ரச்செனஹல்லியின் குப்பத்தில் வாழும் மக்தும்பே எம்.டி. ஊரடங்கு நேரத்தில் குடும்பத்தின் பசியை எப்படி போக்குவது என்கிற பதைபதைப்பில் இருக்கிறார். “என் கணவருக்கு வார ஊதியம் கிடைத்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு உணவு வாங்க செல்வோம். கடந்த இரண்டு வாரங்களில் யாரும் சம்பளம் கொடுக்கவில்லை. அதனால் எங்களால் உணவுப் பொருட்களை வாங்க முடியவில்லை,” என்கிறார் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பத்து நாட்களுக்கு பிறகு நான் சந்தித்த 37 வயதான மக்தும்பே. அவரின்  கணவர் கட்டடங்களுக்கு வெள்ளை அடிக்கும் வேலை பார்ப்பவர். வழக்கமாக ஒரு வாரத்துக்கு 3500 ரூபாய் வரை சம்பாதித்தவருக்கு, மார்ச் 25ம் தேதி ஊரடங்கு தொடங்கியதிலிருந்து வேலை எதுவும் கிடைக்கவில்லை.

மூன்று குழந்தைகளை கொண்ட தம்பதியர் 10 வருடங்களுக்கு முன் வேலை தேடி பெங்களூருவுக்கு புலம்பெயர்ந்தனர். கர்நாடகாவின் விஜயபுர மாவட்டத்தின் (முன்பு பிஜாப்பூர்) தளிகோட்டா (தளிகோட்டி என்றும் அழைக்கப்படும்) டவுனிலிருந்து வந்தவர்கள். மக்தும்பேவின்  கணவர், மவுலாசாப் தோடாமனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாங்கும் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடியது. “ஒவ்வொரு வாரமும் நாங்கள் உணவுப் பொருட்கள் வாங்குவோம். ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு போன்றவை வாங்கி எங்கள் வாழ்க்கையை ஓட்டுவோம். இப்போது அது நின்று விட்டது. எங்கும் எங்களால் இப்போது செல்ல முடியாது. உணவு வாங்க வெளியே செல்ல விரும்புகிறோம்.”

ஏப்ரல் 4ம் தேதி வடக்கு பெங்களூரின் குப்பத்தில் வாழ்ந்தவர்களை நாங்கள் சந்தித்தபோது, தங்களின் பல்வேறு துயரங்களை பற்றி அவர்கள் பேசினார்கள். மத்திய நிதி அமைச்சர் அறிவித்த நிவாரணத்தில் கிடைக்கும் மானிய விலை அரசி அவர்களுக்கு கிடைக்காது. அவர்களிடம் குடும்ப அட்டை இல்லை. சிலரிடம் இருந்தாலும் அது அவர்களின் ஊர் முகவரியை கொண்டிருப்பதாக சொல்கிறார் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து வந்த 30 வயதான மனிக்யம்மா. “பெங்களூருவில் அந்த குடும்ப அட்டைகள் பயன்படாது,” என்கிறார் அவர்.

“வேலையில்லாமல் நாங்கள் சிரமப்படுகிறோம். நிறைய கஷ்டம் இருக்கிறது. எங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றன. வாடகை கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன செய்வது?” என கேட்கிறார். ஊரடங்குக்கு முன் வரை மனிக்யம்மாவும் அவரது கணவரும் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை பார்த்தார்கள். ஏழு வருடங்களுக்கு முன் பெங்களூருவுக்கு வந்தவர்கள். நான்கு குழந்தைகள் அவர்களுக்கு.

மனிக்யம்மா நகரத்துக்கு வந்த அதே காலத்தில் ராய்ச்சூரில் இருந்து வந்தவர் 27 வயதான லஷ்மி, என். ஊரடங்கு தொடங்கும்வரை அவர் வடக்கு பெங்களூருவிலிருந்து கட்டுமான வேலைகளில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். “நாங்கள் சிமெண்ட் செய்து கற்களை உடைப்போம். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலியாக எங்களுக்கு கிடைக்கும்,” என்கிறார். தனியே அவர் வாழும், கூரை வேயப்பட்ட ஓரறை கொண்ட வீட்டுக்கு 500 ரூபாய் வாடகை கொடுக்கிறார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சந்திக்கும் பல துன்பங்களை பற்றி பேசினார்கள். அரசின் மானியவிலை அரிசி அவர்களில் எவருக்கும் கிடைக்காது. பலரிடம் குடும்ப அட்டை இல்லை.

காணொளி: ‘எங்களின் கை, காலை உடைத்தது போலிருக்கிறது.’

வாடகை மட்டுமென இல்லாமல், ஊரடங்கு காலத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் உணவு விலையை பற்றி அனைவரும் கவலைப்படுகிறார்கள்.  “காசில்லாமல் நாங்கள் எதை வாங்குவது? எங்களால் ஒன்றும் சேமிக்க முடியவில்லை. வேலை பார்த்தபோது கூட சரி. அதையும் இப்போது எங்களிடமிருந்து பிடுங்கி விட்டார்கள்,” என்கிறார் 33 வயதாகும் சோனி தேவி. ரச்செனஹல்லிக்கு அருகே இருக்கும் ஒரு குடியிருப்பில் அவர் வீட்டுவேலை பார்க்கிறார்.

மாதத்துக்கு 9000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த சோனி மே மாதத்திலிருந்து திரும்ப வேலைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். மார்ச் மாதத்துக்கு 5000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரலில் அவரால் வேலைக்கு போக முடியாததால் சம்பளம் ஏதும் கொடுக்கவில்லை. 11 வயதுக்கு கீழான குழந்தைகள் மூவரை கொண்ட அவரின் குடும்பத்துக்கு ஏப்ரல் மாதம் மிகவும் கடினமாக இருந்தது. அவருடைய கணவர் லக்கன் சிங் எப்போதாவது கட்டுமான வேலை பார்ப்பவர். நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பாதிப்பார். இதய நோயால் அவரால் அதிகம் வேலை பார்க்க முடிவதில்லை. மக்தும்பே வசிக்கும் அறை போன்ற அறையில் 2000 ரூபாய் வாடகைகொடுத்து குடும்பம் வாழ்கிறது. ஜார்க்கண்ட்டின் கிரிடி மாவட்டத்தில் 13 வயது மகளை உறவினர்களிடம் விட்டுவிட்டு ஏழு மாதங்களுக்கு முன் சோனி பெங்களூருவுக்கு வந்திருக்கிறார்.

ஏப்ரலில் நாங்கள் சந்தித்தபோது காய்கறிகளின் விலைவாசியை பற்றி சோனி கவலைப்பட்டார். “ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாயாக இருந்தது. இப்போது ஐம்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த நோய் வந்ததிலிருந்து எங்கள் வீட்டில் காய்கறிகள் சமைப்பதை நிறுத்திவிட்டோம்”. உதவி செய்பவர்கள் குப்பத்தில் இருக்கும் மக்களுக்கு உணவுகளை அனுப்பி வைக்கிறார்கள். “ஒரு நாளைக்கு ஒரு வேளை சமைத்த உணவு எங்களுக்கு கிடைக்கிறது,” என்கிறார் சோனி தேவி.

“காய்கறிகள் என்றாலென்ன என்பதையே நாங்கள் மறந்துவிட்டோம்!” என்கிறார் மக்தும்பே. “எங்களுக்கு கொடுக்கப்படும் அரிசியை  (தொண்டுக் குழுக்களால்) வைத்துதான் வாழ வேண்டியிருக்கிறது. தன்னார்வத் தொண்டுக் குழு சமைக்காமல் உணவுப் பொருட்கள் கொடுத்தாலும் போதாது. “சிலருக்கு கிடைத்திருக்கிறது. சிலருக்கு கிடைக்கவில்லை. சிரமம் அதிகரிக்கிறது,” என்றார் அவர்.

விரக்தியுடன் மனிக்யம்மா, “யாரேனும் உணவு எடுத்து வந்தால் அது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். இங்கு 100 பேர் இருக்கிறோம். எங்களுக்குள் சண்டை ஏற்படுத்துவதாக அது மாறி விடக் கூடாது” என்கிறார்.

ரச்செனஹல்லிக்கு திரும்ப நான் ஏப்ரல் 14ம் தேதி சென்ற போது, ஏப்ரல் 4ம் தேதி அவர்களை சந்தித்து விட்டு நான் கிளம்பிய சில மணி நேரங்களில் நடந்த சம்பவத்தை பெண்கள் கூறினர்.

‘யாரேனும் எங்களுக்கு உணவு கொண்டு வர விரும்பினால், எல்லாருக்குமென கொண்டு வர வேண்டும். அல்லது யாருக்கும் இல்லாமலிருக்க வேண்டும். எங்களுக்குள் அது சண்டையை உருவாக்கிவிடக் கூடாது.’

காணொளி: ‘சண்டை போடுவதற்கான நேரம் இது அல்ல’

குப்பத்தில் வசிப்பவர்கள் அன்று மாலை இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்ருதஹல்லியில் இருக்கும் சரீன் டாஜ் என்கிற சமூக சேவகரின் வீட்டுக்கு வந்து உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது. “குடும்ப அட்டைகள் இல்லாதவர்கள் வந்து உணவுப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம் என அவர் சொல்லியிருந்தார். ஆகவே நாங்களும் அங்கு சென்று வரிசையில் காத்திருந்தோம்,” என லஷ்மி நினைவுகூர்ந்தார்.

அதற்குப்பிறகு நடந்ததுதான் அவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. “எங்களின் தருணத்துக்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தபோது சில ஆட்கள் வந்து கத்தத் தொடங்கினார்கள். உணவுப்பொருள் பெறுபவர்களுக்கு அடி கிடைக்கும் என மிரட்டினார்கள். நாங்கள் பயந்துபோய் எதையும் வாங்காமல் ஓடி வந்துவிட்டோம்,” என்கிறார் லஷ்மி.

15-லிருந்து 20 பேர் வீட்டுக்கு வெளியே திரண்டு அவமானப்படுத்தும் வகையில் கத்திக் கொண்டிருந்தார்கள் என்கிறார் சரீன். “நாங்கள் உணவு கொடுப்பதில் அவர்களுக்கு கோபம். அவர்கள் மிரட்டல்கள் விடுத்தார்கள். ‘அவர்கள் தீவிரவாதிகள். நிஜாமுதினிலிருந்து வந்தவர்கள். அவர்களின் உணவை வாங்காதீர்கள். உங்களுக்கு நோய் வந்துவிடும்’ என்றெல்லாம் கத்தினார்கள்.”

ஏப்ரல் 6ம் தேதி நிவாரணக் குழுவுடன் சேர்ந்து தசரஹல்லியில் சரீன் உணவு கொடுக்கும்போது அவதூறுகளை கத்திய ஒரு கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். “கிரிக்கெட் மட்டைகளை கைகளில் வைத்துக் கொண்டிருந்த கும்பலால் நாங்கள் சூழப்பட்டாம். என் மகன் கடுமையாகக் காயம் பட்டான்.” என்கிறார் அவர்.

ஒருவழியாய் ஏப்ரல் 16ம் தேதி சரீனின் குழுவால் ரச்செனஹல்லியின் அன்றாடக் கூலித் தொழிலாளர்களுக்கு சமைக்காத உணவுப் பொருட்களை கொடுக்க முடிந்தது. “நகராட்சியில் வேலை பார்த்த ஒருவரின் உதவியால் BBMP (நகராட்சி) வாகனத்தில் உணவுப் பொருட்களை அனைவருக்கும் தர முடிந்தது,” என்கிறார் சரீனின் குழுவில் பணிபுரியும் சவுரப் குமார் என்கிற தன்னார்வலர்.

“இதற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. உணவின்றி தவிக்கும் குழந்தைகள் எங்களுடன் இருக்கின்றன!” எனக் கூறுகிறார் மக்தும்பே. “இதனால் என்ன பெரிய வித்தியாசம் நேர்ந்துவிடப் போகிறது? அண்டை வீட்டுக்காரர்களாக நாங்கள் வாழ்கிறோம். குழந்தைகள் எல்லாமும் ஒரு தாயின் வயிற்றிலிருந்துதானே பிறக்கிறது? மதவெறி அரசியல் எங்களுக்கு வேண்டாம், நாங்கள் பட்டினி கூட கிடந்து கொள்கிறோம்.”

“இவற்றுக்குள் எங்களை இழுத்துவிட்டு கடைசியில் எங்களை சட்னி ஆக்கி விடுவார்கள்,” என மேலும் கூறுகிறார் மக்தும்பே. “ஏழைகளுக்கு அதுதான் நடக்கிறது. நாங்கள்தான் செத்துக் கொண்டே இருக்கிறோம்.”

தமிழில்: ராஜசங்கீதன்.

Sweta Daga

Sweta Daga is a Bengaluru-based writer and photographer, and a 2015 PARI fellow. She works across multimedia platforms and writes on climate change, gender and social inequality.

Other stories by Sweta Daga
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan