சஞ்சய் கோப் தனது எந்த அடியிலும் விழுந்தது கிடையாது. ஏனெனில் அவர் ஒரு அடி கூட எடுத்து வைத்ததில்லை. 18 வயதான அவர் தனது வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரை நான் பேங்கோவில் சந்தித்தேன். ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் உள்ள ஜடுகுடா (கணக்கெடுப்பில் ஜடுகோரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது) நகரத்தில் உள்ள இந்திய யுரேனிய நிறுவனத்தின் (UCIL) சுரங்கத்திற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் உள்ளது.

UCIL, இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம். இது 1967ம் ஆண்டு தனது முதல் சுரங்கத்தை தோண்டியது. இங்கிருந்து எடுக்கப்படும் தாதுக்கள் ஜடுகுடா மற்றும் அருகில் உள்ள 6 சுரங்கங்களில் அவற்றை சுத்திகரிக்கும் வேலைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிறக் கட்டிகளாக (யுரேனியம் ஆக்சைடுகளின் கலவை) உருவாக்கப்படுகிறது. அது ஹைதராபாத்துக்கு அணு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சஞ்சய்க்கு இரண்டு வயதானபோது, கவலையுற்ற அவரது பெற்றோர் இந்திய யுரேனியம் நிறுவனத்தின் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர். ஏனெனில் அவர் அதுவரை நடக்க துவங்கவேயில்லை. அவரது தந்தை தின்கூலித் தொழிலாளர். தாய் நெல் வயல்களில் வேலை செய்கிறார். இதே வேலைகளைதான் இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். சிலர் யுரேனிய சுரங்களில் வேலை செய்கிறார்கள். மற்றவர்களுக்கும் வேலை வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், தரப்படவில்லை என்று கூறுகிறார்கள். மருத்துவர்கள் சஞ்சய்யின் பெற்றோரிடம் கவலைப்பட ஒன்றுமில்லை என்று உறுதியாக கூறினார்கள். எனவே அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களின் மகன் தன் முதல் அடியையும் அல்லது எந்த அடியையும் கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.

பேங்கோவில் சஞ்சய் போல் பல குழந்தைகள் இருக்கின்றனர். பேங்கோவில் கிட்டதட்ட 800 பேர் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) வசிக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் சாண்டல், முண்டா, ஆர்யான், ஹோ, பும்ஜி மற்றும் கரியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிறவி குறைபாடுகளுடன் பிறந்தார்கள் அல்லது அதனால் இறந்தார்கள். 2007ம் ஆண்டு அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்கள் குழு தாக்கல் செய்த அறிக்கையில், இந்த பிறவிக் குறைபாடுகளினால், சுரங்கத்திற்கு அருகில் (0-2.5 கிமீ) வசிக்கும் மக்களின் இறப்புவிகிதம், தொலைவில் (அதாவது 30 முதல் 35 கிலோ மீட்டர் தொலைவில்) உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களின் இறப்பு விகிதத்தைவிட 5.86 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

இக்கிராமங்களில் உள்ள பெண்களுக்கு அதிகளவு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் வேலை செய்தவர்கள், சுரங்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு பகுதிகள் மற்றும் யுரேனிய தாதுக்களை சுத்திகரித்த நச்சு கழிவுகளை சேகரிக்கும் குளங்களுக்கு அருகில் வசித்த பலர் புற்றுநோய், காசநோய் போன்ற நோய்களினால் இறந்துள்ளார்கள்.

இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்கள், இந்தக் குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும், அதிகளவிலான கதிர்வீச்சு மற்றும் கதிரியக்க கழிவுகளுக்கும் தொடர்பு உள்ளது என்று நீண்ட காலமாகவே கூறி வருகின்றார்கள். குறிப்பாக கதிரியக்கக் கழிவுகள் வெளியேற்றப்படும் குளத்திற்கு அருகில் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளதோடு, அவர்கள் அந்தத் தண்ணீருடன் தவிர்க்க முடியாத வகையில் நேரடி தொடர்பில் உள்ளார்கள். எனினும், இந்திய யுரேனிய நிறுவன இணையதளத்தில், “இந்த நோய்களுக்கு காரணம் கதிர்வீச்சு இல்லையென்றும், ஊட்டசத்து குறைபாடு, மலேரியா மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையால்தான் இந்த கிராமங்களில் பாதிப்புகள் ஏற்படுகிறது“ என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய யுரேனிய நிறுவனத்திற்கு ஜடுகுடா சிங்பம்மில் 7 சுரங்கங்கள் உள்ளன. அவை பாட்டின், நார்வாபஹார், பக்ஜட்டா, டுராம்டி, மகுல்டி மற்றும் பந்துகுந்தாங் ஆகியவை ஆகும். கதிரியக்கத்தால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் வருவது குறித்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கும் ஒன்று. மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு, அதைத் தள்ளுபடி செய்தது. இந்திய அணுசக்திக் கழகம் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், “யுரேனியக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜடுகுடாவில் உள்ள கதிர்வீச்சுக்கு எதிரான ஜார்கண்டி அமைப்பு, நாட்டின் யுரேனியத் தேவைக்காக இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் கொடுக்கும் விலை குறைத்து முன்னிலைப்படுத்த நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றனர்.

People' standing on the hill
PHOTO • Subhrajit Sen

50 ஆண்டுகளாக ஜடுகுடாவின் மலைகள் யுரேனியத்திற்காக தோண்டப்பட்டு சுரங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. அரை நூற்றாண்டாக அது சுற்றியுள்ள கிராமங்களில் நச்சு மரபை சேர்த்துள்ளது

Mine in Turamdih
PHOTO • Subhrajit Sen

துராம்டில் உள்ள திறந்தவெளி சுரங்கம் (ஜடுகுடாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது). குறைந்தபட்சம் 500 மீட்டர் தொலைவிலே மக்கள் வசிக்கிறார்கள். பீகார் சட்டமன்ற சுற்றுச்சூழல் குழுவின் 1998ம் ஆண்டு அறிக்கையில், சுரங்கங்களின் குப்பை கிடங்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மக்கள் வசிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

A child was born with a mental disorder
PHOTO • Subhrajit Sen

காளிகாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயதான அமித் கோப் மனநிலை பாதிப்புடன் பிறந்தார். அவரால் நடக்கவும், பேசவும் முடியாது. கட்டிலிலேயே நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறார்

children are playing
PHOTO • Subhrajit Sen

பேங்கோவின் மண் சாலைகளில் குழந்தைகள் விளையாடுகிறார்கள். இங்கிருந்து யுரேனியக் குப்பைக் கிடங்கு மற்றும் நச்சுத்தாது சுத்திகரிப்பு இடங்கள் வெகுதூரத்தில் இல்லை

Child with bone deformity goes to an intermediate college
PHOTO • Subhrajit Sen

காலிபுதி கோபுக்கு (18) எலும்புச்சிதைவு நோய் உள்ளது. அதனால் தனது மேற்புற முதுகில் திமில் போன்ற அமைப்பை கொண்டுள்ளார். அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது. ஆனால், வாரத்தில இரண்டு நாட்கள் இங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாம்ஷெட்பூரில் கல்லூரிக்கு சென்று வருகிறார்

A child with facial tumour
PHOTO • Subhrajit Sen

அனாமிகா ஓரம் (14), முகத்தில் கட்டி உள்ளது. அது மிகுந்த கேடு விளைவிக்கக்கூடியது. மருத்துவர்கள் அதற்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் குடும்பத்தினரால் அதற்கான செலவுகளை ஏற்க முடியாது

A man at  grocery shop
PHOTO • Subhrajit Sen

நான் தராக் தாசை (35) காலிகாபூரில் உள்ள அவரது மளிகைக் கடையில் சந்தித்தபோது, அவர் தனது குடும்பத்திற்கு எப்போது உதவி கிடைக்கும் என்று கேட்டார். 'ஐயா எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு மகன், ஒரு மகள்,' என்று அவர் கூறினார். 'என்னால் வேலை செய்ய முடியாதபோது அவர்கள் என்ன செய்வார்கள் என்று நான் எப்போதும் வருந்துவேன். நான் சிறிது நேரம் நின்றால் கூட எனது இடுப்பு வலிக்கிறது. ஆனால், நான் அவர்களுக்காக உழைக்க வேண்டும்'

pond with radioactive waste from the uranium processing plant
PHOTO • Subhrajit Sen

அங்குள்ள குளங்கள் யுரேனிய சுத்திகரிப்பு நிலையங்களின் கதிர்வீச்சு கழிவுகளை கொண்டுள்ளன. இது துராம்டி சுரங்கத்திற்கு அருகில் ஒரு கிராமத்தை கடந்து செல்கிறது

A child with facial deformity helping his father in farm
PHOTO • Subhrajit Sen

ஹர்தான் கோபுக்கு (18), முகவாதம் உள்ளது. அவரது உடலைவிட முகம் சிறிய தாக இருக்கும். ஆனாலும் அவர் வயல்களில் வேலைசெய்து, தனது தந்தைக்கு நெல் பயிரிட உதவுகிறார்

A young boy collects shellfish from the Subarnarekha river
PHOTO • Subhrajit Sen

ஒரு இளைஞர் ஜடுகுடா அருகே சுபர்ணரேகா நதியில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார். இங்குள்ள நீர்வாழ் உயிரினங்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. நச்சுக்குளங்களில் இருந்து வரும் நீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது

Children at private coaching centre in Bango
PHOTO • Subhrajit Sen

பார்பதி கோப்புக்கு (நடுவில்), 18 வயதிருக்கும். பேங்கோவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படிக்கிறார். அவரது தந்தை விவசாயி. 'நான் அரசு வேலைக்கு செல்ல வேண்டும்,' என்று அவர் கூறுகிறார். 'எனக்கு படிக்க தேவையான அனைத்து புத்தகங்களும் கிடைக்கவில்லை. எனது தந்தை குடும்பத்தை நடத்துவதே கடினமாக உள்ளதாக கூறுகிறார். எனவே என்னால் எனது சிகிச்சைக்கு எவ்வாறு செலவிடமுடியும்?'

A child on wheelchair suffering cerebral palsy
PHOTO • Subhrajit Sen

ராகேஷ் கோப், 16 வயதிருக்கும், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவரது சகோதரி குடியா தனது 7 வயதில் இறந்துவிட்டார். அவர் சக்கர நாற்காலியில் பள்ளி செல்வதற்கு சிரமப்படுகிறார். ஆனால், அங்குதான் அவருக்கு மதிய உணவும், அரசின் மாத ஓய்வூதியம் ரூ.600ம் கிடைக்கும். அவரது தாய் என்னிடம், 'நான் எப்போதும் எங்கள் எதிர்காலத்தை எண்ணிக்கொண்டிருப்பேன். நாங்கள் இல்லாமல் எவ்வாறு இவர் இருப்பார்? அவரால் தனியாக எந்த வேலையையும் செய்ய முடியாது'

A women showing her dead sons photo
PHOTO • Subhrajit Sen

ராகேஷ் மற்றும் குடியாவின் தாய் (பெயர் கிடைக்கவில்லை) நெல் வயல்களில் கூலித்தொழிலாளியாக வேலை செய்கிறார். இறந்துபோன அவரது 7 வயது குழந்தையின் படத்தை கைகளில் ஏந்தியுள்ளார். அவருக்கு எலும்புச்சிதைவு நோய் இருந்தது. வலிப்பு நோய் ஏற்பட்டு உடன் இறந்துவிட்டார். அவரது மகனுக்கு பெருமூளைவாதம் உள்ளது. அவர் கூறுகையில், 'ராகேஷ் பிறந்த பின்னர், அவரால் நடக்க முடியாது, தானாக எதையும் செய்துகொள்ள முடியாது என்று தெரியவந்தபோது நாங்கள் மிகவும் சோகமடைந்தோம். குடியா பிறந்தபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் விரைவிலே அவரால் நடக்க முடியாது என்பதையும் தெரிந்துகொண்டோம்…'

A women carrying her son
PHOTO • Subhrajit Sen

ராகேஷால் தனது கால்களை அசைக்க முடியாது. அவரது தாய் அவரை குளிப்பாட்டி பேங்கோவில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்

தமிழில்: பிரியதர்சினி. R.

Subhrajit Sen

Subhrajit Sen is originally from Chandannagar, near Kolkata. He works as a freelance graphic designer, and is now studying documentary photography in Dhaka, Bangladesh.

Other stories by Subhrajit Sen
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.