கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மாலை அனந்தப்பூரில் இருக்கும் டாக்டர் அம்பேத்கரின் சிலையை அலங்கரிக்கிறது. ஏ.சுபன் என்கிற பூ வியாபாரி, தங்க வண்ணம் பூசப்பட்ட சிலையை நோக்கிய படிகளில் அவரின் குடும்பம் தொடுத்த சிவப்பு ரோஜாக்கள் அல்லது அல்லி மலர்களாலான மாலையை எடுத்துக் கொண்டு தினசரி காலை 8.30 மணிக்கு ஏறுகிறார். அவரோ அல்லது அவரது சகோதரரின் மகனான 17 வயது பப்லுவோ இந்த நடைமுறை தினமும் தொடர வைத்து விடுகிறார்கள்.

2010ம் ஆண்டில் சாலையின் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த டாக்டர் அம்பேத்கரின் பழைய சிலை அகற்றப்பட்டு, புதிய சிலை வந்தபோது இச்சடங்கு தொடங்கியது. அனந்தப்பூரின் மத்தியில் இருக்கும் கடிகாரக் கோபுரத்தின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிலை இருக்கிறது. சுபனின் பூக்கடையிலிருந்து நடக்கும் தூரம்தான்.

அருகே இருக்கும் பிற சிலைகளுக்கு அதிர்ஷ்டம் குறைவுதான். கடிகாரக் கோபுரத்துக்கு அருகே முதலில் இருப்பது இந்திரா காந்தியின் சிலை. தற்போது அச்சிலை சணல் துணியால் மூடப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியிலிருந்த காலம் (2004 முதல் 2014) வரை பல நல்ல நாட்களை அது கண்டிருக்கிறது. 2013ம் ஆண்டில் ஆந்திராவிலிருந்து தெலெங்கானாவைப் பிரித்ததற்கு எதிராக நடந்த போராட்டங்களில் அச்சிலையின் முந்தைய வடிவம் இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. பிறகு புதியச் சிலை நிர்மாணிக்கப்பட்டது. எனினும் மூடியே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் இருக்கும் ராஜீவ் காந்தியின் சிலையும் மூடப்பட்டிருக்கிறது. இவை, காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் அடைந்திருக்கும் நிலையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

Ambedkar statue
PHOTO • Rahul M.

அனந்தப்பூரில் இருக்கும் பல வரலாற்று ஆளுமைகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் சிலைகள், நினைவு நிகழ்வுகளுக்கு பின் மறக்கப்பட்டதை போல் தெரிகிறது. ஆனால் டாக்டர் அம்பேத்கர் தினமும் நினைக்கப்படுகிறார்

அந்தச் சாலையில் பிறச் சிலைகள் பல இருக்கின்றன. பொட்டி ஸ்ரீராமுலு (தெலுங்கர்களுக்கென தனி மாநிலமாக ஆந்திராவைக் கேட்டு உண்ணாவிரதம் இருந்து 1952-ல் உயிரிழந்தவர்), மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஒய்.எஸ்.ராஜஷேகர் ரெட்டி, பால கங்காதர திலகர், பாபு ஜக்ஜிவன் ராம், கன்ஷி ராம் மற்றும் அன்னை தெரசா ஆகியோரின் சிலைகள். அவ்வப்போது அவற்றுக்கும் மாலை அணிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த மலர்கள் சீக்கிரமே வாடத் தொடங்கிவிடும். நினைவு நிகழ்ச்சிகளுக்கு பிறகு அந்தத் தலைவர்கள் மறக்கப்பட்டு விடுகின்றனர்.

Subhan at his shop
PHOTO • Rahul M.

சிலைக்கு அருகேயே இருக்கும் பூக்கடையின் உரிமையாளர் சுபன், “நாங்கள் அம்பேத்கரைப் போற்றுவதால் இதைச் செய்கிறோம்,” என்கிறார்

ஆனால் பாபாசாகெப் அம்பேத்கரின் சிலை தினந்தோறும் நினைக்கப்படுகிறது. கடிகாரக் கோபுரத்துக்கு அருகே இருக்கும் ஆந்திர வங்கியின் காசாளரான ஏ.மல்லேஷ், ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் மாலைகளுக்கான பணத்தை சுபனுக்குக் கொடுத்து விடுகிறார். “அவர் எனக்கு 1,000 ரூபாய் கொடுப்பார்,” என்கிறார் இஸ்லாமியரான 36 வயது சுபன். “லாபம் எதுவுமில்லை என்றபோதும் நாங்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம், நாங்கள் அம்பேத்கரை போற்றுகிறோம் என்பதுதான்.” சுபனின் கடையில் ஒரு மாலையின் விலை, பயன்படுத்தப்படும் பூக்களைச் சார்ந்து 60லிருந்து 130 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது.

டாக்டர் அம்பேத்கர் மீதான மல்லேஷின் மரியாதை, அவருக்கு நேர்ந்த சாதிய ஒடுக்குமுறை அனுபவத்தில் வேரூன்றியிருக்கிறது. “உணவு கிடையாது, நீர் கிடையாது, தலைக்கு வைக்க எண்ணெய் இருக்காது, படிக்கப் புத்தகங்கள் இருக்காது, எழுதப் பலகை (என் கிராமத்தில்) இருக்காது,” என்கிறார் அவர். “இப்போது கடவுள் எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். கடவுள் என்றால் அம்பேத்கர்.” மல்லேஷ், அனந்தப்பூரைச் சேர்ந்த ஆத்மகூரின் மடிகா தலித் ஆவார். “எங்களின் கிராமத்தில், குடிநீருக்கு ஒரே ஒரு கிணறுதான்,” என நினைவுகூர்கிறார் அவர். “நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் நீர் எடுக்க வரும்போதுதான் நாங்கள் நீரெடுக்க முடியும். இல்லையெனில் எங்களுக்கு நீர் கிடைக்காது. மடிகாக்கள் கிணறைத் தொடக் கூடாது.”

அனந்தப்பூரின் பள்ளியில் மல்லேஷ் மற்றும் தலித், பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த பிற குழந்தைகள் வகுப்பறையின் மூலையில் அமர வேண்டும். உயர்சாதி மாணவர்கள் முன்னே உட்காரலாம். “வெளியிலிருந்து களிமண்ணை எடுத்து வந்து, தரையில் பரப்பிதான் எழுத வேண்டும். எங்களுக்கென ஸ்லேட்டுப் பலகைகள் கிடையாது,” என நினைவுகூர்கிறார். “யாரேனும் ‘ஏ மடிகா! களிமண்ணை வெளியே தூக்கிப் போடு’ எனச் சொன்னால் நாங்கள் தூக்கிப் போட வேண்டும்.” தலித் மாணவர்களை அவர்களின் சாதியைச் சொல்லிதான் ஆசிரியர்கள் திட்டியிருக்கிறார்கள். பிரம்புகளைக் கொண்டு அவர்களை அடித்திருக்கின்றனர்.

மல்லேஷ்ஷுக்கு தற்போது வயது 59. 7ம் வகுப்புக்கு பிறகு அவர் பள்ளியிலிருந்து நிற்க வேண்டியச் சூழல். விவசாயக் கூலியான அவரின் தந்தை இறந்துவிட்டார். தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அனந்தப்பூரில் இருந்த அரசு விடுதியில் உதவியாளராக வேலை பார்த்தார். அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினார். 1982ம் ஆண்டில் ஆந்திரா வங்கியில் உதவியாளராக 500 ரூபாய் ஊதியத்துக்கு சேர்ந்தார். 1985ம் ஆண்டில் வங்கி நேர்காணலில் வென்று, கணக்காளரின் உதவியாளர் பதவிக்கு முன்னேறினார்.

Mallesh at his home
PHOTO • Rahul M.

2010ம் ஆண்டில் வங்கியின் உதவி கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது டாக்டர் அம்பேத்கருக்கு தொடர்ந்து மரியாதை செலுத்துவது என திடுமென ஏ.மல்லேஷ் முடிவெடுத்தார்

’அவர் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பார் என நான் பட்ட சிரமங்களைக் கொண்டு என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர் நமக்குச் செய்த விஷயங்களை வைத்தே நாம் கற்றுக் கொள்ள முடியும். அரசியல் சாசனத்தை எழுதியவர் அவர் அல்லவா?’

பல தலித் சங்கங்கள் மற்றும் அமைப்புகளில் மல்லேஷ் பணிபுரிந்திருக்கிறார். சமீப காலம் வரை வங்கியின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவராக இருந்தார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான பல போராட்டங்களில் அவர் பங்கெடுத்திருக்கிறார். 1995ம் ஆண்டுவாக்கில், சாதிய ஒடுக்குமுறையைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் நடத்திய 10 கிலோமீட்டர் நடைபயணத்தில் பங்குபெற்றிருக்கிறார். 1990களில் உருவாக்கப்பட்ட தலித் அமைப்பான தண்டோராவின் தலைவராகவும் மல்லேஷ் இருந்திருக்கிறார். பிறகு நேர்ந்த கருத்து பேதங்களால் அமைப்பை விட்டு 2000-ங்களில் வெளியேறி விட்டார்.

1996ம் ஆண்டுவாக்கில், பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக படித்து மல்லேஷ் தேர்ச்சி பெற்றார். விளைவாக, 2013ம் ஆண்டில் அவர் காசாளர் பதவிக்கு முன்னேற முடிந்தது. அவரின் ஆரம்பகால 500 ரூபாய் ஊதியத்தை விட பல மடங்கு அதிகமான ஊதியத்தை தற்போது பெறுகிறார்.

2010ம் ஆண்டில் வங்கியின் உதவிக் கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது டாக்டர் அம்பேத்கருக்கு தொடர்ந்து மரியாதை செலுத்துவது என திடுமென ஏ.மல்லேஷ் முடிவெடுத்தார். வங்கி ஊழியர்கள் மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த சிலரைக் கொண்டு ஒரு சிறு சந்திப்பு நடத்தினார். மாலைகள் வாங்குவதற்கான பணத்தை அளிக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் ஒவ்வொரு மாதமும் பணத்துக்காக அவர்கள் பின்னால் சென்று விரட்ட அவர் விரும்பவில்லை. எனவே அவரும் ஆந்திரா வங்கியின் மற்றோரு கிளையில் உதவியாளராக இருக்கும் எம்.கோபாலும் செலவைப் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த வருடம் பணம் கொடுப்பதை கோபால் நிறுத்திக் கொண்டார். இப்போது மல்லேஷ் மட்டும்தான் மாலைகளுக்காக செலவு செய்கிறார்.

Subhan garlanding the statue
PHOTO • Rahul M.
Indira Gandhi statue near tower clock
PHOTO • Rahul M.

சுபான் ஒவ்வொரு காலையும் அம்பேத்கர் சிலைக்கு மாலைகள் போடும்போது (இடது), அருகே இருக்கும் இந்திரா காந்தி சிலை (வலது) பல நாட்களாக சணல் துணியால் மூடப்பட்டிருக்கிறது

அம்பேத்கரைப் பற்றிப் பாடம் எடுக்கப்படுவதையோ வாசிப்பதையோ மல்லேஷ் விரும்பவில்லை. ஒரு தலித்தாக வாழ்ந்தே அம்பேத்கரை அவர் கற்றுக் கொள்ள முடிந்தது என்கிறார். “அவர் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பார் என நான் பட்ட சிரமங்களைக் கொண்டு என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர் நமக்கு செய்த விஷயங்களை வைத்தே நாம் கற்றுக் கொள்ள முடியும். அரசியல் சாசனத்தை எழுதியவர் அவர் அல்லவா?”

வார இறுதி நாட்கள் அல்லது விழா நாட்கள் போன்றவற்றில் சில சமயம், சிலைக்கு மல்லேஷே சென்று மாலை போடுகிறார். சூரியவெளிச்சம், காற்று, பறவை எச்சம் ஆகியவற்றிலிருந்து சிலையைக் காக்க ஒரு சிறு கூரை அமைக்கக் கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். “அம்பேத்கருக்கு முதலில் கேட்போம்,” என்னும் அவர், “பிறகு ஜக்ஜீவன் ராமுக்கும் கன்ஷி ராமுக்கும் கேட்போம்,” என்கிறார்.

டாக்டர் அம்பேத்கரின் சிலையிலுள்ள பூக்களை அனந்தப்பூரின் பலர் கவனிப்பதில்லை என்றபோதும் சாலைகளை அதிகாலையில் கூட்டி பெருக்குபவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். “யாரோ ஒருவர், அநேகமாக பெரிய ஆளாக இருக்கலாம், சிலைக்கு தினமும் மாலைகள் போடுகிறார். யார் செய்கிறார் என எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் ஜி.ராமலஷ்மி. நகராட்சியால் தெருக்களை சுத்தப்படுத்த பணியமர்த்தப்பட்டிருக்கும் தலித் பெண் அவர். இதைச் சொல்கையில் அவர் பக்தியின் அடையாளமாக தன் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார். “மாலையுடன் சிலையைப் பார்க்கும்போது கடவுள் (அம்பேத்கர்) நல்லபடியாக இருக்கிறார் என நினைத்துக் கொள்வேன். வேலைக்கு தினசரி வரும்போதும் அவரிடம் வேண்டிக் கொள்வோம்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan