நீதிபதி… ஏன் வேலை பார்க்கவில்லை ?
ப்ராட்ஸ்கி: நான் வேலை பார்த்தேன். கவிதைகள் எழுதினேன்.

ீதிபதி: வேலை பறிபோன சமயத்தில் கூட ஏன் எந்த வேலையும் செய்ய முயற்சிக்கவில்லை என்பதை நீதிமன்றத்துக்கு விளக்குங்கள் ப்ராட்ஸ்கி.
ப்ராட்ஸ்கி: நான் வேலை பார்த்தேன். கவிதைகள் எழுதினேன்.

இதழியலாளர் ஃப்ரிடா விக்தொரோவா 1964ம் ஆண்டில் பதிவு செய்த இரு நீண்ட விசாரணைகளில் 23 வயது ரஷ்ய கவிஞரான ஐயோசிஃப் (ஜோசப்) அலெக்சாண்ட்ரோவிச் ப்ராட்ஸ்கி, தேசத்துக்கும் எதிர்கால தலைமுறைகளுக்கும் தன் கவிதை பயன்படும் என வாதாடுகிறார். ஆனால் அந்த வாதத்தை ஏற்காத நீதிபதி, ஐந்து ஆண்டுகால சிறைவாசத்தையும் கடும் உழைப்பையும் சமூக ஒட்டுண்ணித்தனத்துக்கான தண்டனையாக கொடுத்தார்.

முடிவடையும் இந்த வருடத்தில் பல கவிதைகளை பாரி பிரசுரித்திருக்கிறது. பல பாடகர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. நாட்டுப்புற பாடல்களுக்கான புதிய பெட்டகத்தை உருவாக்கியிருக்கிறது. பல பாடல்களை அதில் இணைத்திருக்கிறது.

ஏன் கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்? அது உண்மையில் ‘வேலை’தானா? அல்லது ப்ராட்ஸ்கியை தண்டித்தவர்கள் கூறியது போல, சமூக ஒட்டுண்ணித்தனமா?

கவிஞனின் ‘வேலை’ எனப்படுவதன் மதிப்பு, தொடர்பு, உண்மைத்தன்மை பற்றிய கேள்விகள், பல்லாண்டு காலமாக தத்துவவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருந்து வருபவைதாம். கல்வித்துறை சேர்ந்த பலரும், அதற்கு வெளியே இருக்கும் பலரும் கூட, வசதியாகவும் வேகமாகவும் கவிதையை புறம் தள்ளி விடுவார்கள். அறிவியல் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான அறிவிலிருந்து அதை பிரித்து வைப்பார்கள். அத்தகைய சூழலில் கவிதை, இசை மற்றும் பாடல்கள் நிறைந்த கிராமப்புற இதழியலின் உயிர்ப்பான ஒரு பெட்டகத்தை கொண்டிருப்பது நிச்சயம் தனித்துவமான விஷயம்.

படைப்பாற்றல் வெளிப்படும் எல்லா வடிவங்களையும் பாரி ஏற்கிறது. பல வகையான வாழ்க்கைக்கதைகளை அவை சொல்லும் என்பதால் மட்டுமின்றி, கிராமப்புற மக்களின் வாழ்க்கைகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் விதங்களிலும் புது வடிவங்களை அவை அறிமுகப்படுத்தும் என்பதே காரணம். இத்தகைய படைப்புவெளியில்தான் வரலாறையும் இதழியலையும் தாண்டி கூட்டு நனவிலிருந்தும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் வரும் கற்பனையின் வழியாக மனித அறிவை நாம் அடையக் கூடிய திறப்பு நேர்கிறது. நம் காலத்து மக்களின் வாழ்க்கைகளில் இயைந்திருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார இழைகளை ஆவணப்படுத்தும் இன்னொரு வழி இது.

இந்த வருடத்தில் பாரி பல மொழிகளில் கவிதைகளை பிரசுரித்திருக்கிறது. பச்மகாலி பிலி, ஆங்கிலம், இந்தி மற்றும் வங்காளி மொழிகள். ஒரு பேரனுபவத்தின் நடுவே தனி நபரை நிறுத்தி அவதானிக்கும் கவிதைகள் நம் காலத்தின் சாட்சியங்கள் ஆகும். தனி அனுபவங்களில் இருக்கும் பதற்றங்களை கிராமத்தை மறுக்கும் பழங்குடி போன்றவை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. மொழிகள் கொண்டிருக்கும் ஆணாதிக்கதன்மை மீது கோபம் கொண்டு, எதிர்ப்புக்கான புதுவெளிகளை நூலாக தொங்கும் வாழ்க்கைகளும் மொழிகளும் போன்றவை உருவாக்கியிருக்கின்றன. கொடுங்கோல் ஆட்சியாளர்களின் பொய்களை அன்னமிடுபவரும் அரசாங்க அதிகாரியும் போன்றவை வெளிப்படுத்தியிருக்கின்றன. இன்னும் ஒரு புத்தகம் மற்றும் மூன்று அண்டைவீட்டார் கதை போன்றவை வரலாற்றின் உண்மையை ஒருமித்து அச்சமின்றி பேசும் தன்மையை முன் வைத்திருக்கின்றன.

எழுதுதல் என்பது ஓர் அரசியல் நடவடிக்கை. The Grindmill Songs பணியை கேட்கும்போது, கவிதை எழுதுவதும் பாடல் எழுதுவதும் கூட்டுழைப்பு, பெண்களின் ஒற்றுமை மற்றும் எதிர்ப்புணர்ச்சி ஆகியவற்றின் கலவை என்பதை புரிந்து கொள்ள முடியும். இப்பாடல்கள், காலத்திலும் பண்பாட்டிலும் உணர்வுகளிலும் புதைந்திருக்கும் ஒருவரின் வாழ்க்கைச் சூழலை உணர்த்தும் வழி. கிராமப்புற மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 1,00,000 நாட்டுப்புற பாடல்களை கொண்டிருக்கும் இத்தொகுப்பில், 3,000 பெண்கள் தம் உலகங்களின் பல்வேறு தன்மைகளை பற்றி பாடியிருக்கும் அற்புதமான பாடல்களை பாரி இந்த வருடம் சேர்த்திருக்கிறது.

பாரியின் பன்முகத்தன்மை இந்த வருடத்தில், கட்ச்சி நாட்டுப்புற பாடல்களை கொண்ட Songs of the rann என்கிற புதிய பல்லூடக பெட்டகத்தால் அதிகரித்திருக்கிறது. கட்ச்ச் மகிளா விகாஸ் சங்காதனுடன் (KMVS) இணைந்து தொடங்கப்பட்டு தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் இத்தொகுப்பில் காதல், ஏக்கம், இழப்பு, திருமணம், பக்தி, தாய்நாடு, பாலின விழிப்புணர்வு, ஜனநாயக உரிமைகள் ஆகிய கருப்பொருட்களில் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இசை வரும் நிலத்தின் பன்முகத்தன்மையோடு இதற்கான பெட்டகமும் அமைந்திருக்கிறது. குஜராத்தை சேர்ந்த 305 வாத்தியக்காரர்களும் பாடகர்களும் இசைஞர்களும் இசைத்த பல வகை இசை வடிவங்கள் இப்பெட்டகத்தில் இருக்கின்றன. ஒரு காலத்தில், கச்சின் வாய்மொழி பாரம்பரியத்தில் தழைத்த இசை, இப்போது பாரியில் இருக்கிறது.

மேட்டுக்குடிக்கும் உயர்கல்வி பெற்றோருக்கும் மொழிப்புலமை கொண்டோருக்கும் மட்டுமே கவிதை வடிவம் என்கிற எண்ணத்தை பாரி கவிதைகள் மாற்றியிருக்கிறது. கவிதை மற்றும் நாட்டுப்புற பாடல்கள் இடையே பேதம் பார்க்காமல், பன்முகத்தன்மை வாய்ந்த இந்த பாரம்பரியத்தை உருவாக்கியவர்களையும் மெய்யான பாதுகாவலர்களையும் நாங்கள் முன்னிறுத்துகிறோம். எல்லா வர்க்கங்களையும் சாதிகளையும் பாலினங்களையும் சேர்ந்த சாமானிய மக்கள்தான் அவர்கள். எளிய மக்களின் போராட்டங்களையும் துயரங்களையும் பாடும் அதே நேரத்தில் அம்பேத்கர் பற்றியும் சமத்துவம் குறித்தும் பாடும் கடுபாய் காரத் , சாகிர் தாது சால்வே போன்றோர்தான் வெகுஜன அரசியலுக்கான கவிதைகளை உருவாக்குகின்றனர். சாந்திப்பூரை சேர்ந்த எளிய தேங்காய் வியாபாரியான சுகுமார் பிஸ்வாஸ் , 1971ம் ஆண்டின் வங்கப் போருக்கு பின் அவர் வாழ்ந்து சேகரித்த அனுபவங்களை கொண்டு மெய்ஞ்ஞான பாடல்களை அழகாக பாடுகிறார். மேற்கு வங்கத்தின் பிர்ரா கிராமத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான லோக்கிகாந்தோ மஹாதோ , 97 வயதில் தன் ஆழமான குரலில் பாடும் பாடல்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது நம்பிக்கைக்கான நெருப்பை மூட்டியெழுப்ப இசையும் பாடல்களும் எப்படி பயன்பட்டன என்பதை எடுத்துரைக்கின்றன.

கவிதைகளும் பாடல்களும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே எழுதப்படுகின்றன என யார் சொன்னது? பாரியில் நாம் பிரசுரித்திருக்கும் பல பாடல்களின் வித்தியாசமான வரிகள் பல்வேறு வண்ணங்களையும் கோணத்தையும் அவற்றுக்கு வழங்கியிருக்கின்றன. எண்ணற்ற கலைஞர்கள் தம் தனித்துவ பாணியில் பாடியிருக்கும் ஆழப்பதியத்தக்க பாடல்கள் தற்போது பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் அங்கமாக ஆகியிருக்கிறது.

விளக்கப்படங்கள் பாரிக்கு புதிதில்லை. விளக்கப்படங்களை பயன்படுத்தி கதையை விவரிக்கும் பல கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறோம். குழந்தைகள் தொலைந்து போகும்போது… போன்ற கட்டுரைகளில் அறவுணர்வின் காரணமாக விளக்கப்படங்களை பயன்படுத்தியிருக்கிறோம். இன்னொரு கட்டுரையில், எழுதுபவரே ஓவியராக இருந்ததால், புகைப்படங்களுக்கு பதிலாக புதிய அர்த்தத்தையும் அழுத்தத்தையும் கட்டுரை க்கு தர ஓவியங்களை பயன்படுத்தினார். பாரியில் பாடகருக்கும் கவிஞருக்கும், ஓவியர்கள் தங்களின் கோடுகளை அளிக்கும்போது ஏற்கனவே வண்ணங்கள் நிறைந்த பக்கத்துக்கு கூடுதலான படிமங்களை சேர்கின்றன.

வண்ணமயமான பக்கங்களின் நெசவையும் இனி இங்கு காணுங்கள்.

இக்கட்டுரைக்கென புகைப்படங்களை தொகுக்க உதவிய ரிக்கின் சங்க்ளேச்சாவுக்கு குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

எங்களின் பணியில் உங்களுக்கு ஆர்வமிருந்தாலும் பாரிக்கு பங்களிக்க நீங்கள் விரும்பினாலும் [email protected] மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுடன் பணியாற்ற சுயாதீன எழுத்தாளர்களையும் செய்தியாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் ஆவணப்பட இயக்குநர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் கட்டுரை ஆசிரியர்களையும் விளக்கப் பட ஓவியர்களையும் ஆய்வாளர்களையும் வரவேற்கிறோம்.

லாபம் கருதி நடத்தப்படும் நிறுவனம் அல்ல, பாரி. எங்களின் பன்மொழி இணைய பத்திரிகையையும் பெட்டகத்தையும் ஆதரிக்கும் மக்களின் நன்கொடைகளை சார்ந்து நாங்கள் இயங்குகிறோம். பாரிக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால் DONATE என்ற வார்த்தையில் க்ளிக் செய்யவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Joshua Bodhinetra

Joshua Bodhinetra is the Content Manager of PARIBhasha, the Indian languages programme at People's Archive of Rural India (PARI). He has an MPhil in Comparative Literature from Jadavpur University, Kolkata and is a multilingual poet, translator, art critic and social activist.

Other stories by Joshua Bodhinetra
Archana Shukla

Archana Shukla is a Content Editor at the People’s Archive of Rural India and works in the publishing team.

Other stories by Archana Shukla
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan