20 கிலோமீட்டர் அவர்கள் நடந்துவிட்டனர். ஆனாலும் வேகத்தை நிறுத்தவில்லை. வேகவேகமாக ஒற்றை வரிசையில் நடந்து கொண்டிருந்தார்கள். முடிந்த மட்டிலும் நன்றாக உடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் இருந்தவற்றிலேயே ஓரளவு நன்றாக இருந்த ஆடைகள் அவைதாம்.. கொராபுட் பகுதியின் மல்காங்கிரி மாவட்டத்தில் நடக்கும் வாரச் சந்தைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். அங்கு சென்று சேர முடியுமா என்பது தெரியவில்லை. உள்ளூர் வணிகர் யாரேனும் அவர்களை வழியிலே பார்த்து அடிமாட்டு விலையில் மொத்தத்தையும் கொள்முதல் செய்யலாம். பிறகும் அவற்றை ஊர் சந்தை வரை அவர்களையே கொண்டு வர அவர் செய்யலாம்.
நான்கு பேரும் கருணையுடன் வேகம் குறைத்து என்னிடம் பேசுவதற்காக நின்றனர். இவர்கள் யாரும் பாரம்பரிய குயவர்கள் இல்லை. அப்பகுதியின் துருவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். பானை செய்வது தங்களின் பாரம்பரிய தொழில் அல்ல என உறுதிபடுத்தினர் என்னிடம் பேசிய மஜியும் நோகுலும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய பயிற்சி பட்டறைகளில் அத்தொழிலை அவர்கள் கற்றுக் கொண்டார்கள். விவசாயம் நன்றாக இல்லாததால் பானை செய்யும் தொழிலை முயன்று பார்க்க அவர்கள் நினைத்தனர். அவர்கள் செய்த பானைகள் எளிமையாக இருந்தாலும் நன்றாக இருந்தன. கலைநயமும் இருந்தது. ஆனால் இந்த தொழிலும் நன்றாக இல்லை என்கின்றனர். “எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பானைகளையும் பக்கெட்டுகளையும்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர்,” என குறைபட்டுக் கொண்டார் நோகுல். இது நடந்தது 1994ம் ஆண்டில். அப்போதிருந்து பிளாஸ்டிக் வெகு வேகமாக, நிலைத்து நிற்கும் தொற்று நோய் போல், பல ரகங்களுடன் பரவியது. குணமாகும் வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.
”ஆமாம்,” என்னும் மஜி, “கடன்காரர் அவர் நிர்ணயிக்கும் குறைந்த விலையில் எங்களின் பொருட்களை வாங்கிக் கொள்வார் என்பது உண்மைதான். என்றாலும் நாங்கள் அவரிடம் வாங்கிய கடனை அடைக்க வேண்டும்,” என்கிறார். பிறகு பானைகளை ஊர் சந்தையில் நல்ல விலைக்கு எந்த உழைப்புமின்றி விற்றுவிடுவார். கூவி விற்கவென அங்கு அவருக்கு வேறு பழங்குடி மக்கள் இருப்பார்கள். ஆனால் பல ஊர்சந்தைகளில் உற்பத்தியாளரே அவரின் பொருட்களை நேரடியாக விற்கின்றனர். வெவ்வேறு கிராமங்கள் அவற்றின் சந்தைகளை வாரத்தின் வெவ்வேறு நாட்களில் வைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு பகுதியின் சந்தையும் வாரத்துக்கு ஒருநாள்தான் நடக்கும். மொத்தமாக எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு சந்தை இருக்கும்.
துருவர்களுக்கு வேறு வகையான பிரச்சினைகளும் உண்டு. அதிகாரப்பூர்வமான இந்திய பட்டியல் பழங்குடிகளின் புள்ளிவிவரமும் ஒடிசாவின் பட்டியல் பழங்குடிக்கான மாநிலப் பட்டியலும் அவர்களின் பெயரை தருவா என்றும் துருபா என்றும் துருவாவின் துர்வா என்றும் குறிப்பிட்டிருக்கின்றன. அவர்களின் பல பள்ளி சான்றிதழ்களிலும் பிற ஆவணங்களிலும் பழங்குடியின் பெயர் துருவா என குறிக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்கள் பலவற்றை அவர்கள் இழக்க நேர்கிறது. அவர்கள் சொல்லும் பெயரில் எந்த பழங்குடி பெயரும் இடம்பெறவில்லை என கீழ் மட்ட அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். அந்த முட்டாள்தனத்தை சரி செய்ய நீண்ட காலம் எடுத்தது.
ஒரு பகுதிக்கான பொருளாதாரத்தின் நுணுக்கமான அலகுதான் ஊர்சந்தை. அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்கள் யாவும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு விற்கப்படும். பரபரப்பாக வண்ணங்களோடும் வாழ்க்கைகளோடும் இயங்கும் சிறு நிலத்தில் எல்லா பரிவர்த்தனைகளும் நடக்கும். எங்களின் உரையாடல் முடிந்தது. அவர்களின் புகைப்படங்கள் எடுத்ததற்காக என்னிடம் நன்றி கூறினர் (அவர்கள் விரும்பும் பாவனைகளில்தான் நிற்க முடியும் என கேட்டுக் கொண்டனர்). நான்கு பேரும் மீண்டும் நடக்கத் தொடங்கினர். அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அழகாக வசீகரமான முன்னோக்கிய நடையுடன் ஒற்றை வரிசையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக சென்று கொண்டிருந்தனர். ஒருவர் தடுமாறினாலும் மொத்த பானைகளும் உடைந்து விடும்.. மல்காங்கிரியில் அந்த அச்சம் எனக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளையாக ஒருபோதும் அப்படி நடந்து பார்த்ததில்லை.
இக்கட்டுரையின் ஒரு சிறு பகுதி முதன்முறையாக இந்து பிஸினஸ்லைனில் செப்டம்பர் 1, 1995-ல் பிரசுரமானது.
தமிழில் : ராஜசங்கீதன்