“மேய்ச்சலை செய்வது எங்களின் தலைமுறைக்கு கடினமான விஷயம்,” என்கிறார் போர்த்தெய்ன் கிராமத்துக்கு சற்று தூரத்தில் அமைந்திருக்கும் பெஹ்லியை சேர்ந்த இளம் பகர்வாலான தலிப் கசானா. தொலைதூரக் கல்வியில் அவர் அரசியல் அறிவியல் படிப்பில் முதுகலை படித்து வருகிறார்.
மேய்ச்சல் சமூகமான பகர்வால்கள் பெருங்குழுக்களாக இமயத்தில் தங்களின் கால்நடைகளுக்காக மேய்ச்சல் நிலங்களை தேடி செல்வார்கள். தலிப் சொல்கையில், “கிராமத்தில் தங்கி ஆடுகள் மேய்ப்பதற்கு பதிலாக, நாங்கள் படிக்கத் தொடங்கிவிட்டால், பிற விஷயங்களும் எங்களுக்கு பழக்கமாகும்… எங்களுக்கு மூடப்பட்ட கழிவறை வேண்டும். ஒரு இடத்தில் தங்கிப் படிக்க வேண்டும்,” என்கிறார்.
தலிப், ஜம்முவின் கத்துவா மாவட்டத்திலுள்ள சிறு பகர்வால் வசிப்பிடத்தில் வாழ்கிறார். அரை நிரந்தர வசிப்பிடமான அதில் வாழ்பவர்களுக்கு நிலத்தின் மீது உரிமை கிடையாது.
இந்த அரை மேய்ச்சல் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பல இளைஞர்கள் கடந்த பத்து வருடங்களாக தங்களின் பாரம்பரிய வாழ்க்கைகளிலிருந்து விலகி உயர்கல்விக்கு சென்று கொண்டிருக்கின்றனர். பணம் இருந்தால் அவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசியல் அல்லது சிவில் வேலைகளில் சேர விரும்புகின்றனர்.
பகர்வால் குடும்பத்தில் இரண்டு மகன்கள் இருந்தால், ஒருவர் செம்மறியை பார்த்துக் கொள்வார். அடுத்தவர் வெளியே வேலை தேடுவார். தலிப் கசனா, கல்வியை தொடரும் திட்டத்தில் இருக்கிறார். ஆனால் அவரின் தம்பிக்கு ஆடு வளர்ப்பதில் விருப்பமில்லை. அவரும் வெளியே வேலைக்கு முயல விரும்புகிறார். ஆனால் அவரின் அண்ணன், “நம்மை போன்ற மக்களுக்கு வேலைகள் இல்லை,” என எச்சரிக்கிறார்.


இடது: (இடதிலிருந்து வலது) அல்தாஃப் உசேன், முனாபர் அலி, ஹனீஃப் சவுத் மற்றும் முகமது தலிப் ஆகியோர் பைரா குபை கிராமத்தின் தற்காலிக பகர்வால் வசிப்பிடத்தில் வாழ்கின்றனர். வலது: கத்துவா மாவட்டத்தின் பகர்வால் கிராமத்தின் ஒரு மண் வீடு


இடது: பகர்வால் சமூகத்தை சேர்ந்த நகீனா, அவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கிறார். வலது: ‘பாரம்பரிய வாழ்க்கைமுறைகளில் பிழைப்பது சமூகங்களுக்கு கடினமாகிக் கொண்டே வருகிறது,’ என்கிறார் ஷரீஃப் கசானா என்கிற மேய்ப்பர்
தலிபின் உணர்வுகளை மூத்தவரான முனாபர் அலியும் பிரதிபலிக்கிறார். பகர்வால் சமூகத்தை சேர்ந்த அவர், கத்துவா மாவட்டத்தின் பைரா குபை கிராமத்தில் வசிக்கிறார். அவர் சொல்கையில், “என் மகள் 12ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருக்கிறாள்,” என்கிறார்.
தச்சர் வேலை பார்க்கும் முனாபர் அலி, மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார். “எங்களின் குழந்தைகள் பட்டப்படிப்பு முடித்தாலும் பெரிய மாற்றம் நேர்வதில்லை. உயர்ந்த பதவிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.”
எனினும் பகர்வால் குடும்பங்கள் கல்விக்கு பணம் செலவழிக்க விரும்புகின்றன. முகமது ஹனீஃப் ஜட்லா ஜம்மு மாவட்டத்தின் சந்தி கிராமத்திலுள்ள பகர்வால் குடும்பத்தில் பிறந்தவர். ஆறு குழந்தைகளில் ஒருவரான அவர், முதல் சில வருடங்களை ஆடுகள், செம்மறிகள், குதிரைகள் இருந்த சூழலில் கழித்தார். அவரின் தாய் திடீரென இறந்தபிறகு, தாத்தாவின் சேமிப்பை பயன்படுத்தி குடும்பம் அவரை பள்ளிக்கு அனுப்பியது.
கல்லூரியில் ஹனீஃப் இருந்தபோது, “என் தந்தை எல்லா கால்நடைகளையும் விற்று கால் ஏக்கர் நிலம் வாங்கினார்,” என்கிறார். குடும்பத்தின் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என எண்ணி தந்தை நிலத்தை வாங்கியதாக சொல்கிறார் அவர். குழந்தைகளும் படித்து நல்ல வேலைகள் பெறும் என அவரின் தந்தை நினைத்திருக்கிறார். உள்ளூர் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக ஹனீஃப் பணியாற்றுகிறார்.


இடது: உறவினருடன் அமர்ந்திருக்கும் ஹனீஃப் ஜட்லா. அவர் உள்ளூர் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக பணிபுரிகிறார். வலது: ஃபயாஸ், ஜம்மு நகரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர். பல இளம் பகர்வால்கள் கல்லூரிக்கு செல்கின்றனர். அரசாங்க வேலைகள் தேடுகின்றனர்


இடது: சர்ச்சைக்குரிய நிலத்தில் வீடுகள் கட்டியிருக்கும் பல பகர்வால் குடும்பங்களுக்கு கல் வீடு கட்டுவது ஒரு கனவு. வலது: மேய்ச்சல் மற்றும் விவசாய நிலம் பல, தற்போது வேலி அடைக்கப்பட்டு வெளியேற்றங்களை செய்யும் CAMPA-வுக்கு (காடு வளர்ப்பதற்கான நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம்) ஒப்படைக்கப்படுகின்றன
பகர்வால்கள் பழங்குடியாக அம்மாநிலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். 2013ம் ஆண்டின் அறிக்கை யின்படி அவர்களின் மக்கள்தொகை 1,13, 198. பெரும்பாலான பகர்வால்களிடம் நிலம் இல்லை. பொது நிலம் குறைய குறைய மேய்ச்சல் நிலமும் குறைகிறது. நிரந்தர வசிப்பிடம் கூட பிரச்சினையில்தான் இருக்கிறது.
ஜம்மு மாவட்டத்தின் பஜால்தா டவுனருகே இருக்கும் வசிப்பிடங்களை சேர்ந்த பர்வேஸ் சவுதரி சொல்கையில் பல வருடங்கள் அதே இடத்தில் வசித்து வந்தாலும் அவருக்கோ அவரது சமூகத்தினருக்கோ நிலவுரிமையோ எந்த ஆவணமுமோ இல்லை என்கிறார். மேய்ச்சல் மற்றும் விவசாய நிலத்தில் பல பகுதிகளில் வேலி அடைக்கப்படுகின்றன. பெரியளவிலான வெளியேற்றங்களை செய்யும் CAMPA-வுக்கு (காடு வளர்ப்பதற்கான நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம்) ஒப்படைக்கப்படுகின்றன.
“பெரும்பாலான பகர்வால்கள் அரசின் நிலத்திலோ காட்டு நிலத்திலோதான் வசிக்கின்றனர். இதை எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டால், நாங்கள் எங்கே செல்வது?” எனக் கேட்கின்றனர் முகமது யூசுஃப்ஃபும் ஃபிர்தோஸ் அகமதுவும். இருவரும் 30 வயதுகளில் இருக்கின்றனர். விஜய்பூர் அருகே இருக்கும் பகர்வால் காலனியில் வசிக்கின்றனர்.
அவர்களின் வசிப்பிடத்திலும் தலிப் வசிக்கும் பைரா குபையிலும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. மேலும் காட்டிலாகாவால் அகற்றப்படக் கூடிய தொடர் மிரட்டல்கள் இருப்பதால் தற்காலிக வீடுகளை கல் வீடுகளாக கூட அவர்களால் மாற்ற முடியவில்லை என சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் சாலைகள் இல்லாததும் அவர்களுக்கு கவலை தருகிறது. “யாரேனும் நோய்வாய்ப்பட்டால், மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்வது கடினமாக இருக்கிறது.”


இடது: சமூகத்தை சேர்ந்த பெண்கள், அருகே நீர் கிடைக்காத நிலை இருப்பதால் மூன்று, நான்கு கிலோமீட்டருக்கு நீர் சுமந்து வரும் நிலை இருக்கிறது. வலது: நாற்பது வயதுகளில் இருக்கும் நூர் முகமது செப்சிஸ் நோயிலிருந்து மீண்டு வருகிறார். பதான்கோட்டில் முழங்கால் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை கட்டணத்துக்காக எல்லா சேமிப்பையும் செலவழித்து இப்போது கடனில் இருப்பதாக குடும்பம் சொல்கிறது


இடது: இடப்பெயர்வால் சந்திக்கும் சவால்களை குறித்து முகமது தலிபும் ஹனீஃப் சவுதும் பேசுகின்றனர். வலது: பகர்வால் சமூகத்துக்கு வழக்கறிஞராக பணியாற்றும் முகமது அக்ரம்
அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், மலையில் பெண்கள் ஏறுவதையும் கனமான பானைகளை தலையில் சுமந்து இறங்குவதையும் எங்களால் பார்க்க முடிந்தது. சில மணி நேரங்கள் கழித்து நாங்கள் கிளம்பும் நேரத்திலெல்லாம், அவர்களில் ஒவ்வொருவரும் பலமுறை மலை ஏறி இறங்கியிருந்தனர்.
நகிலா, பகர்வால் சமூகத்தின் சட்ட, நில, பண்பாட்டு உரிமைகளுக்காக ஜம்முவில் போராடிக் கொண்டிருக்கும் மாணவ செயற்பாட்டாளர் ஆவார். பகர்வால் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைகளை மாற்ற முடியுமென அவர் நம்புகிறார். “கல்வி கிடைக்கவும் நிலவுரிமைக்காகவும் வசதிகளுக்காகவும் அரசாங்கத்தின் ஆதரவுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்,” என்கிறார் அவர்.
பிற கோரிக்கைகளுடன் பகர்வால் இளைஞர்கள், நாடோடிகளின் தேவைகள் பற்றிய முறையான கணக்கெடுப்பும் நல்ல வீடுகளும் வேண்டுமென கோருகின்றனர். அரசாங்க அமைப்புகளில் பழங்குடி பிரதிநிதித்துவம் வேண்டுமென விரும்புகிறார்கள்.
பகாடி சமூகத்துக்கு பழங்குடி அந்தஸ்து கொடுக்க முனையும் மாநில அரசாங்கத்தின் நகர்வு, பழங்குடி ஒதுக்கீடுக்குள் போட்டியை உருவாக்கும் என பகர்வால்கள் கருதுகின்றனர்.
பாரம்பரிய தொழிலை தொடர்வதா அல்லது புது வேலைகள் தேடுவதா என்கிற கேள்விகளில் பெஹ்லியின் பகர்வாலான அப்துல் ரஷீது, “நாங்கள் இங்கும் அல்ல, அங்கும் அல்ல,” என்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்