பழப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்பது பி.கிஸ்தாவின் பல வருட ஆசை. “விவசாய கூலி மூலம் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு கடனை அடைக்க முடியாது என தெளிவாக தெரிந்து கொண்டேன்” என்கிறார். ஒருவழியாக போன வருடம் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். “நான்கு ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 20,000 ரூபாய் கொடுத்து குத்தகை எடுத்துள்ளேன். மூன்று வருடங்களுக்கு முன்பு என் மகள் மற்றும் மகனின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை தொடங்கினேன்”

மார்ச் கடைசியில் ஊரடங்கு தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு, அவரது ஊரிலும் ஆனந்தபூர் மாவட்டத்தின் புக்கராய சமுத்திரம் தாலுகாவில் உள்ள மற்ற கிராமங்களிலும் ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தன்னுடைய நிலத்தில் பயிரிடப்பட்ட 50 டன் வாழையை (தர்ப்பூசணியும் கூட) இழந்தார். பழங்களை விற்றதன் மூலம் நான்கு லட்ச ரூபாய் நஷ்டம் போக, அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் மட்டுமே கிடைத்தது. முன்பு வாங்கிய கடனை அடைப்பதற்குப் பதில், அவருடைய கடன் 3.5 லட்சத்திலிருந்து 7.5 லட்சமாக தற்போது ஏறியுள்ளது.

2019-ம் ஆண்டு பருவமழை சிறப்பாக இருந்ததால் ஆனந்தபூர் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த வருடம் ராபி விளைச்சல் சிறப்பாக இருந்ததை அடுத்து இப்போதும் நல்ல வருமானம் கிடைக்கும் என கிஸ்தா போல் இவர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒரு டன் ரூ.8000 வரை போகும் என்று வாழை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ராபி பருவ இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சந்தையில் நிச்சியமற்ற தன்மை நிலவியதால் வியாபாரிகள் பொருட்களை வாங்க தயக்கம் காட்டினர். ராபி பருவத்தில் ஏப்ரல் மாதம் வரை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வாழை அறுவடை செய்யப்படும். இப்போது அனைத்தும் அடி வாங்கியுள்ளது. இதன் பாதிப்பு விவசாயிகளை மிகவும் பலவீனமாக்கியுள்ளது.

கடுமையான இழப்புகளை சந்தித்தவர்களில் புக்கராயசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சுப்ரமண்யமும் ஒருவர். 3.5 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ள அவர், இதற்காக 3.5 லட்சம் செலவழித்துள்ளார். ஏப்ரல் மாதம், தான் அறுவடை செய்த 70 டன்னையும், ஒரு டன் ரூ.1500 என்ற விலையில் கிராமத்திற்கு வந்த வியாபாரியிடம் மொத்தமாக விற்றுவிட்டார். அந்த மாதம் 8-9 டன் எடை கொண்ட வாழைத்தார் சரக்கு, விவசாயிகள் ஒரு டன்னுக்கு கொடுக்கும் விலையை விட குறைச்சலாக வெறும் ரூ.5,000 – ரூ. 3,000 விலைக்கு வாங்கப்பட்டது.

Tons of bananas were dumped in the fields of Anantapur (left), where activists and farm leaders (right) say they have collated details of the harvest in many villages
Tons of bananas were dumped in the fields of Anantapur (left), where activists and farm leaders (right) say they have collated details of the harvest in many villages

(இடது) ஆனந்தபூர் வயல்வெளிகளில் டண் கணக்கில் வாழைத்தார்கள் கொட்டப்பட்டுள்ளன. பல கிராமங்களின் அறுவடை விவரங்களை தொகுத்து வருவதாக செயல்பாட்டாளர்களும் விவசாயிகளும் கூறுகின்றனர் (வலது)

“இப்போதைய சுகாதார எமர்ஜென்சி காலத்தில் ( கோவிட்-19 ஊரடங்கு ), பழங்களை அரசாங்கம் கொள்முதல் செய்தால், நிலத்திலேயே பயிர்கள் வீணாகாமல் மக்களுக்கு சத்துள்ள உணவை வழங்க முடியும். சில காலம் கழித்து விவசாயிகளுக்கு பணம் வழங்கினால் கூட போதும்” என்கிறார் சுப்ரமணியம்.

தன்னுடைய ஏழு ஏக்கர் நிலத்தில் மூன்றில் வாழை பயிரிட்டுள்ள ராப்தாது தாலுகாவில் உள்ள கோண்டிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சி.ராம் மோகன் ரெட்டி கூறுகையில், வாங்கிய பொருளை சந்தைப்படுத்த முடியாது என்ற சந்தேகம் இருப்பதால் ஒரு டன்னை ரூ.1500-க்கு கூட வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள். வழக்கமாக, ஒரு டன் வாழைக்காய் ரூ. 11,000 முதல் ரூ. 12,000 வரை விலை போகும். ஜனவரி 31-ம் தேதி, மாநில விவசாயத் துறை அமைச்சர் குரசாலா கண்ணன்பாபு, தடபத்ரி நகரிலிருந்து ‘பழ ரயிலை’ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அன்று மட்டும் ஒரு டன் பழம் ரூ. 14,000 வரை விலை போனதாகவும், ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக, உள்ளூரில் விளைந்த 980 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் ரயில் மூலம் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பத்திரிக்கைச் செய்திகள் கூறுகிறது.

ஆனந்தபூர் மாவட்டத்தின் வறண்ட பகுதியான ராய்லசீமாவில், பயிரிடக்கூடிய 11.36 லட்ச ஹெக்டேரில், பழப் பயிர்கள் 1,58,000 ஹெக்டேரிலும் காய்கறிகள் 34,000 ஹெக்டேரிலும் வளர்கின்றன. மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பி.எஸ். சுப்புராயுடு தொலைபேசி வழியாக பேசுகையில், மாவட்ட தோட்டக்கலையில் மொத்த வருடாந்திர உற்பத்தி 58 லட்ச மெட்ரிக் டன்னாக உள்ளது. இதன் மதிப்பு ரூ. 10, 000 கோடி.

ஊரடங்கினால்தான் விலை குறைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் சுப்புராயுடு. ஒவ்வொரு வருடமும் (2020-ல் ஊரடங்கு காலம்) இந்த சமயத்தில், ஒரு கிலோ வாழைக்காயின் விலை ரூ. 8-11 லிருந்து ரூ. 3 முதல் ரூ. 5-ஆக குறையும். ஏப்ரல் 2014-ம் ஆண்டு ஒரு கிலோ வாழைப்பழம் இரண்டு ரூபாய்க்கு கூட விற்பனையாகவில்லை என இவர் கூறுகிறார். அவர் கூறுகையில், “ஒரு ஏக்கருக்கு 20 டன்னாக இருந்த உற்பத்தி, தற்போது 40-45 டன்னாக அதிகரித்துள்ளது. நல்ல விலை கிடைக்க வேண்டுமென்றால், நேரடியாக வியாபாரிகளுக்கு விற்காமல், விவசாயிகள் தங்கள் பொருளை ஏபிஎம்சி (விவசாய உற்பத்தி சந்தைக் குழு) விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.”

சுப்பராயுடு கூறுவது போல் ஒருபோதும் இந்தளவிற்கு விலை இறங்காது என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த வருடம் ஏப்ரலில் வாழைத்தாரின் விலை கிலோவிற்கு 8 முதல் 11 ரூபாய் இருக்கும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

Banana cultivators C. Linga Reddy (left) and T. Adinarayana are steeped in debt due to the drastic drop in banana prices during the lockdown
Banana cultivators C. Linga Reddy (left) and T. Adinarayana are steeped in debt due to the drastic drop in banana prices during the lockdown
PHOTO • T. Sanjay Naidu

ஊரடங்கு காலத்தில் வாழைத்தார் விலை கடுமையான வீழ்ச்சி கண்டதால் வாழை பயிரிட்டுள்ள சி.லிங்கா ரெட்டியும் (இடது) டி. ஆதிநாராயணாவும் கடனில் தவிக்கிறார்கள்

புக்கராயசமுத்திரம் தாலுகாவின் போடிகனிடோடி கிராமத்திலுள்ள தன்னுடைய ஆறு ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ள டி. ஆதிநாராயனா கூறுகையில், “இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு கிலோ வாழைக்காய் இரண்டு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதில்லை. நான் குத்தகை விவசாயி என்பதால் வங்கியில் எனக்கு எந்த கடனும் கிடைக்காது. இதுவரை பயிருக்காக 4.80 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளேன்…..”

தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ள அதே தாலுகாவைச் சேர்ந்த ரெட்டிபள்ளி கிராமத்தின் சி. லிங்கா ரெட்டி கூறுகையில், தான் முதலீடு செய்த பத்து லட்சத்தில் 2.50 லட்ச ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதாக கூறுகிறார். வங்கியிலிருந்தும், உரக் கடையிலிருந்தும் மற்றும் பல இடங்களிலிருந்தும் இவர் கடன் வாங்கியுள்ளார். “ஊரடங்கு மட்டும் இல்லாவிட்டால், நான் 15 லட்சம் சம்பாதித்திருப்பேன். இப்போது இழப்பீட்டிற்காக விண்ணப்பத்துள்ளேன்” என்கிறார்.

ஆனந்தபூரில் உள்ள பல கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட எல்லா பயிர்களின் விவரங்களையும் தொகுத்து வருவதாக இங்குள்ள செயல்பாட்டாளர்களும் விவசாயிகளும் கூறுகின்றனர். இழப்பீடு பெறுவதற்காக விவசாயிகளின் பாஸ்புக் நகலை உள்ளூர் சந்தைக் குழு சேகரித்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் மேலதிக தகவலையோ அல்லது அடுத்தகட்ட நகர்வையோ அரசாங்கம் இன்னும் எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

“அதிகாரிகள் எந்த திட்டமும் இல்லாமல் உள்ளார்கள். ஒட்டுமொத்த கிராமமும் சிக்கலில் இருக்கும் நிலையில், தனிநபர் விவசாயிகள் தங்கள் பயிரை விற்க முடியாமல் உள்ளதை அவர்கள் கவனத்திற்கு நாங்கள் எடுத்துச் சென்றுள்ளோம். பெரிதும் விதந்தோதிய இ-நாம் திட்டமும் கூட விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் கொடுக்கவில்லை” என்கிறார் அனைத்திந்திய கிசான் சபாவின் ஆனந்தபூர் மாவட்ட செயலாளர்  ஆர். சந்திரசேகர் ரெட்டி. (2016-ம் ஆண்டு ஆந்திராவில் தொடங்கப்பட்ட இ-நாம் சேவை,  அதிக ஏலத்தொகை கேட்பவரிடம் விவசாயிகளும் வியாபாரிகளும் இணையம் வழி விற்பனை செய்ய உதவுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக நிச்சியமற்ற தன்மை நிலவுவதால் வியாபாரிகள் ஏலம் கேட்பதை தவிர்க்கிறார்கள்.)

தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து அதிகாரிகள் இதுவரை எதுவும் கேட்கவில்லை என்று கூறும் கிஸ்தா, “என்னிடம் குத்தகை அட்டை இல்லாததால், ரைது பரோசா (விவசாயிகளுக்காக அந்திர அரசின் மானியத் திட்டம்) தொகை நில உரிமையாளருக்குச் சென்றுவிடும். அப்படி ஏதாவது அரசாங்கம் கொடுத்து, அதை உனக்கு தருகிறேன் என அவர் வாக்குறுதி கொடுத்திருந்தாலும், இந்த சமயத்தில் இழப்பீடு தொகையை எனக்கு தருவார் என்பது சந்தேகம்தான்.”

கிஸ்தா தற்போது கந்துவட்டிக்காரர்களிடம் இன்னும் அதிகமாக கடன் வாங்க வேண்டும். மீதமுள்ள பயிரைக் காப்பாற்ற குறைந்தபட்சம் ஒரு லட்சம் ( வருடத்திற்கு 24% வட்டியில் ) தேவைப்படும். “வாழைப்பயிர் மூன்று வருடங்களுக்கு பயிரிடப்படும். அடுத்த விளைச்சல் தனக்கு நல்ல அதிர்ஷடத்தை கொடுக்கும் என நம்பிக்கையில் மீண்டும் நான் விவசாயத்தை தொடரப் போகிறேன்” என்கிறார்.

தமிழில்: வி. கோபி மாவடிராஜா

G. Ram Mohan

G. Ram Mohan is a freelance journalist based in Tirupati, Andhra Pradesh. He focuses on education, agriculture and health.

Other stories by G. Ram Mohan
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja