ஒரு கார் அவர் அருகே நின்றபோது, அவர் பாதி முடிக்கப்பட்ட குதிரை பொம்மையை தலையணையாக வைத்து, சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த கார் நின்ற சத்தம் அவரை எழுப்பியது. 60 வயதான கைவினை கலைஞர் காரில் அமர்ந்திருந்தவரிடம் ஓடிச்சென்று, அதன் உறுதித்தன்மையை காட்டுவதற்காக குதிரை பொம்மையின் மீது அமர்ந்து காட்டுகிறார். நிச்சயமாக 300 ரூபாயிலிருந்து பேரம் நடந்தது. வாடிக்கையாளர் 200 ரூபாயாக குறைத்தார். அதன் மூலம் ஜீவாரா ராம் அன்றைய நாளின் முதல் மற்றும் இறுதி விற்பனையை மாலை 4 மணிக்கு செய்து முடித்தார்.

அவர் ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகில்தான் அவர்கள் வசிக்கும் குடிசை உள்ளது. ஜீவாரா ராமின் வீடு மூங்கில் குச்சிகளில் தார்ப்பாய் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்டது. அவர் அங்கு அவரது மனைவி புக்லிபாய் மற்றும் அவர்களின் 2 மகன்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார். அவர்களின் குடிசை, அதே போன்ற 40 – 50 குடிசைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு மேற்கு ஜெய்பூரின் அம்பாபரி தர்கா பகுதியில் அமனீஷா ஓடையின் மீதுள்ள பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள குடும்பத்தினர் அனைவரும் பாட் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். (ராஜஸ்தானின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்), இவர்கள் அனைவரும் காய்ந்த புல் அல்லது வைக்கோலை வைத்து யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் பல அலங்கார பொருட்கள் செய்பவர்கள்.

“நாகவுர் மாவட்டத்தின் திட்வானா நகரில் இருந்து எனது தந்தை ஜெய்பூருக்கு வந்த ஆண்டு எனக்கு நினைவில் இல்லை“ என்று ஜீவாரா ராம் கூறுகிறார். பொம்மை தயாரிக்கும் வேலையில் அவரது முக்கியமான பணியாக கருதுவது வைக்கோலை வைத்து செய்யப்போகும் உருவத்தினுடைய எலும்பு கூட்டை உருவாக்குவதே. அதை செய்யும்போது, மெல்லிய மூங்கில் குச்சிகளை உள்ளே செலுத்தி, அந்த கூட்டை நன்றாக பிடித்துக்கொள்ளும்படி செய்துவிடுகிறார். பின்னர் காய்ந்த புற்கள் வைத்து, வயர் மற்றும் நூலைக்கொண்டு கட்டுகிறார். பின்னர், அதை சிவப்பு வெல்வெட் துணியை வைத்து தைப்பதற்கு புக்லிபாயிடம் கொடுக்கிறார். பின்னர் அது தங்க நிற லேசால் அலங்கரிக்கப்படும். அவர்களுக்கு ஒரு பொருள் செய்வதற்கு 2 முதல் 3 மணி நேரம் ஆகிறது.

அவர்களுக்கு வீடு, வேலை செய்யும் இடம், செய்து முடித்த பொருட்களை சேமிக்கும் கிடங்கு என அனைத்துமே அவர்கள் அமர்ந்திருக்கும் குடிசைதான். ஒவ்வொரு முறையும் போலீஸ் மற்றும் ஜெப்பூர் நகர அதிகாரிகள் அவர்களின் குடியிருப்புகளை அகற்றியபின்னர், இந்த தற்காலிக குடிசையை அவர்கள் 4 முறைக்கு மேல் மாற்றிவிட்டார்கள். இதை சட்டவிரோதமாக கருதியதால் அவ்வாறு செய்கிறார்கள். இவர்கள் தற்போது தங்கும் இடத்தில், தண்ணீருக்கு டேங்கர் லாரிகளையும், அருகில் உள்ள கடைகளையும், பொது கழிவறைகளை அல்லது அமனீஷான் ஓடைக்கு அருகில் உள்ள திறந்தவெளிகளையும் பயன்படுத்துகிறார்கள். ஒளிக்கு, பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய லைட்களை பயன்படுத்துகிறார்கள்.

ஜீவாரா ராம் குடும்பத்தைப்போல் பாலத்திற்கு அருகில் வசிக்கும் அத்தனை குடும்பத்தினருக்கும் சொந்தமாக விளை நிலங்கள் கிடையாது. அதில் பெரும்பாலானோர் ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் நாக்பூர் மாவட்டங்களின் கிராமங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களின் பாரம்பரிய தொழில் தோற்பாவை கூத்துக்கு பயன்படுத்தப்படும் மரப்பொம்மைகள் செய்து, அதை வைத்து தோற்பாவை கூத்து நடத்துவது. ஆனால், தற்போது இவர்கள் பெரும்பாலும் காய்ந்த புற்கள் மற்றும் வெல்வெட்டால் அலங்காரப்பொருட்கள் செய்கிறார்கள்.

Pooja Bhat has been making dry grass elephants, horses and camels since childhood. 'The lockdown forced us to even beg', she says
PHOTO • Madhav Sharma
Pooja Bhat has been making dry grass elephants, horses and camels since childhood. 'The lockdown forced us to even beg', she says
PHOTO • Madhav Sharma

பூஜா பட், குழந்தை பருவத்திலிருந்து காய்ந்த புற்களாலான யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டக பொம்மைகள் செய்து வருகிறார். “இந்த ஊரடங்கு எங்களை யாசகம் கேட்பதற்கு வற்புறுத்தியது“ என்று வேதனையோடு அவர் கூறுகிறார்

“தற்போது மக்களிடம் டிவிக்களும், செல்போன்களும் அதிக புழக்கத்தில் அவர்கள் பொழுதை போக்குவதற்காக உள்ளன. அவர்களுக்கு இனி எங்களின் தோற்பாவை கூத்துகள் தேவைப்படாது“ என்று ஜீவாரா ராம் கூறுகிறார். குழந்தையிலிருந்து அவரது தந்தை மற்றும் தாத்தாவிடம் இருந்து மரத்தினாலான தோற்பாவை கூத்திற்கு தேவைப்படும் பொம்மைகள் செய்வதை கற்றுக்கொண்டவர். வழக்கமாக 3 பேர் கொண்ட குழு தோற்பாவை கூத்தை அரங்கேற்றுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு 10 முதல் 20 ரூபாயும், கொஞ்சம் மாவும் கிடைக்கும். ஆனால், இரு தசாப்தங்களுக்கு மேலாக உள்ளூர் பார்வையாளர்களிடம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது.

நீண்ட காலமாக, ஜெய்ப்பூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மேல்தட்டு மக்கள் தங்கும் விடுதிகளுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே இவர்களின் பார்வையாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு 3 பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேர நிகழ்ச்சியை நடத்த முடியும், ஒருவர் தோற்பாவைகளை இயக்குவார். மற்றவர்கள் ஹார்மோனியம் மற்றும் டோலக்கை வாசிப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் வழக்கமாக நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் கதைகளை காட்டுவதாக இருக்கும். அரசர் ஷாஜஹானின் ஆட்சி காலத்தில் 17ம் நூற்றாண்டின், மார்வாரி அரண்மனையின் அமர்சிங் ரத்தோடின் கதை மற்றும் நாக்பூரின் சிம்மாசனத்திற்காக ராஜ்புட்டின் சகோதர சண்டைகள், எதிர் சதி, மரண தண்டனைகள் உள்ளிட்ட மற்றும் பல கதைகள் பிரபலமான கதைகள் என்று பட் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த, 73 வயதான பிரேம் பட் கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சிகள் மாதத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.300 முதல் ரூ.500 வரை வருமானத்தை ஈட்டித்தரும். மாதத்தில் 3 முதல் 4 முறை நடத்தப்படும். ஆனால், ஊரடங்கு மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் இக்கலை முடிவுக்கு வந்துவிட்டது. “எனினும் இதுவரை தங்கும் விடுதிகளும், சுற்றுலா பயணிகளும் எங்களுக்கு கொஞ்சம் வேலை கொடுக்கிறார்கள். கொரோனாவால் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுவிட்டன. சுற்றுலா பயணிகளும் இல்லை. எனவே எங்கள் வாழ்வாதாரத்திற்கு நாங்கள் இந்த காய்ந்த புற்களை கொண்டு செய்யப்படும் பொம்மை தொழிலை மட்டுமே சார்ந்திருக்கிறோம்“ என்று ஜீவாரா ராம் கூறுகிறார்.

பட் சமுதாயத்தினர் நீண்ட காலமாக மரத்தினாலான தோற்பாவைகளை செய்தும், தோற்பாவை கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியும் வருவதாக பிரேம் பட் கூறுகிறார். இந்த வைக்கோல், வெல்வெட் துணிகளை வைத்து பொம்மைகள் செய்யும் தொழில்களை செய்து வருவது அண்மைகாலத்தில் மட்டுமே என்று அவர் மேலும் கூறுகிறார். இதுபோன்ற கைவினைப் பொருட்களுக்கான தேவை, மற்ற நாடுகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வந்தபோதுதான், இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிறிய குதிரைகள் செய்ய துவங்கினர். அது 1960களில் என்று அவர் நினைவு கூறுகிறார். இதற்கிடையில், மரத்தினாலான பொருட்கள் செய்வதற்கான செலவும், நேரமும் அதிகம், எனவே பட் சமுதாயத்தினர் தற்போது அவற்றை சிறப்பான ஆர்டர்கள் கிடைக்கும்போது மட்டுமே செய்கிறார்கள்.

'Now, people have TVs and mobile phones for their entertainment, they do not need our puppet shows anymore', says Juara Ram (right)
PHOTO • Madhav Sharma
'Now, people have TVs and mobile phones for their entertainment, they do not need our puppet shows anymore', says Juara Ram (right)
PHOTO • Madhav Sharma

‘தற்போது டிவி மற்றும் செல்போன்களிலே மக்கள் பொழுதைக்கழிக்கிறார்கள். அவர்களுக்கு இனி எங்களின் தோற்பாவை கூத்துகள் தேவையில்லை‘ என்று ஜீவாரா ராம் (வலது) கூறுகிறார்

“வைக்கோலால் செய்யப்பட்ட துணியால் மூடப்பட்ட குதிரை பொம்மைகளை, ராஜஸ்தான் முழுவதும் ராம்டியோரா கோயில்களில் காணிக்கையாக மக்கள் செலுத்துகிறார்கள்“ என்று பிரேம் பட் கூறுகிறார். 17ம் நூற்றாண்டில் நாட்டுப்புற தெய்வம் தான் சவாரி செய்ய பயன்படுத்தி வந்த மரக்குதிரையுடன் மூழ்கிவிட்டதை அவர் நினைவு கூறுகிறார். அதன் நினைவாகவே, ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில், ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ராம்தியோரா நகரில் நடைபெறும் 8 நாள் ஆண்டு கண்காட்சியில், கைவினை கலைஞர்கள் செய்யும் குதிரைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன.

“நான் எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் செய்வதை பார்த்து செய்யக்கற்றுக்கொண்டேன். நான் குதிரை, யானை மற்றும் ஒட்டக பொம்மைகளை காய்ந்த புல் கொண்டு எனது குழந்தை பருவம் முதலே செய்து வருகிறேன்“ என்று 18 வயதான பூஜா பட் கூறுகிறார். அவர் ஜீவாரா ராமின் குடிசைக்கு எதிரில் உள்ள பாதையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் ராஜஸ்தானினின் பாரம்பரிய லெஹங்கா எனப்படும் பாவாடை, தாவணி போன்ற உடையை அணிந்துள்ளார். அவர் சிவப்பு வெல்வெட் துணியை வைத்து வைக்கோலால் செய்யப்பட்ட பொம்மையை மூடி தைத்துக்கொண்டிருக்கிறார்.

தொற்றுநோய் அவரின் வருமானத்தையும் பாதித்துவிட்டது. “முன்பு இந்த பொம்மைகளை விற்பதில் வரும் வருமானத்தின் மூலம் இரண்டு வேளை உணவு உண்போம். ஆனால், இந்த ஊரடங்கு எங்களை யாசிக்க நிர்பந்தித்துவிட்டது“ என்று பூஜா கூறுகிறார். ஒரு நாளில் 10 பொம்மைகள் வரை விற்பவர், தற்போது 1 அல்லது 2 பொம்மைகளே விற்கிறார். “முன்னர் ஒரு நாளில் 400 முதல் 500 ரூபாய் வரை லாபம் பெறுவோம். ஆனால், தற்போது எங்களுக்கு 100 முதல் 150 ரூபாயே அரிதாகத்தான் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தற்போது கைவினை பொருட்களை அதிகம் விரும்புவதில்லை. அப்படியே வாங்கினாலும் அதிகம் பேரம் பேசுகிறார்கள். நாங்கள் லாபமின்றி எங்களுக்கு ஆன செலவிலே பொருட்களை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பாலத்தின் அருகில் வசிக்கும் மற்றவர்களுக்கும் எவ்வித அடையாள அட்டைகளோ, ஆவணங்களோ இல்லை. அரசின் எந்த உதவியையும் அவர்கள் பெறுவதில்லை. “நாங்கள் எப்போது எந்த அட்டை கேட்டுச்சென்றாலும், அதிகாரிகள் எங்களை துரத்திவிடுகிறார்கள்“ என்று பூஜாவின் சகோதரி 25 வயதான மஞ்சு கூறுகிறார். “நாங்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு பலமுறை முயன்றோம். அரசின் எந்த திட்டத்திலும் எங்களை சேர்த்துக்கொள்ளவில்லை. சில தன்னார்வலர்கள் ஊரடங்கின்போது இங்கு வந்து உணவு வழங்கியதால் நாங்கள் உயிரோடு இருக்கிறோம். மூன்று நாட்கள் பழைய, நாற்றம் அடிக்கும் பூரிகளை கூட நாங்கள் அந்த நாட்களில் உட்கொண்டோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

பூஜாவின் குடிசைக்கு அருகில் வசிக்கும் ராஜீ பட்டுக்கும் மார்ச் 2020ல் இருந்து கஷ்டமான காலமாக உள்ளது. ஊரடங்கால், ஒரு வாடிக்கையாளர் கூட கிடைக்கவில்லை. அப்போது சிறிய விலங்கு பொம்மைகள் செய்யும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்திருந்தது என்று அவர் கூறுகிறார். 38 வயதான ராஜீ, தனது 5 வயது முதல் வைக்கோலாலான பொம்மைகள் செய்து வருகிறார்.

'No one in our community wants their children to continue doing this work', says Raju Bhat, with his wife Sanju and sons Rohit (left), and Deepak (right)
PHOTO • Madhav Sharma
'No one in our community wants their children to continue doing this work', says Raju Bhat, with his wife Sanju and sons Rohit (left), and Deepak (right)
PHOTO • Madhav Sharma

“எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட எங்களின் குழந்தைகள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை“ என்று ராஜீ பட்  கூறுகிறார். அவரது மனைவி சஞ்ஜீ மற்றும் மகன்கள் ரோஹித் (இடது) மற்றும் தீபக் (வலது)

“முன்னர் நாங்கள் சந்த்போல் சந்தை அல்லது முஹானா சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைப்பதற்கு பயன்படுத்தும் காய்ந்த புற்களை அங்கிருந்து பெற்று வந்தோம். (அவர்களில் குடிசையில் இருந்து இந்த சந்தைகள் 8 மற்றும் 11 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தன) குவிண்டால் 100 முதல் 150 ரூபாய் ஆகும். நாங்கள் அதிலிருந்து 50 பொம்மைகள் தயாரிப்போம்“ என்று ராஜீ கூறுகிறார். “ஆனால், தற்போது நாங்கள் குவிண்டாலுக்கு ரூ.1,500 கொடுக்கிறோம். அடுத்தது வெல்வெட் மீட்டருக்கு ரூ.70 கொடுக்கிறோம். ஜொலிக்கும் அலங்காரப்பொருட்கள் கிலோவுக்கு  ரூ.500 கொடுக்கிறோம். நூல் கிலோ ரூ.200 வருகிறது. குறிப்பிட்ட வடிவம் வருவதற்கு மற்றும் பொம்மைகளை கட்டி வைப்பதற்கு பயன்படும் சிறிய துண்டு மூங்கில்கள் மற்றும் வயர்களை நாங்கள் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

மார்ச் 2020 ஊரடங்கால் மாற்றங்கள் நிகழ்வதற்கு முன்னர், 18 இன்ச் உயர வைக்கோல் மற்றும் வெல்வெட் பயன்படுத்தி ஒரு பொருள் செய்வதற்கு ராஜீவுக்கு ரூ.60 முதல் 65 வரை செலவானது. ஆனால், தற்போது ரூ.90 அல்லது அதற்கு மேல் ஆகிறது. “பொருட்களின் அளவைப்பொறுத்து, அவற்றை நாங்கள் ரூ.100 முதல் 120க்கு விற்போம்“ (சில நேரங்களில் ரூ.200) என்று அவர் கூறுகிறார். அவரது குடும்பத்தினர் ஒரு நாளில் அதுபோன்ற 4 பொம்மைகள் செய்வார்கள். ஆனால், விற்பது அவர்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்து 2 அல்லது 3 தான். “மக்கள் இன்னும் எங்களிடம் ஒரு குதிரை ரூ.150க்கு வாங்குவதற்கு பேரம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், பெரிய மால்களில் பொம்மை கார்களை ரூ.500க்கு எவ்வித பேரமுமின்ற வாங்குவதற்கு அவர்கள் தயாராக உள்ளார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தப்பொருட்களை விற்பதில் இருந்து வரும் வருமானம்தான் ராஜீ, அவரது மனைவி சஞ்ஜீ (32), அவர்களின் 4 குழந்தைகள் தீபக் (17), அணில் (15), குட்டி (12), ரோஹித் (10) 6 பேர் கொண்ட குடும்பத்திற்கான வாழ்வாதாரம். குழந்தைகள் ஒருவர் கூட பள்ளி செல்லவில்லை. தீபக் மற்றும் அணில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு, குடும்பத்திற்கு உதவ வைக்கோல் கலை பொருட்கள் செய்ய துவங்கிவிட்டனர். குட்டி மற்றும் ரோஹித் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்தாலும், தற்போது நடைபெறும் ஆன்லைன் வகுப்புக்களில், ஸ்மார்ட் போன் வசதியில்லாததால் கலந்துகொள்ள முடிவதில்லை.

“பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்தவுடன், குட்டி மற்றும் ரோஹித்தை மீண்டும் படிக்க அனுப்பிவிடுவேன்“ என்று ராஜீ கூறுகிறார். “எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் எங்கள் குழந்தைகள் இந்த தொழில் செய்வதை விரும்பவில்லை. எங்கள் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளதால், நாங்கள் இந்த வேலை செய்வதற்கு நிர்பந்திக்கப்படுகிறோம். எல்லா பெற்றோரையும் போல் தான் என் குழந்தைகள் குறித்து நானும் கனவு வைத்துள்ளேன். அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்கிறேன். அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த வைக்கோலாலான கைவினை பொருட்கள் செய்யக்கூடாது என்று நான் நினைக்கிறேன். யார் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து அவர்களின் வீடுகளை உடைப்பதை நான் விரும்பவில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவரது சமுதாயத்தினர் இந்த வேலை செய்வதை மெல்ல மெல்ல நிறுத்திவிடுவார்கள் என்று நினைக்கிறார். ஒரு நாள் அவர்கள் வைக்கோல் பொம்மைகள் செய்வதும் நின்றுவிடும். “எனது தலைமுறை இருக்கும் வரை மட்டுமே இந்த தொழில் இருக்கும்“ என்று அவர் கூறுகிறார்.

இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் சில்கா

தமிழில்: பிரியதர்சினி. R.

Madhav Sharma

Madhav Sharma is a freelance journalist based in Jaipur. He writes on social, environmental and health issues.

Other stories by Madhav Sharma
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.