ஒரு கிழிந்த காகிதத் துண்டு, உடைக்கப்பட்ட சுவரின் மீது காற்றில் பறக்கிறது. ‘சட்டவிரோதமான’ மற்றும் ‘ஆக்கிரமிப்பு’ ஆகிய வார்த்தைகள் அந்த வெளிர்மஞ்சள் காகிதத்தில் மங்கலாகத் தெரிந்தது. அது எச்சரித்த ‘வெளியேற்றம்’ சகதியில் மூடப்பட்டிருந்தது. ஒரு நாட்டின் வரலாற்றை அதன் சுவர்களுக்குள் அடக்க முடியாது. நாட்டின் மெல்லிய எல்லைகளைத் தாண்டி ஒடுக்குமுறை, வீரம் மற்றும் புரட்சி முத்திரைகளைக் கடந்து அது ஆகாயத்தில் மிதக்கிறது.

தெருவில் குவிந்துள்ள செங்கற்கள் மற்றும் கற்களை அவள் பார்க்கிறாள். இரவில் அவளின் வீடாக இருந்தக் கடையின் மிச்சம் அது. 16 வயதான அவள் மாலைகளில் இங்கு தேநீர் அருந்துவாள். பகலில் செருப்புகளை இங்கு விற்றாள். அவளின் சாதாரணமான நடைபாதை அரியணை ஆஸ்பெஸ்டாஸ் கூரை, சிமெண்ட் பலகை, வளைந்த ஸ்டீல் கம்பிகள் ஆகியவற்றின் துண்டுகளுக்கு மத்தியில் சிதைக்கப்பட்டக் கல்லறை போல் கிடந்தது.

இங்கு முன்பொரு இஸ்லாமியப் பெண் வசித்து வந்தாள். ஆவாத்தின் அரசியான பேகம் ஹஸ்ரத் மகால். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தன் நாட்டைக் காக்க வீரத்துடன் அவள் போராடினாள். நேபாளில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய முன்னோடிகளில் ஒருத்தியான அவள் மறக்கப்பட்டு பல காலமாகிவிட்டது. அவளின் பாரம்பரியம் களங்கப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டாலும் எல்லையின் மறுபக்கக் காத்மாண்டுவின் ஒரு துயரக் கல்லறையாக எஞ்சியிருக்கிறது.

அத்தகையப் பல கல்லறைகளும் எதிர்ப்பின் எலும்பு மிச்சங்களும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆழத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அறியாமை மற்றும் வெறுப்புச் சகதியை அகற்றும் புல்டோசர் ஏதுமில்லை. மறந்துபோன இந்த எதிர்ப்பின் முஷ்டிகளை தோண்டியெடுக்கும் எந்திரங்களும் ஏதுமில்லை. காலனிய வரலாற்றை தகர்த்து ஒடுக்கப்பட்டோரின் குரல்களை நிரப்பும் புல்டோசரும் ஏதுமில்லை. அநீதியைத் தடுக்கக் கூடிய புல்டோசரும் ஏதுமில்லை. இன்னும்.

கோகுல் ஜி கே கவிதை வாசிப்பதைக் கேளுங்கள்

அரசனின் வளர்ப்புப் பிராணி

விந்தையான ஒரு மிருகம்
என் அண்டைவீட்டின் முற்றத்தில் தோன்றி
அதன் மஞ்சள் தோற்றத்தில் துள்ளியது.
அது உண்டிருந்த சமீப உணவின் ரத்தமும் சதையும்
இன்னும் அதன் நகங்களிலும் பற்களிலும் சிக்கியிருக்கிறது.
அந்த மிருகம் ஊளையிட்டு
தலையை உயர்த்தி
என் அண்டைவீட்டுக்காரரின் நெஞ்சில் ஏறி மிதித்தது
விலா எலும்புகளுக்குள் நுழைந்து
இதயத்தைக் கிழித்தது.
அரசனின் விருப்பத்துக்குரிய வளர்ப்புப் பிராணி தளராமல்
அவளின் இதயத்தை
துருப்பிடித்தக் கைகளால் பிடுங்கி எடுத்தது.
ஓ, இம்மிருகத்தை அடக்க முடியாது!
ஆனால் அதை ஏமாற்ற
என் அண்டைவீட்டுக்காரரின் இருளடைந்த வெற்று நெஞ்சுக்குள்
ஒரு புதிய இதயம் வளர்ந்தது.
உறுமியபடி அம்மிருகம் இன்னொரு இதயத்தைக் கிழித்தது.
அதே இடத்தில் இன்னொரு இதயமும் வளர்ந்தது
ஒவ்வொரு இதயம் விழுங்கப்படும்போதும்
வாழ்வுடன் துடிக்கும் இன்னொரு இதயம் சிவப்பாக வளர்ந்தது
ஒரு புதிய இதயம், புதிய விதை
ஒரு புது மலர், புது வாழ்க்கை
ஒரு புது உலகம்.
விந்தையான ஒரு மிருகம் ஒன்று
என் அண்டைவீட்டு முற்றத்தில் தோன்றியது.
திருடப்பட்ட இதயங்களைக் கைவசம் வைத்திருந்த ஓர் இறந்த மிருகம்.

தமிழில் : ராஜசங்கீதன்

Poem and Text : Gokul G.K.

Gokul G.K. is a freelance journalist based in Thiruvananthapuram, Kerala.

Other stories by Gokul G.K.
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan