அக்டோபர் 2022-ல் பலவீனமான ஒரு முதியப் பெண் பெல்லாரியின் வட்டு கிராமத்திலுள்ள சமூக மையத்தின் மேடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது முதுகு ஒரு தூணில் சாய்ந்திருக்கிறது. கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறார். சந்தூர் தாலுகாவின் மலைப்பாங்கான 28 கிலோமீட்டர் தூரப் பயணம் அவருக்கு சோர்வை அளித்திருக்கிறது. அவர் மீண்டும் ஒரு 42 கிலோமீட்டர் அடுத்த நாள் பயணிக்க வேண்டும்.

சந்தூரின் சுசீலாநகர் கிராமத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளரான ஹனுமாக்கா ரங்கண்ணா, பெல்லாரி மாவட்ட சுரங்கத் தொழிலாளர் சங்கம் ஒருங்கிணைத்திருக்கும் இரண்டு நாள் பாதயாத்திரையில் இருக்கிறார். வடக்கு கர்நாடகாவின் பெல்லாரியில் இருக்கும் துணை கமிஷனர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க போராட்டக்காரர்கள் 70 கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர்.  போதுமான அளவு நிவாரணமும் மாற்று வாழ்வாதாரமும் கேட்டு பிற சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து தெருவுக்கு அவர் வந்திருப்பது கடந்த 10 வருடங்களில் இது 16வது முறை ஆகும்.

1990களின் பிற்பகுதியில் பெல்லாரியில் வேலையிலிருந்து தூக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்களில் அவரும் ஒருவர். “எனக்கு இப்போது 65 வயது என வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு வேலை போய் 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது,” என்கிறார் அவர். பலர் நிவாரணப் பணத்துக்கு காத்திருந்தே இறந்து போய்விட்டனர்.. என் கணவர் கூட இறந்துவிட்டார்.”

“வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்தான் சபிக்கப்பட்டவர்கள். இந்த சபிக்கப்பட்டவர்களுக்கேனும் நிவாரணம் கிடைக்குமா அல்லது இறந்துவிடுவோமா என தெரியவில்லை,” என்கிறார் அவர். “போராடுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். கூட்டம் நடக்கும்போதெல்லாம் நான் கலந்து கொள்வேன். இந்த ஒருமுறை கடைசியாக முயன்று பார்ப்பதென நினைத்திருக்கிறோம்.”

Left: Women mine workers join the 70 kilometre-protest march organised in October 2022 from Sandur to Bellary, demanding compensation and rehabilitation.
PHOTO • S. Senthalir
Right: Nearly 25,000 mine workers were retrenched in 2011 after the Supreme Court ordered a blanket ban on iron ore mining in Bellary
PHOTO • S. Senthalir

இடது: நிவாரணமும் புனர்வாழ்வும் கேட்டு சந்தூரிலிருந்து பெல்லாரிக்கு அக்டோபர் 2022ல் முன்னெடுக்கப்பட்ட 70 கிலோமீட்டர் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பெண் சுரங்கத் தொழிலாளர்கள். வலது: கிட்டத்தட்ட 25,000 சுரங்கத் தொழிலாளர்கள் 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பெல்லாரியில் இரும்புத் தாது அகழ தடை விதித்தபிறகு வேலை விட்டு அனுப்பப்பட்டனர்

*****

பிரிட்டிஷ் அரசாங்கம் சிறு அளவில் அகழ்வு செய்த 1800களின் காலத்திலிருந்தே கர்நாடகாவின் பெல்லாரி, ஹோஸ்பெட் மற்றும் சந்தூர் பகுதிகளில் இரும்புத் தாது அகழ்வு நடந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு இந்திய அரசாங்கமும் சில தனியார் சுரங்க உரிமையாளர்களும் இணைந்து 1953ம் ஆண்டில் இரும்பு தாது தயாரிப்பு தொடங்கப்பட்டது. அதே வருடத்தில் பெல்லாரி மாவட்ட சுரங்க உரிமையாளர்கள் சங்கம் 42 உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. நாற்பது வருடங்கள் கழித்து, தேசிய கனிமக் கொள்கை 1993 அறிமுகப்படுத்தப்பட்டது. சுரங்கத்துறையில் பல மாற்றங்கள் நேர்ந்தன. வெளிநாட்டு நேரடி மூலதனம் கொண்டு வரப்பட்டது. நிறைய தனியார் நிறுவனங்கள் இரும்புத் தாதை அகழ்வெடுக்க ஊக்குவிக்கப்பட்டு உற்பத்தி தாராளமயப்படுத்தப்பட்டது. அடுத்த சில வருடங்களில் தனியார் சுரங்க நிறுவனங்களின் எண்ணிக்கை பெல்லாரியில் அதிகரித்தது. பெரியளவில் எந்திரமயமாக்கம் நடந்தது. பெரும்பாலான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்த பிறகு, தோண்டுதல், உடைத்தல், வெட்டுதல், உலோகத் தாதை சலித்தல் போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களின் தேவை குறைந்தது.

இந்த மாற்றங்கள் நடந்ததற்கு முன் எத்தனை பெண்கள் தொழிலாளர்களாக பணியில் இருந்தனர் என்பதற்கான ஆவணப்பூர்வ எண்ணிக்கை இல்லை என்றாலும் ஒவ்வொரு இரண்டு ஆண் தொழிலாளருக்கு கிட்டத்தட்ட நான்கிலிருந்து ஆறு பெண்கள் வேலை பார்த்ததாக கிராமவாசிகள் சொல்கின்றனர். “இயந்திரங்கள் வந்தன. அதற்குப் பிறகு எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. கல் உடைப்பது, அவற்றை ஏற்றுவது போன்ற வேலைகளை இயந்திரங்களே செய்யத் தொடங்கிவிட்டன,” என ஹனுமாக்கா நினைவுகூருகிறார்.

“சுரங்கங்களுக்கு வர வேண்டாமென சுரங்க உரிமையாளர்கள் எங்களிடம் கூறினர். லஷ்மி நாராயண சுரங்க நிறுவனம் (LMC) எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை,” என்கிறார் அவர். “நாங்கள் கடினமாக உழைத்தோம். ஆனால் எங்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை.” அந்த நிகழ்வுடன் அவரது வாழ்வின் மற்றுமொரு முக்கியமான நிகழ்வும் இணைந்தது. அவருக்கு நான்காம் குழந்தை பிறந்தது.

தனியார் LMC-க்கு வேலை இழந்த சில வருடங்கள் கழித்து 2003-ல் மாநில அரசாங்கம் 11,620 சதுர கிலோமீட்டர் நிலத்தை தனியாருக்கு அளித்தது. உலோகத் தாதுக்கான தேவை சீனாவில் அதிகரித்ததும் இதுவும் சேர்ந்து, இத்துறையில் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்தியது. 2010ம் ஆண்டில் பெல்லாரியில் இரும்புத் தாது ஏற்றுமதி 585 சதவிகிதம் அதிகரித்தது. 2006ம் ஆண்டில் இருந்த 2.15 கோடி மெட்ரிக் டன்னிலிருந்து 12.57 கோடி மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. கர்நாடகாவின் லோகாயுக்தாவின்படி (ஊழலுக்கு எதிரான மாநில அரசின் அமைப்பு) 2011ம் ஆண்டில் கிட்டத்தட்ட 160 சங்கங்கள் மாவட்டத்தில் இருந்தன. 25,000 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அவர்களின் பெரும்பாலானோர் ஆண்கள். அதிகாரப்பூர்வமற்ற கணக்குகளின்படி 1.5லிருந்து 2 லட்ச ஊழியர்கள் துணை வேலைகளான பஞ்சிரும்பு தயாரிப்பு, ஸ்டீல் ஆலைகள், போக்குவரத்து மற்றும் கனரக வாகனப் பட்டறைகள் போன்றவற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

A view of an iron ore mining in Ramgad in Sandur
PHOTO • S. Senthalir
A view of an iron ore mining in Ramgad in Sandur
PHOTO • S. Senthalir

சந்தூரின் ராம்காடில் நடக்கும் இரும்புத் தாது அகழ்வு

உற்பத்தி மற்றும் வேலைகள் ஆகியவை அதிகரித்தாலும் ஹனுமாக்கா உள்ளிட்ட பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் மீண்டும் சுரங்கப் பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. வேலை விட்டு நிறுத்தப்பட்டதற்கான நிவாரணமும் ஏதும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

*****

பெல்லாரியின் சுரங்கத்துறை அடைந்த வளர்ச்சி என்பது சுரங்க நிறுவனங்கள் காட்டிய அலட்சியத்தால் விளைந்தது. எல்லா விதிகளையும் அவை பொருட்படுத்தாமல் இயங்கி, 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மாநிலக் கருவூலத்துக்கு ரூ.16,085 கோடி ரூபாய் நஷ்ட ஈடு ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. சுரங்கத்துறை ஊழலை பற்றி விசாரிக்கவென லோகாயுக்தாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சட்டவிரோத அகழ்வில் பல நிறுவனங்கள் ஈடுபட்டதாக விசாரணை அறிக்கை குறிப்பிட்டது. அதில் ஹனுமாக்கா பணிபுரிந்த லஷ்மி நாராயணா சுரங்க நிறுவனமும் அடக்கம். லோகாயுக்தா அறிக்கையின் அடிப்படையில் 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பெல்லாரியில் இரும்பு தாது அகழ்வுக்கு முழுத் தடை விதித்தது.

எனினும் ஒரு வருடம் கழித்து விதிமீறாத சில சுரங்க நிறுவனங்கள் திறக்கப்பட நீதிமன்றம் அனுமதித்தது. உச்சநீதிமன்றம் நியமித்த செண்ட்ரல் எம்பவர்ட் கமிட்டியின் (CEC) பரிந்துரைப்படி நீதிமன்றம் சுரங்க நிறுவனங்களை பல்வேறு விதமாக வகைப்படுத்தியது. A என்பது குறைந்த அல்லது விதிமீறலே இல்லாதவை; B சில விதிமீறல்களுக்கான வகை. C என்பது பல விதிமீறல்களுக்கான வகை. குறைந்த விதிமீறல்கள் செய்திருந்த சுரங்க நிறுவனங்கள் பகுதிப் பகுதியாக திறக்கப்பட 2012ம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டன. சீரமைத்தலுக்கும் புனரமைத்தல் திட்டங்களுக்கென CEC அறிக்கை சில வழிமுறைகளை கொடுத்திருக்கிறது. அவற்றின்படி திட்டங்கள் தயாரிக்கப்பட்டால்தான் சுரங்க உரிமம் மீண்டும் பெற முடியும்.

சட்டவிரோத சுரங்க அகழ்வு ஊழல், கர்நாடகாவிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, பெல்லாரியின் இயற்கை வளங்கள் தங்கு தடையின்றி சுரண்டப்படும் உண்மையை நோக்கி கவனத்தை ஈர்த்தது. கிட்டத்தட்ட 25,000 சுரங்கப் பணியாளர்கள் எந்தவித நிவாரணமும் வழங்கப்படாமல் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். ஆனால் அவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறவில்லை.

அவர்களே அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து நிவாரணமும் மறுவேலைவாய்ப்பும் கேட்டுப் பெற பெல்லாரி ஜில்லா கனி கர்மிகாரா சங்கா என்கிற சங்கத்தை உருவாக்கினர். ஊர்வலங்களையும் தர்ணாக்களையும் சங்கம் நடத்தத் தொடங்கியது. 2014ம் ஆண்டில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க 23 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் கூட நடத்தப்பட்டது.

Left: A large majority of mine workers, who were retrenched, were not re-employed even after the Supreme Court allowed reopening of mines in phases since 2012.
PHOTO • S. Senthalir
Right: Bellary Zilla Gani Karmikara Sangha has been organising several rallies and dharnas to draw the attention of the government towards the plight of workers
PHOTO • S. Senthalir

இடது: பணியிலிருந்து நீக்கப்பட்ட பெரும் அளவிலான சுரங்கப் பணியாளர்கள், 2012ம் ஆண்டுக்கு பிறகு பகுதிப் பகுதியாக திறந்து கொள்ள சுரங்க நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை. வலது: பெல்லாரி ஜில்லா கனி கர்மிகாரா சங்கா ஊர்வலங்களையும் தர்ணாக்களையும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க நடத்துகிறது

Hanumakka Ranganna, who believes she is 65, is among the hundreds of women mine manual workers who lost their jobs in the late 1990s
PHOTO • S. Senthalir

1990களில் வேலையிழந்த நூற்றுக்கணக்கான பெண் சுரங்கப் பணியாளர்களில் 65 வயது இருக்கக் கூடிய ஹனுமாக்கா ரங்கண்ணாவும் ஒருவர்

மீட்டலுக்கான முனைப்பான சுரங்கத் தாக்க மண்டலத்துக்கான விரிவான சுற்றுச்சூழல் திட்டத்தில் பணியாளர்களின் கோரிக்கைகளும் இணைக்கப்பட சங்கம் முயன்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி கர்நாடகா சுரங்க சுற்றுச்சூழல் மீட்பு வாரியம் 2014ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது. பெல்லாரியின் சுரங்கப் பகுதிகளில் சுகாதாரம், கல்வி, தொலைத் தொடர்பு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவை திட்டத்தின்படி அமலாக்கப்படுகிறதா என்பதை வாரியம் மேற்பார்வையிடும். அப்பகுதியில் சுற்றுச்சூழல் சீரமைப்பதையும் அது உறுதிப்படுத்தும். நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் இத்திட்டத்தில் இடம்பெற வேண்டுமென ஊழியர்கள் விரும்புகின்றனர். சங்கத் தலைவரான கோபி, ஒய்., உச்சநீதிமன்றத்திலும் பணியாளர் தீர்ப்பாயங்களிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஊழியர்கள் இந்த வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், நியாயமற்ற முறையில் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் ஊழியர்களுக்கு குரல் கொடுக்கவென ஒரு சிறந்த தளத்தை ஹனுமாக்கா கண்டுபிடித்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நிவாரணமும் புனர்வாழ்வும் கோரி (2011ம் ஆண்டில் வேலைகள் பறிக்கப்பட்ட 25,000 பேரில்) 4,000 ஊழியர்கள் தாக்கல் செய்திருக்கும் ரிட் மனுவில் அவரும் இணைந்திருக்கிறார். “1992-1995ம் ஆண்டு வரை, நாங்கள் கைநாட்டுதான். அச்சமயத்தில் எங்களுக்கென முன் நின்று பேச எவருமில்லை,” என்கிறார் அவர் தொழிலாளர் சங்கத்தின் மூலமாக அவர் தற்போது பெற்றிருக்கும் வலிமை மற்றும் ஆதரவை விவரிக்கும்போது. “ஒரு (சங்கத்தின்) கூட்டத்தை கூட நான் தவற விட்டதில்லை. நாங்கள் ஹோஸ்பெட், பெல்லாரி என எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறோம். எங்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசாங்கம் கொடுக்கட்டும்,” என்கிறார் ஹனுமாக்கா.

*****

சுரங்க வேலை செய்யத் தொடங்கிய காலம் ஹனுமாக்காவுக்கு நினைவிலில்லை. மாநிலத்தில் பட்டியல் சாதியாக பட்டியலிடப்பட்டிருக்கும் வால்மீகி சமூகத்தில் பிறந்தவர் அவர். பால்யகாலத்தில் அவரிருந்தது சுசீலாநகரில். இரும்புத் தாது அதிகமாக இருந்த மலைகளால் சூழப்பட்ட பகுதி அது. விளிம்புநிலை சமூகத்தை சேர்ந்த நிலமற்றவர் செய்யும் வேலையைதான் அவரும் செய்தார். சுரங்க வேலை செய்தார்.

“குழந்தையிலிருந்தே நான் சுரங்க வேலை செய்கிறேன்,” என்கிறார் அவர். “நான் பல சுரங்க நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன்.” இளம்வயதிலேயே தொடங்கியதால், மலையேறுவதில் அவருக்கு சிரமமில்லை. (தாது இருக்கும்) பாறைகளில் துளை போடும் ஜம்பர்களை பயன்படுத்தவும் நிபுணத்துவம் பெற்றார். அவற்றை வெடிக்க வைக்க ரசாயனம் நிரப்பும் வேலையும் செய்தார்.  அகழ்வுக்கான எல்லா கனரக உபகரணங்களையும் பயன்படுத்த அவர் நிபுணத்துவம் கொண்டிருந்தார். “அப்போதெல்லாம் இயந்திரங்கள் கிடையாது,” என அவர் நினைவுகூருகிறார். “பெண்கள் ஜோடி ஜோடியாக வேலை பார்ப்போம். (வெடிக்க வைத்த பிறகு) ஒருவர் தாதுக்களை தோண்டுவார். இன்னொருவர் அவற்றை சிறு துண்டுகளாக உடைப்பார். பாறைகளை மூன்று வித வடிவங்களில் நாங்கள் உடைக்க வேண்டும்.” தாது துண்டுகளிலிருந்து தூசை சலித்த பிறகு, அவற்றை பெண்கள் தலையில் வைத்து தூக்கி சென்று ட்ரக்குகளில் ஏற்றுவார்கள். “எல்லாரும் போராடினோம். நாங்கள் கஷ்டப்பட்ட அளவுக்கு எவரும் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்,” என்கிறார் அவர்.

“என் கணவர் குடிகாரர். நான் ஐந்து பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது,” என்கிறார் அவர். “அச்சமயத்தில் நான் உடைத்த ஒவ்வொரு டன்னுக்கும் (தாது) 50 பைசா சம்பாதித்தேன். உணவுக்குக் கஷ்டப்பட்டோம். ஒவ்வொருவருக்கும் பாதி ரொட்டிதான் கிடைக்கும். காட்டிலிருந்து கீரைகளை சேகரித்து உப்பு போட்டு அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுவோம். சில நேரங்களில் நீளமான வட்டமான கத்தரிக்காயை வாங்கி விறகில் அதை வாட்டி தோலுரித்து, உப்பு தேய்த்து சாப்பிட்டு, நீரருந்தி படுத்து விடுவோம். அப்படிதான் நாங்கள் வாழ்ந்தோம்.” கழிவறைகளுக்கும் பானை நீருக்கும் பாதுகாப்பு உடைக்கும் வாய்ப்புகளின்றி உழைத்த ஹனுமாக்கா உணவுக்கு போதுமான அளவு கூட சம்பாதிக்க முடியவில்லை.

At least 4,000-odd mine workers have filed a writ-petition before the Supreme Court, demanding compensation and rehabilitation
PHOTO • S. Senthalir

குறைந்தபட்சம் 4,000 சுரங்கத் தொழிலாளர்கள் நிவாரணமும் புனர்வாழ்வும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்

Hanumakka Ranganna (second from left) and Hampakka Bheemappa (third from left) along with other women mine workers all set to continue the protest march, after they had stopped at Vaddu village in Sandur to rest
PHOTO • S. Senthalir

ஹனுமாக்கா ரங்கண்ணா (இடதிலிருந்து இரண்டாவது) மற்றும் ஹம்பக்கா பீமாப்பா (இடதிலிருந்து மூன்றாவது) ஆகியோர் பிற பெண் சுரங்கத் தொழிலாளர்களுடன் சந்தூரின் வட்டு கிராமத்தில் ஓய்வெடுத்தபின் போராட்ட ஊர்வலத்தை தொடரத் தயாராகிவிட்டனர்

அவரது கிராமத்தை சேர்ந்த இன்னொரு சுரங்கத் தொழிலாளரான ஹம்பக்கா பீமாப்பாவும் இதோ போன்ற கதையைச் சொல்கிறார். பட்டியல் சாதியை சேர்ந்த அவர், குழந்தையாக இருக்கும்போதே விவசாயத் தொழிலாளருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். “திருமணமான போது என்ன வயது என்று கூட எனக்கு நினைவில்லை. குழந்தையாக இருக்கும்போதே நான் வேலைக்கு செல்லத் தொடங்கி விட்டேன். பூப்பெய்தல் கூட நடந்திருக்கவில்லை,” என்கிறார் அவர். “ஒரு டன் தாதுவை உடைத்து நாளொன்றுக்கு 75 பைசா ஊதியம் பெற்றேன். ஒரு வாரம் உழைத்து எங்களால் ஏழு ரூபாய் கூட ஈட்ட முடியாது. குறைவாக ஊதியம் கொடுக்கிறார்கள் என வீட்டுக்கு அழுது கொண்டேதான் வருவேன்.”

நாட்கூலி 75 பைசாவை ஐந்து வருடங்களாக சம்பாதித்தபிறகு ஹம்பாக்காவுக்கு 75 பைசா உயர்வு கொடுக்கப்பட்டது. அடுத்த நான்கு வருடங்களுக்கு அவர் நாட்கூலியாக ரூ.1.50 பெற்றார். பிறகு ஒரு 50 பைசா உயர்வு அளிக்கப்பட்டது. “நான் 2 ரூபாய் (ஒரு நாளுக்கு ஒரு டன் தாது உடைத்து) 10 வருடங்களுக்கு சம்பாதித்துக் கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு வாரமும் ரூ.1.50-ஐ கடனுக்கான வட்டியாகக் கட்டிக் கொண்டிருந்தேன். 10 ரூபாய் சந்தைக்கு செலவாகும். விலை மலிவு என்பதால் நொய் அரிசிதான் வாங்கினோம்.”

அப்போதெல்லாம் பணம் சம்பாதிக்க சிறந்த வழி கடினமாக உழைப்பதுதான் என அவர் நம்பிக் கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு எழுவார். சமைப்பார். உணவு கட்டுவார். சாலைக்கு அதிகாலை 6 மணிக்கு வந்துவிடுவார். சுரங்கத்துக்குக் கொண்டு செல்லும் ட்ரக்குக்காக காத்திருப்பார். வேகமாக சென்றால் கூடுதலாக ஒரு டன் தாதுவை உடைக்கலாம். “எங்கள் கிராமத்தில் பேருந்துகள் இல்லை. ட்ரக் ட்ரைவருக்கு 10 பைசா கொடுக்க வேண்டும். பின்னர் அது 50 பைசாவானது,” என நினைவுகூறுகிறார் ஹம்பக்கா.

வீடு திரும்புதல் சுலபம் இல்லை. மாலையில் அவரும் நான்கைந்து சக ஊழியர்களும் கனமான தாதுக்களை கொண்டு செல்லும் ட்ரக்குகளில் தொற்றிக் கொள்வார்கள். “சில நேரங்களில் ட்ரக் திரும்பும்போது எங்களில் முன்று, நான்கு பேர் கீழே விழுந்து விடுவோம். ஆனால் வலி உணர்ந்ததே இல்லை. மீண்டும் அதே ட்ரக்கில் ஏறிக் கொள்வோம்,” என அவர் நினைவுகூறுகிறார். எனினும் கூடுதலாக அவர் உடைத்த ஒரு டன் தாதுக்கு எப்போதுமே ஊதியம் கொடுக்கப்பட்டதில்லை. “மூன்று டன்கள் உடைத்தால், இரண்டுக்கு ஊதியம் கொடுக்கப்படும்,” என்கிறார் அவர். “நாங்கள் ஒன்றும் சொல்லவோ கேட்கவோ முடியாது.”

Mine workers stop for breakfast in Sandur on the second day of the two-day padayatra from Sandur to Bellary
PHOTO • S. Senthalir
Mine workers stop for breakfast in Sandur on the second day of the two-day padayatra from Sandur to Bellary
PHOTO • S. Senthalir

சந்தூரிலிருந்து பெல்லாரிக்கு செல்லும் இரண்டு நாள் பாதயாத்திரையின் இரண்டாம் நாள் சந்தூரில் காலை உணவுக்கு நிற்கும் சுரங்கப் பணியாளர்கள்

Left: Hanumakka (centre) sharing a light moment with her friends during the protest march.
PHOTO • S. Senthalir
Right: Hampakka (left) along with other women mine workers in Sandur
PHOTO • S. Senthalir

இடது: ஹனுமாக்கா (மையம்) போராட்ட ஊர்வலத்தின் போது நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுகிறார். வலது: ஹம்பக்கா (இடது) பிற பெண் சுரங்கத் தொழிலாளர்களுடன் சந்தூரில்

அடிக்கடி தாது திருடப்படுவதுண்டு. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் மேஸ்திரி தண்டிப்பார். “வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை நாங்கள் தாதுவை தங்கியிருந்து காவல் காப்போம். தீ மூட்டி தரையில் படுத்துறங்குவோம். எங்களுக்கு ஊதியம் கிடைப்பதற்காக தாதுக்களை காக்க இப்படி நாங்கள் செய்வோம்.”

சுரங்கங்களில் 16லிருந்து 18 மணி நேரங்கள் நாள்தோறும் பணிபுரிவதென்பது ஊழியர்களுக்கு தேவைப்படும் அடிப்படை சுயபராமரிப்பு கூட கிடைக்காமல் செய்யும். “வாரத்தில் சந்தைக்கு செல்லும் ஒருநாள்தான் நாங்கள் குளித்தோம்,” என்கிறார் ஹம்பக்கா.

1998ம் ஆண்டில் வேலை விட்டு நீக்கப்படும்போது பெண் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு டன்னுக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டிருந்தனர். ஒரு நாளில் அவர்கள் ஐந்து டன் தாதுக்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதற்கு அர்த்தம் கிட்டத்தட்ட 75 ரூபாயை அவர்கள் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதுதான். பெரிய அளவிலான தாதுக்களை அவர்கள் பிரிக்கும்போது நாளொன்றுக்கு 100 ரூபாய் பெற்றனர்.

ஹனுமாக்காவும் ஹம்பம்மாவும் சுரங்க வேலைகளை இழந்தபோது வாழ்வாதாரத்துக்காக விவசாய வேலைகளுக்கு சென்றனர். “கூலி வேலைதான் கிடைத்தது. கற்களையும் களைகளையும் நீக்கவும் சோளம் விதைக்கவும் நாங்கள் சென்றோம். நாளொன்றுக்கு ஐந்து ரூபாய்க்கு வேலை பார்த்தோம். இப்போது அவர்கள் (நிலவுரிமையாளர்கள்) நாட்கூலியாக 200 ரூபாய் எங்களுக்குக் கொடுக்கின்றனர்,” என்கிறார் ஹனுமாக்கா வயல்களில் பார்க்கும் வேலையை நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டு. அவரின் மகள் அவரை இப்போது பார்த்துக் கொள்கிறார். ஹம்பம்மாவும் விவசாயத் தொழிலாளர் பணியை நிறுத்திவிட்டார். அவரது மகன் அவரைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.

“எங்களின் ரத்தத்தை சிந்தி, இளமையை இழந்து தாது கற்களை உடைத்தோம். ஆனால் அவர்கள் (சுரங்க நிறுவனங்கள்) எங்களை குப்பைகள் போல் தூக்கியெறிந்து விட்டனர்,” என்கிறார் ஹனுமாக்கா.

தமிழில்: ராஜசங்கீதன்

S. Senthalir

S. Senthalir is Senior Editor at People's Archive of Rural India and a 2020 PARI Fellow. She reports on the intersection of gender, caste and labour. Senthalir is a 2023 fellow of the Chevening South Asia Journalism Programme at University of Westminster.

Other stories by S. Senthalir
Editor : Sangeeta Menon

Sangeeta Menon is a Mumbai-based writer, editor and communications consultant.

Other stories by Sangeeta Menon
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan