மே மாத தொடக்கத்தில் அஜய்குமார் சா காய்ச்சலாக உணர்ந்தார். ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள தனது அசார்ஹியா கிராமத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இட்கோரி நகரில் தனியார் மருத்துவமனை மருத்துவரை அவர் அணுகினார்.

கோவிட் பரிசோதனை எதுவும் செய்யாத அந்த மருத்துவர் 25 வயது துணி வியாபாரியான அஜய்க்கு (முகப்புப் படத்தில் மகனுடன் இருப்பவர்) டைபாய்ட், மலேரியா இருப்பதாக கூறிவிட்டார். அஜயின் இரத்த ஆக்சிஜன் அளவு 75 முதல் 80 சதவீதம் வரை ஏறி இறங்குவதை அவர் பரிசோதித்தார். (95 முதல் 100 என்பது இயல்பான நிலை). அஜய் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

2-3 மணி நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட அவர் கவலை அடைந்தார். இச்சமயம் அவர் ஹசாரிபாகில் (அசார்ஹியாவிலிருந்து தோராயமாக 45 கிலோமீட்டர்) உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று வேறு ஒரு மருத்துவரைப் பார்த்தார். இங்கும் அவருக்கு கோவிட்-19 பரிசோதனைக்கு பதிலாக டைபாய்ட், மலேரியா பரிசோதனையே செய்யப்பட்டன.

அதே கிராமத்தில் வசிக்கும் ஒளிப்படத் தொகுப்பாளரான ஹையுல் ரஹ்மான் அன்சாரியிடம் அஜய் கூறுகையில், தனக்கு கோவிட் பரிசோதனை செய்யப்படவில்லை “மருத்துவர் என்னைப் பார்த்துவிட்டு கரோனா இருப்பதாக கூறினார். சதார் மருத்துவமனைக்குச் [ஹசாரிபாகில் உள்ள அரசு மருத்துவமனை] செல்லுமாறு என்னிடம் அவர் கூறினார். இங்கு சிகிச்சை என்றால் செலவு கூடுதலாகும். பயம் ஏதுமின்றி, ஆகும் செலவை ஏற்பதாக நாங்கள் கூறினோம். எங்களால் அரசு மருத்துவமனைகளை நம்ப முடியாது. அங்கு [கோவிட்] சிகிச்சைக்கு சென்ற  யாரும் திரும்பவில்லை.”

பெருந்தொற்றுக்கு முன் மாருதி வேனில் கிராமம் விட்டு கிராமம் சென்று அஜய் துணி வியாபாரம் செய்து மாதம் ரூ.5000 - 6000 வரை ஈட்டினார்

காணொளியைக் காணவும்: அசார்ஹியாவில்: கோவிடில் தப்பித்து கடனுடன் போராட்டம்

இக்கட்டுரையின் இணை ஆசிரியரான ஹையுல் ரஹ்மான் அன்சாரி இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டாவது முறையாக அசார்ஹியாவிற்கு வீடு திரும்பினார். மகாராஷ்டிரா அரசு 2021 பொதுமுடக்கம் அறிவித்தபோது அவர் மும்பையில் அம்மாதம் ஒளிப்படத் தொகுப்பாளராக புதிய வேலையைத் தொடங்க இருந்தார். ஏற்கனவே அவர் 2020 மே மாதம் தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கின்போது (அவர் குறித்த பாரியின் கட்டுரையை இங்கு காணலாம்) முதலில் ஊர் திரும்பினார். அவரும், அவரது குடும்பத்தினரும் தங்களின் 10 ஏக்கர் நிலத்தில் நெல் அறுவடை செய்து சொந்த பயன்பாட்டிற்கும், எஞ்சியதை சந்தையிலும் விற்கின்றனர்.

33 வயதாகும் ரஹ்மானுக்கு அசார்ஹியாவில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவரது படத்தொகுப்பு திறமை எல்லாம் கிராமத்தில் எடுபடாது. அவரது குடும்பத்தின் 10 ஏக்கர் நிலத்தில் ஜூன் நடுவில் நெல், சோளம் விதைப்பது தொடங்கின. அதுவரை அவர் அவ்வளவு விவசாய வேலை செய்தது இல்லை. ஊடக தொடர்பியலில் இளநிலை பட்டம் பெற்று 10 ஆண்டுகள் மும்பையில் ஒளிப்படத் தொகுப்பாளராக பணி என ஊடக பின்னணியை கைவிட்டு வந்துள்ளார். அவரிடம் பெருந்தொற்றால் அசார்ஹியா மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து செய்தி சேகரிக்குமாறு கோரியபோது அதை ஏற்றுக் கொண்டார்.

இக்காணொளியில் அஜய் குமார் சா கோவிட் தொற்றை எதிர்கொண்ட விதம் மற்றும் அவருடைய கடன் சுமை குறித்து ரஹ்மான் நம்மிடம் சொல்கிறார். அரசு மருத்துவமனைகளுக்கு அஞ்சிய அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹசாரிபாகில் உள்ள தனியார் சிகிச்சை மையத்தில் சிகிச்சையைத் தொடர முடிவு செய்தனர். அவர் ஆக்சிஜன் உதவியோடு கோவிடிற்கு சிகிச்சைப் பெற்றார். அங்கு அவர் மே 13ஆம் தேதி வரை ஏழு நாட்கள் செலவிட்டார். இதற்கு ரூ.1.5 லட்சம் செலவாகும் என அவர் நினைக்கவில்லை. வட்டிக்கடைக்காரர், அவரது தாயார் உறுப்பினராக உள்ள மகளிர் குழு, அவரது பாட்டியின் குடும்பத்தினரிடம் என பல வகைகளில் கடன் பெற்று அஜய் குடும்பத்தினர் இத்தொகையைச் செலுத்தியுள்ளனர்.

பெருந்தொற்றுக்கு முன் மாருதி வேனில் கிராமம் விட்டு கிராமம் சென்று அஜய் துணி வியாபாரம் செய்து மாதம் ரூ.5000 - 6000 வரை ஈட்டினார். கடந்தாண்டு ஊரடங்கின் போதும், இந்தாண்டு பொதுமுடக்கத்தின்போதும் அவரது தொழில் முடங்கின. 2018 டிசம்பர் மாதம் ரூ.3 லட்சம் கடனில் அவர் வேன் வாங்கினார். அதில் கொஞ்சம் பாக்கி உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் அறுவடை செய்தும், மேலும் கடன்களைப் பெற்றும், அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவர் ரஹ்மானிடம் சொல்கிறார்: “ஒருமுறை வருவாய் ஈட்டத் தொடங்கியதும் பணத்தை நாங்கள் மெல்ல திருப்பிச் செலுத்துவோம்.”

தமிழில்: சவிதா

Subuhi Jiwani

Subuhi Jiwani is a writer and video-maker based in Mumbai. She was a senior editor at PARI from 2017 to 2019.

Other stories by Subuhi Jiwani
Haiyul Rahman Ansari

Haiyul Rahman Ansari, originally from Asarhia village in Jharkhand’s Chatra district, has worked as a video editor in Mumbai for a decade.

Other stories by Haiyul Rahman Ansari
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha