சுமார் மாலை 7 மணி அளவில், தங்க வெள்ளி ஜரிகை மற்றும் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்ட ஒரு பாவடையை பிடித்த படி நிர்மலா தேவி உதய்பூரின் பாகூர் மாளிகையில் உள்ள மேடையில் ஏறினார். அங்கு அவர், அவரது மகள் தாரா மற்றும் சுமார் பிற 8 பெண்களுடன் - அனைவருமே ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் - அவர் சாரி நடனம், கூமர், பாவை மற்றும் பல நடன முறைகளை நிகழ்த்தத் துவங்குகிறார்.

"ஒவ்வொரு நாளும் அதே வேகத்துடன் நடனம் ஆடுவது எளிதானது அல்ல", என்று அவர் கூறுகிறார். பற்களுக்கு இடையில் வாள்களை வைத்துக் கொண்டு நடனமாடுவது அல்லது தலையில் வைக்கப்பட்டுள்ள ஒரு உலோக பாத்திரத்தின் மேல் எரியும் எண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு நடனமாடுவது அல்லது கண்ணாடித் துண்டுகளின் மீது நடனமாடுவது அல்லது தலையில் மண் பானைகளை சுமந்து கொண்டு ஆடுவது ஆகியவற்றின் போது அது இன்னும் சிரமம் ஆகிறது. இருப்பினும், நிர்மலா மற்றும் அவரது குழுவினர் - அக்குழுவில் அவரின் நாத்தனார் சீமா தேவி மற்றும் மாமியார் பாம்ரி பாய் ஆகியோரும் அடங்குவர் - ஒவ்வொரு நாள் மாலையும் அதைச் செய்கின்றனர். "எனது நாத்தனார் தனது தலையில் பதினோரு பானைகளை சுமந்து கொண்டு நடனம் ஆடுவார். ஆட்டத்தின் முடிவில் அவரது உச்சி முதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியிருக்கும்", என்று நிர்மலா கூறுகிறார். "இருந்தாலும், அவர் மேடையில் புன்னகைத்துக் கொண்டே ஆடுவார், மேலும் மாற்றும் அறைக்கு திரும்பிச் சென்று அடுத்த நடனத்திற்கும் அவர் தயாராகிறார்", என்று கூறுகிறார்.

ஆனால் நடன கலைஞர்களின் சமூகமான காமத் (பட்டியல் இனமாகப் வகைப்படுத்தப் பட்டுள்ளது) தேரா தாளி நடனத்திற்காகத் தான் நன்கு அறியப்படுகிறது. இந்தப் 10 - 15 நிமிட நடன முறை, மாளிகையில் நடக்கும் ஒரு மணி நேர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும், இது உள்ளூர் நாட்டுப்புறத் தலைவர் ஒருவரான பாபா ராம்தேவுக்கு காணிக்கையாக செய்யப்படுகிறது. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக இச்சமூகத்தின் புராணக்கதைகள் கூறுகின்றது.

காணொளியில் காண்க: தேரா தாளி: 13 கஞ்சிராக்களைக் கொண்ட நடனம்

நவராத்திரி திருவிழாவின் 9 நாட்களில் அச்சமூகம் நிகழ்த்திய நிகழ்ச்சியில் இருந்து அல்லது அவர்கள் பஜனைகளை பாடி கோயில்களில் தம்பூரா, டோலக்கு, கஞ்சிரா (பித்தளை சிங்கிகள்) ஆகியவற்றை இசைத்த போது இந்த நடன முறை உருவானது. தேரா தாளி என்பது கஞ்சிராக்களை கயிற்றால் உடல்மீது - கால்கள், பாதங்கள், கைகள் ஆகியவற்றில் கட்டிக்கொண்டு நடனமாடுவது மேலும் அது 13 (தேரா) விதவிதமான வகைகளில் இசைக்கப்படுகிறது.

குழந்தையாக இருந்த போது நிர்மலா தனது தாயின் நடனத்தை பின்பற்றி ஆடுவார், ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள பதர்லா கிராமத்தில், அவரது தாயார் அவருக்கு என்றே விசேஷமாக தயார் செய்து வரவழைத்த சிறிய மஞ்சிராக்களை அணிந்து கொண்டு ஆடுவார். அவர் தனது தாத்தா பாட்டியுடன் மேலாக்கள், திருவிழாக்கள், மற்றும் கோவில்களில் சென்று நடனம் ஆடுவதற்காக மூன்றாம் வகுப்பிற்கு பிறகு பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டார். படிப்படியாக அவரும் ஒரு திறமையான நடன கலைஞராக ஆனார், அவருக்கு 12 வயதாக இருந்த போது ஹார்மோனியம் - டோலக்கு இசைக் கலைஞர் மற்றும் பாடகரான அவரது தாத்தாவுடன் அஜ்மீருக்கு அருகில் நடைபெற்ற புஷ்கர் மேளாவில் முதல் முறையாக மேடையில் நடனம் ஆடினார். மேலும் அவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடுவார். "அதற்கு முறையாக நான் வகுப்பிற்குச் சென்றோ, பாடம் கற்றுக் கொண்டோ பாடவில்லை, எங்களது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேரும் போது, நாங்கள் பண்டிகை காலத்திலும், பூஜைகளின் போதும் பாடுவோம்", என்று அவர் கூறினார்.

A girl is playing harmonium
PHOTO • Urja

மேடைக்கு வெளியே, தாரா மற்றும் அவரது தாயார் நிர்மலா: 'நான் ஒரு நாள் மேடை ஏறி வரும் போது பார்வையாளர்கள் என் பெயரை கோஷம் இடுவதை கேட்க விரும்புகிறேன்'

அவருக்கு 12 வயதாக இருந்த போது கோகுண்டா தாலுகாவில் உள்ள தோல் கிராமத்தைச் சேர்ந்த பாடகர் மற்றும் ஹார்மோனியம் இசைக் கலைஞரான ஹெம் தாஸ் காமத் என்பவரை நிர்மலாவின் குடும்பத்தார் நிர்மலாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவரது 15 வயதில் அவரது கணவருடன் வாழச் சென்றுவிட்டார். அவர்களது மகன் ஷியாம் தாஸுக்கு இப்போது வயது 18 ஆகிறது. இப்போது 16 வயதாகும் தாரா குமாரி, தனது தாயின் வயிற்றில் 9 மாத கருவாக இருந்த போது, அவரது தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார். "தாரா தனது தந்தையை பார்த்ததே இல்லை, அவளுக்கு என்று இருப்பது நான் மட்டும் தான்", என்று அவர் கூறுகிறார்.

அந்த சமயத்தில், நிர்மலா மற்றும் ஹெம் தாஸ் ஆகியோர் இந்தூருக்கு குடிபெயர்ந்து இருந்தனர், அங்கு அவர்கள் ஒரு ஹோட்டலில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். ஹெம் தாஸ் இறந்த பிறகு அகமதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நிர்மலாவின் சகோதரர், அவரை அங்கு வந்து விடும் படி கூறினார். 12 வருடங்கள் அகமதாபாதில் இருந்துவிட்டு நிர்மலாவும் அவரது குடும்பத்தாரும் நான்கு வருடங்களுக்கு முன்பு தான் உதய்பூருக்கு குடிபெயர்ந்து வந்தனர்.

உதய்பூரில் உள்ள பிச்சோலா ஏரியின் எதிரில் இருக்கும் அரசு நடத்தும் அருங்காட்சியமான பாகூர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான தாகோர் நாட்டுப்புற நடனக் குழு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் பழைய வீட்டில் இக்குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பாகூர் மாளிகையில் நிர்மலா மற்றும் தாரா ஆகியோர் நடனம் ஆடுவதன் மூலம் மாதம் ஒன்றுக்கு தலா 5,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை உதய்பூரில் உள்ள ஹோட்டல்கள் இக்குழுவை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றன. இந்த மாதங்களே அவர்களுக்கு பரபரப்பான மாதங்கள். இரண்டு முதல் மூன்று மணி நேரம் நிகழ்ச்சிகளை நடத்த  எங்களுக்கு நபர் ஒருவருக்குத் தலா 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது", என்று அவர் கூறுகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவை அவர்கள் ஒரு மாதத்திற்கு சுமார் 5 முறை பெறுகின்றனர். "அது டெல்லி அல்லது வேறு எங்கோ தொலைதூரத்தில் நடக்கும் பட்சத்தில், நாங்கள் 3,000 ரூபாய் வரை சம்பளம் பெறுவோம்", என்று தாரா கூறுகிறார்.


Two women are performing traditional Terah Taali dance Rajasthani dance
PHOTO • Urja
Women artists getting ready for Terah Taali dance
PHOTO • Urja

பானைகள், கஞ்சிராக்கள், வாள்கள், விளக்குகள் மற்றும் பலவற்றுடன் நடனம் ஆடுகின்றனர்

குழுவில் உள்ள பல உறுப்பினர்கள் ஒரு முகவர் மூலம் வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்காக சென்று வந்துள்ளனர். நிர்மலாவும் தான் சென்றுள்ள இரண்டு வெளிநாட்டு பயணங்களில் ஒன்றான 2014 ஆம் ஆண்டில் சென்ற, ஒரு மாத கால பயணத்தின் போது பிரேசில், கியூபா மற்றும் நெதர்லாந்து உட்பட 12 நாடுகளில் தான் நிகழ்ச்சி நடத்தியதாக கூறுகிறார்.

நடனம் ஆடுவதைத் தவிர, தாரா உதய்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது விருப்பப் பாடத்தில் இசை மற்றும் ஓவியம் ஆகியவையும் அடங்கும். தான் பல்வேறு நகரங்களிலும் மற்றும் பெருநகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதால் அவரது ஆசிரியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். ஆனால் சில வகுப்புத் தோழிகளால் அவர் ஏளனமாக பார்க்கப்படுகிறார். "அவர்களால் என்னைப் போல் நடனமாட முடியாது, அவர்கள் ஒரு போதும் இக்கலையை புரிந்து கொள்ளப் போவதில்லை அவர்கள் எங்களை இழிவுபடுத்த மட்டுமே செய்வார்கள். நான் நடனமாடும் போது இந்தப் பிரச்சனைகள், வீட்டில் உள்ள பிரச்சனைகள், மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்", என்று அவர் கூறுகிறார்.

தாரா பாடுவதிலும் ஆர்வமாக இருக்கிறார், "நான் ஒரு நாள் மேடை ஏறி வரும் போது பார்வையாளர்கள் என் பெயரை கோஷம் இடுவதை கேட்க விரும்புகிறேன். எனது தந்தையின் குரல் வளத்தைப் பெற்றிருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் அப்படித் தான் எனது குடும்பத்தினர் கூறுகின்றனர். அதைப் பற்றி யோசிக்கும் பொழுது ஒரு நல்ல பாடகராக இருப்பது அவ்வளவு கடினமானதாக இல்லை, என்னால் அதை அடைய முடியும்   என்று தோன்றுகிறது’ என்கிறார் அவர்.

A old women getting ready to perform Terah Taali dance
PHOTO • Urja
A old women performing traditional Terah Taali dance of Rajasthan
PHOTO • Urja

நிர்மலாவின் மாமியார் பாம்ரி பாய் தனது 70 வயதிலும் நடித்து வருகிறார், ஆனால் தாரா தனது தாய்க்கு பாட்டியின் வயது வரும் போது அவர் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை

நிர்மலா தனது குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புகிறார். அவரது மகன் தொலைதூர கல்வியில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை வைத்து தொழில் செய்ய விரும்புகிறார். "தாரா தொடர்ந்து நடனமாடவும் மற்றும் பாடவும் செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் கல்வி கற்கும் போது இந்த விஷயங்கள் உங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்", என்று நிர்மலா கூறுகிறார். எனக்கும் பாடுவதில் ஆர்வம் இருக்கிறது ஆனால் என்னால் எல்லா வரிகளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது, எனக்கு மட்டும் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால், நான் அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி பாடிப் பழகி இருப்பேன்", என்று அவர் கூறுகிறார்.

இதை அடுத்து, தாரா தனது தாய்க்கு, தனது பாட்டியின் வயது வரும் போது தனது தாய் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை. அம்மாவிற்கு வயதாகும் போது அவர் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டும், புதிய ஆடைகளை அணியவும் மற்றும் சுவையான உணவுகளை ருசித்துக் கொண்டும் இருக்க வேண்டும்", என்று தாரா கூறுகிறார்.

ஆனால் நிர்மலாவால் நீண்ட காலத்திற்கு மேடை ஏறாமல் இருக்க முடியாது. "பகல் பொழுதில் நாங்கள் ஆர்வம் இல்லாமல் இருக்கிறோம், ஆனால் மேடையேற வேண்டிய நேரம் வரும் போது, எங்களது மனோநிலையின் சக்தி அதிகரித்து விடுகிறது", என்று அவர் கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Urja is Senior Assistant Editor - Video at the People’s Archive of Rural India. A documentary filmmaker, she is interested in covering crafts, livelihoods and the environment. Urja also works with PARI's social media team.

Other stories by Urja
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose