ஓர் உயரமான மற்றும் ஒல்லியான மீனவப் பெண் தனது இறுகிய முகத்துடன், சுந்தர வனத்தின் குல்தாலி தீவின் வழியாக ஓடும் அமைதியான நதியின் பின்புலத்தில் அந்தி சாய்வதை பார்த்துக்கொண்டிருந்தார்; அனிமா மண்டல் கோவமாக இருக்கிறார். அவர் காலையிலிருந்து சாப்பிடவில்லை.

குல்தாலி வனசரக பீட் அதிகாரி பிப்ரவரி 14, 2015 அன்று மதியம் 2 மணிக்கு குல்தாலியின் ஆற்றின் குறுக்கே உள்ள வனச்சரக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்காக அவர் அங்கு வந்திருந்தார். ஏறக்குறைய ஐம்பது பெண்களும் ஒரு சில ஆண்களும் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துகொண்டு இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர் - பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை திரும்பப் பெறுதல் மற்றும் பெண்களை பாரம்பரிய சிறு அளவிலான மீன்பிடி தொழிலாளிகளாக அங்கீகரிக்க வேண்டும், இதன் மூலம் மீன் பிடிக்கும் உரிமை அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது.

குல்தாலி மகிளா தோங்கா மத்ஸயஜிபி சமிதியால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பெண்கள் நீண்ட தூரம் நடந்து, சைக்கிளில் மற்றும் படகில் பயணித்து மத்திய குர்குரியா கிராமத்திலிருந்து சரியான நேரத்தில் கூட்டதிற்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

PHOTO • Urvashi Sarkar

ஏற்கனவே மணி மாலை 5 க்கு மேல் ஆகிவிட்டது. பல பெண்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் மும்முரமாக இருக்கின்றனர் சிலர் தங்களது வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கும் குழந்தைகளை பார்பதற்கும், உணவு வழங்குவதற்காக வேகமாக திரும்பிக் கொண்டிருக்கின்றனர் மீதியிருப்பவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு பயந்து சென்றுகொண்டிருக்கின்றனர். அனிமா மற்றும் சிலர் குல்தாலியில் தங்கி தங்களது குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், வனத்துறையிடமிருந்து பதிலைப் பெறுவதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அவர்கள் அந்த வளாகத்தைச் சுற்றி நடந்து அந்த இருண்ட பசுங்குளத்திற்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது பறிமுதல் செய்யப்பட்ட பனைமர சட்டத்தாலான படகுகளை பார்த்தனர். படகுகள் தண்ணீரில் ஊறி மூழ்கியும் மீதி மிதந்து கொண்டும் இருப்பதை பார்த்த பெண்கள் ஆச்சரியப்பட்டனர். "எங்களது படகுகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டு இருக்கிறது. இந்த ஆற்றில் லட்சக்கணக்கான ரூபாய் மிதந்து கொண்டிருக்கிறது", என்று மீனவ பெண்ணான கீதா சாகு கூறினார். எவ்வாறாயினும் அவரது கோபம் சந்தேகத்திற்கு இடமில்லாதது அதே கோபம் அவருக்கு அருகில் உள்ள மற்ற மீனவர்களுக்கும் இருக்கிறது.

ஒரே வழி

காத்திருக்கும் கூட்டத்தினரிடையே நடக்கும் உரையாடல் உள்ளிட்டூ செலவுகளை பற்றி இருக்கிறது: பனை மரச் சட்டத்தில் இருந்து செய்யப்பட்ட படகுகளின் விலை , மரத்தச்சரின் கூலி மற்றும் பராமரிப்பதற்காக செய்யப்படும் தார் பூச்சு, இவை அனைத்திற்கும் 5,000 ரூபாய் செலவாகி இருக்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு பரிமுதலின் போதும் புதியதாக ஒரு படகினை செய்ய வேண்டியிருக்கிறது அதற்கு இவ்வளவு உள்ளீடுச் செலவும் ஆகிறது. "அந்தப் பணத்தை திரட்டுவதற்கு எனக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களாகிறது, வனத்துறையினரால் அனுமதிக்கப்பட்ட அந்த மரப்படகுகளை எங்களால் வாங்க முடிவதில்லை விலை அதிகமாக இருக்கிறது", என்று மீனவப் பெண்ணான பீனா பாக் கூறுகிறார்.

அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட படகில் ஒன்றிரண்டு படகுகள் இன்னும் உறுதியாக மரங்களுக்கு இடையே  நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்தனர். இந்தப் படகுகள் தான் மீன்பிடி தொழிலாளர்களுக்கு மீன் மற்றும் நண்டுகளை பிடிப்பதற்கு இருக்கும் ஒரே வழி இதன் மூலம் தான் அவர்களது வாழ்வாதாரத்தினை சம்பாதிக்கின்றனர். இப்போது அனிமா கோபத்தில் இருக்கிறார்:  "எதற்காக எங்களது படகுகளை பறிமுதல் செய்து எங்களை வயிற்றில் அடிக்க வேண்டும்? எங்களுக்கு வருமானம் கூட கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா. மாதந்தோறும் சம்பாதித்து பணத்தை வங்கியில் சேமிப்பதற்கு இது கல்கத்தா நகரம் அல்ல . யாரும் எனக்கு ஒரு பை நிறைய காய்கறிகள் சமைப்பதற்கு கொடுக்கப்போவதில்லை. வாழ்க்கை இங்கு வேறு விதமாக இருக்கிறது", என்கிறார்.

PHOTO • Urvashi Sarkar

வாழ்க்கையின் பாகம்

உண்மையில் சுந்தரவனத்தில் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அனிமா மற்றும் பிற மீனவப் பெண்களுக்கு நாள் அதிகாலை 3 மணிக்கு துவங்குகிறது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஆற்றுக்கு படகுகளை எடுத்துச் செல்கின்றனர். மீன் பிடிப்பதற்காக அவர்கள் மார்பளவு குளிர்ந்த நீரில் இறங்குகின்றனர். மீன் பிடித்த பிறகு அவர்கள் வீடுகளுக்குத் திரும்பி அவர்களது குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்கின்றனர். பின்னர் நண்டு மற்றும் மீன் விற்கும் சந்தைகளுக்கு செல்கின்றனர். பெண்கள் தாங்கள் பிடித்தவற்றை விற்பதற்கு எதிர்பார்ப்புடன் இங்கு வந்திருக்கின்றனர் மேலும் அவர்களுக்கு பணம் கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. அப்படியே அவர்கள் சம்பாதிக்க நேர்ந்தாலும் அந்தப் பணத்தை வீட்டுச் சாமான்கள் வாங்குவதற்கும், மீன்பிடி உள்ளீடுகளுக்கும் மற்றும் அந்த வாரத்தில் பணம் சம்பாதிக்க முடியாத நாட்களுக்கும் சேமித்து வைக்கின்றனர். இங்குள்ள சமூகத்தினர் பலர் நிலமற்ற இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை மீனவர்கள், முழுவதுமாக மீன்பிடி தொழிலையே தங்களது வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கின்றனர். மேலும் அவர்கள் எவ்வளவு விற்கின்றனரோ அவ்வளவு தான் அவர்களால் சந்தையிலிருந்து வாங்க முடிகிறது.

வேறு வழி இல்லை

அனிமாவுக்கு திருமணமான போது பத்து அல்லது பன்னிரண்டு வயது இருக்கும். சமீபத்தில் அவரது கணவர் வாதம் வந்து இறந்து போனார். "இங்கு சரியான மருத்துவமனை கூட இல்லை. கர்ப்பிணி பெண்கள் கூட இரண்டு மணி நேரம் பயணம் செய்து மருத்துவமனைகள் இருக்கும் ஜாய்நகருக்கு செல்ல வேண்டியிருக்கிறது", என்று விரக்தியுடன் கூறினார். சுந்தரவனத்தில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது அதற்கு முக்கிய காரணம் வாழ்வாதாரத்தை தேடி புலம்பெயர்தல்; பெரும்பாலானவர்கள் கட்டிட தொழில் செய்வதற்காக நகரங்களுக்கு செல்கின்றனர், சிலர் தங்களது லாபத்துக்காக புலிகளை வேட்டையாடுகின்றனர்.

PHOTO • Urvashi Sarkar

சுந்தரவனக் காடுகளில் முன்மொழியப்பட்ட சுற்றுலா திட்டங்களினாலும் எந்த பயனும் இல்லை என்பது குறித்தும் இப்பெண்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். "அவர்கள் ஏன் எங்களை சுற்றுலா திட்டத்தில் ஈடுபடுத்தாமல் இருக்கின்றனர்? அது எங்களுக்கு நல்ல வேலையும் கொடுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எங்களுடன் நல்ல முறையில் யாரும் ஈடுபட விரும்புவதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு பெரிய படகுகள் எங்களைப் போலவே மீன் மற்றும் நண்டுகளை பிடிக்கும் ஆனால் வனத்துறையினர் எங்களை தான் பிடிப்பார்", என்று கூறுகிறார்.

நிச்சயமான பிடிப்பு

வாழ்க்கை மிகக் கடினமாக இல்லை என்றாலும் வனத்துறையினர் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதன் மூலம் அது மேலும் கடினமாவதை உறுதி செய்கின்றனர். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் இந்த படகுகளுக்கு வனத்துறையினரால் வழங்கப்படும் படகு உரிமைச் சான்றிதழ் இல்லாததே, மேலும் சுந்தரவனக் காடுகளில் இதனை இயக்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை; குல்தாலி, சுந்தரவன காப்பு வனப்பகுதியின் ஒரு பகுதியாகும், மீனவர்களிடம் படகு உரிமச் சான்றிதழ் இல்லாததை காரணம் காட்டி அவர்களது சொந்த நிலத்திலேயே நண்டுகள் பிடிப்பது தடுக்கப்படுகிறது.

மாற்றமுடியாத தன்மை, மீனவர்கள் அல்லாதோரிடம் இருக்கும் படகு உரிமைச் சான்று, செழிப்பான கள்ள சந்தை மற்றும் புதிய உரிமங்களை வழங்காதது உள்ளிட்ட பல சிக்கல்களை படகு உரிமைச் சான்று கொண்டிருக்கிறது. சுந்தரவன மீனவர்கள் பற்றிய சர்வதேச மீனவர்கள் ஆதரவு கூட்டமைப்பின் (ICSF) மூலம் நடத்தப்பட்ட ஆய்வு இந்த பிரச்சனைகளை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது. மீன்பிடி தொழிலாளர்களை தடுக்க வனத்துறையினர் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்யும் முறையை பயன்படுத்துகின்றனர். பெண்கள் மீன்பிடிக்கச் செல்வதை தடுப்பதற்காக அவர்கள் (வெறுங்காலில் செல்வார்கள் என்பதால்) ஆற்றங்கரை மணலில் கண்ணாடி துண்டுகள் கலக்கப்படும் என்று அச்சுறுத்துகின்றனர் என்று இப்பெண்கள் புகார் கூறுகின்றனர்.

PHOTO • Urvashi Sarkar

தக்ஷின்பங்கா மத்ஸயஜிபி மன்றத்தின் தலைவரான பிரதீப் சாட்டர்ஜி கூறுகையில், "வனத்தை சார்ந்து வாழும் மீனவ பெண்களின் சமூக உரிமையான காட்டுப் பகுதியில் மீன் பிடிப்பதை தடுப்பது என்பது FRA வின் சட்டவிதிகளை மீறுவதாகும்". வன உரிமை சட்டம் (FRA) காடுகளில் வசிக்கும் மக்களின் அணுகல் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இதில் நிலையான பயன்பாடு மற்றும் அவர்களின் சொந்த நிலங்களில் பல்லுயிர்களை பாதுகாப்பது ஆகியவையும் அடங்கும்.

பலமுறை முறையிட்ட பிறகும் மேற்கு வங்காள அரசு, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களை வன உரிமைச் சட்டத்தின் கீழ் இன்னும் அறிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்: “இந்தச் சட்டத்தை அறிவிக்க தவறியதன் விளைவாக இந்த வனத்தைச் சார்ந்த ஆதிவாசிகள், மீனவர்கள், தேன் சேகரிப்பவர்கள், விறகுகள் சேகரிப்பவர்கள் மற்றும் சிப்பிகள் சேகரிப்பவர்கள் ஆகிய மக்களின் வாழ்வாதார உரிமைகளை வனத்துறை மறுக்கிறது இதன் விளைவாக வனத்துறையினருக்கும் இம்மக்களுக்கும் மோதல்கள் ஏற்படுகின்றன". வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மீன்பிடி தொழிலாளர்களுக்கு படகு உரிம சான்றிதழ் இல்லாமலே நண்டு பிடிக்க அனுமதி அளிக்கும்.

எதிர்பார்ப்பும் வெற்றியும்

மாலை 6 மணிக்கு மேல் பீட் அதிகாரி அங்கு வருகிறார். அவர் மகிளா தோங்கா சமிதி பெண்களுடன் மற்றும் தக்ஷின் மத்ஸயஜிபி மன்றத்தின் உறுப்பினர்களுடன் பேசுகிறார். வேட்டையாடுவதற்கு அவர்களது படகுகள் பயன்படுத்தப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவிக்கிறார். ஒரு சிலர் வேட்டையாடுவதற்காக மொத்த மீனவ சமூகத்தையும் தண்டிக்கக் கூடாது என்று அப்பெண்கள் வாதிடுகின்றனர்.

PHOTO • Urvashi Sarkar

வேட்டையாடப்படும் சமயங்களில் வனத்துறைக்கு தகவல் கொடுப்பதாக அவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர் ஆனால் அவர்கள் மீன்பிடி படகுகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அடுத்த மூன்று மாதங்களுக்கு படகுகள் பறிமுதல் செய்யப்படாது என்று பீட் அதிகாரி தெரிவித்தார், அந்த நேரத்தில் படகுகளின் இயக்கம் கண்காணிக்கப்படும். வனத்தை நம்பியுள்ள மீனவ சமூகங்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையை உயர் அதிகாரிகளிடம் தான் எடுத்துக் கூறுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புலிகள் தாக்கி மீனவர்கள் உயிரிழக்கும் போது அரசு இழப்பீடு வழங்கும் என்பது குறித்து அவர் கூறும்போது மீனவர்கள் தாமாக முன்வந்து புலிகள் இருக்கும் பகுதிக்கு செல்வதில்லை ஆனால் அது அவர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த விவாதங்கள் முடிவதற்குள் இரவு நேரமாகிவிட்டது. தற்காலிகமானது தான் என்றாலும் இந்த வெற்றியால் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். சுந்தரவனக் காடுகளில் இருளில் நீருக்குள் செல்லும் படகில் அவர்கள் ஏறுகின்றனர். அனிமா சலனமற்ற நீரின் வழியாக அவரது வீட்டை பார்க்கிறார்.

இந்த எழுத்தாளர் சௌத் சாலிடாரிட்டி இனிசியேடிவில் ஆராய்ச்சியாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார்.

படங்கள் : தக்ஷின்பங்கா மத்ஸயஜிபி மன்றம்

தமிழில்: சோனியா போஸ்

Urvashi Sarkar is an independent journalist and a 2016 PARI Fellow.

Other stories by Urvashi Sarkar
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose