ஹேமந்த் கவாலே, தனது பெயருக்கு முன், ஒரு அடைமொழியை சேர்க்க வலியுறுத்துகிறார்.

"நான் படித்தவன், வேலையில்லாதவன், மற்றும் திருமணமாகாதவன்," என்று இந்த 30 வயது இளைஞர், தனது மணமாகாத நிலை மற்றும் அவரது பிற இளம் விவசாய சகோதரர்களை பற்றியும் தானே எண்ணி சிரிக்கிறார்.

சு-ஷிக்ஷித். பெரோஜ்கர். அவிவாஹித். ” அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கூறுகிறார். மேலும் அவரது சிறிய பான் கியோஸ்கில் அவரைச் சுற்றியுள்ள 30 வயதுக்குட்பட்ட அவரது மற்ற நண்பர்களும், தங்களது கட்டாய பிரம்மச்சாரியம் பற்றிய கோபத்தையும் சங்கடத்தையும் மறைத்துக் கொண்டு சிரிக்கின்றனர். தனக்கும் பொருந்தும் என்பது போன்ற நிலை அது.

"அதுதான் எங்களின் முக்கிய பிரச்சினை,” என்கிறார் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கவாலே.

மகாராஷ்டிராவின் விவசாயத் தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பகுதியான, யவத்மால்-தர்வா சாலையில் உள்ள, பருத்திக்கு பெயர் போன விதர்பாவில் உள்ள செலோடி கிராமத்தில் நாங்கள் இருக்கிறோம். இவ்விடம், நீண்ட காலமாக விவசாய நெருக்கடி மற்றும் அதிக பேரின் இடம்பெயர்வுக்கு ஆளாகியுள்ளது. கிராமத்தின் பிரதான சதுக்கத்தில், கவாலே இயக்கும் கியோஸ்கின் நிழலில், இவ்விளைஞர்கள் குழு தங்கள் நேரத்தை போக்குகிறது. அவர்கள் யாவரும் பட்டதாரிகள் அல்லது முதுகலைப் பட்டதாரிகள் ஆவர். அவர்கள் அனைவரின் பெயரிலும் விவசாய நிலம் உள்ளது. அவர்கள் அனைவரும் வேலையில்லாதவர்கள். அவர்கள் அனைவரும் மணமாகாதவர்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் புனே, மும்பை, நாக்பூர் அல்லது அமராவதி போன்ற தொலைதூர நகரங்களில், குறைந்த சம்பளத்தில் சிறிது காலம் வேலை செய்துள்ளனர். மாநில அல்லது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அல்லது பிற வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி, தோல்வியடைந்துள்ளனர்.

இந்தப் பகுதியிலும் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான இளைஞர்களைப் போலவே, கவாலேயும் தனக்கு வேலை கிடைக்க சிறந்த கல்வி தேவை என்று எண்ணியுள்ளார்.

ஆனால், இப்போதோ மணப்பெண்ணைப் பெற, ஒரு நிரந்தர அரசு வேலை வேண்டும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

வேலைகள் குறைவாக இருந்ததாலும், வெகு தூரத்தில் இருந்ததாலும், கவாலே கிராமத்தில் உள்ள தனது குடும்ப பண்ணையில் ஒரு சிறிய கடை போட்டு, வியாபாரம் நடத்தி வருகிறார்.

"நான் ஒரு பான் கியோஸ்க் வைக்க முடிவு செய்தேன். மற்றும் ஒரு நண்பரிடம் ரஸ்வந்தி [கரும்புச் சாறு கடை] நடத்தச் சொன்னேன். மற்றொரு நண்பரை இங்கே ஒரு சிற்றுண்டி கடை வைக்கச் சொன்னேன். அதனால் எங்களுக்கு கொஞ்சம் வியாபாரம் நடக்கும்," என்று புத்திசாலியான கவாலே கூறுகிறார். "புனேவில் ஒரு முழு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக, எனது கிராமத்தில் அரை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது," என்று அவர் கூறுகிறார்.

PHOTO • Jaideep Hardikar

போட்டித் தேர்வுகளையும் புனே மற்றும் பிற நகரங்களின் ஆலைப்பணிகளையும் முயன்று பார்த்து விட்டு, ஹேமந்த் கவாலே (வலது) யாவத்மால் தர்வாவிலுள்ள சொந்த ஊர் செலோடிக்கு திரும்பி ஒரு பான் கடை போட்டிருக்கிறார். அவரும் அவருடைய நண்பர் அங்குஷ் கன்கிராடும் (இடது) வாழ்க்கையை ஓட்ட விவசாயமும் பார்க்கின்றனர். முன்னவர் முதுகலை படித்திருக்க, அடுத்தவர் விவசாயத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்

பல ஆண்டுகளாக பொருளாதார பிரச்சினை மற்றும் நெருக்கடியில் இருந்து, கிராமப்புற மகாராஷ்டிராவின் இளைஞர்கள், தொலைநோக்கு விளைவுகளுடன் ஒரு புதிய சமூக பிரச்சனையில் சிக்கியுள்ளனர். அது தாமதமாகும் அவர்களின் திருமணம் அல்லது கட்டாய பிரம்மச்சாரியம் மற்றும் தவிர்க்க முடியாத அவர்களது தனிமையான வாழ்க்கை.

“என் அம்மாவிற்கு எப்போதும் என் திருமணம் பற்றிய கவலை தான்," என்கிறார் 2.5 ஏக்கர் நிலவுரிமையாளரும் விவசாயத்தில் பிஎஸ்சி பட்டமும் பெற்றுள்ள கவாலேயின் நெருங்கிய நண்பரான, 31 வயது அங்குஷ் கன்கிராட். “வயதாகிக் கொண்டே போகும் நிலையில் நான் எப்படி தனிமையில் இருக்க முடியும் என்று அவர் நினைக்கிறார்," என்று அவர் கூறுகிறார். மேலும், தான் திருமணம் செய்ய விரும்பினாலும், தனது குறைந்த வருமானத்தை காரணம் கூறி திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.

இந்த பகுதிகளில், திருமணம் ஒரு முக்கியமான சமூக நெறி என்று ஒவ்வொருவரும் பாரியிடம் வெவ்வேறு வழிகளில் கூறுகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய, கோண்டியாவின் கிழக்கு முனையிலிருந்து மேற்கு மகாராஷ்டிராவின் ஒப்பீட்டளவில் செழிப்பான பகுதி வரை, திருமண வயதைக் கடந்த இளைஞர்களை - ஆண்களையும் பெண்களையும் - பார்க்க முடிகிறது.

பெருநகரங்கள் அல்லது தொழில்துறை மையங்களில் உள்ள, தன் வயதொத்த நன்கு படித்தவர்கள் போலல்லாமல், சமூக மற்றும் தகவல்தொடர்பு திறன்களின் இவர்கள் சற்று பின் தங்கியுள்ளனர்.

ஏப்ரல் 2024 ஆரம்பத்தில் தொடங்கி ஒரு மாத காலம், மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில், தங்களுக்குப் பொருத்தமான ஜோடியை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றம், பீதி, மற்றும் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும், படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களை பாரி சந்தித்து பேட்டி கண்டது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) இணைந்து வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 -ன் படி, இந்தியாவில் உள்ள வேலையற்ற மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 83 சதவீதம் பேர் படித்த இளைஞர்கள். மொத்த வேலையில்லாத இளைஞர்களில் குறைந்த பட்சம் இடைநிலைக் கல்வி பெற்ற இளைஞர்களின் விகிதம், 2000-ல் 35.2 சதவீதத்திலிருந்து, 2022-ல் 65.7 சதவீதமாக, இரு மடங்கு அதிகரித்துள்ளது.

“(கோவிட்-19) தொற்றுநோய் காரணமாக 2019க்குப் பிறகு, விவசாயத்திலிருந்து விலகி விவசாயம் அல்லாத துறைகளுக்குத் சென்ற தொழிலாளர்கள், மீண்டும் விவசாயம் நோக்கி திரும்பியவுடன், விவசாய வேலை வாய்ப்புகள் அதிகரித்ததோடு, விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது," என்று அந்த 342-பக்க அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது பெரும்பாலும் சுயதொழில் மற்றும் சாதாரண வேலைகள் என்று ILO அறிக்கை மேலும் கூறுகிறது. "கிட்டத்தட்ட 82 சதவீத பணியாளர்கள் முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் முறைசாரா வேலையில் உள்ளனர்," என்று அது கூறுகிறது. அதாவது, ஒரு பான் கியோஸ்க், ரஸ்வந்தி மற்றும் டீக்கடை நடத்தும், செலோடியின் இளைஞர்கள் செய்யும் வேலைகள் போன்றவை.

"2019 முதல் வளரும் வேலைவாய்ப்பு தன்மையின் காரணமாக, முறைசாரா துறை மற்றும்/அல்லது முறைசாரா வேலைவாய்ப்பில் உள்ள மொத்த வேலைவாய்ப்பின் பங்கு அதிகரித்துள்ளது." சாதாரண தொழிலாளர்களின் ஊதியம் 2012-22 இல், மிதமாக உயரும் போக்கில் இருந்தாலும், வழக்கமான தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் உயராமல் தேங்கியும் குறைந்ததும் இருந்தது. சுயதொழில் செய்பவர்களின் உண்மையான வருமானமும் 2019க்குப் பிறகு குறைந்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்தமாக, ஊதியம் குறைவாகவே உள்ளது. அகில இந்திய அளவில் 62 சதவீத சாதாரண விவசாயத் தொழிலாளர்களும், கட்டுமானத் துறையில் 70 சதவீதத் தொழிலாளர்களும், 2022ல் நிர்ணயிக்கப்பட்ட தினசரி குறைந்தபட்ச ஊதியத்தையும் பெறவில்லை.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: ராமேஷ்வர் கன்கிராட் ஒரு கரும்புச் சாறு கடையை பான் கடைக்கு அருகே போட்டிருக்கிறார். அவரது நண்பர்களிலேயே அவர்தான் இளையவர். விவசாயத்திலிருந்து குறைவான வருமானம் வருவதால், மணம் முடித்துக் கொள்ளவும் குடும்பம் உருவாக்கவும் அவர் விரும்பவில்லை. வலது: கரும்புச்சாறு இயந்திரத்தை இயக்கும் ராமேஷ்வர். கவாலேவும் (கட்டம் போட்ட சட்டை) அங்குஷ் கன்கிராடும் (பழுப்பு டி ஷர்ட்) அவருக்கு பின்னால் நிற்கின்றனர்

*****

களத்தில் நிலை இன்னும் மோசம்.

மணப்பெண்களைக் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் சவாலாக இருந்தாலும், கிராமப்புறங்களில் இருந்து படித்த இளம் பெண்களுக்கு, நிலையான வேலையுடன் பொருத்தமான மணமகனைக் கண்டுபிடிப்பதும் சமமாக, சவாலாக உள்ளது.

செலோடியில் உள்ள BA பட்டம் பெற்ற ஒரு இளம் பெண் (தன் பெயரைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை மற்றும் தனக்காக மணமகனிடம் தன் எதிர்பார்ப்பு குறித்த விருப்பத்தை விளக்கவும் தயங்குகிறார்) கூறுகையில்: “நான் ஒரு நகரத்தில் வாழ்வதையும், விவசாயத்தில் சிக்கித் தவிக்காமல், நிலையான வேலையில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்வதையும் விரும்புகிறேன்,” என்கிறார்.

தங்கள் சமூகத்தில், நகரங்களில் நிலையான அரசாங்க வேலைகளுடன் மாப்பிள்ளைகளைத் தேடும் மற்ற கிராமத்துப் பெண்களின் அனுபவத்தின் மூலம் அது எளிதானது அல்ல என்பதை அறிவதாக அவர் கூறுகிறார்.

இது அனைத்து சாதிகள் மற்றும் வகுப்புகளுக்கும் பொருந்துகிறது. அதிலும் குறிப்பாக உயர்-சாதி OBCகள் அல்லது பிராந்தியங்களில் பேராதிக்கம் செலுத்தும் சமூகங்களான மராட்டியர்களுக்கும் இதே நிலை தான்.

வேலையில்லாத் திண்டாட்டம் புதிதல்ல. ஆனால வேலை கிடைக்காத தன்மை கொண்டிருப்பது அல்லது தாமதமான திருமணங்கள் இக்காலத்தில், ஒரு சமூகப் பிரச்சனையாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று மூத்த விவசாயிகள் கூறுகிறார்கள்.

"தரகு வேலை பார்ப்பவர்களும், இப்போது அந்த வேலையை விட்டுவிட்டனர்," என்கிறார் செலோடியில் உள்ள மூத்த விவசாயி பகவந்த கன்கிராட். பொருத்தமான ஜோடிகள் கிடைக்காததால், அவருடைய இரண்டு மருமகன்கள் மற்றும் ஒரு மருமகள் திருமணமாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும், பல ஆண்டுகளாக, அவர் தனது சமூகத்தில் ஜோடி பார்த்து சேர்த்து வைத்துள்ளார். ஆனால தற்போது திருமணமான இளைஞர்களுக்கு மணமகன்கள் மற்றும் மணமகள்களைக் கண்டுபிடிக்க திணறுகிறார்.

"நான் குடும்ப திருமணங்களுக்குச் செல்வதையே நிறுத்திவிட்டேன்," என்று கூறும் 32 வயது யோகேஷ் ராவுத் பத்து ஏக்கர் பாசனப் பண்ணையைக் கொண்ட, முதுகலைப் பட்டதாரி ஆவார். ”ஏனெனில், நான் செல்லும் ஒவ்வொரு முறையும், எனக்கு எப்போது திருமணம் என்று அனைவரும் என்னிடம் கேட்கின்றனர்,” என்று அவர் கூறுகிறார். "இது அசௌகரியமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது."

வீட்டிலும் பெற்றோர்கள் இது குறித்து கவலையில் உள்ளனர். ஆனால் ராவுத் கூறுகையில், தனக்கு மணமகள் கிடைத்தாலும், திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் இவ்வளவு குறைவான வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது கடினம் என்றும் கூறுகிறார்.

"பண்ணை வருமானத்தை தக்கவைப்பது சுலபமில்லை," என்று அவர் கூறுகிறார். இதனாலேயே கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், தங்கள் பெண் குழந்தைகளை, விவசாய வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும், அல்லது கிராமங்களில் வசிக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதை விரும்புவதில்லை. நிலையான அரசு வேலைகள், அல்லது தனியார் வேலைகள் அல்லது நகரங்களில் சுயதொழில் செய்யும் ஆண்களுக்கு தான் இங்கு முன்னுரிமை.

பிரச்சனை என்னவென்றால், நிலையான வேலைகள் குறைவாகவும், தூரத்திலும் உள்ளன என்பதுதான். அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: ‘நிலையான வருமானம் இல்லையெனில் குடும்பத்தை உருவாக்க முடியாது,’ என்கிறார் விவசாயியான யோகேஷ் ராவுத். எப்போது திருமணம் ஆகிறது என்கிற கேள்வியை தவிர்க்க, அவர் திருமண விழாக்களுக்கு செல்வதையே நிறுத்தி விட்டார். ஹேமந்தும் அங்குஷும் பான் கடையை பார்த்துக் கொள்கின்றனர்

நீண்ட காலமாக தண்ணீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியான, மராத்வாடாவில்,  ஆண்கள் மணப்பெண்களைத் தேடுவதைக் கைவிட்டுவிட்டனர், அப்படியே திருமணம் செய்து கொள்ள விரும்பினால், வேலை, தண்ணீர், அல்லது இரண்டும் கிடைக்கும் நகரங்களுக்கு மாறிவிடுகின்றனர், என்பதை பாரி, பல பேட்டிகள் மூலம் அறிந்துள்ளது.

நிலையான வருமானம் கிடைப்பது கடினம். அதிலும் கோடைக்காலத்தில், விவசாயத்திற்கு வெளியே, அர்த்தமுள்ள வேலைவாய்ப்பு என்று எதுவுமே இல்லை.

"கோடையில், பண்ணை வேலைகள் எதுவும் இருக்காது," என்று கிராமத்தில் பத்து ஏக்கர் மானாவாரி பண்ணை வைத்திருக்கும் கவாலே கூறுகிறார். இருப்பினும் அவரது நண்பர்கள் சிலர், கிணறுகள் அல்லது ஆழ்துளை கிணறுகள் மூலம் தங்கள் பண்ணையில், வெண்டைக்காய் போன்ற பருவகால காய்கறிகளை பயிர் செய்கிறார்கள். ஆனால் அதுவும் லாபகரமாக  இல்லை.

“நான் அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறேன். என் பண்ணையில் இருந்து வெண்டைக்காயைப் பறித்து எடுத்துக்கொண்டு, 20 கிலோகிராம் கொண்ட ஒரு மூட்டையை 150 ரூபாய்க்கு விற்க தர்வாவுக்குச் செல்வேன்,” என்று 8 ஏக்கர் பண்ணையின் உரிமையாளரும், இளங்கலை பட்டம் பெற்றுள்ளவரும், திருமணமாகாதவருமான அஜய் கவாண்டே கூறுகிறார். "வெண்டைக்காய் பறிப்பதற்கான ஊதிய செலவான 200 ரூபாயை கூட, என்னால் இன்று ஈட்ட முடியவில்லை," என்று அவர் கூறுகிறார்.

அதிலும் விலங்குகள் பயிரை தாக்கினால், நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. செலோடியில் குரங்குகளின் அச்சுறுத்தல் அதிகம். பண்ணைகள் மற்றும் புதர்க்காடுகளுக்கு இடையில் அதிக இடைவெளி இல்லை. அதோடு அங்கு வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் அதிகம் கிடைப்பதில்லை. "ஒரு நாள் என் பண்ணையில் உணவைத் தேடும் அவை, மறுநாள் வேறொருவரின் பண்ணையை நோக்கி படையெடுக்கின்றன. நாங்கள் என்ன செய்வது?" என்கிறார் கவண்டே.

ஆதிக்கம் செலுத்தும் திராலே-குன்பி (ஓபிசி) சாதியைச் சேர்ந்த, கவாலே தர்வாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து, வேலை தேடி புனே சென்று, மாதச் சம்பளமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.8,000 சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் குறைந்த சம்பளம் என்பதால், வேலையை விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் கூடுதல் திறமையாக, கால்நடை மருத்துவ சேவையில் சான்றிதழ் பெற்றார். அதுவும் அவருக்கு எந்த நன்மையும் கொடுக்கவில்லை. பின்னர், அவர் தொழில்நுட்ப திறமையாக ஃபிட்டராக டிப்ளமோ பெற்றுள்ளார். ஆனால் அதற்கும் பயன் இல்லை.

இதற்கிடையில், வங்கி வேலைகள், ரயில்வே வேலைகள், போலீஸ் வேலைகள், அரசாங்க எழுத்தர் பதவிகளுக்கான பல தேர்வுகளுக்குத் தயாராகி கலந்து கொண்டுள்ளார்.

இறுதியாக, அனைத்தையும் கைவிட்டுவிட்டார். மற்ற நண்பர்கள் இதனை ஆமோதிக்கிறார்கள். அவர்களின் கதையும் அதே தான்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: செலோடியின் பிரதான கிராம சதுக்கம். வலது: யாவத்மாலின் திர்ஜாடாவில் 30 வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் அரசு போட்டித் தேர்வுகளுக்காக ஊர்த்தலைவர் உருவாக்கியிருக்கும் ஒரு பயிற்சி மையத்தில் படிக்கின்றனர். அவர்கள் அனைவரும் சரியான மணமகள்கள் கிடைக்காத இளங்கலை, முதுகலைப் பட்டதாரிகள்

அவர்கள் அனைவரும் இந்த முறை ஒரு மாற்றத்திற்காக வாக்களிக்கப்போவதாக உறுதியாக கூறுகிறார்கள். மேற்கு விதர்பாவில் உள்ள யவத்மால்-வாஷிம் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்ட பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், இவர்களின் நிலைப்பாடு இது. சிவசேனா கட்சியின், இரு பிரிவினருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. சேனா-உத்தவ் தாக்கரே சஞ்சய் தேஷ்முக்கையும், ஏக்நாத் ஷிண்டேவின் சேனா, ராஜஸ்ரீ பாட்டீலையும் களமிறக்கியுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் சேனா-யுபிடி கூட்டணியில் இருப்பதால், இளைஞர்கள் தேஷ்முக்கிற்கு ஆதரவாக உள்ளனர். விதர்பா பாரம்பரிய காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது.

"தியே நுஸ்டாச் பாத்தா மார்டே, கா கேலா ஜி த்யானே [அவர் வெறும் பேச்சு மட்டும் தான். செயலில் அவர் என்ன செய்தார்]?" என கன்கிராட், அவரது வர்ஹாடி பேச்சுவழக்கில் கிண்டலடிக்கிறார்.

யார் என நாங்கள் கேட்டோம். யார் வெறும் வாய் பேசிக் கொண்டு  செயலாற்றாமல் இருக்கிறார்?

அங்கிருப்பவர்கள் அனைவரும் புன்னகைக்கிறார்கள். "உங்களுக்கே தெரியும்," என்று கவாலே சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறார்.

அவர்களின் கிண்டல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கியே உள்ளது, அவர் தனது வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். 2014 ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, தர்வா அருகிலுள்ள கிராமத்தில், சாய்-பே-சர்ச்சா நிகழ்வை நடத்தினார். அங்கு விவசாயிகளுக்கு கடன் இல்லாத வாழ்க்கை, பருத்தி மற்றும் சோயாபீன்களுக்கு அதிக விலை, மற்றும் இப்பகுதியில் சிறு தொழில்கள் வைப்பது போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று நம்பிய இவர்கள் பாஜகவுக்கு அதிக அளவில் வாக்களித்தனர். அவர்கள் 2014-ல் மாற்றத்திற்காக, மத்தியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். இப்போது, மோடியின் வாக்குறுதிகள் வெறும் காற்றிழந்த பலூன் என்பதை  உணர்ந்திருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர், அப்போது முதல்முறை வாக்காளர்களாக இருந்தனர். தங்களுக்கு வேலை கிடைக்கும், பொருளாதாரம் மேம்படும், விவசாயம் லாபகரமாக மாறும் என்று நம்பினார்கள். மோடி மிகவும் உறுதியானதாகவும், அழுத்தமாகவும் ஒலித்ததால், இந்த பிராந்தியத்தில் வீசிய நம்பிக்கை அலையில் பயணித்து விவசாயிகள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது, பருத்தி மற்றும் சோயாபீனின் விலை உயர்ந்தபாடில்லை. ஆனால் உற்பத்திச் செலவு மட்டும் இரண்டு-மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பணவீக்கம், உள்நாட்டு பட்ஜெட்டை சிதைக்கிறது. வேலைகள் அல்லது வாய்ப்புகள் இல்லாதது இளைஞர்களிடையே வேதனையையும் கவலையையும் உருவாக்குகிறது.

இந்த காரணிகள், அவர்கள் தப்பிக்க விரும்பும் விவசாயத்திற்கே அவர்களை மீண்டும் தள்ளுகிறது. செலோடி மற்றும் கிராமப்புற மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர்கள், தங்களின் கவலைகளைக் மறைத்து கூறும் நகைச்சுவையான தொனியில், புதிய வாசகம் ஒன்றிற்கு நம்மை அறிமுகப்படுத்துகிறார்கள், அது: “நௌக்ரி நஹி, தார் சோக்ரி நஹி [வேலை இல்லை என்றால் மணமகளும் இல்லை!]

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam