தரையில் அமர்ந்திருக்கும் நிஷா விசிறிக் கொண்டிருக்கிறார். ஜூன் மாதத்தின் நாளொன்றின் பிற்பகலில் வெயில் ஏறிக் கொண்டிருக்கிறது. புகையிலையின் நெடி காற்றில் அடர்ந்திருக்கிறது. “நான் மட்டும்தான் இந்த வாரத்தில் அதிக பீடிகளை செய்தேன்,” என்கிறார் அவர் 17 பீடிகள் வீதம் கட்டப்பட்டிருக்கும் சுமார் 700 பீடிக் கட்டுகளை காட்டி. “இவை அநேகமாக 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம்,” என்கிறார் 32 வயது பீடித் தொழிலாளி அந்த வாரம் தான் செய்த வேலை குறித்து. ஆயிரம் பீடிகள் 150 ரூபாய் கொடுக்கும்.

ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பீடித் தொழிலாளிகள் தாங்கள் சுற்றிய பீடிகளை கொண்டு வந்து, அடுத்த பீடி சுற்றலுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை பெறுவார்கள். தாமோ நகரத்தின் வெளிப்புறத்தில் பல ஆலைகள் இருக்கின்றன. அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் வேலை கொடுப்பார்கள். அவர்களோ வேலைகளை பிரதானமாக பெண்களுக்குக் கொடுப்பார்கள்.

தங்களுக்கான மூலப்பொருட்களை எடுத்துக் கொண்டு வாரம் முழுக்க பீடி இலைகளை புகையிலை வைத்து சுற்றி மெல்லிய நூல்களை கொண்டு கட்டுகளாக பெண்கள் கட்டுவார்கள். இந்த வேலையை வீட்டு வேலைகள் முடித்து, 10,000 - 20,000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட அவர்கள் செய்கின்றனர் 8-10 பேர் கொண்ட குடும்பங்களை நடத்த இந்த வருமானம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர்.

“காய்ந்த தும்பிலி இலைகளிலிருந்து நரம்புகள் வெளியே வர, நீரில் ஊற வைக்கப்பட வேண்டும். பிறகு இலைகள் சிறு செவ்வகங்களாக ஃபார்மா என்ற இரும்புக் கருவி கொண்டு வெட்டப்படும். ஜர்தா (புகையிலை) அதற்குள் வைக்கப்பட்டு, இலைகள் சுற்றி பீடியாக செய்யப்படும்,” என விளக்குகிறார் நிஷா. நிறுவனத்தின் பெயரை தெரிவிக்கும் வண்ணக் கயிறும் ஒவ்வொரு பீடியிலும் கட்டப்படும்.

பிறகு இவற்றைக் கொண்டு சென்று பீடி ஆலையில் விற்பார்கள். அதுதான் பீடி செய்யும் நிறுவனத்தின் ஆலை. ஒப்பந்ததாரர்களிடம் கொடுப்பார்கள். பிறகு ஒப்பந்ததாரர்கள், அவர்களை ஆலைக்கு அழைத்து செல்வார்கள். அல்லது அவர்களே பணம் கொடுப்பார்கள். ஆலைக்குள், பீடிகள் வரிசையாக்கப்பட்டு, வேக வைக்கப்பட்டு, பொட்டலம் போடப்பட்டு சேமிக்கப்படும்.

PHOTO • Priti David
PHOTO • Kuhuo Bajaj

சிந்த்வாரா மற்றும் பிற பகுதிகளில் நெருக்கமாக இருக்கும் தும்பிலி காடுகள், பீடி தயாரிக்க தேவைப்படும் தும்பிலி இலைகளை அதிகம் கொண்டிருக்கிறது. வலது: வீட்டுப்பணிகளுக்கு இடையே பீடிகள் சுற்றும் நிஷா

இங்கு பீடி சுற்றுபவர்களில் பெரும்பாலும் இஸ்லாமிய பெண்கள்தான். பிற சமூகத்தினரும் இந்த வேலை செய்கின்றனர்.

தமோவில் இருக்கும் 25 ஆலைகளும் அங்கு தொடக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் சுற்றியுள்ள மத்தியப்பிரதேச மாவட்டங்கள் கொண்டிருக்கும் ஏராளமான தும்பிலி காடுகள்தாம். மத்தியப்பிரதேசத்தின் 31 சதவிகித அளவு காடு இருக்கிறது. சியோனி, மண்ட்லா, செகோரே, ரெய்சன், சாகர், ஜபால்பூர், கத்னி மற்றும் சிந்த்வாரா ஆகிய மாவட்டங்களில் பீடி தயாரிக்க தேவைப்படும் தும்பிலி இலைகள் அதிகம் கிடைக்கின்றன.

*****

ஒரு கோடைகால மதிய வெளையில், வண்ணமயமான சல்வார் கமீஸ் உடைகளை அணிந்து அரை டஜன் பெண்கள், தங்களின் பீடிகள் எண்ணப்பட காத்திருக்கின்றனர். அருகே உள்ள மசூதியிலிருந்து வெள்ளிக்கிழமை நமாஸுக்கான அழைப்பு அவர்களின் பேச்சு மற்றும் தேகெதாருடனான விவாதம் ஆகியவற்றை தாண்டி கேட்கிறது. தஸ்லாக்கள் எனப்படும் இரும்பு பாத்திரங்களில் ஒரு வார பீடிகளை கொண்டு பெண்கள் அமர்ந்திருக்கின்றனர்.

அமினாவுக்கு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) எண்ணிக்கையில் திருப்தி இல்லை: “நிறைய பீடிகள் இருந்தன. ஆனால் தேகேதார் அவற்றை எண்ணும்போது தவிர்த்துவிட்டார்,” என்கிறார் அவர். அப்பெண்கள் தங்களை பீடி தொழிலாளர்களாக குறிப்பிடுகின்ற்னார். 1,000 பீடிகளுக்கு அவர்கள் போட்ட உழைப்புக்கு 150 ரூபாய் விலை நியாயமில்லை என்கின்றனர்.

“இதற்கு பதிலாக தையல் வேலை செய்யலாம். அது எனக்கு அதிகம் வருமானம் கொடுக்கும்,” என்கிறார் தமோவை சேர்ந்த முன்னாள் பீடி தயாரிப்பாளரான ஜானு. எனினும் அவர் தொடங்கிய 14 வயதில், “என்னிடம் வேறு திறனோ வாய்ப்போ இருக்கவில்லை,” என்கிறார் அவர்.

PHOTO • Kuhuo Bajaj

பீடி தயாரிக்க ஜர்தா (இடது) தும்பிலி இலைகளில் சுற்றப்படுகிறது

பல மணி நேரங்கள் குனிந்திருப்பது கடுமையான முதுகு மற்றும் கழுத்து வலியை பணியாளர்களுக்கு தருகிறது. கைகள் மரத்துப்போய், வீட்டு வேலைகள் செய்வதும் கடினமாகி விட்டது. மருத்துவத்துக்கென எந்த உதவியோ நிவாரணமே அப்பெண்களுக்கு கிடையாது. ஆலை உரிமையாளர்கள், அவர்களின் கஷ்டங்களை கண்டு கொள்வதில்லை. ஓர் உரிமையாளர், “வீட்டில்தானே பெண்கள் அமர்ந்து பீடி சுற்றுகின்றனர்,” என அவர்களின் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் இச்செய்தியாளரிடம் கூறினார்.

“வாரத்துக்கு அவர்கள் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்,” என்கிறார் அவர். வீட்டு செலவுகளை சமாளிக்க அது நல்ல வாய்ப்பு, என்றும் கூறுகிறார். ஆனால் வாரத்துக்கொரு முறை இந்த 500 ரூபாயை பெற, ஒரு பணியாளர் கிட்டத்தட்ட 4,000 பீடிகள் சுற்ற வேண்டும்.

நாம் பேசிய எல்லா பெண்களுமே உடல் ரீதியான அழுத்தம் மற்றும் காயங்கள் பற்றி புகார் கூறியிருக்கின்றனர். ஈரமான இலைகளை தொடர்ந்து சுற்றுவதும் புகையிலை உடனான தொடர்பும் தோல் பிரச்சினைகளையும் கொடுக்கின்றன. “என் கைகளில் வெட்டுக் காயங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் தடங்கள் கூட இருக்கின்றன,” என்கிறார் ஒரு பணியாளர் தன் கைகளில் இருக்கும் 10 வருட கால தடிப்புகளையும் கொப்புளங்களையும் காட்டி.

இன்னொரு பணியாளரான சீமா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) சொல்கையில், ஈர இலைகளை தொடர்ந்து பயன்படுத்துகையில் ஏற்படும் பாதிப்பை போக்க, “போரோலைன் என்கிற மருந்தை தூங்குவதற்கு முன் கைகளில் தடவுகிறேன். இல்லையெனில் புகையிலை மற்றும் ஈர இலைகளால் என் தோல் உறிந்து விடும்.” 40 வயதாகும் அவர் மேலும் சொல்கையில், “புகையிலை நான் பிடிப்பதில்லை. ஆனால் அதன் மணம் வந்தாலே எனக்கு இருமல் வந்துவிடும்.” எனவே 12-13 வருடங்களுக்கு முன், அவர் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு, நகரத்தில் வீட்டுப் பணியாளராக வேலைக்கு சேர்ந்து மாதத்துக்கு 4,000 ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.

பல காலமாக ரசியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பீடி சுற்றி வருகிறார். இலைகளை எடைபோட்டுக் கொண்டிருக்கும் தேகேதாரை இடைமறித்து அவர், “என்ன மாதிரியான இலைகளை எனக்குக் கொடுக்கறீர்கள்? இவற்றைக் கொண்டு நல்ல பீடிகளை எப்படி தயாரிக்க முடியும்? பரிசோதிக்கும்போது இவற்றையெல்லாம் நீங்கள் புறக்கணித்து விடுவீர்கள்,” என்கிறார்.

PHOTO • Kuhuo Bajaj

புதன்கிழமைகளும் வெள்ளிக்கிழமைகளும் பீடித் தொழிலாளர்கள் ஆலைக்கு வந்து இலைகளையும் ஜர்தாவையும் பெறுவார்கள்

மழைக்காலம் இன்னொரு துயரம். ”நான்கு மாதம் நீடிக்கும் மழைக்காலத்தில், கிட்டத்தட்ட எல்லா பீடிகளும் குப்பைக்கு செல்லும்.” ஈர இலையில் சுற்றப்படும் பீடி, சரியாக காய வைக்க முடியாமல், வளைந்து மொத்த கட்டையும் குலைத்து விடும். “எங்களின் துணிகளையே (மழைக்காலத்தில்) நாங்கள் காய வைக்க முடியாது. ஆனால் பீடிகளை எப்படியேனும் காய வைக்க வேண்டும்.” இல்லையெனில் அவர்களுக்கு வருமானம் இல்லை.

தேகேதார் பீடியை புறக்கணித்தால், உழைக்கும் நேரம் போவதைத் தாண்டி, அவற்றை செய்ய பயன்பட்ட மூலப்பொருட்களை வாங்க ஆன செலவும் வருமானத்திலிருந்து கழியும். “பீடிகள் எண்ணப்பட நீண்ட வரிசை காத்திருக்கும். பிறகு நமக்கான வாய்ப்பு வரும்போது தேகேதார்கள் அதில் பாதியை எடுத்து விடுவார்கள்,” என்கிறார் ஜானு காத்திருப்பையும் பதற்றத்தையும் நினைவுகூர்ந்து.

நீளம், அடர்த்தி, இலைகளின் தரம், சுற்றுதல் போன்றவற்றை வைத்து பீடிகள் புறக்கணிக்கப்படும். “இலைகள் தக்கையாகி, சுற்றுகையில் கொஞ்சம் கிழிந்தாலோ நூல் தளர்வாக கட்டப்பட்டாலோ, பீடிகள் புறக்கணிக்கப்படும்,” என விவரிக்கிறார் அறுபது வயதுகளில் இருக்கும் பீடி தொழிலாளர். புறக்கணிக்கப்பட்ட பீடிகளை தேகேதார்களே எடுத்துக் கொண்டு குறைந்த விலைக்கு விற்கிறார்களென பணியாளர்கள் சொல்கின்றனர். “ஆனால் அதற்கான பணம் எங்களுக்கு கிடைப்பதில்லை. புறக்கணிக்கப்பட்ட பீடிகளையும் எங்களுக்கு தருவதில்லை.”

*****

பீடி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கென 1977ம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசாங்கம் பீடி தொழிலாளர்களின் நல நிதி சட்டத்தின் கீழ் பீடி அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது. பீடி அடையாள அட்டைகளின் நோக்கம் அடையாளம்தான் என்றாலும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, குழந்தை பிறப்பு பலன்கள், இறந்தவர்களின் இறுதி மரியாதைக்கான பண உதவி, கண் பார்வை பரிசோதனை, பள்ளி குழந்தைகளுக்கான நிதியுதவி போன்றவைகளை பெறவும் அவை பயன்படுகின்றன. பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர்களின் சட்டம் இப்பலன்களை பெற வழி வகுக்கிறது. அட்டைகள் வைத்திருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள், அவற்றை பயன்படுத்தி மானிய விலைகள் மருந்துகளை பெறுகின்றனர்.

“அதிகமொன்றும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் காய்ச்சலுக்கும் உடல் வலிக்கேனும் மருந்துகள் கிடைக்கின்றன,” என்கிறார் 30 வயது பீடி அடையாள அட்டை கொண்ட குஷ்பு ராஜ். 11 வருடங்களாக பீடி சுற்றி வரும் அவர், சமீபத்தில் வேலையை விட்டுவிட்டு, தாமோ நகரத்திலுள்ள சிறு வளையல் கடையில் உதவி விற்பனையாளர் பணியில் சேர்ந்திருக்கிறார்.

PHOTO • Kuhuo Bajaj

பீடி அடையாள அட்டை, பணியாளர்களை அடையாளப்படுத்துகிறது

அடையாள அட்டை பல பலன்களை உறுதிப்படுத்தினாலும் பீடி தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மானிய விலையில் மருந்துகளை பெற அவற்றை பயன்படுத்துகின்றனர். ஒரு அட்டை பெறுவதென்பது சிரமமான காரியம்

அட்டையை பெறுவதற்கு, “அதிகாரியின் முன் சில பீடிகளை நாங்கள் செய்து காட்ட வேண்டும்,” என்கிறார் குஷ்பு. “உண்மையாகவே எங்களுக்கு பீடி செய்யத் தெரியுமா அல்லது போலியாக அட்டை வாங்க வந்திருக்கிறோமா என அரசதிகாரி பரிசோதிப்பார்,” என்கிறார் அவர்.

”நாங்கள் அட்டை பெற்றால், எங்களுக்கான நிதியை அவர்கள் நிறுத்துவார்கள்,” என்கிறார் தன் முந்தைய கிராமத்தில் அட்டை பெற்ற ஒரு பெண். முறைகேடுகளுக்கு காரணமானவர்களை சுட்டிக் காட்ட பயப்படுகிறார். ஆனால் அவர், பணியாளர்களுக்கான பணத்தை உரிமையாளர்கள் நிறுத்தி அதை நிதிக்கு பயன்படுத்துவார்கள் என சொல்கிறார். 1976ம் ஆண்டு சட்டப்படி , அரசாங்கமும் சம அளவிலான பணத்தை இந்த நிதிக்கு அளிக்கிறது. பணியாளர்கள் இப்பணத்தை அவ்வப்போது எடுக்கலாம் அல்லது பீடி தயாரிப்பை நிறுத்தும்போது மொத்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு மாதங்களுக்கு முன் பீடி சுற்றும் வேலையை குஷ்பு நிறுத்தியபிறகு 3,000 ரூபாயை நிதிப் பணமாக பெற்றார். சில பணியாளர்களுக்கு இந்த நிதிமுறையில் ஆதாயம் இருக்கிறது. ஆனால் பலருக்கு, தங்களின் உழைப்புக்குக் கிடைக்கும் கூலியை விடக் குறைவாக பணம் கிடைப்பதாக தோன்றுகிறது. கூடுதலாக எதிர்காலத்தில் நிதி பணம் கிடைக்குமென எந்த உத்தரவாதமும் அவர்களுக்கு இல்லை.

பீடி அடையாள அட்டை பலன் கொண்டதாக இருப்பினும், அதை பெறுவதற்கான முறை கண்காணிக்கப்படாததாக இருப்பதால், சிலர் சுரண்டப்படும் வாய்ப்பை அது கொண்டிருக்கிறது. பீடி அடையாள அட்டை உருவாக்க உள்ளூர் மையத்துக்கு சென்றபோது, அதிகாரியால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை ஒருவர் நினைவுகூர்ந்தார். “என் மீது முழுவதுமாக பார்வையை ஓட்டி, அடுத்த நாள் வரச் சொன்னார். அடுத்த நாள் சென்றபோது, என் தம்பியை உடன் அழைத்து சென்றேன். ஏன் தம்பியை அழைத்து வந்ததாக கேட்ட அவர், தனியாக வந்திருக்க வேண்டுமென கூறினார்,” என்கிறார் அவர்.

அட்டை உருவாக்க வேண்டாமென அவர் மறுத்தபோதும், அந்த நபர் தொந்தரவு கொடுத்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். “அடுத்த நாள், அந்த பகுதியை நான் கடக்கும்போது, அவர் என்னை பார்த்து, அசிங்கமாக அழைத்தார். பிரச்சினை செய்தார்,” என்கிறார் அவர். “நான் ஒன்றும் தப்பான பெண் இல்லை. உன் விருப்பத்துக்கு இணங்க ஒன்றும் நான் வரவில்லை. இப்படியே செய்தால், உன்னை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வைத்து விடுவேன்,” எனச் சொல்லியிருக்கிறார். சம்பவத்தை நினைவுகூரும்போது, அவரின் கை முஷ்டிகள் இறுக்கி, குரல் உயர்ந்திருந்தது. “பெரிய தைரியம் தேவைப்பட்டது,” என்கிறார் அவர். “ட்ரான்ஸ்ஃபர் ஆவதற்கு முன், வேறு 2-3 பெண்களுக்கும் இதையேதான் அவன் செய்திருக்கிறான்.”

*****

PHOTO • Kuhuo Bajaj
PHOTO • Kuhuo Bajaj

இடது: பொட்டலம் போட்டு விற்பதற்கு தயாராக பீடிகள். வலது: அனிதா (இடது) ஜைன்வதி (வலது), முன்னாள் பணியாளர்கள் ஆகியோர் பீடி சுற்றும் அனுபவங்களை பேசுகின்றனர்

பெண்கள் ஒன்றிணையும்போது, முதுகுவலி, கை காயங்கள் ஆகியவற்றை மறந்து சிரித்து பேசிக் கொண்டிருப்பார்கள். இரு வாரத்துக்கு ஒருமுறை நடக்கும் கூட்டங்களும் ஒன்றிணையும் உணர்வை அவர்களுக்கு கொடுக்கிறது.

“இந்த சந்திப்புகளில் நேரும் உற்சாகமும் பேச்சும் என்னை சந்தோஷமாக்குகிறது. என்னால் வீட்டுக்கு வெளியே வர முடிகிறது,” என சில பெண்கள் இந்த செய்தியாளரிடம் கூறினர்.

குடும்பங்களை பற்றிய செய்திகள், பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் பற்றிய செய்திகள், பிறரின் ஆரோக்கியம் குறித்த மெய்யான கவலைகள் போன்ற பேச்சுகளால் காற்று நிறைந்திருக்கிறது. காலையில் நான்கு வயது பேரனை மாடு உதைத்தது பற்றி சீமா சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர், அண்டை வீட்டார் மகளின் திருமணம் குறித்த தகவலை சொல்கிறார்.

ஆனால் வீடுகளுக்கு அவர்கள் கிளம்பியபோது, சந்தோஷ சத்தங்கள் காணாமல் போயின. குறைந்த வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய கவலைப் பேச்சுகள் திரும்பின. பெண்கள் திரும்பி செல்கையில் எடுத்து செல்லும் குறைந்த வருமானம், அவர்கள் செலுத்தும் உழைப்புக்கு நியாயமில்லாததாக தெரிகிறது.

தான் அனுபவிக்கும் வலியையும் பிரச்சினைகளையும் சீமா நினைவுகூருகிறார்: “முதுகு, கைகள், எல்லாமும் அதிகம் வலி கொடுக்கிறது. நீங்கள் பார்க்கும் இந்த விரல்கள், பீடி சுற்றுவதால் வீங்கி விடும்.”

தங்களின் கவலைகளையும் கஷ்டங்களையும் தாண்டி மத்தியப்பிரதேச பீடி பணியாளர்கள், குறைவான ஊதியங்களுக்கு தொடர்ந்து உழைத்து வாழ்க்கையோட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சொல்வது போல, “எல்லாருக்கும் ஒரு பிரச்சினை இருக்கும். என்ன செய்வது.”

இக்கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழில் : ராஜசங்கீதன்

Student Reporter : Kuhuo Bajaj

Kuhuo Bajaj is an undergraduate student of Economics, Finance and International Relations at Ashoka University. She is keen to cover stories on rural India.

Other stories by Kuhuo Bajaj
Editor : PARI Desk

PARI Desk is the nerve centre of our editorial work. The team works with reporters, researchers, photographers, filmmakers and translators located across the country. The Desk supports and manages the production and publication of text, video, audio and research reports published by PARI.

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan