தாரிபாவில் ஜனவரி 2005 அன்று போலி தேவி விஷ்னோயை சூனியக்காரியாக முத்திரை குத்தப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டது. மாந்திரீகம் செய்து தங்கள் குழந்தைகளுக்கு நோய் உண்டாக்குகிறார் என அன்றைய நாள் கிராமத்தில் உள்ள மூன்று பெண்கள் போலி மீது குற்றம் சுமத்தினர். ஒட்டுமொத்த கிராமத்தின் முன் அவரை சூனியக்காரி என அழைத்து, மற்றவர்களின் உடம்பிற்குள் சென்று நோய் உண்டாக்குகிறார் என அவர் மீது குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு போலியும் அவரது குடும்பமும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். தாரிபாவிலிருந்து 14கிமீ தொலைவிலுள்ள பில்வாரா நகரத்திற்கு அவர்கள் சென்றனர்.

தற்போது 50 வயதாகும் போலி, மாந்திரீகம் மீது தனக்கு நம்பிக்கையில்லை என கூறுகிறார். ஆனால், குற்றம் சுமத்தியவர்கள் தன்னிடமிருந்து பிரசாதம் வாங்க ஒத்துக்கொண்டு என்னை “மன்னிக்காதவரை” சூனியக்காரி என்ற முத்திரையிலிருந்து என்னால் வெளிவர முடியாது என விளக்கம் தருகிறார்.

அவர்களை சமாதனப்படுத்த, தன்னுடைய உறவினர்கள் மற்றும் கிராமத்தினரின் அறிவுரையின் படி, பல வருடங்களாக புஷ்கர், ஹரித்வார், கேதர்நாத் போன்ற ஊர்களுக்கு யாத்திரை சென்று, கங்கையில் குளிப்பது, விஷேச நாட்களில் விரதம் இருப்பது என பலவற்றை முயற்சித்துள்ளார் போலி. இதுபோன்று செய்தால் தன் மீது சுமத்தப்பட்ட சூனியக்காரி என்ற களங்கத்திலிருந்து விடுபடலாம் என அவரிடம் கூறியுள்ளனர்.

“எங்கள் பாரம்பரியத்தை பின்பற்றி, யாத்திரை மற்றும் விரதத்திற்குப் பிறகு, சிலரை விருந்திற்கு அழைத்தோம். ஆனால் எங்கள் வீட்டில் உணவருந்த யாரும் வரவில்லை” என கூறுகிறார் போலி. இத்தோடு புறக்கணிப்பை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில், உள்ளூர் திருவிழாக்களின் போது கிராமத்திலும் தங்கள் வீட்டிலும் குடும்பத்தினர் உணவு ஏற்பாடு செய்வார்கள். விருந்திற்காக மட்டுமே இத்தனை வருடங்களில் பத்து லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருப்போம் என மதிப்பிடுகிறார் போலி.

போலி சந்திக்கும் புறக்கணிப்பு பில்வாரி மாவட்டத்தில் ஒன்றும் புதிதல்ல என்று கூறுகிறார் தாரா அலுவாலியா. 2005-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு சில நாட்களுக்கு பிறகு, போலி மற்றும் அவரது குடும்பத்தின் சார்பில் நீதிமன்றம் மூலமாக இவர்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். பில்வாரா நகரத்தைச் சேர்ந்த அலுவாலியா சமூக செயற்பாட்டாளர் ஆவார்.

Left: Bholi and her family were forced to leave their home in Dariba village four months after the incident. Right: She moved with her husband Pyarchand (right) and family (including daughter-in-law Hemlata, on the left) to Bhilwara city
PHOTO • People's Archive of Rural India
Left: Bholi and her family were forced to leave their home in Dariba village four months after the incident. Right: She moved with her husband Pyarchand (right) and family (including daughter-in-law Hemlata, on the left) to Bhilwara city
PHOTO • Tara Ahluwalia

இடது: சம்பவம் நடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, தாரிபாவில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போலியும் அவரது குடும்பமும் வெளியேற்றப்பட்டனர். வலது: தன் கணவர் பியார்சந்த் (வலது) மற்றும் குடும்பத்தோடு (மருமகள் ஹேமலதா, இடது) அவர் பில்வாரா நகரத்திற்கு சென்றார் (2017-ல் எடுக்கப்பட்ட புகைப்படம்)

ஜனவரி 28, 2005 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் போலி குடும்பத்தில் உள்ள 1.2 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் தீய நோக்கத்தோடு போலியை சூனியக்காரி என முத்திரை குத்தியதாக கூறப்பட்டுள்ளது. போலி குடும்பம் போல், அவரை துன்புறுத்தியவர்களும் விஷ்னாய் (அல்லது பிஷ்னாய்) சமூகத்தைச் சார்ந்தவர்களே. இந்த சாதி ராஜஸ்தானில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியில் பட்டியலிடப்பட்டுள்ளது. போலியின் கணவர் பியார்சந்த் விஷ்னாய் கூறுகையில், எங்களின் நிலம் வழியாக செல்வதற்கு அனுமதி வேண்டும் என பிற குடும்பங்கள் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருந்தன. இந்த நிலத்தை நான் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறேன். வேறு வழியாக செல்லுங்கள் என நான் கூறியதும், சச்சரவு ஏற்பட்டு முடிவில் போலியை சூனியக்காரி என முத்திரை குத்தினார்கள்.

“மாந்திரீக வழக்குகளை வெறுமனே வெளியிலிருந்து பார்த்து மட்டும் கூற முடியாது. இவை பலவும் பொய்யாக இருப்பதோடு நிலப் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இந்த பகுதியில் உள்ள சமூக மரபுகளால் இந்த பழக்கம் கடைபிடிக்கப்படுவதாக” கூறுகிறார் பில்வாரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரேந்திர குமார் மஹாவர்.

பல சமயங்களில், கிராமத்தில் உள்ள செல்வாக்குமிக்க நபர்கள் பெண்களை ஏமாற்ற சூனியக்காரி என்று கூறுவார்கள். குறிப்பாக, கணவரை இழந்தவர் அல்லது பொருளாதார ரீதியில் நீதிமன்றத்திற்குச் சென்று போராட முடியாத தனியாக இருக்கும் பெண்களே இவர்களின் இலக்கு. இவர்களின் நிலங்களை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சியே இது என கூறுகிறார் அலுவாலியா. இவர் பால் இவாம் மகிலா சேத்னா சமிதி என்ற அரசு சாரா நிறுவனத்தின் நிறுவனராவார். 1980-களிலிருந்து மாந்திரீக பழக்கத்திற்கு எதிராக பில்வாரா மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

குடும்ப பகை மற்றும் போட்டிகள் காரணமாகவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பெண்களுக்கு எதிராக சுமத்தப்படுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற வழக்குகள் சமூக பிரச்சனையாக கருதப்படதால், இவை கிராம பஞ்சாயத்தால் கையாளப்பட்டன. “இந்த பழக்கத்தை ஊக்குவிப்பதிலும் பெண்களை சூனியக்காரியாக அறிவிப்பதிலும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் முக்கியம் பங்கு வகிக்கின்றனர்” என்கிறார் அலுவாலியா.

செயற்பாட்டாளர்களின் 25 வருடகால பிரச்சாரத்தின் பயனாக, ஏபரல் 2015-ம் ஆண்டு மாந்திரீக தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு. இந்த சட்டத்தின் மூலம் மாந்திரீகம் மற்றும் சூனியம் செய்வது குற்றமாக அறிவிக்கப்பட்டதோடு, மீறி செய்பவர்களுக்கு 1 முதல் 5 வருட சிறைத்தண்டனை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

PHOTO • Madhav Sharma

2015-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து 261 மாந்திரீக வழக்குகள் பதிவாகின. 109 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை

ராஜஸ்தான் காவல்துறை சேகரித்த தரவுகள் படி, இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பில்வாரி மாவட்டத்தில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (காவல்நிலையத்திற்கு தினமும் 10-15 புகார்கள் வந்தாலும் அவை எதுவும் வழக்குகளாக பதிவு செய்யப்படுவதில்லை என குறிப்பிடுகிறார் மஹாவர்). சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இதுவரை ராஜஸ்தான் முழுவதும் 261 மாந்திரீக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ல் 12 வழக்குகள், 2016-ல் 61, 2017-ல் 117, 2018-ல் 27 மற்றும் நவம்பர் 2019 வரை 45 வழக்குகள். எனினும், 109 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

“களத்தில் இந்த சட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் இதுநாள் வரை ராஜஸ்தானில் மாந்திரீகத்திற்கு யாரும் தண்டிக்கப்பட்டதில்லை” என விளக்குகிறார் அலுவாலியா. கிராமப்பகுதியில் உள்ள காவலர்கள் சில சமயங்களில் இந்த சட்டம் குறித்து அறியாமல் உள்ளனர். இதனால் மாந்திரீக புகார்களை வெறும் சண்டையாக வகைப்படுத்துகின்றனர் எனவும் அவர் கூறுகிறார்.

இந்த மாதிரி வழக்குகளை போலீசார் முறையாக விசாரிப்பதில்லை எனவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் சரியான பிரிவுகளில் இதை பதிவு செய்வதவில்லை என ஒத்துக்கொள்வதோடு வழக்குகளை பலவீனப்படுத்த குற்றவாளிகளிடமிருந்து சில போலீசார் லஞ்சம் பெறுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்துகிறார்  பில்வாராவைச் சேர்ந்த கள செயற்பாட்டாளர் ராகேஷ் ஷர்மா. இவர் ராஜஸ்தானில் உள்ள தலித் ஆதிவாசி இவாம் குமாண்டு அதிகார் அபியான் அமைப்போடு இணைந்து பணியாற்றுகிறார். “இந்த பழக்கத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன – சமூகம் மற்றும் சட்டம். சமூக முறைகேடுகள் பெண்ணை சூனியக்காரியாக மாற்றுகிறது என்றால், தவறு செய்பவரை தண்டிக்க வேண்டியது சட்டத்தின் பொறுப்பு. ஆனால் துரதிஷ்டவசமாக இது நிகழ்வதில்லை. போலீசார் தங்கள் கடமையை ஒழுங்காக செய்யாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்காமல் இருப்பதோடு எந்த குற்றவாளியும் தான் செய்த தவறுக்கு தண்டிக்கபடுவதில்லை”.

பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து போலியின் வழக்கு கீழ் நீதிமன்றத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. “4 முதல் 5 முறை நாங்கள் நீதிமன்றத்திற்கு (பில்வாரா மாவட்ட நீதிமன்றம்) சென்றுள்ளோம். ஆரம்பத்தில் அரசாங்க வழக்கறிஞர் இருந்தார். ஆனால், குற்றவாளி ஒருநாள் கூட நீதிமன்றத்திற்கு வராததால் விசாரணை நிறுத்தப்பட்டது” என கூறுகிறார் பியார்சந்த். கடைசியாக ஏப்ரல் 2019 அன்று போலியின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

PHOTO • Madhav Sharma


தற்போது 68 வயதாகும் பியார்சந்த், குமாரியா கேரா கிராமத்தில் உள்ள அரசாங்க தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த தனது வேலையை  2006-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். தன் மனைவி மீது சுமத்தப்பட்ட சூனியக்காரி முத்திரையால் ஏற்பட்ட அவமதிப்பு மற்றும் களங்கத்திலிருந்து தப்பிக்கவே இந்த முடிவை எடுத்தார். அதுவரை மாதத்திற்கு ரூ.35,000 சம்பளம் பெற்று வந்தார். அவரும் போலியும் ஏற்பாடு செய்த கிராம சமரச விருந்திற்கான செலவுகள் யாவும் அவருடைய சேமிப்பிலிருந்தும் அவருடைய மூன்று மகன்களின் வருமானத்திலிருந்தும் எடுக்கப்பட்டதே

பில்வாரா நகரத்திற்கு இவர்கள் குடும்பம் சென்றாலும், பிரச்சனைகள் இவர்களை தொடர்ந்தது. ஆகஸ்ட் 14, 2016 அன்று, சூனியம் செய்து தனக்கு மூட்டு வலியை உண்டாக்கிவிட்டார் என்று கூறி அண்டை வீட்டார் போலியை தாக்கியுள்ளனர். தாக்குதல் தொடுத்தவர் உள்ளூர் நாளிதழில் அன்றுதான் போலி பற்றிய கட்டுரையை வாசித்து, தாரிபாவில் சூனியக்காரியாக முத்திரை குத்தப்பட்டவர் இவர்தான் என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

போலி கூறுகையில், “என் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் நகரத்தில் உள்ள அக்கம்பக்கத்தினரும் என் மீது களங்கத்தை சுமத்துகின்றனர். இந்த காரணத்தால், என் மருமகளையும் சூனியக்காரி என அழைக்கிறார்கள். 12 வருட புறக்கணிப்பிற்கு பிறகு, என்னுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்ற நிபந்தனை விதித்து மறுபடியும் அவளை சமூகத்தில் ஏற்றுக்கொண்டுள்ளனர்”. இவரது மகனும் ஹேமலதாவின் கணவருமான ஓம்பிரகாஷ் மற்றும் அவரின் நான்கு குழந்தைகளும் போலியை சந்திக்க கூடாது என தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சூனியக்காரி என அடையாளப்படுத்தப்பட்ட பின், 35 வயதாகும் ஹேமலதாவிற்கு பில்வாராவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு கூட செல்ல முடியவில்லை. “நான் அங்கு சென்றால், என்னை தீண்டத்தகாதவராக நடத்துகிறார்கள். என் மாமியார் குறித்த செய்தி உள்ளூர் பத்திரிக்கையில் வெளியானதும், அது என் குடும்பத்தையும் பாதித்தது. காலனியில் உள்ள மக்கள் என்னுடைய தொடர்பை முறித்துக் கொண்டனர்” என்கிறார். ஆனால், பில்வாராவில் உள்ள டிராக்டர் ஷோரூமில் பணியாற்றும் 40 வயதான ஓம்பிரகாஷ், மாதம் 20,000 ரூபாய் சம்பாதித்து தன்னுடைய தாய்க்கும் மனைவிக்கும் ஆதரவாக இருக்கிறார். நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஹேமலதாவும் ரூ.15,000 வருமான ஈட்டுகிறார்.

சூழ்நிலை காரணமாக, 2016-ம் ஆண்டு போலியும் பியார்சந்தும் பில்வாராவின் ஜவகர் நகரில் 3000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு பிடித்தனர். இதே காலனியில், அவரது தந்தையிடமிருந்து பரம்பரை சொத்தாக பெற்ற வீடு ஒன்று பியார்சந்துக்கு உள்ளது. ஓம்பிரகாஷ், ஹேமலதா மற்றும் அவர்களின் குழந்தைகள் குடும்ப வீட்டில் தங்குகின்றனர். தன்னுடைய ஓய்வூதியத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து பியார்சந்தும் போலியும் செலவுகளை சமாளிக்கிறார்கள். மேலும், பில்வாரா நகரத்தில் உள்ள தன் நிலத்தில் (1.6 ஏக்கர்) கடுகு மற்றும் பருப்பு விளைவிக்கிறார்.

“எங்களை பார்ப்பதற்கு கூட எங்கள் உறவினர்கள் யாரும் வீட்டிற்கு வருவதில்லை. என் தாய் வீட்டிலிருந்து கூட யாரும் வருவதில்லை” என்கிறார் போலி. இந்த களங்கத்தின் காரணமாக, என்னுடைய இரண்டு மகன்களின் – பப்பு, 30 மற்றும் சுந்தர்லால், 28 – மனைவிகளும் பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது ஜோத்பூரில் வசிக்கும் சுந்தர்லால், கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். பில்வாராவில் ஓம்பிரகாஷோடு வசிக்கும் பப்பு, தனது தந்தையோடு சேர்ந்து விவசாயம் செய்கிறார்.

'People from my village as well as neighbours in the city have marked me with this stigma', says Bholi
PHOTO • Madhav Sharma

‘என் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் நகரத்தில் உள்ள அக்கம்பக்கத்தினர் என் மீது இந்த களங்கத்தை சுமத்துகின்றனர்’ என கூறுகிறார் போலி

போலியின் குடும்பம் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், சூனியக்காரி என குற்றம் சுமத்தப்பட்ட பலரும் குடும்ப ஆதரவின்றி தனிமையில் வாழ்கிறார்கள். பில்வாரா கிராமத்தில் மட்டும், கடந்த இரண்டு வருடங்களில் சூனியக்காரி என குற்றம்சுமத்தப்பட்ட ஏழு பெண்கள் இறந்துள்ளனர். இவர்களின் இறப்புகள் இயற்கையாக இருந்தாலும், மன அழுத்தம், தனிமை மற்றும் வறுமையோடுதான் இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

கிராமப் பகுதியில் சமூக தனிமைப்படுத்தலை விட வேறு பெரிய வலி கிடையாது என்கிறார் ஹேமலதா.

மாந்திரீகம் மற்றும் சூனியம் மக்களை புதிய கதைகளையும் பயத்தையும் உருவாக்க வைக்கிறது என விளக்கம் தருகிறார் ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற சமூகவியல் பேராசிரியர் டாக்டர் ராஜீவ் குப்தா. அவர் கூறுகையில், “பயம் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற பல கூறுகளை இந்த பழக்கம் கொண்டுள்ளது. இதனால்தான் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச மறுக்கிறார்கள். இந்த பயமும் பாதுகாப்பின்மையும் அடுத்த தலைமுறைக்கும் சென்றடைந்துள்ளது”.

ஆனால் ராஜஸ்தானின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் மாஸ்டர் பன்வார்லால் மேக்வால், இந்த பழக்கத்தை பற்றி தெரியாமல் உள்ளார். ஆனால் அதேசமயம் இந்த பழக்கம் ராஜஸ்தானில் நீண்டகாலமாக இருப்பதோடு 2015-ம் ஆண்டிலிருந்து சட்டப்படி குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், “பெண்களை இப்படி நடத்துவது நல்லதல்ல. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை குறித்து எதுவும் தெரியாது. சம்மந்தப்பட துறையிடம் இதுகுறித்து பேசுகிறேன்” என்றார்.

தனக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக இன்னும் நீண்ட காலம் போலி காத்திருக்க வேண்டும். “ஏன் பெண்கள் மட்டும் சூனியக்காரியாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? ஏன் ஆண்களை கூறுவதில்லை? என கண்களில் கண்ணீரோடு அவர் கேட்கிறார்.

இந்தி மொழிபெயர்ப்பு: ஷபீக் அலாம்

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Madhav Sharma

Madhav Sharma is a freelance journalist based in Jaipur. He writes on social, environmental and health issues.

Other stories by Madhav Sharma
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja