இந்த கதை, காஃப்காவை பொறாமைப்பட வைத்திருக்கும். டெல்லியில், மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் மே 7 அன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மகாராஷ்ட்டிரத்தின் விதர்பா பகுதியில் ஜனவரி மாதம்  முதலாக ஆறு விவசாயிகள் மட்டும்தான் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்தார். அதே நாளில், அதே நேரத்தில் மகாராஷ்டிராவில், முதலமைச்சர் அசோக் சவான் 343 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறினார். அதாவது, திரு. பவாரின் எண்ணிக்கையை விட 57 மடங்கு அது அதிகம். முதலமைச்சர் திரு.சவான் விதர்பா பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். திரு. பவார் தெரிவித்த தற்கொலைகளின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குத் தரப்பட்ட  பதிலில் எழுத்து வடிவமாக இருந்தன. இரண்டு செய்திகளையும் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பி.டி.ஐ) தெரிவித்துள்ளது. அனைத்தும் ஒரே நாளில் நடந்த வேலையின்போதுதான் வெளியாகியிருந்தன.

குழம்பிவிட்டீர்களா? இதைப் பாருங்கள்: ஐந்து நாட்களுக்கு முன்னதாக, விவசாயத்துக்கான மத்திய  இணை அமைச்சர் கே.வி. தாமஸ், ஜனவரி முதலாக விதர்பா பகுதியில் நடந்தவை  23 தற்கொலைகள் என்றார். அதே வாரத்தில்தான் அவர் சொன்னார் - அதே மாநிலங்களவையில்தான் சொன்னார். திரு. தாமஸ் தனது தகவலுக்கான ஆதாரம் "மகாராஷ்டிரா அரசாங்கம்" என்றார். ஆனால்,  மகாராஷ்டிரா முதலமைச்சர் 343 தற்கொலைகள் என்று கூறுகிறார். திரு பவார் நான்கு மாதங்களில் 'ஆறு தற்கொலைகள் மட்டுமே' என்ற எண்ணிக்கையை வழங்கினார் அல்லவா? அதற்கு முன்பு, விதர்பாவில் உள்ள வசந்த்ராவ் நாயக் விவசாயிகளுக்கான சுய தன்னிறைவு இயக்கம் எனும் அரசாங்க அமைப்பு ‘ஜனவரி மாதத்தில் மட்டும் 62 தற்கொலைகள்’ நடந்ததாக தெரிவித்து இருந்தது.

விவசாயத் தற்கொலைகளின் மதிப்பீடுகள் - அனைத்தும் அதிகாரபூர்வமானவை -  அப்படிப்பட்டவை  5,500 சதவீதத்திற்கு மேல் வேறுபட முடியுமா? (திரு. பவானின் மதிப்பீடுகளை விட திரு. சவானின் மதிப்பீடுகள் மிகவும் அதிகமானவை). ஆனால், விஷயங்கள் இதோடு இங்கு முடிவதில்லை. விதர்பாவில் 2006 முதல் 5,574 தற்கொலைகள் நடந்திருப்பதாக மகாராஷ்டிரா வருவாய் அமைச்சர் நாராயண் ரானே ஏப்ரல் மாதம் மாநில சட்டப் பேரவையில் தெரிவித்தார். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆறு தற்கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் திரு. ரானேவின் எண்ணிக்கை 7,786  தற்கொலைகள் ஆகும். இது மாநில அளவிலான எண்ணிக்கை ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  எண்ணிக்கை 3,450 ஆகும். திரு. பவாரின் புதிய எண்ணிக்கை இது.  இதை விட திரு. ரானேவின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம்.

PHOTO • V. Sudershan

2008 ஜனவரி 31 அன்று எடுத்த படம் இது. பஞ்சாபில் தற்கொலைகள் செய்துகொண்ட விவசாயிகளின் உறவினர்கள் மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாநில அரசாங்கத்தின் விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்து, ‘லோக்ராஜ் சங்கேதன்’ எனும் அமைப்பின் தலைமையில் இதில் போராட்டம் நடத்துகின்றனர் .

அதுதான் எண்ணிக்கையா? மூன்று ஆண்டுகளில்  முழு நாட்டிற்கும் 3,450 தற்கொலைகள் தானா?  தேசிய குற்றப் பதிவேடுகள் காப்பகம் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 50,000 ஆக வைத்திருக்கிறது. அதாவது 2006, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கானது அது (தரவு கிடைக்கக்கூடிய கடைசி ஆண்டு அது). மேலும் தேசிய அளவில் விவசாய தற்கொலை தரவுகளுக்கான ஒரே ஆதாரம் தேசிய குற்றப் பதிவேடுகள் காப்பகம்தான். 1997 மற்றும் 2008 க்கு இடையில் கிட்டத்தட்ட 200,000 விவசாயிகள் தங்களைக் கொன்றுள்ளனர் என்பதையும் அதன் தகவல்கள் நமக்குக் காட்டுகின்றன. நாடாளுமன்றத்திற்கு எந்த அமைப்பின் எண்ணிக்கை  வழங்கப்படுகிறது? இத்தனை மாறுபட்ட எண்ணிக்கையிலான தரவுகளை நாம் எப்படி பெறுகிறோம்? அதுவும் உண்மையான தரவுகளை வைத்திருக்கும் ஒரே ஒரு அமைப்பு  இருக்கும்போது இது எப்படி நிகழ்கிறது?. இது பெரும்பாலும் மகாராஷ்டிராவில் ஏன் நிகழ்கிறது?

ஏனெனில் மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலைகள்  எண்ணிக்கை நாட்டிலேயே மிகவும் அதிகமானது. இந்த மாநிலம் தான் 1997 முதல் 41, 404 விவசாயிகளின் தற்கொலைகளைக் கண்டது. இவற்றில்  2006-08 ஆம் ஆண்டில் 12,493 தற்கொலைகள் நிகழ்ந்தன. எனவே,  மூடிமறைக்க வேண்டிய நெருக்கடி என்பது வேறு எங்கும் இருப்பதை விட இங்கே அதிகம்..

இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள கவலை என்பது ஒருபோதும் விவசாயிக்கு இப்படி ஆகிறதே என்பதைப் பற்றியது அல்ல.  2006ஆம் ஆண்டில்  விதர்பா பகுதிக்கு பிரதமர் வருகை தரும்வரையில், இந்த மாநிலத்தில் உள்ள  உயர்மட்ட அமைச்சர்கள் யாரும், ஒருபோதும் துன்பத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குப் போனதில்லை. தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் வீட்டுக்குக்கூட அமைச்சர்களில்  பெரும்பாலானோர் இன்னும் செல்லவில்லை. மக்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அவர்களுக்கு பெரிய அளவில் அக்கறை இல்லை. ஆனால், புது தில்லியில் தங்கள் அவர்களின் சொந்த கட்சியின் மேல் மட்டத்தின் அதிருப்திக்கு அவர்கள் அஞ்சினர் -  தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு அவர்கள் அச்சமடைந்தனர். எனவே, அவர்கள் புள்ளி விவரங்களை எப்படியெல்லாம் மறைக்கலாம் என்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள்.

முதலாவதாக, அவர்கள் ஒரு விவசாயி  தற்கொலை செய்து கொண்டால், விவசாயக் காரணங்களால்  அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று காட்டுவதற்காக சாத்தியமில்லாத பல விசயங்களை அந்த தற்கொலையோடு இணைத்தார்கள். 2005 ஆம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில், மால்வகாட் கிராமத்தில்  திகம்பர் அகோஸ் என்பவர் தற்கொலை செய்த பிறகு நாங்கள் அங்கு போனோம்.   தற்கொலையை மறைக்க அரசாங்கம் செய்கிற முயற்சிகளை மக்கள் கேலி செய்தனர். "இப்போது நாங்கள் நிம்மதியாக தற்கொலை கூட செய்து கொள்ள முடியாது" என்று  சுடுகாட்டு ஜோக் அடித்து சிரித்தார் அகோஸின் பக்கத்து வீட்டுக்காரர். "நாங்கள் தயாரித்து வந்திருந்த மனுக்களை சரியாகப் பார்க்காமலே அதிகாரிகள் நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்திருக்கிறோமா என்று எங்களை பார்க்க வைத்தனர். “அவர்கள் விசாரிக்க வேண்டிய  பட்டியலில் சுமார் 40 உட்பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் பொருந்த வேண்டும்.” சுருக்கமாக சொன்னால், உங்களை நீங்கள் கொல்வதற்கு முன்பாக, இந்த 40 உட்பிரிவுகளுக்கும் பொருந்துகிறார்போல சரியாக வைத்துக்கொண்டு கொல்லுங்கள். இது சரியான தற்கொலைதான் என்று சொல்வதற்கான முகாந்திரத்தை  முன்னதாகவே ஏற்படுத்துக. அப்போதுதான் உங்களின் குடும்பம் இழப்பீடு பெறுவதற்கு  ‘தகுதியானது’ என்று அறிவிக்கப்படும்.

விவசாயிகள் அல்ல என்ற காரணத்தைச் சொல்லி,  நூற்றுக்கணக்கானவர்கள் விவசாயத் தற்கொலைகளின்  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். "அவர்களின் பெயர்களில் நிலம் இல்லை" என்றனர் அதிகாரிகள். பெரும்பாலான பெண் விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் பெயரில் எல்லாம் நிலங்கள் இல்லை. அதனால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டது விவசாயப் பிரச்சனைகளால் அல்ல என்று சொல்லி அந்தப் பட்டியலில் இருந்து அவர்களை வெளியேற்றிவிடுவார்கள்.  அதேபோல், பல மூத்த மகன்கள் உண்மையில் விவசாயத்தை  நடத்தி வருகின்றனர். ஆனால்,  நிலம் அவர்களின் பெயரில் இல்லை. அவர்களது வயதான தந்தைகளின் பெயர்களில் இருக்கிறது. பல தலித் மற்றும் ஆதிவாசி விவசாயிகளின் பட்டாக்கள் தெளிவில்லை என்பதால் அவர்களும்  பட்டியலிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

ஆனால் இன்னமும்  தற்கொலைகளின் எண்ணிக்கை  பெருகிக்கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சினையைப் பற்றிய  அறிக்கையை அளிப்பது என்பது வேதனையானதாக இருக்கிறது. அது டெல்லியில் பெரிய பிரச்சனையாக மாறுகிறது. எனவே, இந்த  எண்ணிக்கையை எவ்வாறு குறைப்பது? ஆர்வமாக இதில் செயல்படுகிற  அதிகார வர்க்கத்தினர் இந்த விவகாரத்தில் புதிய ரகங்களை உருவாக்க முன்வந்தனர். 'தகுதியான' மற்றும் 'தகுதியற்ற' தற்கொலைகள். தகுதியான தற்கொலைககள் மட்டுமே "விவசாயத் தற்கொலைகள்" என்று கணக்கிடப்படும். ஒரு அதிகாரபூர்வமான ஆவணம்தான்  இந்தப் போக்கை 2006 இல் ஆரம்பித்து வைத்தது.

தற்கொலைகளை வகைப்படுத்துகிற அட்டவணையில்,  பல புதிய நெடுவரிசைகளை இது (columns)  உருவாக்கியது. அதன் மூலம், ஒவ்வொரு நெடுவரிசைகளிலும் தற்கொலைகளின் எண்ணிக்கையை  குறைக்க முடிந்தது. எப்படி? ஒட்டுமொத்த தற்கொலைகள் அல்லது விவசாய தற்கொலைகளுக்குப் பிறகு, ஒரு புதிய நெடுவரிசை செருகப்பட்டது. “குடும்ப உறுப்பினர்களின் தற்கொலைகள்” என்ற புதுவகை அதில் இருந்தது. விவசாயத்தில் குடும்ப உறுப்பினர்கள் தற்கொலைகள் செய்வதை  விவசாயிகளின் தற்கொலைகளாகக் கருத மாட்டோம் என்பதுதான் அதன் பொருள். தற்கொலைகளின் எண்ணிக்கையை அது  குறைக்க உதவியது. “விசாரணையில் உள்ள  வழக்குகள்” எனும் அடுத்த நெடுவரிசை மேலும் படுவேகமாக தற்கொலைகளை குறைக்க உதவியது.  இறுதியான நெடுவரிசைதான்  உண்மையிலேயே மிகவும் வித்தியாசமானது.  “தகுதியான தற்கொலைகள்” என்ற பெயரில் அது இருந்தது.  இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் என்பதாக அரசாங்கம் கருதுவது அவற்றையே. எனவே, 2005ஆம் ஆண்டுக்கான தற்கொலைகள் அட்டவணை யின் முதல் நெடுவரிசையில்  2,425 தற்கொலைகள் தொடக்கத்தில் இருந்தன. மேற்கண்ட அடிப்படையில் பலவகைகளில் அவற்றை வகைப்படுத்தி கழித்துக்கட்டியபிறகு ‘தகுதியான தற்கொலைகள்’ என்ற நெடுவரிசையில்  273 பேர்கள் என்று அட்டவணை  முடிவடைகிறது. (மொத்த தற்கொலைகள் எண்ணிக்கையில் 12 சதவீதத்துக்கும் குறைவானவைதான் ‘தகுதியான தற்கொலைகள்’ என்று இறுதிக்கட்டத்தில் வந்து நின்றது). வெட்டித் துண்டிக்கப்பட்ட இந்த எண்ணிக்கைதான்  அதிகாரப்பூர்வமான  விவசாய தற்கொலைகளாக  மாறியது. இதன் மூலம்தான் விவசாயத் தற்கொலைகள் சரிந்துவிட்டன என்று  நிறுவப்பட்டது.

‘உண்மை இல்லாத தற்கொலைகள்’ விசயத்துக்கு  வருவோம். அதன் அர்த்தம் மரணத்துக்கு குறைவானது இது என்பது அல்ல. அல்லது அவர் தன்னைத் தானே  கொன்றுவிடவில்லை என்றும் அதற்கு அர்த்தம் அல்ல. ஆனால்,  கடன்பட்டதாலும்  துயரத்தால் மனம் வெறுத்துப்போய் அதன் காரணமாகவும்தான் அவரது மரணம்  நடைபெற்றிருக்கிறது என்பதை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் அதன் பொருள். (கடனாலும் துயரத்தாலும் தான் நாங்கள் சாகிறோம் என்று சிலர்  தற்கொலைக் குறிப்புகளைத் துல்லியமாக அதே காரணங்களை மேற்கோள் காட்டியிருந்தாலும் அதைப் பற்றி கவலையில்லை.) நெருக்கடியான சூழல் நிலவிய மாவட்டங்களில் தற்கொலைகள் ‘உண்மையானவைதானா’ என்பதை அறிந்துகொள்வதற்காக கமிட்டிகள் அமைக்கப்பட்டன. மனநிலை தவறியவர்கள் போல அந்த கமிட்டிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணராது கட்டுப்பாடு இழந்த வகையில் செயல்பட்டன.  ஒவ்வொரு தற்கொலையும் ‘உண்மையானவை அல்ல’ என்று அவை ஒரு மாதத்துக்குள்  அறிவித்தன. குடும்பங்களின் முக்கியமான ஆதாரமான வருமானத்தை சம்பாதிக்கிறவரை இழந்து தவிக்கிற மிகச் சில குடும்பங்களுக்கு மட்டுமே அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு இழப்பீடும் கிடைக்கும்வகையில் தற்கொலைகள் பற்றிய விவரங்களை ஒரு கோடாரி கொண்டு  வெட்டிப்பிரிப்பதாக அவற்றின் வேலை உள்ளது.

அப்படித்தான் தற்போதுவரை அது செய்யப்படுகிறது. மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவையில் திரு. ரானே ஒரு கேள்விக்கு அளித்த  பதிலில் ‘நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற தற்கொலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான ‘தகுதியற்ற தற்கொலைகள்’ உள்ளன.

தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகத்தின் தகவல்கள் இருக்கிறதே. அதனை மாற்றியமைப்பது அவர்களின் கையில் இல்லை. காலம் செல்லச் செல்ல அவற்றின் தகவல்களும் சமூகத்தின் அடித்தள மட்டத்திலேயே சீரழிக்கப்படலாம். அவ்வப்போது வருகிற அரசியல் மாற்றங்களுக்கு இது முக்கியமான விஷயம். இந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு உடனடியான சுலபமான வழியாக தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகத்தின் தகவல்களை புறக்கணித்துவிடுவதுதான். அதனால்தான் மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும்போது அதில் தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகத்தின் தகவல்கள் பற்றிய குறிப்பே இல்லை. கடந்த காலத்திலிருந்து ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்கள் காணலாம்.

1997க்கும் 2005க்கும் இடையில் 1.5 லட்சம் விவசாயி தற்கொலைகள் இருந்தன என்று அவர் நாடாளுமன்றத்தில் சொல்லும்போது தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகத்தின் தகவல்கள் மிகவும் துல்லியமாக இருந்தன. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நட்சத்திரக்குறி இடப்பட்ட கேள்வி எண் - 238க்கு 2007 நவம்பர் 30 அன்று பதிலில் இருந்த திரு பவாரின் எண்ணிக்கை, தி இந்துவில் (நவம்பர் 12-17) இரு வாரங்களுக்கு முன்பே வெளியான எண்ணிக்கையோடு துல்லியமாக ஒத்துபோனது.  ‘மெட்ராஸ் இண்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடிஸ்’இல் அப்போது பணி புரிந்து கொண்டிருந்த பேராசிரியர் கே நாகராஜின் விரிவான ஆய்வுகளின் அடிப்படையிலேயே தி இந்து செய்தி வெளியானது. பேராசிரியர் கே. நாகராஜ் தனது ஆய்வுகளுக்கு தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகத்தின் தகவல்களைத்தான் பயன்படுத்தியிருந்தார். ‘மெட்ராஸ் இண்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடிஸ்’ வருடாவருடம் வெளியிடுகிற ‘இந்தியாவில் தற்செயலான மரணங்கள் மற்றும் தற்கொலைகள்’ எனும் அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் உள்ளன. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பகுதியாக உள்ள   தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகம் மட்டும்தான் நாடு முழுவதும் உள்ள தற்கொலைகளின் வகைககளை ஆய்வு செய்கிற அமைப்பாக இருந்து வருகிறது.

பேராசிரியர் நாகராஜின் ஆய்வை அடுத்து, ஒவ்வொரு வருடமும் தி இந்து நாளிதழில் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிய விவரங்கள், தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகத்தின் அறிக்கைகளின்  அடிப்படையில் துல்லியமாக தற்காலப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, 2008ஆம் வருடத்திய தரவுகள்” சுய வேலைவாய்ப்புள்ளவர்கள் (பண்ணைத்தொழில்/ விவசாயம்) என்ற வகையினத்தில் 16,196 விவசாய தற்கொலைகளைக் கொண்டிருக்கின்றன. (சரி பார்த்துக்கொள்ளவும் - http://ncrb.nic.in/ADSI2008/table-2.11.pdf ).  ஆனால், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் திரு. பவார் மே மாதம் அளித்த பதிலில் எண்ணிக்கையானது 1237 ஆக இருந்தது. அதற்கான ஆதாரம் எதுவும் காட்டப்படவில்லை. (பிடிஐயில் வெளியானபடி) இன்றுவரைக்கும் மத்திய அரசோ மாநில அரசோ தேசிய குற்றப் பதிவேடுகளின் ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையிலான பேராசிரியர் நாகராஜ்  மற்றும் தி இந்து ஆங்கில நாளிதழின் ஆய்வுகளின் மீது எந்தவொரு மாற்றுக்கருத்தையும் தெரிவித்து முரண்படவில்லை. பதிலாக தங்களது தரவுகளோடு முரண்படுவதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்.

வறுமை தொடர்பானவற்றில் அரசாங்கங்கள் இதேபோலத்தான் செயல்படுகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள், பொதுவிநியோக அட்டைகள் உள்ளிட்டவற்றில் அவர்கள் இதேதான் செய்கிறார்கள். ஆனால், விவசாயத் தற்கொலைகளைப் பொறுத்தவரையில் உண்மையான மரணங்கள் இதில் சம்மந்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகளின் நிலை பற்றி மக்கள் வெறுப்படையும் போது எண்ணிக்கையை மாற்றி முன் வைக்க அழுத்தம் கூடுகிறது.

2011 ஆம் வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது தற்போதுள்ள பிரச்சனைகளை மேலும் மோசமாக்கவே செய்யும். ஒவ்வொரு மாநிலத்திலும் உண்மையாகவே எவ்வளவு விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதை அது நமக்குத் தெரிவிக்கும். மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களில் 2001ஆம் ஆண்டில் இருந்ததைவிட மிகவும் குறைவாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது. (1991 முதலான முந்திய பத்தாண்டுகளில் 80 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டனர் என்பதை வெளிப்படுத்தியது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு) 2001 மக்கள்தொகை விவரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் விவசாயத் தற்கொலைகளின் விகிதங்கள் (லட்சம் விவசாயிகளுக்கு எத்தனை தற்கொலைகள்) பேராசிரியர் நாகராஜ் இன்றுவரை கணித்திருக்கிறார்.  இந்த தற்கொலை விகிதம் என்பது மகாராஷ்ட்ரத்தில் 29.9 சதவீதம் ஆகும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களில் விவசாயிகள் பற்றிய விவரங்கள் வெளியாகும்போது இந்த நிலை மேலும் மோசமடையும். ஆனால் மாற்றி மாற்றி எண்ணிக்கையில் குளறுபடி செய்யும் போக்கு தொடரும்.

இந்தக் கட்டுரை தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானது- http://www.thehindu.com/opinion/lead/article428367.ece

http://www.thehindu.com/opinion/lead/article428367.ece

தமிழில்: த. நீதிராஜன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan