ஆந்திராவின் கடலோர பகுதியில் இருக்கும் கோட்டபலம் கிராமத்தில் உள்ள பந்து துர்கா ராவின் தென்னந்தோப்பு விரைவில் காணாமல் போய்விடும். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோட்டபலம், கோவடா, மருவடா (மற்றும் அதன் இரண்டு குக்கிராமங்களான குடேம் மற்றும் தேக்கலி) ஆகியவற்றை உள்ளடக்கிய 2073 ஏக்கர் நிலத்தை, இந்திய அணுசக்தி கழகத்திற்காக (NPCIL), மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த உள்ளது இதில் இவரது ஒரு ஏக்கர் நிலமும் அடங்கும்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் துர்கா ராவ் ஆந்திரப்பிரதேச கிராமின் விகாஸ் வங்கியிலிருந்து 60,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். "ஒருபுறம் வங்கிகள் விவசாயக் கடன்களை வழங்குகின்றன, மறுபுறம் வருவாய்த்துறை அதிகாரிகள் புல எண் 33 (அவரது நிலம் அமைந்துள்ள இடம்) நீரோடை என்று கூறுகின்றனர். இரண்டுமே அரசு நிறுவனங்கள். இரண்டுமே எப்படி உண்மையாக இருக்க முடியும்?", என்று அவர் குழப்பத்துடன் கேட்கிறார்.

இந்த மின் உற்பத்தி நிலையம் சுமார் 2,200 விவசாயிகள் மற்றும் மீனவ குடும்பங்களை இடம்பெயர்த்துவதற்கு வாய்ப்புள்ளது என்று ஹைதராபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஜனவரி 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ரணஸ்தலம் பகுதியில் உள்ள இந்த மூன்று கிராமங்கள் மற்றும் இரண்டு குக்கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் பணி 2011 ஆம் ஆண்டில் தொடங்கியது, அது 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு மேலும் துரிதப்படுத்தபட்டது. ஆனால் மார்ச் 2018 இல் இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது, NPCIL ஒரு மத்திய அரசு நிறுவனமாக இருப்பதால், "இத்திட்டம் மேலும் தாமதமாகும்", என்று கோட்டபலம் பஞ்சாயத்து தலைவரான சுங்கர தனுஞ்சய ராவ் கூறுகிறார்.

இது கிராம மக்களிடையே நிச்சயமற்றதன்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Myalapilli Kannamba (here with her son),
PHOTO • Rahul Maganti
Bantu Durga Rao and Yagati Asrayya with their passbooks in front of Durga Rao's house in Kotapalem
PHOTO • Rahul Maganti

இடது: மயிலாபிலி கண்ணம்பா (இங்கே தனது மகனுடன்) , தாங்கள் இடம்பெயர்ந்தால் தங்களது ஓலைக்குடிசையைக் கூட புனரமைப்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று அவர் ஆச்சரியப்படுகிறார். வலது: துர்கா ராவ் மற்றும் யகதி அஸ்ரயா இருவரும் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை இழக்க நேரிடும், மேலும் வங்கிகள் (அவர்களுடைய பாஸ்புக்கை என்னிடம் காட்டுகின்றனர்) இன்னும் எப்படி கடன் கொடுக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகின்றனர்

(2073 ஏக்கர் நிலத்தை மூன்று கிராமங்களில் இருந்து கையகப்படுத்துவதற்கு தேவைப்படும்) இழப்பீடாக 225 கோடி ரூபாய் தேவைப்படுகிறது, ஆனால் அரசாங்கம் இதுவரை 89 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது", என்று தனுஞ்சய ராவ் கூறுகிறார். மேலும் நிலத்தின் சந்தை மதிப்பைவிட தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக இருக்கிறது என்று கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

"35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போகாபுரம் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகைக்கு நிகராக நாங்கள் 34 லட்சம் ரூபாய் கேட்ட போது எனக்கு ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. மேலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் இருப்பதால் இந்நிலத்தின் சந்தை மதிப்பு (ஏக்கர் ஒன்றுக்கு) 3 கோடி ரூபாய்", என்று கோவடாவில் (மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜீருகோவடா என பட்டியலிடப்பட்டுள்ளது) 3 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் 58 வயதாகும் பாடி கிருஷ்ணா கூறுகிறார், இவர் அந்த நிலத்தில் தென்னை, வாழை மற்றும் சப்போட்டா ஆகியவற்றை விளைவித்து வருகிறார்.

நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013 (LARR) இன் படி இப்பகுதியில் கடந்த ஓராண்டில் நில பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு கணக்கிடப்பட வேண்டும். இருப்பினும் இச்சட்ட நடைமுறை பின்பற்றப்படாததால் மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகையை 18 லட்சம் ரூபாயாக அறிவித்துள்ளது. அந்த முழு தொகையும் இன்னமும் பாதி பணம் பெற்றவர்களுக்கு வழங்கி முடிக்கப்படவில்லை - மேலும் 2073 ஏக்கரில் 20 - 30% வரை மட்டுமே இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஆர்வலர்கள் மதிப்பிடுகின்றனர்.

A notice from Revenue Divisional Officer, Srikakulam saying that Bantu Durga Rao was allotted land as per the Andhra Pradesh Land Reforms (Ceilings on Agricultural Holdings) Act, 1973
PHOTO • Rahul Maganti

துர்கா ராவுக்கு 1973இல் இந்நிலம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கும் வருவாய் கோட்ட அதிகாரியின் நோட்டீஸ்

2073 ஏக்கரில் துர்கா ராவ் உட்பட கோட்டபலத்தில் உள்ள 18 தலித் குடும்பங்களுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலமும் அடங்கும். ஆந்திரப்பிரதேச நிலச் சீர்திருத்தங்கள் (விவசாய நில உச்ச வரம்பு) சட்டம் 1973 இன் கீழ் ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஏக்கர் நிலத்தை பெற்றுள்ளது. அவர்களுக்கு D படிவ பட்டாக்கள் வழங்கப்பட்டது, அதாவது இந்த நிலத்தின் மீது நடைபெறும் எந்த ஒரு பரிவர்த்தனையும் சட்டவிரோதமானது - இந்நிலம் இக்குடும்பத்தினருக்கு மட்டுமே மரபுரிமையாக கைமாறும்.

"எங்களுக்கு இந்த நிலம் கிடைத்தபோது சாகுபடிக்கு முதலீடு செய்வதற்கு எங்களிடம் மூலதனம் இல்லை. இங்கு பாசன வசதி இல்லாததால், மழைநீரை நம்பி மட்டுமே இருந்தோம். ஆழ்துளைக் கிணறுகளில் முதலீடு செய்வதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. அதனால் நாங்கள் கப்பு மற்றும் கம்மா போன்ற உயர்சாதியின விவசாயிகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டோம், அவர்கள் 2011ஆம் ஆண்டு வரை என் நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வந்தனர்", என்று கோட்டபலத்தைச் சேர்ந்த 55 வயதாகும் யகதி அஸ்ரய கூறுகிறார், இவருக்கும் இந்தப் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. கடந்த தசாப்தத்தில் இவரும் இக்கிராமத்தைச் சேர்ந்த பிற சிறு நில உரிமையாளர்களும் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

முன்மொழியப்பட்ட அணுமின் உற்பத்தி நிலையம் பற்றிய செய்திகள் வெளிவரத் துவங்கிய போது, தங்கள் நிலத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பல நில உரிமையாளர்கள் தாங்களே சாகுபடி செய்யத் துவங்கினர். ஆனால் பல சமயங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் உயர்சாதி விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதாக குற்றம்சாட்டுகின்றனர், "அதே நேரத்தில் எங்கள் நிலங்கள் ஓடையின் ஒரு பகுதியாக இருப்பதால் இழப்பீடு பெற முடியாது என்று எங்களிடம் கூறுகின்றனர்", என்று 35 வயதாகும் தோங்கா அப்பா ராவ் கூறுகிறார் இவருக்கு துர்கா ராவின் வயலுக்கு அடுத்து ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

LARR சட்டத்தின் கீழுள்ள மற்ற விதிகளான, ஒரே நேர மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இழப்பீட்டுத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு 6.8 லட்ச ரூபாய் வழங்கப்படவில்லை மேலும் வீடுகள், படகுகள், வலைகள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றுக்கான மதிப்பீடு மற்றும் இழப்பீடு தரப்படவில்லை. கோவடாவில் வசிக்கும் 56 வயதான மயிலாபிலி கண்ணம்பா, "எங்களிடம் குடிசை வீடுகள் தான் இருக்கின்றது, ஆனால் 5 வீடுகள் இருக்கிறது. நாளுக்கு நாள் எங்களுக்கு வயதாகிக் கொண்டே போகிறது - அதையெல்லாம் மீண்டும் கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?", என்று கேட்கிறார்.

7248 மெகா வாட் திறன் கொண்ட கோவடா அணுமின் நிலையம் 2008ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்கா இடையே போடப்பட்ட சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் முதலில் அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தளம் குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள தாளஜா தாலுகாவிலுள்ள மிதிவிரிடி கிராமமாகும். ஆனால் அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து அது மாற்றப்படுவதை உறுதி செய்தனர் - முன்மொழியப்பட்ட அணுமின் உற்பத்தி நிலையம் இப்போது கோவடாவுக்கு வந்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கை 2006 இன் படி, 2032-ம் ஆண்டுக்குள் நாடு 63,000 மெகாவாட் அணு சக்தி உற்பத்தி திறனை நிறுவவேண்டும் என்றும் தற்போது 7 அணு மின் நிலையங்கள் வாயிலாக மொத்தம் 6,780 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன்மொழியப்பட்ட அதிகரிப்பில், 30,000 மெகாவாட் அணுமின்சக்தி உற்பத்திக்கு ஏதுவாக ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் நான்கு வெவ்வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் நிறுவப்படும். தற்சமயம் கோவடாவின் திட்டம் மட்டுமே முன்னேறி வரும் நிலையில், நெல்லூர் மாவட்டம் காவாலி நகருக்கு அருகே அணு மின் நிலையத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Government officials conducting public hearing in December 2016 which witnessed widespread protests by the villagers
PHOTO • Rajesh Serupally
Coconut and banana plantations interspersed with each other (multi cropping) in the same field in Kotapalem. All these lands are being taken for the construction of the nuclear power plant
PHOTO • Rajesh Serupally

இடது : 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர் அங்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வலது: கோட்டபலத்தைப் போலவே ஐந்து கிராமங்களில் உள்ள சுமார் 2,000 குடும்பங்கள் தங்களது நிலம், பயிர்கள், தென்னந்தோப்புகள் மற்றும் வாழைத்தோட்டம் ஆகியவற்றை இழக்க நேரிடும்

2017 ஆம் ஆண்டுக்கான உலக அணுசக்தி தொழில் நிலை அறிக்கை யின்படி உலகின் பல பகுதிகளிலும் கட்டுமானத்தில் உள்ள அணுஉலைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நேரத்தில் இது நடந்தேறுகிறது. ரஷ்யா, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் பல அணு உலைகளை மூடிவிட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.

தவிர, அபுதாபியில் அமைந்துள்ள சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்து வருவதாக குறிப்பிடுகிறது. ஆந்திராவிற்கு அதிக மின்சாரம் தேவைப்பட்டால் அணு மற்றும் வெப்ப ஆற்றலை விட மற்ற புதுப்பிக்கத்தக்க வளங்களில் முதலீடு செய்யலாம்.

இந்தப் போக்குக்கு எதிராக இந்தியாவின் எரிசக்தி கொள்கையானது நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அணுசக்தி ஊக்குவிக்கப்படுகிறது என்கிறது. இருப்பினும், ஆந்திரப் பிரதேச அரசின் எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு துறையின் முதன்மைச் செயலாளர் அஜய் ஜெயின் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தி இந்து விடம் பேசுகையில் ஆந்திர பிரதேசம் மின்மிகை மாநிலமாக உள்ளது என்றும் மாநிலத்தின் தினசரி தேவை 178 மில்லியன் வாட்டாக இருக்கும்போது நாளொன்றுக்கு 200 மில்லியன் வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டதாக இம்மாநிலம் இருக்கிறது என்றார். "ஏற்கனவே மின்மிகை மாநிலமாக இருக்கும் இடத்தில் ஏன் இத்தனை அணு உலைகளை நிறுவ வேண்டும்?", என்று முன்னாள் எரிசக்தி துறை மற்றும் மின்சார அமைச்சகத்தில் ஒன்றிய செயலாளராக பணியாற்றிய டாக்டர் இ. ஏ .எஸ் சர்மா, இந்த நிருபர் பேசுகையில் கேட்டார்.

இருப்பினும், கோவடா அணுமின் நிலையத்தின் முன்னாள் திட்ட இயக்குனரும், NPCIL இன் முன்னாள் தலைமை பொறியாளருமான ஜி. வி. ரமேஷ் என்னிடம் பேசுகையில், "நாங்கள் ஒரு மெகாவாட் அணு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 24 கோடி ரூபாய் செலவு செய்கிறோம் மேலும் அதனை மக்களுக்கு மானிய விலையில் ஒரு KW- h (கிலோ வாட்-  ஹார்) மின்சாரத்தை 6 ரூபாய்க்கு வழங்குகிறோம்", என்றார்.

Fishermen in Kovadda hope the move will at least make fishing sustainable again, unaware that the nuclear power waste could further destroy the water
PHOTO • Rahul Maganti

அணுசக்தி கழிவுகள் கடல்நீரை மேலும் மாசு படுத்தும் என்பதை அறியாமல் , இந்த நடவடிக்கை குறைந்தபட்சம் மீன்பிடித்தலை மீண்டும் நிலையானதாக மாற்றும் என்று கோவடாவில் உள்ள மீனவர்கள் நம்புகின்றனர்

ஆனால் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் வேறுவிதமாக வாதிடுகின்றன. ஹைதராபாதில் உள்ள இந்திய ரசாயண தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் கே பாபுராவ், "முன்பு NPCIL ஒரு KW- h அணு சக்தி மின்சாரத்தை ஒரு ரூபாய்க்கு தருவதாக கூறியது, ஆனால் இப்போது 6 ரூபாயாக உயர்த்திவிட்டது. அவர்கள் அப்பட்டமாக பொய் பேசுகின்றனர். முதல் ஆண்டுக்கான கட்டணம் ஒரு KW- h  க்கு 19.80 முதல் 32.77 ரூபாயாகத் தான் இருக்கும், என்று அமெரிக்காவின் க்ளீவ்லாண்டில் உள்ள எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனம் 2016ஆம் நடத்திய ஆய்வின் முடிவில் இருந்து மேற்கோள் காட்டி இந்த எண்களை தருகிறார் டாக்டர் ராவ்.

தவிர, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) கோவடாவில் உள்ள அணுமின் நிலையத்திற்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(M) இன் மாநிலச் செயலாளராக உள்ள நரசிங்க ராவ் குறிப்பிடுகிறார். "மேலும் திட்ட அதிகாரிகள் இன்னமும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆந்திர மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கும் விண்ணப்பிக்கவில்லை. 2009 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி இந்ந ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் இத்திட்டத்தில் இருந்து பின்வாங்கிவிட்டது. இப்போது திவாலாகிவிட்ட வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம், இத்திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி மறுயோசனையில் உள்ளது", என்று கூறினார். "AERB மற்றும் WEC இன்னமும் இத்திட்டத்திற்கு தயாராகவில்லை என்றால், ஏன் பிரதமர் அலுவலகமும், ஆந்திரப் பிரதேச அரசும் நிலத்தை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றன?", என்று கேட்கிறார்.

நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கோவடாவிலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எட்சேர்லா மண்டலத்தில் உள்ள தர்மாவரம் கிராமத்தில் 200 ஏக்கரில் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானம் தொடங்கும்போது, ஐந்து கிராமங்களிலிருந்து குடும்பங்களை இடம்பெயர்த்து, அவர்கள் அனைவருக்கும் இங்கு வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் பெயர்தலுக்காக காத்திருக்கும் கோவடாவைச் சேர்ந்த 42 வயதாகும் மீனவரான மயிலாபிலி ராமு, இந்த நடவடிக்கை குறைந்தபட்சம் மீன்பிடித்தலையாவது மீண்டும் நிலையானதாக மாற்றும் என்று நம்புகிறார். (காண்க கோவடாவில் பெரிய மருந்தகங்கள் சிறிய மீன்களைக் கொல்கின்றன ) "மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளால் நீர் மாசுபடுவதால் நாங்கள் இங்கு (கோவடா கடற்கரையில்) மீன் பிடிக்க முடியவில்லை. தர்மாவரமும் கடற்கரைக்கு அருகில் இருப்பதால் அங்கு சென்றதும் மீன்பிடிக்கச் செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று கூறினார். மருந்து உற்பத்தி ஏற்படுத்தும் மாசுபாட்டை விட அணு மின் நிலையத்தால் ஏற்படும் கடல்நீர் மாசுபாடு முழு பிராந்தியத்திலும் மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அணுமின் நிலையம் கொண்டுவருவதற்காக இடம்பெயர்ந்தால் நியாயமான மற்றும் சட்டப்பூர்வமான இழப்பீடு கோரி ஹைதராபாதில் உள்ள ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய கிராமவாசிகள் சிலர்  இப்போது திட்டமிட்டுள்ளனர்.

தமிழில்: சோனியா போஸ்

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose