தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ஜாதவ்பூர் ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த பரேஷ்பதி சர்தார் “இன்று ரயிலுக்குள் அமர்வதற்கு இடம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறாயா?’ என்று சத்தமாகக் கேட்டார். அவர் அருகில் நின்றுக்கொண்டிருந்த பெண், அவநம்பிக்கையுடன் தலையசைத்து அந்தக் கேள்வியைக் கேட்டு சிரித்தார்.

மாலை 4:35 மணியளவில்   கன்னிங் பகுதிக்குச் செல்லக் கூடிய ரயிலுக்காகக் காத்திருநத்தார் பிரேஷ்பதி. அந்த ரயில் ஜாதவ்பூர் ரயில்வே நிலையத்திற்குள் வேகமாக வருகிறது. அந்தப் பெண் அடித்து பிடித்து அந்தக் கூட்டத்திற்குள் புகுந்து, நிரம்பி வழியும் இரண்டு  பெண்கள் ரயில்பெட்டிகளில் ஒன்றில் நுழையமுற்படுகிறார்.

அந்த ரயில் வடக்கு கொல்கத்தாவின் சீல்டாப் பகுதியில் இருந்து வருகிறது. இது பார்க் சர்க்கஸ், பல்லிகுஞ், தகுரியா ஆகிய ரயில்வே சந்திப்புகளை தாண்டி ஜாதவ்பூர் சந்திப்பிற்கு  வருகிறது. இந்த ரயில் பெரும்பான்மையாக நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கக்கூடிய பாகா ஜடின், நியூ கேரியா மற்றும் கேரியா ஆகிய பகுதிகளில் நின்றுவிட்டு இங்கு வருகிறது. ஜாதவ்பூர் ரயில்வே சந்திப்பில் பெண்கள் காத்திருப்பதை போன்றே, தெற்கு கொல்கத்தாவை சுற்றியுள்ள ஊர்களில் பணிபுரியக்கூடியப் பெண்கள் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் சந்திப்புகளில் ரயிலுக்காகக் காத்திருகின்றனர்.

பெரும்பாலானோர்கள் 45 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும்  சீல்டா-கன்னிங் வழித்தடத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ரயில்  16 சந்திப்புகளைக் கடந்து வருகிறது. இதேபோன்று, சீல்டா-லக்ஷ்மிகண்டப்பூர் ரயில் 65 கிலோமீட்டர் தொலைவு பயணித்து 25 சந்திப்புகளைக் கடந்து வருகிறது அல்லது சீல்டா-நம்க்கனா ரயில் தெற்கு நோக்கி சிறிது தூரம் செல்கிறது. எனவே, கிழக்கு ரயில்வேயின் ரயில்களை கொல்கத்தா பகுதியில் சிலர் ‘ஜி சிறப்பு ரயில்’ என்று கூறுகின்றனர். ஜி என்பது பெங்காலியில் வீட்டுவேலைப் பார்க்கக்கூடிய பெண்களை இழிந்துரைக்கக்கூடிய சொல்லாகும்.

Breshpati Sardar and other women workers on a crowded train from Sealdah to Canning, via Jadavpur
PHOTO • Urvashi Sarkar
Breshpati Sardar and other women workers on a crowded train from Sealdah to Canning, via Jadavpur
PHOTO • Urvashi Sarkar

சீல்டா-கன்னிங் ரயில்: கிழக்கு ரயில்வேயின் ரயில்களை கொல்கத்தா பகுதியில் சிலர் ‘ஜி சிறப்பு ரயில்’ என்று கூறுகின்றனர். ஜி என்பது பெங்காலியில் வீட்டுவேலைப் பார்க்கக்கூடிய பெண்களை இழிந்துரைக்கக்கூடிய சொல்லாகும்

பரேஷ்பதி அந்த மாலையில், பணியிலிருந்து வீடு திரும்பும் போது, நெற்றியில் சிவப்பு நிற பொட்டு வைத்துக்கொண்டு, ஆரஞ்சு நிற புடவையை அணிந்த படி, ,கைகளில் வெள்ளை நிற கைப்பை பற்றிக் கொண்டு ரயிலினை நோக்கி நடந்து வருகிறார். ரயில் பெட்டியினுள் கூட்டநெரிசலால் அவரது உடல், கைப்பை மற்றும் வளையல் நசுக்கப்பட்டு, அவர் நிற்பதற்கு மட்டுமே இடம் கிடைக்கிறது. தொடர்ந்து அவர் அவருக்கு அண்மையில் உள்ள ஜன்னலோர இருக்கையைப் பார்த்தபடி இருக்கிறார். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்து வெளியேறிய போது, தான் விரும்பிய அந்த இருக்கையைப் பிடிப்பதற்காக பரேஷ்பதி முயல்கிறார். அதேவேளையில், அந்த இருக்கையில் அமர இன்னொரு பக்கம் முயலும் பெண், அவரை நோக்கி கூச்சலிடுகிறார்.

அவர்களுக்கிடையே சண்டை மூளத்தொடங்கியது. பரேஷ்பதியின் குரல் உயர்கிறது. அந்தப் பெண்ணின் முகம் கோபத்தில் சிவக்கிறது. இந்நிலையில், அருகில் இருந்த மற்றொரு பெண் உடனடியாக தலையிட்டு அவர்களை அமைதி ப்படுத்தி, அந்தப் பெண்ணிற்கு அவரது மடியில் இடம் தருகிறார்.  பரேஷ்பதியின் முகத்தில் புன்னகை மீண்டும் திரும்புகிறது. மேலும், அந்தப் பெண் பாம்பு முயலை விழுங்கும் காணொளியை அருகில் உள்ள பெண்ணுக்கு உற்சாகத்தோடு காண்பிக்கிறார். "நான் பொதுவாக சண்டையிடுவதே இல்லை. ஆனால்,அந்தப் பெண்கள் எவ்வாறு நடந்துக் கொண்டார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கோபத்தோடு கூறினார்.

பரேஷ்பதி ரயிலில் ஏறிய ஜாதவ்பூரில் இருந்து 75 நிமிட பயணத்திற்குப் பின்னர், சுமார் 45 கிலோமீட்டர் தொலைவு பயணித்து அந்த ரயில் கன்னிங் பகுதிக்கு வந்தடைகிறது. கன்னிங் பகுதி தெற்கு 24 பர்கனஸ் மாவட்டத்தில் உள்ள சுந்தர்பன் பகுதியின் விளிம்புப் பகுதியில் அமைத்துள்ள ஊராகும். வேலைக்கு செல்லும் அந்தப்பெண்கள் வசிக்கக்கூடியப் பகுதிகளில் போதிய வேலைவாய்ப்பில்லாததால் அவர்கள் தினந்தோறும் இந்த நகரத்திற்கு வரவேண்டியதாயிற்று.

பிரேஷ்பதியின் வீடு ரயில் நிலையத்தில் இருந்து 30 நிமிட நடைபயணம் மேற்கொள்ளும் தூரத்தில், சந்தைக்கு மிகஅருகில் உள்ளது. அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் அவர் கூறுகையில், "முன்பு நான் என் பெற்றோர்களுடன் வசித்து வந்தேன். அப்போது பள்ளிக்குச் சென்று வருவேன். ஆனால் 5 ஆம் வகுப்புக்குப் பிறகு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்வதே கடினமாக அமைந்தது".என்றார். பரேஷ்பதிக்கு மூன்று தங்கைகளும், ஒரு சகோதரனும் இருக்கின்றனர். அவர் 11 வயதுடையவராக இருந்த போதே, வீட்டு வேலைச் செய்யத் தொடங்கியுள்ளார். அதிலிருந்து தற்போது வரை அதையே தொடர்ந்தும் வருகிறார். அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்துள்ளது. தற்போது அவருக்கு 28 வயதாகிறது.

At Breshpati Sardar’s home
PHOTO • Siddharth Adelkar
Breshpati Sardar’s daughters
PHOTO • Siddharth Adelkar

பிரெஷ்பதி சர்தார் அதிகாலை 4:30க்கு கேனிங்கில் இருந்து தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூருக்கு செல்லக்கூடிய ரயிலில் செல்கிறார். மீண்டும் மாலை 4:35 மணிக்கு அதே ரயிலில் ஏறி இரண்டு அறைகளைக் கொண்ட அவரது வீட்டிற்கு திரும்புகிறார்(இடது); பிரேஷ்பதிக்கும் அவரது கணவருக்கும் பணியின் காரணமாக போதிய நேரம் இல்லாததால் அவர்களது மகள்களான சானியா, தானியா(வலது), மகன் ஆகியோர் பிரேஷ்பதியின் தாய் வீட்டில் அவரது உறவினர்களுடன் வசித்து வருகின்றனர்

பிரேஷ்பதியின் மகள்களான, 11 வயது தானியாவும், 10 வயது சானியாவும் அவர்களது அம்மாவிற்காக கிட்டத்தட்ட 6 மணிவரை அவருக்காகக்காத்திருந்தனர். அப்போது நாங்கள் அவர்களுடன்தான் இருந்தோம். அவருக்கு 6 வயதுடைய பிஸ்வஜித் என்ற மகனும் இருக்கிறார். பிரேஷ்பதியின் குழந்தைகள் அவரது தாய் வீட்டில் உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். பணி நேரத்தின் காரணமாக பிரேஷ்பதியும் அவரது கணவர் சஞ்சிப் சர்தாரும் குழந்தைகளோடு மிகவும் குறைந்த நேரமே செலவிடுகின்றனர். சஞ்சிப் இனிப்புத் தின்பண்டத் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ. 9,000 ஈட்டுகிறார்.

அந்த மாலைப்பொழுதில், அவரது மகள்கள் அவர்களது பாட்டிவீட்டிலிருந்து இங்கு வந்துள்ளனர். பிரேஷ்பதி அவர்களை சமைப்பதற்கான எண்ணெய் மற்றும் காய்கறி வாங்கி வரவும்,சாண எரிவாயு அடுப்பை பற்றவைக்கவும், அருகில் உள்ள குழாயிலிருந்து நீர் எடுத்து வரவும் கட்டளை இடுகிறார். அவரும் அவரது குடும்பமும் உணவு உண்ட பின்னர், பாத்திரங்களைக் கழுவி விட்டு,சில மணிநேரங்கள் மட்டுமே உறங்கும் அவர், அதிகாலை 4:30 மணிக்கு ஜாதவ்பூர் செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக கன்னிங் ரயில்நிலையத்திற்கு சரியான நேரத்திற்குள் செல்லவேண்டுமென  3 மணிக்கே எழுந்து விடுகிறார். "இந்தப்பகுதி இருளாகவும், சிலசமயம் குளிராகவும் இருக்கும். ஆனால், அதுகுறித்து நான் அச்சம் கொள்வதில்லை. ஏனென்றால், என் அண்டைவீட்டார் பலர் கொல்கத்தாவில் உள்ள வீடுகளில் வீட்டுவேலை பார்க்கிறார்கள். அவர்கள் என்னுடன் சேர்ந்து பயணிக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொருவர் வீடுகளைக் கடந்து செல்லும்போதும் அவர்களை  வேலைக்கு செல்ல அழைத்தபடி கடந்து செல்லுவோம்" என்று பிரேஷ்பதி கூறினார்.

பிரேஷ்பதி நாளொன்றுக்கு ஆறு வீடுகளில் வீட்டுவேலை செய்கிறார். "என் பணிகள் வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது, பாத்திரம் விலக்குவது, சமைப்பது உள்ளிடவையாகும். ஒட்டுமொத்தமாக இதன்வழியாக நான் மாதத்திற்கு 8,500 ரூபாய் ஈட்டுகிறேன். பொதுவாக நான் வேலைபார்க்கும் வீட்டு உரிமையாளர்கள் உணவும்,தேநீரும் மற்றும் மாதத்திற்கு 3முதல்4 நாட்கள்  விடுமுறையும் தருவார்கள். ஆனாலும்,எல்லா வீட்டு உரிமையாளர்களும் நல்லவர்கள் அல்ல. ஒருமுறை, நான் சில நாட்கள் வேலைக்கு வரவில்லை என்று வீட்டின் உரிமையாளர் ஒருவர், எனது  20 நாள் ஊதியத்தைத் தரவில்லை. எனவே,நான் அங்கு வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்" என்று கூறினார்.

எவ்வாறாயினும், பிரேஷ்பதி அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்களால் பெரும்பாலும் நன்றாக நடத்தப்பட்டதாகவே தெரிவித்தார். எனினும், வீட்டு வேலைப்பார்க்கக்கூடிய பணியாளர்கள் பொதுவாக கடினமான சூழலில் தான் பணிபுரிகிறார்கள். நியாயமானக் கூலி,வரையறுக்கப்படாத பணிநேரம் மற்றும் சலுகைகள், சுரண்டல் மற்றும் பாலியல் சீண்டல் ஆகிய பிரச்சனைகளை தொடர்ந்துச் சந்தித்து வருவதாக கிரிஹோ  ஷ்ராமிக் அதிகர் அபியான் என்ற வீட்டு பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு  கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்குவங்க அரசிடம் கூறிய அறிக்கை கூறுகிறது.

'ஒருவேளை பெண்கள் கூடுதல் கூலி கேட்டால்,அவர்கள் வேலையை இழக்க நேரிடும்,எனவே மற்றவர்கள் குறைந்த ஊதியத்திற்கேப் பணிபுரிந்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர்கள் சில சமயம் பழைய உணவையே தருவார்கள்...

காணொளியில் காண்க: விடியல் ரயிலில் பயணித்து,வீட்டு வேலைகளில் தேய்பவர்கள்

மேலும், இந்த அறிக்கையானது இடைத்தரகர்கள், பணிவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், கட்டாயமாக்கப்படும் இடப்பெயர்வு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களின் பற்றாக்குறை ஆகியவற்றை வீட்டு வேலைப்பார்க்கும் பணியாளர்கள் பாதிக்கப்படுவதற்கானக் காரணங்களாகப் பட்டியலிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சமூக பாதுகாப்புச் சட்டம்(2008), பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 ஆகியவற்றின் கீழ் வீட்டு வேலை செய்பவர்களை அமைப்புச்சாரா தொழிலாளர்களாக வகைப்படுத்தி உள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், அவர்களின் வேலை சூழலை மேற்குவங்க அரசு தற்போது வரை முறைப்படுத்தவில்லை.

வீட்டு வேலை செய்யும் பணியாளர்களின் சமூகப்பாதுகாப்பு மற்றும் குறைந்தப்பட்ச ஊதியம் ஆகியவற்றை உறுதிபடுத்தும் வகையில் ஒன்றிய அரசு வரைவு தேசியக்கொள்கையை வகுத்துள்ளது. ஆனாலும், இதை நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசிடமே  உள்ளது.

கடந்த ஜூன் 2018, முதன்முறையாக வீட்டு வேலை செய்யும் பணியாளர்களின் சங்கமான  பசிம் பங்கா கிரிஹா பரிச்சாரிகா சமிதிக்கு மேற்குவங்க மாநில அரசு வணிகர் சங்கத்துக்கான அங்கீகாரம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, இந்த சங்கம் மணிக்கு நாள்ளொன்றுக்கு 54 ரூபாய் ஊதியம், பேறுகால விடுமுறை, மாதத்திற்கு நான்கு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை மற்றும் பணியிடத்தில் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை ஆகியவற்றை மேற்குவங்க மாநில அரசிடம் கோரியது.

"ஒருவேளை பெண்கள் கூடுதல் கூலி கேட்டால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே மற்றவர்கள் குறைந்த ஊதியத்திற்கேப் பணிபுரிந்து வருகின்றனர்". என்றார் மல்லிகா தாஸ். இவர் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களுக்குச் செயலாற்றக்கூடிய பரிசித்தி என்ற கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் தன்னார்வத் தொண்டு அமைப்பில் பணிபுரிந்து வருகிறார். அவர் கூறுகையில், "பணிபுரியும் இடத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் காப்பகங்கள் இல்லை எனவே, அவர்கள் குழந்தைகளைப் பிறருடன் விட்டுவிட்டு வரும்படி உரிமையாளர்களால் வற்புறுத்தப்படுகின்றனர். மேலும், சிலநேரங்களில் பழைய உணவையே அவர்கள் உண்பதற்காக கொடுக்கின்றனர். அதுமட்டுமல்லாது,  சில உரிமையாளர்கள் அவர்களின் வீட்டுக் கழிப்பறையைக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இந்நிலையில், ரயில் நிலையத்தின் கழிப்பறைகளும் பெரும்பாலும் பூட்டப்பட்டு ,உடைந்து  அல்லது மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பெண்கள் அங்கும் சிறுநீர் கழிக்காமல் மாலையில் தங்கள் வீடுகளை அடையும் வரை பொறுத்திருக்கின்றனர்" என்றார்.

Breshpati Sardar at Canning railway station in the morning
PHOTO • Siddharth Adelkar
Breshpati Sardar sitting in the train early in the morning
PHOTO • Siddharth Adelkar

பிரேஷ்பதி பொழுது விடுவதற்கு முன்னதாகவே பணிக்கு செல்லவேண்டும் என்பதற்காக அதிகாலையிலையே கன்னிங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயிலைப் பிடிப்பதற்காகச் செல்கிறார்

பிரேஷ்பதி வேலைப்பார்க்கும் வீட்டு உரிமையாளர்கள் அவரைக் கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதித்துள்ளனர். அவர் கூறுகையில், "நான் எனது கைகளால் சப்பாத்திக்கு மாவு பிசைகிறேன், காய்கறிகளைத் வெட்டுகிறேன். அவர்கள் ஏன் கழிப்பறையைப் பயன்படுத்துவதை மறுக்கப் போகிறார்கள்?" என்றார். அவருக்கு இருக்கும் பெரிய இடர் என்னவென்றால் அவர் பணிபுரியும் இடத்திலும், பின்னர் வீடு திரும்பும் போதும் நின்றுக்கொண்டே இருப்பது தான். "எனது கால் மற்றும் முதுகுப் பகுதியில் தொடர்ந்து வலியெடுத்துக்கொண்டே இருக்கிறது," என்று கூறினார்.

இரவு முடிந்ததும், அதிகாலை ஏறத்தாழ 4 மணிக்கெல்லாம் கன்னிங் ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கத் தொடங்குகிறது. அந்த ரயில்நிலையத்தின் நடைமேடையில் கைகளில் ஒரு கோப்பை தேநீரும் ரொட்டிகளும் ஏந்தியபடி பிரேஷ்பதியைப் பார்க்கலாம். அந்த அதிகாலைப் பொழுதிலேயே மிகவும் புத்துணர்ச்சியாக தலையை அழகாக முடிந்து, நெற்றியில் பொட்டிட்டு, பிரகாசமான முகத்துடன் தோன்றுகிறார். அவருடன் வேலைக்குச்  செல்லக்கூடிய அவரது தோழி பசந்தி சர்தார் உட்பட ஜாதவ்பூர் பகுதியில் வேலைக்கு செல்லக்கூடிய பிற பெண்களும் அங்கு குழுமியிருக்கிறார்கள். "வெயிலடித்தாலும் மழை பெய்தாலும், வேலைக்காரர்களான நாங்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பணிபுரியும் வீட்டு உரிமையாளர்கள் கோபப்படுவார்கள். நாங்கள் இல்லாமல் அவர்கள் ஒன்றும்  செய்யமாட்டார்கள்!". என்று வசந்தி கூறுகையில், அனைத்து பெண்களும் சிரிக்கின்றனர்.

Workers outside Jadavpur railway station
PHOTO • Siddharth Adelkar

ஜாதவ்பூர்(மேலே) மற்றும் பிற ரயில் நிலையங்களில் பெண்கள்  இறங்கிய பிறகு,தங்கள் வேலைக்கு செல்கிறார்கள்

"எங்கள் வாழ்க்கை கடினமாக உள்ளது. நாங்கள் ஏழ்மையில் உள்ளோம். ஆனாலும், இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்களுக்காகத்தான் நாங்கள் வாழ்கிறோம்", என்றார் பிரேஷ்பதி. அதிகாலை நேரத்தில் அந்த ரயில் காலியாக இருக்கிறது, ஆனால், கொல்கத்தா செல்லும் வழியில் அந்த ரயில் முழுமையாக நிரம்புகிறது. பிரேஷ்பதியும் பசந்தியும் பெண்கள் பெட்டிக்கு பதிலாக பொதுப்பெட்டியில் அமர்ந்திருக்கின்றனர். "பொதுப் பெட்டியில் சிலசமயம் ஆண்கள் எழுந்து தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையைத் தருவார்கள். அவர்கள் எங்களை நோக்கி கத்துவதில்லை. எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பெட்டியில் ஏறுகிறேன்" என்றார் பசந்தி.

அந்த ரயில் 4:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, ஏறத்தாழ 75 நிமிடத்திற்குப் பிறகு ஜாதவ்பூர் ரயில் நிலையத்தை அடைகிறது. அந்த ரயிலிருந்து இருந்து இறங்கும் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்றுக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு மத்தியில் பிரேஷ்பதி அவர் வேலைப்பார்க்கும் வீட்டை நோக்கி விரைகிறார்.

பல பணியாளர்கள் தெற்கு 24 பர்கனஸ் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிகண்டபூர் பகுதியில் இருந்து சீல்டா பகுதிக்கு பயணிக்கின்றனர். ஏறத்தாழ 60 கிலோமீட்டர் ரயில் பயணம் சுமார் 85 நிமிடங்கள் எடுக்கக்கூடியது. சமேலி பைத்யா அந்த ரயில் நிற்கக்கூடிய மூன்றாவது சந்திப்பான மதுராப்பூர் சாலை ரயில் சந்திப்பில் ஏறுகிறார். அவர் தெற்கு கொல்கத்தாவிற்கு அன்மையிலுள்ள பல்லிகஞ் பகுதியில் ஆறு வீடுகளில் பணிபுரிந்து வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்னர், அவருக்கு வேறு மாதிரியான வாழ்க்கை இருந்துள்ளது.

அவர் அதுகுறித்து நினைவு கூறுகையில்,"நானும் எனது கணவரும் பான்-பீடி கடைக்கு சொந்தக்காரர்களாக இருந்தோம். நினைத்துப்பார்க்கும் போது சில காலம் நாங்கள் நன்றாகவே இருந்தோம். எப்போது என் கணவர் வேலைக்கு செல்வதை நிறுத்தி பணத்தை வீணடிக்கத் தொடங்கினாரோ அதிலிருந்து நாங்கள் கடையை மூடிவிட்டு மற்றவர்களின் வீடுகளில் வீட்டுவேலை செய்ய ஆரம்பிதேன். கடை நடத்திக்கொண்டிருக்கும் போது, நான் சுதந்திரமாக இருந்தேன். ஆனால், தற்போது மற்றவர்களின் வீடுகளில் வேலை செய்கையில், ஒருவேளை நேரம் தவறினாலோ அல்லது ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலோ திட்டுகிறார்கள்." என்றார். சமேலி தற்போது அவரது வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளார். அவர் அவரது கணவர் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் மதுராப்பூர் அருகில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்கின்றனர்.

வீடுகளில் பணிபுரிவதை விட ரயிலில் பயணிப்பது மிகவும் கடினமாக உள்ளதாக சமேலி தெரிவித்தார். "ஒவ்வொரு காலைப்பொழுதும் இந்த பயணத்தின் போது துன்பப்படுகிறேன். எல்லோரும் தள்ளிக்கொண்டும் கத்திக்கொண்டும் இருப்பார்கள். சிலசமயம், அடித்துக் கொள்ளவும் செய்வார்கள். அமர்வதற்கும் எந்த இடமும் இருக்காது. ஒருவேளை, என் குழந்தைகளின் வயிறு நிரம்ப உணவளித்து விட்டால், நான் இந்த வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருப்பேன்." என்றார்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Urvashi Sarkar is an independent journalist and a 2016 PARI Fellow.

Other stories by Urvashi Sarkar
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan