Chandran Master with the tiny Vechur calf, the latest addition to his diverse herd. He has animals of 11 different indigenous breeds in his compound
PHOTO • P. Sainath

சந்திரன் மாஸ்டர் அவரது வீட்டு வளாகத்தில் கேரள மண்ணுக்கே உரிய விலங்குகளான 11 வேறுபட்ட வகைளை   வைத்திருக்கிறார். பல்வேறுபட்ட அவரது கால்நடை மந்தையில் புதிய வரவாக வந்து சேர்ந்த, வெச்சூர் பசுவின் சின்னஞ்சிறு கன்றுக்குட்டியோடு அவர் நிற்கிறார்

சந்திரன் மாஸ்டரின்  பராமரிப்பில் இருந்த   வெச்சூர் இன பசு மாடு ஈன்ற ஒரு கன்றுக்கு 15,000 ரூபாய் பரிசை, கேரளத்தின்  விவசாய அமைச்சர் கே.பி. மோகனன், கால்நடை மேம்பாட்டு வாரியம் சார்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் அளித்தார். தெரிந்தே சட்டத்தை மீறுகிற ஒருவருக்கு வழங்கப்பட்ட பரிசு அது.  ஆனாலும் அமைச்சர் பரிசளித்தது சரிதான் என்று எல்லோரும் அங்கீகரித்து பாராட்டுகிற நிலைமை அங்கே உள்ளது. சந்திரன் மாஸ்டரும் அவர் போன்ற சில துணிச்சலான நபர்களும்தான் கேரளாவின் தனித்துவமான கால்நடை இனங்களை இன்னமும் உயிருடன் வைத்திருக்கின்றனர். மாநிலத்தில் உள்ள கால்நடைத் துறையின் இயக்குநர் மட்டத்தில் அனுமதி பெறாமல்,  இத்தகைய விலங்குகளை விவசாயிகள் இனப்பெருக்கம் செய்வது சட்டவிரோதம் என்கின்றன கேரளத்தின் பழைய சட்டங்கள். சில ஆண்டுகளாக கால்நடை  ஆய்வாளர்கள் இந்த "தாழ்ந்த" இனங்களின் காளைகளால் இனப்பெருக்கம் நடக்காமல் தடுப்பதற்காக அந்தக் காளைகளைக் காயடித்து வந்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் கலப்பின கால்நடைகளின் எண்ணிக்கை ஆதிக்கம் செலுத்துவதை ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.

‘அதிகமான  பால் உற்பத்தி வேண்டும்’ என்பதை மட்டுமே மனதில் கொண்டு, அதனால் ஏற்படும் செலவுகளைப் பற்றியோ, பின் விளைவுகளைப் பற்றியோ கவலை கொள்ளாமல், செயல்பட்டது  இந்தத் தவறு நடப்பதற்கான  காரணங்களில் ஒன்று. அவை எல்லாம் பிரச்சனையாக மாறிவிட்டன. தற்போது அரசின் அணுகுமுறையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு ஏற்படுத்தியிருக்கிற பாதிப்புகளை எதிர்க்கிற விவசாயிகளுக்கு தற்போது அரசே பணம் செலுத்துமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

திரிசூர் மாவட்டத்தின் பி.வெம்பல்லூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் சந்திரன் மாஸ்டர் 24 கால்நடைகளை வைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை, கேரளத்தின் உள்நாட்டு இனங்களான அரிய வகைகள் ஆகும். கேரளாவின் உள்நாட்டு கால்நடைகள் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டன என்பதன் அடையாளமாக, சிறிய வெச்சூர் மாடு உள்ளது. அதுவும் சந்திரன் மாஸ்டரிடம் உள்ளது. ‘உணவு மற்றும் விவசாயத்துக்கான பன்முகத்தன்மையான  உள்நாட்டு விலங்குகளுக்கான அமைப்பு 2000 ஆம் ஆண்டளவில், ‘உலகளாவிய கண்காணிப்பு பட்டியலை’ உருவாக்கியது. அதில்  வெச்சூர் மாடு இருந்தது.  ‘நெருக்கடிக்குள்ளாகியிருக்கிற இனங்களை கண்காணிக்கிற பட்டியல்’. அது. ஒரு கால்நடையின் இனத்தில் அந்த இனத்தைப் பெருக்கக்கூடிய பெண் விலங்குகளின் எண்ணிக்கை நூறு அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அது  ‘நெருக்கடிக்குள்ளாகியிருக்கிற இனங்கள் பட்டியலில்’ இடம்பெறும் அல்லது “இனப்பெருக்கம் செய்யும் ஆண் இனங்களின் மொத்த எண்ணிக்கை” ஐந்து அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்போது. அல்லது அந்த இனத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 120 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்போதும் அந்த கால்நடை இனத்தின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடையும்போதும்  அந்தப் பட்டியலில் கால்நடை இனங்களைச் சேர்க்கிறார்கள்.

சந்திரன் மாஸ்டர் வீட்டில் வெச்சூர் இனத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. “கால்நடைவளக் கழகத்துக்கு நான் ஐந்து வெச்சூர் கன்றுகளைக் கொடுத்தேன்” என்று பெருமிதமாக கூறுகிறார் அவர். அதற்கு பதிலாக அவர் இரண்டு கிர் கன்றுகளையும் ரூபாய் 45ஆயிரமும் பெற்றுக்கொண்டார். அவரது வீட்டு வளாகத்தில் ஒரு சின்னஞ்சிறு வெச்சூர் கன்றுக்குட்டி பிறந்து வெறும் ஆறு மணிநேரமே ஆகும்போது நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தோம். அதைப் பெற்றெடுத்த அந்த அம்மா மாடு ஒரு அருமையான விலங்கு. 82 சென்டி மீட்டர்கள்தான் அதன் உயரம். உலகின் மிக குள்ளமான கால்நடை விலங்கு அதுதான். இதே திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த  77 சென்டிமீட்டர்களே உயரமுள்ள ஒரு வெச்சூர் பசுதான் உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் உலகத்தின் மிகச் சிறிய பசுவாக இடம் பெற்றுள்ளது.

பொதுவாக, இந்த வகை பசுக்கள் சராசரியாக 90 சென்டி மீட்டர்கள் வரை உயரம் உள்ளவை. சுமார் 130 கிலோக்கள் எடையும் கொண்டவை. ஒரு நாளைக்கு மூன்று லிட்டர்கள் வரை பால் கறக்கும். தீவனமோ பராமரிப்போ மிகவும் குறைவாகவே தேவைப்படும்.

வடகரா குள்ளப் பசுவையும் காசர்கோடு குள்ளப் பசுவும்தான் “உலகின் மிகச் சிறிய பசு” வோடு சேர்த்துப் பார்க்க வேண்டியவை. கால்நடைகள் பற்றி பொதுவாக உள்ள மனப்போக்கை அந்த 72 வயது பழைய பள்ளியாசிரியரான அவர்  கேலி பேசுகிறார். “அத்தகைய மனப்போக்கு உள்ளவர்களுக்கு பசு என்பது வெறும் பால் கறக்கும் இயந்திரம்தான். பாலின் தரமும் அதன் உள்ளடக்கமும் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. விவசாயத்திலும் ஒரு விவசாயியின் வாழ்க்கையிலும் கால்நடையின் பாத்திரம் என்ன என்பது பற்றி அவர்களுக்கு பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. சுற்றுச்சூழல், பன்முகத்தன்மை அல்லது சமூகத்தின் மீது கால்நடையின் தாக்கம் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது” என்கிறார் அவர்.

நம்பியாந்திர அய்யப்பன் சந்திரன் முன்னாள் ஆங்கில ஆசிரியர். அவரது சிறந்த பணிக்காக விருது பெற்றிருக்கிறார். கேரளத்திலும் ஓமன் நாட்டிலுமாக 36 வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்துள்ளார். உள்நாட்டின் கால்நடைகளை பாதுகாப்பதுதான் அவர் தனது மிச்ச வாழ்க்கையில் செய்தாக வேண்டிய பணிகளில் ஒன்றாக” உறுதி எடுத்திருக்கிறார். கேரளாவின் கால்நடை வளத்துறை அளித்த 15 ஆயிரம் ரூபாய் காசோலையை அவர் பெரிய போட்டோவாக ஆக்கி அவரது வீட்டின் முன்னறையில் மாட்டி வைத்திருக்கிறார்.  “எனக்கு ரொம்ப பிடித்த வேலையாக இது இருப்பதால் மாதாமாதம் சராசரியாக 15 ஆயிரம் ரூபாய் அளவுக்கு எனக்கு செலவாகிறது. அந்த அளவு பணம்தான் அரசும் எனக்கு அளித்துள்ளது” என்கிறார் அவர். ஆனாலும் அவருக்கு இது திருப்திதான்.

he cheque from the Kerala Livestock Development Board handed over to Chandran Master by the agriculture minister
PHOTO • P. Sainath

கேரள அரசின் கால்நடை வளத்துறை கழகம் அளித்த இந்தக் காசோலையை சந்திரன் மாஸ்டருக்கு  விவசாய அமைச்சர் அளித்தார்

“எனது பசுக்கள் செலவு வைக்காதவை. அவை உள்நாட்டு பசுக்கள். அதிகமான அளவுக்கு அவற்றுக்கு தீவனம் போட தேவையில்லை” என்கிறார் அவர். .தவிர 30 வகையான மாம்பழங்களையும் அதே எண்ணிக்கையிலான மூங்கில் வகைகளையும் அவர் வளர்க்கிறார். அவை அனைத்துமே உள்நாட்டு வகைகள்.  சில உள்நாட்டு மீன் வகைகள், பாரம்பரிய தாவரங்கள் ஆகியவற்றையும் அவர் வளர்க்கிறார். அவரது மகன் வீட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் பற்றாக்குறையை தோட்டப் பயிர்களிலிருந்து வரும் வருமானத்திலிருந்துதான் சரிக்கட்டுகிறார். அவர்களது குடும்பத்துக்கு இருக்கிற 18 ஏக்கர் நிலத்தில் சிறு பகுதியையாவது ரியல் எஸ்டேட் பகுதியாக மாற்றினால் அவர் பணக்காரர் ஆகிவிடுவார். ஆனால், சந்திரன் மாஸ்டருக்கு ஒரு ‘லட்சியமும் அதை நிறைவேற்றுவதற்கான தீராத ஆர்வமும்’ இருக்கிறது.

Mother and child: the mother is a Vechur cow, the world's smallest cattle breed – she is 82 centimetres tall. The calf is just hours old
PHOTO • P. Sainath

அம்மாவும் குழந்தையும்: உலகின் மிகச் சிறிய பசு வகையான இந்த வெச்சூர் பசு 82 சென்டி மீட்டர்கள் உயரம் கொண்டது. அதன் கன்று பிறந்து சில மணிநேரங்களே ஆகியிருக்கிறது

கேரள கால்நடைத்துறையின் காசோலையை சந்திரனிடம் ஒப்படைக்கும்போது அவரிடம் விவசாய அமைச்சர் மோகனன் “மலையாளிகள் எதிலிருந்தும் எளிதாக வெளியே வந்துவிடுவார்கள்” என்று சொன்னாராம்.  ”அதனால் வெச்சூர், அல்லது காசர்கோட் குள்ள பசு போன்றவற்றை பாதுகாக்க அவர்கள் போதிய முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதில், கலப்பின வகைகளுக்கு மாறிவிட்டனர். உள்ளூர் இனங்களை பாதுகாக்க இயங்கி வரும் சர்வதேச இயக்கத்தை பற்றி எல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”.

ஆனாலும், உள்நாட்டு வகைகளை மக்கள் அழிக்கவில்லை. நீண்டகாலமாக அரசு கடைப்பிடிக்கிற கொள்கைகளால்தான் அவை அழிந்து வருகின்றன.

உள்நாட்டு வகைகளுக்கு எதிரான கேரள அரசின் செயல்பாடுகள் பல பத்தாண்டுகளாக படுவேகமாக நடந்துவருவதுதான் உள்நாட்டு இனங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களில் ஒன்று. 1996க்கும் 2007க்கும் இடையில் உள்நாட்டு இனங்களின் எண்ணிக்கை 48 சதவீதம் வீழ்ச்சியடைந்தது என்கின்றன கால்நடைகள் பற்றிய கணக்கெடுப்பில் உள்ள விவரங்கள். அதற்கும் முன்னால், 1961ஆம் ஆண்டில் கேரள கால்நடைகள் மேம்பாட்டுச் சட்டம் வந்தது. அது உள்நாட்டு இனங்களின் இனப்பெருக்கத்துக்கு அதிகாரியின் அனுமதி வேண்டும் என்றது. உள்நாட்டு இனங்களின் காளைகளை காயடிப்பு செய்கிற அதிகாரத்தை எடுத்துக்கொண்டது. “முப்பது நாட்களுக்குள் விவசாயிகள் தங்களது காளைகளை காயடிக்க வேண்டும்” என்றது. 1968இல் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. அதில் சட்டத்தை மீறுபவர்களுக்கு  அபராதங்களும் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டன.

கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தின் விலங்கு இனப்பெருக்கம் மற்றும் மரபியல் தொடர்பான பேராசிரியை (ஓய்வு) சோசம்மா ஐப்தான்  வெச்சூர் இன வகை மாடு அழியாமல் புத்துயிர் அளித்திருப்பவர். கால்நடைகளுக்கான அறுவைச் சிகிச்சைக்கான பேராசிரியர் (ஓய்வு) ஆபிரகாம் வர்கீஸூம் அவரும் ஒரு விஷயம் சொன்னார்கள். “நீங்கள் ஏதேனும் உள்நாட்டு வகையைச் சேர்ந்த காளை இனத்தை வைத்துக்கொண்டு, அதனை இனப்பெருக்கம் செய்ய விடுவதற்கு கால்நடை த்துறையின் இயக்குநரிடம் அனுமதிக்கடிதம் வாங்க வேண்டும் என்பது ஒரு பக்கம். எங்காவது காளையைக் கண்டால் அதனை காயடிக்கலாம் என்ற அதிகாரத்தை அதிகாரிகளுக்கு சட்டம் கொடுத்தது இன்னொரு பக்கம். இதன் விளைவு யாரும் அதிகாரிகளிடம் அனுமதிக் கடிதம் வாங்கவே ,இல்லை.”

காளைகளை காயடிப்பது என்பது சில வகையான உள்நாட்டு இனங்களை பூண்டோடு அழிந்துபோகிற நிலைக்குப் பக்கத்தில் கொண்டு போனது. (இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பல பகுதிகளில் நடந்தன. ஒடிசாவைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். பால் உற்பத்தியை பெருக்குவதற்காக செய்யப்பட்ட இந்த பைத்தியக்கார நடவடிக்கைகளால் காலஹந்தி பகுதியைச் சேர்ந்த காரியர் காளை 1980க்குள் துடைத்தெறியப்பட்டது. பால் மிகை உற்பத்தி பகுதியாக இருந்த அதனை பால் பற்றாக்குறை பகுதியாகவும் மாற்றியது.)

வெச்சூர் மாடுகள் இன்னமும் உயிர் வாழ்கின்றன என்றால் அதற்கு ஒரு காரணம் தப்பிப் பிழைத்த சில மாடுகள் காட்டுப் பகுதிகளிலும் தூரத்து கிராமங்களிலும் இருந்ததுதான். அங்கே கால்நடை மருத்துவர்கள் போக முடியவில்லை. கோயில்களுக்கு நேர்ந்து விட்ட காளைகளுக்கு காயடிப்பதிலிருந்து  விதிவிலக்கு இருந்தது இன்னொரு காரணம் என்கிறார் பேராசிரியர் வெர்கி.

பேராசிரியை சோசம்மா ஐப் போன்றோர்களாலும்தான் இவை உயிர் பிழைத்திருக்கின்றன. அவரும் மற்றவர்களும் உள்ளூர் இனங்களை பாதுகாப்பதற்கான அறக்கட்டளையை 1998இல் நிறுவினார்கள். தப்பிப் பிழைத்திருக்கிற வெச்சூர் மாடுகளைத் தேடுவது 1998இல்தான் தொடங்கியது என்கிறார் பேராசிரியை சோசம்மா. அனில் சக்காரியா என்பவரின் தலைமையிலான மாணவர் குழு தேடுதலை நடத்தியது. ஒரு வருடகால தேடலுக்குப் பிறகு எட்டு மாடுகள் கண்டறியப்பட்டன. அப்போதைய துணை வேந்தர் எட்டு மாடுகளையும் வாங்கவும் அவற்றுக்கு தீவனம் வழங்கவும் ரூபாய் 51 ஆயிரம் வழங்க அனுமதி வழங்கினார். சோசம்மாவின் பணியால்தான் வெச்சூர் மாட்டின் தலைவிதி மாறியது. பரந்த அளவில் இந்தப் பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது.

பால் கறப்பதில் கலப்பின பசுக்கள் உள்நாட்டு பசுக்களை மிஞ்சிதானே இருக்கின்றன என்று கேள்வி எழுப்பவர்களுக்கு அது மட்டுமே ஒரு அளவுகோலாக இருக்க முடியாது என்கிறார் பேராசிரியை சோசம்மா. பால் கறப்பதற்கான செலவுகளைக் கணக்கிடுங்கள். கலப்பின மாடுகளுக்கு பெருஞ்செலவு ஆகிறது. அவை அடிப்படி நோய்வாய்ப்பட்டு விடுகின்றன. 2009இல் கோமாரி நோய் வந்து அவை மோசமாக பாதிக்கப்பட்டன. பால் விற்பனைக்கு கலப்பின பசுக்களையே வருமானத்துக்கான ஆதாரமாக பயன்படுத்துகிற அனேக விவசாயிகள் இருக்கின்றனர். அதேநேரத்தில் 25 முதல் 30 சதவீதம் வரையிலான விவசாயிகள், சின்னதாக உள்ள, செலவு வைக்காத கால்நடைகளை விரும்புகின்றனர். இத்தகைய குடும்பங்கள், குடும்ப உறுப்பினர்களின் பால் நுகர்வு, பாலின் தரம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. “எங்களது அறக்கட்டளை தற்போது வெச்சூர் இன மாடுகளைப் பாதுகாப்பதற்காக மட்டும் இயங்கவில்லை. கேரள மண்ணுக்கே உரிய கால்நடைகள், ஆடுகள், பன்றிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்காகவும் இன்று நாங்கள் செயல்படுகிறோம்” என்கிறார் சோசம்மா.

பி.வேம்பலூரில் உள்ள சந்திரன் மாஸ்டரின் வீட்டுக்கு திரும்பவும் வந்துவிட்டோம். அவருக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும் “ஒடிசா மாநிலத்திலிருந்து காரியர் இனத்தைச் சேர்ந்த ஒரு காளை மாடு எனக்குக் கிடைப்பதற்கு நீங்கள் எப்போது உதவுவீர்கள்? என்று கேட்கிறார்.

அவரது முகவரி, சந்திரன் மாஸ்டர், பி.வெம்பலூர் கிராமம், கொடங்குலூர் தாலுகா, திருச்சூர் மாவட்டம். அவரது வீட்டின் தொலைபேசி எண்:   0480 2850483.

தி இந்து ஆங்கில  நாளிதழில் 2012 பிப்ரவரி 27 அன்று இந்தக் கட்டுரை வெளியானது.

த.நீதிராஜன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan