ஏப்ரல் 1996 அன்று, மஜல்கான் தாலுகாவில் உள்ள பீம் நகருக்குச் சென்று முக்தாபாய் ஜாதவ் பாடிய ஓவியை நாங்கள் கேட்டோம். அடுத்த சில மணி நேரங்களில், அந்த கிராமத்தில் வசித்த பல பெண்களின் பாடல்களை பதிவு செய்தோம்.

“முக்தாபாய் வீடு எங்கிருக்கிறது?” என நாங்கள் கேட்டதும், 10-க்கு 15 அடியுள்ள, ஒரு பக்கம் தகரத்தால் மூடப்பட்ட சிறிய அறையை சுட்டிக் காட்டுகிறார் அந்தப் பெண்மணி. வேலியின் சிறிய இடைவெளியில் மூடப்படாத வாசலை நாங்கள் பார்த்தோம். அதிலிருந்து வயதான பெண்மணி வெளியே வந்தார்.

தற்போது, சரியாக 21 வருடங்கள் கழித்து, ஏப்ரல் 2017-ல் மீண்டும் நான் பீம் நகர் வந்துள்ளேன். மெதுவாக கதவைத் திறந்த முக்தாபாய், “யா தேவா!” என அழைத்து எங்களை உள்ளே வருமாறு கூறினார். நீல நிற சேலை உடுத்தியிருந்த அவர், கழுத்தைச் சுற்றி பெரிய பாசி மணிகளும், நெற்றியில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாந்தையும் சூடியிருந்தார். இன்றும் கருப்பு நிறமாக இருக்கும் முடி, அவரது உண்மையான வயதை மறைத்தது. தோராயமாக 60 வயதிற்குள் இருக்கும் முக்தாபாய், குனிந்து “வாருங்கள், கடவுளே” என மறுபடியும் எங்களை வரவேற்றார்.

அவரின் தகரக் கொட்டகை முன்பு இரண்டு குழிகள் இருக்கின்றன. அவை தண்ணீரை சேமித்து வைப்பதற்காக இருக்கக்கூடும். வீட்டின் ஓரமாக ஓடிக்கொண்டிருந்த சாக்கடையை கவனமாக தாண்டி வீட்டிற்குள் சென்றோம். முக்தாபாயின் சிறிய வீட்டில் பொருட்கள் நிரம்பியிருக்கின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் புகைப்படம் தொலைக்காட்சிக்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொலைக்காட்சியில் ஆன்மீக ஆஸ்தா சேனல் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்பேகர் மற்றும் அவர் கூறிய 22 உறுதிமொழிகள் (விவரக் குறிப்பை பார்க்கவும்) அடங்கிய மற்றொரு புகைப்படம் சுவரை அலங்கரிக்கிறது. அதற்கருகிலேயே துல்ஜா பவானி கடவுளின் புகைப்படம் உள்ளது. சைலானி பாபா, பிரஜபிதா பிரம்ம குமாரி போன்ற மதத் தலைவர்கள் மற்றும் கடவுள்களின் பல புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் அவரது வீட்டின் சுவரை அலங்கரிக்கின்றன. இது போதாதென்று அவரது சிறிய பூஜை அறையில் பல கடவுள்கள் இடம் பிடித்துள்ளார்கள். இப்படி கடவுளின் நெரிசலுக்கு இடையே எங்கள் நால்வரையும் தாராளமாக உள்ளே அமர வைத்தார் முக்தாபாய்.

a woman
PHOTO • Jitendra Maid

(குறிப்பு: நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமியில் அக்டோபர் 14, 1956 அன்று புத்த மதத்தை தழுவினார் பாபாசாகேப் அம்பேத்கர்.  அவர் எடுத்த புத்தம், தர்மம், சங்கம் உள்ளிட்ட 22 உறுதிமொழிகள் கல்வெட்டாக இருக்கின்றன. இந்து மதத்தை சார்ந்த பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் நிராகரிக்கும் உறுதிமொழியும் அவற்றில் இருக்கிறது. இந்த உறுதிமொழிகள் சமத்துவத்துக்கான நம்பிக்கையையும் முயற்சியையும் உருவாக்குபவையாக இருக்கின்றன.)

நாங்கள் அமர்வதற்காக தரையில் மெத்தையை விரித்தார் முக்தாபாய். சென்ற முறை நான் பார்க்க வந்ததையும் அந்த சமயத்தில் அவர் பாடிய ஓவியையும் நியாபகப்படுத்தினேன். அந்தப் பாடலை நாங்கள் மீண்டு கேட்க விரும்புவதாக அவரிடம் கூறினேன். அம்பேத்கரின் இறப்பு குறித்த ஒரு ஓவியை அவர் பாடினார்.

"गेले गेले भीमराज, चंदनपाट टाका न्हाया

भीमा मुंबईच्या बाया"

मेले मेले भिमराज चंदनपाट टाका न्हाया

भीमा तुम्हाला ओवाळाया, अख्ख्या मुंबईच्या बाया

பீம் இறந்துவிட்டார், சந்தனக்கட்டை படுக்கையில் வைத்து அவரை குளிப்பாட்டுங்கள்*

பீமா, பாம்பே பெண்கள் உங்களை விளக்கு ஏற்றி வணங்குவார்கள்

(குறிப்பு: இறுதிச் சடங்கிற்கு முன் இறந்த உடலை நீராட்டும் வழக்கத்தை இது குறிக்கிறது)

மற்றொரு ஓவியின் சிறிய பகுதியை அவர் பாடினார். ஆனால் அவரால் அதை முழுதாக நியாபகத்துக்கு கொண்டு வர முடியவில்லை. கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்கிறார். கண்டிப்பாக நாங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டார் முக்தாபாய். பாத்திரத்தில் இருந்த சமைத்த காய்கறியை சுட்டிக்காட்டி, “கொஞ்சம் சாப்பிடுங்கள். சாப்பிடாமல் என் வீட்டை விட்டு யாரும் வெளியேற முடியாது” என்றார். சாப்பிடுவதற்கோ டீ குடிப்பதற்கோ எங்களுக்கு நேரம் இல்லை என்றோம். கடைசியாக, எங்களுக்கு ஸ்பூனில் சர்க்கரையை வழங்கினார். இந்தச் சுவையான சந்திப்பை கொண்டாடும் விதமாக கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு, மறுபடியும் பார்க்க வருவோம் என வாக்குறுதி கொடுத்தோம். தன்னிடமிருந்து ஏதாவது வாங்கிக் கொள்ளாமல் எங்களை வெளியே அனுப்ப முக்தாபாய்க்கு மனமில்லை. ஆகையால் அவர் அன்போடும் அக்கறையோடும் வழங்கிய தேங்காயை நான் வாங்கிக் கொண்டேன். நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது மறுபடியும் அவர், “யா தேவா, மறுபடியும் வாருங்கள், கடவுளே!” என்றார்.

மற்றொரு ஓவியின் சில பகுதிகளை அவர் பாடினாலும்,  அவரால் முழுமையாக பாட முடியவில்லை. கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்கிறார்

வீடியோ பார்க்க: மனிதர்களிடம் கடவுளை தேடுதல்

பார்பானியைச் சேர்ந்த கங்குபாய் அம்போரை எனக்கு  ஞாபகமிருக்கிறது. கிரிண்ட்மில் பாடல்கள் திட்டத்திற்காக 20 வருடங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். தனியாக, தனது குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு, தொழுநோயால் பாதிக்கப்பட்டு பல காலமாக கோயிலில் அவர் வாழ்ந்து வந்தார். கோயில் முற்றத்தில் இருந்து கொண்டு முழு நேரமும் நிலாவோடு பேசிக் கொண்டிருந்தார். இங்கு முக்தாபாயின் வீடே கோயிலாக இருக்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடத்தில் அவர் கடவுளை தேடுகிறார். அதனால்தான் அனைவரையும் ”யா தேவா….” என வரவேற்கிறார்.

முக்தாபாய் தனியாகவே வசிக்கிறார். அவர் கணவர் உயிரோடு இல்லை. அவருக்கு குழந்தைகளும் இல்லை. அவருக்கு துணையாகவோ அல்லது கவனித்துக் கொள்ளவோ யாரும் இல்லை. கிராமத்தில் உள்ள மற்றவர்கள் கொடுப்பதை வைத்தே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நேரத்தை போக்குவதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கிறது.

பல்வேறு பிரிவுகள் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த பல கடவுள்களின் உருவங்கள் மற்றும் புகைப்படங்களை அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒருவேளை தனது தனிமையை போக்கிக் கொள்ளும் வழியாக நினைத்திருக்கலாம். ஒருவேளை தன்னைச் சந்திக்க வருபவர்கள் அனைவரும் கடவுளே, மனிதர்கள் இல்லை என அவர் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். அல்லது தான் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் தெய்வீக அருளை அவர் தேடலாம். “யா தேவா, வாருங்கள் கடவுளே….” என்ற அவரது கனிவான வரவேற்பிற்கு காரணம், ஒவ்வொரு நபரிடமும் கடவுள் இருக்கிறார் என்ற பயபக்தியாலா?

“உங்கள் மனம் திடமாக இருந்தால், கடவுள் மாற மாட்டார். தொடர்ந்து நாம் உழைத்து தெய்வீக அருளை (நம்மைச் சுற்றியுள்ள) காண வேண்டும்” என்கிறார் முக்தாபாய்.

முக்தாபாயை நினைத்தால் இன்றும் எனக்கு புதிராக இருக்கிறது. அவரது வீட்டைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருந்தாலும் எல்லாருக்காகவும் கதவு திறந்தே இருக்கிறது. இந்து மதத்தையும் கடவுளையும் மறுத்த  டாக்டர் அம்பேத்கர் மீது அவர் பயபக்தி கொண்டுள்ளார். ஆனால் அவரது வீட்டில் பல கடவுள்களுக்கு இடையே கம்பீரமாக நிற்கிறார் அம்பேத்கர்.

குறிப்பு: 1996-ம் ஆண்டு நான் முதன் முதலில் முக்தாபாய் ஜாதவை சந்தித்த தேதி – ஏப்ரல் 2 – அன்று மறுபடியும் அவரைப் பார்க்க நாங்கள் சென்றோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அம்பேத்கர் குறித்து சில ஓவிகளை அப்போது அவர் பாடினார். இப்போது அவர் பாடுவதை பதிவு செய்யவும் அவரைப் புகைப்படம் எடுக்கவும் நாங்கள் விரும்பினோம். என்னோடு பாரி-யின் நமிதா வாய்க்கர் மற்றும் சம்யுக்தா சாஸ்திரியும் உடன் வந்தனர்.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Jitendra Maid

Jitendra Maid is a freelance journalist who studies oral traditions. He worked several years ago as a research coordinator with Guy Poitevin and Hema Rairkar at the Centre for Cooperative Research in Social Sciences, Pune.

Other stories by Jitendra Maid
Translator : V Gopi Mavadiraja

V Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V Gopi Mavadiraja