ஆர்.கைலாசம் வங்கியை விட்டு எப்போதும் குழப்பத்துடனே கிளம்புகிறார். “ஒவ்வொரு முறை வங்கி பாஸ்புக் பதிவிட சென்றாலும் இயந்திரம் கோளாறாக இருப்பதாக சொல்லி மீண்டும் ஒரு நேரம் வரச் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்,” என்கிறார் அவர்.

இதைக் கேட்க அவர் வசிக்கும் பங்களாமேடு கிராமத்திலிருந்து, ஐந்து கிலோமீட்டர் தொலைவை இரண்டு மணி நேரம் நடந்து கே.ஜி.கண்டிகை டவுனில் இருக்கும் வங்கிக்கு வந்திருக்கிறார். (ஒரு வருடத்துக்கு முன் வரை, பேருந்து சேவை பாதி தூரம் வரை இருந்தது. இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது).

வங்கியில்தான் அவரின் உண்மையான போராட்டம் தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கே.ஜி. கண்டிகை டவுன் கனரா வங்கிக் கிளையில் பாஸ்புக் பதிவேற்ற தானியங்கி இயந்திரம் இருக்கிறது. அதை கைலாசம் இயக்கவே முடிந்ததில்லை. “எனக்கு அது இயங்க மறுக்கிறது,” என்கிறார் அவர்.

ஒருநாள் காலை அவர் வங்கி பிரச்சினைகளை என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த வேலிக்காத்தான் மர நிழலில் அமர்ந்திருந்த சில பெண்களும் இணைந்து கொண்டனர். “உங்கள் பாஸ்புக்கில் ஒரு ஸ்டிக்கர் இருந்தால்தான் பதிவேற்ற முடியும் தாத்தா,” என்றார் அவர்களில் ஒருவர். அவர் சொன்னது சரிதான். கைலாசத்தின் பாஸ்புக்கில் பார்கோடு இல்லை. இயந்திரம் இயங்க பார்கோடு அவசியம். “அவர்கள் ஏன் ஸ்டிக்கர் கொடுக்கவில்லை எனத் தெரியவில்லை. இத்தகைய விஷயங்கள் எனக்கு புரிவதில்லை,” என்கிறார் அவர். பெண்களுக்கும் ஸ்டிக்கர் ஏன் கொடுக்கப்படவில்லை என தெரியவில்லை. ஆனால் யூகித்தனர். “ஏடிஎம் கார்டு நீங்கள் வாங்கினால் ஸ்டிக்கர் கொடுப்பார்கள்,” என்றார் ஒருவர். “நீங்கள் 500 ரூபாய் கொடுத்து புதிய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்,” என்றார் இன்னொருவர். “இருப்புத் தொகை தேவைப்படாத வங்கிக் கணக்காக இருந்தால், ஸ்டிக்கர் உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள்,” என்றார் மூன்றாவது பெண். கைலாசம் குழப்பத்துடன் இருந்தார்.

வங்கியுடனான போராட்டத்தில் அவர் தனியாக இல்லை. பங்களாமேட்டில் இருக்கும் பலருக்கு வங்கிக் கணக்குகளை கையாளுவதும் வருமானத்தை சரிபார்ப்பதும் பணம் எடுப்பதும் சுலபமான காரியங்களில்லை. செருக்கனூர் இருளர் காலனி என்கிற அந்த குக்கிராமம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள ஒரு திறந்த புதர்வெளியில் இருக்கும் ஒற்றை தெருதான். தெருவின் இரு பக்கங்களிலும் சிறு குடிசைகளும் சில கார வீடுகளும் இருக்கின்றன. மொத்தமாக 35 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். (அரசு ஆவணங்களில் சமூகத்தின் பெயர் இருளர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.)

60 வயது கைலாசமும் அவரது மனைவி 45 வயது கே.சஞ்சயம்மாவும் கூரை வேயப்பட்ட ஒரு மண் வீட்டில் வசிக்கின்றனர். நான்கு ஆடுகள் இருக்கின்றன. சஞ்சயம்மா அவற்றை பார்த்துக் கொள்கிறார். அவர்களின் நான்கு குழந்தைகள் வளர்ந்து தனித்தனி குடும்பங்களாகி விட்டனர். தினக்கூலி வேலை செய்யும் கைலாசம் சொல்கையில், “நிலத்தில் வேலை பார்த்தால் ஒரு முழு நாளும் குனிந்து வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது. எலும்புகள் வலிக்கின்றன. ஏரி வேலை (ஊரக வேலைவாய்ப்பு வேலைகள்) எனக்கு பிடித்திருக்கிறது,” என்கிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு வருடத்தில் நூறு நாட்களுக்கு வேலையை உத்தரவாதப்படுத்துகிறது. எனினும் பங்களாமேடு இருளர்களுக்கு நூறு நாட்களுக்கும் குறைவாகதான் வேலைகள் கிடைக்கின்றன.

On R. Kailasam'a visits to the bank, attempts to update his passbook are often unsuccessful; the passbook is his only way to keep track of his money
PHOTO • Smitha Tumuluru
On R. Kailasam'a visits to the bank, attempts to update his passbook are often unsuccessful; the passbook is his only way to keep track of his money
PHOTO • Smitha Tumuluru

வங்கிக்கு செல்கையில் பாஸ்புக் பதிவேற்றும் கைலாசத்தின் முயற்சிகள் தோல்வியே அடைந்தன. அவருடைய பணத்தை கண்காணிக்க பாஸ்புக் மட்டும்தான் அவருக்கு இருக்கும் வழி

பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவாக பட்டியலிடப்பட்டிருக்கும் இருளர்கள் அதிகமாக தினக்கூலி வருமானத்தையே சார்ந்திருக்கிறார்கள். பங்களாமேட்டின் ஆண்கள் அவ்வப்போது கிடைக்கும் விவசாயக் கூலி வேலைகளையும் செங்கல் சூளை மற்றும் கட்டுமான வேலைகளையும் பார்க்கிறார்கள். தினசரி 350-400 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். மேலும் அவர்கள் எலிகள், முயல்கள், அணில்கள் மற்றும் பறவைகள் போன்ற சிறு விலங்குகளை வேட்டையாடி உண்ணுகிறார்கள். (பார்க்க பங்களாமேட்டின் புதையல்கள் மற்றும் பங்களாமேடுவில் எலிகளோடு வேறொரு வாழ்க்கை )

குக்கிராமத்தின் பெரும்பாலான பெண்களுக்கு அவ்வப்போது கிட்டும் செங்கல் சூளை வேலைகளை தாண்டி ஊரக வேலைகள்தான் வருமானத்துக்கான ஒரே வழி. (பார்க்க பங்களாமேடு: ‘பெண்களுக்கான வேலை எங்கே?‘ )

ஊரக வேலை தளங்களில் ஏரிப்படுகைகளை சுத்தப்படுத்துவதற்கும் குழிகள் தோண்டுவதற்கும் மரங்கள் நடுவதற்கும் இருளர்கள் 175 ரூபாய் நாளொன்றுக்கு ஊதியம் பெறுகின்றனர். இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக போடப்படுகிறது.

“இந்த வாரத்தில் நான் வேலை பார்த்தால், அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரத்தில் பணம் வரும்,” என்கிறார் கைலாசம். மாத இறுதியில் எவ்வளவு பணம் சேர்த்திருக்கிறார் என்பது அவருக்கு தெரிவதில்லை. “மாதத்துக்கு 500 ரூபாய் (வீட்டுச் செலவுக்கு) தேவைப்படுகிறது,” என்கிறார் அவர். “மிச்சம் வங்கியில் இருக்கிறது. ஒரு தடவை 3000 ரூபாய் என் வங்கிக் கணக்கில் இருந்தது. அதை என் மகன் ஒரு பொருள் வாங்கவென கொடுத்துவிட்டேன்.”

வங்கியிலிருந்து பணத்தை எடுக்க கைலாசம் படிவம் நிரப்ப வேண்டும். “அவர்கள் சலான் கொடுக்கும்படி சொல்வார்கள். அதை நிரப்புவது எப்படி என எனக்கு தெரியாது,” என்கிறார் அவர். அவருக்கும் சஞ்சயம்மாவுக்கும் எழுதப் படிக்க தெரியாது. “வங்கி ஊழியர்களும் நிரப்பி தர முடியாதென கூறுவார்கள்,” என்கிறார் அவர். “யாரேனும் வருவதற்காக காத்திருந்து அவர்களை எனக்காக படிவத்தை நிரப்பி தரச் சொல்வேன். எப்போது போனாலும் (2-3 மாதங்களுக்கு ஒரு முறை) 1000 ரூபாய்க்கு மேல் நான் எடுக்க மட்டேன்.”

அவர் உதவி கேட்பவர்களில் ஒருவர் ஜி.மணிகண்டன். கைலாசத்தின் வங்கி வேலைகளுக்கு அவர் உதவுகிறார். பிற இருளர்கள் ஆதார் அட்டை போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கவும் அரசு திட்டங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் பெறவும் அவர் உதவுகிறார்.

Most of the families in the single-steet Bangalamedu hamlet have accounts in a bank branch in K. G. Kandigai town. Right: Manigandan, who runs after-school classes, helps people in the hamlet with their bank-related work
PHOTO • G. Manigandan
Most of the families in the single-steet Bangalamedu hamlet have accounts in a bank branch in K. G. Kandigai town. Right: Manigandan, who runs after-school classes, helps people in the hamlet with their bank-related work
PHOTO • Smitha Tumuluru

பங்களாமேட்டின் ஒற்றை தெருவின் பெரும்பாலான குடும்பங்கள் கே.ஜி.கண்டிகையின் வங்கிக் கிளையில் கணக்குகள் வைத்திருக்கின்றனர். வலது: பள்ளிக்கு பின்னான தனி வகுப்புகள் நடத்தும் மணிகண்டன் கிராமத்தில் இருப்போருக்கு வங்கி தொடர்பான வேலைகளில் உதவுகிறார்

”வங்கிக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு ஐந்தாறு பேர் யாருடைய உதவியாவது பெற காத்துக் கொண்டிருப்பார்கள். படிவங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஓரளவுக்கு எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் அவர்களுக்கு நான் உதவுகிறேன்,” என்கிறார் 36 வயது மணிகண்டன். 9ம் வகுப்பு வரை படித்தவர் அவர். பள்ளி முடிந்த பிறகு தனி வகுப்பு நடத்தும் ஓர் உள்ளூர் தொண்டு நிறுவனத்தில் அவர் பணிபுரிகிறார். “ஆரம்பத்தில் நான் தவறுகள் செய்து விடுவேனோ என அஞ்சினேன்,” என்கிறார். “எதையேனும் நாம் அடித்து திருத்தினால் அவர்கள் அதை கிழித்துவிட்டு புதிய படிவம் நிரப்பி கொடுக்க சொல்வார்கள்.” கடந்த சில மாதங்களாக தமிழ் படிவங்களும் கிடைக்கின்றன.

கைலாசத்தின் அண்டை வீட்டில் வசிப்பவர் 55 வயது கோவிந்தம்மாள். அவரும் பள்ளிக்கு சென்றதில்லை. ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகளுக்கான ஊதியத்தையும் மாத ஓய்வூதியமான 1000 ரூபாயையும் எடுப்பதில் அவரும் பல சிக்கல்களை சந்திக்கிறார். அவர் ஒரு கைம்பெண். தனியே வாழ்கிறார். மகளும் இரு மகன்களும் அதே ஊரில் சொந்த வீடுகளில் வாழ்கின்றனர். “கைரேகைதான் வைப்பேன். எனவே அவர்கள் (வங்கி ஊழியர்கள்) படிவத்தில் சாட்சி கையெழுத்திட ஒருவரை அழைத்து வரச் சொல்வார்கள். வழக்கமாக எனக்கு படிவத்தை நிரப்பி கொடுக்க உதவுபவர்களிடமே கையெழுத்திட முடியுமா எனக் கேட்பேன்,” என்கிறார் அவர்.

படிவத்தை நிரப்புவர் அதில் வங்கிக் கணக்கு எண்ணையும் நிரப்ப வேண்டும். சிரிப்புடன் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார் மணிகண்டன்: “ஒருமுறை நான் சாட்சி கையெழுத்து போட்டுவிட்டு என் வங்கிக் கணக்கு எண்ணை நிரப்பிவிட்டேன். வங்கி என்னுடைய கணக்கிலிருந்து பணத்தை எடுத்தது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் தவறை கண்டுகொண்டனர். என் பணம் திரும்பக் கிடைத்தது.”

சொந்த வங்கி வேலைகளுக்கு மணிகண்டன் ஒரு வங்கி அட்டையை பயன்படுத்துகிறார். ஏடிஎம் இயந்திரங்களில் பரிவர்த்தனை மொழியாக தமிழை தேர்ந்தெடுக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு அட்டை கிடைத்தது. ஆனால் கொஞ்ச காலம் கழித்துதான் அதை அவர் பயன்படுத்த முடிந்தது. “கிட்டத்தட்ட 20 தடவை முயன்றுதான் பணத்தை எடுக்கவும் என் கணக்கை பார்க்கவும் கற்றுக் கொண்டேன்.”

ஏன் கைலாசமும் கோவிந்தம்மாளும் வங்கி அட்டையை பயன்படுத்துவதில்லை? கைநாட்டு வைப்பவர்களுக்கு வங்கி அட்டைகள் கொடுக்கப்படுவதில்லை என்கிறார் மணிகண்டன். கே.ஜி.கண்டிகை டவுனிலுள்ள கனரா வங்கியின் மேலாளரான பி.லிங்கமய்யா சொல்கையில், “முன்பு அதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பிக்கும் எவருக்கும் வங்கி அட்டை வழங்கப்படுகிறத,” என்கிறார். “ஜன் தன் வங்கிக் கணக்கோ கைநாட்டோ யாரென்றாலும் வங்கி அட்டை பெற முடியும்.” பங்களாமேடுவில் இருக்கும் பலருக்கு இந்த வசதியை பற்றி தெரியவில்லை.

The bank has set up a small unit in Cherukkanur panchayat village
PHOTO • Smitha Tumuluru

செருக்கனூர் பஞ்சாயத்து கிராமத்தில் வங்கி உருவாக்கியிருக்கும் சிறு கிளை

’கைரேகைதான் வைப்பேன். எனவே அவர்கள் (வங்கி ஊழியர்கள்) படிவத்தில் சாட்சி கையெழுத்திட ஒருவரை அழைத்து வரச் சொல்வார்கள். வழக்கமாக எனக்கு படிவத்தை நிரப்பிக் கொடுக்க உதவுபவர்களிடமே கையெழுத்திட முடியுமா எனக் கேட்பேன்,’ என்கிறார் கோவிந்தம்மாள்

வங்கி பரிவர்த்தனைகளை எளிமையாக்க பங்களாமேட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செருக்கனூர் கிராமத்தில் கனரா வங்கி ஒரு சிறு கிளையை அமைத்திருக்கிறது. மக்கள் இதை சிறுவங்கி என அழைக்கின்றனர். இங்கு ஒரே ஒருவர் மட்டும் பணிபுரிகிறார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அவர், வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்கவும் பணம் எடுக்கவும் பணம் போடவும் ஒரு பயோமெட்ரிக் இயந்திரத்தை கொண்டு உதவுகிறார்.

வங்கி அதிகாரியான 42 வயது இ.கிருஷ்ணதேவி ஒரு கையளவு இயந்திரத்தை அவருடைய செல்பேசியின் இணையத்துடன் இணைக்கிறார். பிறகு வாடிக்கையாளரின் ஆதார் எண்ணை உள்ளிடுகிறார். இயந்திரம் கைரேகையை ஆராய்ந்து பரிவர்த்தனையை ஏற்கிறது. “ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பணத்தை நான் கையில் வைத்திருக்கிறேன்,” என்கிறார் அவர். ஒருநாளின் வங்கி பரிவர்த்தனை கணக்குகளை அவர் பிற்பகல் 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும்.

கைரேகை ஏற்கப்படாதவர்களும் இருக்கிறார்கள்.அவர்களிடம் ஆதார் அட்டைகள் இல்லையென்றால், பாஸ்புக் பதிவேற்றத்துக்கு கே.ஜி.கண்டிகையிலுள்ள வங்கிக்குதான் செல்ல வேண்டும்.

“சில நேரங்களில் பணம் தீர்ந்துவிட்டது என அவர் (வங்கி அதிகாரி) சொல்வார். ஒரு துண்டுச் சீட்டை எழுதி எங்களிடம் கொடுத்து அதே நாளிலோ அடுத்த நாளிலோ வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளச் சொல்வார். நாங்கள் மீண்டும் செல்ல வேண்டியிருக்கும்,” என்கிறார் கோவிந்தம்மாள். உள்ளூர் ஏரியின் விளிம்பில் சில நண்பர்களுடன் சேர்ந்து செருக்கனூருக்கு சென்று கொண்டிருக்கிறார் அவர். “அலுவலகத்துக்கு வெளியே நாங்கள் காத்திருப்போம். அவர் வரவில்லை எனில், அவர் வீட்டுக்கு செல்வோம்.”

வழக்கமாக வங்கி அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள். ஆனால் கிருஷ்ணதேவி ஒரு பழைய, பயன்படுத்தப்படாத நூலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இருப்பார். அந்த நேரங்கள் மட்டுமின்றி ஒரு நாளின் எந்த நேரத்திலும் அவரை அணுகலாம் என உறுதியாகக் கூறுகிறார். “வெளியே சென்று வேலை பார்ப்பவர்கள், என் வீட்டுக்கு வருவார்கள்,” என்கிறார் அவர்.

ஒவ்வொரு வாரத்தின் செவ்வாய் கிழமை அன்று கிருஷ்ணதேவி அவரின் பயோமெட்ரிக் இயந்திரத்தை கே.ஜி.கண்டிகையின் வங்கிக்கு கொண்டு செல்வார். பிற நான்கு பஞ்சாயத்துகளின் அலுவலர்களும் அதே போல் வாரத்தில் ஒரு நாள் வங்கிக்கு செல்வர். எல்லா வார நாட்களிலும் இயந்திரம், பிற்பகல் 2 மணி வரை ஆதார் அட்டை கொண்டு பரிவர்த்தனை செய்ய விரும்புவோரின் பயன்பாட்டுக்கு இருக்கும். ஆனால் அந்த இயந்திரம் கே.ஜி.கண்டிகையில் செவ்வாய்க்கிழமை அன்று மட்டும்தான் இருக்கும் என கைலாசம் தவறாக புரிந்து கொண்டிருந்தார்.

The ‘mini bank’ is one person – in Cherukkanur, it's Krishnadevi, who helps customers check their account balance and withdraw or deposit cash, using a biometric device Right: S. Sumathi, who runs a small shop in her one-room house, was stunned when she learnt about the overdraft facility
PHOTO • G. Manigandan
The ‘mini bank’ is one person – in Cherukkanur, it's Krishnadevi, who helps customers check their account balance and withdraw or deposit cash, using a biometric device Right: S. Sumathi, who runs a small shop in her one-room house, was stunned when she learnt about the overdraft facility
PHOTO • G. Manigandan

செருக்கனூரின் ’சிறு வங்கி’யின் ஒரு அலுவலரான கிருஷ்ணதேவி, வாடிக்கையாளர்கள் வங்கி இருப்பை சரிபார்க்கவும் பணம் எடுக்கவும் போடவும் பயோமெட்ரிக் இயந்திரத்தை கொண்டு உதவுகிறார் வலது: ஓரறை வீட்டில் ஒரு கடை நடத்தி வரும் எஸ்.சுமதி வங்கி இருப்பை காட்டிலும் அதிக பணம் எடுக்க முடியும் என தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்

கைலாசத்தை போலவே இங்கிருக்கும் பெரும்பாலான இருளர் குடும்பங்கள் கனரா வங்கியில்தான் கணக்குகள் வைத்திருக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக இந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த ஒரே வங்கி அதுதான். (சில வருடங்களுக்கு முன் ஆந்திரா வங்கியின் கிளை ஒன்று கே.ஜி.கண்டிகையில் அமைக்கப்பட்டது. தற்போது வேறு நான்கு வங்கிகளின் ஏடிஎம்களும் வந்திருக்கின்றன). சிலர் வழக்கமான வங்கிக் கணக்குகளை கொண்டிருந்தாலும் பிறர் வங்கி இருப்பு தேவைப்படாத ஜன் தன் கணக்குகளை வைத்திருக்கின்றனர்.

ஆனாலும் நான் விசாரித்த பல பேர் வங்கி இருப்பு தேவைப்படாத வங்கிக் கணக்குகளிலும் கூட குறைந்தபட்ச தொகை ஒன்றை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறுகின்றனர். இத்தகைய வங்கிக் கணக்கு வைத்திருக்கும் கோவிந்தம்மாள் சொல்கையில், “கே.ஜி.கண்டிகையில் எப்போதும் குறைந்தது 500-1000 ரூபாய் கணக்கில் வைக்குமாறு சொல்வார்கள். அப்போதுதான் ஏரி வேலை (ஊரக வேலை) பணம் வரும் என்கிறார்கள். அதனால்தான் நான் செருக்கனூருக்கு (சிறு வங்கி) செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு நான் 200-300 ரூபாயை கணக்கிலேயே விட்டுவிடுகிறேன்,” என்கிறார்.

2020ம் ஆண்டின் இறுதியில், கே.ஜி.கண்டிகை வங்கியின் மேலாளரான கே.பிரசாந்த்திடம் இதை பற்றி நான் கேட்கையில், ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இருப்புத் தொகை தேவையில்லை என தெளிவுபடுத்தினார். “ஒருவேளை வாடிக்கையாளரின் தனித்தகவல்கள் அடங்கிய பலவித பரிவர்த்தனைகள் செய்யக் கூடிய வங்கிக் கணக்கு வேண்டுமென்றால், அவர்கள் வழக்கமான வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். அதில் 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

எனினும் தற்போதைய மேலாளரான பி.லிங்கமய்யா, ஜன் தன் வங்கிக் கணக்கு கொண்டிருப்போர் குறைந்தளவு பணத்தையேனும் கணக்கில் வைத்திருக்க வேண்டுமென அலுவலர்கள் வலியுறுத்துவதை ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர், ஜன் தன் அல்லது இருப்புத் தொகை தேவைப்படாத கணக்கு வேண்டுமென ஒருவர் வலியுறுத்திக் கேட்கவில்லை எனில் வழக்கமான வங்கிக் கணக்கைதான் வங்கி உருவாக்கிக் கொடுக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

கோவிந்தம்மாள் இன்னொரு பிரச்சினையையும் சுட்டிக் காட்டுகிறார். “முதலில் அவர்கள் (வங்கி) நான் எந்த பணமும் வங்கிக் கணக்குக்கு கட்டத் தேவையில்லை என்றனர். ஆனால் ஒவ்வொரு வருடமும் 500லிருந்து 1000 ரூபாய் வரை எடுத்துக் கொள்கின்றனர். எப்போதும் நான் எதிர்பார்ப்பதை விட குறைவான பணமே என் வங்கிக் கணக்கில் இருக்கிறது,” என்கிறார் அவர்.

இந்த குழப்பம், இருப்பில் இருக்கும் பணத்தை விட அதிகம் பணம் எடுக்கும் ‘ஓவர்ட்ராஃப்ட்’ வசதியை குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஜன் தன் வங்கி கணக்கு கொண்டிருப்போருக்கு வழங்குவதால் ஏற்படுவதாக கே.பிரசாந்த் சொல்கிறார். “வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் மட்டும் இருந்து 3000 ரூபாய் எடுக்க அவர்கள் விரும்பினால், அத்தொகையை அவர்கள் எடுக்க அமைப்பு அனுமதிக்கும். அதிகமான அந்த 1000 ரூபாய், புதிய தொகை கணக்குக்கு வந்ததும் அதில் சரிசெய்யப்படும். இப்படியொரு வசதி இருப்பதே அவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.

R. Vanaja with M. Ankamma and her child. In 2020, Vanaja and her husband R. Johnson (right) , lost money from their account in a phone scam
PHOTO • Smitha Tumuluru
R. Vanaja with M. Ankamma and her child. In 2020, Vanaja and her husband R. Johnson (right) , lost money from their account in a phone scam
PHOTO • G. Manigandan

எம்.அங்கம்மா மற்றும் குழந்தையுடன் ஆர்.வனஜா. 2020ல் வனஜாவும் அவரின் கணவர் ஆர்.ஜான்சனும் (வலது) ஒரு தொலைபெசி மோசடியில் வங்கியிலிருந்த பணத்தை இழந்தனர்

28 வயது எஸ்.சுமதி, கோவிந்தம்மாளின் வீட்டுக்கு எதிரே வசிக்கிறார். ‘ஓவர்ட்ராஃப்ட்’ வசதியை பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தார். “இதை பற்றி யாரேனும் எங்களுக்கு விளக்கி இருக்கலாம். வங்கிதான் எங்களின் பணத்தை எடுப்பதாக நாங்கள் நினைத்தோம்.”

குறுந்தகவல் சேவையிலும் பணம் தொலைகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வங்கி 18 ரூபாய் பிடித்துக் கொள்கிறது. ஆனால் இங்குள்ள அனைவரிடமும் செல்பேசிகள் இருக்கவில்லை. செல்பேசியில் இருக்கும் ரீசார்ஜ் தொகை தீர்ந்துவிட்டால், குறுந்தகவல்களையும் அவர்கள் பெற முடியாது. மேலும் இந்த குறுந்தகவல்கள் அவர்கள் பணம் எடுக்கும்போது அனுப்பப்படுபவை என்கிறார் சுமதி. “எங்கள் வங்கிக் கணக்கில் பணம் போடுகையில் ஏன் அவர்கள் குறுந்தகவல் அனுப்புவதில்லை. அது நடந்தால் எங்களின் பிரச்சினைகள் பெருமளவுக்கு தீரும்.”

கணிணிமயம் அதிகமாவதால் இன்னும் பிற சவால்களும் உருவாகியிருக்கின்றன. 2020ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மணிகண்டனின் உறவினரான 23 வயது ஆர்.ஜான்சன் ஒரு மோசடியால் 1500 ரூபாயை இழந்தார்.அவரின் 22 வயது மனைவி ஆர்.வனஜாவின் வங்கிக் கணக்கில் ஊரக வேலையின் ஊதியம் 2000 ரூபாய் இருந்தது. வங்கி அலுவலர் என்கிற பெயரில் செல்பேசியில் தொடர்பு கொண்ட ஒருவரிடம் வனஜாவின் வங்கி அட்டை தகவல்களை கொடுத்தார் ஜான்சன். இருவருக்கும் ஒரே வங்கி கணக்குதான் இருக்கிறது. “வங்கி அலுவலரை போலவே அவன் பேசினான். வங்கி அட்டை முடக்கப்பட்டுவிட்டதாக சொல்லி அதன் முடக்கத்தை நீக்க வேண்டுமானால் எண்ணை நான் கொடுக்க வேண்டுமென கூறினான். எனக்கு தெரிந்த எல்லா எண்களையும் நான் கொடுத்தேன். ரகசிய எண்ணையும் கூட கொடுத்தேன். இறுதியில் வெறும் 500 ரூபாய் மட்டுமே மிஞ்சியது,” என்கிறார் அவர்.

தொடர்பு கொண்டவன் ஜான்சனிடம் பேசி மணிகண்டனின் வங்கி அட்டை தகவல்களை கூட வாங்கினான். சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து, வங்கி மணிகண்டனுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பியது. அதற்குள் அவர் 17000 ரூபாயை இழந்திருந்தார். புதிதாக வீடு கட்டவென அவர் வாங்கியிருந்த பணம் அது.

ஜான்சனும் பிற இருளர்களும் டிஜிட்டல்மய உலகில் அவர்களுக்கான இடத்தை உருவாக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரத்யேக தேவைகளுக்கு இடமளிக்காத வங்கி முறைகளில் தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கைலாசத்தின் பாஸ்புக் இன்னும் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அவருக்கு ஒரு விஷயத்தில் ஆசுவாசம் இருந்தது. “பயோமெட்ரிக் இயந்திரம் பயன்படுத்த படிவங்கள் நிரப்ப வேண்டியதில்லை.”

தமிழில் : ராஜசங்கீதன்

Smitha Tumuluru

Smitha Tumuluru is a documentary photographer based in Bengaluru. Her prior work on development projects in Tamil Nadu informs her reporting and documenting of rural lives.

Other stories by Smitha Tumuluru
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan