"என்னிடம் மொபைல் போன் இல்லை, நான் எவ்வாறு அரசாங்கத்திடம் பதிவு செய்வது?" என்று தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அன்னாரம் கிராமத்தில் செங்கல் சூளை தொழிலாளியாக பணியாற்றி வரும்  கூனி தமாலியா கேட்டார். அவரையும் அவரது குழந்தைகளையும் ஒடிசாவுக்கு அழைத்துச் செல்லும் சார்மிக் சிறப்பு ரயிலில் செல்வதற்கு அவரது பெயரை பதிவு செய்ய நாங்கள் அங்கே வந்து இருக்கிறோமா என்று அவர் ஆச்சரியப்பட்டார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தெலுங்கானாவின் அரசாங்க இணையதளத்தில் போக்குவரத்துக்கான கோரிக்கையை பதிவு செய்ய ஒரு மொபைல் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும், ஒடிசா அரசாங்கமும் புலம்பெயர்ந்தவர்களை திரும்பப் பெறுவதற்கு அதையேதான் கோருகிறது.

"தவிர நான் அவர்களின் ஆதார் அட்டைகளை எங்களது கிராமத்திலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். அவர்கள் ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்களா?" என்று 15 வயதாகும் அவரது மகன் பக்தா மற்றும் ஒன்பது வயதாகும் மகன் ஜெகன்நாத் ஆகியோரை கவலையுடன் பார்த்தபடி அவர் கேட்டார். கூனி தனக்கு 40 வயது இருக்கும் என்று கூறினார், ஆனால் அவரது ஆதார் அட்டையோ அவருக்கு 64 வயது என்கிறது. "எனக்குக் இந்த அட்டையில் என்ன எழுதி இருக்கிறது என்பது தெரியாது; அவர்களே தான் கணினியில் பதிவு செய்தனர்", என்று கூறுகிறார்.

அவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இச்சூளையில் வேலையைத் தொடங்கினார், மே மாத இறுதியில் அவரது பணியை முடித்துவிட்டு ஒடிசாவுக்கு திரும்புவார். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு செங்கல் சூளையில் பணியாற்றிவரும் கைம்பெண்ணான கூனிக்கு முதல்முறையாக எல்லாவற்றையும் நிச்சயமற்றதாக்கிவிட்டது. பௌத் மாவட்டத்தில் இருக்கும் கனத்தமால் வட்டத்தைச் சேர்ந்த தேமுகனி கிராமத்திலிருந்து லாரி மூலம் அவரும் அவரது குழந்தைகளும் கும்மாடிதாலா மண்டலத்தில் இருக்கும் அன்னாரம் கிராமத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

கூனி தனது குழந்தைகளுடன் அன்னாரத்துக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு 42 வயதாகும் சுமித்ரா பிரதான் 40 வயதாகும் அவரது கணவர் கோபால் ராவத் மற்றும் அவரது 5 குழந்தைகளுடன் ஒடிசாவில் இருந்து அங்கு வந்து சேர்ந்தார். கடந்த ஏழு எட்டு வருடங்களாக அவர்கள் பாலங்கீர் மாவட்டத்திலுள்ள தித்லாகர் வட்டத்தின் சகத்காத் கிராமத்தில் இருந்து வருகின்றனர். அவர்களது மூத்த மகன் ராஜூவுக்கு 20 வயது ஆகிறது அவரும் தனது பெற்றோருடன் சூளையில் பணியாற்றி வருகிறார். அவர்களது வீட்டை விட்டு அவர்கள் கிளம்பும்போதும் ஒப்பந்ததாரர் 3 செங்கல் சுமக்கும் பணியாளர்களுக்கான முன்பணமாக மொத்தம் 75 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.

Left: Kuni Tamalia and son Jagannadh near their small home made with loosely stacked bricks. Right: Sumitra Pradhan, Gopal Raut and daughter Rinki
Left: Kuni Tamalia and son Jagannadh near their small home made with loosely stacked bricks. Right: Sumitra Pradhan, Gopal Raut and daughter Rinki
PHOTO • Varsha Bhargavi

இடது: தளர்வாக செங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட ஒரு சிறிய வீட்டின் அருகில் கூனி தமாலியா மற்றும் அவரது மகன் ஜெகன்நாத். வலது: சுமித்ரா பிரதான் கோபால் ராவத் மற்றும் அவர்களது மகள் ரின்கி.

இந்த பருவத்திற்கு செங்கல் சூளையில் சில மாதங்கள் பணியாற்றிய பிறகு மார்ச் மாதத்தின் போது கோவிட்-19 பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் சுமித்ரா அந்த வைரஸை பற்றி கவலை கொள்ளத் தொடங்கினார். அவரது இளைய குழந்தைகளான ஒன்பது வயதாகும் ஜுகல், ஏழு வயதாகும் ரின்கி மற்றும் நான்கு வயதாகும் ரூபா ஆகியோர் இதனால் பாதிக்கப்படுவார்களோ என்று அவர் அஞ்சினார். "10 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளை கொரோனா பாதிக்கிறது என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஒடிசாவில் இருக்கும் எங்களது வீட்டிற்கு திரும்ப விரும்புகிறோம் ஆனால் இன்னும் ஒரு வாரத்திற்கான வேலை மீதமிருக்கிறது என்றும் அதை முடித்துவிட்டு செல்லும்படியும் எங்களது முதலாளி கூறுகிறார். இப்போது எங்களால் திரும்பிச் செல்ல முடியாது ஏனெனில் ரயிலில் செல்வதற்கு தெலுங்கானா அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்", என்று கூறினார்.

மே 22 ஆம் தேதி அன்று நாங்கள் செங்கல் சூளை தொழிலாளர்களை சந்தித்தபோது அன்னாரத்தில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. கூனி தனது செங்கல் சுமக்கும் பணியிலிருந்து ஒரு மணி நேர ஓய்வில் இருந்தார். அவர் தளர்வாக அடுக்கப்பட்ட உடைந்த செங்கற்களை கொண்டு கட்டிய சிறிய வீடு போன்ற அமைப்பிற்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கே உள்ளே ஆட்கள் இருப்பதற்கான இடம் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஒரு ஆஸ்பெஸ்டாஸ் சீட் பாதி கூரையாகவும், பிளாஸ்டிக் தாள் மீதி கூரையாகவும் இருந்தது. அது வெப்பத்திலிருந்து அதிகமாக பாதுகாக்கவில்லை. எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் அடுப்பில் தனலில் கிடந்த மீந்த அரிசியை கூனி கிளரிக் கொண்டிருந்தார்.

அவர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாரத்தில் ஆறு நாட்களுக்கு இந்த செங்கல் சூளையில் பணிபுரிந்து வருவதாக கூறினார். ஒரு வேலை நாளில் இரண்டு இடைவேளைகள் கிடைப்பதாக கூறினார். சமைக்க, குளிக்க, சாப்பிட மற்றும் துணிகள், பாத்திரங்களை கழுவுவதற்காக என்று காலையில் ஒரு மணி நேரம் மற்றும் பிற்பகல் 2 மணி நேரம் கிடைப்பதாகக் கூறினார். சூளையில் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரு இடைவேளை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. "அவர்கள் செங்கல் செய்பவர்கள். நான் செங்கல் சுமப்பவள். அவர்கள் செங்கலை உருவாக்குவதற்காக நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். அவர்களுக்கு எங்களை விட சம்பளம் அதிகம் அவர்களுடைய பணியுடன் ஒப்பிடும்போது என்னுடைய பணி மிகவும் எளியது", என்று அவர் கூறினார்.

செங்கற்கள் காய வைக்கப்படும் இடத்திலிருந்து சூளைக்கு செல்வதற்கு சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் கூனி செங்கற்களை அடுக்கி எடுத்துவந்து இங்கு அடுக்கி வைத்துவிட்டு மீண்டும் எடுப்பதற்கு செல்வார். செங்கல் சுமப்பவர்கள் இடைவேளை எடுக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு நடைக்கு பெண்கள் 12 முதல் 16 செங்கற்களை தான் சுமக்க முடியும், ஆனால் ஆண்களால் அதிகமாக சுமக்க முடியும் அதனால் அவர்களுக்கு சம்பளம் அதிகம் என்று தலையில் ஒரு பலகை வைத்துச் செங்கலை சுமந்து செல்லும் ஒரு பெண்ணைக் காட்டி கூனி குறிப்பிட்டார். ஆண்கள் ஒவ்வொரு பக்கத்திலும் சுமார் 17 செங்கற்களை சுமந்து தோளில் அந்த எடையைத் தாங்கிக் கொண்டு செல்வதை நாங்கள் கண்டோம்.

அன்னாரதிலுள்ள சில செங்கல் சூளைகளை விட கூனி வேலை செய்யும் இந்த செங்கல் சூளை சிறியது. அந்த வளாகத்திலேயே வசிக்கும் தொழிலாளர்களுக்கு என்று எந்த வசதியும் செய்து தரப்படவில்லை கழிப்பறைகள் கிடையாது, சிமெண்ட் தொட்டி தான் எல்லாவிதமான தண்ணீர் பயன்பாட்டுக்கும் ஆதார மூலமாக இருக்கிறது. "இங்கு தண்ணீர் தொட்டி அருகிலேயே குளிப்பது மற்றும் துவைப்பது ஆகியவற்றை செய்துவிடுவோம், மேலும் அங்கு வெட்டவெளியில் இயற்கைக் கடனை முடித்துக் கொள்வோம் என்று அருகில் இருக்கும் நிலத்தை காட்டி கூனி எங்களிடம் கூறினார். குடிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கு தேவையான தண்ணீரை அந்த தொட்டியில் இருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம்", என்று கூறினார்.

The brick carriers moved swiftly despite the blazing heat. Women carried 12 to 16 bricks per trip; men carried up to 34 at a time
PHOTO • Varsha Bhargavi

தகிக்கும் வெயிலையும் மீறி செங்கல் சுமப்பவர்கள் விரைவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் ஒரு நடைக்கு 12 முதல் 16 செங்கற்களையும், ஆண்கள் ஒரு நடைக்கு 34 செங்கற்களையும் எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

நவம்பர் மாதத்தில் தேமுகனியை விட்டு புறப்படுவதற்கு முன்பு முன்பணமாக கூனி 25,000 ரூபாய் வாங்கியிருக்க வேண்டும் இது செங்கல் தயாரிப்பவர்களை விட 10,000 ரூபாய் குறைவு தான். "ஆனால் அவர்கள் எனக்கு 15,000 ரூபாய் தான் வழங்கினார்கள். மீதி பணத்தை மே மாதம் வேலையை முடித்துவிட்டு செங்கல் சூளையில் வைத்து தருவதாக ஒப்பந்ததாரர் என்னிடம் கூறினார். இங்கு வாரம் ஒன்றுக்கு உணவு மற்றும் இதர செலவுகளுக்காக 400 ரூபாய் வரை தருகின்றனர். எனது கணவர் இறந்த பிறகு குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன்", என்று அவர் கூறினார்.

சிறிது காலத்திற்கு படுத்த படுக்கையாக இருந்து விட்டு கடந்த ஆண்டு கூனியின் கணவர் இறந்தார். மருத்துவர் அவரது மூட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். “மருத்துவர் அறிவுறுத்திய உணவை அவருக்கு கொடுக்கவோ அல்லது மருந்துகளை வாங்கவோ எங்களால் முடியவில்லை", என்று அரிசிக்கஞ்சி இருந்த பாத்திரத்தை ஒரு பெரிய அலுமினிய தட்டால் மூடியபடி சொன்னார்.

அவரது கிராமத்தில் இருந்த போது கூனி நெல் அல்லது பருத்தி வயல்களில் விவசாயத் தொழிலாளியாக பணியாற்றி நாளொன்றுக்கு 150 ரூபாய் சம்பாதித்து வந்தார். "ஆனால் வேலை தொடர்ந்து கிடைக்கவில்லை. யாராவது கூப்பிடும்போது மட்டுமே எனக்கு வேலை இருக்கும். அதை வைத்து எனது குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது மிகவும் கடினமாக இருந்தது. ஒப்பந்ததாரர் வருடாவருடம் எங்களது கிராமத்திற்கு வந்து செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு ஆள் எடுப்பார். நான் இங்கு வந்திருப்பது இதுவே முதல் முறை", என்று அவர் விளக்கினார்.

கூனியும் அவரது குழந்தைகளும் மகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இது ஒரு பட்டியல் இனமாக வகைப்படுத்தப்பட்ட இனம். கடந்த பருவத்தில் அன்னாரத்திலுள்ள சூளையில் அவர்களது மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர் குடும்பம் இவரது குடும்பம் தான். இந்த ஆண்டு சூளையில் பணியாற்றிய 48 குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் ஒடிசாவின் பாலங்கீர் மற்றும் நௌபதா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் காலகண்டி மற்றும் பார்கர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் மொத்தம் 110 உழைக்கும் பெரியவர்கள் மற்றும்  37 குழந்தைகளுடன் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் சூளையில் வசித்து வருகின்றனர்.

ஜாலா சமூகத்தைச் சேர்ந்த சுமித்ரா, கோபால் மற்றும் ராஜு ஆகியோர் சொந்த ஊரில் பெரும்பாலும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை குத்தகை விவசாயிகளாக பணியாற்றுகின்றனர், இவர்களும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களே. "எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பொறுத்து 3 முதல் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பருத்தி அல்லது நெல்லை விளைவிப்போம். சில நேரங்களில் நாங்கள் தினக்கூலியாக வயல்களில் வேலை செய்து நாளொன்றுக்கு 150 ரூபாய் சம்பாதிப்போம் ஆனால் என் மனைவிக்கு 120 ரூபாய் தான் கொடுப்பார்கள் , பெண்களுக்கு குறைவான சம்பளம் தான் கொடுப்பார்கள். அந்த வருமானம் அனைத்தையும் சேர்த்தாலும் எங்களது குடும்பத்திற்கு போதாது", என்று கோபால் கூறினார்.

Children studied at the kiln's worksite school, which was shut during the lockdown. Bottom right: Kuni at the cement tank where the workers bathed and washed clothes, and filled water for drinking and cooking too
PHOTO • Varsha Bhargavi

ஊரடங்கின் போது பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும் சூளையில் உள்ள பள்ளியில் குழந்தைகள் படித்து வந்தனர். கீழ் வலது: தொழிலாளர்கள் குளிக்க மற்றும் துணிகள் துவைக்கும் சிமெண்ட் தொட்டி அருகில் குடிப்பதற்கும் மற்றும் சமைப்பதற்கும் கூனி தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார்.


கொரோனா வைரஸை பற்றிய சுமித்ராவின் கவலை மற்ற பெற்றோர்களிடமும் சூளையில் தெளிவாகத் தெரிகிறது என்று சாலையின் மறுபுறத்தில் அமைந்துள்ள மாநில பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் சரத் சந்திர மாலிக் கூறுகிறார். "இந்த வைரஸ் இங்கு உள்ள எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு கவலையாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் அனைவருக்குமே சிறு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் கொரோனா வைரஸ் இளைஞர்களை விட  குழந்தைகளையும் பெரியவர்களையுமே அதிகமாக பாதிக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கின்றனர். பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து செய்திகளை பின் தொடர்வதன் மூலமாகவோ அல்லது அவர்களது உறவினர்களிடம் இருந்து தினம்தோறும்  அதைப் பற்றிய செய்திகளை பெறுவதால் அவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்", என்று மாலிக் கூறினார்.

அந்தப் பள்ளியில் சூளை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு வேளை மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஊரடங்கினால் பள்ளி மூடப்பட்டதால் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் மே மாத இறுதி வரை சுமார் 2 மாதங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் இருந்து கூடுதல் நிதியை எடுத்து உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

கூனியின் மகன் பக்தா தனது தாயாருடன் தெலுங்கானாவுக்கு செல்ல எட்டாம் வகுப்பிலிருந்து இடை நின்றுவிட்டார் அவரது தம்பி ஜெகன்நாத் மூன்றாம் வகுப்பிலிருந்து இடைநின்று இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் தன் மகன்களை கிராமத்திலேயே விட்டுவிட்டு வர முடியாது என்பதால் அவர்களையும் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். "இது தவிர எனது குழந்தைகள் இங்குள்ள பள்ளியில் படிப்பைத் தொடரலாம் என்று ஒப்பந்ததாரர் கூறினார் ஆனால் நாங்கள் இங்கு வந்ததும் அவர்கள் பக்தாவை சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்", என்று அவர் கூறினார். செங்கல் சூளையில் உள்ள பள்ளியில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே அனுமதிப்பார் மற்றும் பக்தாவிற்கு இப்போது 15 வயது ஆகிவிட்டது என்பதால் அவர் தகுதி பெறமாட்டார் என்பது கூனிக்கு தெரியாது. அதனால் பக்தா தனது தாய்க்கு செங்கற்களை எடுத்து செல்வதற்கு உதவினார் ஆனால் அவருக்கு என்று தனியாக சம்பளம் வழங்கப்படவில்லை.

சுமித்ராவின் இரண்டாவது மகன் சுபாலுவுக்கு 16 வயது, அதனால் அவரும் பள்ளியில் சேர முடியவில்லை. அவர் சூளைக்கு அருகிலுள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இதுவரை அவருக்கு சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் புறப்படுவதற்கு முன்பு அவர் தனது ஊதியத்தை உரிமையாளரிடமிருந்து பெறுவார் என்று நான் நினைக்கிறேன்", என்று கோபால் கூறினார்.

ஊரடங்கு வேளையிலும் தனது மாதாந்திர வருமானமான 400 ரூபாயை கூனி பெற்றுவந்தார், ஆனால் இந்த செங்கல் சூளையின் சுவர்களுக்கு அப்பால் எல்லாம் மூடப்பட்டு விட்டதால் அவர்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து விட்டது. கஞ்சி செய்வதற்கான அரிசி குருணை முன்னர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்றது இப்போது அதே கடையில் அதே அரிசி 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று கூறினார் கூனி. ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மாநில அரசு வழங்கிய நிவாரணப் பொருட்களை அவர் பெற்றார் அதில் 12 கிலோ அரிசி மற்றும் ஒரு கூலித் தொழிலாளிக்கு 500 ரூபாய் பணம் ஆகியவை இருந்தது. ஆனால் மே மாதத்திற்கு எதுவும் வரவில்லை.

The 48 families working at the kiln lived on the premises with barely any facilities, and were waiting to return to Odisha
PHOTO • Varsha Bhargavi

சூளையில் பணிபுரியும் 48 குடும்பங்களும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இவ்வளாகத்தில் வசித்து வருகின்றனர்  அவர்கள் அனைவரும் ஒடிசாவுக்கு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி மற்றும் பணத்தை வினியோகிக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்த பின்னர், அவர்கள் தெலுங்கானா மாநில அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை பெற்றதாக சங்கரெட்டி மாவட்டத்தில் கூடுதல் கலெக்டரான ஜீ. வீர ரெட்டி கூறினார். "ஏற்கனவே செங்கல் சூளையில் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்நிவாரணம் பொருந்தாது என்று அந்த சுற்றறிக்கை கூறியது. இந்த இலவச நிவாரண பொருட்கள்  தங்களது உரிமையாளர்களிடம் இருந்து ஊதியம் பெறாமல் தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே", என்று அவர் கூறினார்.

சூளைகளில் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலைமை குறித்து கேட்டபோது, "தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையில் ஒரு நெருக்கமான உறவு உள்ளது இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட விரும்பவில்லை", என்று கூறினார்.

மே 22 ஆம் தேதி அன்று நாங்கள் செங்கல் சூளைக்கு சென்றபோது தொழிலாளர்களின் ஒப்பந்ததாரரான பிரதாப் ரெட்டி தொழிலாளர்களைத் தான் நன்கு கவனித்து வருவதாக கூறினார். தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காக ஆர்வமாக இருப்பதை பற்றி கேட்டபோது "அவர்கள் தங்கள் வேலையை முடித்தவுடன் அவர்களை அனுப்புவோம்", என்றார்.

ஆனால் சுமித்ரா மற்றும் கூனி ஆகியோர் தங்களது வீடுகளுக்கு எவ்வளவு வேகமாக திரும்ப முடியும் என்பது குறித்து ஆர்வமாக இருக்கின்றனர். "நாங்கள் செங்கல் சூளைக்கு மீண்டும் நவம்பர் மாதம் திரும்பி வருவோம் ஆனால் இப்போது நாங்கள் உடனடியாக திரும்ப விரும்புகிறோம் ஏனெனில் கொரோனா எங்களது குழந்தைகளை பாதிக்கக்கூடும்", என்கிறார் சுமித்ரா.

ஆனால் ஊரடங்கின் போது கூனிக்கு வேறு ஒன்று கவலையாக இருந்தது: “விரைவில் பருவமழை துவங்கப் போகிறது. நாங்கள் சரியான நேரத்தில் எங்கள் கிராமத்திற்கு செல்லவில்லை என்றால் எங்களுக்கு வயல்களில் வேலை கிடைக்காமல் போகலாம் மேலும் அதனால் எங்களுக்கு அங்கு வேலையும் வருமானமும் இல்லாமல் போகக்கூடும்", என்று கூறினார்.

பின்குறிப்பு: மே 23 ஆம் தேதி அன்று நாங்கள் அவர்களை சந்தித்த மறுநாள் சூளையில் இருந்த  அனைத்து தொழிலாளர்களும் ஒரு  சார்மிக் சிறப்பு ரயில் மூலம் ஒடிசாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஜூன் 2 ஆம்  தேதி பொதுநல வழக்கு ஒன்றுக்கு பதிலளித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒடிசாவின் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

ஜூன் 9 ஆம் தேதி தெலுங்கானாவின் தொழிலாளர் துறை ஆணையர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார், அதில் 16,253 தொழிலாளர்கள் செங்கல் சூளையில் தங்கி உள்ளனர் என்றும் சூளை உரிமையாளர்கள் அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். 9,200 புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜூன் 11 ஆம் தேதி அன்று 5 சார்மிக் சிறப்பு ரயில்கள் ஒடிசாவுக்கு புறப்படுவதாக மாநில வழக்கறிஞர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மீதமுள்ள செங்கல் சூளை தொழிலாளர்கள் திரும்புவதற்கு வசதியாக ஜூன் 12-ஆம் தேதி முதல் அதிக ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழில்: சோனியா போஸ்

Varsha Bhargavi

Varsha Bhargavi is a labour and child rights activist, and a gender sensitisation trainer based in Telangana.

Other stories by Varsha Bhargavi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose