அன்புள்ள PARI வாசகருக்கு,

www.ruralindiaonline.org -ல் இது பல வேலைகள் முன்னெடுக்கப்பட்ட ஆண்டு.

2023-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், PARI குழுவானது, வருட இறுதி மதிப்புரைகளை வியக்க வைக்கும் படக்காட்சிகள் மூலம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஒன்பது நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும், PARI-ன் சிறப்பானவை - கதைகள், கவிதைகள், இசை மற்றும் விளக்கப்படங்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள், மொழிபெயர்ப்புகள், நூலகம், முகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் மாணவர்களுடனான எங்கள் ஈடுபாடு பற்றிய எடிட்டர்களின் தேர்வுகளை - நாங்கள் வெளியிடுவோம்.

நாங்கள் நாடு முழுவதிலுமிருந்து தொடர்ந்து பல வாழக்கைக் கதைகளை வெளியிட்டுள்ளோம். மேலும் இந்த ஆண்டு வடக்கு கிழக்கு உட்பட புதிய இடங்களில் இருந்தும் பல கதைகளைச் சேர்த்துள்ளோம். விவசாயம் பற்றிய எங்கள் இதழியல் பணி, இப்போது மல்லிகை, எள், உலர் மீன் மற்றும் பலவற்றைப் பற்றிய அபர்ணா கார்த்திகேயனின் ஆய்வுத்தொடர்களையும் உள்ளடக்கியுள்ளது. மனித-விலங்கு மோதலின் வீழ்ச்சி மற்றும் சரணாலயங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மீது அதன் மாபெரும் தாக்கம் பற்றி 'ஒரு புதிய வகையான வறட்சி' என்னும் ஜெய்தீப் ஹர்திகரின் இடைவிடா முயற்சியில் உருவான தொடரில் படிக்கலாம்.

சிலை தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் மற்றும் தமிழக மீனவர்கள் என எல்லைகளில் உள்ள மக்களின் மறக்க முடியாத புகைப்படங்களை பழனி குமார் படம்பிடித்திருந்தார். ரிதாயன் முகர்ஜி மற்றும் முஸாமில் பட் ஆகியோர், காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் மாறிவரும் காலநிலையை சமாளிக்க முயலும் மேய்ச்சல்காரர்களுடன் பயணம் செய்து, உயரமான மலைகளில் அவர்கள் பணிபுரியும் போது அவர்களை புகைப்படம் எடுத்திருந்தனர். மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில், இளம் விளையாட்டு வீரர்கள், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கான கல்வி, மாதவிடாய் தடைகள் மற்றும் பல  அழுத்தமான அநீதிகளை ஜோதி ஷினோலி தனது கதைகளில் உள்ளடக்கியிருந்தார். மேலும் எங்கள் பாரியின் சக எழுத்தாளர், உமேஷ் கே. ரேயின், பீகாரின் முசாஹர் சமூகம் மற்றும் மதுபானம் தொடர்பான மரணங்கள் பற்றிய காட்டமான தொடர்களையும் படைத்திருந்தோம்.

சமூகங்கள் மற்றும் பாதுகாப்பைப் பற்றிய புதிய கதைக் களங்களையும் இணைத்தோம்: கிழக்கு இமயமலையில் அழிந்துவரும் பறவையான புகுன் லியோசிச்லாவுக்கான அச்சுறுத்தல்களையும், அந்த நெருக்கடியைத் தணிக்க உள்ளூர்வாசிகள் எப்படி உதவுகிறார்கள் என்பதையும் விஷாகா ஜார்ஜ் கண்டறிந்தார். ராஜஸ்தானில் ஆபத்தான நிலையில் உள்ள கிரேட் இந்தியன் பஸ்டர்ட் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளால் கைப்பற்றப்பட்ட புனித தோப்புகளை, இப்போது  புனிதமற்றதாக மாறியிருந்ததை பிரித்தி டேவிட் பதிவிட்டிருந்தார்.

நாங்கள் மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் இணைந்து நடந்தது, மேலும் ஆதிவாசிகள் தங்கள் உரிமைகளுக்காக அணிவகுத்துச் செல்லும்போதும், ​​அங்கன்வாடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோதும் அவர்களிடம் பேசியது, என செய்திகள் வர வர, சேகரித்து வெளியிட்டோம். பின்னர், 2023 டிசம்பரில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, புல்டோசர் அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் மீதான அட்டூழியங்கள் மற்றும் இந்த மாநிலங்களில் காவலில் வைக்கப்பட்டவர்களின் மரணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைகளைப் பற்றி பார்த் எம்.என். எழுதியிருந்தார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் களத்தில் இறங்கி பணியாற்றி, பீடித் தொழிலாளிகளை பற்றிய கதைகளை படைத்த ஸ்மிதா கட்டோர், பெண்களின் பாடல்கள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு போன்றவற்றை உள்ளடக்கிய குறுகிய பயணக் கதைகளையும் வெளியிட்டிருந்தார். தானும் ஒரு ஆசிரியர் என்பதால், மேதா காலே, சிறப்புக் கல்வியாளர்களைப் பற்றிய ஒரு பாராட்டுப் பதிவை எழுதிய போது, ஆசிரியருக்கு மிக நெருக்கமான படைப்புகளாக அவை வெளியாகின. எங்கள் நிருபர்கள், மா போன்பிபி, ஷைலா நிருத்யா, சதர் பத்னி, பிலி வேஷா, இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களைப் பார்த்து, அவற்றைப் பற்றி எழுதியிருந்தார்கள் - அதற்கான பதிவு தான், 'சரி, யாருடைய ஆலயம் தான் இது?'

PARI குழு பல இடங்களில் பரவியுள்ளது என்ற சாதகத்தை பயன்படுத்தி, துரதிர்ஷ்டவசமான ஒப்பந்த தொழிலாளர்கள், மொழிபெயர்ப்பின் வேதனை மற்றும் பரவசம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வார்த்தைகள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் ‘ஓய்வு’ நேரங்களை எப்படிச் செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிய இந்தியா முழுமைக்குமான பதிவுகளையும் படைத்திருந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் பல கதைகளை சொல்வோம் என்றும் நம்புகிறோம்.

PHOTO • Nithesh Mattu
PHOTO • Ritayan Mukherjee

கடலோர கர்நாடகாவில் உள்ள நாட்டுப்புறக் கலைத் திருவிழாவான (இடது) பிலி வேஷா போன்ற திருவிழாக்களைப் பற்றி நாங்கள் விவரித்திருந்தோம். மேலும் லடாக்கின் ஜான்ஸ்கர் பகுதியில் யாக் மேய்ப்பர்களுடன் (வலது) பயணித்திருந்தோம்

நமிதா வைக்கர் இயக்கிய கிரைண்ட்மில் பாடல்கள் திட்டம் (GSP), PARIக்கு பெருமை சேர்த்த விஷயங்களில் ஒன்று. அதன் வரலாற்றை விளக்கும் கண்கவர் வீடியோ இந்த ஆண்டும் தொடர்ந்து பலனளிக்கும் பரிசாக இருந்தது. 2023-ம் ஆண்டில், ரான் ஆஃப் கட்ச்சில் இருந்து பாடல்களை பதிவு செய்து, கவிஞர் பிரதிஷ்தா பாண்டியாவால் தொகுக்கப்பட்ட கட்ச்சி பாடல்களை ஆவணப்படுத்தினோம்.

PARI-ன் மற்றொரு புதிய அனுபவம், ஆதிவாசி குழந்தைகளுக்கான ஓவியங்கள். கிராமப்புற ஒடிசாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளின் ஓவியங்கள், கனிகா குப்தாவால் முழுமையாகப் சரிபார்க்கப்பட்டு, சிரத்தையுடன் ஒன்றிணைக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் உள்ள தியோச்சா பச்சமி நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் பற்றிய கலைஞர் லபானி ஜாங்கியின் கதை, முதல் முறையாக PARI-ல் விளக்கப்படங்கள் மூலம் சொல்லப்பட்ட கதை ஆகும்.

PARI MMF மானியப் பணியாளர்கள், ஆபத்தில் இருக்கும் கைவினைக் கலைஞர்களை பதிவு செய்திருந்தனர்: மகாராஷ்டிராவில், சிறிய கிராமங்களில், ஜோப்டிகள், ஜாலிகள் மற்றும் பலவற்றைச் செய்யும் அதிகம் அறியப்படாத கைவினைக் கலைஞர்களை சங்கேத் ஜெயின் பதிவு செய்திருந்தார். ஸ்ருதி ஷர்மா நமக்கு முக்கியமான விளையாட்டு உபகரணங்களைச் சுற்றியுள்ள வெறும் கைவினைப்பொருட்களை மட்டுமல்லாது, வரலாற்று மற்றும் சமூக-கலாச்சார அமைப்பையும் நமக்கு வழங்கியிருந்தார். பிரகாஷ் புயான் அஸ்ஸாமில் உள்ள மஜூலியில் இருந்து அங்குள்ள ராஸ் பாரம்பரியத்தைப் பற்றி எழுதியிருந்தார். சங்கீத் சங்கர் வட கேரளாவின் தொல்பாவகூத்து மரபுகள் குறித்தும், ஃபைசல் அகமது கர்நாடகாவின் துலுநாடு பூதங்கள் குறித்தும் பதிவு செய்திருந்தார்.

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பதிவிட்ட, PARI-ன் சக எழுத்தாளர் அம்ருதாவின், கடனில் உள்ள குடும்பங்கள் பற்றிய கதைகள், பாலினத்தை மையமாகக் கொண்ட எங்கள் வளர்ந்து வரும் செய்திக் கட்டுரைகளை அதிகரித்தது.

இதைத் தவிர, பாரியிலுள்ள வழக்கமான மற்றும் பழைய எழுத்தாளர்கள் எங்கள் கதைக் காப்பகத்திற்கு தொடர்ந்து பங்களித்தனர்: புருசோத்தம் தாக்கூர் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டிலிருந்து எழுதியிருந்தார்; ஆதிவாசி சமூகங்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள் மற்றும் பண்டிகைகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருந்தார். ஷாலினி சிங், யமுனை நதியின் இடம்பெயர்ந்த விவசாயிகளைப் பின்தொடர்ந்தார். ஊர்வசி சர்க்கார், நண்டு பிடித்தல் பற்றியும், சுந்தர்பனின் காலாண்டு இதழுக்கும் எழுதியிருந்தார். கவிதா ஐயர், ஒடிசாவில் கிராமப்புற பள்ளிகளை மூடுவது குறித்தும், எஸ். செந்தளிர், பெல்லாரியில் பெண் சுரங்கத் தொழிலாளர்கள் குறித்தும், ஸ்வேதா தாகா, இமாச்சலப் பிரதேசத்தில் ப்ரைட் அணிவகுப்பு குறித்தும், ஜிக்யாசா மிஸ்ரா மணப்பெண்கள் விற்பனை குறித்தும், உமேஷ் சோலங்கி, உறைகள், சல்லடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை உருவாக்குபவர்கள் குறித்தும் எழுதியிருந்தனர். அதோடு மும்பை உள்ளூர் இசைக்கலைஞர்கள் பற்றி ஆகாங்ஷாவும், தமிழ்நாட்டின் இருளர்கள் பற்றி ஸ்மிதா துமுலுருவும் எழுதியிருந்தனர்.

கடலூரில் மீன்பிடித்தல் மற்றும் இமயமலையில் மேய்த்தல் குறித்து டாக்டர் நித்யா ராவ் மற்றும் டாக்டர் ஓவி தோரட் போன்ற அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பல கட்டுரைகள் எங்களிடம் இருந்தன. அவர்களோடு, இளங்கலை மற்றும் பட்டதாரி அறிஞர்கள், அவர்கள் படிக்கும் மக்கள் மற்றும் சமூகங்களான,  அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியினர், பீகாரில் உள்ள கிராமப்புற நடனக் கலைஞர்கள், கொச்சி சலவைத் தொழிலாளர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரை பற்றி நன்கு புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாக, பல கட்டுரைகளை PARIக்காக எழுதியிருந்தனர், மற்றும் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் கிராமப்புற இந்தியாவின் ஒரு தபால்காரர் பற்றியும் எழுதியிருந்தார்.

PHOTO • PARI Team
PHOTO • Ishita Pradeep

ஆதிவாசி குழந்தைகளுக்கான ஓவியங்களின் புதிய தொகுப்பை (இடது) தொடங்கியிருந்தோம். மேலும் மும்பையில் உள்ள ஆரேயில் (வலது) ஆதிவாசிகள் நடத்தி வரும் போராட்டத்தையும் உள்ளடக்கியிருந்தோம்

அடுத்த வாரம் காட்சி விருந்தாக வரவிருக்கும் ’2023ம் ஆண்டில் பாரியின் சிறப்புகள்’ பற்றியவொரு பார்வை.

தேர்வு செய்யப்பட்ட எங்கள் கவிதை , இசை மற்றும் பாடல் ஆகியவை இந்த ஆண்டு எங்கள் காப்பகத்தை விரிவுபடுத்தி ஆழப்படுத்தியுள்ளது - அந்த சிறந்த தொகுப்புடன் நாங்கள் தொடங்குகிறோம். அதைத் தொடர்ந்து, PARI நூலகத்தில் இருந்து, மதிப்பாய்வு செய்வதற்காக நூற்றுக்கணக்கான அறிக்கைகளில் இருந்து எந்த அறிக்கைகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம் என்பதை நூலகக் குழு எங்களிடம் கூறும். PARI திரைப்படக் குழு பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை வழங்கியுள்ளது. மேலும் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வீடியோகிராஃபர்களை எங்கள் Youtube பிளேலிஸ்ட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்ரேயா காத்யாயினியின், மதராசா அஜிசியா எரிப்பு மற்றும் உர்ஜா ஜெய்சல்மரின் ஓரான்களைக் காப்பாற்றியது போன்ற மிக அற்புதமான படங்கள் PARI-ல் இருந்து வந்திருந்தது. கவிதா கர்னீரோவின் உரிமையற்ற கழிவு சேகரிப்பாளர்கள் பற்றிய திரைப்படம், ஒரு விண்டேஜ் PARI படைப்பு. இவை மற்றும் பிற திரைப்படங்களைப் பற்றி, அவர்களின் ஆண்டு இறுதிப் பதிவில் நீங்கள் அதிகம் கேட்பீர்கள்.

‘பாரியில் வெளியிடப்படும் ஒவ்வொரு கதையும் 14 இந்திய மொழிகளில் மறுபிறப்பைக் காண்கிறது.’ மொழிபெயர்க்கப்பட்ட கதைகளை, ஜனநாயகப்படுத்த உதவும் ஒரு கதையின் அப்பழுக்கற்ற பதிப்புகளாக பார்க்கிறோம். இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி ஆசிரியர்களின் குழுவான PARIBhasha-வின் முயற்சியால் இது சாத்தியமானது. இந்த ஆண்டு இறுதி ரவுண்ட்-அப், அவர்கள் உருவாக்கிய வியக்கத்தக்க இந்த பணியையும் பகிரும்.

புகைப்படங்கள் PARI-க்கு மையமாக உள்ளன. மேலும் 2023-ன் புகைப்படங்கள் மற்றும் மாணவர்களுக்கு PARI பயிற்சிப்பணிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அறியவும். ஆண்டு முழுவதுமான எங்கள் சமூக ஊடக இடுகைகளை பதிவிடும் எங்கள் சமூக ஊடக ஹைலைட் ரீலை காணத்தவறாதீர்கள். இறுதியாக, நாங்கள் இங்த ஆண்டை முடித்துவிட்டு, புதிய வருடத்தை, இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காட்டும் எங்கள் முதன்மைத் திட்டமான, PARIயில் முகங்கள் உடன் தொடங்குவோம்.

2023-ம் ஆண்டின் இறுதியில், PARI-ன் ஒன்பது ஆண்டுகளுக்கான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 67 ஆகும். அதில் UN நிருபர்கள் சங்கத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் PARI இணை நிறுவனர் ஷாலினி சிங் பெற்ற வெற்றி சமீபமானது. எங்களுடன் தங்கள் கதைகளை தாராளமாக பகிர்ந்து கொள்ளும் அன்றாட நபர்களுக்கும், அவர்களுடன் இணைந்த செய்தியாளர்களுக்கும், அதில் பணியாற்றிய செய்தி, வீடியோ, புகைப்பட எடிட்டர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும், இவ்விருதுகள் சொந்தம் என்று நாங்கள் நம்புகிறோம்.

PARI ஆசிரியர்கள் நிருபர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இறுதி உள்ளடக்கத்தை சரி செய்கிறார்கள். அவர்கள் PARI-க்கு முக்கியமானவர்கள். ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பணிபுரியும் எங்கள் செய்தி ஆசிரியர்கள், புகைப்பட ஆசிரியர் மற்றும் சுயாதீன ஆசிரியர்கள் ஆகியோரையும் அது உள்ளடக்கியது.

ஓர் இணையப் பத்திரிகையை வெளியிடுவதையும், அதே நேரத்தில் காப்பகத்தை உருவாக்குவதையும் PARI டெஸ்க் சாத்தியப்படுத்தியிருக்கிறது. திருத்துதல், உண்மை சரிபார்த்தல் மற்றும் தளவமைப்புகளைச் அவர்கள் செய்கின்றனர். தொடக்கத்தில் நிருபர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தொடங்கி, தலையங்கம் தேர்வாகும் இறுதி நிலை வரை இணைந்திருக்கிறார்கள். எந்த வெளியீட்டுப் பணியும் அவர்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. மேலும் பின்னணியில் அவர்கள் நாடிய உள்ளடக்கத்தைப் பெறுவதற்கான சவாலையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!

ஜனவரி 2, 2024 அன்று எங்களின் வழக்கமான வெளியீட்டை, மீண்டும் தொடங்குவோம். அதற்காக அகர்தலாவின் கண்காட்சியின் 'மரணக் கிணறு', பீகாரின் சாப்பா கைவினைஞர்கள், மகாராஷ்டிராவில் வகுப்புவாத காவல், மீரட்டின் இரும்புத் தொழிலாளர்கள் மற்றும் பல கதைகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

வரவிருக்கும் ஆண்டில், அன்றாட மக்களின், அன்றாட வாழ்வின் - சிறப்பாகப் சேகரிக்கப்பட்ட, சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட மற்றும் படமாக்கப்பட்ட, மேலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட,  இன்னும் பல கதைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

நன்றி!

PARI குழு

தமிழில்: அகமது ஷ்யாம்

Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

کے ذریعہ دیگر اسٹوریز Ahamed Shyam