ராணியின் முடியை பூனம் இரண்டாகப் பிரித்து எண்ணெய் தேய்த்து இறுக்கிப் பின்னுகிறார். ஜடைக்கு முடி போடுவதற்கு முன் அக்குழந்தை உடன்பிறந்தோர் மற்றும் நண்பர்களுடன் விளையாட வெளியே ஓடுகிறார். “நண்பர்கள் வந்துவிட்டால் போதும். எல்லாரும் வெளியே ஓடி விளையாடத் தொடங்கி விடுவார்கள்,” என்கிறார் பூனம் தேவி அவரின் குழந்தைகளைப் பற்றி. ராணிக்கு வயது எட்டு. பூனமின் இரண்டாம் மகள் ராணி.

பூனத்துக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உண்டு. கடைக்குட்டியான மகனுக்கு மட்டும்தான் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது. “என்னிடம் பணம் இருந்திருந்தால், பிற மூன்று குழந்தைகளுக்கும் கூட பெற்றிருப்பேன்,” என்கிறார் அவர்.

அவரின் காரவீட்டைச் சுற்றி மூங்கில் குச்சிகளால் வேலி அடைக்கப்பட்டிருக்கிறது. 38 வயது தினக்கூலி தொழிலாளரான மனோஜ்ஜை மணந்து எக்தாரா கிராமத்தில் அவர் வசித்து வருகிறார். மனோஜ் மாத வருமானமாக 6000 ரூபாய் ஈட்டுகிறார்.

“எனக்கு 25 வயது ஆகிறது,” என்கிறார் பூனம் (இக்கட்டுரையில் எல்லா பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன). “என்னுடைய ஆதார் அட்டை என் கணவரிடம் இருக்கிறது. அவர் இப்போது வீட்டில் இல்லை. திருமணமானபோது எனக்கு என்ன வயதென நினைவில் இல்லை.” அவருக்கு தற்போது 25 வயது எனில் திருமணம் நடந்தபோது அநேகமாக அவருக்கு 14 வயதாக இருந்திருக்கும்.

பூனத்தின் எல்லாக் குழந்தைகளும் வீட்டுப் பிரசவத்தில்தான் பிறந்தன. “மருத்துவச்சி ஒவ்வொரு முறையும் உதவினார். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால் மட்டும்தான் மருத்துவமனைக்கு செல்ல முயலுவோம்,” என்கிறார் மனோஜின் உறவினரான 57 வயது சாந்தி தேவி. அவர்களது வீட்டுக்கு அருகே அவர் வசிக்கிறார். பூனமை தன் சொந்த மருமகளாய் கருதுகிறார்.

PHOTO • Jigyasa Mishra

பூனத்துக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உண்டு. கடைக்குட்டியான மகனுக்கு மட்டும்தான் அவரிடம் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது

“எங்களில் பலரைப் போல, பூனத்துக்கும் பிறப்புச் சான்றிதழ் பெறும் முறை தெரியாது,” என்கிறார் சாந்தி தேவி. “அது கிடைக்க வேண்டுமெனில், மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும். எவ்வளவு என எனக்குத் தெரியவில்லை.”

பிறப்புச் சான்றிதழுக்கு பணமா?

“ஆமாம். அதை அவர்கள் எங்களுக்கு இலவசமாக கொடுக்க மாட்டார்கள். வேறெங்கும் அப்படிக் கொடுக்கிறார்களா?.” ‘அவர்கள்’ என பூனம் குறிப்பிடுவது சமூக சுகாதார செயற்பாட்டாளர்களையும் மருத்துவ ஊழியர்களையும். “அவர்கள் அனைவரும் பணம் கேட்பார்கள். அதனால்தான் எங்கள் பெண் குழந்தைகளுக்கு எங்களால் சான்றிதழ்கள் பெற முடியவில்லை,” என்கிறார் சாந்தி.

பூனம், சாந்தி தேவி மற்றும் அந்தப் பகுதியில் இருக்கும் அனைவரும் மைதிலி மொழியில் பேசுகிறார்கள். அந்த மொழி பேசுபவர்கள் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் நாட்டில் இருக்கின்றனர். முக்கியமாக பிகாரின் மதுபானி, தார்பங்கா, சகர்சா மாவட்டங்களில் இம்மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். அண்டை நாடான நேபாளில் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழி இதுதான்.

சுவாரஸ்யம் என்னவென்றால், எக்தாராவின் ஆரம்ப சுகாதார நிலையும் பூனம் வீட்டிலிருந்து 100 அடி தொலைவில்தான் இருக்கிறது. அது பெரும்பாலும் மூடிதான் இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். கம்பவுண்டர் வரும் சில நாட்கள் மட்டும்தான் திறந்திருக்குமென சொல்கின்றனர். “கடைசியாக மூன்று நாட்களுக்கு முன் அவர் வந்தார். வழக்கமாக அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் மையத்தைத் திறப்பார். ஆனால் மருத்துவர் எப்போதாவதுதான் வருவார். பல மாதங்களாக அவரை நாங்கள் பார்க்கவில்லை,” என்கிறார் பூனமின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜ்லக்‌ஷ்மி மஹ்தோ. ஐம்பது வயதுகளைச் சேர்ந்தவர் அவர். “துலர் சந்திராவின் மனைவிதான் எல்லா பிரசவங்களுக்கும் நாங்கள் அழைக்கும் மருத்துவச்சி. அவர் அருகே இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். நம்பிக்கைக்குரிய பெண் அவர்.”

PHOTO • Jigyasa Mishra

பூனம் வீட்டின் அருகே இருக்கும் ஆரம்ப சுகாதார மையம் பெரும்பாலான நாட்களுக்கு மூடியிருக்கிறது

”இந்தியாவின் நிதி அயோக்கின்படி, 6 லட்சம் மருத்துவர், 20 லட்சம் செவிலியர், 2 லட்சம் பல் அறுவை சிகிச்சை மருத்துவர் இடங்கள் இந்தியாவில் காலியாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் மருத்துவர், நோயாளி விகிதம் 1:1,000 இருந்தபோதிலும் கிராமப்புற இந்தியாவில் அது 1:11,082 ஆகவும் பிகார் போன்ற மாநிலங்களில் இன்னும் குறைவாக 1:28,391 அளவிலும் உத்தரப்பிரதேசத்தில் 1:19,962 ஆகவும் இருக்கிறது,” என சர்வதேச ஆய்வு விமர்சனப் பத்திரிகையின் 2019ம் ஆண்டு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது

மேலும் அந்த அறிக்கை, “இந்தியாவில் பதினொரு லட்சத்து நாற்பதாயிரம் பதிவு பெற்ற மருத்துவர்கள் நகரங்களில் பணிபுரிகிறார்கள். நாட்டு மக்கள்தொகையின் 31% பேர் மட்டும்தான் நகரங்களில் வாழ்கிறார்கள்,” என்றும் கூறுகிறது. “ஆரம்ப சுகாதார மையம், மாவட்ட சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளிலும் இதுதான் நிலை. அதன்படி பார்த்தால் பூனம் வீட்டருகே இருக்கும் ஆரம்ப சுகாதார மையம் விசித்திரம்தான்.

பூனம் வீட்டின் வராண்டாவுக்கும் அறைகளுக்கும் இடையில் இருக்கும் முன் அறையில் நின்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பிகாரில் முன் அறையை பெரும்பாலும் ஆண்களும் மூத்தவர்களும்தான் பயன்படுத்துவார்கள். சற்று நேரம் கழித்து, அப்பகுதியில் வசித்த பிற பெண்களும் இணைந்தனர். அறைக்குள் சென்று நாங்கள் பேச அவர்கள் விரும்பியது போல் தெரிந்தது. ஆனாலும் நாங்கள் முன் அறையில்தான் பேசினோம்.

”என் மகளின் பிரசவத்தின்போது நாங்கள் பெனிபட்டி மருத்துவமனைக்குச் சென்றோம். வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாகதான் முடிவெடுத்திருந்தோம். கடைசி நிமிடத்தில்தான் மருத்துவச்சி ஊரில் இல்லை என்கிற தகவல் எங்களுக்கு தெரிய வந்தது. எனவே என் மகனும் நானும் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிரசவத்தின்போது பணியிலிருந்த செவிலியர் 500 ரூபாய் கேட்டார். நான் கொடுக்க முடியாது என சொன்னேன். விளைவாக, பிறப்புச் சான்றிதழ் பெற எங்களை அலைய வைத்துவிட்டார் அவர்,” என்கிறார் ராஜ்லக்‌ஷ்மி

சுகாதாரச் சங்கிலியின் கடைசிக் கண்ணியில் நேர்ந்த அந்த அனுபவம் போன்றவைதான் இங்கிருக்கும் ஏழைப் பெண்களின் துயரம் மற்றும் ஊசலாட்டம் ஆகியவற்றுக்கு பின்னிருக்கும் கதைகள்.

PHOTO • Jigyasa Mishra

அவர்கள் அனைவரும் பணம் கேட்கிறார்கள். அதனால்தான் எங்கள் பெண் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களை நாங்கள் பெற முடியவில்லை,’ என்கிறார் சாந்தி தேவி

உள்கட்டமைப்பு வசதியின்மை, மருத்துவர்கள் இல்லாத நிலை, தனியார் மருத்துவத்தின் அதிகபட்சக் கட்டணம் மற்றும் திறமையின்மை முதலியவற்றால்தான் இந்த ஏழைப் பெண்கள் சமூக சுகாதார செயற்பாட்டாளர்களின் உதவியைச் சார்ந்திருக்கின்றனர். கிராமத்தின் மட்டத்தில் கோவிட்டுக்கு எதிராக முன்களத்தில் இருப்பவர்கள் சமூக சுகாதார செயற்பாட்டாளர்கள்தான்.

அனைவரும் தனிமை சிகிச்சையில் இருந்தபோது ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். தடுப்பூசி முகாம்கள், மருந்து விநியோகம், பேறுகால பராமரிப்பு முதலியப் பல பணிகளில் உயிருக்கு ஆபத்து நேரும் சூழள்களையும் பொருட்படுத்தாது இயங்கிக் கொண்டிருந்தனர்.

எனவே உள்ளூர் துணை செவிலியர், சுகாதார செயற்பாட்டாளர், அங்கன்வாடி பணியாளர் மட்டங்களில் சிறு அளவிலான ஊழல் எழும்போது பூனம், ராஜ்லக்‌ஷ்மி போன்றார் உதவியற்றவர்களாகி விடுகின்றனர். கேட்கப்படும் தொகைகள் குறைவாக தெரிந்தாலும் இங்கிருக்கும் ஏழைப் பெண்களுக்கு அவை மிகவும் அதிகமானவை.

சுகாதார செயற்பாட்டாளர்களிலும், இத்தகைய செயல்பாடுகளைச் செய்யும் சிலரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் கடுமையான அழுத்தத்தில் இருக்கின்றனர். பத்து லட்சத்துக்கும் மேலான சுகாதார செயற்பாட்டாளர்கள் நாடு முழுக்க கிராமப்புறங்களை பொது சுகாதார அமைப்புடன் இணைக்கும் வேலைகளை செய்கின்றனர். பலதரப்பட்ட முக்கியமான வேலைகளை அபாயகரமான சூழல்களில் அவர்கள் செய்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அவர்கள் 25 வீடுகளுக்கு செல்லும் வேலைகள் செய்தனர். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மாதத்தில் நான்கு முறையாவது கொரோனா பரிசோதனையை மக்களுக்கு எடுக்கும் பணி செய்தனர். அதுவும் மிகவும் குறைந்த பாதுகாப்புகளுடன் .

தொற்று வருவதற்கு முன்பு, 2018ம் ஆண்டில் 93,687 சுகாதார செயற்பாட்டாளர்கள் நல்ல ஊதியம் கோரி பெரிய அளவில் பிகாரில் போராடினர். மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பல வாக்குறுதிகளைக் கொடுத்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

தார்பாங்காவைச் சேர்ந்த சுகாதார செயற்பாட்டாளரான மீனா தேவி, ‘எவ்வளவு குறைவாக எங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அவர்கள் (குழந்தைகள் பெற்ற குடும்பத்தினர்) சந்தோஷமாகக் கொடுக்கும் பணத்தை வாங்காமல் எப்படி நாங்கள் பிழைக்க முடியும்?’ என்கிறார்

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் மீண்டும் அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். “1000 ரூபாய் ஊதிய உயர்வு போதாது. 21,000 ரூபாய் மதிப்பூதியத்துக்குக் குறைந்து ஒப்புக் கொள்ளக்கூடாது,” என்கிற கோஷம் முன்வைக்கப்பட்டது. சுகாதார செயற்பாட்டாளர்கள் அரசுப் பணியாளர்களாக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது பிகாரின் சுகாதார செயற்பாட்டாளர்கள் சராசரியாக 3,000 ரூபாய் பெறுகின்றனர். அந்த வருமானமும் சரிவரக் கொடுக்கப்படாமல் தேங்கிக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொருமுறை அவர்கள் வேலை நிறுத்தம் செய்யும்போதும் அரசு வாக்குறுதிகளைக் கொடுக்கிறது. பிறகு அவற்றை உதறி விடுகிறது. அரசுப் பணி ஊதியங்கள், ஓய்வூதியங்கள், பணி ஆதாயங்கள் என எதுவும் அவர்களுக்குக் கிடையாது. சுகாதார செயற்பாட்டாளராகவோ அங்கன்வாடிப் பணியாளராகவோ வாழ்வதும் இயங்குவதும் மிகவும் கஷ்டம்

தார்பாங்காவில் சுகாதார செயற்பாட்டாளராக இருக்கும் மீனா தேவி சொல்கையில், “எவ்வளவு குறைவாக எங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அவர்கள் (குழந்தைகள் பெற்ற குடும்பத்தினர்) சந்தோஷமாக கொடுக்கும் பணத்தை வாங்காமல் எப்படி நாங்கள் பிழைக்க முடியும்?.  நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. எந்தத் தொகையும் கேட்பதுமில்லை. சந்தோஷத்துடன் அவர்கள் என்னக் கொடுத்தாலும் எங்களுக்கு நல்லதுதான். அது பிரசவத்துக்காக இருக்கலாம். பிறப்புச் சான்றிதழுக்காகவும் இருக்கலாம்,” என்கிறார்

அவருக்கும் மற்ற சிலருக்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். இத்தகைய செயல்களில் ஈடுபடாத லட்சக்கணக்கான சுகாதார செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மதுபானியில் இருக்கும் ஏழைப் பெண்களின் அனுபவமோ வேறாக இருக்கிறது. பிகாரின் பிற பகுதிகளில் பணம் கேட்கும் தகவலை சொல்வதால் மிரட்டப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.

மனோஜின் பெற்றோர், அவருடனும் பூனமுடனும் அவர்களின் முதல் மூன்று குழந்தைகளான 10 வயது அஞ்சலி, 8 வயது ராணி, 5 வயது சோனாஷி ஆகியோருடனும் வாழ்ந்தனர். இப்போது அவர்கள் உயிருடன் இல்லை. அவர்களின் இறப்புக்கு பிறகுதான் தற்போது இரண்டரை வயதாகும் ராஜா பிறந்தான். “என் மாமியாருக்கு புற்றுநோய் இருந்தது. என்ன புற்றுநோய் எனத் தெரியவில்லை. 4-5 வருடங்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார். பிறகு என் மாமனார் மூன்று வருடங்களுக்கு முன் இறந்தார். இப்போது நாங்கள் ஆறு பேர் மட்டும்தான் இருக்கிறோம். பேரன் வேண்டுமென மாமனார் அதிகம் ஆசைப்பட்டார். ராஜாவை அவர் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என்கிறார் பூனம்

PHOTO • Jigyasa Mishra

என்னுடைய மூன்றாவது பிரசவத்துக்குப் பிறகுதான் சுகாதாரச் செயற்பாட்டாளர் பணம் கேட்டார். அப்போதுதான் பிறப்புச் சான்றிதழ் பற்றியே எனக்குத் தெரியும்’

“முன்பெல்லாம் பிறப்புச் சான்றிதழ் பற்றி எனக்குத் தெரியாது,” என்கிறார் பூனம். 6ம் வகுப்பு வரை படித்தவர். அவரின் கணவர் 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். “என்னுடைய மூன்றாவது பிரசவத்துக்குப் பிறகு, சுகாதாரச் செயற்பாட்டாளர் பணம் கேட்டபோதுதான் பிறப்புச் சான்றிதழ் பற்றியே நான் தெரிந்து கொண்டேன். என் நினைவு சரியாக இருக்குமெனில் அவர் 300 ரூபாய் கேட்டார். அது வழக்கமான கட்டணம் என நினைத்தேன். பிறகு என் கணவர்தான் சான்றிதழுக்கென நாம் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை எனச் சொன்னார். மருத்துவமனையில் அதை இலவசமாக பெற வேண்டியது எங்களின் உரிமை.”

”250 ரூபாய் கொடுத்தால் நான் பிறப்புச் சான்றிதழ் தருகிறேன் என அவர் சொன்னார். 50 ரூபாய் குறைத்ததால் மகனுக்கான சான்றிதழைப் பெற்றோம். எங்களின் மகள்களின் சான்றிதழ்களுக்கென அவர் கேட்ட 750 ரூபாய் கொடுக்க முடியவில்லை,” என்கிறார் பூனம்.

“நாங்களே அவற்றை நேரடியாகப் பெற வேண்டுமெனில், பெனிபட்டி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கே பெருக்குபவருக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும். எனவே ஏதோவொரு வகையில் பணம் செலவழித்தாக வேண்டும். இங்கிருக்கும் சுகாதார செயற்பாட்டாளருக்கோ அல்லது பெனிபட்டியிலோ பணம் தேவையாக இருக்கிறது,” என்கிறார் பூனம். “அப்படியே விட்டுவிடலாம் என முடிவெடுத்தோம். எதிர்காலத்தில் அந்தச் சான்றிதழ்கள் தேவைப்படுமா எனப் பார்க்கலாம். என் கணவர் அதிகபட்சமாகவே ஒருநாளுக்கு 200 ரூபாய்தான் வருமானம் ஈட்டுகிறார். எங்களின் நான்கு நாள் வருமானத்தை சடாரென ஒரு விஷயத்தில் எப்படி செலவழிக்க முடியும்?” எனக் கேட்கிறார் பூனம்.

”ஒரு சுகாதார செயற்பாட்டாளரோடு வாக்குவாதம் கூட செய்திருக்கிறேன். பணம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்குமெனில் எங்களுக்கு அது வேண்டாமென தெளிவாகக் கூறினேன்,” என்கிறார் சாந்தி.

பூனத்தின் அண்டை வீட்டார்கள் வாரச்சந்தைக்கு கிளம்பி விட்டார்கள். அப்போதுதான் இரவுக்கு முன் சந்தையை அடைய முடியும். “சோனாக்‌ஷியின் தந்தைக்காக (பூனம் தன் கணவரை இப்படித்தான் அழைப்பார்) காத்திருக்கிறேன்,” என்கிறார் அவர். ”நாங்களும் சென்று காய்கறிகளோ மீனோ வாங்க வேண்டும். மூன்று நாட்களாக தொடர்ந்து பருப்பும் சாதமும்தான் செய்கிறேன். சோனாஷிக்கு மீன் பிடிக்கும்.”

பெண் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களையும் தாண்டிய அவசர வேலைகள் பல இருக்கின்றன போலும்.

கிராமப்புற பதின்வயது மற்றும் இளம்பெண்கள் பற்றிய செய்திகளளிக்கும் PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய திட்டம், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் ஒரு பகுதி ஆகும். இத்தகைய விளிம்புநிலை குழுக்களின் சூழலை சாதாரண மக்களின் வாழ்வனுபவங்களை கொண்டு ஆராய்வதற்கான முன்னெடுப்பு.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய வேண்டுமா? [email protected] மற்றும் [email protected] மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஜிக்யாசா மிஷ்ரா பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றியச் செய்திகளை தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீன இதழியல் மானியத்தின் வழியாக அளிக்கிறார். இந்தக் கட்டுரையின் உள்ளட்டக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை தன்னுடைய அதிகாரத்தை செலுத்தவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Jigyasa Mishra

جِگیاسا مشرا اترپردیش کے چترکوٹ میں مقیم ایک آزاد صحافی ہیں۔ وہ بنیادی طور سے دیہی امور، فن و ثقافت پر مبنی رپورٹنگ کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jigyasa Mishra
Illustration : Jigyasa Mishra

جِگیاسا مشرا اترپردیش کے چترکوٹ میں مقیم ایک آزاد صحافی ہیں۔ وہ بنیادی طور سے دیہی امور، فن و ثقافت پر مبنی رپورٹنگ کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jigyasa Mishra

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Series Editor : Sharmila Joshi

شرمیلا جوشی پیپلز آرکائیو آف رورل انڈیا کی سابق ایڈیٹوریل چیف ہیں، ساتھ ہی وہ ایک قلم کار، محقق اور عارضی ٹیچر بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز شرمیلا جوشی
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan