ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் அழகான வளாகத்தை கொண்டது. எனினும் அந்த வளாகத்தில் ராஜஸ்தானின் பலருக்கு வெறுப்பை தரும் ஒரு விஷயம் இருக்கிறது. ‘மநு,, நீதி வழங்குபவர்’ (அட்டை படத்தை பார்க்கவும்) சிலையை கொண்டிருக்கும் ஒரே நீதிமன்ற வளாகம் இதுதான்.
மநு என்ற தனிநபர் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அச்சிலை ஒரு கலைஞனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது. அது ஒரு குறுகிய கற்பனை என்று நிரூபணம் ஆகிவிட்டது. இங்கே ‘ரிஷி’ என்கிற வார்த்தைக்கு கொடுக்கப்படும் வழக்கமான அர்த்தங்களுக்கு மநு பொருந்தி விடுகிறார்.
புராணத்தில், இப்பெயருடைய ஒருவர் மநு ஸ்மிருதி என்ற நூலை எழுதினார். ஸ்மிருதிகள் என்பது பிராமணர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் சமூகத்தின் மீது திணிக்க முயன்ற நியமங்கள் ஆகும். கடுமையான சாதிய விதிமுறைகள். இவ்வாறு பல ஸ்மிருதிகள் கி.மு 200 முதல் கி.பி. 1000 ஆம் ஆண்டு வரை உருவாக்கப்பட்டன. அவை பல ஆசிரியர்களால் ஒரு நெடிய கால அளவில் உருவாக்கப்பட்டவை. ஒரே வகை குற்றங்களுக்கு சாதி பார்த்து வெவ்வேறு தண்டனைகள் கொடுப்பதால் மநு ஸ்மிருதி பிறவற்றை காட்டிலும் பிரபலமாக விளங்குகிறது.
ஸ்மிருதியில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் உயிர்கள் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக “சூத்திரனை கொலை செய்தால் கிடைக்கும் தண்டனை”யை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நபர் “ஒரு தவளை, ஒரு நாய், ஒரு ஆந்தை அல்லது ஒரு காக்கையை” கொன்றால் என்ன தண்டனையோ அதையே அங்கும் நிர்ணயிக்கிறது. அதிகபட்சமாக, ஒரு “நற்குணம் கொண்ட சூத்திரன்” கொல்லப்பட்டால், ஒரு பிராமணனை கொன்றால் கிடைக்கும் தண்டனையின் 16-ல் ஒரு பங்கை கொடுக்கிறது மனுஸ்மிருதி.
அரிதாக இருந்தாலும் சமத்துவ முறையில் இயங்கும் ஒரு சட்ட முறை பின்பற்றப்பட வேண்டும். நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்த அடக்குமுறை சின்னம் ராஜஸ்தானில் இருக்கும் தலித் மக்களுக்கு கோபத்தை வரவழைக்கிறது. உச்சம் என்னவெனில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவருக்கு அந்த வளாகத்தில் இடம் அளிக்கப்படவில்லை. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை தெருமுனையில் நிறுவப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு வரும் அனைவரையும் மநுவே எதிர்கொள்கிறான்.
ராஜஸ்தான் மாநிலம் மநுவின் லட்சியங்களுக்கு ஏற்ப செயல்படுகிறது. அம்மாநிலத்தில், சராசரியாக ஒவ்வொரு 60 மணி நேரத்திற்கும் ஒரு தலித் பெண் வன்புணரப்படுகிறார். ஒவ்வொரு ஒன்பது நாட்களுக்கு ஒரு முறையும் ஒரு தலித் கொல்லப்படுகிறார். ஒவ்வொரு 65 மணி நேரத்திற்கு ஒரு முறை, தலித் சமூகத்தை சேர்ந்தவர் கடுமையான காயங்கள் ஏற்படுத்தும் வகையில் தாக்கப்படுகிறார். ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு தலித்தின் வீடு அல்லது உடைமைக்கு தீ வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை ‘மற்ற ஐ.பி.சி’ (இந்திய தண்டனை சட்டத்தின்) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது, கொலை, கற்பழிப்பு, தீ காயம் மற்றும் கடும் தாக்குதல் அல்லாத வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
தவறு இழைத்தவர்களுக்கு அரிதாகவே தண்டனை கிடைக்கிறது. அதுவும் 2 முதல் 3 சதவிகிதம் மட்டுமே உள்ளது. மேலும், தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நீதிமன்ற அறைகளுக்கு கூட கொண்டு செல்லப்படுவதில்லை.
எண்ணற்ற புகார்கள் வெறும் இறுதி அறிக்கைகளாக மட்டுமே முடித்து வைக்கப்படுகிறது. உண்மையான தீவிரமான பல வழக்குகள் அவசர அவசரமாக முடித்து வைக்கப்படுகின்றன.
“பிரச்சனை கிராமத்திலேயே தொடங்குகிறது”, என்கிறார் பன்வாரி தேவி. அவருடைய மகள் அஜ்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வல்லுறவு செய்யப்பட்டார். “கிராமத்தில் உள்ளவர்கள் சாதி பஞ்சாயத்து நடத்துகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை தாக்குதல் நடத்தியவர்களுடன் சமரசம் செய்ய சொல்கிறார்கள். ’ஏன் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும்? நாங்களே எங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கின்றோம்’ என்கிறார்கள்”
பொதுவாக அங்கு தீர்வு என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் அடக்குமுறையாளர்களுக்கு பணிந்து போவதாகும். காவல்துறையினரிடம் செல்வதிலிருந்து பன்வாரி தடுக்கப்பட்டார்.
எந்த ஒரு வழக்கிலும் தலித் அல்லது ஆதிவாசி ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைவது தானாகவே ஆபத்தை உருவாக்குகிறது. அவர்கள் அங்கு சென்றால் என்னவாகும்? கும்பர் கிராமத்தில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தில், சுமார் 20 குரல்கள் ஒரே நேரத்தில் பதில் தந்தன: “இருநூற்று இருபது ரூபாய் நுழைவு கட்டணம்,” என்கின்றனர். “உங்கள் புகாரை நகர்த்த அவர்களுக்கு பல மடங்கு தொகை கொடுக்க வேண்டி வரும்.”
ஒரு உயர் சாதி நபர் தலித் ஒருவரை தாக்கினால், காவல்துறை பாதிக்கப்பட்ட நபரை புகார் அளிக்க விடுவதில்லை. “அவர்கள் எங்களை கேள்வி கேட்பார்கள்”, என்றார் ஹரி ராம், “ஒரு தந்தை மகனை அடிப்பதில்லையா? ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை அடிப்பதில்லையா? அதுபோல் ஏன் கடந்து செல்லக் கூடாது?”
“மற்றொரு பிரச்சனை உள்ளது,” என்கிறார் ராம் கிலாடி, சிரித்துக்கொண்டே. “காவல்துறையினர் அடுத்த தரப்பினரிடமும் பணம் பெறுகின்றனர்.” அவர்கள் அதிகமான தொகையை வழங்கினால், எங்கள் கதை முடிந்தது. எங்கள் மக்கள் ஏழைகள். அவர்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.” எனவே நீங்கள் 2000 முதல் 5000 ரூபாய் வரை செலவழித்தாலும் பயனில்லை.
அடுத்ததாக, விசாரணை நடத்த வரும் காவல்துறையினர் புகார் அளித்த நபரையே கைது செய்யக்கூடும். இத்தகைய சூழல் உயர் சாதியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக ஒரு தலித் புகார் அளித்தால் உண்டாகும். பெரும்பாலும், ஆதிக்க சாதியை சேர்ந்தவரே கான்ஸ்டபிள் ஆக இருப்பார்.
“உயர்சாதியினர் என்னை தாக்கிய போது, காவல்துறை துணை காவல் ஆய்வாளர் என் வீட்டு கதவுக்கு வெளியே நின்றிருந்தார்” என்கிறார் அஜ்மரில் இருக்கும் பன்வாரி. “அந்த அதிகாரி எல்லா நேரமும் குடித்துக்கொண்டும் யாதவ் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார். என்னிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். மற்றொரு முறை எனது கணவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார். நான் காவல் நிலையத்திற்கு தனியாக சென்றிருந்தேன். அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலே என்னை மோசமாக பேசினர்: ‘நீ எப்படி இங்கு தனியாக வந்தாய், நீ ஒரு பெண் (மற்றும் ஒரு தலித்)?’ என்றனர். அவர்கள் சீற்றம் அடைந்து விட்டனர்”.
கும்ஹரில், சுன்னி லால் ஜாதவ் இவ்வாறு கூறுகிறார்: “சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் அனைத்து நீதிபதிகளும் ஒரு தனி போலீஸ் கான்ஸ்டபிளிடம் கொண்டிருக்கும் அதிகாரத்துக்கு சமம் கிடையாது.”
“அந்த கான்ஸ்டபிள் எங்களை மாற்றுவார் அல்லது நொறுக்குவார் . நீதிபதிகளால் சட்டத்தை திருத்த முடியாது. அவர்கள் நன்கு கற்று தேர்ந்த வழக்கறிஞர்களிடம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிய வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரி இங்கு தன் சொந்த சட்டங்களை உருவாக்குகிறார்.”
அதிகமாக முயன்ற பின், ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், பல புதிய பிரச்சினைகள் உருவாகும். அது “நுழைவு கட்டணம்” மற்றும் பிற கட்டணங்களை தவிர்த்த பிரச்சினைகளாகும். காவல்துறையினர் சாட்சியங்களின் வாக்குமூலங்களை பதிவு செய்வதை தாமதமாக்குவர். மேலும் பன்வாரி, “அவர்கள் வேண்டுமென்றே தவறிழைத்தவர்களில் சிலரை கைது செய்ய மறுக்கின்றனர்,” என்கிறார். அவர்கள் ’தலைமறைவானவர்’களாக அறிவிக்கப்பட்டவர்கள். பின்னர் காவல்துறையினரே அவர்கள் இல்லாமல் வழக்கு தொடர முடியாது என முறையிடுகின்றனர்.
பல கிராமங்களில், “தலைமறைவானவர்கள்” மிகவும் சுதந்திரமாக செல்லும் நிகழ்வுகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இதுவும், சாட்சியங்களின் அறிக்கைகளை பெறுவதில் இருக்கும் செயலற்ற தன்மையும் அபாயகரமான தாமதங்களுக்கு வழிவகுக்கிறது.
தாக்கியவர்கள் தயவிலேயே தலித் மக்களை இது இருக்கச் செய்கிறது. பெரும்பாலும் தங்கள் வழக்குகளை சமரசம் செய்துகொள்ள வலியுறுத்துகிறது. நக்சோடாவில் உள்ள தொல்பூர் மாவட்டத்தில், ராமேஸ்வர் ஜாதவ் உயர்சாதியினரால் தனித்துவமான முறையில் சித்திரவதைக்கு ஆளானார். அவரது மூக்கில் துளையிட்டு, அதில் 2 மி.மீ தடிமனும் ஒரு மீட்டர் நீளமுமுள்ள இரண்டு சணல் கயிறுகளை வளையமாக மாட்டினர். அந்த வளையத்தோடு அவரை கிராமத்தை சுற்றி இழுத்துச் சென்றனர்.
இவ்வழக்கில் ஊடக வெளிச்சம் கிடைத்த போதும், ராமேஸ்வரின் தந்தையான மங்கி லால் உள்ளிட்டோரும் கொடுத்த சாட்சிக்கு விரோதமாகினர். ஆம், குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவரே விடுவித்து விட்டார்.
என்ன காரணம்? “நாங்கள் இந்த கிராமத்தில் வாழ வேண்டும்,” என்கிறார் மங்கி லால். “யார் எங்களை பாதுகாப்பது? நாங்கள் அச்சத்திலேயே இறந்துவிடுவோம்”
தலித் சமூகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பன்வார் பாக்ரி ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் என்னிடம், ““எந்த வன்கொடுமை வழக்கானாலும் மிக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் தாமதமானால், குற்றத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டப்படலாம். அவர்கள் பிறழ்சாட்சியாக மாறலாம்,” என்றார்.
சாட்சியங்களை பாதுகாக்கும் செயல்முறை எதுவும் இல்லை. தாமதமானால், ஏற்கனவே உள்ள ஆதாரங்களை கிராமத்தில் இருக்கும் உயர்சாதியினர் காவல்துறையுடன் சேர்ந்து கலைத்துவிடுவர்.
வழக்கு துவங்கப்பட்டு விட்டால், வழக்கறிஞர்களின் பிரச்சனை ஏற்படும். “எல்லா வழக்கறிஞர்களும் ஆபத்தானவர்கள்,” என்கிறார் சுன்னி லால் ஜாதவ். “உங்கள் எதிரிகளிடம் பேரம் நடத்தும் ஒருவரிடம் நீங்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. அவனுக்கு எதிர் தரப்பு பணம் கொடுத்துவிட்டால், உங்கள் கதை முடிந்தது.”
செலவுகள் ஒரு பெரிய பிரச்சனை. “ஒரு சட்ட உதவி திட்டம் உள்ளது. ஆனால், அது மிகவும் சிக்கலானது,” என்கிறார் வக்கீல் சேத்தன் பைரவா. குறைந்த எண்ணிக்கையில் தலித்கள் இருக்கும் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்திலிருந்து. “அந்த படிவங்களில் உங்கள் ஆண்டு வருமானம் உள்ளிட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். தினக் கூலி மற்றும் வாரச் சம்பளம் பெறும் பல தலித்களுக்கு அது குழப்பத்தை உண்டாக்குகிறது. மேலும், அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் குறைவாகவே உள்ளதால், பலருக்கு நிதி உதவி இருப்பது கூட தெரியாது.”
அத்தகைய தலித்களுக்கான சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் குறைவாகவே இருப்பது பெரிதும் உதவுவதில்லை. ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் சுமார் 1200 நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் வெறும் எட்டு பேர் மட்டுமே தலித்கள்.
ராஜஸ்தானில் பல தலித் நீதித்துறை அலுவலர்கள் மற்றும் முன்சீப்களும் உள்ளனர். ஆனாலும் பயனில்லை என்கிறார் கும்பரில் உள்ள சுன்னி லால். “அவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். கவனிக்கப்படவும் அவர்கள் விரும்புவதில்லை.”
ஒரு வழக்கு நீதிமன்றத்தை அடைந்தால், அங்குள்ள குமாஸ்தா அதை கவனித்துக்கொள்வார். “அவருக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்றால், உங்களுடைய நாட்கள் நரகமாகிவிடும்,” என்ற சொல்லாடலை நான் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும், “மொத்த அமைப்பும் நிலப்பிரபுத்துவமானது,” என்கிறார் சுன்னி லால். “அதனால் தான் குமாஸ்தாவுக்கும் தனது பங்கு கிடைத்திட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பல குற்றவியல் நடுவர் நீதிமன்ற அலுவலர்கள் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்கின்றனர். அதற்கான செலவை குமாஸ்தா ஏற்றுக்கொள்கிறார். இது குறித்து எழுதும் பத்திரிகையாளர்களிடம் நான் இந்த விஷயத்தை அம்பலப்படுத்தினேன்.”
கடைசியாக, குற்றத்திற்கான தண்டனை மிகவும் குறைவாகவே கொடுக்கப்படுகிறது. ஆனால், இவற்றோடு பிரச்சினை முடிந்துவிடுவதில்லை.
“உங்களால் ஒரு நல்ல தீர்ப்பை வழங்க முடியும்,” என்கிறார் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ப்ரேம் கிருஷ்ணா. “பிறகு அதை நடைமுறைக்கு கொண்டு வரும் அதிகாரிகளின் அணுகுமுறை மிக மோசமாக இருப்பதை காண முடியும்.” ராஜஸ்தானின் சிவில் உரிமைக்கான மக்கள் சங்கத்தின் தலைவராகவும் ப்ரேம் கிருஷ்ணா இருக்கிறார். “பட்டியல் சாதிகளை பொறுத்தவரை பொருளாதார இயலாமையும் அரசியல் ஒருங்கிணவின்மையும் இருக்கின்றன. தலித் தலையாரிகள் கூட இத்தகைய நீதி அமைப்பில் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.”
ரஹோலியில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தலித் தலையாரி, அஞ்சு புல்வாரியா என்பவர், பல்லாயிரம் ரூபாய்களை தனது வழக்குக்காக செலவழித்து நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறார். “நாங்கள் எங்கள் பெண் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டோம்.” தலித் உடைமைகளை சேதப்படுத்த மாணவர்களை தூண்டும் ஆசிரியர்கள் கொண்ட அதே பள்ளி.
நக்சோடாவில், மங்கி லால் என்பவர், அவர் மற்றும் அவரது மகன் இருவரது மூக்குகளும் துளைக்கப்பட்ட வழக்கில் 30,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை செலவழித்து, முடிவில் வழக்கை கைவிட்டு விட்டனர். அவரது குடும்பம் கொண்டிருந்த சொற்பமான நிலத்தில், மூன்றில் ஒரு பகுதியை விற்று வழக்குக்கான செலவை செய்தனர்..
ராஜஸ்தானின் புதிய முதலமைச்சரான அசோக் கெலாத், இவற்றில் சிலவற்றை மாற்ற முனைப்புடன் இருப்பதை போல் தெரிகிறது. இறுதி அறிக்கைகள் அல்லது முடிவுற்ற வழக்குகளை பற்றி தோராயமான கணக்கெடுப்பை நடத்தும் எண்ணத்தில் அவரின் அரசாங்கம் இருப்பதாக சொல்கிறார். திட்டமிட்ட இருட்டடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், “வழக்கு விசாரணையை முடக்கக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என என்னிடம் ஜெய்ப்பூரில் அவர் கூறினார். “தவறாக தலித்கள் தலையாரி போன்ற பொறுப்புகளிலிருந்து நீக்கப்படாமல் இருக்கும் வகையில் பஞ்சாயத்து விதிகளில் திருத்தம்” கொண்டு வரவிருக்கிறார் கெலாத்.
அஞ்சு புல்வாரியா உள்ளிட்ட ஒரு சில தலையாரிகள்,, உண்மையாகவே பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் பாதிக்கப்பட்டனர். அந்த செயல்முறையை சரிசெய்வதன் மூலம், கெலாத்தால் அரசியல் லாபம் மட்டுமே அடைய முடியும். ஆனால், அவருக்கு முன் ஒரு மிகப்பெரிய, கடினமான பணி ஒன்று உள்ளது. அமைப்பின் நம்பகத்தன்மை இந்தளவுக்கு குறைவாக எப்போதும் இருந்ததில்லை.
“எங்களுக்கு சட்டம் மற்றும் நீதித்துறையின் செயல்முறைகள் மீது சிறு அளவு கூட நம்பிக்கை இல்லை,” என்கிறார் ராம் கிலாடி. “சட்டம் பெரிய மனிதர்களுக்கானது என்று எங்களுக்கு தெரியும்.”
அனைத்திற்கும் மேலாக, இது ராஜஸ்தான். இங்குள்ள நீதிமன்றத்தில் மநுவின் நிழல் பரவிக் கிடக்கிறது. அம்பேத்கர் இங்கு ஒரு வெளியாளாக பார்க்கப்படுகிறார்.
இந்த இரு பாக கட்டுரையில் வரும் 1991-96ம் ஆண்டுக்கான குற்றத்தரவுகள், 1998 ஆம் ஆண்டுக்கான ராஜஸ்தானின் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கையில் இருந்தவை ஆகும். அதற்கு பின்னர் இந்த கணக்கு இன்னும் மோசமடைந்திருக்கிறது.
இந்த இரு பாக கட்டுரை முதலில் தி இந்துவில் ஜூன் 13, 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மனித உரிமைக்கான சர்வதேச பொது மன்னிப்பு சபையின் மனித உரிமைகளுக்கான முதல் உலகளாவிய விருதை வென்றது, 2000 ஆம் ஆண்டிலிருந்து அந்த விருது வழங்க துவங்கப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்