கல்பனா (நடுவர்):

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் கல்பனா. இந்த விவாதத்தின் நடுவர் நான் தான். இப்போது நாங்கள், மரபணுமாற்றப்பட்ட விதைகள் குறித்த விவாதத்தை, உங்களுக்கு அளிக்க இருக்கிறோம். இறைய விவாதத் தலைப்பு ‘‘மரபணு மாற்றப்பட்ட விதைகள் மனிதர்க்கு நன்மையா? தீமையா?’’ என்பதே. எனது வலப்பக்கத்தில் இருப்பவர்கள் ‘நன்மையே’ என்றும், இடப்பக்கத்தில் இருப்பவர்கள் ‘தீமையே’ என்றும் வாதிட உள்ளனர். ஒவ்வொரு பேச்சாளருக்கும் தம் வாதத்தை முன்வைக்க ஒரு நிமிடமும், அதை எதிர்த்து வாதிடுவோர்க்கு ஒரு நிமிடமும் அளிக்கப்படும். தற்போது ‘நன்மையே’ எனும் அணியின் முதல் பேச்சாளர் தன் வாதத்தைத் துவங்குவார்.


கார்த்திகா (நன்மையே எனும் அணி)

அனைவருக்கும் வணக்கம். என்பெயர் கார்த்திகா. நான் ‘‘மரபணு மாற்றப்பட்ட விதைகள் மனிதர்க்கு நன்மையே’’ எனும் அணியின் முதல் பேச்சாளர். எனது முதல் கருத்து வைட்டமின் ஏ பற்றாக்குறை பார்வைக்குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உலகின் 50 கோடி குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் ஏ பால், வெண்ணெய், இறைச்சி மற்றும் மஞ்சள் காய்கறிகளில் காணப்படுகிறது. சாதாரண அரிசியில் வைட்டமின் ஏ அதிக அளவில் இல்லை. உதாரணமாக மரபணு மாற்றப்பட்ட நெல் ரகமான தங்க அரிசியை எடுத்துக்கொள்வோம். ‘தங்க அரிசி’ உண்மையில் தங்கஅரிசிதான். ஏனென்றால் அதன் மஞ்சள் நிறத்தில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது. மேலும் தங்கஅரிசியில் இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்களும் உள்ளன. தங்க அரிசி வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஏற்றது.


கல்பனா (நடுவர்)

இது எதிர்த்து வாதிடுவோருக்கான நேரம்.


சுகன்யா (தீமையே எனும் அணி):

அதற்கு தங்க அரிசிதான் வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக பால், இறைச்சி, பச்சை மற்றும் மஞ்சள் காய்கறிகளையே சாப்பிடலாமே!


துர்கா (நன்மையே எனும் அணி)

சுகன்யா கூறினார், தங்க அரிசிக்கு பதிலாக நாம் பாலையே அருந்தலாம் என்று. ஆனால் பால் ‘அருந்துவது’ உணவு ‘உண்பதற்கு’ ஈடாகாது.


அர்ச்சனா (நன்மையே எனும் அணி)

மேலும் சுகன்யா கூறினார், நாம் இறைச்சி, பச்சை மற்றும் மஞ்சள் காய்கறிகளை சாப்பிடலாம் என்று. ஆனால் சைவம் உண்போரை சற்று நினைத்துப்பாருங்கள். அவர்கள் எப்படி இறைச்சி உண்பார்கள்? எப்படி வைட்டமின் ஏ & வைப் பெறுவார்கள்? .. பச்சை மஞ்சள் காய்கறிகளை நாம் வாங்க முடிவதில்லை. நாளுக்கு நாள் அதன் விலை ஏறிக்கொண்டே போகிறது.


கார்த்திகா (நன்மையே எனும் அணி)

பச்சைக் காய்கறிகள் அன்றாடம் கிடைப்பதும் இல்லை!


மானவ் (தீமையே எனும் அணி):

ஆனால், சாதாரணமாக சாப்பாடு சாப்பிடும் ஒவ்வொருவரும் கூடவே காய்கறிகளையும் சேர்த்துத்தான் சாப்பிடுகின்றனர். எனவே வைட்டமின் ஏ &வை அதன்வழியாக பெற்றுக்கொள்வார்கள்.....


கல்பனா (நடுவர்)

நேரம் முடிந்தது!.


அர்ச்சனா (நன்மையே எனும் அணி)

காய்றிகளோடு சோறு உண்டாலும் அது அவர்களின் துணை உணவுதான். துணை உணவை முக்கிய உணவாக உண்ண முடியாது.


கல்பனா (நடுவர்)

நேரம் முடிந்தது... தற்போது ‘‘மரபணு மாற்றப்பட்ட விதைகள் மனிதர்க்குத் தீமையே’’ எனும் அணியின் முதல் பேச்சாளர் தனது கருத்துக்களை வாதிடுவார்.


சுகன்யா (தீமையே எனும் அணி)

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுகன்யா. நான் தீமையே எனும் அணியின் முதல் பேச்சாளர். நாம் மரபணுமாற்றப்பட்ட விதைகளைப் பயிரிட்டால், நமது பாரம்பரிய விதைகளை இழந்து விடுவோம். ஏற்கனவே பெரும்பான்மையான பாரம்பரிய விதைகளை இழந்து விட்டோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தால், நமது பாரம்பரிய விதைகளை முழுவதுமாக இழந்து விடுவோம்.


கல்பனா (நடுவர்)

இது எதிர்த்து வாதிடுவோருக்கான நேரம்...


நிதா (நன்மையே எனும் அணி)

சுகன்யா கூறினார், மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்தினால் நமது பாரம்பரிய விதைகளை இழந்து விடுவோம் என்று. ஆனால் நாம் கலப்பின விதைகளை பயிரிட்டதால், ஏற்கவே நமது பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம். அதனால் கலப்பின விதைகளுக்கு மாற்றாக மரபணு மாற்றப்பட்ட விதைகளையே பயன்படுத்தலாம். அவை பூச்சி தாக்காதவையும் கூட..


பிரசாந்த் (நன்மையே எனும் அணி):

நாம் கலப்பின விதைகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றிற்கு அதிக பூச்சிமருந்துகள் தெளிக்கிறோம். அதனால் விசமாக்கப்பட்ட உணவையே உண்கிறோம்.


சுபாஷ் (தீமையே எனும் அணி):

ஏற்கனவே கலப்பினங்களால் நமது பெரும்பான்மையான பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம். ஆனால் மரபணு மாற்றப்ட்ட விதைகளைகளால் நமது ஒட்டுமொத்த பாரம்பரிய விதைகளையும் இழக்க வேண்டுமா? மேலும் பிரசாந்த் கூறினார், பூச்சிக்கொல்லிகளால் நாம் விசத்தை உண்கிறோம் என்று., நம்மால் இயற்கை விவசாய உணவுகளையும் உண்ணமுடியுமே! மரபணு மாற்றப்பட்ட விதைகள் தேவையில்லையே.


நிதா ( நன்மையே எனும் அணி)

நீங்கள் இப்போதே சாக விரும்புகிறீர்களா? அல்லது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகா?......


கல்பனா ( நடுவர்):

நேரம் முடிந்தது!

தற்போது ‘‘நன்மையே’’ எனும் அணியின் இரண்டாவது பேச்சாளர் தன் வாதத்தை முன்வைக்க வருகிறார்..


நிதா ( நன்மையே எனும் அணி):

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நிதா. நான் ‘நன்மையே’ எனும் அணியின் இரண்டாவது பேச்சாளர். நான் பி.டி ரக கத்தரிக்காய் பற்றிப் பேசப்போகிறேன். அனேகமாக இங்கிருக்கும் அனைவரும் கத்தரிக்காய் சாப்பிடுவீர்கள் என்று நினைக்கிறேன். நமது வீடுகளில் கத்தரிக்காயை அரியும் போது அதற்குள் புழுக்கள் இருப்பதை பார்த்திருப்போம். அதைத் தவிர்ப்பதற்கு விவசாயிகள் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகிறார்கள். அம்மருந்துகள் நமது உடல் நலத்திற்கு கேடானவை. நாம் பி.டி ரக கத்தரிக்காய்களைப் பயன்படுத்தலாம். அவை பூச்சி தாக்காதவை மற்றும் அளவில் பெரியவை. அதனால் விவசாயிகளும் அதிக பணம் பெறுவார்கள், மேலும் ஒரு கத்திரிக்காய் ஒரு குடும்பம் முழுவதற்கும் போதுமானது. எனவே பணத்தையும் நம்மால் சேமிக்க முடியும்.


கல்பனா (நடுவர்)

நேரம் முடிந்தது... தற்போது இதை எதிர்ப்போர் பேசலாம்.....


அபிஜித் (தீமையே எனும் அணி)

பி.டி கத்தரிக்காயில் தீமையை விளைவிக்கும் மரபணுக்கள் உள்ளன. சில வகை பூச்சிகள் கத்தரிக்காயை மட்டுமே சாப்பிடக் கூடியவை. அப்பூச்சிகள் இந்த பி.டி கத்தரிக்காயை சாப்பிட்டால் இறந்துவிடும். சில பறவையினங்கள் அந்த பூச்சிகளை மட்டுமே சாப்பிடக்கூடியவை. அவ்வகைப் பறவைகளுக்கு அப்பூச்சிகள் கிடைக்காவிட்டால் அதன் இனமும் அழிந்துவிடும். எனவே இங்கு உணவுச்சங்கிலி முறிக்கப்படுகிறது.


மானவ் (தீமையே எனும் அணி)

பி.டி கத்தரிக்காய் போன்ற விதைகளால் நிறைய மக்களும் இறக்க நேரிடும்!..


ராகுல் (தீமையே எனும் அணி)

பி.டி கத்தரிக்காய் விதைகள் பெரியபெரிய அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அங்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். பிற நாடுகளில் அவற்றை அதிக விலைக்கு விற்கிறார்கள். எனவே விவசாயிகள் அதனை வங்கியில் கடன் பெற்றுத்தான் வாங்குகிறார்கள். பணத்தை திருப்பிச் செலுத்த முடியாதபோது தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.


பிரசாந்த் (நன்மையை எனும் அணி)

அது அவ்விதைகளின் பிரச்சனை அல்ல., அந்நிறுவனங்கள் மற்றும் அரசின் பிரச்சனை!


கல்பனா (நடுவர்)

நேரம் முடிந்தது!...

தற்போது தீமையே எனும் அணியின் இரண்டாவது பேச்சாளர் தன் வாதத்தை முன் வைப்பார்.


சுபாஷ் ( தீமையே எனும் அணி)

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுபாஷ். நான் தீமையே எனும் அணியின் இரண்டாவது பேச்சாளர். மரபணு மாற்றப்பட்ட விதைகள் பிற உயிரிகளுக்கு தீமையை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மகரந்தம் மோனார்க் பட்டாம்பூச்சிகளுக்கு விஷம் என்று கண்டுபிடித்துள்ளனர்.கல்பனா ( நடுவர்)

தற்போது இதை மறுத்துப் பேசுவோர் பேசலாம்.


பிரசாந்த் (நன்மையே எனும் அணி)

அவை நச்சுத்தன்மை வாய்ந்தவை தான். ஏனென்றால் அவை ‘பி.டி.ரக விதைகள்’. அவை கண்டிப்பாக நஞ்சைத்தான் உண்கின்றன!


நிதா (நன்மையே எனும் அணி)

அவை வேறு சில நோய்களால் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்காது. வேறு சில நோய்களாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.மானவ் (தீமையே எனும் அணி)

நிதா கூறினார், அவை வேறுசில காரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று. ஆனால் அமெரிக்காவின் விவசாயத் துறை, பி.டி.ரகத்தின் மகரந்தத்தை பரிசோதித்து, அவை மோனார்க் பட்டாம்பூச்சிகளுக்கு விஷம் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் மோனார்க் பட்டாம் பூச்சிகள் இப்பயிர்களுக்கு எவ்வித தீமையையும் ஏற்படுத்துபவை அல்ல. வெறும் மகரந்தச் சேர்க்கையை மட்டுமே செய்கின்றன. ஆனால் அவை பி.டி.பயிர்களின் நச்சுத்தன்மையால் இறக்கின்றன. மேலும் அவை சுற்றுச்சூழலில் மிகச்சிறந்த பங்கு வகிப்பவை. ஆனால் அப்பட்டாம்பூச்சிகள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன


பிரசாந்த் (நன்மையே எனும் அணி)

நீங்கள் பூச்சிமருந்துகளைப் போட்டு மோனார்க் பட்டாம் பூச்சிகளை அழியுங்கள். இல்லாவிட்டால் பி.டி. பயிர்கள் மூலம் நாங்கள் அழிக்கிறோம்.


கல்பனா (நடுவர்)

நேரம் முடிந்தது...

தற்போது நன்மையே எனும் அணியின் அடுத்த பேச்சாளர் தம் வாதத்தை முன்வைப்பார்.


பிரசாந்த் ( நன்மையே எனும் அணி)

என்பெயர் பிரசாந்த். நான் நன்மையே எனும் அணியின் மூன்றாவது பேச்சாளர். நான் மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்து கூறப்போகிறேன். மரபணு மாற்றப்பட்ட விதைகள் நமது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவை. பி.டி.பருத்தியை எடுத்துக்கொள்ளோம். பி.டி பருத்தி பூச்சிகளை அழிக்கும் மரபணுவை பெற்றுள்ளது. அதனால் எந்த பூச்சியும் இப்பருத்தியைத் தாக்காது. அதனால் நாம் பூச்சிமருந்துகளை வாங்கவேண்டாம். பணத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் அதிக பணத்தை பெறவும் முடியும்.


கல்பனா (நடுவர்)

தற்போது மறுத்து வாதிடலாம்..


மானவ் (தீமையே எனும் அணி)

பி.டி.பருத்தியின் பரிசோதனையின் போது, பிடி பருத்திக்கொட்டைகளை தின்றதால் நிறைய பசுக்கள் இறந்து விட்டன.


பிரசாந்த் (நன்மையே எனும் அணி)

பசுக்கள் எப்படி பி.டி.பருத்தி விதைகளை சாப்பிட்டிருக்க முடியும்? அந்த பசுக்கள் பி.டி. பருத்தி விதைகளைத்தான் உண்டன என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை.


நிதா (நன்மையே எனும் அணி)

பசு புல்லைத்தானே சாப்பிட வேண்டும். அது பி.டி பருத்தி விதைகளை சாப்பிட வேண்டியதில்லையே!.


மானவ் (தீமையே எனும் அணி)

விவசாயிகள் மாடுகளுக்கு பருத்திக் கொட்டைகளை அளிப்பர். அதனால் மாடுகள் பி.டி பருத்திக்கொட்டைகளைத் தின்றன. மேலும் பிரசாந்த் கூறினார் அதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று., நிறுவனங்கள் இது போன்ற தங்களது தயாரிப்புகளை விற்க நினைத்தால், அறிவியல் ஆதாரங்களை அவர்கள் மறைத்துவிடுவர், இது மக்கள், விலங்குகளுக்குக் கூட விஷமானது. ஒருமுறை சிகரெட் உடல்நலத்திற்கு நல்லது என்று ஒரு நிறுவனம் கூறியது., பல ஆண்டுகளுக்குப் பிறகு அது உடல்நலத்திற்குக் கேடானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோலத்தான் இதுவும். மரபணு மாற்றப்பட்ட விதைகள் கூட அதுபோலத்தான்....


கல்பனா (நடுவர்)

நேரம் முடிந்தது...

தற்போது தீமையே எனும் அணியின் மூன்றாவது பேச்சாளர் தன் வாதத்தை முன் வைப்பார்.


ராகுல் (தீமையே எனும் அணி)

அனைவருக்கும் வணக்கம். என்பெயர் ராகுல். நான் தீமையே எனும் அணியின் மூன்றாவது பேச்சாளர். நான் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மனிதர்க்கு தீமையானவை என்பது பற்றிக் கூறப்போகிறேன். ஒருமுறை அமெரிக்க அறிவியலாளர்கள் பயிர்களின் மரபணுக்களை, மாற்றிஅமைக்கும்போது ஒரு மரபணு தப்பித்து தீமையை ஏற்படுத்தியது. அது களைச்செடிக்குள் சென்று வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாததாக மாறி, பயிர்கொல்லியாகி விட்டது.


கல்பனா (நடுவர்)

தற்பாது, மறுத்து பேசுவோர் பேசலாம்...


நிதா ( நன்மையே எனும் அணி)

ராகுல் கூறினார் அமெரிக்காவில் ஒரு மரபணு தப்பித்து விட்டது என்று. மரபணுக்கள் என்பவை நினைவுக்குறிப்புதகட்டிற்குள் (மெமரி கார்ட்) வைக்கப்பட்ட கோப்புகள் போன்றவை. நாம் அதை எடுத்து இன்னொரு கோப்பிற்குள் வைத்தால் ஒழிய அது வளராது. அது ஒன்றும் வாழும் உயிரி அல்ல. தாவி வந்த வேறோன்றிற்குள் செல்வதற்கு!


அபிஜித் (தீமையே எனும் அணி)

நினைவு தகட்டில் இருந்து ஒரு கோப்பை எடுத்து இன்னொன்றில் வைக்கும் போது கூடவே வைரசும் சேர்ந்துதான் செல்லும். அது அந்த கோப்பை சிதைக்கவும் செய்யும்.


மானவ் (திமையே எனும் அணி)

அக்களைச்செடி ஒரே நாளில் பூச்சிதாக்காததாக மாறிவிடவில்லை. மரபணு மாற்ற விதைகளால் தான் அப்படி ஆனது...


நிதா (நன்மையே எனும் அணி)

வைரஸ் உள்ளே சென்று விட்டால் அது அழிக்கப்பட்டு விடும். குதித்து வெளியே வராது.


அர்ச்சனா (நன்மை எனும் அணி)

ராகுல் கூறினார் அந்த மரபணு தப்பித்து களைக்குள் சென்று விட்டதென்று. அந்த மாற்றியமைத்தல் எங்கு நடந்தது? அந்த மாற்றம் ஆய்வகத்தில் தானே......


கல்பனா (நடுவர்)

நேரம் முடிந்தது...

தற்போது இந்த விவாதம் நிறைவடைந்தது. விவாதத்தின் தீர்வை சிறப்பு விருந்தினரான திரு. பி. சாய்நாத் அவர்களிடமே விட்டு விடுகிறோம், அவர் எங்களுக்கு உரைப்பார்....


P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath