ராதா வளர்த்த நாய்கள் அவற்றின் வீரத்துக்கான விலையைக் கொடுத்திருக்கின்றன. முதல் நாயின் தலை வெட்டப்பட்டது. இரண்டாவது நாய்க்கு விஷம் வைக்கப்பட்டது. மூன்றாவதை காணவில்லை. நான்காவது அவரின் கண் முன்னாலேயே கொல்லப்பட்டது. “என் கிராமத்தைச் சேர்ந்த அதிகாரம் மிக்க நால்வர் எனக்கு இழைத்த அநீதிக்காகச் சிறையில் இருக்கின்றனர்,” என்கிறார் அவர். “வன்புணர்வு வழக்கை திரும்பப் பெறாததால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.”

ஆறு வருடங்களுக்கு முன்பு நான்கு ஆண்கள் ராதாவை (உண்மைப் பெயர் அல்ல) வன்புணர்வுக்கு உள்ளாக்கினர். கிராமத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீட் மாவட்டத்துக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.  ‘லிஃப்ட்’ கொடுப்பதாக வாகனத்தில் ஏற்றியவர் அவரைக் கடத்திச் சென்றார். ராதாவின் கிராமத்தைச் சேர்ந்த அவரும் அவரின் மூன்று நண்பர்களும் ராதாவை வன்புணர்ந்தனர்.

”பல வாரங்களுக்கு எனக்கு மன உளைச்சல் இருந்தது,” என்கிறார் 40 வயது ராதா. ”அவர்களைச் சட்டம் கொண்டு தண்டிக்க விரும்பினேன். எனவே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தேன்.

சம்பவம் நேரும்போது ராதா, பீட் நகரத்தில் அவரின் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். “என்னுடைய கணவர் அங்கொரு நிதி நிறுவனத்தில் பணி புரிந்தார். எங்களின் விவசாய நிலத்தைப் பார்க்க அவ்வப்போது நான் கிராமத்துக்கு செல்வேன்,” என்கிறார் அவர்.

வழக்கை திரும்பப் பெறச் சொல்லி ராதாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. குற்றவாளிகளும் அவரின் உறவினர்களும் கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் கிராமத்தில் அதிகாரம் கொண்டோருக்கும் நெருக்கமானவர்கள் என்கிறார் அவர். “எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை புரிந்து கொண்டேன். ஆனால் நான் கிராமத்திலிருந்து வெளியேதான் வாழ்ந்தேன். நகரத்தில் எனக்கு ஆதரவாக பலர் இருந்தனர். நான் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருந்தேன்.”

மார்ச் 2020ல் கோவிட் தொற்று வந்தபிறகு அவருக்கான பாதுகாப்பு இல்லாமல் போனது. தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் அவரின் கணவர் மனோஜ் (உண்மைப் பெயர் இல்லை) வேலையிழந்தார். “மாதத்துக்கு 10,000 ரூபாய் சம்பாதித்தார்,” என்கிறார் ராதா. “நாங்கள் ஒரு வாடகை ஃப்ளாட்டில் வசித்தோம். மனோஜுக்கு வேலை போனபிறகு எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. பிழைப்பு சிரமமானது.”

வேறு வழியின்றி, ராதாவும் மனோஜும் அவர்களின் குழந்தைகளும் அரைமனதோடு கிராமத்துக்குச் சென்றனர். ராதா வன்புணர்வு செய்யப்பட்ட அதே ஊர். “இங்கு எங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. எனவே இங்கு வந்தோம். வேறு எதையும் எங்களால் யோசிக்க முடியவில்லை,” என்கிறார் அவர். குடும்பம் தற்போது குடிசையில் வசிக்கிறது. பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றை நிலத்தில் விதைத்திருக்கிறார் ராதா.

கிராமத்துக்கு அவர் வந்தவுடனே குற்றவாளிகளின் குடும்பங்கள் அவரை இலக்காக்கத் தொடங்கியது. “வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. திரும்பப் பெறச் சொல்லி அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது,” என்கிறார் அவர். பின்வாங்க அவர் மறுத்ததும் அழுத்தம் வெளிப்படையான மிரட்டல்களாக மாறியது. “நான் அவர்கள் இருக்கும் கிராமத்திலேயே இருக்கிறேன். என்னை மிரட்டுவதும் தொல்லை கொடுப்பதும் எளிதாகி விட்டது,” என்கிறார் ராதா.

கிராமத்திலிருந்து நகரத்துக்கு செல்லும் வழியில் ராதா கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்

2020ம் ஆண்டின் மத்தியில் ஊர்ப் பஞ்சாயத்தும் அருகே இருந்த இரண்டு ஊர்களின் பஞ்சாயத்துகளும் அவரை ஒதுக்கி வைத்தன. “நடத்தைக் கெட்டவளாக” குற்றம் சுமத்தப்பட்டார் ராதா. கிராமத்தின் பெயரை அவர் கெடுப்பதாகவும் சொல்லப்பட்டது. மூன்று கிராமங்களில் அவர் பயணிப்பது “தடை” செய்யப்பட்டது. “வீட்டுத் தேவைகளுக்காக நீர் பிடிக்க வீட்டுக்கு வெளியே ஓரடி வைத்தால், யாராவது கொச்சையாக எதையாவது சொல்வார்கள்,” என அவர் நினைவுகூர்கிறார். “’எங்களின் ஆட்களை சிறைக்குள் தள்ள நினைக்கும் நீ எப்படி எங்களுடன் வாழ முடியும்’ என அவர்கள் உணர்த்தினார்கள்.”

நொறுங்கி விழும் நிலைக்கு அடிக்கடி ஆட்படுவார். “நான் நிலைகுலையாமல் இருக்க வேண்டியது முக்கியம்,” என அவர் மராத்தியில் சொல்கிறார். “வழக்கு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.”

மனிஷா டொக்லே என்னும் பெண்களுரிமை செயற்பாட்டாளர் ராதாவை தொடர்பு கொண்டார். ராதா காவல்நிலையத்தில் வழக்குப் பதியவும் அவர்தான் உதவினார். “நல்ல தீர்ப்பு வருமென என்னுடைய வழக்கறிஞர் நம்பிக்கையுடன் இருக்கிறார்,” என்கிறார் டொக்லே. “ஆனால் ராதா உறுதியாக இருக்க வேண்டும். அவர் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென நான் விரும்பினேன். சூழல் அவரை வீழ்த்திவிடக் கூடாது எனவும் விரும்பினேன்.” மேலும் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிர அரசின் மனோதைரியத் திட்ட த்தின் கீழ் வழங்கப்படும் 2.5 லட்ச ரூபாய் ராதாவுக்குக் கிடைக்கவும் அச்செயற்பாட்டாளர் உதவி செய்தார்.

நீண்ட சட்டமுறையால் சில நேரங்களில் மனோஜ் பொறுமை இழந்து விடுவார். “அவர் சில நேரங்களில் வருத்தம் கொள்வார். பொறுமையாக இருக்குமாறு சொல்வேன்,” என்கிறார் டொக்லே, ராதாவுக்கு தைரியத்துடன் ஆதரவாக நிற்கும் கணவரைப் பற்றி.

மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வழக்கு, தொற்று வந்த பிறகு இன்னும் மெதுவானது. நீதிமன்றம் இணைய வழி நடந்தது. “கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் (அப்போது) ஆகியிருந்தது. ஊரடங்குக்கு பிறகு வாய்தாக்கள் தள்ளிப் போடப்பட்டன. நாங்கள் விடவில்லை. எனினும் நீதி கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை சற்றுக் குறைந்தது,” என்கிறார் ராதா.

அவரின் பொறுமையும் விடாமுயற்சியும் வீணாகவில்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில், குற்றம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு, செஷன்ஸ் நீதிமன்றம் வன்புணர்வு குற்றத்தை உறுதி செய்தது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. “தீர்ப்பை நாங்கள் ராதாவிடம் சொன்னபோது, ஒரு நிமிடம் தாமதித்து, நொறுங்கி அழுதார். அவரின் நீண்டப் போராட்டத்துக்கு இறுதியில் முடிவு கிடைத்தது,” என்கிறார் டொக்லே.

ஆனால் அச்சுறுத்தல் நிற்கவில்லை.

இரண்டு மாதங்கள் கழித்து, வேறு ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்ரமித்திருப்பதாக ராதாவுக்கு நோட்டீஸ் வந்தது. ஊர் தலையாரியின் ஒப்பம் கொண்டிருந்த அந்த ஆவணத்தின்படி, ராதா வசிக்கும் இடத்தில் ஊரின் நான்கு பேருக்கு உரிமை இருந்தது. “அவர்கள் என் நிலத்தை குறி வைத்துவிட்டார்கள்,” என்கிறார் ராதா. “இங்கிருக்கும் அனைவருக்கும் என்ன நடக்கிறது என தெரியும். ஆனால் அச்சத்தின் காரணமாக எவரும் வெளிப்படையாக என்னை ஆதரிப்பதில்லை. ஒரு பெண்ணின் வாழ்வை சீரழிக்க எத்தனை கீழ்த்தரமாக மக்கள் செல்வார்கள் என்பதை தொற்றுக்காலத்தில் பார்த்தேன்.”

வழக்கை திரும்பப் பெறச் சொல்லி ராதாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. குற்றவாளிகளும் அவரின் உறவினர்களும் கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் கிராமத்தில் அதிகாரம் கொண்டோருக்கும் நெருக்கமானவர்கள்

ராதாவின் குடும்பம் வசிக்கும் தகரக் கூரை வீட்டில் மழைக்காலத்தில் நீர் ஒழுகும். கோடை காலத்தில் அதிக சூடடையும். “காற்று வலிமையாக இருந்தால், கூரை பிய்ந்து விடுவதைப் போல் இருக்கும். என்னுடைய குழந்தைகள் படுக்கைக்குக் கீழ் ஒளிந்து கொள்வார்கள்,” என்கிறார் அவர். “இதுதான் என் சூழல். ஆனாலும் அவர்கள் என்னை விடவில்லை. குடிநீர் வரத்தை நிறுத்தினார்கள். இங்கிருந்து என்னை வெளியேற்றி விடுவதாக மிரட்டினார்கள். ஆனால் என்னிடம் எல்லா ஆவணங்களும் இருக்கின்றன. நான் எங்கும் செல்லப்போவதில்லை.”

அவரின் நிலத்தை அபகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை விளக்கி மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு கடிதம் எழுதினார் ராதா. அபாயம் இருப்பதாகவும் பாதுகாப்பு தேவை எனவும் குறிப்பிட்டார். பிறகு ஊர்த்தலையாரி தன்னுடைய கையெழுத்து நோட்டீஸ்ஸில் போலியாக போடப்பட்டிருப்பதாக மாஜிஸ்திரேட்டுக்குக் கடிதம் எழுதினார். அந்த நிலம் ராதாவுக்குதான் சொந்தம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராதாவின் சூழலை கவனித்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிர சட்ட மேலவையின் துணைத் தலைவரான நீலம் கோர்ஹே, மாநில கிராம மேம்பாடு அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப்ஃபுக்கு கடிதம் எழுதினார். ராதாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் பாதுகாப்பை வலியுறுத்தி, ஊரை விட்டு ஒதுக்க வேண்டுமென கொடுக்கப்பட்ட உத்தரவையும் விசாரிக்கக் கேட்டிருந்தார்.

ராதாவின் வீட்டுக்கு வெளியே ஒரு கான்ஸ்டபிள் காவலுக்கு போடப்பட்டிருக்கிறார். “இப்போதும் முழுமையாக நான் பாதுகாப்பாக உணரவில்லை. சில நேரங்களில் காவலர் இருக்கிறார். சில நேரங்களில் இருப்பதில்லை. ஆழ்ந்த தூக்கமே இரவில் எனக்கு இல்லை,” என்கிறார் அவர். “ஊரடங்குக்கு முன் (மார்ச் 2020) குறைந்தபட்சம் நிம்மதியாகவேனும் தூங்க முடிந்தது. ஏனெனில் நான் கிராமத்தில் அப்போது இல்லை. இப்போது நான் எப்போதுமே அரை விழிப்பில் இருக்கிறேன், குறிப்பாக நானும் குழந்தைகளும் மட்டும் இருக்கும்போது.

குடும்பத்தை விட்டு தூரத்தில் இருக்கும்போது மனோஜாலும் சரியாக தூங்க முடிவதில்லை. “அவர்கள் நன்றாக இருக்கிறார்களா எனக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பேன்,” என்கிறார் அவர். நகரத்திலிருந்த வேலையை இழந்த பிறகு தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு, கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் வேலை கிடைத்தது. அவரின் பணியிடம் கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. எனவே அங்கு ஓரறையை அவர் வாடகைக்கு எடுத்திருக்கிறார். “அவரின் ஊதியம் முன்பை விடக் (தொற்றுக்கு முன் இருந்ததை விட) குறைவுதான். எனவே நாங்கள் அனைவரும் இருப்பது போல் ஒரு வீட்டை அவர் வாடகைக்கு எடுக்க முடியாது. வாரத்தில் 3-4 நாட்களுக்கு இங்கு வந்து எங்களுடன் தங்குகிறார்,” என்கிறார் ராதா.

8, 12 மற்றும் 15 வயதுகளில் இருக்கும் மகள்கள் உள்ளூர் பள்ளியில் எப்படி நடத்தப்படுவார்கள் எனக் கவலைப்படுகிறார் ராதா. “அவர்கள் அச்சுறுத்தப்படுவார்களா மிரட்டப்படுவார்களா என எனக்குத் தெரியவில்லை.”

அவரின் கவலைகளைப் போக்க நாய்கள் உதவின. “அவை கொஞ்சம் பாதுகாப்பாகவும் இருந்தன. யாரேனும் குடிசையருகே வந்தால் அவை குரைக்கும்,” என்கிறார் ராதா. “ஆனால் இந்த மக்கள் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்லத் தொடங்கி விட்டனர். என்னுடைய நான்காவது நாய் சமீபத்தில் கொல்லப்பட்டது.”

ஐந்தாவதாக நாய் வளர்ப்பதை பற்றி அவர் யோசிக்கவில்லை. “குறைந்தபட்சம் இந்த கிராமத்தின் நாய்களேனும் பாதுகாப்பாக இருக்கட்டும்,” என்கிறார் அவர்.

புலிட்சர் மையம் கொடுக்கும் சுயாதீன இதழியல் மானியத்தில் செய்தியாளர் எழுதும் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி இது.

தமிழில் : ராஜசங்கீதன்

Text : Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Illustrations : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan