"ஏ கிசே ஹோர் நு ஜிதா ரஹே நே, சாதே அக்கே கோய் ஹோர் குடி நஹி சி [அவர்கள் வேறு யாரையாவது ஜெயிக்க வைக்கிறார்கள், எங்களுக்கு முன் வேறு பெண்கள் இல்லை]." தடகள வீரர்கள் ஜஸ்பால், ரமதீப் மற்றும் நண்பர்கள் தங்கள் பயிற்சியாளரிடம் ஒரே குரலில் புகார் செய்கிறார்கள். அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான இளம் ஓட்டப்பந்தய வீரர்கள் சண்டிகரில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க 200 கிலோமீட்டர் பயணம் செய்தனர்.

ஐந்து கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது பரிசு வென்றவராக ஜஸ்பால் கவுரின் பெயர் மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடக்கின்றன. ஜஸ்பால் வெற்றியாளர்தான் என்பது அவர்களுக்குத் தெரியும், ஏனெனில் அவர் இறுதிக் கோட்டை நோக்கி சென்றபோது வேறு யாரும் முன்னணியில் இல்லை. ஆனால் வெற்றியாளருக்கு வழங்கப்படும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வேறு ஒருவருக்கு அறிவிக்கப்படுகிறது.

ஜஸ்பால் மேடைக்குச் சென்று இரண்டாவது பரிசை ஏற்க மறுக்கிறார், அதற்கு பதிலாக அவரும் அவரது பயிற்சியாளரும் மேடையிலும் வெளியேயும் ஒவ்வொருவரிடமும் சென்று, அமைப்பாளர்களின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கி, நடந்ததை விவரித்து, நியாயம் கேட்டு உதவியை நாடுகிறார்கள். இறுதியில், பயிற்சியாளரின் வேண்டுகோளுக்கிணங்க ஜஸ்பால் இரண்டாவது பரிசாக ரூ.3,100 என்று எழுதப்பட்ட ஒரு பெரிய ஃபோம் போர்டு காசோலையை ஏற்றுக்கொள்கிறார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, 2023 ஏப்ரலில், ஜஸ்பால் ஆச்சரியப்படும் வகையில், அவரது கணக்கில் ரூ.5,000 டெபாசிட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டார். ஜஸ்பாலுக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை, எந்த உள்ளூர் செய்தித்தாள்களிலும் செய்தி வரவில்லை. Runizen இணையதளத்தில், 5 கிலோமீட்டர் பந்தயத்திற்கான லீடர்போர்டில் 23.07 நிமிடங்கள் நேரத்துடன் (பந்தய நேரம்) வெற்றியாளராக அவரது பெயர் தோன்றுகிறது. இந்த ஆண்டுக்கான பரிசு விநியோக புகைப்படங்களில் அவர் இல்லை. ஆனால் ஜஸ்பால் இன்னும் பல பதக்கங்கள், மாபெரும் காசோலை பதாகைகளை தன்னிடம் வைத்திருக்கிறார்.

2024 ஆம் ஆண்டில், அடுத்த மராத்தானுக்கு பிற பெண்களுடன் சென்றபோது, இந்த நிருபர் வீடியோ காட்சிகளை ஆராய்ந்து, ஜஸ்பாலை அமைப்பாளர்கள் பந்தயத்தில் தகுதி நீக்கம் செய்ததை  கண்டுபிடித்தார். போராடிய மாணவிகளின் கூற்று உண்மை என்பதை அவர்கள் உணர்ந்தனர். ரேஸ் பிப் மூலம் சில மோசடி நடந்துள்ளது. ஜஸ்பாலுக்கு வந்த ரொக்கப் பரிசுத் தொகையின் மர்மம் அதுதான்.

ஜஸ்பாலுக்கு ரொக்கப் பரிசுகள் முக்கியம். அவரால் போதிய பணத்தை சேமிக்க முடிந்தால், மீண்டும் கல்லூரிக்குச் செல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்பால் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இணைய வழியில் பி.ஏ (கலை) படிப்பில் சேர்ந்தார். "ஆனால் என்னால் முதல் செமஸ்டருக்கு மேல் தொடர முடியவில்லை," என்கிறார் அவர். "நான் தேர்வு எழுத ஒவ்வொரு செமஸ்டருக்கும் சுமார் 15,000 ரூபாய் செலுத்த வேண்டும். முதல் செமஸ்டரில் ரொக்கப் பரிசு [கிராமப் பிரதிநிதிகள் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறுவதற்காக பள்ளி வழங்கியது] மூலம் கிடைக்கும் பணத்தை கட்டணமாக செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு என்னிடம் பணம் இல்லாததால் என்னால் அடுத்த செமஸ்டரை தொடர முடியவில்லை."

22 வயதான ஜஸ்பால் தனது குடும்பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் செல்பவர். பஞ்சாபில் மிகவும் பின்தங்கிய பட்டியல் சமூகமாக வகைப்படுத்தப்பட்டுள்ள மசாபி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மிகச் சில பெண்களில் ஒருவர். 47 வயதாகும் ஜஸ்பாலின் தாய் பல்ஜிந்தர் கவுர், ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். ஜஸ்பாலின் மூத்த சகோதரரான 24 வயது அம்ரித்பால் சிங், கோஹாலி கிராமத்தைச் சுற்றியுள்ள கட்டுமானப் பணிகளில் தனது தந்தைக்கு உதவுவதற்காக 12ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார்; 17 வயதாகும் அவரது தம்பி ஆகாஷ்தீப் சிங், 12ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

ஜஸ்பால் (இடது) தனது மதிப்புமிக்க உடைமைகளை இந்த உலோக அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். தன் குடும்பத்துடன் அவர் (வலது)

இப்போது அவரது மூத்த சகோதரரின் மனைவி மற்றும் குழந்தையையும் உள்ளடக்கிய குடும்பத்தின் வருமானம், இரு ஆண்களுக்கும் கிடைக்கும் தொடர் வேலையை பொறுத்தது. இது பெரும்பாலும் கணிக்க முடியாதது. அவர்களுக்கு வேலை இருக்கும்போது குடும்பம் கொஞ்சம் செழிப்பாக இருக்கும், அவர்கள் மாதம் 9,000-10,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.

ஜஸ்பால் பெறும் பரிசுத் தொகை பெரும்பாலும் நுழைவுக் கட்டணம், போட்டிகளுக்கான பயணம், அவரது சொந்த கல்வி போன்ற சில செலவுகளை கவனித்துக்கொள்கிறது. "நாங்கள் பந்தயங்களுக்கு பதிவு செய்யும்போது டி-ஷர்ட்களைப் பெறுகிறோம், ஆனால் ஷார்ட்ஸ், டிராக் சூட் பேண்ட் மற்றும் காலணிகளுக்கு, நாங்கள் எங்கள் பெற்றோரிடம் பணம் கேட்க வேண்டும்," என்று அவர் மைதானத்தில் பயிற்சிக்காக விளையாட்டு ஆடைகளை அணிந்தபடி கூறுகிறார்.

எங்களைச் சுற்றி இளம் விளையாட்டு வீரர்கள், சிலர் உடற்பயிற்சி செய்வதையும், மற்றவர்கள் மைதானத்தை மெதுவாக சுற்றி வருவதையும், சிலர் தினசரி பயிற்சிக்காக தங்கள் பயிற்சியாளர் ராஜீந்தர் சிங்கைச் சுற்றி கூடியிருப்பதையும் நாங்கள் காண்கிறோம். இவர்கள் அனைவரும் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். ஜஸ்பால் 400, 800 மீட்டர் மற்றும் 5 கி.மீ போட்டிகளில் பங்கேற்று கடந்த ஏழு ஆண்டுகளில் பல பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார். தனது சொந்த கிராமத்தில் ஜஸ்பால் பலருக்கு உத்வேகம் அளித்து வருகிறார். அவரது பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பலர், தங்கள் குழந்தைகளைப் பயிற்றுவிக்க ஊக்குவித்துள்ளன.

ஆனால் ஜஸ்பாலைப் பொறுத்தவரை, இதுவரை அவர் வென்ற எதுவும் குடும்பத்திற்கு உதவ போதுமானதாக இல்லை. 2024 பிப்ரவரி முதல், ஜஸ்பால் அமிர்தசரஸுக்கு அருகிலுள்ள ஒரு கோசாலையில் மாதம் ரூ.8,000க்கு கணக்காளர் பணிக்கு செல்லத் தொடங்கியுள்ளார். "என் குடும்பத்தின் வருமானத்திற்கு பங்களிக்க நான் இந்த வேலையை ஏற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது எனக்கு படிக்க கூட நேரம் கிடைப்பதில்லை," என்று அவர் கூறுகிறார்.

வீட்டில் உள்ள பொறுப்புகளுடன், புதிய வேலையிலிருந்து கிடைக்கும் சம்பளம் கூட அவருக்குத் தேவையான செமஸ்டர் கட்டணத்தைவிட குறைவாகவே உள்ளது.

2024 மார்ச் மாதம், அவர் மீண்டும் சண்டிகரில் 10 கி.மீ பந்தயத்தில் ஓட முடிவு செய்கிறார். இந்த முறை அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்து 11,000 ரொக்கப் பரிசை வென்றார்.

*****

ஹர்சே சீனா கிராமத்தில் ராஜீந்தர் சிங் சீனாவிடம் (60) இலவசமாக பயிற்சி பெறும் சுமார் 70 விளையாட்டு வீரர்களின் குழுவில் நிச்சயமாக அவர் ஒரு 'ஸ்டார்'. 1500 மீட்டர் போட்டியில் சர்வதேச தடகள வீரரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளிம்புநிலையில் வாழ்ந்து வரும் இளம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

பஞ்சாபின் அமிர்தசரஸின் ஹர்சே சீனா கிராமத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் ஜஸ்பால் (இடது) மற்றும் மன்பிரீத் (வலது)

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

பயிற்சியாளர் ராஜிந்தர் சிங் சீனா தனது விளையாட்டு வீரர்கள் குழுவுடன். (இடது). பயிற்சியாளர் தனது ஆயுர்வேத மருந்துக் கடையில், பகலில் சில மணி நேரம் நோயாளிகளைக் கவனிக்கிறார்

கிராமப்புற பஞ்சாபில் உள்ள இளைஞர்களிடையே பரவலான போதைப்பொருள் பழக்கம் குறித்து சண்டிகரில் ஒரு மூத்த அதிகாரியின் கேலி, இந்த தடகள வீரரை 2003ஆம் ஆண்டில் இளம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கத் தூண்டியது. "நான் குழந்தைகளை முதலில் இந்த மைதானத்திற்கு அழைத்து வந்தேன்," என்று அமிர்தசரஸில் உள்ள ஹர்சே சின்னா கிராமத்தில் தோழர் அச்சார் சிங் சீனா அரசு சீனியர் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தைக் குறிப்பிட்டு கூறுகிறார். "பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் – தொழிலாளர்களின் குழந்தைகள், விளிம்புநிலை பிரிவினர். நான் அவர்களை பள்ளியில் சேர்த்தேன், அவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன், அது மெல்ல அதிகரித்தது.

"அரசுப் பள்ளிகளில், இப்போது விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்த பல குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கடின உழைப்பாளிகள், வலிமையானவர்கள். குறைந்தபட்சம் மாநில அளவிலாவது போட்டிகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து குழுக்களை உருவாக்கத் தொடங்கினேன். குருத்வாராவில் சேவை வழங்க எனக்கு நேரம் இல்லை. முடிந்தால் குழந்தைகளின் கல்விக்கு ஒருவரால் உதவ முடியும் என நம்புகிறேன்," என்கிறார் ரஜிந்தர்.

"என்னிடம் குறைந்தது 70 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன். எனது விளையாட்டு வீரர்களில் சிலர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். சிலர் புரோ கபடி லீக்கில் இருக்கிறார்கள்," என்று பெருமையுடன் கூறுகிறார் சீனா. "எங்களுக்கு யாரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைப்பதில்லை. மக்கள் வருகை தருகிறார்கள், குழந்தைகளை கௌரவிக்கிறார்கள், உதவுவதாக உறுதியளிக்கிறார்கள், ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை. எங்களால் முடிந்ததை நாங்களே செய்கிறோம்," என்கிறார் அவர்.

BAMS பட்டம் பெற்ற அவர் அமிர்தசரஸ் அருகே ராம் திராத்தில் சொந்தமாக சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் வருமானம் தனது வீடு மற்றும் மைதான செலவுகளை ஈடுகட்ட போதுமானது என்று அவர் கூறுகிறார். "நான் மாதத்திற்கு சுமார் 7,000-8,000 ரூபாய் வரை தடைகள், எடைகள், மைதானத்தை குறிக்க சுண்ணாம்பு போன்ற உபகரணங்களுக்கு செலவிடுகிறேன்," என்று கூறுகிறார். வளர்ந்து வேலைக்குச் செல்லும் அவரது மூன்று குழந்தைகளும் அவ்வப்போது பங்களிப்பு செய்கிறார்கள்.

"எந்த குழந்தையும் போதைப்பொருள் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. அவர்கள் களத்திற்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன், அவர்கள் ஏதேனும் சாதிக்க வேண்டும்.”

பயிற்சியாளர் ராஜீந்தர் சிங்குடன், பஞ்சாப் இளம் விளையாட்டு வீராங்கனைக் குழுவினர் தங்கள் பயணத்தைப் பற்றி பேசுகின்றனர்

காணொளி: 'கிராமப்புற பஞ்சாபில் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் போராட்டங்கள்'

*****

10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோஹாலி கிராமத்தின் இளம் ஜஸ்பாலுக்கு களத்திற்கு வருவது மிக கடினம். "தூரம் அதிகம் இருப்பதால் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் கிராமம் மைதானத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது," என்று கிராமத்தின் புறநகரில் அமைந்துள்ள தனது இரண்டு அறைகள் கொண்ட செங்கல் வீட்டின் முன் அமர்ந்து கூறுகிறார் ஜஸ்பால். "ஒவ்வொரு முறையும் மைதானத்திற்கு நடந்து செல்ல எனக்கு 45 நிமிடங்கள் ஆகும்," என்று ஜஸ்பால் கூறுகிறார். "நான் ஒவ்வொரு நாளும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து, 4.30 மணிக்கு மைதானத்தில் இருப்பேன். பெற்றோர் என்னை கவனமாக இருக்கச் சொல்கிறார்கள், ஆனால் நான் ஒருபோதும் பாதுகாப்பற்ற உணர்வை கொண்டதில்லை. ஆண்கள் பயில்வான் [மல்யுத்தம்] பயிற்சி செய்யும் ஒரு அகாரா அருகில் உள்ளது. அவர்களால், சாலை எப்போதும் வெறிச்சோடுவதில்லை. நாங்கள் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்கிறோம். காலை 7:30 மணியளவில் வீட்டிற்கு மீண்டும் நடந்து செல்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது தந்தையின் பழைய மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டக் கற்றுக்கொண்டார். எனவே அவர் அவ்வப்போது மோட்டார் சைக்கிளை பயிற்சி மைதானத்திற்கு எடுத்துச் செல்வார். 10 நிமிடங்களில் வண்டியில் சென்றுவிடலாம். ஆனால் அப்படி வரும்போது பல முறை, ஜஸ்பால் பயிற்சியை பாதியில் அவசரமாக விட்டுச்செல்ல நேரிடும். காரணம் வீட்டில் உள்ள ஆண்களுக்கு வண்டி தேவைப்படும். இதனால் சில பயிற்சிகளை அவர் தவறவிட்டுள்ளார்.

"இன்னும் சில கிராமங்களில் அரசு அல்லது தனியார் பேருந்து சேவை கிடையாது," என்று பயிற்சியாளர் கூறுகிறார். "இளம் விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்கு வருவதற்கே போராடுகிறார்கள், அவர்களில் பலர் கல்வி பெறுவதற்கும் இதனால் போராடுகிறார்கள்."  இந்த கிராமங்களில் பல பெண்கள் 12ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்துவதற்கு அருகில் கல்லூரி இல்லாததே  காரணம். ஜஸ்பாலுக்கு பேருந்து நிலையம் கிராமத்தின் மறுபுறத்தில் உள்ளது. மைதானத்திற்கு செல்ல வேண்டிய நேரத்தில் பேருந்து கிடைப்பது மற்றொரு சிக்கல் என்று அவர் விளக்குகிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் தடகள வீரரான ரமன்தீப் கவுரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கிறார். "சில நேரங்களில், நான் ஐந்து கிலோமீட்டர் நடந்து, பின்னர் செயின்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோமல்பிரீத் என்ற பெண்ணுடன் ஸ்கூட்டி (கியர் இல்லாத பைக்) மூலம் மைதானத்திற்குச் செல்வேன். பயிற்சிக்குப் பிறகு நான் மேலும் ஐந்து கி.மீ தூரம் நடந்து செல்கிறேன்," என்று அவர் விளக்குகிறார்.

"டர் தன் லக்தா இகல்லே அவுண்டே-ஜண்டே, பர் கிசே கோல் டைம் நஹி நல் ஜான் அவுன் லாயி [குறிப்பாக இருட்டில் தனியாக நடந்து செல்வது எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் யாருக்கும் தினமும் என்னுடன் துணைக்கு வர நேரமில்லை]," என்று ரமன்தீப் கூறுகிறார். பயிற்சியும், பின்னர் கூடுதலாக 20 கி.மீ நடையும் அவரை பாதிக்கின்றன. "நான் எப்போதும் சோர்வாக இருக்கிறேன்," என்று கூறுகிறார்.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: ஜஸ்பால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார். அவ்வப்போது அதை பயிற்சிக்கு எடுத்துச் செல்கிறார். வலது: பல ஆண்டுகளாக வென்ற கோப்பைகளுடன் தாய் மற்றும் சகோதரிகளுடன் தனது  வீட்டில் ரமன்தீப் கவுர் (கருப்புச் சட்டை)

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

ரமன்தீப் தனது விருது பணத்தில் ஓட்டப்பந்தய ஷூக்களை வாங்கினார்

மேலும், அவரது வேலை ஓட்டப் பயிற்சியுடன் முடிவடையவில்லை. 21 வயதான அவர் வீட்டிற்கும் உதவ வேண்டும். குடும்பத்திற்கு சொந்தமாக உள்ள  பசு, எருமை மாடுகளை கவனித்துக்கொள்ள வேண்டும். வீட்டின் முன்னால் 3-4 அடி அகலமுள்ள செங்கல் சாலைக்கு அப்பால் கால்நடைகளை பராமரிக்கும் சிறிய தொழுவம் உள்ளது.

ரமன்தீப்பும் மசாபி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். பத்து பேர் கொண்ட அவரது குடும்பம் கூலி வேலை செய்யும் இரண்டு சகோதரர்களின் வருமானத்தை நம்பியுள்ளது. "அவர்கள் பெரும்பாலும் தச்சு வேலையோ, எந்த வேலை கிடைக்கிறதோ அதை செய்கிறார்கள். வேலை கிடைக்கும் நாட்களில், ஒவ்வொருவரும் 350 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்," என்கிறார் அவர்.

2022ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்தபோது, அவரது தந்தை இறந்தார். படிப்பு  பாதியில் நின்றுவிட்டது. "எங்களால் கல்விக்கு செலவு செய்ய முடியவில்லை," என்று கிராமத்தின் கடைக்கோடியில் விரிசல் விழுந்த சுவர்களுடன் உள்ள தனது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் அமர்ந்தபடி அவர் வருத்தத்துடன் கூறுகிறார். "என் அம்மா விளையாட்டுக்கு தேவையான ஆடைகளை வாங்கித் தருகிறார், விதவை ஓய்வூதியமாக அவர் ரூ.1,500 பெறுகிறார்," என்கிறார் ரமன்தீப்

"கேஷ் ப்ரைஸ் ஜீத் கே ஷூஸ் லேயே சி 3100 தே, ஹன் டுட் கயே, ஃபெர் கோய் ரேஸ் ஜிட்டுங்கி தே ஷூஸ் லாங்கி [ஒரு பந்தயத்தில் 3,100 ரூபாய் ரொக்கப் பரிசை வென்றபோது இந்த காலணிகளை வாங்கினேன். இப்போது இவை கிழிந்துவிட்டன. நான் மீண்டும் ஒரு பந்தயத்தில் வெற்றிப் பெற்று ஷுக்களை வாங்குவேன்]," என்று அவர் இப்போது பயன்படுத்தும் தனது தேய்ந்துபோன ஷூக்களை காட்டி கூறுகிறார். ஷுக்கள் இருக்கோ, இல்லையோ இலக்கை அடையும் வரை அவர் ஓடுவார்.

"நான் காவல்துறையில் வேலை கிடைக்க ஓடுகிறேன்," என்கிறார் ரமன்தீப்.

சைன்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோமல்பிரீத் கவுர் (15), கோஹாலி கிராமத்தைச் சேர்ந்த குர்கிர்பால் சிங் (15), ரானேவாலி கிராமத்தைச் சேர்ந்த மன்பிரீத் கவுர் (20) மற்றும் சைன்ஸ்ரா கலன் கிராமத்தைச் சேர்ந்த மம்தா (20) ஆகியோரும் அப்படித்தான். அவர்கள் அனைவரும் பயிற்சியாளர் சீனாவிடம் பயிற்சி பெறுகிறார்கள். இந்த இளம் விளையாட்டு வீரர்கள் வெவ்வேறு சமூக அந்தஸ்தை பெற்றிருந்தாலும் , ஒரு அரசு வேலை என்பது முழு குடும்பத்திற்கும் நிதி பாதுகாப்பை அளிக்கிறது. ஆனால் இந்த வேலைகளுக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றொரு தடை பந்தயமாகும்.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

மைதானத்தில் பயிற்சியின் போது கோமல்பிரீத் மற்றும் மன்பிரீத்

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: இளம் தடகள வீரர் குர்கிர்பால் சிங் , தான் வென்ற பரிசுகளைக் காட்டுகிறார். வலது: பயிற்சியாளர் சீனா , இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மூன்று சதவீத இடஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி, மாநில மற்றும் தேசிய அளவில் சாம்பியன்ஷிப் கோப்பைகளை வெல்ல வேண்டும். இதற்கு பல்வேறு வகையான ஆதாரங்களைப் பெற வேண்டும். அவை கிடைக்காத நிலையில், மாணவிகள் கடுமையாக உழைத்து, மாநிலம் முழுவதும் 5 மற்றும் 10 கி.மீ. தூரத்திற்கு நடக்கும் பல்வேறு மராத்தான் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள், பதக்கங்களை வெல்வதால் அவர்கள் விரும்பும் காவல்துறைப் பணிக்கான உடல் தகுதிக்கு உதவும்.

இந்த வேலைகளில் மஸாபி சீக்கியர்களுக்கு இட ஒதுக்கீடு கூட உள்ளது. 2024 மாநில ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பஞ்சாப் காவல்துறையில் கான்ஸ்டபிள்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மொத்தம் 1,746 காலியிடங்களில் 180 இடங்கள் இந்த தாழ்த்தப்பட்டோர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த 180 இடங்களில் 72 இடங்கள் அதே சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

காவல்துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி போன்ற அதன் முக்கிய நீதி வழங்கும் வழிமுறைகளுக்கான திறன் வளர்ப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் முன்னேற்றத்தையும் மதிப்பிடும் மற்றும் தரவரிசைப்படுத்தும் 2022 இந்திய நீதி அறிக்கை , 2019 மற்றும் 2022க்கு இடையில் பஞ்சாப் 4ஆவது இடத்திலிருந்து 12ஆவது இடத்திற்கு என எட்டு இடங்கள் இறங்கியுள்ளதை காட்டுகிறது. "சாதி அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் இடம்பெறுவதில் பற்றாக்குறை உள்ளது. அவற்றை சரிசெய்வது அதைவிட மெதுவாக உள்ளது. பல தசாப்தங்களாக சூடான விவாதங்கள் இருந்தபோதிலும், சில மாநிலங்கள் ஒன்று அல்லது பிற ஒதுக்கீடுகளை சந்திக்க முடிந்தாலும் எந்த மாநிலமும் அனைத்து துணை அமைப்புகளிலும் மூன்று ஒதுக்கீடுகளையும் பூர்த்தி செய்யவில்லை. பெண்களும் சமநிலை பெறுவதில்லை. காவல்துறையில் பெண் பணியாளர்களின் பங்கு 3.3 சதவீதத்திலிருந்து 11.8 சதவீதமாக மாற ஜனவரி 2007 முதல் ஜனவரி 2022 வரை பதினைந்து ஆண்டுகள் ஆனது. 2022ஆம் ஆண்டில் பஞ்சாபில் பெண்களுக்கான அந்த எண்ணிக்கை 9.9 சதவீதமாக உள்ளது.

ஜஸ்பால், ரமன்தீப் இருவரும் கடந்த ஆண்டு முதல் பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு  அவர்கள் இருவரும் பஞ்சாபியில் எழுத்துத் தேர்வு எழுதினர். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. "நான் வீட்டிலேயே எழுத்துத் தேர்வுக்குத் தயாராகிறேன்," என்கிறார் ரமன்தீப்.

2024 ஆட்சேர்ப்பு விளம்பரத்தில் மூன்று கட்ட தேர்வு செயல்முறையில் கணினி அடிப்படையிலான தேர்வு முதன்மையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இரண்டாவது சுற்று உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனையில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், எடை மற்றும் உயரம் ஆகியவை உடல் தேர்வுகளில் அடங்கும்.

PHOTO • Courtesy: NMIMS, Chandigarh
PHOTO • Courtesy: NMIMS, Chandigarh

சண்டிகரின் NMIMS ஏற்பாடு செய்த மராத்தானில் ரமன்தீப் (இடது) மற்றும் ஜஸ்பால் (வலது)

ரமன்தீப்பின் தாய் தனது மகள் அதிகம் சாப்பிடாததால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கவலைப்படுவதாக கூறுகிறார். இளம் விளையாட்டு வீரர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், தானியங்கள், இறைச்சிகள், மீன் மற்றும் பால் உணவுகள் ஆகியவற்றை பரிந்துரைக்கும் இந்திய தடகள கூட்டமைப்பின் ஊட்டச்சத்து குறித்த கையேட்டு புத்தகத்தைப் பற்றி அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. இவற்றில் பெரும்பாலானவற்றை அவர்களால் வாங்க முடியாது. மாதம் ஒருமுறை இறைச்சி வரும். "டயட் நஹி மில்டதி, பாஸ் ரொட்டி ஜா ஜோ வி கரே மில் ஜண்டா [எங்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை; சப்பாத்தி அல்லது வீட்டில் என்ன கிடைக்கிறதோ அதுதான் உணவு]," என்கிறார் ரமன்தீப். "வீட்டில் சமைத்ததையும், ஊறவைத்த சன்னாவையும் சாப்பிடுகிறோம்," என்கிறார் ஜஸ்பால்.

இந்த ஆண்டு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணினி அடிப்படையிலான தேர்வு பற்றி பெண்கள் இருவருக்கும் தெரியாது. "கடந்த ஆண்டு இது கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வாக இல்லாமல் பஞ்சாபியில் எழுதப்பட்டது," என்று ஜஸ்பால் தனது முந்தைய அனுபவத்தை நினைவுக் கூர்ந்தார். "எங்களிடம் கணினி சார்ந்த அனுபவம் கிடையாது." கடந்த ஆண்டு ஜஸ்பால் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு மாதங்களுக்கு ரூ.3,000 செலவழித்தார்.

இந்த ஆண்டு சுற்றறிக்கையின்படி, முதல் சுற்றில் பஞ்சாபி மொழி குறித்த தகுதித் தாளுடன் கூடுதலாக ஒரு தாளும் இருக்கும். இது பொது விழிப்புணர்வு, அளவு திறன் மற்றும் எண் திறன்கள், மன திறன் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு, ஆங்கில மொழி திறன், பஞ்சாபி மொழி திறன் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் தேர்வர்களை சோதிக்கும்.

"ஃபிசிகல் டெஸ்ட் ரைட் டெஸ்ட் க்ளியர் ஹோன் பாத் லைண்டே நே, ரைட்டட் டெஸ்ட் ஹி க்ளியர் நஹி சி ஹோயா இஸ் கார்கே ஃபிசிகல் டெஸ்ட் தக் போன்சே ஹி நஹி [நீங்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு உடல் சோதனை நடத்தப்படுகிறது. நீங்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாதபோது, உடல் சோதனைக்கு எங்கே செல்வது]?" என்கிறார் ஜஸ்பால்.

"போன வருஷ புத்தகங்கள் என்கிட்ட இருக்கு. இந்த ஆண்டும் நான் [காவல்துறை  காலிப்பணியிடங்களுக்கு] விண்ணப்பித்துள்ளேன்," என்கிறார் ரமன்தீப். "பார்ப்போம்," என்று அவர் சொல்லும் போது குரலில் சந்தேகமும் நம்பிக்கையும் சமமாக இருந்தன.

அர்ஷ்தீப் அர்ஷி சண்டிகரைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நியூஸ் 18 பஞ்சாப் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர்.

பிரதிஷ்டா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர். இவர் பாரியின் படைப்பாற்றல் எழுத்துப் பிரிவை வழிநடத்துகிறார். பாரிபாஷா குழுவில் உறுப்பினராக இருக்கும் இவர், குஜராத்தி மொழியில் கதைகளை மொழிபெயர்த்து திருத்துகிறார். பிரதிஷ்டா குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர்பெற்ற கவிஞர் ஆவார்.

தமிழில்: சவிதா

Arshdeep Arshi

Arshdeep Arshi is an independent journalist and translator based in Chandigarh and has worked with News18 Punjab and Hindustan Times. She has an M Phil in English literature from Punjabi University, Patiala.

Other stories by Arshdeep Arshi
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha