்களில் உள்ள மொத்த ஆடுகளின் எண்ணிக்கை 1.7 மில்லியனாக உள்ளது இதில் கட்சில் மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் அல்லது மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான செம்மறி ஆடுகள் உள்ளன என்று 2012 ஆம் ஆண்டின் இந்திய கால்நடை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. காராபாயின் சொந்த மாவட்டத்தில் உள்ள வாகத் துணைப் பிராந்தியத்தில் அவரை போன்ற சுமார் 200 ரபரி குடும்பங்கள் உள்ளன ஒவ்வொரு ஆண்டும் இந்த 800 கிலோ மீட்டர்களில் மொத்தம் 30,000 செம்மறி ஆடுகள் பயணம் செய்கின்றன என்று இச்சமூகத்துடன் இணைந்து செயல்படும் இலாப நோக்கமற்ற MARAG தெரிவித்துள்ளது.  அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து 200 கிலோமீட்டர் சுற்றளவிலேயே நகர்கின்றனர்.

பாரம்பரியமாக, வயல்களுக்கு அறுவடைக்குப் பிந்திய உரமாக மந்தைகளின் சாணம் மற்றும் சிறுநீர் இருக்கும். அதற்கு ஈடாக விவசாயிகள் மேய்ப்பர்களுக்கு கம்பு சர்க்கரை மற்றும் தேநீர் ஆகியவற்றை வழங்கினர். பருவ நிலையைப் போலவே, நூற்றாண்டுகள் பழமையான இந்த பரஸ்பர நன்மை பயக்கும் உறவும் கடுமையான மாற்றத்தை சந்தித்து வருகிறது.

"உங்கள் கிராமத்தில் அறுவடை முடிந்து விட்டதா?" என்று காராபாய், பதான் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் பார்வா-விடம் கேட்கிறார். "நாங்கள் அந்த வயல்களில் கிடை போட முடியுமா?", என்று கேட்கிறார்.

"உங்கள் கிராமத்தில் அறுவடை முடிந்து விட்டதா?" என்று காராபாய், பதான் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் பார்வா-விடம் கேட்கிறார். "நாங்கள் அந்த வயல்களில் கிடை போட முடியுமா?", என்று கேட்கிறார்.

"அவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு அறுவடையை ஆரம்பிக்கின்றனர்", என்று MARAG குழுவின் உறுப்பினரும், பதான் மாவட்டத்தின் சமி தாலுகாவில் உள்ள தனோரா கிராமத்தைச் சேர்ந்த வேளாண்-மேய்ப்பாளருமான கோவிந்த் கூறுகிறார். "இந்த நேரத்தில் மால்தாரிகளால் வயல்வெளிகளை கடந்து செல்ல முடியும், ஆனால் அவர்களால் கிடை போட முடியாது. இது, தண்ணீர் மற்றும் தீவனத்தின் கடுமையான பற்றாக்குறையை சமாளிப்பதற்காக எங்களது பஞ்சாயத்து எடுத்துள்ள முடிவு", என்று கூறுகிறார்.

காராபாய் மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்ததாக பதானை நோக்கித் தான் சென்று கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பும்போது, கட்ச், சௌராஷ்டிரா மற்றும் வடக்கு குஜராத் ஆகிய மூன்று முக்கிய பிராந்தியங்களையும் அவர்கள் கடந்து சென்றிருப்பார்கள்.

மாறிவரும் வானிலை மற்றும் பருவ நிலைகளுக்கு மத்தியில், நிலையானது ஒன்று உண்டு என்றால் அது இவர்களின் விருந்தோம்பலே - அவர்கள் கடந்து செல்லும் பாதையில் அமைக்கும் தற்காலிக வீடுகளில் கூட அவர்கள் நன்கு வரவேற்கின்றனர். காராபாயின் மருமகளான ஹுராபென் ஆல், குடும்பத்திற்கு தேவையான கம்பு ரோட்லாவினை தட்டி உயரமாக அடுக்கி வைத்தார், மேலும் அனைவருக்கும் சூடான தேனீரும் தயாரித்தார். "நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்? நான் பள்ளிக்கூடத்திற்கு ஒரு போதும் சென்றதில்லை", என்று அவர் கூறினார் ,மேலும் அவர் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்துவிட்டார். அவர் எழுந்து நிற்கும் ஒவ்வொரு முறையும், குடும்பத்தில் வயதான ஆண்கள் இருப்பதால், அவரது கருப்பு சுனாரியை முகத்தின் மேல் இழுத்து விட்டுக் கொண்டார் மேலும் வேலை செய்ய தரையில் குனிந்த போதெல்லாம் அதை மீண்டும் விலகிக் கொண்டார்.

இந்த குடும்பத்தின் செம்மறி ஆடுகள் மார்வாரி இனத்தைச் சேர்ந்தவை, குஜராத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த நாட்டு வகை.. ஒரு ஆண்டில் அவர்கள் 25 முதல் 30 செம்மறி ஆடுகளை, சுமார் தலா ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கின்றனர். இந்த மந்தையின் வருமானம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், செம்மறி ஆட்டின் பால் அவர்களுக்கு மற்றுமொரு வருமான ஆதாரமாக விளங்குகிறது. 25 - 30 செம்மறியாடுகள் தினமும் சுமார் 9 - 10 லிட்டர் பால் கொடுக்கின்றன  என்று கூறுகிறார் காராபாய். உள்ளூர் பால் பண்ணைகளில் இருந்து ஒவ்வொரு லிட்டருக்கும் சுமார் 30 ரூபாய் பெறமுடிகிறது. அவர்களது குடும்பம் விற்கப்படாத பாலை மோராக மாற்றி அதில் கிடைக்கும் வெண்ணெயிலிருந்து நெய் தயாரிக்கின்றனர்.

"கீ பேட் மா சே! ( நெய் வயிற்றில் இருக்கிறது!)", என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் காராபாய். "இந்த வெப்பத்தில் நடக்கும்போது கால்கள் எரிகின்றன, எனவே இதை சாப்பிடுவது எங்களுக்கு உதவுகிறது", என்று கூறுகிறார்.

கம்பளி விற்பனை எப்படி?   “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் ஒரு விலங்கின் கம்பளியை ரூபாய் இரண்டுக்கு வாங்கினர். இப்போது யாரும் அதை வாங்க விரும்புவது இல்லை. கம்பளி எங்களுக்கு தங்கத்தைப் போன்றது, ஆனால் நாங்கள் அதை தூக்கி எறிய வேண்டி இருக்கிறது", என்று துயரத்துடன் காராபாய் கூறினார். அவருக்கும், அவரைப் போன்ற லட்சக்கணக்கான பிற மேய்ப்பர்களுக்கும், நிலமற்ற, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் செம்மறி ஆடுகள் (மற்றும் ஆடுகள்) அவர்களின் வளமாகவும் மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தின் மையமாகவும் விளங்குகின்றன. இப்போது அந்த வளம் குன்றி வருகிறது.

PHOTO • Namita Waikar

13 வயதான பிரபுவாலா ஆல், அடுத்த நடை பயணத்திற்காக ஒட்டகத்தை தயார் செய்கிறார். அவரது தந்தை வாலாபாய் (வலது) செம்மறி ஆடுகளை சுற்றி வளைக்கத் துவங்குகிறார். இதற்கிடையில் பிரபுவாலாவின் தாய் ஹுராபென் (கீழ் இடது) ஒரு தேநீர் இடைவேளை எடுத்துக் கொள்கிறார், அதே நேரத்தில் காராபாய் (வலது கடைசி) ஆண்களை நீண்ட நடைபயணத்திற்கு முன்னரே தயார் படுத்துகிறார்.

2007 மற்றும் 2012 கால்நடை கணக்கெடுப்புகளுக்கு இடையில் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை ஆறு மில்லியன் குறைந்து - 71.6 மில்லியனில் இருந்து குறைந்து 65.1 மில்லியனாக இருக்கிறது. இது 9 சதவீத வீழ்ச்சி. குஜராத்திலும் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது, சுமார் 3 லட்சம் குறைந்து தற்போதுள்ள எண்ணிக்கையான 1.7 மில்லியனாக இருக்கிறது.

கச்சும் இதே சரிவைக் கண்டது, ஆனால் விலங்குகள் ஒப்பீட்டளவில் நன்றாக இருந்தன, இதற்கு மால்தாரிகளின் கவனிப்பு காரணமாக இருக்கக் கூடும். 2007 உடன் ஒப்பிடுகையில் 2012 இல் சுமார் 4,200 செம்மறி ஆடுகளே குறைவாக இருந்தன.

2017 ஆம் ஆண்டுக்கான கால்நடை கணக்கெடுப்பின் தரவுகள் இன்னும் ஆறு மாதங்களுக்கு வெளியே வராது, ஆனால் காராபாய் கூறுகையில், அவர் குறைந்து வரும் செம்மறி ஆட்டின் போக்கை காண்கிறார் என்றும். செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை குறைவதற்கான பலவிதமான காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார். "நான் எனது 30 களில் இருந்தபோது, நிறைய புற்களும் மரங்களும் இருந்தன. அதனால் செம்மறி ஆடுகளை மேய்ப்பதில் எந்த சிரமமும் இருந்ததில்லை. இப்போது காடுகளும், மரங்களும் வெட்டப்படுவதால் புல்வெளிகளும் சுருங்கி சிறியதாகி வருகின்றன. அதிக வெப்பமாக இருக்கிறது", ஒழுங்கற்ற வானிலை மற்றும் பருவ நிலை முறைகளை தூண்டுவதில் மனித செயல்பாட்டின் பங்கை வலியுறுத்தி அவர் இவ்வாறு கூறுகிறார்.

"வறட்சியான வருடங்களில் நாங்கள் கஷ்டப்படுவதை போலவே, செம்மறி ஆடுகளும் பாதிக்கப்படுகின்றன", என்கிறார் அவர். "புல்வெளிகள் குறைந்து வருதல் என்பதன் பொருள் அவர்கள் புல் மற்றும் தீவனங்களை தேடி இன்னும் அதிக தொலைவு நடக்க வேண்டியிருக்கும் என்பதே. செம்மறி ஆடுகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது, ஏனென்றால் மக்கள் வேறு எதையாவது சம்பாதிக்க நிறைய விலங்குகளை விற்கின்றனர்", என்று கூறுகிறார்.

புல்வெளிகள் குறைந்து வருதல் பற்றியும் மற்றும் தனது மந்தையின் மேய்ச்சல் நிலங்கள் குறித்தும் அவர் சொல்வது சரிதான். குஜராத்தில் சுமார் 4.5 சதவீத நிலமே மேய்ச்சல் நிலம் என்று அகமதாபாத்தில் உள்ள மாற்றுவழி வளர்ச்சி மையத்தின் பேராசிரியர் இந்திரா ஹிர்வே தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்க தகவல்களில் , அவர் சுட்டிக் காட்டுவது போல, இந்த நிலங்களில் பெரிய அளவிலான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை கணக்கிலெடுக்கவில்லை. எனவே இதைப் பற்றிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2018 மாநில சட்ட சபையில் கேள்விகளுக்கு பதிலளித்த போது 33 மாவட்டங்களில் 4725 ஹெக்டேர் கௌசார் (மேய்ச்சல்) நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக பதிலளித்தது. இந்த எண்ணிக்கையைக் கூட சில சட்டமன்ற உறுப்பினர்கள் முற்றிலும் குறைத்து மதிப்பிடப்பட்டது என்று கூறி எதிர்த்தனர்.

2018 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள 2,754 கிராமங்களில் மேய்ச்சல் நிலங்களே இல்லை என்பதை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.

அதிகரிக்கும் நிலங்கள் - சில நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது, சில நிலங்கள் குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் தொழிற்சாலைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. SEZ களுக்காக மட்டும் 1990 மற்றும் 2001 க்கு இடையில் 4,620 ஹெக்டேர் நிலம் தொழிற்சாலைகளுக்கு ஒப்படைக்கப்பட்டது, அதுவே 2001 - 2011 காலகட்டத்தின் முடிவில் 21,308 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

PHOTO • Namita Waikar
PHOTO • Namita Waikar

ஜதவாடா செல்லும் ரோட்டில் காராபாய் மற்றும் (வலது) இக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன் அவரது மனைவி தோஷிபா ஆல் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ரத்னாபாய் தாகல் ஆகியோருடன் நிற்கிறார்.

மார்ச் மாதத்தில் சுரேந்திராநகரில், பகல் பொழுதின் வெப்பநிலை அதிகரித்ததால், காராபாய், "இது கிட்டத்தட்ட மதியம், கிளம்புங்கள், நகரத் தொடங்குங்கள்!", என்று ஆண்களை வற்புறுத்தினார்.  ஆண்கள் முன்னே செல்ல செம்மறி ஆடுகள் பின் தொடர்ந்தன.  அவரது பேரன், பிரபுவாலா 13 வயது, காராபாயின் குழுவில் உள்ள உறுப்பினர்களில், பள்ளிக்குச் சென்றிருக்கும் ஒரே நபர் - ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார் - வயலின் எல்லையை ஒட்டியுள்ள புதர்களை மேய்ந்து விட்டு அங்கேயே இருந்த சில செம்மறி ஆடுகளை மீண்டும் மந்தைக்கு ஓட்டிச் சென்றார்.

மூன்று பெண்கள் தங்கள் சுமைகளான கயிற்றுக் கட்டில்கள், பால் கேன்கள் மற்றும் பிற பொருட்களை மூட்டை கட்டினர். பிரபுவாலா ஒரு தொலைதூர மரத்தில் கட்டியிருந்த ஒட்டகத்தை அவிழ்த்து அவரது தாயான ஹீராபென் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கே அவர் சேகரித்து வைத்திருந்த பிரயாண வீடு மற்றும் சமையலறை சாமான்களை அவ்விலங்கின் முதுகில் ஏற்றினார்கள்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாத மத்தியில் ராப்பர் தாலுகாவின் சாலையில் நாங்கள் மீண்டும் காராபாயை சந்தித்தோம். ஜதவாடா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்று வந்தோம். "நானும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எனது குடும்பத்துடன் பயணம் செய்தேன்", என்று அவரது 70 வயதான மனைவி தோசிபாய் ஆல் அனைவருக்கும் தேநீர் தயாரித்த படி எங்களிடம் கூறினார். "குழந்தைகளும், செம்மறி ஆடுகளுமே எங்களது செல்வம். அவைகளை நன்கு கவனிக்க வேண்டும், அவ்வளவுதான் எனது விருப்பம்", என்று கூறினார்.

பக்கத்து வீட்டுக்காரரான பையாபாய் மக்வானா, வறட்சி அடிக்கடி நிகழ்கிறது என்று முணுமுணுத்தார். "நீர் இல்லை என்றால், நாங்கள் வீடு திரும்ப முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளில், இரண்டு முறை மட்டுமே நான் வீட்டிற்கு வந்துள்ளேன்", என்று கூறினார்.

மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான ரத்னாபாய் தாகல், பிற சவால்களை பற்றி பேசினார்.  “இரண்டு வருட வறட்சிக்கு பிறகு நான் வீடு திரும்பினேன் அப்போது அரசாங்கம் எங்கள் கௌசார் நிலங்களை வேலியிட்டு இருப்பதை கண்டறிந்தேன், என்று கூறினார். நாங்கள் நாள் முழுவதும் அலைந்தோம் ஆனால் எங்கள் மால்களுக்கு போதுமான புற்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் என்ன செய்வது? அவற்றை மேய்ச்சலுக்கு எடுத்துச் செல்வதா அல்லது கூண்டில் அடைப்பதா? பசுபாலன் (விலங்கு வளர்ப்பவர் அல்லது மேய்ப்பர்) என்பதே எங்களுக்கு தெரிந்த ஒரே வேலை மற்றும் அதன்படியே நாங்கள் வாழ்கிறோம்", என்று கூறினார்.

"இந்த வறட்சிகளால் எவ்வளவு துன்பப் படவேண்டி இருக்கிறது", என்று காராபாய் கூறுகிறார், அதிகரித்துவரும் ஒழுங்கற்ற வானிலை மற்றும் பருவநிலை முறைகளால் அவர் சோர்வாக இருக்கிறார். "சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட தண்ணீர் இல்லை", என்று கூறினார்.

இந்த ஆகஸ்டில் பெய்த மழை அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது. ஆல் குடும்பத்திற்கு கூட்டாக சுமார் 8 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது அதில் அவர்கள் கம்பை விதைத்துள்ளனர்.

கலவையான பல காரணிகளே விலங்குகளின் மேய்ச்சல் மற்றும் மேய்ப்பர்களின் புலம் பெயர்வு முறைகளை பாதித்துள்ளது. குறைந்த அல்லது பற்றாக்குறையான பருவமழை, தொடர்ந்து வரும் வறட்சி, குறைந்து வரும் புல்வெளிகள், மாநிலத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், காடழிப்பு மற்றும் தீவனம் மற்றும் நீர் இருப்பு குறைதல் ஆகியவையே அக்காரணிகள் ஆகும். மால்தாரிகளின் வாழ்ந்து பெற்ற அனுபவம் சொல்வது என்னவென்றால் இக்காரணிகள் மாறிவரும் வானிலை மற்றும் பருவ நிலைக்கு காரணமாகவும், இவற்றால் வளர்வதாகவும் இருக்கிறது என்பதுதான். இறுதியில், இச்சமூகங்களின் புலம்பெயர்தல் முறை தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது, பல நூற்றாண்டுகளாக அவர்கள் பின்பற்றி வந்த கால அட்டவணைகளை மறுவடிவமைப்பு செய்கிறது.

நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்று செல்லும் போது காராபாய் எங்களிடம், "எங்களது எல்லா துயரங்களைப் பற்றியும் எழுதுங்கள்", "இது ஏதேனும் மாற்றத்தை கொண்டு வருகிறதா என்று பார்ப்போம்,” என்று கூறினார்.  “அப்படி இல்லையென்றாலும், கடவுள் இருக்கிறார்".

இந்தக் செய்திக் கட்டுரைக்கு உதவிய அகமதாபாத்தில் உள்ள மால்தாரி கிராமிய நடவடிக்கை குழுவிற்கும் (MARAG), மற்றும் பூஞ் குழுவிற்கும் அவர்கள் நல்கிய ஆதரவிற்கும் மற்றும் கள உதவிக்கும், எழுத்தாளர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த திட்டம், சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

Namita Waikar is a writer, translator and Managing Editor at the People's Archive of Rural India. She is the author of the novel 'The Long March', published in 2018.

Other stories by Namita Waikar

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose