அகச்சிக்கல் மற்றும் உடல் நல குறைபாடு கொண்ட சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் கூட பாலியல் வன்முறை இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பேசுவதில் இருக்கும் தடைகளும் யாரையேனும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் காரணங்களாக இருக்கின்றன. மனநலப் பிரச்சினை கொண்ட 21 வயது கஜ்ரி போன்றோர் புகார்கள் அளித்தாலும் கூட, சட்ட முறைகளே தண்டனையாக மாறுகின்றன. 2010ம் ஆண்டில் கஜ்ரி கடத்தப்பட்டார். கடத்தல், பாலியல் வல்லுறவு, குழந்தைத் தொழிலாளர் பணி ஆகியவற்றால் 10 வருடங்கள் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தந்தை சொல்கையில், “காவல்துறை வாக்குமூலங்கள், பரிசோதனைகள் போன்றவற்றை கஜ்ரிக்காக செய்ய அதிக விடுப்புகள் தேவைப்படுவதால், ஒரு வேலையில் நீடிப்பது சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து விடுப்புகள் கேட்டால் வேலை போய்விடும்,” என்கிறார்.
பண்டைய இந்தியாவில் இருந்த பிராமண ஆணாதிக்க முறை என்கிற கட்டுரையில் பேராசிரியர் உமா சக்கரவர்த்தி, “கட்டுபடுத்துவதற்கான சரியான அமைப்புமுறையை உருவாக்கி பெண்களை தொடர்ந்து காப்பதற்கான வெறி” இருந்ததாக எழுதுகிறார். இந்தக் கட்டுப்பாடு, ஆணாதிக்க முறைகளுக்கு ஒத்துப் போகும் பெண்களுக்கு முன்னேற்றங்களையும் மறுக்கும் பெண்களுக்கு அவமதிப்புகளையும் வழங்கியது. பெண்களின் இயக்கத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் இந்த விதிகள், பெரும்பாலும் பெண் பாலினம் மற்றும் அவர்களின் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றின்பால் கொண்டிருக்கும் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. “முன்பு ஊருக்குள் கர்ப்பிணியை நான் பார்க்கச் சென்றாலும் அல்லது கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக இருந்தாலும். அவர்கள் (கணவர் வீட்டார்), வேறு ஆண்களை நான் சந்திக்க செல்வதாக கூறுவார்கள். சுகாதார செயற்பாட்டாளராக அது என் கடமை ஆகும்,” என்கிறார் 30 வயது கிரிஜா. உத்தரப்பிரதேச மஹோபா மாவட்டத்தில் வசிக்கும் கிரிஜா, அவரது வேலையை விட வேண்டுமென கணவர் வீட்டாரால் வற்புறுத்தப்படுகிறார். “நேற்று என் கணவரின் தாத்தா லத்தியை கொண்டு என்னை தாக்கி, கழுத்தை நெரிக்க முயன்றார்,” என்கிறார் அவர்.
பெண்கள் தங்களுக்கான ஊதிய வேலைகள் ஒருவழியாக கண்டறிந்த பிறகு, பணியிட அச்சுறுத்தல் அடுத்த சிக்கலாக வந்தது. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருக்கும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பின்படி, 17 சதவிகித பெண்கள் பணியிடத்தில் பாலியல் அச்சுறுத்தல் நேர்வதாக சொல்லியிருக்கின்றனர். “ஆண் மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், பழுது நீக்குபவர்கள் போன்றோர் எங்களை தொட முயலுவார்கள். நாங்கள் புகாரளிக்கவென எவரும் இருக்க மாட்டார்,” என்கிறார் ஜவுளி ஆலையில் பணிபுரியும் லதா. (வாசிக்க: திண்டுக்கலில் தலித் பெண்கள் ஒன்றுபட்டபோது). பெண் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை பெறுவதற்கான அதிகாரம் பெறவென விஷாகா விதிமுறைகள் (1997) உள் புகார் குழுவை பரிந்துரைத்திருக்கிறது. அக்குழுவுக்கு ஒரு பெண் தலைவராக இருக்க வேண்டும். குழுவின் உறுப்பினர்களில் பாதிக்கு மேல் பெண்களாக இருக்க வேண்டும். இத்தகைய வழிகாட்டுதல்கள் இருந்தும், அவற்றை நடைமுறைப்படுத்துவது குறைவாகதான் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை வீட்டிலும் பணியிடத்திலும் தொடர்கிறது.