டெல்டா சர்க்கரை ஆலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த யாரகுண்ட்லா நாகராஜு பணியிழந்து 3 மாதங்கள் ஆகிறது. 18 வயது முதல் அங்கு எலெக்ட்ரீசியனாக அவர் வேலை செய்துள்ளார். அந்த ஆலை துவங்கப்பட்ட 1983ம் ஆண்டு முதல் அங்கு வேலை செய்தவர் தற்போது பணியிழந்துள்ளார்.

2017ம் ஆண்டு நவம்பர் கடைசி வாரத்தில் அவரும் அவருடன் பணிபுரிந்த மற்ற பணியாளர்கள் 299 பேரும் சட்டத்திற்கு புறம்பாக பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அதில் பெரும்பாலானோர் நிலமற்ற பட்டியல் இனத்தவர். டிசம்பரில் இருந்து அவர்களை வேலைக்கு வரவேண்டாம் என சர்க்கரை ஆலை நிர்வாகம் கூறிவிட்டது. அதற்கான அவகாசம் கூட வழங்கப்படவில்லை. “எங்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளமும் வழங்கப்படவில்லை. தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி நிறுவனத்தை  மூடுகிறார்கள்“ என்று நாகராஜு கூறுகிறார். அவரை நான் நவம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆலையில் இவர் தொழிலாளர் யூனியனின் தலைவர். அந்த யூனியன், அகில இந்திய வர்ததக யூனியன் காங்கிரசின் உறுப்பாக உள்ளது.

நவம்பர் 26ம் தேதி வேலையை இழந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆலை முன் தற்காலிக பந்தல் அமைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழங்கப்படாத இரு மாத ஊதியத்தையும், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 24 மாத சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது. இதில் பெரும்பாலான தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக உள்ளனர். வாரக்கணக்கில் ஆலையின் மூடிய கதவுகளுக்கு வெளியே போராடுவதால் குடும்பம் ஓட்டக் கஷ்டப்படுகிறார்கள். நிரந்தரத் தொழிலாளியான நாகராஜு, மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளம் பெற்றார். அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டபோது, சேமிப்பை வைத்து குடும்பம் நடத்தினார். அவரது மனைவி விவசாயக் கூலித்தொழிலாளி. மகன் ஆட்டோ ஓட்டுகிறார்.

Delta Sugars factory. Work halted inside the sugar mill
PHOTO • Rahul Maganti
Man holding flag outside the gate of the Delta Sugars factory. he is protesting the closure of the company.
PHOTO • Rahul Maganti

யாரகுண்ட்ல நாகராஜு (வலது) அவரது வேலையை, முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணிபுரிந்ததற்கு பின்னர் இழந்துள்ளார். டெல்டா சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் ஹனுமன் ஜங்ஷனில் உள்ள சர்க்கரை ஆலையை மூடியதால் இவருக்கு இந்த நிலை

டிசம்பர் இறுதியில், ஒரு சமரச தீர்வு எட்டப்பட்டது. கிருஷ்ணா மாவட்டத் தொழிலாளர் துணை ஆணையர், பி.வி.எஸ் சுப்ரமணியம் என்னிடம், அந்த சமரசத் தீர்வின் அடிப்படையில், தொழிலாளர் நீதிமன்றத்தில் டெல்டா சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை அவர்கள் திரும்பப்பெற்றால், அதற்கு பிரதிபலனாக 4 மாத சம்பளத்தையும் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு மாத சம்பளத்தையும் ஆலை வழங்கும் என்றார். இதன் அர்த்தம், அவர்கள் கோரிய நிவாரணத்தில் 20 மாத சம்பளம் கிடைக்காது என்பதே. “எங்களிடம் வழக்கு நடத்தவும் பணம் கிடையாது. வழக்கும் பல ஆண்டுகள் நடக்கும். எனவே நாங்கள் சமரசம் செய்துகொள்ள முடிவெடுத்தோம்“ என்று நாகராஜு கூறுகிறார்.

2014ம் ஆண்டு முதல் நிறுவனம் அவர்களின் பிஎப் தொகையையும் தொழிலாளர் இன்சூரன்சையும் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்களின் மொத்த இஎஸ்ஐ, இபிஎப் தொகையும் ஆலை மூடப்பட்ட பின்னர் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கும், ஆலையின் சொந்தக்காரர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் அது வழங்கப்படவில்லை என வருத்தத்தில் உள்ளார்கள். அந்த 300 பேரில் தோராயமாக 50 பேர் நிரந்தர தொழிலாளர்கள் கிடையாது. அவர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் இபிஎப் பெறும் தகுதியும் கிடையாது. “ஒவ்வொரு முறை நான் கேட்கும்போதும், அடுத்த ஆண்டு நான் நிரந்தரப் பணியாளர் ஆக்கப்படுவேன் என்று கூறுவார்கள்“ என்று 32 வயது மங்களகிரி ரங்கதாசு கூறுகிறார். இவர் அந்த ஆலையில் டிராலி ஓட்டும் டிரைவராக இருந்தார். “14 ஆண்டுகள் கடந்துவிட்டது. நிரந்தரமும் ஆக்கப்படவில்லை. தற்போது வெளியேற்றவும் செய்திருக்கிறார்கள்“ என்று அவர் கவலையுடன் கூறுகிறார்.

டெல்டா சர்க்கரை ஆலை திடீரென மூடப்பட்டவுடன், போராட்டக்குழு துவங்கப்பட்டது. அதன் உரிமையாளர்கள் நஷ்டத்தில் உள்ளதால் ஆலை மூடப்படுவதாக கூறுகிறார்கள். “ஆலைக்கு கடந்தாண்டு மட்டும் 1.6 லட்சம் டன் கரும்பு ஆலையில் பிழியப்பட்டு 8 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது,” என்று கேசவராவ் கூறுகிறார். இவர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மூத்த விவசாய தலைவர். கரும்பை பிழிவதில் சர்க்கரை மட்டுமின்றி மது தயாரிக்கப் பயன்படும் பொருட்களான வெல்லப்பாகு, கறும்புச் சக்கையும் கூடக் கிடைக்கும்.

(இந்த விவகாரம் குறித்து ஆலை தரப்பு விளக்கத்தை கேட்பதற்காக நாம் முயன்றபோது, ஆலை வளாகத்துக்குள் பாதுகாப்பு அலுவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. ஆலை மேலாளர் சுப்பராஜ், போனில் எந்த கேள்விக்கும் விடையளிக்கவும் விரும்பவில்லை. ஆலை நிர்வாகத்தின் பதிலை கேட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன).

Workers protesting in front of the main entrance of the Delta Sugar Mills facing the National Highway
PHOTO • Rahul Maganti
A public meeting by political parties, trade unions and farmers organisations demanding the sugar mills to be reopened
PHOTO • Rahul Maganti

தொழிற்சங்கங்களும், விவசாயச் சங்கங்களும் டெல்டா சர்க்கரை ஆலை மூடப்பட்டதை எதிர்க்கின்றன. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக மூடப்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஹனுமன் சந்திப்பில் டெல்டா சர்க்கரை ஆலை இருக்கிறது. விஜயவாடாவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு 100 டன் கரும்பை தினமும் பிழியும் 10 சிறு சர்க்கரை ஆலைகள்  1970ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தன. அவற்றை 1983ம் ஆண்டு ஹனுமன் சர்க்கரை கூட்டுறவு ஆலை இல்லாமல் ஆக்கியது. அங்கு நாளொன்றுக்கு 1,250 டன் கரும்பு பிழியப்பட்டது. டெல்டா சர்க்கரை ஆலை, நாளொன்றுக்கு 2,500 டன் கரும்பு பிழியும் திறன் கொண்டது. அதன் முதலீட்டில், அந்தப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளும் மாநில அரசும் பங்குதாரர்கள். ஆலை தனியார்மயப்படுத்தப்பட்ட போது அப்பகுதி விவசாயிகளின் 3 சதவிகித பங்கு அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

1990ம் ஆண்டில் இருந்து சர்க்கரைத் துறையில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், தாராளமயகாலத்தில் சர்க்கரை கூட்டுறவு அமைப்புகளை தனியார்மயமாக்குவது சுலபமானது. எனவே 116 ஏக்கர் பரப்பு கொண்ட ஹனுமன் சர்க்கரை ஆலை 2001ல் 11.4 கோடிக்கு விற்கப்பட்டது. 2000-2002-ன் பதிவு ஆவணங்களின்படி அப்போதே இந்த இடத்தின் சந்தை விலை ரூ.400 கோடி. அதை வாங்கியவர் கோக்காராஜு கங்காராஜு. பாஜகவைச் சேர்ந்தவர். அரசியல்வாதியான வணிகர். 2014 தேர்தலில், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மேற்கு கோதாவரியில் நரசிம்மபுரம் தொகுதியில் இருந்து பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

The Delta Sugars factory. Work halted inside the sugar mill
PHOTO • Rahul Maganti
The Delta Sugars factory. Work halted inside the sugar mill
PHOTO • Rahul Maganti

ஆலைத் தொழிலாளர்கள் ஆலை நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை மறுக்கிறார்கள். நிலத்தை அதிக லாபத்திற்கு விற்பதற்காக இதை மூடுகிறார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்

ஆலையை மூடியது அப்பகுதி விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தான் இந்த ஆலைக்கு கரும்பு வழங்கி வந்தார்கள். (ஆனால் அவர்களுக்கும் டன்னுக்கு குறைந்த விலை கொடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளுக்கு கிடைப்பதை விட குறைவான தொகைதான் கிடைத்தது என்று கேசவராஜ் கூறுகிறார்) விவசாயிகள் தற்போது புதிய சர்க்கரை ஆலைகளை தேட வேண்டும். தொலைவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு தங்கள் கரும்பை எடுத்துச்செல்வதற்கான வழியை அவர்கள் தேட வேண்டும். இந்த பிரச்சினை ஆந்திர சட்டமன்றத்தில் எழுப்பப்ப்பட்டபோது, ஆந்திர அரசு தற்காலிக தீர்வை அறுவடைக் காலங்களின டிசம்பர் – ஜனவரியில் அமல்படுத்தியது. டெல்டா சர்க்கரை ஆலையில் விவசாயிகள் தங்கள் கரும்பை இறக்கிக்கொள்ளலாம் என்றும் அவர்கள் விற்கவுள்ள கரும்பை இரண்டு தனியார் ஆலைகளிலும் இறக்கிக்கொள்ளலாம் என்றும் கூறியது. அவை கிருஷ்ணா மாவட்டத்தின் உய்யூரிலுள்ள கேசிபி சுகர்ஸ் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பிமாடோல் மண்டலத்திலுள்ள ஆந்திரா சுகர்ஸ் ஆகும். இந்த இரு நிறுவனங்களும் அவர்களின் ஆலைகளுக்கு வரும் கரும்புகளின் போக்குவரத்து செலவை ஏற்பார்கள்.

அடுத்த அறுவடை சீசனில் என்ன நடக்கும் என்பது சரியாக தெரியவில்லை. விவசாயிகள் ஒவ்வொரு 40 டன் கரும்பை எடுத்துச்செல்வதற்கும் அவர்கள் கூடுதலாக ரூ.20 ஆயிரத்தை வயலில் இருந்து கரும்பு பிழியும் ஆலைகளுக்கு கொண்டு செல்ல செலவு செய்ய வேண்டியிருக்குமென விவசாய சங்க தலைவர்கள் கணிக்கிறார்கள். இது ஒரு ஏக்கரின் சராசரியான விளைச்சலாகும்.

1958ம் ஆண்டு ஆந்திரத் தொழிற்துறை சச்சரவு விதிகளின்படி என்ன நடைமுறை உள்ளதோ, அதை பின்பற்றி ஆலை மூடப்படவில்லை. “ஆலை மூடப்படவுள்ள தகவலை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கரும்பு விவசாயிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கரும்புக்கு மாற்றாக வேறு பயிர்கள் பயிரிட்டு இருக்க முடியும். இதைச் செய்யாமல் எப்படி நிர்வாகம் ஆலையை திடீரென்று மூடமுடியும்?“ என்று கேசவராவ் கேட்கிறார். அவர்தான் இந்த இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இயக்கம் துவங்கியது 1972ம் ஆண்டில். கூட்டுறவு சர்க்கரை ஆலை இப்பகுதியில் 1983ம் ஆண்டு மாநில அரசு அமைக்க வழிவகுத்தவர்.

“ஆலை மூடப்பட்டதால், தற்போது நாங்கள் கூடுதல் போக்குவரத்து செலவையும் ஏற்கவேண்டும். நமக்கென்று ஒரு ஆலை வேண்டும். நாங்கள் ஆலை அமைக்க இயக்கம் நடத்தினோம். அது ஹனுமன் சந்திப்பு பகுதியின் பொருளாதாரத்தை உயர்த்தியது“ என்று 59 வயது பாமரத்தி வெங்கட ரெட்டியா கூறுகிறார். இவர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். இவரைப்போல் சுற்றியுள்ள பாப்புலாபாடு, உங்குட்டுரு, கானாவாரம், நுஸ்விட், முஸ்நுரு மற்றும் விஷணாபேட் ஆகிய 6 மண்டலங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சர்க்கரை ஆலையைத்தான் சார்ந்துள்ளார்கள்.

Portrait of a sugarcane farmer
PHOTO • Rahul Maganti
The defunct premises of the Delta Agro Chemical company
PHOTO • Rahul Maganti
The owner of a paan shop
PHOTO • Rahul Maganti

பாமர்தி வெங்கட ரெட்டியா (இடது) மற்றும் 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கரும்பை விற்பதற்கு டெல்டா சர்க்கரை ஆலையைத்தான் சார்ந்து உள்ளார்கள். அருகில் உள்ள அக்ரோ கெமிக்ல்ஸ் (மத்தியில் உள்ள படம்) பத்தாண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. சோடகிரி ரெட்டி (வலது), தனது வேலையை இழந்தார். செயல்படாத ஆலைக்கு அருகில் வெற்றிலை மற்றும் தேநீர் கடை நடத்துகிறார்

“இங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள பசுக்களும், எருமைகளும் கரும்பு பிழிந்தபின் வரும் சக்கையை உண்டுதான் வாழ்ந்து வந்தன. அருகில் கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு இது பெரிய பிரச்சினையாகும்“ என்று 58 வயது அல்லா கோபால கிருஷ்ண ராவ் கூறுகிறார். அவர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். பாலுக்காக கால்நடைகள் வளர்க்கிறார். தனது 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடுகிறார். இங்கு  கால்நடைகள் வளர்த்து பால் விற்கிறார்கள் பலரும் ஆலையில் பணிபுரியும் பலரும் யாதவர்களைப் போல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது பட்டியலின உட்பிரிவைச் சேர்ந்த மாலா சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள்.

மூடப்பட்ட டெல்டா சர்க்கரை ஆலைக்கு எதிரே செயல்படாத டெல்டா அக்ரோ கெமிக்கல் ஆலை உள்ளது. (அதே நிறுவனத்தைச் சேர்ந்தது). 2007ம் ஆண்டு அதுவும் மூடப்பட்டது. அதன் உரிமையாளர் வங்கிக்கடனை அடைக்காததால், வங்கி அந்த சொத்தை கைப்பற்றியது. “அப்போது கிட்டத்தட்ட 200 தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். அதில் பெரும்பாலானோர் தற்போது ஆட்டோ டிரைவர்களாகவும், விவசாய கூலித்தொழிலாளர்களாகவும் (ஹனுமன் சந்திப்பு பகுதியில்) உள்ளார்கள்“ என்று சீனிவாசராவ் கூறினார். அவர் தற்போது செயல்படாத ஆலையில் காவலாளியாக பணிபுரிகிறார்.

36 வயது சோடாகிரி ரெட்டி கோபாலா ராவ், செயல்படாத அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில், எலெக்ட்ரிக்கல் ஆபரேட்டராக பணிபுரிந்தார். தற்போது அதற்கு அருகில் சிறிய வெற்றிலை பாக்கு மற்றும் தேநீர் கடை வைத்துள்ளார். “நான் தற்போது மாதத்திற்கு 5,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். நான் 2007க்கு முன்னர் ஆலையில் வேலை செய்தபோது ரூ.10 ஆயிரம் சம்பாதித்தேன்“ என்று அவர் கூறுகிறார்.

டெல்டா சர்க்கரை ஆலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்து 54 வயதில் தற்போது வேலையை இழந்த நாகராஜு, ஆட்டோ ஓட்டுகிறார். அவரும், டெல்டா சர்க்கரை ஆலையின் மற்ற முன்னாள் தொழிலாளிகளும், ஆலையின் உரிமையாளர் இறுதியில்  அந்த இடத்தை வேறு தேவைக்காக பயன்படுத்துவார் என்று நம்புகிறார்கள். அதில் வீடுகள் கட்டி விற்பனை செய்வது, அலுவலக பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் கட்டி விற்பது உள்ளிட்டவற்றை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இந்த இடம், புதிய தலைநகர் அமராவதியில் இருந்து விஜயவாடா செல்லும் இடத்தில் உள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தமிழில்: பிரியதர்சினி. R.

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.