Panimara

இடது – வலது:: தயாநிதி நாயக்,  81, சமரு பரிதா, 91,ஜிதேந்திர பிரதான், 81, (பின்புறம்)மதன் போஹோய் , 80. பனிமாரா கிராமத்தின் உயிருடன் இருக்கும் ஏழு விடுதலைப்போரட்ட வீரர்களில் இவர்கள் நான்கு பேரும் அடக்கம்.


“இந்த விண்ணப்பங்களை எல்லாம் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றைக் கிழித்துப் போடுங்கள். இவை செல்லாது. இந்த நீதிமன்றம் இவற்றை ஏற்காது.“ என்கிறார் சமரு.

அந்தத் திடீர் நீதிபதி பொறுப்பைச் சமரு நன்றாக அனுபவிக்க ஆரம்பித்து இருந்தார்.

அது ஆகஸ்ட் 1942. நாடே கொதித்துக் கொண்டிருந்தது. சம்பல்பூர் நீதிமன்றமும் விடுதலை கனலில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சமரு பரிதாவும், அவரின் தோழர்களும் அந்த நீதிமன்றத்தை அப்போது தான் கைப்பற்றி இருந்தார்கள்.சமரு தன்னைத்தானே நீதிபதி என்று அறிவித்துக் கொண்டார். ஜிதேந்திர பிரதான் அவருக்கு உதவியாளர் ஆனார். பூரணச்சந்திர பிரதான், பேஷ்கர் (நீதிமன்ற எழுத்தர்) ஆக இருப்பதாக முடிவு செய்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குத் தங்களுடைய பங்களிப்பாக அந்த நீதிமன்ற கைப்பற்றலை நடத்தி இருந்தார்கள்.

“இந்த விண்ணப்பங்கள் ஆங்கிலேய அரசுக்கு வணக்கம் சொல்லி எழுதப்பட்டு உள்ளன. நாம் விடுதலை இந்தியாவில் வாழ்கிறோம். உங்கள் வழக்குகளைக் கவனத்தில் எடுத்து கொள்ளவே விரும்புகிறோம். இந்த விண்ணப்பங்களை எடுத்துச் செல்லுங்கள். அவற்றை மாற்றி எழுதி கொண்டு வாருங்கள். மகாத்மா காந்திக்கு எனத் துவங்கும் விண்ணப்பங்கள் எழுதப்பட்டால், இவற்றை விசாரிக்கிறோம்.” என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த மக்களிடம் முழங்கினார்கள்.

அறுபது ஆண்டுகள் ஆன பின்னரும், அதே உற்சாகத்தோடு அந்தக் கதையைச் சமரு சொல்கிறார். அவருக்கு 91 வயது ஆகிறது. அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஜிதேந்திராவுக்கு 81 வயது. இன்னமும் ஓடிஷாவின் பர்கர்ஹா மாவட்டத்தின் பனிமாரா கிராமத்தில் வாழ்கிறார்கள். விடுதலை போரின் உச்சத்தில் இந்தக் கிராமம் கம்பீரமாகத் தன்னுடைய பல மகன்கள், மகள்களை விடுதலைப் போருக்கு வீரத்தோடு அனுப்பி வைத்தது. அரசு ஆவணங்கள் 1942-ல் மட்டும் இந்தக் கிராமத்தின் 32 மக்கள் சிறை புகுந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்களில் ஏழு பேர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களில் இருவரே சமரு, ஜிதேந்திரா.

ஒரு கட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு சத்தியாகிரகியை அனுப்பி வைத்தது. இந்தக் கிராமம் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கழுத்தை நெரித்தது. கிராமத்தின் ஒற்றுமை அசைக்க முடியாத ஒன்றாக நிமிர்ந்து நின்றது. அதன் உறுதி இன்றும் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய அரசை எதிர்த்த இவர்கள் ஏழைகள், கல்வியறிவு இல்லாத விவசாயிகள். அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் சிறுநில விவசாயிகள். இன்றுவரை பெரும்பாலானோர் அப்படியே தான் இருக்கிறார்கள்.

பாடப்புத்தகங்கள் அவர்கள் பெயர்களை உச்சரிப்பது இல்லை என்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர்களின் சொந்த மாநிலமான ஒடிஷாவிலும் இந்தக் கிராமம் நினைவுகூரப்படுவது இல்லை. எனினும், பர்கர்ஹா மாவட்டத்தில் பனிமாரா விடுதலை கிராமம் தான். இந்தப் போராட்டங்களால் தனிப்பட்ட லாபம் என்று எதுவுமிள்ளியோ. எதோ சன்மானம், பதவி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு இவர்கள் போராடவில்லை. இந்தக் கிராமத்தின் பெரும்பாலான மக்கள் இந்திய விடுதலைக்குச் சுயநலமின்றிப் போராடியவர்கள்.

இவர்கள் விடுதலைப் போரின் வியத்தகு வீரர்கள். வெறுங்காலோடு விடுதலை வேள்வியை மேற்கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் பாதுகைகளை அணிந்ததில்லை.

* * *

"நீதிமன்றத்தில் இருந்த காவலர்களுக்கு எக்கச்சக்க அதிர்ச்சி. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்களைக் கைது செய்ய முயன்றார்கள். நான் சொன்னேன், ‘நான் தான் இங்கே நீதிபதி. என் உத்தரவுகளுக்குக் கீழ்படிய வேண்டும். நீங்கள் இந்தியர்கள் என்றால் என்னை மதியுங்கள். நீங்கள் ஆங்கிலேயர்கள் என்றால் உங்கள் நாட்டுக்கே திரும்பி விடுங்கள்.’” என்று சமரு கலகலவெனச் சிரிக்கிறார்.

Panimara

பனிமாராவின் தூண்/ஸ்தம்பம் தன்னுடைய கிராமத்தின் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 32 விடுதலை வீரர்களை நினைவு கூர்கிறது.


காவல்துறை உண்மையான நீதிபதி வசித்து வந்த வீட்டிற்குச் சென்றார்கள். “எங்களைக் கைது செய்தும் உத்தரவில் அவை கையொப்பம் இட மறுத்தார். கைது செய்யப்பட வேண்டிய நபர்களின் பெயர் இல்லாமல் கையொப்பம் இட முடியாது என்று அவர் கைவிரித்து விட்டார். காவலர்கள் எங்கள் பெயரை எங்களிடமே கேட்டார்கள். நாங்கள் மூச்சுவிடவில்லை.” என்கிறார் ஜிதேந்திர பிரதான்.

அசந்து போன காவலர்கள் நேராகச் சம்பல்பூர் ஆட்சியரிடம் போய் நின்றார்கள். எங்களுடைய சூதை புரிந்து கொண்ட அவர், “அந்தத் தடியர்களுக்கு A,B,C எனப்பெயரிட்டு கைது உத்தரவை பூர்த்திச் செய்யுங்கள். அதற்குப் பின் கைது செய்யுங்கள்” என அறிவுறுத்தினார். அதை அப்படியே காவல்துறை பின்பற்றி எங்களைக் குற்றவாளிகள் A,B,C எனக் கைது செய்தது.” என்கிறார் சமரு.

காவல்துறை கஷ்டகாலம் அதோடு முடியவில்லை. “சிறைச்சாலையில் சிறை கண்காணிப்பாளர் “என்னைப் பார்த்தால் முட்டாளாகத் தெரிகிறதா? இவர்கள் தப்பித்துப் போனால் என்னாகும்? நான் A,B,C தப்பித்து ஓடிவிட்டார்கள் என்று புகார் தர முடியுமா. வடிகட்டின முட்டாள் என்று என்னைக் கேலி செய்வார்கள்.” என்று முரண்டு பிடித்தார்.” என்று சிரிக்கிறார் சமரு.

பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் இவர்களைச் சிறையில் அடைக்க ஒப்புதல் பெற்றார்கள் காவலர்கள். “நீதிமன்றத்தில் எங்களைக் கொண்டு போய் நிறுத்திய போது இன்னும் வேடிக்கையாக இருந்தது. “A கூண்டுக்கு வரவும்,B கூண்டுக்கு வரவும்,C கூண்டுக்கு வரவும் என்று டவாலி கத்தியது நகைச்சுவையாக இருந்தது. அதற்குப் பிறகு எங்களை நீதிமன்றம் கவனித்துக் கொண்டது” என்கிறார் ஜிதேந்திரா.

நீதிமன்றம் தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பழி தீர்த்துக் கொண்டது. ஆறு மாத கடுங்காவல் தண்டனை தரப்பட்டு. கிரிமினல் குற்றவாளிகள் இருக்கும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். “பொதுவாக அரசியல் குற்றவாளிகள் இருக்கும் சிறைச்சாலைக்கே அனுப்புவார்கள். இது போராட்டத்தின் உச்சகட்டம். காவல்துறை கொடூரமும், பழி வாங்கும் உணர்வும் கொண்டு இயங்கியது.” என்று நினைவு கூர்கிறார் சமரு.

“மகாநதியை கடக்க எந்தப் பாலமும் அப்போதெல்லாம் இல்லை. எங்களைப் படகில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். நாங்களே விருப்பப்பட்டுக் கைதானோம், எங்களுக்குத் தப்பிக்கும் எண்ணம் துளியும் இல்லை என்று தெரிந்தும் எங்கள் கைகளைக் கட்டியிருந்தார்கள். அதோடு நிற்காமல் ஒருவரை இன்னொருவரோடு சேர்த்து கட்டியிருந்தார்கள். படகு கவிழ்ந்து இருந்தால் நாங்கள் அனைவரும் அன்றைக்கே பரலோகம் போயிருப்போம்.”

“காவல்துறை எங்கள் குடும்பங்களைக் கொடுமைப்படுத்தியது. (காலணா மதிப்புள்ள தானியத்தைக் கூலியாகப் பெற நாள் முழுக்க இந்த ஏழைகள் உழைத்த காலத்தில்) முப்பது ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை என் அம்மாவிடம் இருந்து வசூல் செய்யப் போனார்கள். ‘ஒழுங்கா அபராதத்தைக் கட்டு, இல்லை உன் மகன் காலத்துக்கும் கம்பி எண்ண வேண்டியது தான்.’ என்று அம்மாவை எச்சரித்தார்கள்.”

“என் அம்மா சொன்னங்க, ‘அவன் எனக்கு மகனில்லை. இந்தக் கிராமத்துக்கே பிள்ளை. என்னைவிட இந்தக் கிராமத்தை பத்தி தான் அவனுக்குக் கவலை அதிகம்.’ இருந்தும் விடாமல் அம்மாவை தொல்லை பண்ணினாங்க. அம்மா அசராமல் சொன்னார், “இந்தக் கிராமத்தில் இருக்க எல்லாப் பசங்களும் என் பிள்ளைங்க தான். ஜெயிலில இருக்க எல்லாப் பிள்ளைங்களுக்கும் என்னால காசு கட்ட முடியுமா?’ ”

காவல்துறை கடுப்பின் உச்சத்துக்கே சென்றது. “எதாச்சும் கைப்பற்றினோம் என்று கணக்கு காட்ட எதாவது தாங்க. அரிவாள் மாதிரி எதாவது கிடைக்குமா.” என்று கேட்டுக் கொண்டது. “அரிவாளுமில்லை, ஒன்னுமில்லை” என்று அம்மா கையை விரித்து விட்டார். சாணியைக் கரைத்தபடி, “நீங்கள் நின்ன இடம் தீட்டாகிடுச்சு. கழுவணும். கிளம்பினா தேவலை.” என்று இயல்பாகச் சொன்னாள். அவர்கள் நடையைக் கட்டினார்கள்.

* * *

நீதிமன்ற நாடகம் அரங்கேறிக்கொண்டு இருந்த போதே பனிமாரா சத்தியாகிரகிகளின் இரண்டாவது குழு வேறொரு வேலையில் மும்முரமாக இயங்கியது. “சம்பல்பூர் சந்தையைப் பிடித்து, ஆங்கிலேய சரக்குகளை அழிப்பது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியாகும்.” என்கிறார் தயாநிதி நாயக். இவர் சமருவின் மருமகன். “சமருவே என்னுடைய தலைவர். என் அம்மா நான் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார். சமரு தான் என்னை வளர்த்தார்.”

தயாநிதி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய போது 11 வயது பாலகன்.1942-ல் இருபத்தி ஒரு வயது இளைஞனாக அவர் விடுதலைப் போரில் வீரியம் மிகுந்த போராளியாக மாறியிருந்தார். இப்போது 81 வயதிலும் அந்த நாட்களில் நடந்தவற்றை அச்சுப் பிசகாமல் பேசுகிறார் தயாநிதி.

"ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வு உச்சத்தில் இருந்தது. எங்களை ஆங்கிலேய அரசு அச்சுறுத்த முயன்று அந்த உணர்வு அதிகரிக்கவே செய்தது. கிராமத்தை சுற்றி எப்போதும் ஆயுதம் ஏந்திய படைகள் உலவி கொண்டிருக்கும். கோடி அணிவகுப்புகள் அடிக்கடி எங்களைப் பயமுறுத்த நடைபெறும். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.”

“ஆங்கிலேய அரசுக்கு எதிரான உணர்வு எல்லாரிடமும் பரவியிருந்தது. நிலமில்லாத தொழிலாளர்கள் துவங்கி பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் போராடினார்கள். ஆசிரியர்கள் வேலையை விட்டு விலகவில்லை,அவர்கள் வேலை செய்ய மறுத்தார்கள். “நாங்கள் ஏன் வேலையை விட்டு விலக வேண்டும். நாங்கள் ஆங்கிலேயரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.” என்றார்கள். அவர்கள் பள்ளிக்குப் போனார்கள், ஆனால், வேலை பார்க்கவில்லை.

“விடாமல் போராடிக்கொண்டு இருந்ததால் எங்கள் கிராமம் தீவு போலத் தனித்து விடப்பட்டது. தொடர் கைதுகள், அடக்குமுறைகள் ஆகியவற்றால் சில காலத்துக்குக் காங்கிரஸ் கட்சியினர் ஊருக்கு வரவில்லை, வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்று அதனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இப்படித்தான் ஆகஸ்ட் 1942 கழிந்தது. அதனால் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கிராமவாசிகள் வெளியே வந்தார்கள். இப்படித்தான் போராட்டம் சூடு பிடித்தது. நான் இரண்டாவது குழுவில் இருந்தேன்.” என்கிறார் தயாநிதி.

"நாங்கள் ஐந்து பேரும் மிகவும் இளையவர்கள். அருகில் இருந்த காங்கிரஸ் கட்சிக்காரரான ஃபகிரா பெஹெரா வீட்டுக்கு போனோம். அவர் மலர்களைக் கொடுத்ததோடு, ‘செய் அல்லது செத்து மடி’ என்று எழுதப்பட்ட கைப்பட்டையைக் கட்டிவிட்டார். நாங்கள் சந்தையை நோக்கி கம்பீரமாக எண்ணற்ற பள்ளி குழந்தைகளோடு வீரநடை போட்டோம். மற்றவர்கள் பக்கவாட்டில் ஓடியபடி வந்தார்கள்.”

"சந்தையில் வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை வாசித்தோம். ஆயுதம் ஏந்தி முப்பது காவலர்கள் இருந்தார்கள். நாங்கள் முழக்கத்தை வாசித்ததும் எங்களைக் கைது செய்தார்கள்.”

“இங்கேயும் குழப்பம் ஏற்பட்டது. எங்களில் சிலரை உடனே போக அனுமதித்தார்கள்.”

“ஏன்?”

"பதினொரு வயது பசங்களைக் கைது பண்ணி, கையைக் கட்டி கூட்டிக்கிட்டுப் போறது குதர்க்கமா இருந்தது. அதனால், பன்னிரெண்டு வயசுக்கு கீழே இருந்தவங்களைப் போகச் சொன்னாங்க. ஆனால், ஜுகேஷ்வர் ஜெனா, இந்தர்ஜீத் பிரதான் போக மறுத்துட்டாங்க. கூட்டத்தை விட்டு வெளியேற மாட்டோம்னு ஒரே அடம். ஒருவழியா சமாதானப்படுத்தி அனுப்பினோம். மத்தவங்களைப் பர்கர்ஹா சிறைக்கு அனுப்பி வெச்சாங்க. நான், திவ்ய சுந்தர் சாஹு, பிரபாகரச் சாஹூ மூன்று பேரும் ஒன்பது மாசம் சிறையில் இருந்தோம்.”

* * *

Panimara

பனிமாராவின் மீதமிருக்கும் விடுதலை வீரர்கள்


மதன் போஹோய் பிசிறு தட்டாமல், ஒரு அற்புதமான பாடலை பாடுகிறார். “இந்தப் பாடலை பாடியபடி தான் மூன்றாவது குழு சம்பல்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி வீரநடை புரிந்தோம்.” ஆங்கிலேயர்கள் அந்த அலுவலகத்தைப் பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுவதற்காக இழுத்து மூடி, சீல் வைத்திருந்தார்கள்.

மூன்றாவது குழுவின் இலக்கு: மூடப்பட்டிருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தைத் திறப்பது.

"என் பெற்றோர் நான் சின்னப் பையனா இருக்கப்பவே இறந்துட்டாங்க. என் அத்தை, மாமா என்னைச் சரியா பாத்துக்கலை. காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் நான் கலந்துகிட்டப்ப அவங்க பயந்துட்டாங்க. சத்தியாகிரகிகள் கூடச் சேர முயற்சி பண்ணினப்ப என்னை வீட்டில பூட்டி வெச்சுட்டாங்க. நான் திருந்திட்டேன், ஒழுங்கா இருப்பேன்னு சொல்லி நடிச்சேன். நம்பி கதவை திறந்தாங்க. வயலுக்கு வேலை பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு வந்தேன். மண்வெட்டி, கூடை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன். வயலில் இருந்து நேரா பர்கர்ஹா சத்தியாகிரகத்தில் கலந்துக்கிட்டேன். சம்பல்பூர் நோக்கி கிளம்பத் தயாரா இருந்த 13 பேரோடு இணைந்து கொண்டேன். என்கிட்டே போட்டுக்கச் சட்டை கூட இல்லை. காதி எல்லாம் அடுத்தது தானே. காந்தியை ஆகஸ்ட் 9 அன்று கைது செய்தாலும் அந்தச் செய்தி எங்களை வந்து சேர சிலநாள் ஆச்சு. அதுக்கப்புறம் தான் மூன்று, நான்கு பிரிவா பிரிஞ்சு இயங்கும் திட்டத்துக்கு வந்தோம்.” என்கிறார் மதன்.

"முதல் குழு ஆகஸ்ட் 22 கைதானது. நாங்க 23 கைதானோம். சமருவும், நண்பர்களும் ஏற்கனவே படுத்தின பாடுக்கு பயந்து போய் எங்களை நேரா சிறைக்குக் கொண்டு போயிட்டாங்க. எங்களைக் காங்கிரஸ் கட்சி கிட்டே கூடப் போக அனுமதிக்கலை.”

பனிமாரா பயங்கரமான ஊர் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது. “ எங்களுக்கு முரட்டுக்கார கிராமம்னு (பத்மாஷ் காவ்ன்) எங்களுக்குப் பெயர்.” என்று மதன் போஹோய் பெருமையோடு சொல்கிறார்

இக்கட்டுரை முதலில் The Hindu ஞாயிறு இணைப்பிதழில் அக்டோபர்  20, 2002 அன்று வெளிவந்தது.

(தமிழில்: பூ.கொ.சரவணன்)

இந்த தொடரில் மேலும் வாசிக்க :

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள் - 4

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்!

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan