"தாலுக்கு வெளியில் இருந்து வரும் தொழிலாளர்கள் மிதக்கும் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டால், நீரில் மூழ்கிவிடுவோமோ எனக் கவலைப்படுகிறார்கள்!" என்று முகமது மக்பூல் மட்டூ சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய வேலைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை விட 200 ரூபாய் அதிகப்படுத்தி, நாளொன்றுக்கு 700 ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதாகச் சொல்கிறார் ஸ்ரீநகர் தால் ஏரியின் மோதி மொஹல்லா குர்த் பகுதியில் உள்ள 47 வயது விவசாயி. ஊதியச் செலவைக் குறைக்க, "நானும் என் மனைவி தஸ்லீமாவும் பிற வேலைகள் இருந்தாலும் தினமும் [இந்த வேலைக்கு] வருகிறோம்" என்று கூறுகிறார்.

முகமது மக்பூல் மட்டூ தனது 7.5 ஏக்கர் மிதக்கும் தோட்டத்திற்குச் செல்ல ஒரு படகைப் பயன்படுத்துகிறார். அங்கு அவர் சிவப்பு முள்ளங்கி மற்றும் சீமைப் பரட்டைக் கீரைப் போன்ற பல்வேறு காய்கறிகளை ஆண்டு முழுவதும் பயிரிடுகிறார். குளிர்காலத்தில் கூட அவர் அதைச் செய்கிறார், வெப்பநிலை -11 ° C ஆகக் குறையும் போது, ​​அவர் படகு செலுத்த ஏரியின் பனிக்கட்டி மேற்பரப்பை உடைக்க வேண்டும். "இந்த வர்த்தகம் இப்போதெல்லாம் எங்களுக்கு போதுமான பணத்தை கொடுப்பதில்லை. ஆனாலும் நான் இதைச் செய்கிறேன். ஏனென்றால் என்னால் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான்,” என்று அவர் கூறுகிறார்.

18 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் தால் ஏரி அதன் படகுகள், படகு சவாரிகள், பழங்கால மேப்பிள் மரங்கள் நிறைந்த சார் சினார் தீவு மற்றும் ஏரியின் எல்லையில் இருக்கும் முகலாய காலத் தோட்டங்களுக்கு பெயர் பெற்ற இடமாகும். ஸ்ரீநகரின் முதன்மையான சுற்றுலாத்தலம் இது.

மிதக்கும் வீடுகள் மற்றும் மிதக்கும் தோட்டங்கள் ஏரியில் அமைந்துள்ளன. இது சுமார் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இயற்கை நீர்த்தடத்தின் ஒரு பகுதியாகும். மிதக்கும் தோட்டங்களில் இரண்டு வகை உண்டு. ராத் மற்றும் டெம்ப் . ராத் என்பது விவசாயிகள் தங்களின் கைகளால் நெய்த மிதக்கும் தோட்டமாகும். அவர்கள் இரண்டு வகையான இழைகளை ஒன்றாக நெய்கிறார்கள்: பெச் (டைபா அங்குஸ்டாட்டா) மற்றும் நர்காசா (பிராக்மிட்ஸ் ஆஸ்ட்ராலிஸ்). நெய்த பாய் போன்ற அமைப்பு ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பங்கு முதல் மூன்று மடங்கு வரை அளவிட முடியும். 3-4 ஆண்டுகள் ஏரியில் காய்ந்திருந்தாலும், சாகுபடிக்கு பயன்படுத்த முடியும். காய்ந்தவுடன், சேற்றால் பாய் பூசப்பட்டு, காய்கறிகள் வளர்க்க ஏற்றதாக மாறும். விவசாயிகள் ராதை யை ஏரியின் பல்வேறு பகுதிகளுக்கு நகர்த்துகின்றனர்.

டெம்ப் என்பது ஏரியின் கரைகளிலும் கரைகளிலும் காணப்படும் சதுப்பு நிலமாகும். இது மிதக்கவும் செய்யும். ஆனால் இடம் மாற்ற முடியாது.

PHOTO • Muzamil Bhat

முகமது மக்பூல் மட்டூவும் அவரது மனைவி தஸ்லீமாவும் தாலில் உள்ள மோதி மொஹல்லா குர்தில் உள்ள அவர்களின் மிதக்கும் தோட்டத்தில் பரட்டைக் கீரைகளை நடுகிறார்கள். ஏரிக்கரையில் உள்ள அதே பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து அவர்கள் இங்கு வரச் சுமார் அரை மணி நேரம் ஆகும். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்கிறார்கள்

70 வயதுகளில் இருக்கும் குலாம் முகமது மட்டூ, தாலின் மற்றொருப் பகுதியான குராக்கிலுள்ள தனது மிதக்கும் தோட்டத்தில் கடந்த 55 ஆண்டுகளாக காய்கறிகள் பயிரிட்டு வருகிறார். அவர் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோதி மொஹல்லா குர்தில் வசிக்கிறார். “எங்கள் தோட்டங்களுக்கு உள்ளூர் உரத்தைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் அதை ஏரி நீரில் இருந்து பிரித்தெடுத்து 20-30 நாட்களுக்கு வெயிலில் உலர்த்துகிறோம். இது இயற்கையானது மற்றும் காய்கறிகளின் சுவையை அதிகரிக்கிறது, ”என்று அவர் கூறுகிறார்.

சுமார் 1,250 ஏக்கர் தால் ஏரி மற்றும் சதுப்பு நிலம் பயிரிடப்பட்டு, குளிர்காலத்தில் சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கி, கேரட் மற்றும் கீரையையும், கோடையில் முலாம்பழம், தக்காளி, வெள்ளரி மற்றும் பூசணிக்காயையும் விளைவிப்பதாக அவர் மதிப்பிடுகிறார்.

"என்னைப் போன்ற வயதானவர்கள் மட்டுமே இதைச் செய்வதால் இந்த வர்த்தகம் அழிந்து வருகிறது" என்கிறார் குலாம் முகமது மட்டூ. "மிதக்கும் தோட்டங்களை வளமாக வைத்திருக்க நிறைய முயற்சி எடுக்க வேண்டும். நீர் மட்டத்தை சரிபார்த்து, சரியான அளவு உரத்தைச் சேர்க்க வேண்டும்.  பசியுள்ள பறவைகள் மற்றும் பிற பயிர் அழிக்கும் உயிர்களை விரட்ட வேண்டும்."

நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் மிதக்கும் தோட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட அறுவடைகளை டாலின் கராபோரா பகுதியில் அமைந்துள்ள மிதக்கும் காய்கறிச் சந்தையில் விற்கின்றனர். சூரியனின் முதல் கதிர்கள் ஏரியின் மேற்பரப்பைத் தொடும்போது சந்தை திறக்கிறது. புதிய காய்கறிகள் ஏற்றப்பட்ட நூற்றுக்கணக்கான படகுகள் அமைதியான நீரில் வரிசையாக நிற்கின்றன.

அப்துல் ஹமீத் தினமும் அதிகாலை 4 மணிக்கு ஏரியின் மறுபுறம் உள்ள தனது வீட்டிலிருந்து சிவப்பு முள்ளங்கி, பரட்டைக் கீரை மற்றும் கேரட் போன்ற காய்கறிகளைக் குவித்துக் கொண்டு படகில் புறப்படுவார். "நான் அவற்றை சந்தையில் விற்று ஒவ்வொரு நாளும் சுமார் 400-500 ரூபாய் சம்பாதிக்கிறேன்," என்று 45 வயது விவசாயியான அவர் கூறுகிறார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஸ்ரீநகரின் குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசியக் காய்கறிகளின் ஆதாரமாக இந்தச் சந்தை இருந்து வருகிறது என்கிறார் குலாம் முகமது மட்டூ. பெரும்பாலான விளைபொருட்கள் அருகிலுள்ள ஸ்ரீநகர் நகரத்திலிருந்து காலையில் வரும் வர்த்தகர்களுக்கு விற்கப்படுகின்றன. ஒரு சிறிய பகுதி அரிசி மற்றும் கோதுமை போன்ற உலர் உணவுகளுக்காகவும், ஏரியில் விளைவிக்கப்படாத உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளுக்காகவும் விவசாயிகளால் பண்டமாற்று செய்யப்படுகிறது.

PHOTO • Muzamil Bhat

முகமது அப்பாஸ் மட்டூவும் அவரது தந்தை குலாம் முகமது மட்டூவும் சமீபத்தில் பயிரிடப்பட்ட பரட்டைக் கீரையை ஈரமாக வைத்திருக்க தண்ணீர் தெளிக்கிறார்கள்

நகரின் பெரிய காய்கறி வியாபாரியான ஷபீர் அகமது, தினமும் குடோனில் காய்கறிகளை கொள்முதல் செய்கிறார். சந்தையில் தினமும் 3 முதல் 3.5 டன் வரை விளைபொருள்கள் விற்பனையாகிறது என்கிறார். “நான் காலை 5 மணிக்கு எனது டிரக்கில் வந்து விவசாயிகளிடமிருந்து சுமார் 8-10 குவிண்டால் (0.8 முதல் 1 டன் வரை) புதிய காய்கறிகளை எடுத்துச் செல்கிறேன். நான் அதை தெருவோர வியாபாரிகளுக்கு விற்று, அதில் சிலவற்றை மண்டிக்கும் வழங்குகிறேன்,” என்கிறார் 35 வயது அகமது. சந்தையில் இருக்கும் தேவையைப் பொறுத்து ஒரு நாளைக்கு 1,000-2,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

தால் ஏரியில் விளையும் காய்கறிகள் சுவையாக இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.ஸ்ரீநகரின் நவகடல் பகுதியில் வசிக்கும், 50 வயதுகளில் உள்ள ஃபிர்தவுசா கூறுகையில், “எனக்கு தாமரைத் தண்டு பிடிக்கும். மற்ற ஏரிகளில் விளையும் தண்டுகளை விட இது முற்றிலும் மாறுபட்ட சுவை கொண்டது.”

தால் காய்கறி வியாபாரத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் மொத்த வியாபாரிகள், தாங்கள் சிக்கலில் இருப்பதாக அஞ்சுகின்றனர்.

"அரசாங்கம் விவசாயிகளை பெமினா அருகே உள்ள ராக்-இ-ஆர்த் பகுதிக்கு இடம் மாற்றியதில் இருந்து ஏரியில் காய்கறிகள் பயிரிடுவது குறைந்துவிட்டது" என்கிறார் ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியைச் சேர்ந்த 35 வயது ஷபீர் அகமது என்ற விவசாயி. தால், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏரிகள் மற்றும் நீர்வழிகள் மேம்பாட்டு ஆணையம் (LAWDA), தால் பாதுகாப்பிற்கான வகுக்கப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாக, தால் குடியிருப்பாளர்களை 'மறுவாழ்வு' செய்யும் பணியை முன்னெடுத்தது. 2000ங்களின் பிற்பகுதியில் இருந்து, ஏரியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீர்வழித்தடப் பகுதியான ராக்-இ-ஆர்த் என்ற இடத்தில் அப்போதைய மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட வீட்டுக் குடியிருப்புக்கு  மாற்றப்பட்டுள்ளன.

பழைய விவசாயிகள் தால் விவசாயத்தைத் தொடர்ந்தனர், ஆனால் இளையவர்கள் குறைந்த வருவாயைக் காரணம் காட்டி விட்டுவிட்டார்கள் என்று ஷபீர் கூறுகிறார்.

“ஒரு காலத்தில் தெள்ளத் தெளிவாக இருந்த தால் ஏரி, இப்போது மாசுபட்டுவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அதிகக் காய்கறிகளை அறுவடை செய்தோம்,” என்று 52 வயதான குலாம் முகமது கூறுகிறார். ஏரியில் அரை ஏக்கருக்கும் குறைவான டெம்பை அவர் வைத்திருக்கிறார். மனைவி, மகன் மற்றும் மகள் உட்பட நான்கு பேர் கொண்ட தனது குடும்பத்தை நடத்த சிரமப்படுவதாக அவர் கூறுகிறார். "நான் ஒரு நாளைக்கு 400-500 ரூபாய் சம்பாதிக்கிறேன், அதிலிருந்து பள்ளிக் கட்டணம், உணவு, மருந்து மற்றும் பலச் செலவுகளை நான் கவனித்துக்கொள்கிறேன்."

"[தால் ஏரியின்] மாசுபாட்டிற்கு அரசாங்கம் எங்களைக் குற்றம் சாட்டுகிறது, ஆனால் முன்பிருந்த குடியிருப்பாளர்களில் பாதி பேர் மட்டுமே இப்போது உள்ளனர். எல்லோரும் இங்கு வசித்தபோது ஏரி எப்படி சுத்தமாக இருந்தது?” என அவர் கேட்கிறார்.

PHOTO • Muzamil Bhat

ஏரியில் இருந்து உரத்தைப் பிரித்தெடுக்கும் விவசாயிகள், அதை முதலில் உலர்த்தி பின்னர் தங்கள் பயிர்களுக்கு உரமிட பயன்படுத்துவார்கள்

PHOTO • Muzamil Bhat

தால் ஏரியின் நைஜீன் பகுதியில் இருந்து உரத்தை எடுத்துச் செல்லும் விவசாயி

PHOTO • Muzamil Bhat

மோதி மொஹல்லா குர்தில் உள்ள தங்கள் மிதக்கும் தோட்டங்களில் பரட்டைக் கீரை பயிரிடும் விவசாயிகள்

PHOTO • Muzamil Bhat

குலாம் முகமது ஏரியில் உள்ள தனது டெம்ப் தோட்டத்தில் வேலை செய்கிறார். "25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அதிகக் காய்கறிகளை அறுவடை செய்தோம்," என்று அவர் கூறுகிறார்

PHOTO • Muzamil Bhat

மோதி மொஹல்லா குர்தில் ஒரு பெண் விவசாயி தனது தோட்டத்தில் சிவப்பு முள்ளங்கி விதைப்பு செய்கிறார்

PHOTO • Muzamil Bhat

தால் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகளில் நசீர் அகமதும் (கறுப்பு நிறத்தில்) ஒருவர். ஏரியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீநகரின் லால் பஜார் பகுதியில் உள்ள போடா கடலில் வசிக்கிறார் அவர்

PHOTO • Muzamil Bhat

விவசாயி அப்துல் மஜீத் மோதி மொஹல்லா குர்தில் தனது மிதக்கும் தோட்டத்தில் விளைந்த கீரைகளை அறுவடை செய்கிறார்

PHOTO • Muzamil Bhat

விவசாயிகள் தங்கள் அறுவடைகளை படகு மூலம் கொண்டு வந்து, தால் மீதுள்ள மிதக்கும் காய்கறி சந்தையில் விற்கிறார்கள். அங்கிருந்து ஸ்ரீநகர் நகரச் சந்தைகளுக்கு அவை வந்து சேரும்

PHOTO • Muzamil Bhat

சந்தையில் காய்கறி வியாபாரிகள். காய்கறிகள் விற்பனை மற்றும் கொள்முதல் அதிகாலையில் நடைபெறும், குளிர்காலத்தில் காலை 5 மணி முதல் 7 மணி வரை மற்றும் கோடையில் காலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கும்

PHOTO • Muzamil Bhat

விவசாயிகள் தங்கள் காய்கறிகளை நகரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் விற்று, பின்னர் மண்டி மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்

PHOTO • Muzamil Bhat

முகமது மக்பூல் மட்டூ ஒரு குளிர்கால காலை வேளையில் தால் ஏரியில் உள்ள சந்தையில் காய்கறிகளை விற்கிறார்

தமிழில் : ராஜசங்கீதன்

Muzamil Bhat

Muzamil Bhat is a Srinagar-based freelance photojournalist and filmmaker, and was a PARI Fellow in 2022.

Other stories by Muzamil Bhat
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan